பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்/மதுரை நகரம்
இயல் ஏழு
மதுரை நகரம்
பாண்டியர் தலைநகரமாயிருந்த மதுரை நகரின் அமைப்புத் தாமரைப் பூவின் அமைப்போடு ஒப்பிடப்பட்டுள்ளது. கட்டடக்கலை நகரமைப்பு முதலியவற்றை விவரிக்கும் மயமத நூலில் பத்மம் (தாமரை) என்பது நகரமைப்பு வகைகளுள் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது.1 மதுரை நகருக்கும் அவ்விலக்கணம் பொருந்துகிறது.
சங்கத் தொகை நூல்களுள் ஒன்றாகிய பரிபாடல்,
மதுரை நகரமானது திருமாலின் உந்தியின் அலர்ந்த தாமரை மலரை ஒக்கும்.
அந்த நகரத்துள்ள தெருக்கள் அம்மலரின் இதழ்களை ஒக்கும்.
பாண்டிய மன்னனது அரண்மனை, அம்மலரின் நடுவில் உள்ள பொகுட்டை ஒக்கும்.
அந்நகரில் வாழும் தமிழ்க் குடிமக்கள் அத்தாமரை மலரின் தாதுக்களை ஒப்பர்.
அந்நகரைத் தேடி வரும் பரிசில் வாழ்நர் தாதுண்ண வரும் வண்டுகளை ஒப்பர். மதுரை நகர மாந்தர் மறை முழக்கத்தின் ஒலி கேட்டு நாள்தோறும் துயிலெழுவரே யன்றி மற்றைய வஞ்சி நகரத்தாரும், உறையூராரும் போலக் கோழி கூவுதலாலே விடிதலை உணர்ந்து துயிலெழுவதில்லை என்று கூறப்படும் செய்தி வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர்-பூவின்
இதழ்கத் தனைய தெருவம் இதழகத்
தரும் பொகுட் டணைத்தே அண்ணல் கோயில்
தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்
தாதுண் பறவை அனையர் பரிசில் வாழ்நர்
பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
ஏம இன்துயில் எழுதல் அல்லதை
வாழியும் வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது எம்பேருள் துயிலே2
என்று மதுரை நகர அமைப்பைப் பற்றிக் கூறுகிறது. கூடல், நான்மாடக் கூடல், ஆலவாய் போன்ற பிற பெயர்களும் மதுரை நகருக்கு வாய்த்திருந்தன. சிலப்பதிகாரம், மதுரைக் காஞ்சி, திருவிளையாடற் புராணம் ஆகிய மூன்று நூல்களில் இருந்தும் மதுரை நகரமைப்பைப் பற்றி மிகுதியான செய்திகளைத் தெரிந்து கொள்கிறோம்.
சிலப்பதிகாரம், மதுரைக்காஞ்சி ஆகிய நூல்கள் கூறும் மதுரை பற்றிய செய்திகளைக் காணுமுன் திருவிளையாடற் புராணம் கூறுகிற விவரங்களைக் காணலாம்.
முன்னிரண்டு நூல்களினும் காலத்தாற் பிற்பட்டது ஆயினும் மதுரை நகரம் எப்படித் தோன்றியது என்பது பற்றிய புராண வரலாறு திருவிளையாடற் புராணத்தில் கூறப்புட்டுள்ளது.
நகரின் தோற்றம்
நகரம் தோன்றுவதற்கு முன் மதுரையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கடம்ப மரங்கள் செறிந்த வனமாக இருந்தன.3 அப்பெருங் கடம்பவனப் பரப்பின் கீழ்ப்பகுதியில் மணலூர் என்னும் ஊர் ஒன்று இருந்தது. இந்த மணலூரைக் கோநகராகக் கொண்டு குலசேகர பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நாட்டை ஆண்டு வந்தான்.4
அக்காலத்தில் மணலூரில் இருந்த தனஞ்சயன் என்னும் வணிகன் சிறந்த சிவபக்தன். ஒருமுறை அவன் தன்னுடைய வாணிப நிமித்தம் மேற்கு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தவன், பகல் கழிந்து இரவு வந்த காரணத்தால், கடம்ப வனத்துக்குள் தங்கினான்.5
அவ்வாறு அவன் தங்கிய இடத்திற்கு அருகே ஓர் அரிய காட்சியைக் கண்டான். எட்டுப் பெரிய யானைகளால் தாங்கப் பெற்ற விமானத்தின் அடியில், ஒளி ஞாயிறு போல் விளங்கும் சிவலிங்கம் ஒன்றைக் கண்டு வியந்தான் தனஞ்சயன். அவன் மனம் மகிழ்ந்து பக்திப் பரவசம் கொண்டான்.6
அன்று சோமவாரம் (திங்கட்கிழமை) அங்கே தேவர்கள் வழிபட வந்தனர். இர்வின் நான்கு யாமத்தும் மலர் தூவி வழிபட்டார்கள் அவர்கள். தனஞ்சயனும் சென்று வழிபட்டான். கடைசி யாமத்திற்குப்பின் விடிகாலையில், தேவர்களைக் காணாமல் வியப்புடன் மதுரை திரும்பிய தனஞ்சயன், அரண்மனைக்குச் சென்று பாண்டிய மன்னனிடம் இச்செய்தியைத் தெரிவித்தான்.7 தனஞ்சயன் கூறிய செய்திகளைக் கேட்டு மன்னன் வியப்படைந்து, மேலே என்ன செய்வதென்று ஒன்றும் புரியாதிருந்த நிலையில், சிவபெருமான் ஒரு சித்தர் வடிவில் மன்னனின் கனவில் தோன்றி,
“கடம்ப வனத்திலுள்ள காட்டை அழித்து, நகரமாகக் செய்வாயாக" என்று பணித்தார். விடிந்ததும், அரசன் முந்திய இரவு தான் கனவில் கண்டவற்றைத் தன் அமைச்சர்களிடமும், சான்றோர்களிடமும் கூறி அவர்களையும் அழைத்துக்கொண்டு கடம்பவனத்திற்குச் சென்றான்.8 அங்கிருந்த பொற்றாமரைக் குளத்தில் நீராடினான். இறைவனை வழிபட்டு மகிழ்ந்தான். காட்டை அழித்து, நகரமைப்புப் பணியைத் தொடங்குமாறு உத்தரவிட்டான். அமைச்சர்கள் உடனே நகரமைப்புத் தொழிலில் வல்லவர்களை அழைத்து வருமாறு நான்கு திசைகளிலும் ஏவலர்களை அனுப்பினர்.
பிறைமதியின் பிளவு போன்ற கூரிய கொடுவாளையும், கோடரியையும் சுமந்த தோளையுடையவர்கள், செருப்பணிந்த காலினருமாகப் பலவகைத் தொழிலாளர்கள் வந்து சேர்ந்தனர். அவர்கள் காடுகளை வெட்டி நிலம் தடுத்தனர். காடுகள் அழிக்கப்பட்ட பின்பு, நகரத்தை உருவாக்குவது எவ்வாறு என்பது பற்றி மன்னன் அமைச்சர்களையும் சான்றோர்களையும் கலந்து பேசினான்.
அப்போது அங்கே சித்தர் உருத்தாங்கிச் சிவபெருமான் வந்தார். பாண்டிய மன்னன் அவரை வணங்கி, ஆசனம் கொடுத்தான். ஒளிமயமான உருவினரான அந்தச் சித்தர் சிவாகமங்களின் வழிமுறைப்படி சிற்ப நூல் விதிகள் வழுவாமல் நகரமும், ஆலயமும், கோபுரமும் இன்னின்னவாறு அமைத்தல் வேண்டும் என்று வகுத்துரைத்துவிட்டு மறைந்தார்.
பின்பு சிற்பநூல் வல்லார் வரவழைக்கப்பட்டனர். சித்தர் கூறிச் சென்றவாறே நகரமும், கோவிலும் அமைக்கும் செயல்கள் தொடங்கப்பட்டன. பதும மண்டபம், நடு மண்டபம், (அர்த்த மண்டபம்) பெரிய மண்டபம், (மகா மண்டபம்) அறுகாற்பீடம், நடன மண்டபம், திருவிழா மண்டபம், வேள்விச் சாலை, மடைப் பள்ளி, கணபதி, முருகன் முதலிய தேவர்களின் கோயில்கள், மீனாட்சியம்மையின் திருக்கோயில், திருமாளியைக் கொண்ட திருமதில்கள், மண்டபங்கள், கோபுரங்கள், சுற்று மதில்கள். அகழிகள் ஆகியவை அமைக்கப் பட்டன.9 மதுரை என்னும் பெயர்
நகரத்தை மேலும் அழகு செய்ய விரும்பிய பாண்டியன், அவ்வவ் வினைகளில் வல்லுநரைக் கொண்டு ஓவியங்கள் நிறைந்த கடை வீதிகள், பலர் கூடிப் பேசும் இடங்களான அம்பலங்கள், மாடமாளிகைகள் மிக்க பெருந் தெருக்கள், கவர் வழிகள், நாற்சந்திகள், மன்றங்கள், செங்குன்றுகள், மேடைகள், நாடக மன்றங்கள் மடங்கள், அந்தணர் தெருக்கள், அரச வீதிகள், வணிகர் தெருக்கள் வேளாளர் வீதிகள், யானைக் கூடங்கள், குதிரைக் கூடங்கள், தேர்ச் சாலைகள், கல்விக் கூடங்கள், அற நிலையங்கள், கிணறுகள், சிறு குளங்கள், ஓடைகள், பெரிய குளங்கள், பொய்கைகள், நந்தவனங்கள், பூங்காக்கள், தோட்டங்கள், உய்யான வனங்கள் முதலியவற்றை எல்லாம் அழகுற அமைத்தான்.10
இவ்வாறு புதிதாகக் கடம்ப வனங்களை அழித்து அமைக்கப் பெற்ற நகருக்கு, வடகிழக்குத் திசையில் பாண்டிய மன்னனின் பழைய அரண்மனை இருந்தது.
நகரத்தைப் போழகு மிக்கதாக அமைத்த பின்னர், அந்த நகரத்துக்கு முறைப்படி சாந்தி செய்யத் திட்டமிட்டான் பாண்டியன்.
அப்பொழுது இறைவன் தன் சடைமுடியிலுள்ள சந்திரக்கலையின் புத்தமுதத்தை நகரை நோக்கிச் சிந்திச் சாந்தி செய்தான்.
மதுரமான அந்த அமுதம் அந்நகர் முழுவதையும் அமிர்த மயமாக்கித் தூய்மை செய்தது. அவ்வமுதம் மதுர மயமாகியிருந்த தன்மையினாலேm அந்நகருக்கு மதுரா நகர்-மதுரை என்று பெயர் தோன்றி வழங்கலாயிற்று.11
இதன் பின்னர் குலசேகரபாண்டியன் மதுரையின் கிழக்குத் திசையில் ஐயனாரையும், தென்திசையில் சத்த மாதரையும், மேற்குத் திசையில் திருமாலையும், வடதிசை யில் பத்திரகாளியையும் நகரின் காவல் தெய்வங்களாக நிறுவினான்.
வேதங்களில் வல்லவர்களான அந்தணர்களைக் காசி நகரிலிருந்து வரவழைத்து மதுரையில் குடியேற்றுவித்தான். நகரில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் முறைப்படி வாழ்ந்தனர். பாண்டிய நாட்டுக்கு ஒரு திலகம் பதித்தது போல் மதுரையைக் குலசேகரன் வளப்படுத்தினான்.12
நான்மாடக் கூடல்
வருணன் மதுரையை அழித்து விடும் திட்டத்தோடு, தன்னுடைய ஏழு மேகங்களையும் ஏவி விட்டான். மதுரை நகரின் மேலே வானம் ஊழி இறுதியே போல இருண்டது.12 எங்கும் கருமை சூழ்ந்தது. புயற் காற்று வேகமாக வீசலாயிற்று. ஏழு மேகங்களும், படையெடுத்து வந்தாற் போல, மதுரை நகரைச் சூழ்ந்துகொண்டது. அபாயம் வந்தது. -
பாண்டிய மன்னன் செய்வதறியாது திகைத்தான். சோமசுந்தரக் கடவுள் திருக்கோயிலை அடைந்து, வணங்கி நகரத்தையும் மக்களையும் காப்பாற்றுமாறு வேண்டினான்.
பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கு இரங்கி, சிவபெருமான் தம் சடைமுடியிலிருந்து நான்கு மேகங்களை ஏவ-அந்நான்கு மேகங்களும் மதுரை நகரின் நான்கு எல்லைகளையும் சுற்றி வளைத்துக் காப்பது போல, நான்கு பெரிய மாடங்களாகிக் காத்து வருணனின் ஏழு மேகங்களையும் விலக்கச் செய்தார். சிவபெருமான் ஏவிய நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகி நகரத்தை மறைத்ததனால், வருணன் ஏவிய ஏழு மேகங்களும் ஏதும் செயலறியாது தோற்றுத் திரும்பின.14 சோமசுந்தரக் கடவுள் திருவருளால் மதுரை நகரம் காக்கப்பட்டது. பின்பு வருணனும் தன் அழுக்காறு தவிர்த்து செய்த தவற்றிற்கு நாணி இறைவனை வணங்கி, மன்னிப்பு வேண்டினான் என்பது திருவிளையாடற் புராணச் செய்தி.
இப்படி இறைவன் வருணனை எதிர்த்து ஏவிய நான்கு மேகங்களும், நான்கு மாடங்களாய்க் கூடிய பெருமையால் மதுரை நகருக்கு நான்மாடக் கூடல் என்ற பெயரும் ஏற்பட்டது.15
ஆலவாய்
மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்களில் ஒருவனான வங்கிய சேகர பாண்டியன் என்பவனின் காலத்தில் மக்கள் தொகை பெருகியது. அதனால் அவன் மதுரை நகரத்தை விரிவுபடுத்த முயன்றான்.16
சிவபெருமானிடம் போய்த் தன் முன்னோர் வரையறுத்த பழைய நகர எல்லையைத் தனக்கு உணர்த்தும்படி சோமசுந்தரக் கடவுளை அப்பாண்டிய மன்னன் வேண்டினான்.17
அவன் வேண்டுதலுக்கு இணங்கிய சிவபெருமான் அவன் முன்னிலையில் ஒரு சித்தராகத் தோன்றினார். அச்சித்தரின் அரைஞாண், பூணுால், குண்டலம், கால் சதங்கை, கைவளை என்பன பாம்புகளாகவே காணப்பட்டன.
சித்தர் தம் கையிலிருந்த பாம்பைப் பார்த்துப் பாண்டிய நாட்டின் எல்லையையும், மதுரை நகரத்தையும் அரசனுக்கு வரையறுத்துக் காட்டுமாறு கட்டளையிட்டார்.
இறைவன் இட்ட கட்டளையை நிறைவேற்று முன், அப்பாம்பு தன்னால் எல்லை காட்டப்படுகிற அந்தப் பெரு நகரம், அதன் பின் தன் பெயரால் அழைக்கப்பட வேண்டும் என்னும் தன் அவாவைச் சித்தரிடம் வெளியிட்டது.
சித்தரும் அவ்வேண்டுகோளை ஏற்று, அருள் புரிய இசைந்தார்.
பின்னர் அந்தப் பாம்பு கீழ்த் திசையின்கண் சென்று தன் வாலை நீட்டி மிகப் பெரிய அந்த நகருக்கு வலமாகப் படிந்து உடலை வளைத்து, வாலைத் தனது வாயில் வைத்துப் பாண்டிய மன்னனுக்கு நகர எல்லையைக் காட்டியது.
அவ்வாறு பாம்பு வளைந்து கிடந்து, வரையறுத்துக் காட்டிய அளவின்படி மன்னன் நகர மதில்களை எழுப்பினான்.18
தெற்கே திருப்பரங்குன்றமும், வடக்கே இடபக் குன்றமும், மேற்கே திருவேடகமும், கிழக்கே திருப்பூவண நகரும் எல்லையாக அமையுமாறு மதில் சுவரின் வாயில்களை அமைத்தான். அந்நீண்ட மதில் ஆலவாய் மதில் என்று அழைக்கப்பட்டது. மதிலுக்கு உட்பட்ட நகரமும் பாம்புக்குச் சித்தர் கொடுத்த வாக்குப்படியே ஆலவாய் என அழைக்கப்பட்டது. இஃது ஆலவாய் என்னும் பெயருக்கான புராண வரலாறு ஆகும். இவற்றுள் நான்மாடக் கூடல் என்ற பெயருக்குக் கலித்தொகை உரையில் நச்சினார்க்கினியர் விளக்கம் கூறியுள்ளார்.19
“நான்கு மாடங்கூடுதலின் நான்மாடக் கூடலென்றாயிற்று. அவை திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர்".
வட திருவால வாய்திரு நடுவூர்
வெள்ளியம்பலம் நள்ளா றிந்திரை
பஞ்சவனீச்சரம் அஞ்செழுத்தமைந்த
சென்னிமாபுரம் சேரன் திருத்தளி
கன்னி செங்கோட்டம் கரியோன் திருவுரை
... ... ... ஒருபரங்குன்றம்20
எனக் கல்லாடத்திலும் மதுரையைச் சூழ அமைந்த பகுதிகள் கூறப்படுகின்றன.
மலைகள்-ஆறுகள்
வையை ஆற்றின் வலப்புறமாக அமைந்துள்ள மதுரைக்கு அருகில் ஆனை மலை, பசு மலை, நாக மலை ஆகிய மூன்று மலைகளும், சற்று வடபால் தள்ளித் திருமால் குன்றம் என்னும் அழகர் மலையும் அமைந்துள்ளன. திருமால் குன்றத்தை வழியாகக் கொண்டு, மதுரைக்கு வருதல் சிலப்பதிகாரத்தும் கூறப்பட்டுள்ளது.21 பசுமலை, நாகமலை பற்றித் திருவிளையாடல் கூறுகிறது.22 பழங்கால மதுரை நகரின் மேற்கேயே வைகை நதி இரு பிரிவாகப் பிரிந்து ஒரு பகுதி கிருத மாலை என்னும் பெயருடன் இருந்த வளமுடையார் கோயிலருகே பாய்ந்தது (இன்றும் இந்த கிருத மாலை என்ற பெயரிருப்பினும் நதி மண் மேவிப் போயிற்று).
மாலையாக வளைத்துச் சூழ்ந்தது போல, வையை நதி மதுரையைச் சுற்றிப் பாய்வதாகக் கலித்தொகையும் கூறுகிறது.23
இக்கருத்து அறிஞர் மு. இராகவய்யங்காராலும் ஆராய்ந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.24
மதுரையில் பாயும் வைகை நதிக்கே மூன்று பெயர்கள் வழங்கியிருக்கின்றன. வேகமாகப் பாய்தலால் வேகவதி என்றும், மாகம் (விண்கதி) வாய்ந்ததால் வையை என்றும், தாராதலாற் கிருத மாலை என்றும், வையைக்கு முப்பெயர் இருந்ததை அறிஞர் மு. இராகவ ஐய்யங்கார் பின்வருமாறு கூறுகிறார்.
'இனி வையைக் கரையின் நெடுமால் என்பதற்கு "அந்தர வானத் தெம்பெருமான்" எனக் கூறியதும் கூடலழகர் விஷயமாகவே கொள்ளல் தகும். என்னை? அத் திருக்கோயிலின் மேல் விமானத்தில் கிடந்த திருக்கோலத்தோடு அப்பெருமான் எழுந்தருளியிருத்தலால் என்க”.
இனி 'வையைக் கரையினெடுமால்’ என்று சிலப்பதிகாரங் கூறுமாறு, கூடலழகர் கோயில் வையைக் கரைக் கணன்றி மதுரைக்கு மேல்புறமுளவே எனின்: மதுரையின் இரு பக்கங்களிலும் அந்நதி சூழ்ந்து சென்றதாகவே, முன்னை வழக்குண்மையால் தென்பக்கத்தும் அதன் போக்கு உள்ளதேயாகும். தென்பாலுள்ள வையைப் பிரிவு இக்காலத்துக் "கிருதமாலை” என வழங்கப் பெற்றுக் கூடலழகர் கோயிற் பக்கத்தோடுகின்றது. மதுரைக் கோட்டையைச் சுற்றி மாலை போல் ஓடுதலின் வையைக்கு இப்பெயர் வழங்கியதென்பர்.
வேகமாதலின் வேகவதியென்றும்
மாகம் (விண்கதி) வாய்ந்ததனால் வையை என்றும்தா
ராக லாற்கிருத மாலைய தாமென்றும்
நாகர் முற்பெயர் நாட்டு நதியரோ
என்பது கூடற்புராணம். கலித்தொகையிலும் (மருதக் கலி 2)
இருநிலம்
தார் முற்றியது போலத் தகைபூத்த வையைதன்
நீர் முற்றி மதில் பொரூஉம் பகையல்லா னேராதார்
போர் முற்றொன் றறியாத புனல்சூழ்ந்த வயலூரன்
என இவ்வையை மாலை சூழ்ந்துள்ளது போல மதுரையைச் சூழ்ந்து நின்றமை வருணிக்கப்பட்டிருப்பதும் நோக்கத்தக்கது.25
மதுரையின் மேற்குத் திசையில் அமைந்ததாகத் திருமுருகாற்றுப் படை கூறும் திருப்பரங்குன்றம் மலையையும் குறிப்பிடல் தகும்.26
கோவலனும், கண்ணகியும், கவுந்தியடிகளும் மரப் புணை ஒன்றில் அக்கரையிலிருந்து வையைக் கடந்து, தென் கரையை அடைந்து மதுரைக்குச் சென்றனர்.27 என வருவதாலும் வையை நீர்ப் பரப்பெல்லாம் பூக்கள் நிரம்பிப் புனல்யாறு அன்று இது பூம்புனல்யாறு28 என்று வருவதாலும் நகரின் வளமான அமைப்புக்கு, வையை துணையாயிருந்ததை அறியலாம்.
அக்கால மதுரை நகர மக்கள் வையையைக் கடக்கப் பரிமுக அம்பி, கரிமுக அம்பி, மரப்புணை போன்றவற்றைப் பயன்படுத்தியுள்ளனர்.29 வையை நதியில் திருமருத முன்துறை என்ற துறை புகழ் பெற்றதாயிருந்துள்ளது.30
கோவலனும், கண்ணகியும், கவுந்தியடிகளும் மதுரை நகரின் புறஞ்சேரிக்குச் சென்றதைக் கூறும் சிலப்பதிகார ஆசிரியர்,
அருமிளை யுடுத்த அகழிசூழ் போகிக்
... ... ... ...
... ... ... ...
... ... ... ...
... ... ... ...
... ... ... ...
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரலென் பனபோல் மறித்துக் கைகாட்டப்
புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி
வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீ ரேரியும்
காய்க்குலைத் தெங்கும் வாழையும் கமுகும்
வேய்ந்திரட் பந்தரும் விளங்கிய விருக்கை
அறம்புரி மாந்த ரன் றிச் சேராப்
புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென்31
என்கிறார். புறஞ்சேரிப் பகுதியில்-காவற்காட்டின் மரங்களடர்ந்த நிலையும், பொழில் வளமும், அகழியின் அமைப்பும், கொடிகள் பறக்கும் மதிலின் நெடுமையும் இப்பகுதியால் தெரியக் கிடைக்கின்றன.32 மதிலுக்கு வெளியே இருந்த புறநகரினது நிலை இதனால் குறிப்பிடப்படுகிறது.
அகழி அமைப்பு
மூன்று பக்கங்களில் வையையே அகழி போல அமைந்தது தவிர, மதிற் சுவர்களை ஒட்டி மற்றோர் அகழியும் மதுரையில் இருந்துள்ளது. அது மிகவும் ஆழமானதாயிருந்தது என்றும் அடிக்கடி மேலெழுந்து துள்ளும் வாளை மீன்களையும், தன் உறுப்புக்களை விரித்து நீரில் தவழுகின்ற ஆமைகளையும் உடையதாயிருந்தது என்றும், கொடிய கூற்றுவனை ஒத்த முதலையையுடையதாயிருந்தது என்றும் இக்காரணங்களால் அவ்வகழியில் இறங்க மண்ணுலகத்தவர் எவரும் துணிய மாட்டாரென்றும் நூல்கள் கூறுகின்றன. அகழி தவிர, அன்னங்களும் தாமரைப் பூக்களும் நிறைந்த பல நீர் நிலைகள் மதிற்புறத்தே காண்போர் கண்களையும் மனத்தையும் கவர்கிற வகையில் இருந்துள்ளன.33
மதில் அமைப்பு
வீரர்களே இன்றியும், தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள முடிந்த நுணுக்கப் பொறிகள் நிறைந்த மதிற் சுவர்கள் மதுரை நகரில் அமைந்திருந்தன்.
மதிலில் இருந்த இயந்திரப் பொறிகளே பகைவர்களை அண்ட விடாமல் விரட்டும் ஆற்றல் பெற்றிருந்தன. அப்பொறிகளில் சில மழுப்படைகளை வீசி எறியும். நஞ்சு தோய்ந்த வாட்படைகளை வீசி எறியும். மும்முனைகளை உடைய சூலப்படைகளை உமிழ்வதுபோல வீசி எறியும். வேலாயுதங்களையும், சக்கரப்படைகளையும் வீசி எறியும். சில நெடிய கொழுப்படைகளை எறியும். கவண் கயிற்றில் கல்லைக் கட்டி எறியும். வாள் போன்ற கூரிய பற்களையுடைய பாம்புப் பொறிகள் நாவை நீட்டிப் பகைவரை வளைத்துப் பிடித்து அழிக்கும். யானைப் பொறிகள் எதிரிகள் தலை சிதறுமாறு இரும்பு உலக்கைகளை வீசும். புலிப் பொறிகள் பகைவரை அமுக்கும். குதிரைப் பொறிகள் எதிரிகளின் மார்பு எலும்புகள் முறிய உதைக்கும். அவர்களை அகழியில் வீழ்த்தும். பேய்ப் பொறிகள் தீயுமிழும். சில பொறிகள் ஈயத்தை உருக்கி ஊற்றும். வறுத்த மணலைக் கொட்டும். கனமழை பொழியும்.
இத்தகைய பொறிகள் மதுரை நகர மதிலிடத்தே இருந்தன. இப்பொறிகள் யாவும் யவனர் வினைத்திறத்தால் இயற்றப்பட்டவை என்றும் கூறப்பட்டுள்ளமை புலனாகிறது.34
“இத்தகைய பொறிகள் அமைந்த மதில்கள் நெடியவையாயிருந்தன-எதிரிகள் தாக்க முடியாதவையாயிருந்தன. சுரங்க வழியுடையவையாய் இருந்தன. வானுற ஓங்கி நிமிர்ந்தவையாக இருந்தன. கோட்டை வாயில் நிலைகள் நெடிதுயர்ந்தவையாயும், திண்ணிய பெரிய கனமான கதவுகளையுடையவையாயும் இருந்தன.35
"அம்மதிலின்மீது கட்டப்பட்டிருந்த மாடங்கள் மேகங்கள் படர்ந்த பெரிய மலை முகடுகள் போல் ஓங்கியிருந்தன. மக்களும் பிறவும் இடையறாது சென்று வருதலால், கோட்டை வாயில் இடையறாத நீரோட்டமுடைய வையை ஆற்றை ஒத்து உயிரோட்டமுள்ளதாயிருந்தது.36"
மதில்களின் அமைப்பில் காணும் இப்பொறியியல் நுணுக்கங்கள் தமிழர் நகரமைப்பில் இருந்திருக்கும் பாதுகாப்பு ஆயத்த நிலைக்குச் (Defence Preparedness); சான்றாகும்.
நகரின் அமைப்பு
புற நகருக்கு அப்பால் மதிலையும் கடந்து அகநகருக்குள் மிகவும் அகலமான பெரிய தெருக்கள் அமைந்திருந் தன. நகரின் தோரண வாயில்கள், தேரணி வீதிகள், பூரண மாளிகைகள் பற்றி எல்லாம் திருவிளையாடற் புராணம் வர்ணிக்கிறது.37
காவிரிப்பூம்பட்டினம் மூன்று பிரிவுகளாக (மருவூர்ப் பாக்கம், பட்டினப்பாக்கம், நாளங்காடி) இருந்தது போல மதுரை மாநகரம் அன்று நான்கு பெரும் பிரிவுகளாக இருந்தது என அறியமுடிகிறது. அவையாவன:
1. திருவாலவாய்
2. திருநள்ளாறு
3. திருமுடங்கை
4. திருநடுவூர்38
இவற்றோடு ஐந்தாவதாக இருந்தையூர் (இப்போது கூடலழகர் கோயிலுள்ள பகுதி) ஒரு பகுதியையும் சேர்த்துக் கூறுவர் ஆய்வாளர் மு. இராகவய்யங்கார்.39
நீடுநீர் வையை நெடுமால் அடியேத்த40
என இளங்கோவடிகளும் இதனைக் கூறியுள்ளார். இங்கு வையையாவது நகரின் மேற்றிசையில் தென்பாற் பிரிந்து மாலை போலோடிய வையையின் மற்றொரு பிரிவாகிய கிருத மாலை.
மதுரை நகர் எந்நாளும் மணக்கோலங் கொண்டது போன்ற புதுமை மலர்ச்சியோடுள்ள நகர் என்னும் பொருள்பட 'மணமதுரை’ என்றார் இளங்கோ.41 இதற்கு உரை எழுதிய அரும்பதவுரைகாரர் 'கலியாண மதுரை’ ‘ என்றே பதசாரம் எழுதினார்.
பத்துப்பாட்டுள் முதலாவதாகிய திருமுருகாற்றுப் படையில்-திருப்பரங்குன்றம் பற்றிக் கூறுகையில் அது மதுரைக்கு மேற்கேயுள்ளதாகக்42 கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்றோ மதுரையின் தென்பகுதியான அவனியாபுரத்தின் மேற்கேதான் பரங்குன்று உள்ளது. இதனால் நக்கீரர் பாடிய காலத்தில் இன்றைய அவனியாபுரம் பகுதியே மதுரையின் நகர் நடுப்பகுதியாக இருந்திருக்கக்கூடும் என்றொரு கருத்தும் உண்டு. ஒரு வேளை அவனியாபுரமே நடுவூர் என்னும் அகநகர்ப் பகுதியாயிருந்திருக்கக் கூடும்.
மதுரை நகரின் கட்டடங்களின் உயரம், புதுமை, செல்வ வளம், கோட்டைச் சிறப்பு இவ்வளவையும் ஒரடியிலேயே இணைக்கிறது திருவிளையாடல்.
... ... ... மதி தபழு
சுதை யிலகு புதுமைதரு நிதிதிகழு மதில்தழுவு மதுரைநகரே44
மதுரையைப் பற்றிப் பேசும் எல்லா இடங்களிலுமே, அதன் கோபுரம், மாடங்களைப் புகழுவது ஒரு சீராக வருகிறது.
திதமுறு மதுரையந்தண்45
அலகில் வண்புகழுடைய மதுரை46
வாரிஎற்றி முன் மதிப்படை பொருவது வைகை47
பெருங்கடல்சூழ் வையத்தைந்து நிலத்தோங்கு
நகர்கட் கெல்லாம் பயனாய் நகர் பஞ்சவன்தன் மதுரைநகர்48
நீள வளர் பொற் கோபுரம் வானிலவும் வெள்ளி ஒளிமன்றம்49
பரந்து ஒடும் பெரிய அகன்ற ஆறு போல் அத்தெருக்கள் தோன்றின.
மதுரை நகரத் தெருக்களின் வீடுகள் தென்றல் காற்று வழங்கும் பல சாளரங்களையுடையவையாயிருந்தன என்கிறது மதுரைக் காஞ்சி.
வகைபெற எழுந்து வான மூழ்கிச்
சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில்
யாறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்
பல்வேறு குழாஅத் திசைஎழுந் தொலிப்ப
மா காலெடுத்த முந்நீர் போல
முழங்கிசை நன்பணை யறைவனர் நுவலக்
கயங்குடைந் தன்ன இயந்தொட் டிமிழிசை
மகிழ்ந்தோ ராடும் கலிகொள் சும்மை50
ஆற்றின் இருபுறமும் கரைகளைப் போல வீடுகள் அமைந்திருந்தன. வீதிகளுக்கு ஆறுகளை உவமை கூறும் முறை இருந்துள்ளது.
நகரின் கடைத் தெருவில் பன்னாட்டு மக்கள் நிறைந்திருந்தனர். பல மொழிகளைப் பேசும் மக்களின் பேச்சொலிகள் கேட்டன. நகரமைப்பில்-பூம்புகாரைப் போல, மதுரையும் பன்னாட்டினர் (International Community) வாழ்ந்த நகரமாயிருந்துள்ளது. -
பல்வேறு விழாக்களை, மக்களுக்குப் பறையறைந்து தெரிவிக்கும் ஓசை, காற்றால் அலைப்புண்ட கடலலையின் ஒலி போல் ஒலித்தது. கோயில்களிலிருந்து எழும் பலவகை வாத்தியங்களின் ஒலிகளைக் கேட்டு மக்கள் மனமகிழ்ந்து ஆரவாரம் செய்தனர்.
விழாக்களுக்காகக் கட்டப்பட்ட கொடிகளும் பகைவரை வென்றமைக்கு அடையாளமாகக் கட்டப்பட்ட வெற்றிக் கொடிகளும், கடைகளில் கட்டப்பட்ட விற்பனை அடையாளக் கொடிகளும், உயரப் பறந்தவாறு, ஒரே கொடிகள் மயமாக அணி செய்தன. யானைகள் செல்லும் தெருக்களிலும், பெண்கள் செல்லும் வீதிகளிலும் கஸ்தூரி மணம் கமழ்ந்தது.51
தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை52
என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. நச்சினார்க்கினியர் இதற்கு விளக்கம் கூறும்போது “தமிழ் வீற்றிருந்த தெருவினை யுடைய மதுரை” “ என்கிறார்.
மதுரை நகரத்து வீதியின் குடியிருப்பு வீடுகளில் முல்லைக்கொடி வளர்க்கும் வழக்கம் இருந்திருக்கிறது.54 பூக்களின் மணமும் நகரின் சுற்றுப்புறங்களிலும் மணக் கிற அளவு அட்டிற் புகையும் அப்ப வணிகர் அப்பம் சுடும் புகையும், அகிற்புகையும், யாகசாலை ஆவுதிப் புகையும், அரசன் அரண்மனை நறுமணங்களும் பரவும் என்று கூறப்பட்டுள்ளது. 55
இக்காரணங்களால் பொதிகைத் தென்றல் மதுரையின் மணங்களைச் சுமந்து மதுரைத் தென்றலாக மாறி வந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.56
தெருக்கள்
மதுரை மாநகரின் தெருக்கள் செல்வ வளம் மிக்கவையாயிருந்தன. கணவரோடு ஊடிய மகளிர் வெறுப்புடன் கீழற்றி எறிந்த அணிகலன்களும், சுமக்க முடியாமல் சலிப் பில் நீத்த நகைகளும், தாம் இயற்றிய சிற்றில்களைச் சிதைத்த இளைஞர்களோடு முரண்பட்டுச் சினந்த பெண்கள் அறுத்தெறிந்த முத்து மாலைகளும், நகரத் தெருக்களில் குப்பைகள் போல் குவிந்திருந்தன என்கிறார்.57 இந்திரன்து பெட்டகத்தைத் திறந்ததுபோல் செல்வ வளமிக்க நகரம் என்கிறார் இளங்கோ அடிகள்.58 மாட மாளிகைகளின் வரிசைகள் திங்களைப் பொடி செய்து சேறாகக் குழைத்துப் பூசியது போல வெண்மை மிகுந்து தோன்றின. 59
மதுரை நகரத் தெருக்களில் தேர்களின் ஒலியும் குதிரைகளின் கனைப்பொலியும், பரிகளின் கழுத்து அணி யான கிண்கிணி ஓசையும், யானைகளின் பிளிற்றொலியும் ஐவகை இசைக் கருவிகளின் ஒலியும் நிறைந்திருக்கும். இவ்வொலிகள் மேகத்தின் இடியொலியையும் செவியில் உறைக்காதபடி செய்தன.60
பலவகைப் பிரிவுகள்
தொழில் பிரிவு-செயற் பிரிவுப்படியே தெருக்கள் தனித் தனியே அமைந்திருந்தன.
‘பரத்தையர் தெரு, வேளாளர் தெரு, வணிகர் தெரு, மன்னர் மறுகு, மறையவர் தெரு எனப் பல்வேறு தெருக்கள் மதுரை மாநகரில் அமைந்திருந்தன. இத் தெருக்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு அமைந்திருந்தன என்று தனித்தனியே விவரிக்கப்பட்டிருக்கின்றன”. 61
வணிகர் விதிகள்
மதுரை நகரமைப்பில் வணிகர் வாழும் கடை வீதிகள் பற்றிச் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. வணிகர் கடை வீதிகளில் உள்ள திண்ணைகள் நீல மணிகளால் ஒளி பெற்று விளங்கின. சுவர்கள் பணிங்கின் ஒளியை உமிழ்ந்தன. தூண்கள் வயிரத்தால் செய்யப் பெற்றிருந்தன. அத்துரண்களில் இடையிடையே முத்துத் தாமங்கள் நிரல் படத் தொடுத்துத் தொங்கவிடப்பட்டிருந்தன. கருநிறக் கம்பளம் வேய்ந்த சட்டத்தின் மேல் வரிசை வரிசையாகப் பவளமாலைகளும் முத்து மாலைகளும் பொன் மாலைகளும், தொங்கவிடப்பட்டன. அவை கண்கொள்ளாக் காட்சிகளாய்த் தோன்றின. 62
“வணிகர்களுடைய கடைவீதிகள் இரவு என்றும் பகல் என்றும் பகுப்பற்ற விண்ணுலகம் போல விளங்கின. வணிகச் சிறுமியர் வைத்து விளையாடும் அம்மிகளும், குளவிகளும் மரகதத்தால் உரல்களும், உலக்கைகள் வயிரத்தாலும், அடுப்புகள் வெள்ளியாலும் செய்யப்பட்டிருந்தன.
வெள்ளி அடுப்பில் வாசனை மிக்க அகிற் கட்டைகள் விறகாகப் பயன்பட்டன.
அங்கே விளையாடும் வணிகச் சிறுவர்கள் பனிநீரை உலை நீராகவும் முத்துக்களை அரிசியாகவும், மாணிக் கத்தை நெருப்பாகவும் பயன்படுத்தினர். பொன்னாற் செய்த பாத்திரங்களில் சமைத்தனர்.
வணிகர் வீதி வீடுகளின் கதவங்கள் செம்பொன்னாலும், தாழ்ப்பாள்கள் வயிரத்தாலும் செய்யப்பட்டிருந்தன. வணிகர் வீதிகளில் மணிகளும் பொற்கட்டிகளும் முத்துக்களும், மரகதங்களும், வயிரங்களும் அங்கங்கே சிதறிக் கிடந்தன”. 58
இந்த வருணனை மூலம் மதுரை நகரின் செல்வ வளமும், நகரமைப்பில் வணிகர் வீதியின் செழுமையும் தெரிய வருகின்றன.
அரச வீதிகள்
குடிமக்களின் துன்பமாகிய இருளைப் போக்கும் அரசன் புற இருளை நீக்கும் கதிரவனுக்கு ஒப்பாகக் கருதப்பட்டான். அவ்வாறு கருதப்பட்ட அரசர்தம் தொடர்புடைய வீதிகளும் இடங்களும், மதுரை நகரில் எப்படி எப்படி இருந்தன என்பது நூல்களில் கூறப் பட்டுள்ளது.
அரசர் வீதியில் குதிரைக் கூடங்களும், யானைக் கூடங்களும் மிகுதியாக இருந்தன. மழுவச்சிரம், வில், அம்பு, சூலம், சக்கரம், வேல், நெருஞ்சி முள் போன்ற கருவி, கலப்பை போன்ற ஆயுதம் முதலிய பல்வேறு படைக் கருவிகளைக் கொண்ட கொற்றவையின் கோயிலுடன் கூடிய படைக் கொட்டாரங்கள் இருந்தன.
அரசிளங்குமாரும், அவரை ஒத்த பிறரும் போர்ப் பயிற்சி பெறும் பல இடங்களும் இருந்தன.
அரச வீதியின் மாட மாளிகைகள், நீல மணிகளும், மாணிக்கமும், பொன்னும், சந்திரகாந்தக் கற்களும் பதிக்கப் பெற்றுப் பளிரென மின்னின.
யானைகளுக்குப் போர்ப் பயிற்சி அளிக்கும் வீரர்களையும் குதிரைகளைத் தேரிற்பூட்டி விரைந்து செத்துலும் வீரர்களையும், சிறுமியர் கட்டிய மணல் வீடுகளை அழிக்கும் தேரோட்டுகிற அரசிளங்குமரரையும் வீதிகளில் காண முடிந்தது. அதனால் சினமுற்ற சிறுமியர் அறுத்தெறிந்த முத்துக்களால் வீதியின் தேரோட்டமே தடைப்பட்டது.66
வழிவழியாக அறநெறி பிறழாது ஆட்சி நடத்தும் பாண்டியப் பேரரசர்களது எழுநிலை மாடங்களை உடைய அரண்மனை, நகரின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருந்தன. ஈசானிய (வடகிழக்கு) திசையில் மாளிகை அமைப்பது சிறப்பு என்னும் மனைநூல் மரபு இங்கு ஒப்பு நோக்கிக் காணத்தக்கது. “ மக்களும் மன்னரும் மனை நூல் மரபுகளைக் கடைப்பிடித்தே கட்டடங்களைக் கட்டியும், நகரமைத்தும் வந்துள்ளமை புரிகிறது.
மதுரைக் கோயில்கள்
இக்கால மதுரைக்குக் கோயில் மாநகரமென்றே ஒரு பெயர் உண்டு. பழங்கால மதுரையும் அவ்வாறே கோயில் மாநகராக அமைந்திருந்தது. சிலப்பதிகார ஊர்காண் காதையில்,
- நுதல் விழிநாட்டத் திறையோன் கோயிலும்
- உவணச் சேவல் உயர்த்தோ னியமலமும்
- மேழி வலனுயர்த்த வெள்ளை நகரமும்
- கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்
- அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்
- மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்67
என்று வருகிறது. நகரின் உரிமைத் தெய்வமாக மதுராபதி கூறப்படுகிறாள்.68 ஐயை கோயில் என ஒன்றும் கூறப்படுகிறது.69
சிவபெருமான் திருக்கோயிலும், கருடக் கொடி உயர்த்திய திருமால் கோயிலும், மேழிப்படையை வலமாக ஏந்திய பலதேவர் கோயிலும், சேவற்கொடியையுடைய முருகவேள் கோயிலும் அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் என இவை நகரில் அமைந்திருந்தன. பெளத்தப் பள்ளி, அமணப் பள்ளி, அந்தணர் பள்ளி என இமூவகைப் பள்ளிகள் இருந்துள்ளன. 70
இவற்றுள் திருமால் கோயில் என்பது இருந்தையூர் என்னும் நகரின் உட்பகுதியில் அமைந்திருந்தது என்றும் அதனருகே வையையின் மற்றொரு பிரிவாகிய கிருதமாலை நதி ஓடியது என்றும் கூறுகிறார் மு. இராகவ ஐய்யங்கார். 71
அறங்கூற வையம்
மதுரை நகரில் கோயில்கள், பள்ளிகள், தவிர அறங்கூறும் அவையங்களும் இருந்தன. அறங்கூறும் அவையங்களுக்கு அடுத்தபடி காவிதிப்பட்டம் பெற்ற அமைச்சர்களுடைய வளமனைகள் அமைந்திருந்தன. அவற்றை அடுத்துப் பிற நாடுகளில் இருந்து வந்து வாணிகத்தால் பொருள் திரட்டிய வணிகர் வாழும் வீடுகள், இருந்தன. புரோகிதர், ஒற்றர், தூதுவர், சேனைத் தலைவர் முதலியோர் வாழும் வீடுகள் அடுத்தடுத்து இருந்தன. 72
அங்காடிகள்
இரவுக்கடை வீதிகளும், பகற்கடை வீதிகளும் தனித் தனியே இருந்தன. அவை அந்தி அங்காடி (அல்லங்காடி) நாளங்காடி என அழைக்கப்பட்டன. இன்றைய மதுரையிலும் கூட அந்திக் கடைப் பொட்டல்’ என ஒரு பகுதிக்குப் பழங்கால முதலே பெயர் வழங்கி நீடித்து வருகிறது.
சங்கினால் வளையல் முதலியன செய்யும் வினைஞரும், மணிகளைத் துளையிடுபவரும் பொற்கொல்லரும், பொன் வாணிகரும், ஆடை விற்பவரும் மணப்பொருள்கள் விற்பவரும், நெய்தற்றொழில் செய்பவரும், ஓவியர்களும் பிறரும் அந்தி அங்காடியில் நிரம்பியிருந்துள்ளனர். 74 அவர்கள் ஆரவாரம், அறிஞர் பெருமக்களின் தருக்க ஆரவாரம் போல ஒலித்தது.
இனி நாளங்காடி பற்றி,
- மழை கொளக் குறையாது புனல்புக மிகாது
- கரைபொரு திரங்கு முந்நீர் போலக்
- கொளக் கொளக் குறையாது தரத்தர மிகாது
- கழுநீர் கொண்ட எழுநா ளந்தி
- ஆடுதுவன்று விழவின் நாடார்த் தன்றே
- மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்
- நாளங்காடி நனந்தலைக் கம்பலை
என்று மதுரைக்காஞ்சி விவரித்துக் கூறுகிறது.75
அறக்கூழ்ச் சாலை
ஏழை எளியவர்க்கு வயிறார உணவிடும் அறக்கூழ்ச் சாலைக்கும் மதுரை நகரமைப்பில் இடம் தரப்பட்டிருக்கிறது.76
அத்தகைய அறக்கூழ்ச் சாலையில் பலா, வாழை முந்திரி முதலிய பழங்களும், பாகற்காய், வாழைக்காய், வழுதுனங்காய் முதலிய காய்களும், கீரைகளும், இறைச்சி கலந்த அடிசிலும், கிழங்கு வகைகளும், பாலும் வறியவர்க்கு வழங்கப்பட்டிருப்பது தெரிகிறது என்று மதுரைக் காஞ்சி இந்த அறக்கூழ்ச்சாலையைப்பற்றிக் கூறுகிறது.77 நகரில் அவ்வப்போது வந்து போகும் மக்களுக்கு (Floating Population) இவ்வுணர்வு அறம் பயன்பட்டிருக்கிறது.
நகரத்தின் காவல் ஏற்பாடு
மதுரை நகரத்தில் காவல் ஏற்பாடு உறுதியாகவும் உரமாகவும் செய்யப்பட்டிருந்தது. காவலர் நள்ளிரவிலும் கண்ணுறங்காமல் காவல் புரிந்து வந்தனர். அஞ்சா நெஞ்சம் கொண்ட மதுரை நகரக் காவலர் புலி ஒத்த வலிமையை உடைய அவர்கள் திருடர்கள் புரியும் தந்திரங்களை நன்கு உணர்ந்து அதற்கு ஏற்பத் தங்களைத் துணிவுடன் ஆயத்த நிலையில் வைத்திருந்தனர். எந்தச் சூழலிலும் கடமை உணர்வு தவறாத அந்தக் காவலர்கள் மெல்லிய நூலேணியைத் தங்கள் அரையிற் சுற்றியபடி திரிந்தனர். நூலேணியை பயன்படுத்துமளவு கட்டடங்கள் உயர்ந்திருந்தன. காற்றிலும் கடிது விரையும் கள்வரைக் கூடத் துரத்திப்பிடித்துப் பிணித்துவிடும் ஆற்றலுடைய அக்காவலரால் மதுரை மாநகர வாசிகளுக்குக் கள்வர் பயம் அறவே இல்லாதிருந்தது.78 நகரத்தின் காவலர் பற்றிய இச்செய்தி,
- நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர்
- மென்னூரல் ஏணிப் பன்மாண் சுற்றினர்
- நிலனக முளியர் கலனசைஇக் கொட்கும்
- கண்மா றாடவர் ஒடுக்கம் ஒற்றி
- வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத்
- துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர்
- அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த
- நூல்வழிப் பிழையா நுணங்கு நுண்தேர்ச்சி
- ஊர்க்காப்பாளர் ஊக்கருங் கணையினர்79
என்று மதுரைக் காஞ்சியில் கூறப்பட்டுள்ளது.
பலநூல் கூறும் நகரப்பாங்கு
மதுரை நகரமைப்பையே தாமரைப்பூவுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளது பரிபாடல் என்பதைக்கண்டோம்.80 மதுரைக் காஞ்சியில் நகரமைப்பின் பல்வேறு நிலைகள் சிறப்பாக அங்கங்கே கூறப்பட்டுள்ளன.
அ. பல கற்படைகளை உடைய மதுரை மதில்கள்
- விண்ணுற ஓங்கிய பல்படைப் புரிசை 81
ஆ. மதுரை மாடங்களும் கோட்டை வாயிலும்
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் 82
மழையாடு மலையின் நிவந்த மாடமொடு
வையை அன்ன வழக்குடை வாயில் 83
மலைபுரை மாடத்துக் கெழு நிழல் இருத்தர 84
இ. பல சாளரங்களை உடைய வீடுகள்
வகை பெற எழுந்து வான மூழ்கிச்
சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில்
யாறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில் 85
ஈ. ஓவியம் போன்ற வீதியமைப்பு
ஒவுக் கண்டன்ன இருபெரு நியமித்து
சாறயர்ந் தெடுத்த உருவப் பல்கொடி 86
கடைவீதியின் கொடிகள் உயர்ந்த மாடங்களுடன் மலை மிசை அருவிகள் போல் நுடங்கின என்றும் கூறுகிறார் மாங்குடி மருதனார். 87
உ .மேனிலை மாடத்து மகளிர் முகங்கள்
நிரைநிலை மாடத்து அரமியந் தோறும்
மழைமாய் மதியிற் றோன்றுபு மறைய 88
ஊ. சிறப்பான நால் வேறு தெருக்கள் - தெருச்சுருங்கை
கூலிங் குவித்த கூலி வீதியும் 89
நால்வேறு தெருவினும் காலுற நிற்றர 90
பெருங்கை யானை யின்நிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கிற் போகி 91
யானைகள் பல சேர்ந்து போகலாம்படி கீழ் சுருங்கையாக அதனை மேலிட்ட வீதி, சுருங்கை கரந்துறை; ஒழுகுநீர் புகுகையை ஒருத்தரும் அறியாதபடி மறைத்துப் படுத்த வீதி வாய்த்தலை.92
இக்காலத்து இலண்டன், பாரிசு போன்ற பெருநகரங்களில் உள்ள நிலத்தடிச் சாலை (Underground Subway) போன்ற அமைப்பு அன்றைய சிலப்பதிகாரக் காலத்து மதுரையிலேயே இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
- பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்
- அந்தியும் சதுக்கமும் ஆவன வீதியும்
- மன்றமும் கவலையும் மறுகும் 93
என்னும் சிலப்பதிகார அடிகளிலிருந்து நாற்சந்தியான தெருக்கள் (நால் வேறு தெருக்கள் - நால் வருணத்தார் தெரு என்றும்) முச்சந்தியான தெருக்கள் பலவாய் ஒன்றான முடுக்கு, குறுந்தெரு (சந்து) என இவை மதுரை நகரமைப்பில் இருந்துள்ளன.
சதுக்கம் (Square) முடுக்கு (Ciose) மருகு (Lane) என்று விதம் விதமாக இருந்த தெருக்கள் நகரமைப்பை வளப்படுத்தியுள்ளன. இங்கிலாந்தில் முன்றிலோடு கூடிய வீடுகள் உள்ள வீதியை மன்று (Court) என்றும் மேலே செல்ல முடியாது முடிந்துவிடும் தெருவை முடுக்கு (Close) என்றும், மரங்கள் வளர்ந்த சாலையைச் (Avenue) சாலை என்றும், நடுவே திறந்தவெளி உள்ள இடங்களை (Place), என்றும் தோட்டமுள்ள படப்பை வீட்டை வளமனை (Grove or Bungalow) என்றும் கூறுகிற வழக்கம் நகரமைப்பு (Town Planning) முறையில் உள்ளது. 94
19ஆம் நூற்றாண்டின் இந்த ஐரோப்பிய நகரமைப்பு முறைகள் இரண்டாம் நூற்றாண்டிலேயே மதுரை, போன்ற தமிழக நகரங்களில் இருந்திருப்பது வியந்து பாராட்டுதற்குரியது.
எ. நகரின் பங்கா - இளமரக்கா - உய்யாவனம்
வெப்ப நாட்களிலும், வேனிற் காலத்திலும் குளிர்ந்த சோலைகளிலே குடும்பத்தோடு சென்று இளைப்பாறுதலும், காற்று வாங்குதலும் மதுரை நகரில் வழக்கமா
யிருந்துள்ளன. அதற்கென நகரமைப்பில் பூங்காக்களுக்கும் இளமரக்காவுக்கும் உய்யான வனங்களுக்கும் திட்டமிட்டிருந்துள்ளனர். அவை மதுரை நகரத்தினமைப்பில் இருந்துள்ளன. சிலப்பதிகாரம் இதைப் பின்வருமாறு கூறும்
- கோடையொடு புகுந்து கூடலாண்ட
- வேனில் வேந்தன் வேற்றுப்புலம் படர
- ஓசனிக்கின்ற வுறுவெயிற் கடை நாள்
- வையமுஞ் சிவிகையும் மணிக்கா லமளியும்
- உய்யானத்தி னுறுதுணை மகிழ்ச்சியும் 95
நகரப் பெருவிழா
காவிரிப்பூம்பட்டின நகருக்கு எவ்வாறு இந்திர விழா நகரப் பெருவிழாவாக ஆண்டுதோறும் இருந்து வந்ததோ அவ்வாறே மதுரையில் ஓணநாள்விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது.
ஓணநாள் விழாவன்று (திருமால் பிறந்த நாள்) நகரின் மறவர் சேரியில் வீரப் போர்களும் விளையாட்டுக்களும் நிறைந்திருந்தன.96 இதிலிருந்து நகரில் படை வீரர் குடியிருப்புக்கள் தனியே(Contonement or Defence area) இருந்துள்ளமையை அறிய முடிகிறது.
மதுரையின் சிறப்பு
மதுரை நகர் அளக்க முடியாத பொருள் வளமுடையது என்கிறார் மாங்குடி மருதனார். தேவர்களும் பூவுலகுக்கு விரும்பி வந்து தேடிக் காணும்படியான நகரம் என்றும் அவரே கூறுகிறார்.97
- அளந்து கடை யறியா வளங்கெழு தாரமொடு
- புத்தே ளுலகங் கவினிக் காண்வர
- மிக்குப் புகழெய்திய மதுரை 98 பரிபாடல் நூலுள் அகப்படாமல் எஞ்சிய பாடல்களிலிருந்து தொகுக்கப்பட்ட திரட்டுப் பகுதியில் மதுரை நகர் பற்றி வருவன குறிப்பிடத் தக்கவையாகும். பரிபாடல் உலகனைத்துமே மதுரை நகருக்கு ஈடாகாது என்கிறது. திருமகளின் திலகம்போல் அமைந்த நகரம் என்கிறது மற்றொரு பாடல்.
- உலகம் ஒருநிறையாக தானோர் நிறையாப்
- புலவர் புலக்கோலால் தூக்க - உலகெலாம்
- தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன்
- நான் மாடக்கூட னகர் 95
- செய்யாட் கிழைத்த திலகம்போற் சீர்க்கொப்ப
- வையம் விளங்கிப் புகழ்பூத்த லல்லது
- பொய்யாத லுண்டோ மதுரை புனைதேரான்
- வையை யுண்டாகு மளவு 100
மதுரை நகரின் அமைப்பு கார்த்திகை மகளிரின் காதில் இடப்பட்ட மகர குண்டலம் போலிருந்தது என்கிறது மற்றொரு பரிபாடல். கார்த்திகை மகளிர் அக்கினியின் மனைவியே அறுவகை அழகிய வடிவாக மாறிய பெண்கள்.101
- கார்த்திகை காதிற் கனமகர குண்டலம் போற்
- சீர்த்து விளங்கித் திருப்பூத்தல் அல்லது கோரத்தை
- உண்டாமோ மதுரை கொடித்தேரான் வார்த்தை
- யுண்டாகு மளவு 102
பேரழகியான அங்கியின் மனைவி காதில் குண்டலம் போல் என ஒப்பிட்டது மதுரையின் நகரமைப்புக்குப் பெரிய புகழாரமாகும். சங்கமிருந்து தமிழாய்ந்த நகரமாக இருந்த காரணத்தால் பூம்புகாரைவிட மதுரைக்கு அறிவாளர் நகரமாக அமைந்த (Intellectual city) பெருமையும் கிடைக்கிறது. கடைச்சங்கமும் அதன் புலவர்களும் மதுரையில் கூடியிருந்திருக்கிறார்கள். இன்றைய ஆலயத்துள்ளும் சங்கத்தார் கோவில் என ஒரு பகுதி உள்ளது. இன்றைய மதுரையிலும் கூடப் பழைய நகரப் பகுதி கோவிலை மையமாகக் கொண்டு அம்போதரங்கமாக விரிந்து, ஆடி வீதி (முதற் சுற்று) சித்திரை வீதி (இரண்டாம் சுற்று) ஆவணி மூலவீதி (மூன்றாம் சுற்று) மாசி வீதி (நாலாம் சுற்று) வெளிவீதி (ஐந்தாம் சுற்று) எனத் தாமரைப் பூப் போலவே அமைந்துள்ளது.ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழாவின் பெயராகவே அமைந்துள்ளது, மதுரையின் நகரமைப்புச் சிறப்பாகும்.
இன்று சிறிய அளவில் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள பழைய சொக்கநாதர் கோயிலும்---கடம்பவனத்திற் கண்ட பழைய கோயிலும் ஒன்றோ என்றும் கருதுவாருமுண்டு.
இப்போது நகர அந்திக்கடைப் பொட்டலருகே கடைவீதியில் இருக்கும் பழைய கோட்டைப் பகுதி அரண்மனையாயிருத்தல் கூடும். மேற்கு வெளி வீதியிலுள்ள இடிந்த கோட்டைப் பகுதி மேற்கு மதில் வாயிலாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
நகரப் பரப்பும் மக்களும்
சிலப்பதிகாரத்தில் பூம்புகார் நகர் நிலப்பரப்பு. மக்கள் தொகை பற்றி அகச்சான்று நூலுக்குள் கிடைத்தது போல் மதுரையைப்பற்றி நேர்முகச் சான்று எதுவும் கிடைத்திலது எனினும் திருவாலவாய், திருப்பூவணம், திருமுடங்கை, திருவூர்103 என்ற நான்கு மாட எல்லைகளைக் கொண்டு காணும்போது, பூம்புகார் நகரின் பரப்பை ஒத்த அளவு மதுரையும் இருந்திருத்தலை உய்த்துணர முடிகிறது. எழுகடல்,104 மெய்காட்டும் பொட்டல்,105 வெள்ளியம்பலம்106 அக்கசாலை, அந்திக்கடை,செம்பியன் கிணறு, கோவலன் பொட்டல் முதலிய வரலாற்றுத் தன்மை வாய்ந்த பழம் பெயர்கள் இன்றும் அப்படியே இடங்களுக்கு வழங்கி வருகின்றன.
நகரமைப்புக் கலையில் பதுமம் என்ற இலக்கணத்திற்கேற்ப அமைந்த மதுரையை அடுத்து மயூரம் என்ற மயில் வடிவ அமைப்பிலிருந்த காஞ்சியையும் பின்பு உறையூர், வஞ்சி ஆகிய நகரங்களைப் பற்றிக் கிடைக்கும் சுருக்கமான தகவல்களையும் எதிர்வரும் இயலில் தொகுத்துக் காண்கிறது இவ்வாய்வு.
குறிப்புகள் :
1. இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக்கையேடு, ப. 229,
2. பரிபாடல் திரட்டு 7.
3. பெரும்பற்றப்புலியூர் நம்பி, திருவிளையாடற்புராணம் 53;1
4. ,, ,, பயகரமாலை 36.
5. ,, ,, ,, 58; 7.
6. ,, ,, ,, 53: 8
7. ,, ,, ,, 53: 10.
8. ,, ,, ,, 53: 1
9. திருவிளையாடற் புராணம், 53;12-16
10. திருவிளையாடல்: திருநகரச் சிறப்பு
11. திருவிளையாடற்புராணம்,3.8:15
12. ,, மதுரையான திருவிளையாடல் 36 ; 13-16
13. ,, நான்மாடக் கூடலான திருவிளையாடல் 5-6.
14. ,, ,, ,, 7-12.
15. ,, ,, ,, 43
16. ,, 47 திருவாலவாயான திருவிளையாடல் 6.
- திருவிளையாடற் புராணம் 47 திருவாலவாயான திருவிளையாடல் 7
- """8-14
- கலித்தொகை 92, நச்சினார்க்கினியர் உரை
- கல்லாடம் 62
- சிலப்பதிகாரம் 11:90-92
- திருவிளையாடல் புராணம் 36:16-24
- கலித்தொகை-மருதம் 2
- மு. இராகவய்யங்கார், செந்தமிழ்த் தொகுதி 8,ப.111-114
- ""ஆராய்ச்சித் தொகுதி, ப.243-244
- பத்து, திருமுருகாற்றுப்படை, 70-77
- சிலப்பதிகாரம் 2:13-179
- ""2:13-174
- ""2:175-180
- ""13:183-196
- ""13:183-196
- ""13:195-196
- ""15:207
- ""15:207-217
- ம.ரா. இளங்கோவன், தமிழகத்தின் தலைநகரங்கள், ப.70
- மதுரைக் காஞ்சி 353-356
- திருவிளையாடல், திருநகரச் சிறப்பு 7
- கலி. 92ம் பாட்டு, நச்சினார் உரை
- மு. இராகவய்யங்கார், ஆராய்ச்சித் தொகுதி, ப.242
- சிலப்பதிகாரம் 18:4
- சிலப்பதிகாரம் 24:5
- ""24.5க்கு அரும்பதவுரை
- திருமுருகாற்றுப்படை 72
- திருவிளையாடற்புராணம் கடவுள் வாழ்த்து 12
- """17
- "" திருநகரச் சிறப்பு 1
- """2
- """3
- """4
- மதுரைக் காஞ்சி 357-364
- ""365-375
- சிறுபாணாற்றுப்படை 66-67
- நச்சினார்க்கினியர் உரை, ப.111
- சிலப்பதிகாரம் 13:120
- ""13:121-130
- ""13:131-132
- மதுரைக் காஞ்சி 680-85
- சிலப்பதிகாரம், 14:68-69
- ம.ரா. இளங்கோவன், தமிழர் தலைநகரங்கள், ப.72
- மதுரைக் காஞ்சி 389-395
- ம.ரா. இளங்கோவன், தமிழர் தலைநகரங்கள், ப.72
- மதுரைக் காஞ்சி 500-505
- ம.ரா. இளங்கோவன், தமிழர் தலைநகரங்கள், ப.72
- மதுரைக் காஞ்சி 654-686
- ம.ரா. இளங்கோவன், தமிழர் தலைநகரங்கள், ப.73
- மனைநூல் 54
- சிலப்பதிகாரம் 14:7-12
- ""23:22–177
- ""11:216
- மதுரைக் காஞ்சி 461-488
- மு. இராகவய்யங்கார், ஆராய்ச்சித் தொகுதி, ப.241
- மதுரைக் காஞ்சி 489-516
- ம.ரா. இளங்கோவன், தமிழர் தலைநகரங்கள். ப.75
- மதுரைக் காஞ்சி 542-544
- ""424–430
- ""526-535
- ""526-535
- ""645-650
- ""639-647
- பரிபாடல் திரட்டு 7
- மதுரைக் காஞ்சி 352
- ""429
- ""355-356
- ""406
- ""357–359
- ""365-366
- ""373-374
- ""451-452
- சிலப்பதிகாரம் 14:211
- மதுரைக் காஞ்சி 522
- சிலப்பதிகாரம் 14:64-65
- ""14 அரும்பதவுரை, ப.355
93. | சிலப்பதிகாரம் 14: 157-159 |
94. | Harold P. Clumn, The Face of London, p.10 |
95. | சிலப்பதிகாரம் 14: 123-127 |
96. | மதுரைக் காஞ்சி 390-394 |
97. | ""586-698 |
98. | ""586-698 |
99. | பரிபாடல் திரட்டு 6 |
100. | ""9 |
101. | மதுரைத் தமிழ்ப் பேரகராதி, ப.490 |
102. | பரிபாடல் திரட்டு 10 |
103. | திருவிளையாடல் 5:6 நான்மாடக் கூடலான திருவிளையாடல் |
104. | ""8 |
105. | ""39 |
106. | சிலப்பதிகாரப் பதிகம் 41 |