பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து

முன்னுரை

வரலாற்றுத் தொன்மையும், பெருமையும், நாகரீகச் சிறப்பும் உள்ள ஓர் இனம் பல துறைகளிலும், பல கலை களிலும் முன்னோடியாயிருந்து தகுதிகள் பெற்றிருத்தல் வேண்டும் என்பதை உய்த்துணரவும் ஆராயவும் முடியும்.

கிரேக்க உரோமானிய இனங்களைப் போல் தமிழின மும் அப்படித் தகுதிகள் பெற்றிருந்ததாகும்.முன்னோடியாயிருந்த பல பழங்கலைகளில் தமிழினமும் முதன்மையான தகுதிகள் பெற்றிருந்தது.

இவற்றுள் கட்டடக் கலை மற்றெல்லாக் கலைகளுக்கும் தாய் போன்றதாயிருந்தது என்பார் பேரறிஞர் ஏ. பி. கண்வின்டே. நகரமைப்புக் கலைக்கும் அது பொருந்தும்.

“கட்டடக் கலையை எல்லாக் கலைகளுக்கும் தாய் என்று அழைப்பார்கள். இன்றும் இது உண்மையே. வடிவத்திலும் அமைப்பிலும் உருவாக்கப்பட்ட பண்பாட் டின் துல்லியமான உருவகம் அது. சமுதாயத்தின் தீவிரமான ஈடுபாடு இல்லாவிட்டால் இந்தக் கலை வளர்ச்சியுறவோ நிறைவடையவோ இயலாது”.

தமிழ்ச் சமூகமும் இத்தகைய தீவிர ஈடுபாட்டுடன் விளங்கியுள்ளது. பழந்தமிழர் இத்தகைய அக்கறையை யும் ஆர்வத்தையும் கட்டடக் கலையிலும் நகரமைப்பிலும் செலுத்தியுள்ளனர்.

இக்கலைகள் இரண்டிற்குமே தமிழ் இனம் எடுத்துக்காட்டான நிலைகளைக் கொண்டிருந்தது. இக்கலைகளின் வளர்ச்சிக்கும் திறனுக்கும் தமிழகமும் தமிழினமும் நிலைக்களனாக விளங்கியதை வழக்கிலிருந்தும், இலக்கியங்களிலிருந்தும் ஆய்ந்து நிறுவுவதே இங்கு நோக்கமாகிறது.

கலைகள், பண்பாடு, சமயம், இலக்கியம் ஆகிய துறைகளில் தமிழினம் இணையற்ற பெருமைகளைப் பெற்றிருந்தது. எடுத்துக்காட்டாக விளங்கவல்ல சிறப்புக்களைப் பெற்றுள்ள இனங்களில் தமிழினம் முதன்மையானது என்பது ஐயத்துக்கு இடமின்றிப் பலராலும் பலமுறை நிறுவப்பட்ட உண்மையாகும்.

இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கட்டடக்கலை, நகரமைப்பு ஆகிய இரு பிரிவுகளும் ஒன்றோடொன்று தொடர்புடையன. ஒன்றிலிருந்து மற்றொன்று விரிந்து பரந்து கிளைப்பது. கட்டடக்கலை தனி ஒரு பகுதித் திறனுக்கு (Departmental excellence) உரியது என்றால் நகரமைப்பு முழுமையான திறனுக்கு (Total excellence) உரியது.ஆகும்.

கட்டடங்கள், தெருக்கள் முதலியன சீராக அமைந்தால்தான் நகரமைப்பு அழகாயிருக்கும். ஆக இவை ஒன்றோடொன்று தொடர்புடையவை மட்டுமில்லாமல் ஒன்றிலிருந்து ஒன்றானவை-ஒன்றை ஒன்று இன்றியமையாதவை என்றும் அறிய முடிகிறது.

கட்டடக் கலை, நகரமைப்பு (Architecture and Urban planning) ஆகிய துறைகளிலும் தமிழர் சிறப்புற விளங்கியுள்ளனர் என்பதை நூற்சான்றுகள் கொண்டு ஆராயவும், நிறுவவும் நிரம்பிய வாய்ப்புகள் உள்ளன. அவ்வாய்ப்பை இந்த ஆய்வு பயன்படுத்திக் கொள்கிறது. கட்டடம் தொழிலா? கலையா? கட்டடத் தொழில் (Construction work) என்ற தொடருக்கும் கட்டடக் கலை (Architecture)என்ற தொடருக்குமே நிரம்ப வேறுபாடுகள் உண்டு. கட்டப்படுவன அனைத்துமே கட்டடம்தான். ஆனால் நுண்ணிய கலைத் திறத்தினாலும், கலைத் தரத்தினாலும் உயர்ந்த அத்தகு கட்டட வேலைப்பாடே கட்டடக் கலையாகும்.2

கிரேக்கர்கள், உரோமானியர்கள் தத்தம் கட்டடக் கலை, நகரமைப்புத் திறன்களால் வரலாற்றில் புகழ்மிக்க இடம் பெற்றுள்ளனர். அதே அளவு மேன்மையும் திறனும் இக்கலைகளில் தமிழரிடமும் இருந்தன. தமிழரின் பழம்பெரும் நூல்களிலும் காப்பியங்கள், பிரபந்தங்கள், புராணங்களிலும் இதற்கான சான்றுகள் பல காணக்கிடைக்கின்றன. அவற்றை இவ்வாய்வு தொகுத்தும் வகுத்தும் முடிவு காண்கிறது.

தனியார் வீடுகள் (Domestic building)குடியிருப்புகள், கோவில்கள் அரசர்தம் அரண்மனைகள், கோட்டைகள், கொத்தளங்கள், பொதுமன்றங்களான (Public building) அரங்கு, அவை ஆகியவை பற்றியும் தெருக்கள், வீதிகள், நகர் ஒழுங்கு ஆகியவை பற்றியும் ஆய்வு செய்யும்போது. பல உண்மைகள் தெளிவு பெறுகின்றன.

தலைப்பு முறைப்படி முதலில் கட்டடக் கட்டடக் கலையையும் பின்னர் நகரமைப்பையும் நிரல்பட அமைத்துக் கொள்கிறது இந்த ஆய்வு.

"கட்டடக் கலை. என்பது வெறும் புறத்தோற்ற உரு அழகு மட்டுமில்லை. அதன்மூலம் தூண்டப்படும் மக்களின் மனநிலை, உணர்வுகள், குணநலன், விழிப்புணர்ச்சி ஆகியவற்றையே அறிய முடியும்"3 என்கிறார் அஜய பாரத்வாஜ் என்கிற பேராசிரியர். பேராசிரியர் பாரத்வாஜ் அவர்களின் இம்முடிபு தமிழர் கட்டடக் கலைக்கும், நகரமைப்புக்கும் மிகமிகப் பொருந்தி வரக் கூடியதாகும்.

கட்டடக் கலை மூலமும் நகரமைப்புத் திறன் மூலமும் பழந்தமிழர் பண்பாடு, மன வளர்ச்சி, உணர்வுகள், விழிப்பு நிலை, குணநலன்கள் எல்லாவற்றையும் சீர்தூக்கி ஆராய முடிகிறது.

கடல் கொள்ளப்படுவதற்கு முந்திய பூம்புகார் நகரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலண்டன் பெருநகர அமைப்பை ஒத்ததாக விளங்கியது என்கிறார் வரலாற்றுப் பேரறிஞர் சதாசிவ பண்டாரத்தார்.4 பூம்புகார் அன்றியும் உறையூரும் சோழர் பெருநகராயிருந்தது.

இவ்வாறே பாண்டியர் கோநகராகிய மதுரை, சேரர் கோநகராயிருந்த வஞ்சி, பல்லவர் பெருநகராயிருந்த காஞ்சி முதலியன பற்றியும் போதிய சான்றுகள் நூல்களிற் காணக் கிடைக்கின்றன.

கட்டடக் கலை, நகரமைப்புக் கலை இரண்டின் வளர்ச்சிக்கும் ஆறு கூறுபாடுகளைக் காரணங்களாவும் அடிப்படைகளாகவும் அறிஞர் கூறுகின்றனர். அவை பின்வருமாறு :

  1. தேசிய வரலாற்றுப் பின்னணியும் அதன் நிகழ்கால விளைவுகளும் (Nation’s historical background and its impact on the present)
  2. தேசிய குணப் போக்கும், உணர்வுகளும் மக்கள் விழிப்பு உணர்வும் (National character, temperament and awakening of the people)
  3. சமுதாயப் பொருளாதார அரசியல் நிலைகள் (Socio economic and political conditions)
  4. நிலவியல் சார்ந்த உள்ளூர்க் கூறுபாடுகள் (Geographic and local factors) 5. அறிவியல்-தொழில் துணுக்க விளைவுகள் (Scientific and technological impact)

6. தட்ப வெப்பக் கூறுபாடுகள் (Climatological factors)

தமிழில் மரபுவழியே எண்ணப்படும் அறுபத்து நான்கு கலைகளில், சிற்ப சாஸ்திரம், வாஸ்து வித்தை ஆகிய இரண்டும் கட்டடக் கலை தொடர்பானவை. நகரமைப்புக் கலையும், உள்முக அணி செயல்வகையும் (Interior decoration) தமிழர் வாழ்வில் தொன்று தொட்டுப் பழகியவை என்பதை மிகப் பொதுவான மேற்கோள் ஆட்சியிலிருந்து கூடக் காணலாம். ஒரு நூலுக்குப் பாயிரம் இன்றியமையாதது என்பதை விளக்குங்காலையில் 'மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்... போல்' என்று நன்னூலின் தொடக்கப்பகுதி அமைந்துள்ளது.5

பெரு நகரங்கள் என்ற பிரிவில் காவிரிப்பூம்பட்டினம் என்ற பூம்புகார் கடல் சார்ந்தது. மதுரை நிலம் சார்ந்த எல்லைகளை உடையது. வஞ்சி மாநகர் மலை கடல் சார்ந்த எல்லைகளை உடையது. இம்மூன்று நகரங்களின் அமைப்புக்களைப் பற்றி ஆராயும்போது மூவகையான சுற்றுப்புறச் சூழல் வாய்க்கப் பெற்ற நகரங்களை அமைப்பு முறைப்படி அறிய முடிகிறது.

இம்மூன்று நகரங்கள் தவிர வேறு சில நகரங்களையும் ஆராய இடமுண்டு எனினும் இவற்றைப் பற்றி ஆய்வதில் ஒரு பொருத்தமும் உண்டு.

சேர சோழ பாண்டியர் மூவர்தம் பெருநகரங்களையும் அடுத்தடுத்து ஆய்கிற வாய்ப்பு முறையும் இதன் மூலம் கிடைத்துவிடுகிறது. மூன்று நகரங்களில் பூம்புகாரும் வஞ்சியும் துறைமுகப்பட்டினங்கள். மதுரை மாநகர் துறைமுகப்பட்டினமல்ல. என்றாலும் நான்மாடக் கூடல் என்ற திருவிளையாடல் வரலாறு தவிரப் பலதுறை அறிவு களும், அறிஞர்களும் கூடும் இடமாகவுமிருந்து கூடல் என்ற புகழ்ப் பெயரைப் பெற்றிருந்த நகரம். கடைச் சங்கப் புலவர்கள் கூடியிருந்து தமிழ் ஆய்ந்த நகரம்.

ஆய்வுக்குரிய இரு பகுதிகளில் முன்பே கூறப்பட்டது போல் கட்டடக்கலை என்பது தனித்திறன். நகரமைப்பு என்பது கூட்டுத்திறன்.

வஞ்சியும் பூம்புகாரும் வாணிபச் செழிப்புள்ள நகரங்கள். மதுரை அவற்றோடு அறிவுச் செழிப்புமுள்ள நகரம். காஞ்சியும் கலைச் செழிப்பு வாய்ந்த நகராக இருந்துள்ளது. உறந்தை முந்திய சோழர் கோநகராயிருந்துள்ளது. இவ்வாய்வுக்கு,

1. சங்க நூல்கள், 2. காப்பியங்கள் 3. புராணங்கள், 4. பிற இலக்கியங்கள், 5. மனையடி சாத்திரம், 6. கட்ட டக் கலை நூல்கள்

ஆகிய பிரிவைச் சார்ந்தவற்றுள் கட்டடக் கலை, நகரமைப்பு பற்றிய செய்திகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. தமிழ்க் காப்பியங்கள், புராணங்கள் முதலியவற்றில் நாட்டுப்படலாம், நகரப்படலம் என்பவை பொதுவாய்த் தொடக்கத்தில் அமைந்தவை. பெரும்பாலும் நகரமைப்புப் பற்றிய விளக்கங்களுக்கு இவை பெரிதும் உதவுபவை.

நகரமைப்புப் பற்றியும், அந்நகர் எந்த ஆற்றின் கரையில் அல்லது எந்த மலையருகே அமைந்துள்ளது என்பது பற்றியும் கூறித் தொடங்காத பழைய நூல்களே பெரும்பாலும் இல்லை எனலாம்.

இப்பகுதிகள் பெரும்பாலும் வருணனைகளாகவும், புகழ்ச்சியாகவும் கற்பனை நயந்தோன்றவும், பெருமையாகவும் கூறப்பட்டிருப்பினும் பெருநகரங்களை அறிமுகப்படுத்தவும் ஆராயவும் இவை பேரளவிற்கு உதவவே செய்கின்றன.

ப-2 பழந்தமிழரால் நகரமைப்பு ஒரு கலையாகவே போற்றப்பட்டிருப்பது இப்பகுதிகளிலிருந்து அறியப்படுகிறது. அதற்கான சான்றுகள் இவற்றிலிருந்து கிடைக்கின்றன.

பழந்தமிழர் என்ற தொடர் சங்ககால முதல் இன்று வரை உள்ள மெர்ழியின மக்களைக் குறிக்கவும், கட்டடக் கலை என்பது தனியார், இறைவர், அரசர், பொது, பாதுகாப்புப் பிரிவுகளிலான கட்டடங்களைக் (Individual or domestic royal public defence) குறிக்கவும், நகரமைப்பு என்பது பெருநகரங்களின் அமைப்பு ஒழுங்கு அழகு, கட்டுக்கோப்பு (Town planning or Urban planning) ஆகியவற்றைக் குறிக்கவும் இவ்வாய்வில் பயன்படுத்தப் பெற்றுள்ளது.

ஆய்வுப் பகுப்பு

1. கட்டடக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும், 2. கட்டடக் கலை மரபு, 3. கட்டடக் கலையும் தமிழர் பண்பாடும், 4. கட்டடக் கலைஞரும் கட்டடங்களும், 5. நகரமைப்பு, 6.பூம்புகார் நகர், 7. மதுரை நகர், 8. முப்பெரு நகர், 9. நகரமைப்பில் சமுதாயங்கள் என்ற தலைப்புகளில் இவ்வாய்வுக் கட்டுரை எழுதப் பட்டுள்ளது.

குறிப்புகள்

  1. "Architecture was called mother of all arts and it is still true. It is the crystallised physical expression of culture projected into space and form. This art cannot develop and mature without the active interest of society" —A. P. Kanvinde, His opening remarks in the seminar on Architecture presided over by Pandit Jawaharlal Nehru held in New Delhi in March, 1959, under the auspision of Lalit Kala Akademy and published by them. Seminar on Architecture, p. 13.


2. Architecture—The science of building raised to a fine art, R. D. Encyclopaedia, Fine Arts, р. 1035.

3. “The expression of the buildings is not onl dependent on purely physical conditions but is also largely influented by the mental make up, temperament, character and general awakening of the people of the country.

–Ajay Bharadwai, collected papers—Seminar on architecture, p. 55.

4. டி. வி. சதாசிவ பண்டாரத்தார். காவிரிப்பூம்பட்டினம், பக். 2.

6. நன்னூல் பொதுப்பாயிரம் 55-ம் நூற்பா.

குறுக்க விளக்கப் பட்டியல்
அடியார்                   : அடியார்க்கு நல்லார் 

சிலம்பு                    : சிலப்பதிகாரம்

டி.வி.எஸ்.தொல்.           : டி.வி. சதாசிவ பண்டாரத்தார்

தொல். எழுத்து.            : தொல்காப்பியம் எழுத்ததிகாரம் 

தொல். பொருள்.           : தொல்காப்பியம் பொருளதிகாரம்

நச்.                       : நச்சினார்க்கினியர்

ப.                        : பக்கம்

பக்.                       : பக்கங்கள்

பி. ஸ்ரீ.                    : பி.ஸ்ரீ. ஆச்சாரியார்