உள்ளடக்கத்துக்குச் செல்

பழைய கணக்கு/ஊரே மணக்கும் சேமியா உப்புமா

விக்கிமூலம் இலிருந்து



ஊரே மணக்கும் சேமியா உப்புமா

சிறு பையனாக எங்கள் கிராமத்துத் தெருக்களில் சுற்றி வந்த போது நான் எந்தக் கலரில் சட்டை போட்டிருந்தேன் என்பது கூட இப்போது எனக்கு நினைவிருக்கிறது. தினமும் எங்கள் வீட்டுப் பசு மாட்டை மேய்ச்சலுக்குக் கொண்டு போய் ‘மந்தை'’யில் விட்டு வருவது என் அன்றாட வேலைகளில் ஒன்று.

அப்போது ஒரு நாள் குண்டு ஐயர் என்று ஒருவர் குண்டு போட்ட மாதிரி எங்கள் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார், அந்தக் காலத்தில் கன்னையா கம்பெனி போன்ற நாடகக் கம்பெனிகளில் நடிகராக இருந்து ஓய்வு பெற்றதும் சொந்த ஊருக்கே (மாம்பாக்கம்) திரும்பி வந்து விட்டார். காமெடியன் என்பதால் எனக்கு அவரிடம் ஒரு தனிப் பற்றுதல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் வாரம் சாப்பிடுவது என்று ஒரு பழக்கம் உண்டு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் அவருக்குச் சாப்பாடு போட்டு அவர் கடைசி காலத்தைச் சிரமப்படாமல் பார்த்துக் கொள்வது என்று ஊரார் முறை வைத்துக் கொண்டார்கள். குண்டு ஐயர் எங்கள் வீட்டுக்கும் வாரம் சாப்பிட வருவார். கிராமங்களில் பகல் சாப்பாட்டுக்கு உச்சிவேளை ஆகி விடுமாதலால் குண்டு ஐயரால் அதுவரை பட்டினி கிடக்க முடியாது. காலையில் டிபன் சாப்பிட்டுப் பழக்கமானவர். எனவே தினமும் அவர் தங்கியிருந்த வீட்டில் அவரே ஏதாவது டிபன் தயார் செய்து கொள்வார். அவர் சேமியா உப்புமா செய்தால் ஊரே மணக்கும்.

காலை வேளையில் ஒரு சின்ன வாணலியில் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சேமியாவையும் முந்திரியையும் பொன் முறுகலாய் வறுத்து அந்த வாசனையில் ஆளைக் கிறங்க அடித்து விடுவார். தினமும் காலை நேரத்தில் நான் மந்தைக்கு மாடு ஒட்டிச் செல்லும்போது என்னைக் கூப்பிட்டு ஒரு சின்னக் கிண்ணத்தில் வைத்துத் தருவார். மோர் சாதமும் நார்த்தங்காய் ஊறுகாயும் தவிர வேறெதுவும் கண்டிராத என் நாக்கு இன்னும் கொஞ்சம் தர மாட்டாரா என்று ஏங்கும். இன்றைக்கும் எங்காவது சேமியா உப்புமாவைக் கண்டால் குண்டு ஐயரின் கைவண்ணம் அடி நாக்கில் ருசி தட்டும். கண் முன்னே ஒரு விநாடி கிராமம் தோன்றி மறையும்.

சிறு வயதில் படிக்க வேண்டிய காலத்தில் பள்ளிக்கூடம் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பேன். மாலையில் வீடு திரும்பியதும் அப்பாவுக்கு நான் பள்ளிக்கூடம் போகாமல் ஊர் சுற்றின விஷயம் தெரிந்து போய் அடி வாங்குவதும், மறுநாள் சமாதானம் ஆவதும், மறுபடி இரண்டு நாட்களுக்குள்ளாகவே மனம் மாறி, பழையபடி ஊர் சுற்றுவதும் நிரந்தரமாகி விட்டது.

ஒரு சமயம் இது ஒரு உச்ச கட்டத்தை அடைந்த போது இந்தக் கட்டுப்பாடுகளை முழுவதுமாய் உதறிவிட்டு குண்டு ஐயர் மாதிரி சுதந்திரமாய்த் திரிய வேண்டும் என்கிற வெறி என்னுள் தோன்றியது.

ஒரு நாள் பள்ளிக்குக் கட்ட வேண்டிய அந்த மாத ஃபீஸ் பணத்தை அப்பா என்னிடம் கொடுத்தார். நான் பள்ளிக்கூடம் போகாமல், டிபன் பாக்ஸை எனக்குத் தெரிந்த ஒரு புத்தகக் கடையில் வைத்துவிட்டுக் கையில் இருந்த அந்தப் பணத்துடன் திருச்சிக்கு ரயில் ஏறி விட்டேன். சாவி என்கிற பத்திரிகையாளனின் முதல் பயணம் அப்போதுதான் துவங்கிற்று.