பழைய கணக்கு/கல்கியிலிருந்து விகடனுக்கு
சூயஸ் கால்வாய்ப் பிரச்னை பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாகப் பரபரப்போடு வெளிவந்து கொண்டிருந்த நேரம். அந்தப் பிரச்னை பற்றிய எல்லா விவரங்களையும் சேகரித்து “சூயஸ் கால்வாயின் கதை” என்று கல்கியில் ஒரு கட்டுரை எழுதினேன். ராஜாஜியே மகிழ்ந்து பாராட்டிய கட்டுரை அது. ஆனந்த விகடன் அதிபர் திரு எஸ். எஸ். வாசன் அவர்களும் அதைப் படித்துப் பாராட்டியதாய்க் கேள்விப்பட்டேன். அச்சமயம் கல்கி ‘சாமா’வை அவர் ஏதோ ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசிய போது நான் கல்கியில் எழுதியிருந்த “மாறு வேஷத்தில் மந்திரி” என்ற நகைச்சுவைக் கட்டுரையைக் குறிப்பிட்டுப் பேசியதோடு, “சாவி முழுக்க முழுக்க நகைச்சுவை எழுத்தாளராயிற்றே! அவர் எழுத்து விகடனுக்குத்தானே பொருத்தமானது!” என்றும் கூறியிருக்கிறர். மறுநாள் சாமா என்னிடம் இதையெல்லாம் சொல்லி, “வாசனுக்கு உன்னை அங்கே அழைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்குமோ, என்னவோ? எதற்கும் நீ அவரைப் போய்ப் பாரேன்” என்றார்.
அடுத்த வாரமே நான் திரு வாசன் அவர்களைப் போய்ப் பார்த்தேன்.
மாடியிலிருந்தவர் கீழே இறங்கி வந்து என்னோடு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார். பொதுவாகத் தமிழ்ப் பத்திரிகைகள் வளர்ச்சி பற்றிப் பேசினோம். ஆனந்த விகடன் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதை அறிந்து கொள்வதற்காகச் சில தூண்டில் வார்த்தைகளை வீசினர். தெரிந்து கொண்டார்.
“ஆமாம்; முன்பு நீ ஆனந்த விகடனில் வேலை செய்து கொண்டிருந்தாயல்லவா? அப்புறம் ஏன் விகடனே விட்டு விலகி விட்டாய்?” என்று கேட்டார்.
“நான் விலகவில்லை. நீங்கள்தான் அனுப்பி விட்டீர்கள். ஒரு நாள் நான் ஆபீஸில் தூங்கிக் கொண்டிருந்ததைத் தாங்கள் பார்த்து விட்டு என் கணக்கை அன்றே தீர்த்து அனுப்பி விட்டீர்கள்!” என்றேன்.
“அடேடே! அப்படியா?” என்று வாய் விட்டுச் சிரித்து விட்டார் வாசன்.
அடுத்த சில நிமிடங்களில் நான் மீண்டும் விகடனில் வேலைக்குச் சேருவது என்று முடிவாயிற்று.
இதில் வேடிக்கை என்னவென்றல் நான் கல்கியில் இரண்டாம் முறை வேலைக்குச் சேர்ந்து அப்போது பதினெரு மாதங்களே ஆகியிருந்தன. கல்கி பத்திரிகையின் அதிபர் திரு சதாசிவம் என்னிடம் மிகுந்த அன்பும் ஆதரவும் காட்டி மற்ற ஸீனியர் ஆசிரியர்களுக்குச் சமமான அந்தஸ்தும் கொடுத்து வைத்திருந்தார். எனவே, கல்கியிலிருந்து ராஜினாமாச் செய்து விட்டு விகடனுக்குப் போவதற்கு எந்த விதமான நியாயமும் இல்லை. இதனால் எனக்கு உணர்ச்சி பூர்வமான சங்கடம் நிறைய இருந்தது. ஆனாலும் விகடனில் சேரும் ஆசையில் ராஜினாமாச் செய்து விட்டேன். பதினைந்து நாட்களாகியும் என் ராஜினாமா விஷயம் கிணற்றில் போட்ட கல் மாதிரி இருந்ததால் கடைசியில் திரு சதாசிவம் அவர்களேயே நேரில் சந்தித்துப் பேசி விடுவது என்ற முடிவுடன் அவரது அறைக்குள் போனேன்.
என்னைக் கண்டதும் அவர், “என்ன, வேலையை விட்டுப் போகப் போகிறீர்களாமே! என்ன விஷயம்?” என்று இழுத்தார்.
கொஞ்ச நேரம் மெளனம்.
“சரி, உங்கள் இஷ்டம், நான் குறுக்கே நிற்க விரும்பவில்லை. உங்களுக்கு எக்ஸ்ட்ராவாக ஒரு மாதச் சம்பளம் கொடுத்தனுப்பச் சொல்லியிருக்கிறேன்” என்று கூறி வாழ்த்தி அனுப்பினர்.
திரு சதாசிவம் அவர்களின் தாராள மனதை ஏற்கனவே அறிந்தவன் நான். அவருடைய விருந்தோம்பும் குணம், நகைச் சுவை உணர்வு, ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் ஆற்றல், எழுதும் புலமை, திட்டமிட்டுச் செயலாற்றும் திறன், எடுத்த காரியத்தில் வெற்றி காணும் பிடிவாதம், பணத்துக்கு அதிக மதிப்புத் தராத இயல்பு, இவ்வளவும் ஒருங்கே அமைந்த அவரிடம் வேலை செய்வதைப் பெருமையாக எண்ணியவன். இப்போது அவரிடம் போய் வேலையை விட்டுப் போகிறேன் என்றதும், என்னிடம் துளியும் முகம் சுளிக்காமல் மகிழ்ச்சியோடு விடைகொடுத்தனுப்பிய பாங்கு என்னை நெகிழ வைத்து விட்டது. அப்புறமும் நான் தயங்கித் தயங்கி நின்று கொண்டிருந்ததைக் கண்ட அவர், “அவ்வளவுதானே, அப்புறம் என்ன?” என்பதைப் போல் பார்த்தார்.
“நான் இந்தப் பதினொரு மாதங்களில் எழுநூறு ரூபாய் போல் இந்த ஆபீஸில் கடன் வாங்கியிருக்கிறேன்” என்று இழுத்தேன்.
“சிவ சிவா! அதை நீங்கள் திருப்பித் தர வேண்டாம். அப்படியே மறந்துவிடலாம். நான் எப்போதோ மறந்தாச்சு. அப்பவே ‘ரைட் ஆஃப்’ பண்ணியாச்சு” என்றார்.
என் உள்ளத்தில் ஏற்கனவே உயர்ந்திருந்த திரு சதாசிவம் அவர்கள் அந்தக் கணத்தில் ஓங்கி உயர்ந்து விசுவரூபமாய்க் காட்சி அளித்தார். சில நேரங்களில்தான் சில மனிதர்களை அறிய முடிகிறது.