உள்ளடக்கத்துக்குச் செல்

பழைய கணக்கு/காமராஜ் தொடங்கி வைத்த பத்திரிகை

விக்கிமூலம் இலிருந்து



காமராஜ் தொடங்கி வைத்த பத்திரிகை

துமிலன் அவர்களை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். அவர் தினமணி கதிர் ஆசிரியராக இருந்த போது நான் வேலையில்லாமல் இருந்தேன். ஒருநாள் அவர் என் விட்டுக்கு வந்து அழைத்துப் போய் எனக்கு அங்கே உதவி ஆசிரியர் வேலை போட்டுத் தந்தார். ஆனால் சம்பளம்தான் ரொம்பவும் குறைச்சல். என் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்து வைக்க முடியாத சம்பளம்.

“சம்பளம் கொஞ்சம் அதிகமாக வேண்டும்” என்று சில மாதங்கள் கழித்து ஒரு நாள் அவரைக் கேட்டேன்.

“அதெல்லாம் கோயங்கா தர மாட்டார்” என்று இவரே கூறிவிட்டார். சம்பள உயர்வை அங்கே எதிர்பார்ப்பதில் பயனில்லை என்று தீர்மானமாகத் தெரிந்ததும் நான் அந்த உதவி ஆசிரியர் வேலையை விட்டு விட்டேன். அதற்குப் பிறகு வெகு காலம்வரை துமிலனைப் பார்க்கவே இல்லை. காலப்போக்கில் அவரும் கதிரிலிருந்து விலகி வேறு எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தார்.

பின்னால் நான் விகடனில் சேர்ந்து அங்கிருந்து மீண்டும் கதிர் ஆசிரியராகப் பொறுப்பேற்க இருந்த சமயத்தில் துமிலன் சும்மா இருப்பது கண்டு அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.

விகடனை விட்டு விலகு முன்பாக திரு காமராஜ் அவர்களுடன் கர்நாடக மாநிலத்திற்கு நான் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. “நீங்களும் என்னுடன் வாருங்களேன்” என்று துமிலனிடம் கூறி, என் சொந்தச் செலவில் அவரை அழைத்துச் சென்றேன். காமராஜர் கண்ணில் அவ்வப்போது அவர் படும்படியாக சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுத்தேன். சரியான வாய்ப்பு கிடைத்தபோது தலைவரிடம், இவர் ஒரு மூத்த எழுத்தாளர். துமிலன் என்ற பெயரில் நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் இப்போது வேலை ஏதும் இல்லை. அவருக்கு நீங்கள்தான் ஏதாவது...” என்று இழுத்தேன்.

“குட்டி குட்டியா வாக்கியம் எழுதுவாரே, அவர்தானே! வடக்கே நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டுக்கெல்லாம் வருவார், விகடனில் எழுதுவார். பார்த்திருக்கேன். என்னை என்ன செய்யனுங்கறீங்க?” என்றார் காமராஜ்.

“இங்கே காங்கிரஸுக்கென்று தனியே ஒரு நல்ல பத்திரிகை இல்லை” என்று ஆரம்பித்ததும் நான் என்ன சொல்லப் போகிறேன் என்பதை அவர் சட்டென்று புரிந்து கொண்டு, “சரி...பார்க்கலாம்” என்றார்.

சில நாட்களில் சுதந்திரச் சங்கு என்ற பெயரில் ஒரு காங்கிரஸ் பத்திரிகை ஆரம்பிப்பதென்றும் அந்தப் பத்திரிகைக்கு துமிலனை ஆசிரியராக நியமிப்பது என்றும் முடிவானது. நான், ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணய்யர், ராமண்ணு ஆகிய மூவரும் அடங்கிய ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

ஆனால் பத்திரிகை தொடங்கப் பெற்ற சில மாதங்களுக்குள்ளாகவே பெரும் நஷ்டத்துக்குள்ளாகி அதை நிறுத்த வேண்டிய கட்டம் உருவானது. நான் கதிர் ஆசிரியராகப் பொறுப்பேற்ற சில நாட்களுக்குள்ளாகவே சுதந்திரச்சங்கு நின்று போய் விட்டது.

அப்புறம் கதிரில் துமிலனை அவ்வப்போது ஏதேனும் எழுதச் சொல்லி அதன் மூலம் அவருக்கு ஓரளவு வருமானம் கிடைக்க வழி செய்யலாம் என்பது என் எண்ணம். அதை முடிந்த அளவு செயல்படுத்தியும் வந்தேன்.

துமிலன் எப்போதாவது தினமணி அலுவலகத்துக்கு ஏ. ஜி. வெங்கடாச்சாரியாரைப் பார்க்க வருவதுண்டு. அப்படியே தினமணி கதிர் எடிடோரியல் அறைக்குள்ளும் எட்டிப் பார்ப்பார். “அவர் வரும் நேரங்களில் அவரைக் காக்க வைக்காமல் உடனுக்குடன் பேசி முடித்து, மேட்டர் கொடுத்தால் வாங்கிக் கொண்டு அனுப்பி விடுங்கள். என் அறைக்குள் அவர் வராதபடி நாசூக்காகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று என் உதவியாளர்களிடம் சொல்லி வைத்திருந்தேன்.

எனது இந்தப் போக்கு பலருக்குப் புரியவில்லை. ஒருவேளை துமிலன் வருவதை நான் விரும்பவில்லை என்று அவர்கள் தவறாக எண்ணிக் கொண்டார்களோ, என்னவோ? ஆனால் நான் இப்படிக் கேட்டுக் கொண்டதற்குக் காரணம் வேறு. தான் ஒரு காலத்தில் அமர்ந்திருந்த நாற்காலியில் இன்னொருவன் அமர்ந்திருப்பதைப் பார்க்கும் யாருக்கும் மிகச் சிறிதேனும் சங்கடம் ஏற்படக் கூடும். அந்தச் சங்கடத்தை துமிலன் அவர்களுக்குத் தந்துவிடக் கூடாது என்ற நல்ல நோக்கத்திலேயே அப்படிச் சொல்லி வைத்திருந்தேன். இது பற்றி துமிலன் என்ன நினைத்தார் என்பது அப்போது எனக்குத் தெரியாது.

பின்னொரு சமயம் ராஜேசுவரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற என் மணிவிழாவின் போது அவரை மேடைக்கு அழைத்து, ஒரு மாலையை எடுத்து கலைஞர் அவர்களிடம் தந்து துமிலனுக்குப் போட்டு கௌரவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அந்த வகையில் எனக்கு அவரிடமுள்ள மரியாதையைத் தெரியப்படுத்தினேன்.

நான் ‘குங்குமம்’ பத்திரிகைக்குப் போன பிறகு சில மாதங்கள் கழித்து துமிலன் அவர்களிடமிருந்து எனக்கு ஒரு காட்டமான கடிதம் வந்தது, கதிரில் நான் இருந்தபோது, என்னைப் பார்க்கக் கூட அவரை அனுமதிக்கவில்லையாம். என் போக்கை மிகவும் கண்டித்து அவர் காரசாரமாய் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அப்படியொரு அபிப்ராயம் என் மீது தோன்றும் வகையில் அவர் மனதைக் கலைத்தவர்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட ஒரு கடிதத்தை நான் அவரிடமிருந்து கனவில் கூட எதிர்பார்க்கவில்லை, அதைப் படித்ததும் அரைமணி நேரம் என்னால் வேறு எந்த வேலையும் செய்ய முடியவில்லை.

என் நிலையை விளக்கி மிகவும் பவ்யமாக நாலு பக்கங்களில் ஒரு பதிலை நான் துமிலன் அவர்களுக்கு எழுதிப் போட்டேன். அதற்குப் பின் அவரிடமிருந்து எனக்கு எந்தக் கடிதமும் இல்லை. எனக்கும் அவருக்குமிடையே அப்புறம் தொடர்பு இல்லாமலேயே இருந்து வந்தது.

சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் நண்பர் பி. வி. ஆர். வீட்டுத் திருமணத்துக்கு நான் போயிருந்த போது அங்கே துமிலன் அவர்களும் வந்திருந்தார். என்னைக் கண்டதும் அவரே என் அருகில் வந்து மிகவும் அக்கறையோடு என்னைப் பற்றியும், சாவி பத்திரிகையின் வளர்ச்சி பற்றியும் விசாரித்தார். என் மீது கொண்டிருந்த தவறான அபிப்ராயத்தை அவர் மாற்றிக் கொண்டு விட்டார் என்பதை அவர் பேச்சிலிருந்து உணர்ந்தேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருந்தது. இப்போதும் இருக்கிறது.