உள்ளடக்கத்துக்குச் செல்

பழைய கணக்கு/நான் ஒரு

விக்கிமூலம் இலிருந்து
நான் ஒரு பத்திரிகாசிரியனாக வர வேண்டும் பிள்ளையாரப்பா!

சென்னை நகரம் முதன் முதலாக என்னைத் தரிசித்தபோது எனக்கு வயது பன்னிரண்டு. டிராம் வண்டிகளும் ஜட்கா வண்டிகளும் முறையே நகர்ந்து, ஓடிக் கொண்டிருந்த காலம். பஸ்களை எப்போதாவது அபூர்வமாகத்தான் பார்க்க முடியும். சென்னை நகரம் என்பது அப்போது சில பேட்டைகள் அடங்கிய ஒரு பெரிய கிராமம்தான். இவ்வளவு கொசு கிடையது. ராக்ஸி தியேட்டர், கினிமா ஸெண்ட்ரல், வெலிங்டன், கெயிட்டி, ஸ்டார் டாக்கீஸ், பிராட்வே இந்த ஆறு தியேட்டர்களும் அப்போது என்னைப் போலவே வாலிபமாயிருந்தன.

நான் கிராமத்துப் பள்ளி வரை படித்து முடித்திருந்தேன், அந்தப் படிப்பைப் பயன்படுத்தி, பத்திரிகைகள் படித்துப் படித்துப் பொது அறிவை வளர்த்துக் கொண்டேன். சிறு வயது முதலே பத்திரிகைகள் படிப்பதில் ஆர்வம் இருந்து வந்தது. ஆனந்த விகடன்தான் அந்த ஆர்வத்தைத் தூண்டி விட்டது.

பின்னால் என் வாழ்க்கை பத்திரிகையோடுதான் இறுக்கமாக இணையப் போகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் தெரியாத நாட்களிலேயே, “நான் ஒரு பத்திரிகை ஆசிரியனாக வரவேண்டும் பிள்ளையாரப்பா” என்று என் கிராமத்து வினாயகப் பெருமானிடம் தினம் தினம் வேண்டிக் கொண்டு தலையில் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போட்ட நாட்கள் என் நினைவிலிருந்து அகலவில்லை.

சென்னைக்கு முதன் முதல் வந்ததும் பவழக்காரத் தெருவில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தேன். அவர் ஒரு வழக்கறிஞர். எனக்குள்ள பத்திரிகை ஆர்வத்தைப் புரிந்து கொண்டு தம் பீரோவில் அடுக்கி வைத்திருந்த விகடன் இதழ்கள் சிலவற்றை எடுத்து எனக்குப் படிக்கக் கொடுத்தார். அத்துடன் என்னிடம் இரண்டு நாலணாக் காசுகளை தந்து, “பையா, இந்தா! மூர் மார்க்கெட், ஜூ எல்லாம் பார்த்துவிட்டு வா” என்றார்.

‘ஜிவ்’ வென்று எழும்பி வானத்தில் சிறிது நேரம் சஞ்சரித்து விட்டுப் பூமிக்குத் திரும்பி வந்தேன். காரணம், என் வயதுப் பையனுக்கு எட்டணா கிடைப்பது என்பது அப்போதெல்லாம் அத்தனை எளிதல்ல!

அப்போது தீபாவளி முடிந்து இருபது நாட்களே ஆகியிருந்தன. சில கடைகளில் இன்னமும் பட்டாஸ் விற்றுக்கொண்டிருந்தார்கள். கையிலிருந்த எட்டணா, பட்டாஸ் வாங்கத் தூண்டிப் படாத பாடு படுத்திற்று, அச்சமயம் ஆனந்த விகடன் தீபாவளி மலர் வெளியாகியிருந்தது. விலை நாலணா. ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. எப்படியும் அந்த மலரை வாங்கிப் படித்து விட வேண்டும் என்று கொள்ளை ஆசை!

244, தங்கசாலைத் தெருதான் அப்போது விகடன் அலுவலகத்தின் முகவரி. பவழக்கார வீதியிலிருந்து செக்குமேடு போலீஸ் ஸ்டேஷன் அருகில் பிராட்வேயைக் குறுக்கில் கடந்து கினிமா ஸெண்ட்ரல் பக்கம் (இப்போது முருகன் தியேட்டர்) போனால் தங்கசாலை வரும் என்று வக்கீல் மாமா வழி சொல்லிக் கொடுத்தார். சொன்ன வழியைப் பின்பற்றி நடந்தே போய் விட்டேன்.

விகடன் அலுவலகம் என்பது ஒரு சின்ன வீடு. வாசலில் ஒரு பெரிய திண்ணையும் ஒரு குட்டித் திண்ணையும் இருந்தன. தெருவில் இருந்த குப்பைத் தொட்டியில் கிடந்த தாள் ஒன்று கண்ணில் பட்டது. வரப்போகும் விகடன் இதழுக்கான அச்சான பாரம் அது. மை அதிகமாகிப் போய் கசக்கி எறியப்பட்ட நிலையில் அந்தக் குப்பைத் தொட்டியில் கிடந்தது. அதை ஒழுங்காக மடித்து இடுப்பில் வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். புதையல் கிடைத்த பெருமை! அந்தக் காலத்து வீட்டு அமைப்பின்படி வாசற்படியைக் கடந்ததும் ரேழி. அப்புறம் ஒரு சின்னக் கூடம். அங்கே இரு தூண்கள். பின்பக்கம் சமையலறை.

வலது பக்கம் இருந்த கூடத்துத் தூணுக்கும் சுவருக்கும் இடையே ஒரு சின்ன மேஜை. கதர்ச் சட்டை அணிந்த ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர்தான் திரு வாசன் என்பதை அப்போது என்னால் ஊகிக்க முடியவில்லை. பிற்காலத்தில் அவரைப் பார்த்தபோது அந்தப் பழைய முகம் என் நினைவுக்கு வந்து, “ஒகோ, இவர்தான?” என்று ஊகித்துப் புரிந்து கொண்டேன். நான் அவரிடம் நாலணாவை நீட்டி, “தீபாவளி மலர் வேண்டும்?” என்று கேட்டதும் அவர் உடனே எழுந்து போய், ஒரு மலரை எடுத்து வந்து தூசி தட்டி என்னிடம் தந்தார். எனக்குப் பெருமை பிடிபடவில்லை. வெளியே வந்ததும் ஆவலோடு அங்கேயே திண்ணையிலேயே உட்கார்ந்து படிக்க ஆரம்பித்து விட்டேன். புகழ் பெற்ற எஸ். வி. வி. எழுதிய கோயில் யானையை அந்தத் திண்ணையில்தான் படித்தேன்.

கல்கி, துமிலன், பூரி (துமிலன்தான் பூரி) போன்ற எழுத்தாளர்களின் பெயர்கள் எனக்கு அப்போதே பரிச்சயம். அவர்களுடைய கட்டுரைகளும் அந்த மலரில் இடம் பெற்றிருந்தன. அடுத்த இதழ் ஃபாரத்தையும் எடுத்துப் படித்து முடித்தேன். கன குஷியோடு வீடு திரும்பியபோது போட்டோ ஸ்டுடியோ ஒன்று குறுக்கிட்டது. அதில் நுழைந்து, கையிலிருந்த இன்னொரு நாலணாவுக்கு ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன்.

வீடு திரும்பியதும், “என்னடா மூர் மார்க்கெட், போயிருந்தாயா?” என்று கேட்டார் வக்கில்.

“இல்லை. தங்கசாலைத் தெருவுக்குப் போயிருந்தேன்” என்று பெருமையோடு விகடன் தீபாவளி மலரைக் காட்டினேன். “இதற்குத்தான் தங்கசாலைத் தெருவுக்கு வழி கேட்டாயா? அசடே, இந்த மலர் நம் வீட்டிலேயே வாங்கி வைத்திருக்கிறேனே! என்னிடம் சொல்லியிருக்கக் கூடாதோ?” என்றார் வக்கீல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பழைய_கணக்கு/நான்_ஒரு&oldid=1159686" இலிருந்து மீள்விக்கப்பட்டது