உள்ளடக்கத்துக்குச் செல்

பழைய கணக்கு/பகத்சிங் வாசகசாலை

விக்கிமூலம் இலிருந்து



பகத்சிங் வாசகசாலை

சேலம் ஆதிநாராயண செட்டி என்பவர் அந்தக் காலத்தில் ரொம்பப் புகழுடன் விளங்கியவர். அவர் ஒருமுறை ஏதோ ஒரு தேர்தலில் போட்டியிட்டார். தேர்தல் சம்பந்தமாக எங்கள் கிராமத்துக்கு என் தந்தையின் உதவியை நாடி வந்திருந்தார்.

“ஆதிநாராயண செட்டிக்கே ஓட்டுப் போடுங்கள்” என்று கலர் கலராய்ப் போஸ்டர்கள் கொண்டு வந்தார். அவை பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டிருந்தன. கிராமம் முழுவதும் அவற்றைச் சுவர்களில் ஒட்டும் வேலையை அப்பா என்னிடம் ஒப்படைத்தார். நான் முதல் முதல் பெரிய அச்செழுத்துக்களை வர்ணத்தில் பார்த்து மயங்கியது அப்போதுதான்.

எங்கள் பக்கத்து கிராமம் அக்கூர் எல்லையம்மன் கோயிலில் ஆடு கோழிகளைப் பலியிடும் பழக்கம் உண்டு. இதைத் தடுப்பதற்காகச் சென்னையிலுள்ள ஜீவரட்சக சங்கத்தார் சில போஸ்டர்கள் அச்சிட்டு அந்தக் கோயில் வாசலில் ஒட்டியிருந்தார்கள்.

“மானிடர்களே! நாங்கள் வாயில்லாப் பிராணிகள், எங்களைக் கொல்லாதீர்கள்” என்று ஆடுகளும் கோழிகளும் கொட்டை எழுத்துக்களில் முறையிட்டன!

சென்னை தங்கசாலைத் தெருவில் இருந்த தென்னித்திய ஜீவரட்சக சங்கத்துக்கு இம்மாதிரி போஸ்டர்கள் அனுப்பும்படி கடிதம் எழுதிக் கேட்டிருந்தேன். அடுத்த வாரமே என் பெயருக்குக் கற்றை கற்றையாகப் போஸ்டர்கள் வந்து சேர்ந்தன.

“விசுவநாதன், போஸ்ட்” என்று உரக்கக் கூவி அழைத்து வந்த தபால்காரர் என்னிடம் அவற்றைப் பட்டுவாடா செய்து விட்டு குடிப்பதற்கு மோர் கேட்ட போது எனக்குப் பெருமை பிடிபடவில்லை. சமுதாயத்தில் எனக்கொரு பெரிய அந்தஸ்து கிடைத்து விட்டது போன்ற உணர்வு உள்ளத்தில் பொங்கியது. கொட்டையான அச்செழுத்துக்களோடு எனக்கேற்பட்ட இந்த வாத்சல்ய உறவுதான் பிற்காலத்தில் நான் லைன்போர்ட் எழுத்தாளனவதற்கு அடித்தளமாக அமைந்தது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஒருநாள் திடீரென்று ஒரு பரபரப்பான செய்தி வெளியாயிற்று. பாஞ்சால சிங்கம் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட செய்திதான் அது. அந்தச் செய்தி என்னைப் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது. பகத்சிங், சுகதேவ், ராஜகுரு இவர்களின் வீரதீரச் செயல்கள் என்னை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக வீறு கொள்ளச் செய்தன. ஆனாலும் சிறு பையனாக இருந்த காரணத்தால் என்னால் எதுவும் செய்ய இயலாத நிலை. பகத்சிங்கிற்கு ஏதாவது செய்தே தீர வேண்டுமென்ற தீவிரம். என்ன செய்வது?.

கிராமத்தில் என் உயிர்த் தோழனை கிருஷ்ணமூர்த்தியைக் கலந்து ஆலோசித்தேன். “ஏதாவது செய்ய வேண்டியதுதான்” என்று அவன் வழி மொழிந்தான். ஆனால் என்னவென்று சொல்லத் தெரியவில்லை. இப்படியே எதுவும் செய்ய முடியாத நிலையில் ஓரிரு மாதங்கள் ஓடி விட்டன.

திடீரென்று ஒருநாள் கிருஷ்ணமூர்த்தி என்னை அழைத்து. “இன்று ஒரு முக்கிய சமாசாரம் உனக்குச் சொல்லப் போகிறேன்” என்றான்.

“என்னடா?”

“அடுத்த வாரத்திலிருந்து நான் இந்த ஊரிலேயே மிகப் பெரிய பணக்காரன்!” என்றான்.

“என்னடா சொல்கிறாய்? மாடி வீட்டு அய்யாவய்யர்தானே இந்த ஊரிலேயே பெரிய பணக்காரர்? நீ எப்படி அவரை மிஞ்ச முடியும்? நீ ஏழை வீட்டுப் பையன்தானே?” என்று கேட்டேன்.

“அடுத்த வாரம் அவர் என்னை சுவீகாரம் எடுத்துக் கொள்ளப் போகிறார். அடுத்த புதன்கிழமையிலிருந்து நான் அவருடைய தத்துப் பிள்ளை. அப்புறம் அந்த வீட்டுப் பெட்டிச் சாவி என்னிடம் தானே!” என்றேன்.

அதைக் கேட்ட போது எனக்கே பெரிய சொத்து வந்து விட்டதைப் போல் மகிழ்ந்தேன் நான்.

“கிருஷ்ணமூர்த்தி! நாம் பகத்சிங்குக்கு ஏதாவது செய் தாகனும்டா” என்றேன்.

”செய்துடலாம் அடுத்த வாரம் என் வீட்டுக்கு வா உன்னிடம் மூன்று ரூபாய் தருகிறேன்” என்றான்.

“அந்த மூன்று ரூபாய்க்கு என்ன செய்யலாம்?”

“அம்மாஞ்சி வாத்தியார் வீட்டுக்கு மேற்கே மூன்றாவது வீட்டுத் திண்ணையும் அதைச் சேர்ந்த சின்ன அறையும் காலியாயிருக்கிறது. அந்த அறையில் பகத்சிங் பெயரில் இலவச வாசகசாலை ஒன்று ஆரம்பித்த விடலாம்.” என்றான்.

அடுத்த வாரமே அய்யாவய்யர் வீட்டு கஜானா சாவி கிருஷ்ணமூர்த்தியின் கைக்கு மாறிவிட்டது! ஒருநாள் பகல் வேளை அய்யாவய்யர் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்த போது கிருஷ்ணமூர்த்தி என்னைக் கூப்பிட்டு இருட்டான ரேழி உள்ளே போய் அறையைத் திறந்து மூன்று ரூபாய் கொண்டு வந்து கொடுத்தான்.

ஐந்தாம் ஜார்ஜ் உருவம் கொண்ட மூன்று முழு வெள்ளி ரூபாய்கள்!

அடுத்த கணமே நாலு மைல் தொலைவிலுள்ள வாழைப் பந்தலுக்கு நான் நடையைக் கட்டினேன். கடைத் தெருவுக்குப் போய் அல்லி அரசாணி மாலை, தெனாலிராமன் கதை, துளசி பூஜையின் மகிமை, வாய்ப்பாடு, பகத்சிங் படம், கொஞ்சம் கலர் சாக்பீஸ் இவ்வளவும் வாங்கிக் கொண்டு அப்படியே போஸ்டாபீஸுக்குப் போய் ஆனந்தவிகடனுக்கு ஒரு வருடசந்தா மணியார்டர் செய்து விட்டு வந்தேன். மணியார்டர் பாரம் எழுதிக் கொடுத்தவர் போஸ்ட்மாஸ்டர். ஊர் திரும்பியதும் முதலில் அந்தத் திண்ணை அறையைப் பெருக்கி, ஒட்டடை அடித்துச் சுத்தப் படுத்தினேன். எதிர் வீட்டு மாமியைக் கூப்பிட்டுத் தண்ணீர் தெளித்துக் கோலம் போடச் செய்தேன்.

பகத்சிங் படத்தை அறைச் சுவரில் ஒட்டி, அதற்கு இரு பக்கங்களிலும் ‘ஆதிநாராயண செட்டிக்கே ஒட்டுப் போடுங்கள்’ ‘பலியிடாதீர்கள்’ போஸ்டர்களையும் ஒட்டினேன்.

வெளியே வாசல் திண்ணை விட்டத்தில் கலர் சாக்பீஸால் (எழுத்துக்கு ஒரு கலர்) ‘பகத்சிங் இலவச வாசகசாலை’ என்று எழுதி முடித்தேன். அவ்வளவுதான்; வாசகசாலை அதிகார பூர்வமாகத் திறக்கப்பட்டு விட்டது. கிருஷ்ணமூர்த்திதான் தலைவர். நான் செயலாளர். ஆரம்பித்து ஒருமணி நேரமாகியும் யாரும் புத்தகம் வாங்கிப்போக வரவில்லை. வாசகசாலை ஆரம்பித்து விட்ட செய்தியைத் தெருத் தெருவாகப் போய்ச் சொல்லிவிட்டு வந்தேன். அப்படியும் யாருமே வந்து புத்தகம் கேட்டபாடில்லை. “இலவச வாசகசாலை தான்; யார் வேண்டுமானாலும் புத்தகம் வாங்கிக் கொள்ளலாம்” என்று தீவிரப் பிரசாரம் செய்தும் கூட ஒரு வாசகர் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. எனக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் இது பெரிய ஏமாற்றம்!

“பகத்சிங்குக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தோம். செய்து விட்டோம். கடமை முடிந்தது” என்ற திருப்தி கிருஷ்ணமூர்த்திக்கு.

ஊர் மக்கள் இப்படிக் கைவிட்டு விட்டார்களே என்ற மனச்சோர்வு எனக்கு.

வடாற்காடு மாவட்டம் பற்றிக் கேலியாகச் சொல்வதுண்டு. அதாவது: -

அரசனில்லாத கோட்டை.

சாமி இல்லாத கோயில்.

தண்ணீர் இல்லாத ஆறு.

அழகில்லாத பெண்கள்.

இந்நான்கும் இந்த மாவட்டத்துக்கே உரித்தான சிறப்பு என்று கூறுவார்கள்.

அத்துடன் ஐந்தாவதாக இன்னென்றும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். வாசகன் இல்லாத வாசகசாலை என்பதுதான் அது!