பழைய கணக்கு/விசநாதன் வந்துகுது

விக்கிமூலம் இலிருந்து
விசநாதன் வந்துகுது

கிராமத்தில் அப்பாவுக்குச் சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலமும் பெரிய வீடும் இருந்த போதிலும் அதற்கேற்ற மாதிரி நிறையக் கடனும் பட்டிருந்தார். மாம்பாக்கத்திலேயே எங்களுடையதுதான் பெரிய வீடானதால் எங்களைப் “பெரிய வீட்டுக்காரர்” என்று சொல்வார்கள்.

என் சகோதரிகள் இருவருக்குமே ஏக தடபுடலாக, தெருவை அடைத்துப் பந்தல் போட்டு, வெளியூர் நாதஸ்வரம், நாதமுனி பாண்டு, வாணவேடிக்கையோடு கலியாணம், ஐந்து நாட்கள் ‘ஜாம் ஜாம்’ என்று நடந்தது.

வாசல் திண்ணையில் இரண்டு சந்தனக்கல் போட்டு இரண்டு வேலைக்காரர்கள் ஓயாது சந்தனம் அரைத்தபடி இருந்தனர். கலியாண வீட்டில் விருந்து சாப்பிட்டு விட்டுப் போகிறவர்கள் யாராயிருந்தாலும் மார்பில் சந்தனம் பூசாமல் போகமாட்டார்கள்!

“பந்து மித்திரர்களுடன் நாலு நாள் முன்னதாகவே வந்திருந்து தம்பதிகளை ஆசீர்வதிக்க வேணுமாய்க் கோருகிறேன்” என்று சம்பிரதாயமாக அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த போதிலும் பத்து நாள் முன்னதாகவே வந்து விட்ட பந்து மித்திரர்கள் கலியாணம் முடிந்த பின்னரும் பத்து நாள் இருந்து விட்டுப் போனார்கள்! ”பெரிய வீட்டில் பெரிய தோரணையில் வாழ்க்கை அமைந்து விட்டதால் என் தந்தையார் எதிர்காலம் பற்றிய சிந்தனையே இல்லாமல், என்னைப் பற்றிய கவலையும் இல்லாமல் வாழ்ந்து விட்டார்.

வட்டிக்கு வட்டி குட்டி போட்டுக் கடன் பளு தாங்க முடியாத அளவுக்குப் போன பிறகு வீடு வாசல், நிலம் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பெரிய வீட்டை விற்றுக் கடனைத் தீர்த்தது போக மிஞ்சியிருந்த பணத்தில் எதிர்மனையில் சின்னதாக ஒரு வீடு கட்டிக் கொண்டு குடிபெயர்ந்தோம்.

பெரிய வீடு போய்விட்ட துக்கம் எல்லோரையும் கவ்விக் கொண்டது. யாரையோ பறிகொடுத்து விட்டது போல் அப்பா, அம்மா, பாட்டி எல்லோரும் அழுது கொண்டிருந்தார்கள். ரொம்ப நாள் வரை அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார்கள். நான் ரொம்பச் சின்னப் பிள்ளையாக இருந்ததால் அந்த இழப்பு என்னைப் பாதிக்கவில்லை. மாறக நாகரிகமான வராண்டாவுடன் கூடிய புதுவீடு பற்றிக் கொஞ்சம் பெருமையாகவே இருந்தேன். வாசல் படிக்கு மேல் எனக்குத் தெரிந்த இங்கிலீஷில் இரண்டு ‘எல்’ போட்டு wellcome என்று எழுதினேன்.

அப்புறம் ஏழெட்டு ஆண்டுகளே அந்தப் புது வீட்டில் வாழக் கொடுத்து வைத்திருந்தோம் கடைசியில் அதையும் விற்றுவிட்டோம். இதற்கிடையில், ஒரு சமயம் என் தாய் தந்தையர் என்னைப் பார்க்க சென்னைக்கு வந்திருந்தார்கள். அப்போது நான் சந்திரோதயம் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். சௌந்தர்யா நர்ஸரியில் ஒரு தென்னம் பிள்ளை வாங்கிப் பெற்றேர்களிடம் கொடுத்து “அப்பா இதைக் கொண்டு போய் கிராமத்தில் நம் வீட்டு வாசலில் வைத்து வளர்த்து விடு” என்று சொல்லி அனுப்பினேன். அப்பாவும் அதை ஊரில் கொண்டு போய் வைத்து கண்ணும் கருத்துமாய்க் காப்பாற்றி வந்தார். ஏராளமாய் உப்பு கொட்டினர். சுற்றிலும் பாத்தி கட்டித் தண்ணீர் ஊற்றினர். கன்று நன்கு வளர்ந்து பெரிய மரமான போதிலும் பலன் கிடைக்கவில்லை. தென்னைக்குள் வண்டு புகுந்து கொண்டு குருத்துக்களைத் கத்தரி போட்டு வெட்டிக் கொண்டிருந்தது. “இவ்வளவு பாடுபட்டு வளர்த்தேனே, ஒரு தேங்காய் கூடக் கிடைக்கவில்லையே!” என்று அப்பா சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார். மரத்திலிருந்து வண்டை அப்புறப்படுத்த என்னென்னவோ செய்து பார்த்தார். குடைக் கம்பிகளால் குத்திக் குத்திக் கம்பிகள் கோண மாணாவென்று வளைந்து போனதுதான் மிச்சம்!

அவர் எனக்கு எழுதும் கடிதங்களிலெல்லாம் தென்னை மரம் குல போடாமல் மோசம் செய்து விட்டது பற்றியும், வண்டின் அட்டுழியம் பற்றியும் பத்தி பத்தியாய் விவரித்துக் கொண்டிருந்தார்.

கடைசியில் அந்த வீட்டையும் விற்றுவிட வேண்டிய நிலை வந்தபோது அப்பாவுக்குத் துக்கம் தாங்கவில்லை. பாடுபட்டு வளர்த்துப் பலன் எதுவும் பெறாத நிலையில் அந்தத் தென்னை மரத்தையும் சேர்த்து, விற்க வேண்டியிருக்கிறதே என்று குமுறிப் போனார்.

பெரிய வீடும் போய், தென்னை மரத்து வீடும் போய்விடவே அந்த வேதனையோடு என் தாய் தந்தையர் கிராமத்தில் வசிக்கப் பிடிக்காமல் சென்னைக்கே வந்து சேர்ந்து விட்டார்கள்.

இதெல்லாம் பழங்கதையாய்ப் போய்ப் பல ஆண்டுகள் ஆகி விட்டன.

சில வருஷங்களுக்கு முன் ஒருநாள் நான் என் கிராமத்திலுள்ள விநாயகரைத் தரிசிக்கப் போயிருந்தேன். ஊரை நெருங்கும் போது சிறுவயதில் நான் அங்கு விளயாடியதெல்லாம் நினைவுக்கு வந்தன. ரோடு ஓரத்தில் புங்க மரத்தில் ஏறி குரங்காட்டம் ஆடியது. சிற்றேரிக் கரை, கருடகம்பம், குப்பு செட்டிக் கடை, அரசமரத்தடியில் நரிக்குறத்தியிடம் கையில் பச்சை குத்திக் கொண்டது, பெருமாள் கோயில் இடிபாடு, ‘விசநாதன் வந்துகுது பார்’ என்ற குடியானவர்களின் அன்புக் குரல் எல்லாமாகச் சேர்ந்து என்னை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தின. அக்கிராமத்துக்குள் நுழைந்து அந்தத் தென்னை மரத்து வீட்டைப் போய்ப் பார்த்தேன். வாசலில் நான் எழுதிய WELLCOME எழுத்துக்கள் அழிந்து போய் மங்கலாய்த் தெரிந்தன.

தென்னை மரத்தில் இளநீர்க் காய்கள் சந்நியாசிக் கலரில் குல குலையாய்த் தெரிந்தன.

எதிரில் பெரிய வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்து அந்த மரத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இதற்குள் தென்னை மரத்து வீட்டை எங்களிடமிருந்து விலைக்கு வாங்கிய மீசைக் கவுண்டர் நான் வந்திருப்பதை அறிந்து ஓடிவந்து நலம் விசாரித்தார். அந்த மரத்திலிருந்து ஒரு இளநீர் வெட்டி வந்து, “ஐயா, இதைச் சாப்பிடுங்க; நீங்க வெச்ச மரம்” என்று உபசரித்தார். நான் இதை எதிர்பார்க்கவில்லை. “அந்த வண்டு என்ன ஆச்சு கவுண்டரே?”

தேனாக இனித்த அந்த இளநீரைக் குடித்து தென்னை மரம் எங்கள் குடும்பத்திற்குப் பட்டிருந்த நன்றிக் கடனைத் தீர்த்து வைத்தேன்.