உள்ளடக்கத்துக்குச் செல்

பழைய கணக்கு/லாக் அப்பில் மசாலா தோசை

விக்கிமூலம் இலிருந்து



லாக் அப்பில் மசாலா தோசை

1942 ஆகஸ்ட் எட்டு, வெள்ளையனே வெளியேறு என்று குரல் கொடுத்த காந்திஜி பம்பாயில் கைது செய்யப்பட்டு எங்கேயோ அழைத்துச் செல்லப்பட்டார். அவரை அடுத்து நேருஜி, படேல், ஆஸாத், காமராஜ், சத்தியமூர்த்தி எல்லாருமே கைது செய்யப்பட்டார்கள். நாடு முழுவதும் ஒரே கொந்தளிப்பு அதே சமயம் இரண்டாம் உலகப் போரும் நடந்து கொண்டிருந்ததால் ஊரடங்குச் சட்டம், இருட்டடிப்பு என்று நாடே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது.

காந்திஜி கைதானதும் அங்கங்கே தலைமறைவாகியிருந்த காங்கிரஸ்காரர்கள், மகாத்மா இதைச் செய்யச் சொன்னார். அதைச் செய்யச் சொன்னர் என்று எதையாவது சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

நான் அப்போது வேலைவெட்டி ஏதுமின்றி ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன். நாட்டுப்பற்று மட்டுமே நெஞ்சில் நிறைந்திருந்தது. காந்திஜி தண்டவாளத்தைப் பெயர்க்கச் சொன்னார். தந்திக் கம்பிகளை வெட்டச் சொன்னார். தபாலாபீஸைக் கொளுத்தச் சொன்னார் என்று வெளியாகிக் கொண்டிருந்தன. பாரத தேவி ராமரத்னம் ரகசியமாக எனக்குச் சில துண்டுப் பிரசுரங்களை அனுப்பி அவற்றை மற்றவர்களுக்கு விநியோகிக்கும்படிச் சொல்லி அனுப்பினார்.

ஏற்கனவே உணர்ச்சி வசப்பட்டிருந்த எனக்கு இது மேலும் வெறியூட்டியது. தேச விடுதலைக்கு எதையாவது செய்தாக வேண்டும். விடுதலைப் போரில் குதித்தாக வேண்டும் என்ற தீவிரம் ரத்தத்தைச் சூடாக்கியது. தந்திக்கம்பி அறுப்பது, தண்டவாளம் பெயர்ப்பது. இதெல்லாம் நான் மட்டும் தனியாகச் செய்யக் கூடிய காரியமாய்த் தோன்றவில்லை. எனவே, பக்கத்தில் உள்ள மண்ணடி போஸ்ட் ஆபீஸைக் கொளுத்தி விடுவதென்று முடிவு செய்தேன். ஒரு தீப்பெட்டியுடன் அங்கு போனேன். பெட்டியிலிருந்த எல்லாத் தீக்குச்சிகளையும் ஒன்று சேர்த்துப் பற்ற வைத்தேன். டக்கென்று. தபால் பெட்டியினுள் அவ்வளவையும் போட்டதும் மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது. உள்ளே இருக்கும் கடிதங்கள் பற்றிக் கொண்டு பெரிதாகி எரிந்து அந்த போஸ்ட் ஆபீஸே தீக்கிரையாகப் போகிறது. நான் பெரிய ஹீரோவாகப் போகிறேன் என்று எனக்குள்ளாகவே கற்பனை செய்து கொண்டேன். சில நிமிடங்களுக்குப் பிறகு தபால் பெட்டிக்குள்ளிருந்து வெறும் புகை மட்டுமே வந்தபோது பெரும் ஏமாற்றமாயிருந்தது. இருந்தாலும் என் வீரத்தை வெளியுலகுக்குப் பிரகடனப் படுத்திவிட வேண்டும் என்ற ஆவலில் அருகாமையிலுள்ள செக்குமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு நானே போன் செய்தேன்.

“போலீஸ் ஸ்டேஷனா? இங்கே மண்ணடி போஸ்ட் ஆபீஸுக்குத் தீ வைத்துவிட்டேன்.உடனே வாருங்கள்”என்றேன்.

“யார் நீ?” என்று கேட்டது. செக்குமேடு.

“நான் ஒரு காங்கிரஸ்காரன். தபாலாபீஸுக்கு எதிரிலேயே காத்திருக்கிறேன். உடனே வாருங்கள். கதர்ச்சட்டை அணிந்திருப்பேன்” என்றேன்.

அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் வேன் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து பரபரப்போடு இறங்கிய போலீசார் இரண்டு பேர் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு நேராக என்னிடம் வந்து, “நீதான் போன் செய்தாயா?” என்று கேட்டார்கள். “ஆமாம்.” என்றேன். என்னை அப்போதே கைது செய்து அந்த வேனிலேயே ஏற்றிச் சென்றார்கள். ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் கேஸ் எழுதிக் கொண்டார்கள். அதில் நான் கையெழுத்துப் போட்டதும் மசால் தோசை வாங்கிக் கொடுத்தார்கள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு வழக்கு எழும்பூர் மாஜிஸ்ட் ரேட் கோர்ட்டுக்குப் போயிற்று.

“குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா?” என்று கேட்டார் மாஜிஸ்ட்ரேட்.

ஆகஸ்ட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் கோர்ட்டில் குற்றத்தை ஒப்புக் கொள்ளக் கூடாது என்று மேலிடத்துக் கட்டளை ஆதலால், “நான் குற்றவாளி அல்ல” என்று சொன்னேன்.

“உனக்கு ஒன்பது மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கிறேன். ‘சி’ கிளாஸ்” என்றார் மாஜிஸ்ட்ரேட்.

‘கடுங்காவல் தண்டனை’ என்று மாஜிஸ்ட்ரேட் சொன்னது எனக்கு வருத்தம் தரவில்லை. ‘சி’ கிளாஸ் என்பதுதான் மதிப்புக் குறைவாகப்பட்டது.

“எனக்கு ‘பி’ கிளாஸ் வேண்டும்” என்று மாஜிஸ்ட்ரேட்டிடம் வாதாடினேன்.

“அதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும், அந்தஸ்து வேண்டும். உனக்கு ஏதேனும் சொத்து இருக்கிறதா?”

“கிராமத்தில் சொந்த வீடு. இருக்கிறது.”

“அது என்ன மதிப்பு பெறும்?” “இருபதாயிரம் ரூபாய்!” “கிராமத்து வீட்டுக்கு இருபதாயிரம் ரூபாயா? நம்ப முடியவில்லையே!” என்றார் மாஜிஸ்ட்ரேட்.

“அது என் வீடு. அதற்கு நான் போடும் மதிப்பு இருபதாயிரம்” என்றேன்.

மாஜிஸ்ட்ரேட் லேசாகச் சிரித்தார். “உன் நகைச்சுவை உணர்வைப் பாராட்டுகிறேன். ஆனால் ‘பி’ கிளாஸ் கொடுப்பதற்கில்ல” என்று கூறி விட்டார்.

பெல்லாரி அலிபுரம் சிறைச்சாலைக்குள் நுழையும் வரை இந்த ‘சி’ கிளாஸ் மனசுக்குள் உறுத்திக் கொண்டேயிருந்தது. சிறைக்குள் போனதும் அங்கே பெரிய பெரிய ஆட்களெல்லாம் ‘சி’ கிளாஸில் இருப்பதைப் பார்த்தேன். எஸ். ஏ. ரகீம், ஆதம்பாக்கம் ராமகிருஷ்ண ஐயர், கக்கன்ஜி போன்ற முன்னணி வீரர்களெல்லாம் கூட ‘சி’ கிளாஸில் முடங்கிக் கிடந்ததைப் பார்த்த பிறகுதான் சற்று ஆறுதல் ஏற்பட்டது.