உள்ளடக்கத்துக்குச் செல்

பவழபஸ்பம்/விழுப்புரம் சந்திப்பு

விக்கிமூலம் இலிருந்து

5.
விழுப்புரம் சந்திப்பு


"ன்னும் ஒரு அரை மணிநேரத்திலே வண்டி விழுப்புரம் வந்துவிடும். சூடாக காப்பி வாங்கிக் கொடுங்கள்; இருமல் கொஞ்சம் குறையும்.

"அரை மணி நேரத்திலா...இல்லையே...ஒரு மணி நேரத்துக்குமேல் ஆகுமே...வண்டி லேட்டாக...அல்லவா போகிறது..."

"லேட்டோ, சுலோவோ, வண்டி ஓடுகிறதே, அதைச் சொல்லும்."

"எல்லா இடத்துக்கும் மின்சார வண்டி போடப் போகிறார்களாமே... அந்த வண்டி வேகமாகப் போகும்."

"ஆமா.....இந்த இருமல் இவருக்கு எத்தனை நாட்களாக..."

'நாட்களா? ராமா! ராமா! மூணு வருஷமா உயிரை வாட்டுது இந்த இருமல்..."

"கோழை நிறைய வர்ரதோ..."

“ஒரு பொட்டுக்கூடக் கிடையாது.."

"புகைஞ்சி புகைஞ்சி இருமறது...."

"என்ன வைத்தியம் செய்தும்..."

"கொஞ்சம் சுமார்னு, சொல்லுவா...அவ கல்நெஞ் சக்காரி... கற்பகம்—எனக்கென்று வந்து வாய்த்த சனி..."

"நோய் உம்மை வாட்டினா, உம்மோட 'பார்யா' என்ன செய்ய முடியும்...மனம் நொந்து பேசலாமோ...நீர்படுகிற கஷ்டத்தைப் பார்த்து, அந்த அம்மாவோட கண்களிலே நீர் தளும்பறது..."

"தலைப்பாடா அடிச்சிண்டேன்; வேண்டாம் பட்டணத்து வாசம், என் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாதுன்னு...கேட்டாளா...மகன் படிக்கக் கிளம்பினான், இவ கிளம்பிட்டா, என்னையும் இழுத்துண்டு..."

"சில பேருக்கு, பட்டணத்து வாசம் பிடிக்கறதில்லை. எனக்கேகூட, நாலு வருஷம், விட்டு விட்டு காய்ச்சல்... நானும், என் மகனோட படிப்புக்காகத்தான் பட்டணம் போனவன்..."

"ஏதோ கடவுளோட கடாட்சம், உமக்கு ஒண்ணும் இல்லை."

"எனக்கு ஏதாவது நோய் ஏற்பட்டா தேவலியே...என் மகளுக்கு உடம்பு சரியில்லே..."

"இதேபோல் இருமலா!"

"இருமலா இருந்தா பரவாயில்லையே...நல்ல மருந்தெல்லாம் இருக்கே..இன்ன வியாதின்னு கண்டு பிடிக்கவே, டாக்டர்கள் பாடு கஷ்டமாக இருக்கு. இந்த லட்சணத்திலே மகனே ஒரு டாக்டர்... கெட்டிக்காரன் என்றும் பேர். வருமானமும் நிறைய..."

"அவராலேயே சொல்ல முடியலியா, என்ன வியாதி இது என்ற விவரம்?"

"விவரம் கொல்றான், விளக்கம் சொல்றான்...அதிலே ஒரு குறைச்சலும் இல்லே; வியாதி போகலியே."

"வயிற்று வலியோ."

"உடல் பூரா...தேள் கொட்டின மாதிரி...துடியாய்த்துடிக்குது...ஒரு பத்து நிமிஷம்...பிறகு ஒரு மணி நேரம் மயக்கம்."

"இப்படி எத்தனை நாளா?"

"வருஷம் நாலு ஆகுது."

"நாலு வருஷமாகவா, அவ்வளவு பெரிய பட்டணத்திலே ஒரு நல்ல டாக்டர் கிடைக்கல்லே, இந்த வியாதியைப் போக்க."

"இது வியாதியே அல்ல என்கிறாளே, அத்தனை டாக்டர்களும்... என் மகனும், டாக்டர் பாஷை பேசறான்...எல்லாம் மனம்தான் காரணமாம்...மனதிலே வியாதியிருக்கே தவிர, உடலிலே இல்லை என்கிறான்."

"அதிசயமா இருக்கே."

"அநியாயமா இருக்கேன்னு சொல்லுங்கோ...நரம்புகளுக்கு வலிவு ஏற, மனதுக்குத் தெம்பு வருமாம்; மனதுக்குத் தெம்பு வந்தால் மயக்கம் தன்னாலே போயிடுமாம்... இதைத்தான் சொல்றா."

"அதாவது, இது ஒரு வகையான இஸ்ட்டீரியா....ஒருவித வலிப்பு வியாதி."

"என் மகன் இதைத்தான் சொல்லிக்கொண்டு இருக்கான். எத்தனை நாளைக்கு இதைக் கேட்டுக்கொண்டு இருக்கமுடியும். அதனாலேதான் அவனோட விஷயத்தைச் சொல்லாமல் நான் கிளம்பினேன்...என் சொந்தக் கிராமம், திருச்சி பக்கம். துறையூர் பாதையிலே...அங்கே இரண்டு மூன்று தலைமுறையா மாந்திரீகத்திலே கியாதி பெற்ற குடும்பம் ஒன்று இருக்குது. கேள்விப்பட்டிருக்கலாம்—சிலபேராவது, திரிசூலம் பிள்ளை என்பவரைப்பற்றி. அவர் நாற்பது நாள் விபூதி அடித்து மந்திரம் போட்டா, இந்த வலி, மயக்கம் எல்லாம் மாயமாய் போய்விடும். பலருக்கு குணம் ஆனது எனக்கே தெரியும். இப்ப நான் அவரைப் பார்த்துப் பேசி, கையோடு பட்டணத்துக்கு அழைத்துக்கொண்டு போகத்தானே வந்திண்டிருக்கேன்."

"மாயம், மந்திரம், முடிக்கயிறு இதிலே எல்லாம் நம்பிக்கை யாருக்கு இருக்குது, இந்தக் காலத்திலே."

"இப்படிச் சொல்லுவான் என்றுதான் என் மகனிடம் விவரம் சொல்லாமல் புறப்பட்டேன். அவனோ டாக்டர்! அவன் ஒத்துக் கொள்வானா மாந்திரீகத்தை?"

"எப்படியோ ஒண்ணு; கொழந்தைக்கு குணமானா போதும்."

"பெரியவாளோட ஆசீர்வாதமும் கிடைக்கறது. எனக்கென்னமோ திரிசூலம் பிள்ளையோட மாந்திரீக பலத்திலே, நிறைய நம்பிக்கை. என்னதான் காலம் மாறிவிட்டது என்று சொன்னாலும், ஒரே அடியா எல்லா வற்றையும் மறந்துவிட முடியுமா?"

"நான்கூடக் கேள்விப்பட்ருக்கிறேன், அந்த மந்திரக்காரர் விஷயமா...மூணுமாடி வீடு இருக்காமே அவருக்கு."

"முப்பது நாற்பது ஏக்கர் அயன் நஞ்சை போன வருஷம்தான் வாங்கினார். பலருக்குக் குணம் ஆகி இருக்கு, டாக்டர் படிச்ச பையனோட இதைச் சொல்லலாமோ! சொல்லல்லே! குணமான பிறகு அவனே தெரிந்துக் கொள்றான்"

"இந்தக் காலத்து வைத்தியப் படிப்பு என்னதான் அதிசயமானதாக இருந்தாலும், மூலிகை, மாந்திரீகம், இதிலே இன்னமும் பலன் இருக்கத்தான் செய்யுது."

"இல்லாமலா, திரிசூலம் பிள்ளையோட தேவதா விலாசத்தைத் தேடி, மாதம் முன்னூறு பேருக்குக் குறையாம வருகிறாங்க? நல்ல கைராசிக்காரர். வெள்ளிக்கிழமை மௌன விரதம். மகமாயி ஒவ்வொரு ராத்திரியும் பிரசன்னம் அவருக்கு. இந்தக் காலத்திலே நம்பமாட்டா. ஆனா அவரை நேரிலே பார்த்தா தெரியும், வயது கிட்டத்தட்ட அறுபது இருக்கும். ஒரு நோய்நொடி வரணுமே! கிட்டே வருமா! காலையிலே ஆற்றுத் தண்ணீர்லே குளிக்கிறார், ஆறுமணிக்கு முன்னே. ஒருநாள் காய்ச்சல்னு படுத்தாரா!"

"ஆமாம். குழந்தையை அழைத்துக்கொண்டு போய்காட்டாம், நீங்க மட்டும் போறிங்களே."

"கொழந்தையை அழைத்துக்கொண்டு கிளம்பினா, என் மகன் கேட்கமாட்டானோ, எங்கே? எதுக்கு? என்றெல்லாம். அதனாலே ஒரு நிலத்து விஷயமா, கிராமம் போயிட்டு வர்றேன்னு சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். திரிசூலம் பிள்ளை எனக்கு ரொம்ப வேண்டியவர். நிலைமையைச் சொல்லி, அவரையே பட்டணத்துக்கு அழைத்துக் கொண்டு போகப் போகிறேன்...."

"அவர் கிராமத்திலே இல்லாது போனா, மத்தவங்க..."

"அவருடைய மகனுக்கும் மாந்திரீகத்திலே பயிற்சி, பேச்சும் நின்றது.

இருமலால் அவதிப்படும் கணவனுக்குக் காப்பி கொண்டுவர மனைவி ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள்.

மகளுடைய 'மயக்கம்' போக்க மாந்திரீகரைத் தேடிச் செல்பவர், வண்டியிலிருந்து கீழே இறங்கி நின்றார்.

திருச்சியிலிருந்து கிளம்பிய ரயில், எதிர் வரிசையில் வந்து நின்றது.

இரு இரயில்களிலுமிருந்து பலர், வேகமாக, காப்பி விடுதிக்கு விரைந்தனர். பலர் போவதைக் கண்டதும், இவருக்கும் காப்பி சாப்பிடலாம் போல தோன்றிற்று; சென்றார். காப்பி வாங்கி ஆற்றிக் கொண்டிருக்கும்போது, அங்கு ஓர் புறத்தில், இவர் போலவே காப்பி ஆற்றிக் குடித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞனைப் பார்த்தார். அடையாளம் கண்டு கொண்டு மெத்த ஆவலுடன் அவனை நோக்கிச் சென்றார். அவனும் இவரைக் கண்டு ஆச்சரியமும், மகிழ்ச்சியும் கொண்டான்.

"கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல நீங்க வந்தீங்களே...அடா! அடா! இதல்லவா தெய்வ சங்கல்பம்..."

"பத்து நிமிஷம்கூட ஆகல்லே, உன்னைப் பத்திப்பேசி; நீயே வந்துவிட்டாயே. பலே! பலே! எங்கே இப்படி?"

"பட்டணத்துக்குத்தான்; உங்களைப் பார்க்கத்தான்; உங்களுடைய உதவியைத் தேடித்தான்."

"உங்க குடும்பத்துக்கு உதவி செய்ய நான் எப்பவும் கடமைப்பட்டவன். என்ன அவ்வளவு அவசரமான காரியம்."

"அவசரம் மட்டுமில்லிங்க, ஆபத்துன்னு சொல்லணும். காலையிலே சென்னை போனதும், உடனே, பெரிய ஆஸ்பத்திரியிலே சேர்த்தாகணும். உங்க மகன் இருக்காரே டாக்டரு, அவரோட தயவாலேதான் இந்தக் காரியம் ஆகணும். இருதய வியாதிங்க அப்பாவுக்கு..."

"யாருக்கு? திரிசூலம் பிள்ளைக்கா! இருதய வியாதியா?"

"ஆமாங்க, ஒரே மயக்கம்."

"மயக்கம் மந்திரிச்சா போயிடும்னு."

"மாந்திரீகம், பேய் பிசாசு விஷயத்துக்குப் பலன் கொடுக்குமங்க. அப்பாவுக்கு வந்திருப்பது இருதய வியாதிங்க...."

"ஆயிரத்தெட்டு பேருக்கு, அவர் மயக்கம் போக்கி இருக்கறாரு..."

"உங்களிடம் சொல்றதிலே தவறு கிடையாதுங்க. அதெல்லாம், இந்தக் காலத்துக்கு ஒத்து வராதுங்க. மாந்திரீகத்திலே நம்பிக்கை இருந்தாதானு பயன்...."

"நம்பிக்கை உங்களுக்குக் கிடையாதோ....?"

"இருந்ததுங்க...முன்னே...போன வருஷம் சின்னவரு, உங்க மகன், டாக்டரு வந்திருந்தாரு பாருங்க, அப்ப, விவரமா இதுபற்றி பேசினாருங்க. மயக்கம் என்றா ஏதோ ஒரு கெட்ட தெய்வத்தோட வேலை என்று நாங்க சொல்றது...அவரு அது ஒரு விதமான வியாதின்னு சொன்னாரு. அப்பாவுக்கு, அப்ப, இலேசா மயக்கம். பரிசோதனை செய்து பார்த்து, இது இருதய சம்பந்தமானதுன்னு சொன்னாரு."

"என் மகன் சொன்னதாலே..."

"மாயம், மாந்திரீகம் இதெல்லாம் விவரம் தெரியாதிருக்கிற வரையிலேதான் பலிக்கும் என்ற முடிவுக்கு வந்தோம். அதுமட்டுமில்லிங்க, மற்றவங்களுக்கு மயக்கம் போக, அப்பா சொல்கிற அவ்வளவும்—பூஜை முடிக்கயிறு—விபூதி அடிக்கறது—எல்லாம் செய்து பார்த்தாச்சி. ஒரு பலனும் இல்லே. கடைசியிலே, சின்னவரைப் பிடிச்சி பெரிய ஆஸ்பத்திரியிலே சேர்த்தாகணும், கிளம்பிவிட்டோம். அப்பா முதல் வகுப்பிலே இருக்கிறாரு, வாங்க! உங்களைப் பார்த்தா, அவருக்கு ஒரு தெம்பு பிறக்கும்."

முதல் வகுப்பில், முகத்தில் பயம் கப்பிக் கொண்ட நிலையில், திரிசூலம் பிள்ளை படுத்துக்கொண்டிருந்தார். அவருக்குத் தைரியம் கூறிவிட்டு, அவருக்குத் துணையாக இருந்து பெரிய மருத்துவ மனையில் சேர்த்து விடும்படி, மகனுக்கு, அவசரம் அவசரமாக ஒரு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு, திருச்சி செல்லும் இரயிலில் ஏறிக்கொண்டார், சோமசுந்தரம்.


—முற்றும்—