பாஞ்சாலி சபதம்/35. சகுனி வல்லுக்கு அழைத்தல்
வேறு
‘சாத்திரம் பேசுகின் றாய்’ -- எனத்
தழல்படு விழியொடு சகுனிசொல் வான்:
‘கோத்திரக் குலமன் னர் -- பிறர்
குறைபடத் தம்புகழ் கூறுவ ரோ?
நாத்திறன் மிகஉடை யாய்! -- எனில்
நம்மவர் காத்திடும் பழவழக் கை
மாத்திர மறந்துவிட் டாய்; -- மன்னர்
வல்லினுக் கழைத்திடில் மறுப்பதுண் டோ? 175
‘தேர்ந்தவன் வென்றிடு வான்; -- தொழில்
தேர்ச்சிஇல் லாதவன் தோற்றிடு வான்;
நேர்ந்திடும் வாட்போரில் -- குத்து
நெறிஅறிந் தவன்வெலப் பிறனழி வான்;
ஓர்ந்திடு சாத்திரப் போர் -- தனில்,
உணர்ந்தவன் வென்றிட, உணரா தான்
சோர்ந்தழி வெய்திடு வான்; -- இவை
சூதென்றும் சதிஎன்றும் சொல்வா ரோ? 176
‘வல்லவன் வென்றிடு வான்; -- தொழில்
வன்மை இல்லாதவன் தோற்றிடு வான்;
நல்லவ னல்லா தான் -- என
நாணமிலார் சொலுங் கதைவேண்டா;
வல்லமர் செய்திடவே -- இந்த
மன்னர்முன்னேநினை அழைத்துவிட்டேன்;
சொல்லுக வருவதுண் டேல், -- மனத்
துணிவிலை யேலதுஞ் சொல்லு’கென்றான். 177