உள்ளடக்கத்துக்குச் செல்

பாஞ்சாலி சபதம்/34. தருமனின் பதில்

விக்கிமூலம் இலிருந்து
34. தருமனின் பதில்

வேறு

தோல் விலைக்குப் பசுவினைக் கொல்லும்
துட்டன் இவ்வுரை கூறுதல் கேட்டே,
நூல் விலக்கிய செய்கைக ளஞ்சும்
நோன்பி னோனுளம் நொந்திவை கூறும்:
‘தேவலப் பெயர் மாமுனி வோனும்
செய்ய கேள்வி அசிதனும் முன்னர்
காவலர்க்கு விதித்ததந் நூலிற்
கவறும் நஞ்செனக்கூறினர், கண்டாய்! 171

“வஞ்ச கத்தினில் வெற்றியை வேண்டார்,
மாயச் சூதைப் பழியெனக் கொள்வார்,
அஞ்ச லின்றிச் சமர்க்களத் தேறி்
ஆக்கும் வெற்றி அதனை மதிப்பார்,
துஞ்ச நேரினுந் தூயசொல் லன்றிச்
சொல்மி லேச்சரைப் போலென்றுஞ் சொல்லார்,
மிஞ்சு சீர்த்திகொள் பாரத நாட்டில்
மேவு மாரியர்” என்றனர் மேலோர். 172

‘ஆதலா லிந்தச் சூதினை வேண்டேன்!
ஐய, செல்வம் பெருமை இவற்றின்
காத லாலர சாற்றுவ னல்லேன்;
காழ்த்த நல்லற மோங்கவும் ஆங்கே
பு{[மு-ப.]: ‘கவறை நஞ்செனக்’
‘போலொன்றுஞ் சொல்லார்’
-- கவிமணி}
ஓத லானும் உணர்த்துத லானும்
உண்மை சான்ற கலைத்தொகை யாவும்
சாத லின்றி வளர்ந்திடு மாறும்,
சகுனி, யானர சாளுதல், கண்டாய்! 173

‘என்னை வஞ்சித்தென் செல்வத்தைக் கொள்வோர்
என்றனக் கிடர் செய்பவ ரல்லர்,
முன்னை நின்றதொர் நான்மறை கொல்வார்,
மூது ணர்விற் கலைத்தொகை மாய்ப்பார்,
பின்னை என்னுயிர்ப் பாரத நாட்டில்
பீடை செய்யுங் கலியை அழைப்பார்;
நின்னை மிக்க பணிவொடு கேட்பேன்:
நெஞ்சிற் கொள்கையை நீக்குதி’ என்றான். 174