பாண்டியன் கலித்துறை
Appearance
21 பாடல்கள்
நூலில் பக்கம் 68 முதல் 71
***
இரட்டையர்
காளமேகப் புலவர்
ஆகியோர் பாடல்களும்
இதில் உள்ளன
குறிப்புரை - செங்கைப் பொதுவன்
- இவை தனிப்பாடல் திரட்டு நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள்
- பராக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன் ஆகியோர்மீது பாடப்பட்ட கலித்துறைப் பாடல்கள் இவை.
- செங்கைப் பொதுவன் குறிப்புரை.
1-3
[தொகு]- சரராஜ சம்புவைரி யென்மாது சரீரமெல்லாம்
- பொரரா சரத்துக் கிவள் பொருட்டோ பசும்பொற் கிரண
- சுரராச திவ்ய கிரீடவி பாடத்துடித் தடக்கைப்
- பரராஜ ராவண ராமா பராக்கிரம பாண்டியனே. (1)
- ராவண ராமன் பராக்கிரம பாண்டியனைப் பாடுகிறேன்.
- காளைமுகிற் குலமெல்லாம் விலங்கு கடிந்திட்டநீ
- வேளையு மப்படிச் செய்திலையே விளைநெல் வயலில்
- வாளை குதித்து வளர்பூங் கமுகின் மடலொடியப்
- பாளை முறிக்குந் துறைவா பராக்கிரம பாண்டியனே. (2)
- வாளை மீன் துள்ளிக் குதித்துப் பாக்குக் குலையை முரிக்கும் வளநாடனே! மழைமேகங்களை விலங்கிட்டுக் கொண்டு வந்து மழை பொழிய வைக்கும் நீ என்னை வருத்தும் காம வேளையும் விலங்கிட்டுச் சிறையில் அடைக்கக் கூடாதா? - ஒரு தலைவியின் வேண்டுகோள்.
- ஆர்க்குங் குளிரு நிலவுயர் கோனின் னலங்கல்பெறா
- வார்க்குங் குமமுலையாட் கனலாகும் வடக்குந் தெற்கும்
- மேற்குங் கிழக்குமொரு வெளுப்பாய் நின்று விண்ணை யெட்டிப்
- பார்க்கும் புகழுக் கிறைவா பராக்ரம பாண்டியனே. (3)
- நாலாத் திசையிலும் புகழ் பரவிக் கிடக்கும் பாண்டியனே! நிலாக் குலத்தில் பிறந்தவன் நீ. குளிர்ச்சிக்காக என் முலைமேல் குங்குமம் பூசினேன். அது உன் மாலை பெறாத காரணத்தால் தணலாக எரிகிறது. - தலைவி கூற்று.
4-6
[தொகு]- கூரம் பொறுத்த விழியாள் கதலிக் குருத்திலிட்ட
- ஈரம் பொறுக்க வறிந்திலளே யிந்திரனிட்ட செம்பொன்
- ஆரம் பொறுத்த புயமீதி லாயிர நாவுரக
- பாரம் பொறுத்த புயலே பராகரம பாண்டியனே. (4)
- இந்திரன் ஆரம் தாங்கிய மார்பினை உடைய பாண்டியர் குடி மன்னவா! கூர்மையான அம்பை வென்ற விழியாளுக்கு வாழைத்தண்டு போன்ற கால்-தொடை ஈரத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
- வெறிக்குங் குமக்கொங்கை மீதேயிளம் பிறை வெள்ளைநிலா
- எறிக்கும் பொழுது வந்தா யிலையே யிலங்கா புரியைக்
- குறிக்கின்ற ராவணன் பொன்முடி பத்துங் குரங்கை விட்டுப்
- பறிக்கின்ற சணபக மாறா பராக்ரம பாண்டியனே. (5)
- சுரும்பேய்க்கும் வாட்கண்ணி பங்காளர் கண்கொண்டு சுட்டுவிட்ட
- பெரும்பேய்க்கு வேப்பிலைக் காப்புதவாய் பிணர்சேர் பசுங்கோங்
- கரும்பேய்க்கு மென்முலையா ரமுதூட்டி யடர்ந்து கொல்ல
- வரும்பேய்க்கு வானுதவுங் குலசேகர மன்னவனே. (6)
7-9
[தொகு]- பூணித்திலத்துப் புயல்வீர மாரன்புகல் கவிக்கு
- நாணிப்புலவர் செல்லாதென் செய்வாரிந்த நானிலத்தில்
- ஆணிக்கனக மணந்தரிற் பூமணம் யார் கொள்ளுவார்
- மாணிக்கந் தித்திக்கி லென்னாகு மற்ற மதுரங்களே. (7)
- எண்ணீர்மை நூலுக் ககத்தியனா மிவனென்ப தெல்லாம்
- வெண்ணீர்மை யன்றி விரகல்லவே யிவ்விய னுலகில்
- பண்ணீர்மை தேரும் பராக்கிரம மாறன் பதங்கழுவுந்
- தண்ணீர் குடித் தல்லவோ கும்பயோனி தமிழ் கற்றதே. (8)
- காம்பு வனம் புக்க தோளாடகு நின்றன் கழுத்திலிட்ட
- வேம்பு தனக்கும் விதியில்லையோ வெகுண் டாச்சியர்கள்
- தாம்பி னடிக்க வுரலோடு கட்டத் தடைப் பட்டுச்சிப்
- பாம்பி னடிக்கின்ற மாலே பராக்ரம பாண்டியனே. (9)
10-12
[தொகு]- கடந்தூங்கு வேழப் பிடர்க்கேவரக் கண்டுகண் கண்முத்து
- வடந்தூங்க வாடும் கிளிக்கென் செய்வேன் மணிவாய் திறக்க
- விடந்தூங்கு பாம்பின் படத்தின் மிசைதிமி தித்தியெனப்
- படந்தூங்க வாடும் புயலே பராக்ரம பாண்டியனே. (10)
- சடம் பழுக்குங் கிழட்டுக் குருகீர் தலைசாய்த்து நின்று
- முடம் பழுக்குங் கைதை நற்றுறையிற் றெங்குமுப் புடைக்காய்
- குடம் பழுக்குங் கொற்கையாங் குலசேகரன் கூடலிலென்
- உடம் பழுக்குஞ் சிறையும் பழிகார ருணர்ந்திலரே. (11)
- மற்றொப்பிலாக் கொடைச் சணபக மாறவ ரோதயநின்
- வெற்றிக்கிரண் டுண்டடங்காத காரிய மேருகிரிச்
- சற்றிலுங் கீர்த்தி யடங்காது நின்னுடைத் தோடழுவாக்
- கற்றைக் குழலிக்கு மாலடங்கா திதுகை கண்டதே. (12)
13-15
[தொகு]விருத்தம்
- ஒருவாணுதல் பண்டுளங் களிக்க வுயர்வான் முகடு கிழித்தெழுந்து
- மருவார் தருவின் மரங்கொணர்ந்த மதுரை வடிவேல் அதிவீரா
- அரவார் வேம்பின் பசுங்கண்ணி யந்தியிறைவிக் கருளென்னா
- இரவா திருக்கநீ யளித்தற் கிரங்கா திருந்தா யிதுநாளே. (13)
இரட்டையர்
- தேங்கு புகழாங் கூர்சிவனே வல்லாளி யப்பா
- நாங்கள் பசித்திருக்கை ஞாயமோ- போங்காணும்
- கூறுசங்கு டோன்முரசு கொட்டோசை யல்லாமற்
- சோறுகண்ட மூளியார் சொல். (14)
- மூடர்முன்னே பாடன் மொழிந்தால் அறிவாரோ
- ஆடெடுத்த தென்புலியூ ரம்பலவா- ஆடகப்பொற்
- செந்திருவைப் போலணங்கைச் சிங்காரித் தென்னபயன்
- அந்தகனே நாயகன் ஆனால். 15)
16-18
[தொகு]- வேயீன்ற முத்தர்தமை வெட்டினானே யிடையன்
- தாயீன்ற மேனி தயங்கவே- பேயாகேள்
- எத்தனை நாளென்றே யிடறுவான் பாற்குடத்தை
- அத்தனையும் வேண்டு மவர்க்கு. (16)
- மாங்காட்டு வேளான் மகளை மருமகன்பாற்
- போங்காட்டி லின்பம் புணர்ந்தானே- ஆங்காணும்
- மக்கண் மெய்தீண்ட லுடற்கின்ப மற்றவர்
- சொற்கேட்டல் இன்பஞ் செவிக்கு. (17)
- குன்றுங் குழியுங் குறுகிவழி நடப்ப
- தென்று விடியுமெமக் கென்கோவே- ஒன்றுங்
- கொடாதானைக் கோவென்றுங் காவென்றுங் கூறில்
- இடாதோ நமக்கிவ் விடி. (18)
19-21
[தொகு]காளமேகப் புலவரும் இரட்டையரும்
- நாணென்றா னஞ்சிருக்கு நற்சாபங் கற்சாபம்
- பாணந்தான் மண்டின்ற பாணமே- தாணுவே
- சீராரூர் மேவுஞ் சிவனேநீ யெப்படியோ
- நேரார் புரமெரித்த நேர். (19)
- ஆசுகவி யாலகில வுலகெங்கும்
- வீசுபுகழ்க் காள மேகமே- பூசுரா
- விண்கொண்ட செந்தணலாம் வேகுதே யையையோ
- மண்டின்ற பாணமென்ற வாய். (20)
கட்டளைக் கலித்துறை
- புராதன மானதமிழ்ப் புலவீ ரிந்தப் புன்குரங்கு
- மராமரம் விட்டிங்கு வந்ததென் னோவகை கேட்டிலையோ
- தராதலம் வென்ற தமிழ் மாறனையுந் தன்தம்பியையும்
- இராகவ னென்றும் இலக்குவ னென்று மிருந்ததுவே. (21)