பாண்டியன் நெடுஞ்செழியன்/ஐந்திணை வளம்
மேகங்கள் கீழ்கடல் நீரை மொண்டு உண்டு மேற்கே சென்று யானைகளும் நடுங்க மலைகளின்மீது இரவும் பகலும் விடாமல் மழை பொழிகின்றன. எங்கும் வெள்ளக் காடு. மலையிலிருந்து அருவி ஓடி வருகிறது. யானைகளெல்லாம் அஞ்சும்படி அது ஒலிக்கின்றது. அருவி கீழே வந்து கீழ்கடலை நோக்கி ஆறாக ஓடுகிறது. போகும் வழியில் உள்ள குளங்களை யெல்லாம் நிரப்பிச் செல்கிறது.
இப்படி எங்கும் நீர்வளம் மிகுவதனாலே கழனிகளில் நெற்பயிர் விளைந்து, கதிர்கள் முற்றித் தோன்ற நிற்கின்றது. யானை புகுந்தால் அது மறையும்படியாகச் செழித்து வளர்ந்திருக்கிறது. அங்கங்கே உள்ள சிறிய குளங்களில் தாமரை பூத்திருக்கிறது. நெய்தலும் நீல மலரும் ஆம்பலும் வளர்கின்றன.
இந்த இடங்களிலுள்ள மீன்களை வலைஞர் பிடிக்கிறார்கள். பிடித்துக் குவிக்கிறார்கள். அவர்கள் போடும் ஓசை ஒரு பக்கம் ஒலிக்கிறது. கரும்பு ஆலைகளின் ஓசை ஒரு சார் கேட்கிறது. களை பறிப்பவர்கள் செய்யும் ஆரவாரம் ஒருபுறம். சேற்றிலே தங்கிய எருதின் அயர்ச்சியை மாற்ற உழவர்கள் செய்யும் ஆரவாரம் ஒரு பக்கம். நெல் முற்றிய கழனியில் அறுவடை செய்பவர்கள் கொட்டும் பறையோசை ஒரு சார். அருகே உள்ள திருப்பரங்குன்றத்தில் விழாக் கொண்டாடும் முழக்கம் ஒரு திசை. ஆற்றிலே புதுவெள்ளம் வந்ததனால் காதலரும் காதலிமாரும் அந்நீரில் மகிழ்ச்சியோடும் ஆடும் ஓசை ஒரு பக்கம். இப்படி எழும் ஓசைகளெல்லாம் வானத்திலே சென்று இசைக்கின்றன.
பாணர்கள் வாழும் சேரிகள் அங்கங்கே உள்ளன. இத்தகைய மருத நிலம் ஒரு சார் விளங்குகிறது.
முல்லை நிலம் ஒரு பக்கம் இருக்கிறது. அதில் சிறிய தின முற்ற, அதை அறுக்கிறார்கள். எள்ளுக் காய்கள் முற்றி விளைகின்றன. வரகு கதிர்விட்டு நிற்கிறது. ஆழ்ந்த குழிகளிலே மணிகள் ஒளி விடுகின்றன. வளர்ந்த காட்டில் பொன் துகள் கொழிக்கின்றது. மான்கள் பிணையோடு துள்ளுகின்றன. கொன்றை மரத்தின் கீழே உள்ள பாறையில் பரப்பினாற் போல மலர்கள் உதிர்கின்றன. நீலநிறம் பெற்று வளர்ந்த பயிர்களின் மேலே முசுண்டைப் பூவும் முல்லைப் பூவும் உதிர்கின்றன. தெளிந்த நீரையுடைய பள்ளங்களில் நீலமணியைப் போன்ற நெய்தலும், தொய்யிற் கொடியும் மலர்கின்றன. பூசாரி பூசை போட்டுப் பல மலர் தூவி முருகனை வழிபடும் களம் போலத் தோன்றுகிறது இந்த இடம். இப்படி மலரழகு பெற்று விளங்குகிறது முல்லை நிலம்.
குறிஞ்சி நிலத்தைக் காண்போம். சந்தன மரங்கள் காடாக வளர்ந்திருந்தன, மலைச் சாரலில், அவற்றை வெட்டித் தோரை நெல்லை விதைத்திருக்கிறார்கள் குறிஞ்சி நில மக்கள். வெள்ளைக் கடுகையும் பயிர் செய்திருக்கிறார்கள். ஐவன நெல்லும் வெண்னெல்லும் விளைந்திருக்கின்றன. பாறைகளில் இஞ்சியையும், மஞ்சளையும், மிளகையும் வேறு பண்டங்களையும் குவித்திருக்கிறார்கள்.
இந்த நிலத்திலும் பலவகை ஓசைகள் செவியிலே விழுகின்றன. தினை விளையும் மலைச் சாரல்களில் குற மகளிர் கிளிகளை ஓட்டும் ஒலி இது. அவரைக்கொடியை மேயும் காட்டுப் பசுவை வேடர்கள் ஓட்டுகிறார்கள். அந்த ஓசைதான் அது. பரணின் மேலே காவல் இருக்கும் குறவன் குழியைத் தோண்டி மேலே மூடி வைத்திருக்கிறான். அதில் காட்டுப் பன்றி விழுந்துவிட, அதைக் கொன்று ஆரவாரம் செய்கிறான். அந்த ஒலியை இதோ கேட்கிறோம். வேங்கை மரத்திலுள்ள மலர்களை மகளிர் புலிபுலியென்று சொல்லிக்கொண்டே பறிக்கிறார்கள். அவர்களுடைய ஒலியையும் கேட்கிறோம். காட்டுப் பன்றியைக் கொன்ற புலி முழங்குகிறது. இத்தனை வகையான ஓசைகளும் அருவியின் ஓசையோடே மாறி மாறி ஒலிக்கின்றன. மலைகளையுடைய குறிஞ்சி நிலம் இத்தகைய காட்சியை அளிக்கிறது.
சில இடத்தில் பாலை நிலமும் இருக்கிறது. தமிழ் நாட்டில் கோடை மிகுதியானபோது நீரற்று நிற்கும் நிலம் பாலையாகிவிடும். இயற்கையாகவே பாலையாக என்றும் உள்ள நிலம் இல்லை. பாலையில் மூங்கில்கள் உராய்வதனால் பிறந்த பெரு நெருப்பு, தூறுகளை யெல்லாம் எரிக்கிறது. அதனால் வலியிழந்த யானைகள் மேய ஒன்றும் இல்லாமல் வேறு இடத்தை நோக்கிச் செல்கின்றன. அருவிகள் வற்றிப் போன அழகில்லாத மலைகள் நிற்கின்றன. எங்கே பார்த்தாலும் ஊகம் புல். அவையும் உலர்ந்து வைக்கோலைப் போலத் தோன்றுகின்றன. மேல் காற்று வீசும்போது அது மலையின் பிளப்புகளிலும் குகைகளிலும் புகுந்து புறப்படுகிறது. அப்போது கடலில் ஆரவாரம் போன்ற ஓசை எழுகிறது.
இத்தகைய இடங்களில் வழி நடப்போரிடம் ஏதேனும் இருந்தால் அதைப் பறிக்கும் ஆறலை கள்வர் வருவார்கள். அவர்களால் வழிச் செல்வாருக்குத் தீங்கு நேராமல் காவல் புரியும் இளம்பருவ ஆடவர்கள் அங்கங்கே இருக்கிறார்கள். இலை வேய்ந்த குடிசையில் மான்தோலைப் படுக்கையாகக் கொண்டவர்கள் அவர்கள்; தழை விரவின கண்ணியைச் சூடி இருக்கிறார்கள். கடுமையான சொல்லையுடையவர்கள் அவர்கள்.
கதிரவன் கடுமையாகக் கதிர்களை வீசுகிறான். நிழல் என்பதே இல்லாத இடம் இது; வேனில் அரசாட்சி செய்யும் பாலை நிலம்.
கடற்கரையுடைய நெய்தல் நிலத்தில் நம் கண்ணிலே படுகின்ற பண்டங்கள் எத்தனை எத்தனை! கடலிலிருந்து எடுத்த முத்து; வாளரத்தால் சங்கையறுத்துச் செய்த வளை, பரதவர் கொண்டு வந்த பல வகைத் தானியங்கள், வெள்ளை உப்பு, இனிய புளி, ஓடத்தையுடையவர்கள் அறுத்த மீன் துண்டங்கள், வேற்று நாட்டிலிருந்து மரக்கலத்தில் வந்த குதிரைகள் ஆகிய இவை நாள்தோறும் வந்து மிகுதியாக நிறைகின்றன.
இவ்வாறு பாண்டி நாட்டில் ஐந்து வகையான நிலங்களும் அழகுபெற்று விளங்குகின்றன. புலவர்களால் பாடப்பெற்ற இந்த நாட்டில் பல ஊர்களும் அவ்வூர்களில் குடிமக்களும் இருப்பதைக் காணலாம். அவ்வூர்களுக்கு நடுவே சிறந்து இலங்குவது மதுரை.
இனி அம் மதுரை மாநகரையும் அங்கு வாழ்வோரையும் சென்று காண்போம்.