உள்ளடக்கத்துக்குச் செல்

பாண்டியன் நெடுஞ்செழியன்/புலவர் அறிவுரை

விக்கிமூலம் இலிருந்து
6. புலவர் அறிவுரை

நெடுஞ்செழியன் தோள் தினவு இன்னும் தீரவில்லை. புதிய நாடுகளைப் பிடிக்கவேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. சில போர்களைச் செய்தான். சாலியூர், முதுவெள்ளிலை என்னும் ஊர்களைத் தன் நாட்டோடு இணைத்துக் கொண்டான்.

புலவர்கள் அவனுடைய போர் ஆசை தணியும் காலம் என்று வரும் என்று ஏங்கினார்கள். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் மக்களுக்கு உறுதி தரும் பொருள்கள். போர் செய்வதனால் பொருளும் புகழும் கிடைக்கின்றன. பொருளை மட்டும் ஈட்டினால் போதுமா? மற்றவற்றையும் குறிக்கோளாகக் கொண்டு அதற்கு ஏற்ற வகையில் முயற்சி செய்வது மக்கள் கடமை.

பாண்டியன் நெடுஞ்செழியன் இன்ப வாழ்வைத் தக்கபடி நுகரவில்லை. போர் ஆசை அவன் இன்பத்துக்குத் தடையாக நின்றது. அதனையே நக்கீரர் நெடுநல் வாடையால் புலப்பட வைத்தார். போரினால் அறத்துக்கு இடையூறு நிகழ்கின்ற தென்பதை வற்புறுத்தினால் ஒருகால் அரசன் அமைதி பெறுவானோ என்ற நினைவு புலவர்களுக்கு உண்டாயிற்று. அதற்கு ஏற்ற செவ்வியும் கிடைத்தது.

போருக்கு ஆயத்தம் செய்வதிலும் படைகளுக்குரிய வசதிகளைச் செய்வதிலும் அரசன் ஈடுபட்டிருந்தான். நாட்டில் குடி மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள், என்பதைப்பற்றியே சிந்திக்கவில்லை. பாண்டி நாட்டில் பல இடங்களில் குளங்களும் ஏரிகளும் இருந்தன. அவ்வப்போது அவற்றைக் கண்காணித்துச் செப்பம் செய்து வரவேண்டும். அரசன் கவனம் செலுத்தாமையால் பல குளங்கள் மேடிட்டுப் போயின. பல ஏரிகளின் கரைகள் உடைந்துவிட்டன. இன்னும் பல இடங்களில் மழை பெய்தாலும் தண்ணீரைத் தேக்குவதற்குரிய குளமோ, ஏரியோ இல்லை. இதனால் நாட்டில் வேளாண்மை போதிய அளவுக்குப் பெருகவில்லை. குடிமக்கள் இதுபற்றி அமைச்சர்களிடம் கூறி, தம் குறைகளைப் போக்க வேண்டுமென்று முறையிட்டுக் கொண்டார்கள். அமைச்சர்கள் அரசனை அணுகி எடுத்துச் சொல்ல அஞ்சினார்கள்.

இதுதான் நல்ல சமயமென்று குடபுலவியனார் என்னும் நல்லிசைப் புலவர் அரசனிடம் சென்று குடி மக்களின் குறையைத் தெரிவிக்க முற்பட்டார்.

அரசவை கூடியது. புலவர்களும் அமைச்சர்களும் குடிமக்களிற் சிலரும் அவையில் இருந்தார்கள். குட புலவியனாரும் இருந்தார். அவர் மெல்ல, “ஒரு விண்னப்பம்” என்றார்.

அரசன், “என்ன அது?” என்று வினவினான்.

“சில செய்திகளை அர்சர் பெருமான் திருச் செவியில் ஏறச் செய்ய வேண்டுமென்பது என் ஆசை.”

“சொல்லலாமே!” என்றான் பாண்டியன்.

“சற்றுப் பொறுமையோடு கேட்கவேண்டும்.”

அரசன் புன்னகை பூத்தபடியே, “இப்போது புதிய போர் ஏதாவது வரப் போகிறதா, நான் பொறுமையின்றி இருக்க?” என்று கேட்டான்.

“அரசர் பிரானுடைய மரபே வீரத்துக்குப் பெயர் போனது. உலகில் பல நாடுகளைத் தம்முடைய முயற்சியால் வென்று ஏக சக்கராதிபதியாக வாழ்ந்தவர்கள் அரசர்பிரானுடைய முன்னோர்கள்.”

“நான் அப்படி உலகை ஒரு குடைக் கீழ் ஆளவில்லையே!”

“அது ஒன்றும் பெரிதன்று. மன்னர்பிரான் கோடி கோடி ஆண்டுகள் வாழவேண்டும். இப்படி அகழியும் மதிலும் உடைய பழைய நகரத்தை யார் பெற்றிருக்கிறார்கள்? பாண்டிய அரசர்களுக்குத்தான் அந்தப் பெருமை உண்டு. அந்தப் பழைய பெருமை நிலைக்க வேண்டுமானல் சில கடமைகளைச் செய்ய வேண்டும்.”

“என்ன செய்ய வேண்டும்?”

“மறுமையிலே நல்வாழ்வு வேண்டுமானாலும் சரி, இவ்வுலகத்தில் பெரும் புகழோடு தான் ஒருவனே தலைவனாக வேண்டினாலும் சரி, மன்னன் செய்வதற்குரிய செயல்கள் உண்டு.”

“அவற்றைச் சொல்லுங்கள்.”

“சொல்லத்தான் வருகிறேன். மன்னர் பெருமான் செவி சாய்த்தருள வேண்டும்.”

“நீங்கள் சொல்வது என் நன்மையின் பொருட்டுத்தானே இருக்கும்? நன்றாகச் சொல்லுங்கள். கேட்கிறேன்.”

“நீர் இல்லாவிட்டால், உடம்பு பெற்றவர்கள் வாழமுடியாது. உடம்பு வளர உண்டி கொடுத்தவர் யாரோ, அவர்கள் உயிர் கொடுத்தவரே ஆவர். சோற்றால் எடுத்த சுவராகிய இந்த உடம்பு உணவு காரணமாக வளர்வது. உணவு என்று சொல்வது எது? நிலமும் நீரும் சேர்ந்தால் உணவு வரும். நீரையும் நிலத்தையும் ஓரிடத்திலே சேர்த்தவர்கள் உடம்பையும் உயிரையும் சேர்த்துப் படைத்தவர்கள் ஆகிறார்கள். எவ்வளவு அகன்ற நிலமானாலும், விதைத்துவிட்டு வானத்தை நோக்குவதாக இருந்தால் அதனால் அரசனுக்குப் பயன் இல்லை. நீர் குறைவின்றிக் கிடைக்கும்படி செய்தால் நிலம் வளம் சுரக்கும். ஆதலால் இதனை மறவாமல் விரைவில் பள்ளமான இடங்களிலே குளமும் ஏரியும் அமையும்படியாகக் கரை போட்டு நீரை யார் தேக்குகிறார்களோ அவர்கள் தம் புகழை இவ்வுலகில் தேக்கிக்கொள்கிறார்கள். அப்படித் தேக்காதவர்கள் இவ்வுலகில் தம் பெயரைத் தேக்காதவர்களே!”

புலவர் பொதுவாகச் சொன்னாலும், “நீ ஏரி குளங்களைச் செப்பஞ் செய்தும் புதியனவாக அமைத்தும் மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவுப் பொருள் நன்றாக விளையும்படி செய்யவேண்டும்” என்பதையே குறிப்பாகப் பெறவைத்தார்.

பாண்டியன் அறிவுடையவன்தானே? தான் செய்ய மறந்த கடமையை அவர் சுட்டிக் காட்டுகிறார் என்பதை உணர்ந்துகொண்டான்.

“ஆம், நீங்கள் கூறியது சாலச் சிறந்த உண்மை. இதுகாறும் போரில் சிந்தை செலுத்தியமையால் நான் நீர்நிலைகளை மறந்துவிட்டேன். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பதை இனி எக்காலத்தும் மறவேன்” என்று நெடுஞ்செழியன் சொல்வதைக் கேட்டு எல்லோர் நெஞ்சுகளும் குளிர்ந்தன. அவர்கள் உள்ளங்களில் நீர் தேங்கியதைப்போல் ஒரு நிறைவு உண்டாயிற்று. போர் ஆசையால் இன்பத்துக்கு இடையூறு உண்டாவதை உணர்த்தியும் மாறாத அரசன், உணவு விளைக்கும் அறத்துக்குத் தடையாகப் போர் இருப்பதை உணர்ந்துகொண்டான். அது அவன் ஒருவனுடைய நலம். இது குடிமக்கள் அனைவருக்கும் வாழ்வளிக்கும் நலம் அல்லவா?

குடபுலவியனாரைத் தனியே புலவர்கள் பாராட்டினார்கள். “உங்கள் சொல் செல்லும் சொல் ஆயிற்று; வெல்லும் சொல்லும் ஆயிற்று” என்றார்கள்.

“நம் நினைப்பு முழுமையும் கைகூடட்டும். அதற்குள் அவசரப்பட வேண்டாம்” என்றார் குடபுலவியனார்.

அரசனுக்குக் கூறிய அறிவுரையை அவர் பின்பு கவிதை வடிவத்தில் அமைத்துத் தமிழ் இலக்கியக்கோவையிலே ஒளிரும் முத்தாக்கிவிட்டார்.[1]


  1. புறநானூறு,18