பாண்டிய மன்னர்/ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன்

விக்கிமூலம் இலிருந்து

3. ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன்

I

துரை மாநகரம்-வானவர் உறையும் மதுரை மாநகரம் -உலகுபுரந்து ஊட்டும் உயர்பேரொழுக்கத்துப் புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி வையையென்ற பொய்யாக் குலக்கொடியால் வளம்பெற்ற மதுரை வளநகரம் -- பொதியிற்றென்றலாற் புகழ் பெறும் நகரம் -- நுதல் விழி நாட்டத்திறையோன் கோயில், உவணச் சேவல் உயர்த்தோன் நியமம் மேழிவலனுயர்த்தவெள்ளை நகரம்-கோழிச்சேவற் கொடியோன் கோட்டம், அறவோர் பள்ளி மன்னவன் கோயில் ஆதிய பல வகைச் செயற்கையழகுகளையுடைய திருவாலவாய்ப் பெருநகரம். அந்நகரின் இயற்கையழகு அருங்கவிப் புலவர்க்கே அளந்துரைக்கலாந் தகையதாம்.

புறத்திருந்து நகரத்துள் நுழையுங்காற் காணுங் காட்சி இன்னது என இளங்கோவடிகள் கூறியவாறு எடுத்துரைத்தல் எளிதன்றாம். கடி மரம் ஓங்கி வளர்ந்திருக்கும் காவற் காட்டைக் கடந்து, நீர் நிரம்பிய அகழியை நெருங்குவோம். உரியோர்க்குப் புலப்படவும் aயலோர்க்குப்புலப்படாதிருக்கவும் ஏற்றவாறு அமைக்கப்பெற்றிருக்கும் நுழைவழிகளால் அகழியைக்கடந்து அரணினைக்குறுகலாம். அரணின் உயர்ச்சியும் அளவும் எவர்க்கும் அச்சந் தருவதேயாயினும், நான்கு பெருவாயில்களும் ஒற்றராதிய சிலர்க்கு மாத்திரம் அறியலாகும் சிறிய நுழை வாயில்கள் இரண்டும் உளவாம். இவற்றுள் ஒன்றால் உட்புகுவோமாயின், நாம் காணும் காட்சி, வாயிலகத்தே உருவிய வாளுடன் காவல் புரியும் யவன வீரரும் அகத்துள் அரண் காவலர் தொகுதியும் பிறவும் ஆகும். உரிய முறைகளால் அனுமதிப் பத்திரம் பெற்று நகர்க்குட் புகுந்தோ மாயின், ஆயிரங் கண்ணோன் அருங்கலச் செப்பு வாய் திறந்து வைத்தது போன்ற பெருங்காட்சியைக் காண்போம்.

அரச வீதியும் அந்தணர் சேரியும் வேளாளர் சாலைகளும் வணிகர் உறையிடங்களும் அணியணியாய் அமைந்திருக்கக் காண்போம். பொது மகளிர் வீதியும் அங்காடி வீதியும் அதன் உட்பகுதிகளாகிய நவ மணி விற்கும் நலம்பெறு தெருக்களும் நால்வகைப் பொன்னும் பால்வகை பகரும் பொன் வணிகர் தெருக்களும் நூல் மயிர் நுழைநூற் பட்டு முதலியவற்றால் நெய்யப் பெற்ற ஆடைகள் பன்னூற்றுக் கணக்காய் விற்கும் அறுவைவாணிகர் வீதிகளும் மிளகு மூடைகளும் எண் வகைக் கூலமும் குவித்தளக்கும் கூல வாணிகர் கோல வீதியும் வேறு பல தெருக்களும் சந்தியும் சதுக்கமும் மன்றமும் கவலையும் மறுகும் பிறவும் அழகுற அமைந்த மதுரை நகரின் இயற்கை யழகை இன்னதென இயம்பலாகுமோ?

இத்தகைச் சிறப்புடைய பழம்பெருநகரில் தனது முன்னோர் நிறுவிய அரசியலைச் சிறப்புற நடத்தித்தமிழ் நாடெங்கும் தன் ஆணை செல்ல, அறமெனும் தெய்வம் துணை நின்றுதவ, மந்திரச் சுற்றத்தாரும் தந்திரச் சுற்றத்தாரும் நாட்டின் பொது மக்களுள் அறிவிற் சிறந்த பெரியோரும் நாட்டின் நலங்கருதி என்னென்ன இயற்றச் சொல்வரோ அவற்றை யெல்லாம் அற நெறி பிழையாதாற்றி, வணங்கிய மன்னர்க்குக் களைகணாகவும், வணங்காதார் மிடல் சாய்க்கும் தலைவனாகவும் பாண்டியன் நெடுஞ்செழியன் என்பான் அரசு புரிந்து வந்தனன். அவன், கல்வி, அறிவு, ஒழுக்கம், சிறப்பு, அரசியல் நெறி, ஆண்மை, மனத்திண்மை, அருள், பெருமை, போர்த் திறம் முதலிய எல்லா அரும்பெருங்குணங்களும் தன்னிடமே வந்து பொருந்த அமைந்திருந்தனன். அரசியற் பொறையை யேற்றுக்கொண்ட சிறு பருவத்திலேயே சிறந்த வீரனாகையால், நாடெங்கும் சென்று பகைஞரோடு பொருது, அவரை அடக்கி, நாட்டின் அளவை வளர்த்துக்கொண்டான். வட நாட்டிலும் பல ஆரிய வரசரோடு போர்செய்து அவர்களை வென்று பணியச் செய்தான். பல நூற்றுக் கணக்காகிய ஆரியப்படைஞர்களை வென்று அடக்கியதோடு ஆரிய வீரருட் சிலரையும் தன் நாட்டுக்குச் சிறைப்படுத்தி வந்தான். "மேலும் மேலும் வெற்றியில் விருப்பம் மிகப் பாரத பூமி முழுவதிலும் தன்னை எதிர்த்து நிற்போர் இன்மையால் வடமேற்குத் திசையில் உள்ள யவன நாடுகளையும் வென்று ஆங்கு நின்று அநேகம் யவன வீரரைச் சிறை செய்து வந்து, பாண்டிய நாட்டிலே பல வகை அருந்தொழில்கள் இயற்றவும் அரண் காவல் செய்யவும் அமர்த்தி வைத்தான்.

"செங்கோற் றென்னவன் காக்கும் நாடென எங்கணும் போகிய இசையோ பெரிதே," என்று புலவர் பெருமக்கள் புகழ்ந்து பாராட்டத் தக்கவாறு அவனது செங்கோன்மை சிறந்திருந்தது. உயர்ந்தவர் தாழ்ந்தவர், கற்றவர் கல்லாதவர், உறவினர் அயலவர், உள் நாட்டவர் அயல் நாட்டவர் என்ற பேதமின்றி எல்லார்க்கும் ஒரு நிகராக அறம் புரிந்து நீதி செலுத்தி வந்தானாகையால் அவனது நியாய பரிபாலனத்தைப் பற்றிய புகழும் பெருமையும் எங்கும் பரவியிருந்தன. நெடுஞ்செழியனது செங்கோன்மைச் சிறப்பை விளக்க அக்காலத்தில் பின் வரும் நிகழ்ச்சி நிகழ்ந்தது:

சோழ நாட்டிலே வாழ்ந்திருந்த பராசரர் என்ற ஒரு வேதியர் சேரனது கொடைச் சிறப்பைப் பற்றிக் கேள்வியுற்று, பாலைக் கௌதமனார்க்குச் சுவர்க்கம் கொடுத்த இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற அச்சேரவரசனைக் காண்டல் வேண்டும் எனக் கருதி, காடும் நாடும் ஊரும் கடந்து சென்றார். மலய மலை பிற்படச் சென்று, சேர நாட்டிற் புகுந்து, முத்தீப் பேணும் ஒன்று புரி கொள்கை இரு பிறப்பாளர் பலரைக் கண்டு, வேதமோது முறையில் அவர்கள்ளோடு வாதம் செய்தும் யாகங்கள் செய்தும் அநேகரை வென்று, பார்ப்பன வாகை சூடினர். அரசராலும் பிறராலும் நன்கு மதிக்கப் பெற்று அநேகம் பொற்கலங்களைப் பெற்றனர். அவற்றை யெடுத்துக்கொண்டு தம் ஊர்க்குத் திரும்புங் காலையில் பாண்டிய நாட்டில் உள்ள திருத்தங்கால் என்ற ஊரையடைந்தார். அவ்வூரில் இலைகள் நிரம்பியதோர் அரச மரத்தடியில் உள்ள மன்றம் ஒன்றில், தண்டம், குண்டிகை, வெண்குடை, சமிதை, பண்டச் சிறுபொதி, பாதக் குறடு முதலியவற்றை வைத்துவிட்டுத் தாமும் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.

அப்பொழுது அவ்வூர்ப் பிராமணச் சிறுவர் சிலர் அங்கு வந்தனர். அவர்களைக் கண்ட பராசரர் தம்மை ஆதரித்த சேரனை மனமார வாயார வாழ்த்திவிட்டு, அச்சிறுவர்களைப் பார்த்து, என்னோடு ஒப்ப முறை வழுவாமல் வேதம் ஓத வல்லவர் என்னிடம் உள்ள பண்டச் சிறுபொதியை எடுத்துக்கொள்ளலாம் உங்களுக்குள்ளே வேதம் ஓதப் பயின்றவர் வரலாம், என்று கூறினர். வார்த்திகர் என்ற வேதியர் புதல்வன் தக்ஷிணா மூர்த்தி என்ற பெயருடையான் ஒருவன் இளங்குதலை வாயராகிய அப்பிரமசாரியர் குழுவினுள் முன் வந்து, தளர் நாவாயினும் வேத சுருதி முறை வழுவாது உளமலி யுவகையோடு பராசரர்க் கொப்ப வேதம் ஓதினன். அதனைக் கேட்டு மகிழ்ந்த அப்பெரியார் சேர நாட்டிலே தாம் பெற்ற கடகம் தோடு முத்தப் பூணூல் முதலிய பொற்பணிகளை யெல்லாம் எடுத்து வைத்துத் தக்ஷிணா மூர்த்தியை மனப் பூர்வமாக ஆசீர்வதித்து, அவற்றை அவனுக்குக் கொடுத்து விடை பெற்று ஏகினர்.

தக்ஷிணா மூர்த்தி யென்ற அவ்வேதியச் சிறுவன் பராசரரிடம் பெற்ற பொற்பணிகளைப் பூண்டு ஊர்க்குட் சென்றதைக் கண்ட மற்றவர்கள் அவனுக்கு வந்த வாழ்வைக் கண்டு பொறாமல், அரச சேவகருட் சிலரைத் தூண்டினர். அவருள் அற்பர் சிலர் உரிய முறையான் அன்றி அரும்பொருளைக் கவர்ந்து வந்த பார்ப்பான் இவன் என்று தக்ஷிணாமூர்த்தி தந்தையாராகிய வார்த்திகரைச் சிறை செய்து, சிறைக் கோட்டத் திட்டனர். அச்செய்தியை அறிந்த வார்த்திகர் மனைவி கார்த்திகை யென்பவள் அலந்து ஏங்கி அழுது, நிலத்திற் புரண்டு, புலந்து வருந்தினள். அது கண்டு மதுரை நகர் ஐயை கோயிற் கதவம் திறவாது அடைப்புண்டது. அத்தெய்விகச் செய்தியைக் கேள்வியுற்ற நெடுஞ்செழியன், மிகவும் மனம் வருந்தி, ஏவலரைப் பார்த்து, “கொடுங்கோன்மை நேர்ந்ததோ? கொற்றவை கோயிற் கதவம் அடைப்புண்டதேன்?" என்று கேட்க அவர்கள் அரசனை வணங்கி வார்த்திகரைச் சிறை செய்த உண்மைச் செய்தியைக் கூறினர். அரசன் அது முறையன்று என்று அவர்களைக் கண்டித்து, ”அறியா மாக்கள் செயலால் முறை நிலை மாறி எனது அரசியல் நெறி தவறியது. பொறுத்தருளல் நுமது கடமையாகும், என்று கூறி நிலவள நீர்வள மிக்க திருத்தங்கால் என்ற ஊரையும் வயலூர் என்ற ஊரையும் வேதியர்க்குக் கொடுத்துக் கார்த்திகை கணவராகிய வார்த்திகர் முன்னர் இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி நமஸ்கரித்தனன். உடனே நகரத்தார் எல்லாரும் அறிய மதுரை நகரத்துக் கலையமர் செல்வி கோயிற் கதவம் திறந்தது. அதன் பின்னர் நெடுஞ்செழியன் ஆணையால் வள்ளுவர் யானை யெருத்தத் தமர்ந்து, ‘இடுபொருளாயினும், படு பொருளாயினும், உற்றவர்க் குறுதி பெற்றவர்க்காம்,’ என்று முர சறைந்தார். நாடெங்கும் தனது செங்கோன்மைச் சிறப்பு விளங்குமாறு அன்று சிறையிலிருந்தார் பலரையும் சிறைவீடு செய்து, வரியிறுத்தற் குரியார்க்கு வரி தரவேண்டா என்று ஆணை தந்து புகழ்பெற்றான். அதன் பிறகு மாந்தர் அனைவரும் அவன் குடை நிழலின் கீழ் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். தமிழ்ப் புலவர் பலரைத் தனது அவைக் களத்துக்கு வருவித்து அவர்களோடு அளவளாவி யின்புறும் வழக்கம் உடைய இந்நெடுஞ்செழியன் ஒரு நாள் அறிஞர் நடுவண் அமர்ந்திருக்கையில் மதுரை நகரத்துப் பெருங்கணக் காயர் தம் மாணவர் பலரையும் உடன் கொண்டு அரசனைக் காண வந்தார். அரசன் அம்மாணவச் சிறுவர்க் ரெல்லாம் உரிய ஏவலர்களைக் கொண்டு சிற்றுண்டிகள் வழங்கச் செய்வித்துப் புலவர்கள் முன்னிலையிற் கல்விப் பெருமையினைப்பற்றிப் பின் வருமாறு அம்மாணாக்கர்க் குதவுமாறு பிரசங்கித்தான்:

“தமிழ் என்னும் அளப்பருங்கடலிடைக் குளிக்கும் கருத்தோடு கரையில் நிற்கும் சிறார்களே, தமிழ்க்கடல் படிந்து கரையேறியுள்ள புலவர் பெருமக்கள் முன்னிலையில் உங்களுக்கு யான் கூறலாகும் அறிவுரை இதுவாம்: கல்வி யென்பது செல்வத்திலும் சிறந்தது என்ற உணர்ச்சி முதற்கண் உங்களுக்கு வேண்டுவதாம். இளமைப்பருவமே கல்வியைத் தேடற்குரிய பருவம் என்று எவரும் கூறுவர். மனிதன் ஆயுட்காலமெல்லாம் கல்வியைத் தேட வேண்டியவனே.. இந்நாட்டில் என் முன்னோராகிய அரசர் பலர் இருந்தனர். அவர் காலத்தில் அனேக வீரர் இருந்தனர். அவர் பெயரெல்லாம் இக் காலத்தில் நாம் கேட்டலாகா வண்ணம் மறைந்தன. ஆனால், அக்காலத்தில் இருந்த கல்வி வல்லார் தம் செய்யுட்களால் தம் புகழை வளர்த்துக்கொண்டதோடு தம்மை ஆதரித்த புரவலர் பெருமையையும் உலகறியச் செய்யும் சிறப்பைப் பெற்றனர். இதனால் நாம் அறிவதென்ன? அழியாத புகழ் பெறுதற்கு விரும்பும் ஒருவன் தான் தேடுதற்குரிய அரும் பொருளென்று கல்வியைக் கருதித் தேட வேண்டும் என்பதன்றோ? அதனைத் தேடுவது எவ்வாறு? கல்வி என்ற செல்வத்தை உதவ வல்ல பெரியாரை முதலில் அறிய வேண்டும். அப்பெரியாரை யடுத்து அவர்க்கு வேண்டும் உதவி செய்தும், தன்னால் இயன்ற வளவு பொருள் கொடுத்தும், தன் நிலைமைக் கேற்ப ஆசிரியர்க்கு இயற்ற லாகும் பணிவிடைகள் புரிந்தும் கல்வியைத் தேடுதல்வேண்டும் ஒரு தாய் வயிற்று மக்களாயிருப்பினும் குழந்தைகளிடம் அன்பு கொள்ளுவதில் சிறிதும் வேற்றுமை யறியாது தாயும் அறிவுடை மகனையே சிறப்பப் பாராட்டி அன்பு செய்யக்காண்போம். ஒரு குடும்பத்திற்பிறந்தபலருள்ளும் அரசியற் பணிக்கு வேண்டிய ஒருவனைத்தேர்ந்தெடுக்கவேண்டு மாயின், அக்குடியின் மைந்தருள் மூத்தவனை வருக என்று அழையாமல், அறிவுடைய ஒருவனையே ஆராய்ந்து அழைத்து, அவனுக்கு ஏற்ற பணியில் அமர்த்துவோம். அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்ற நால்வகைக் குலத்தினருள்ளும் கீழ்க் குலத்தான் ஒருவன் கல்வி வல்லவனாய் இருப்பின், மேற்குலத் தானைக்காட்டிலும் சிறப்பையே பெறுவன். மேற் குலத்தவனே யாயினும், கல்வியறி வில்லாதவன், அக்கல்வியறிவால் உயர்வு, பெற்ற கீழ்க்குலத்தானிடம் அடங்கி நடத்தற் குரியவனே. ஆகையால், உலகில் ஒருவர் பெறும் உயர்வுக்குக் காரணம் அவரிடம் உள்ள கல்வியேயன்றி வேறொன்று மன்று. ஆகையால், குழந்தைகளே, நீவிர் எல்லீரும் கல்வியிலே சிறந்த கருத்துடையராயிருந்து எதிர்காலத்தில் நீர் பிறந்த நாட்டுக்கு வேண்டும் பணியியற்ற அறிவும் உரிமையும் பெறத் தகுதி யுடையர்களாக ஆகவேண்டும் என்பதே எனது பெரு நோக்கமாம். இறைவன் என் வேண்டு கோளை நிறைவேற்றுவானாக.”

அரசர் பெருமான் நிகழ்த்திய இவ்விரண்டரும் பேருரையைக் கேட்ட புலவரெலாம் மகிழ்ச்சி மிக்கனர். தமிழ்ப் பெருங்கணக்காயர் மாணவர்களை மனமார ஆசீர்வதித்து, அரசனை வாழ்த்திப் பின் வருமாறு பேசினர்:

"அரசர் பெருமானே, இன்று உமது கலாசாலை மாணாக்கர்க்கெல்லாம், சிறந்ததொரு திருநாளாகும். தமது உபதேச மொழிகள் அவர்களுக்கு எழு பிறப்புக்கும் ஏமாப்பு அளிக்க வல்லவையாம். அம்மொழிகள் எமது சிறாரால் நன்கு நினைவிலிருத்திப்பயன் பெறவுதவுமாறு செய்யுளாய் அமைந்திருத்தல் சிறப்பாம். நல்லிசைப் புலமை வாய்ந்த தம் வாய் மொழியால் அக்கருத்துக்கள் செய்யுளாய் அமைந்திருத்தல் வேண்டும் என்பதே எமது கருத்தாம். கலை மகள் திருவருளும் திருமகள் பெருங்கருணைச் செல்வமும் படைத்த தம் போன்ற புரவலர் வாய்ப் பிறப்பாகிய அமுத மொழிகள் எமது மாணாக்கர்க்கு என்றும் நற்பயன் உதவுவனவாம்.

இவ்வாறு அத்தமிழ்ப் பெருங்கணக்காயர் பேசியதைக் கேட்ட நெடுஞ்செழியன், பின் வருஞ் செய்யுளைக் கூறினன்:

“உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலாற் றாயும்மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக வென்னா தவருள்
அறிவுடை யோனா றரசுஞ் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே."[1]

இச்செய்யுளைக் கேட்ட புலவர் பெருமக்களனைவரும் பெரிதும் மகிழ்ந்து பாராட்டினர். பிறகு தமிழ்ப் பெருங்கணக்காயனார் தம் மாணாக்கர்களையும் உடன் கொண்டு விடை பெற்றுப் புறம் போயினர். மற்றப்புலவர்களோடு அரசன் சிறிது நேரம் அளவளாவியிருந்தான். பிறகு புலவர் அனைவரும் விடை பெற்றுச் செல்ல, மாலைக் காலம் கழிந்து, இராக்காலம் வந்ததால், நெடுஞ்செழியன் அக்காலத்துக்குரிய கடன்களை நிறைவேற்றி விட்டு நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலுக்கும், உவணச் சேவல் உயர்த்தோன் நியமத்துக்கும் சென்று, இறைவனைத் தரிசித்து வந்து, அரண்மனைக்குட் புகுந்து தனது அந்தரங்க அறையில் பண்டைப் புலவர் அருளிச் செயல்களை ஆராய்ந்து, சிறிது நேரம் இன்புறக் கழித்துவிட்டு வேறு துணை யொன்று மின்றி, இடையாமத்தின் பிறகு வெளியேறி, நாட்டில் மக்கள் பலரும் நன்குவாழும் வாழ்வை ஆராயவும் ஒற்றர் தத்தம்பணியை முறை வழுவாது ஆற்றுவதை அறியவும் முயன்றான்.

“ஒற்றிற் றெரியர் சிறைப்புறத் தோர்துமெனப்
பொற்றோள் துணையாத் தெரிதந்தும் - குற்றம்
அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை சென்று

முறையிடினுங் கேளாமை யன்று."

II

பாண்டியன் நெடுஞ்செழியன் மதுரையில் அரசாட்சி செய்துகொண்டிருக்கும் காலத்தில், சோழ நாட்டிலே காரிவிப்பூம்பட்டினத்திலே பெருங்குடி வாணிகர் இருவர் மிக்க செல்வமுடையராய் வாழ்ந்துவந்தனர். அவருள் மாசாத்துவான் என்பான் மகன் கோவலன் என்பவனாம். மாநாய்கன் மகள் கண்ணகி என்பவளாம். குல முறைக்கேற்பக் கோவலனுக்கும் கண்ணகிக்கும் இளம்பருவத்திலே திருமணம் நிறைவேறியது. கோவலன் அக்காலத்தில் புகார் நகரத்தில் இருந்த மாதவி என்ற நாடகக் கணிகையிடம் அன்பு பூண்டு, இல்லற வாழ்வை மறந்து, தனது பெருஞ்செல்வத்தை யெல்லாம் அப்பொது மகள் பொருட்டு விரயஞ் செய்வானாயினன். ஒரு நாள் கடலாடச் சென்றிருந்த காலத்தில் மாதவியுங் கோவலனும் மனம் மாறுபட்டனர். அவன் உடனே அங்கு நின்றும் நீங்கிக் கண்ணகியை யடைந்தான்.

கண்ணகி அவன் மனச் சோர்வை யறிந்து, அதன் காரணம் உணர முயன்றனள். கோவலன் பொது மகளிர் உடனுறை வாழ்வை யொழித்துவிட்டதாய் உரைத்து வேற்று நகரங்களுக்குச் சென்று வியாபாரம் செய்து அந்நாள் வரை இழந்த பொருளைத் திரும்பவும் தேடும் கருத்துடையனாயிருப்பதையும் அதற்கு முதற்பொருள் இல்லாத குறை யொன்றே உள்ளதையும் குறிப்பாகத் தெரிவித்தான். கண்ணகி சிலம்பினுள் ஒன்றைப் பெற்று அதனை விற்று வியாபார முதலாகக் கொண்டு மதுரை நகரில் தன் குடியினர் அறியா வண்ணம் வாணிகம் செய்து பிழைக்கலாம் என்று கருதியிருப்பதைத் தெரிவித்தனன். கண்ணகி அதற்கு இசைய, அவளையும் உடன் கொண்டு மதுரைக்குப் புறப்பட்டனன், கால் நடையாக நடந்து, வழியிடையிலே கிடைத்த துணையோடு மதுரை வந்து சேர்ந்து, நகர்ப் புறத்தே இருவரும் தங்கினர்:

அங்கிருந்த மாதரி என்ற இடைச்சியிடம், கண்ணகியை அடைக்கலமாக ஒப்படைத்துக் கோவலன் ஒற்றைச் சிலம்பை வியாபாரம் செய்து வர நகர்க்குள் நுழைந்தான். பெருஞ்செல்வர் குடியிற் பிறந்தவன் ஆகையாலும், புகார் நகரத்திருந்து மதுரை நகர் வரையிலும் நடந்து வந்திருந்தானாகையாலும் மிகவும் தளர்ந்த நடையோடு பெருந்தெருவிலே சென்றான். அப்பொழுது பெரியதோர் இமிலேறு அவனை எதிர்த்துப் பாயவந்தது. அதனை அபசகுனம் என்று உணராது மேற் சென்று கடைத்தெருவிற் புகுந்தான். கடைத்தெரு நடுவிலே பொன்னுருக்குவோரும் பணி செய்வோரு மாகிய நூற்றுவர் பொற்கொல்லர் பின்வர அவர்கட்குத் தலைவனாய் அரச மதிப்புப் பெற்றதற்கு அறிகுறியாகச் சட்டையணிந்து ஒதுங்கி நடந்து செல்லும் பெரும்பொற் கொல்லன் ஒருவனைக் கண்டான். அவனைக் கண்டதும் அவன் பாண்டிய மண்டலாதிபதியால் வரிசை பெற்ற பொற்கொல்லனாகும் என்று அறிந்து, நெருங்கி, “ஐய, அரசன் தேவிக்கு ஆவதொரு சிலம்பை விலை மதித்தற்கு நீ வல்லையோ?" என்று கேட்டனன்.

அதற்கு அப்பொற் கொல்லன், அடியேன் இச்சிலம்பை விலை மதித்தற்கு அரியேனாயினும், வேந்தர்க்குரிய முடி முதலிய அருங்கலன்கள் சமைக்கும் ஆற்றல் உடையேன், என்று கை தொழுது கூறினன். கோவலன் அப்பொற் கொல்லனே தன் உயிர்க்கு யமதூதனாம் என்பதை உணரலாகாமையால் எவராலும் புகழ்தற்கரிய சிலம்பைப் பொதிந்து வைத்திருந்த சிறு முடியை அவிழ்த்தனன். நாகத்தின் சிரோ மணியோடு வயிரமும் சேர்த்துக் கட்டிய மணிகள் அழுத்துங் குழிகளையுடைய பசும் பொன்னாற் செய்த சித்திரத் தொழில் சிறந்த சிலம்பின் செய் வினையைப் பொய்த் தொழிற் கொல்லன் விருப்பத்தோடு பார்த்தனன். அவன் கண் சிலம்பின் திறத்தை நோக்கியதாயினும், மனம் குற்ற மில்லான்மேற் குற்றத்தையேற்றும் வழியை ஆராய்ந்து கொண்டிருந்தது. சிறிது நேரம் மௌனமாயிருந்து, பிறகு அவன் கோவலனைப் பார்த்து, ஐய, இச்சிலம்பு, கோப்பெருந்தேவிக்கல்லது, பிறர் எவர்க்கும் பொருந்தாது. யான் போய் அரசர் பிரானிடம் இச்செய்தியைச் சொல்லித் திரும்பி வருங்காறும், என் புன் குடிலுக்கு அருகுள்ள இவ்விடத்தில் நீர் இரும்," என்று அரண்மனைக்குச் சென்றான். கோவலன் அக்கீழ் மகன் இருப்பிடத்துக்கு அயலதாகிய ஒரு தேவ கோட்டத்தினுள் ஒதுங்கி யிருந்தான்.

இங்கு இவன் இவ்வாறிருக்க, அரண்மனை நோக்கிப் புறப்பட்ட பொற்கொல்லன், “யான் முன்னர் மறைவிலே கவர்ந்துகொண்ட இராசமா தேவியின் காற்சிலம்பின் உண்மைச் செய்தி பலர் அறிய வெளிப்படும் முன்பு, மன்னவனிடம் அயலவனாகிய இப்புதியவனைக் குற்றவாளி யெனக் காட்டி, யான் என்னைக் காத்துக் கொள்வேன்,” என்று உளத்துள் எண்ணிச் சென்றான். அப்பொழுது, பாண்டியன் நெடுஞ்செழியன், மதுரை நகரில் வாழும் நாடக மகளிரது ஆடற் காட்சியும், அபிநய விசேஷமும் அதற்கேற்ப அமைந்த பாடல் வேறுபாடும், யாழிசையின் பயன்களும் கண்டு கேட்டு மயங்கி ஆனந்தித்திருந்தான். அச்செய்தியைக் கேள்வியுற்ற கோப்பெருந்தேவி, மனம் மாறுபட்டு ஊடல் கொண்டு, உண்மைக்காரணம் வெளிப்படாதொளித்துத் தலைநோய் வருத்தம் மிகுதி யென்று கூறி, அரசன் தன் அந்தப்புரத்துக்கு வரும் சமயத்தில் அவனை நேரில் வந்து காணாது மறைந்து ஒடுங்கினாள். மன்னவன் மந்திரச் சுற்றத்தாரின் நீங்கிச் கோப்பெருந்தேவி கோயிலை அடைந்து, காப்பிட்டிருந்த வாயிற் கடையில் நின்று, தேவியைப் புகழ்ந்து போற்றிக் கதவு திறப்பிக்குமாறு வேண்டிக்கொண்டு நின்றான். அச்சமயத்தில் அவனைக் கண்ட பொற்கொல்லன், அவன் காலில் விழுந்து வணங்கிப் பலவாறு துதித்து, "கன்னக் கோலும் கவைக் கோலும் இன்றித் தன் மனத்தாற் பயின்ற மந்திரமே துணையாகக் கொண்டு வாயிற் காவலரை மயக்கித்துயில் வித்து, அரண்மனைச் சிலம்பினைக் களவாடிய கள்வன், முழக்க மிக்க இம்மதுரைப் பேரூரில் உள்ள காவலர்க்கு மறைந்து, அடியேனுடைய புன் குடிலகத்தே வந்திருக்கின்றான்," என்று கூறினன்.

வேப்ப மலர் மாலையுடையானாகிய பாண்டியன் நெடுஞ்செழியன், ஊர் காவலரை யழைத்து, “எனது தேவியின் காலணியாய சிலம்பு இவன் சொன்ன களவுத் தொழிலிற் றழும்பேறிய கள்வன் கையகத்திருக்கு மாயின், அச்சிலம்பை இப்பொழுது ஊடல் தீர்த்தற்கு உதவியாகுமாறு அவனைக் கொன்று இவ்விடத்தே கொணர்வீராக,” என்றுவினைவிளைகின்ற காலமாதலின், சிறிதும் தேறாது கூறினன். பாண்டியன் அப்பொழுது கூறவெண்ணியது அச்சொல் அன்றாயினும், கோவலனுக்கு வினை விளை காலம் ஆகைபாலும், அவனுக்கு வினைவிளைகாலம் ஆகையாலும் கொல்ல என்று சொல்ல எண்ணியது கொன்று என்று மாறி வந்துவிட்டது. அங்ஙனம் ஏவல்தந்த அரசன் ஏவலரையும் உடனனுப்பியதால் கருந்தொழிற் கொல்லன் தான் எண்ணிய எண்ணம் நிறைவேறியதாய் எண்ணித் தீவினை யுருவமாய்த் தன்னைச் சூழ்ந்து வரும் வலைக்குள்ளே விழும் நிலையில் இருந்தும் அதனை அறியாதிருந்த கோவலனைக் குறுகினான்.

“வெற்றி மிக்க படைஞரை யுடைய பாண்டிய மன்னன் ஏவலால் சிலம்பு காண வந்தோர் இவர்,” என்று கூறிப் பொய் வினைப்பொற்கொல்லன் சிலம்பின் செய்வினைச் செய்தி யெல்லாம் அவர்கள் அறியுமாறு தனித்து அழைத்துப் போய்க் கூறினன். அப்பொழுது சிலம்பு வைத்திருந்த கோவலனைக் கண்ட காவலர், இவன் உடம்பின் தோற்றத்தாலும் முகக் குறிகளாலும் ஆராய்ந்தால், நீ கள்வன் என்று கூறும் அவனாகத் தோன்றவில்லை. இக்குற்றத்துக்காகக் கொலை செய்யப் படத் தக்கவனும் இவன் அல்லன்,” என்று பொற் கொல்லனைப் பார்த்துக் கூறினர். அதற்கு மறு மொழியாகப் பெரும்பாவியாகிய அக்கொல்லன் களவு நூல் ஏதுக்களைக் காட்டிப் பின் வருமாறு கூறினன்:

“மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம், தந்திரம், இடம், காலம், கருவி என்ற எட்டையும் கள்வராவார் துணையெனக் கொள்வார். இக்கள்வனது வலியை யழித்துத் தப்புவதற்கு அறியாது இவன் பிரயோகிக்கும் மருந்திற் பட்டீராயின் நுமது பெரிய புகழ் மிக்க வேந்தனால் மிகவும் கடுமையாகத் தண்டிக்கப்பெறும் நிலைமையை அடைவீர், கள்வர்தாம் உருவேற்றியுள்ள மந்திரத்தை நாவால் வழுத்துவாராயின், அவரை நாம் கண்ணாற் காண இயலுமோ! தேவரைக் காணினும், காணலாம்; மந்திரம் பயின்ற கள்வரைக் காணல் எளிதன்றே? இவர்கள் தாங்கள் ஆதரித்து வணங்கும் தெய்வத்தின் அனுக்கிர கத்தைப்பெற்றுத் தமக்கு முன்னின்று உதவப்பெற்று விட்டாராயின், கையிற் சிக்கிய பொருளை நம் கண் முன்னே காட்டியும் மறைத்து விடுவர். இவர் மருந்தினாலே நம்மிடத்தில் மயக்கம் செய்வராயின், நாம் இருந்த இடத்தை விட்டுப் புடை பெயர்ந்து செல்ல இயலுமோ? இவர் தாம் கருதிய சகுனம் வாய்த்தால் அல்லாமல், பெறுதற்கரும்பொருள் கைக்கண் வந்து புகுமாயினும் எடுத்துக்கொள்ளார். களவு நூற்சொல்லிய தொழில்களை எண்ணிச் செய்வாராயின், தாம் மண்ணுலகத்திலேயே யிருப்பினும் தேவலோக வாசியாகிய இந்திரன் மார்பில் உள்ள ஆரத்தையும் கவர்ந்து கொள்வார். இவ்விடத்திலே இப்பொருளைக் கவரலாம் என்னில், அவ்விடத்திலே அவரை யார் காண வல்லவர்? காலம் அறிந்து அவர் நினைந்த பொருளைக் கைக்கொண்டு விடுவாராயின், மேலோராயினும் விலக்க வியலுமோ? தக்க கருவிகளைத் துணையாகக் கொண்டு பெறற்கரும்பொருள்களைக் கைப்பற்றுவார்க ளாயின், இவ்வுலகில் அவர் செயலை யாவரே கண் கொண்டு காண வல்லார் இவர்க்கு இரவுபகல் என்று இரண்டு இல்லை. இவரது களவுத் தொழிலை விரித்து உணர்த்த எம்மால் இயலுமோ? களவு நூற் செய்தி முழுவதும் யாம் அறிவோமாயின் நாம் ஓடியொளித்தற்கும் இடம் இல்லை.

“முன்னாளிலே ஒரு கள்வன் தூதுருக் கொண்டு வந்து, அரண்மனை வாயிலிலே பகற் பொழுதிற் காத்திருந்து, இராப் பொழுது வந்ததும் மாதருருக் கொண்டு அந்தப்புரத்தினுட் புகுந்து, விளக்கு நிழலிலே பள்ளியறையினுள் அஞ்சாது நுழைந்து அடங்கி, இந்நெடுஞ்செழியனுக்கு இளங்கோவாகிய இளஞ்செழியன் துயில்கின்ற சமயம் அவனது மார்பில் உள்ள ஒளி மிக்க வயிர மாலையை விரைவில் வாங்கினான். துயிலுணர்ந்த இளஞ்செழியன் தோளிலே மாலையைக்காணாது உடைவாளை யுருவினன். அதனுறையைக் கள்வன் கையகத்தே பற்றிக் கொண்டான். இளஞ்செழியன் வாளாற் குத்தும் தோறும் கள்வன் அதன் உறையை நீட்டி, அக்குத்துக்களைத் தாங்கித் தடுத்தான். அது கண்டு சினமிக்கு மற்போர் செய்யப் புறப்பட்ட இளவரசனுக்கு அருகில் இருந்ததொரு பெரிய தூணைத் தானாகக் காட்டி மயக்கிவிட்டு, அக்கள்வன் மறைந்தான். அன்று தப்பிய கள்வனை இன்றுவரை யாரும் கண்டவரிலர். ஆதலால், களவு நூற் பயிற்சி மிக்க இக்கள்வர்க்கு நிகர் இவரேயன்றி வேறு எவரும் இலர். நும் கண்முன்னே நல்லோனாகத் தோற்றும் இவன், நான் மேலே காட்டிய களவு நூன் முறை பற்றி ஆராய்ந்தால், தொழிற்றிறம் மிக்க கள்வன் ஆவனென்பது நுமக்கே புலப்படும்.”

அங்கு நின்றிருந்த அரச சேவகன் ஒருவன், இச்செய்தி முழுவதையும் கேட்ட பிற்பாடு, தான் அறிந்த செய்தி யென்று ஒன்றைக் கூறத் தொடங்கி, "முன்னாளிலே நிலத்தைத் தோண்ட உதவும் உளியை யுடையனாய கருநிறமான ஆடையை யுடுத்தவனாய், பல வகைப் பட்ட பொற்கலன்களை நச்சிய வேட்கையாற் பற்றிய பொருளை விடாது கொடும்பசி மிக்கபுலி போன்று சரக்காலத்து இடை யாமமாகிய கண் மயங்கும் இருள்வேளையில் ஊரார் எல்லாம் துயிலால் மயங்கிய அமயத்தில் ஒரு கள்வன் வந்து தோன்ற யான் என் கைவாளை உறை கழித்துப் பற்றினேன். அவ்வாளை அவன் பிடுங்கிக் கொள்ள, அவனையும் என் வாளையும் இன்னும் நான் எவ்விடத்துங் காணவில்லை. ஆதலால், இக்கள்வர் செய்கை எவருக்கும் அறியவரிது. இங்குச் சிலம்பு. கவர்ந்த கள்வனை நாம் நேரிற்கண்டும் நெகிழ விடுவோமாயின் அரசர் நம்மைத் தண்டிப்பார். ஆதலால், இதற்குச் செய்யற்குரிய தொன்றைத் துணிந்து கூறுமின். அறிவும் அனுபவமும் மிக்க உமது கருத்துப் போல நிறை வேற்றலாம்,' என்று பிற சேவகரைப் பார்த்தான்.

அவர்களுள் அறிவின்மையாற் கொலை யஞ்சாத கயவன் ஒருவன், கள் மயக்கம் மிக்க தன் அறிவுக்குத் தோற்றிய வண்ணம், கோவலனைக் கொல்வதே தகுதியென்று துணிந்து, தன் கையிற் பற்றிய வெள்வாளை வீசிக் கோவலனை வெட்டி வீழ்த்தினன். கோவலன் பண்டைவினைப் பயத்தால் உயிரிழந்தான். பாண்டியன் நெடுஞ்செழியன் செங்கோலும் வளைந்தது. இரு வினைகளும் செய்தாரை வந்து தொடர்தல் உறுதியே. ஆகையால், நல்வினையே செய்யப் பயில வேண்டும். பண்டை விளைவாகிய வினைப் பயத்தால் பாண்டியன் நெடுஞ்செழியனது வளையாத செங்கோல் வளைந்தது.

“நண்ணும் இருவினையும்; நண்ணுமின்கள் நல்லறமே
கண்ணகிதன் கேள்வன் காரணத்தால்-மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை

விளைவாகி வந்த வினை.”[2]

III

மய மலையின் சிகரத்தில், தன் ஆணைக்கு அறிகுறியாய் எழுதிய கயற் குறிக்கு அருகிலே எழுதப் பெற்ற புலியையும் வில்லையும் உடைய சோழர் சேரர் என்ற தமிழமன்னரும் பிறமன்னரும் தன் ஏவல் கேட்ப நிலவுலகம் முழுவதையும் ஆண்ட முத்தமாலை பொருந்திய வெண்கொற்றக் குடையையுடைய பாண்டியன் நெடுஞ்செழியனது அரண்மனையிலே திருப்பள்ளியெழுச்சி முரசம் இயம்பியது. அம்முழக்கத்தைக் கேட்ட மதுரைப் புறஞ்சேரியிலுள்ள ஆய்ப்பாடியில் வாழ்ந்த மாதரி என்பவள், ஐயை என்ற தன் மகளை யழைத்து, கடை கயிறும் மத்தும் கொண்டு தயிர்த் தாழிக்கருகில் வந்து நின்றாள். அவள் தன் மகளைப் பார்த்து, "நமக்கு இன்று அரண்மனைக்கு நெய் அளக்கும் முறையாம். விரைவிலே வேண்டுவன செய்ய வேண்டும், என்று கூறினள்.

பிறகு தயிர்த் தாழிகளைப் பார்த்து, “நாம் பிரையிட்ட பால் தோயவில்லை. நமது மாட்டு மந்தையில் காளைகள் காரண மின்றியே கண்ணீர் உகுக்கின்றன. இவை இங்ஙனம் ஆவதால், நமக்கு வருவதோர் உற்பாதம் உண்டு. மேலும், முதல் நாளைய வெண்ணெய் உருக வைத்தது உருகவில்லை. ஆட்டுக் குட்டிகளும் துள்ளி விளையாடவில்லை. பசுக் கூட்டங்கள் மெய்ந்நடுங்கி நின்று அழும். அவற்றின் கழுத்தில் உள்ள பெரிய மணிகள் விழுகின்றன. இவற்றால் இங்கு ஏதோ பெருத்த தீங்கு ஒன்று விளையும் என்று தோன்றுகின்றது. ஆயினும், மகளே, அஞ்சாதே. முற்காலத்திலே ஆயர் பாடியில் எரு மன்றத்திலே மாயவனும் பலராமனும் ஆடிய பால சரித நாடகங்கள் பல உள. அவற்றுள் நப்பின்னைப் பிராட்டியோடு கண்ணபிரான் கை கோத்து ஆடிய குரவைக் கூத்தை இக்கண்ணகி கண்டு நிற்க யாம் ஆடக்கடவோம் இக்கறவையும் கன்றும் பிணி நீங்குக,” எனக் கூறினள்.

மாதரியின் விருப்பிற் கிணங்க அவ்வாய்ப்பாடிப் பெண்டிர் குரவைக் கூத்து ஆடத் தொடங்கினர். ஏழு இளம் பெண்களை ஏழு இசைகளின் இயைபு நிகர்ப்ப ஒழுங்குற நிறுத்திக் குரவைக்கூத்துத் தொடங்கப்பெற்றது. ஏழு மகளிரும் கைகோத்து முறைவழுவாது பாடியாடினர். பாண்டியன் சோழன் சேரன் என்ற மூவேந்தரையும் திருமாலுக்கு நிகராக வைத்துச் சில பாடல்கள் பாடினர். திருமாலுக்குத் தோத்திரமாகச் சில பாடல்கள் பாடினர். தெய்வத் தோத்திரம் செய்வதால் தமக்கு எதிர் காலத்தில் வரலாகும் என்று எண்ணும் தீமையைப் போக்கிக்கொள்ளலாம் என்பது அவ்வாய் மகளிர் கொள்கையாதலால், அவ்வாறு செய்தனர். இறுதியிற் பாண்டியனை மனமார வாழ்த்திக் குரவை நாடகத்தை ஆடி நிறைவேற்றினர்.

மாதரி இங்ஙனம் இளம்பெண்கள் ஆடிய குரவைக் கூத்து முடிந்தவளவிலே, நீர்ப் பெருக்கு மிக்க வையை யாற்றின் கரையை யடைந்து, திருமாலைத் தியானித்துப் பூக்களாற்பூசித்து, வணங்கி நீராடப்போயினாள். அப்பொழுது அந்நகரத்துக்குப் போய்த் திரும்பிய ஓர் இடைப் பெண் தான் அங்குக் கேட்டதொரு செய்தியை ஆயர் சேரியிலே தெரிவிக்க விரைந்து வந்தாள். அவள், கண்ணகியின் இளமையையும் அழகையும் கண்டு, தான் கேட்ட செய்தியை அவளிடம் கூறத் துணியாமல், அயலிலிருந்த ஆயச் சிறுமிகளிடம் கூறி மன வருத்தத்தாற் கண்ணீர் உதிர்த்து நின்றாள்.

அக்காட்சியைக் கண்ட கண்ணகி, தோழியே, யான் நகரத்துட் சென்ற என் காதலர் திரும்பி வரக் காண்கிலேன். நெஞ்சு மிகக் கலங்கி வருந்துகின்றேன். கொல்லுலைக் குருகுபோலப் பெருமூச்சு எழுகின்றது. இன்னது விளைந்தது என்று எனக்குத் தோன்றவில்லை. மதுரையிலே அயலார் பேசிக்கொண்ட தென்ன? தோழியே, கூறாய். நண்பகற் போதிலே உடல் நடுங்கும். நோய் மிகும். அன்பரைக் காணாமையால், என் நெஞ்சு வருந்தும். அங்குளார் கூறியதென்ன? தோழி, இவ்வயலார் சொல்லும் மறை எளிதன்று: என் தலைவரையும் காண்கின்றிலேன். என்னை வஞ்சித்த தொன்றுண்டு. என் நெஞ்சும் மயங்குகின்றது. செய்தி இன்னதென்று கூறாய்," என்று மிக்க துயரத்தோடு கூறினள்.

அதற்கு அவள், “அரசன் வாழும் அந்தப்புரத்தில் இருக்கும் அழகு சிறந்த சிலம்பை வருத்தமின்றிக் கவர்ந்து தன் கையில் வைத்திருந்த கள்வன் இவனேயாம் என்று அரசனேவலர் நினது தலைவரைக் கொன்றனர்,” என்றாள். அது கேட்டதும் கண்ணகி, பொங்கி யெழுந்தாள்; விழுந்தாள்; திங்கள் முகிலோடு நிலத்தில் விழுந்ததுபோல விழுந்து கண்சிவப்ப அழுதாள்; பிறகு தன் தலைவனை நினைந்து, “அந்தோ! நீர் எங்கிருக்கின்றீர்?" என்று கூறிப் புலம்பினள்,

பிறகு, ”தம்மோடு இன்புற வாழ்ந்த தம் கணவர் இறந்து அவர் உடம்பு எரியில் மூழ்க அதனைக்கண்டும் தம் உயிரை இழவாது துன்பம் மிக்க கைம்மை நோன்பு நோற்றுத் துயருறும் உயவற் பெண்டிரைப்போல, மக்களெல்லாம் தன்னைப் பழிக்கும்படி பாண்டியன் தவறு செய்ததால், அன்பரை இழந்து யான் துயருற்றழிவதோ? அகன்றமார்பினை யுடைய தமது கணவரை இழந்து ஏங்கி நீர்த் துறைகள் பலவற்றுள்ளும் தாம் குளிரப் புகுந்து மூழ்கித் துயருறும் உயவல் மகளிர்போலப் பாவம் பெருகி அறநிலை தவறிய பாண்டியன் செய்த குற்றத்தால் அறக்கடவுள் என்ற அறிவிலியே, யானோ துயருறுவேன்? செம்மையின் நீங்கிய கொடுங்கோலையுடைய தென்னவன் தவறிழைத்தலால், யான் கைம்மை கூர்ந்து. இளமையிலும் இசையிழந்து வாழ்வனோ?" என்று கூறிப் புலம்பிவிட்டு, ஆய மகளிரைப் பார்த்து, “வாய்ப்புடைத்தாகிய உற்பாத சாந்தியின் பொருட்டுக் குரவைக் கூத்து ஆடும்பொருட்டு இங்கு வந்து திரண்ட ஆய மகளிர் எல்லீரும் கேண்மின்கள். உலகிலுள்ள எல்லாப் பொருள்களையும் அறியும் சாக்ஷியாகிய கதிர்ச் செல்வனே, நீ அறிய என் கணவர் கள்வரோ?" என்று கேட்டாள். அதற்கு மறு மொழியாக, அசரீரியாகிய ஒரு குரல், "தாயே, நின் கணவன் கள்வன் அல்லன்; அவனைக் கள்வன் என்ற இவ்வூரைத் தீயுண்ணும்,” என்றது. அதைக் கேட்டதும் கண்ணகி மற்றைச் சிலம்பைக் கையில் எடுத்துக்கொண்டு அவ்வாயர் பாடியினின்று மதுரை நகர்க்குட் புகுந்தாள். வழியிலே கற்புடைப் பெண்டிர் பலரைக் கண்டு, “அறநெறிக் கேற்ப முறை செய்ய அறியாத அரசனிருக்கும் ஊரில் இருந்து வாழும் கற்புடைப் பெண்டிர்காள், இவ்வநியாயத்தைக் கேளுங்கள்: உலகிற் பிறந்தார் ஒருவரும் படாத பெருந்துயரம் பட்டேன். அதனால், மரண வேதனையு மடைந்தேன். பிறர் எவரும் அடையாத பெரும்பேறும் யான் அடைந்தேன். என் கணவர் கள்வரல்லர். என் காற்சிலம்பு பெறும் விலையைக் கவருங் கருத்தால் அவரைக் கள்வர் என்ற ஒருபெயரிட்டுக் கொன்றனரே! தம் கணவரது அன்பைப் பெற்ற கற்புடைப் பெண்டிர் முன்னே என்னுடைய கணவரைப் பண்டுபோற் காண்பேனோ! அவ்வாறு காண்பேனாயின், அவர் வாக்காற் சொல்லும் குற்றமற்ற நல்லுரையைக் கேட்பேனோ? அவ்வாறு கேளாது ஒழிவேனேல், 'இவள் அக்கிரமம் செய்தாள்,' என்று என்னை இகழ்மின்கள்,” என்று பலவாறு கூறிப் புலம்பி யழுதாள்.

இவ்வாறு அல்லல் மிக ஆற்றாது அழும் கண்ணகியைக் கண்டு, மதுரையார் எல்லாரும் மிகவும் வருந்தி மயங்கி, “நமது மன்னவன் செங்கோல் இவட்குக் களையலாகாத் துன்பந் தந்து, தானும் வளைந்ததே! இஃது என்ன காரணமோ! மன்னர் மன்னனாகிய மதி போலும் வெண்குடையையுடைய நெடுஞ்செழியனது அரசியல் அழிந்ததே! இஃது என்னோ! உலகத்தை எல்லாம் குளிர்விக்கும் பாண்டியன் குளிர்ந்தகுடை வெம்மை விளைத்ததே! இஃது என்னோ யாதுவிளையும் கொல்லோ! அறியோம்," என்று கூறி யேங்கினர்; “தெய்வம் ஏறினாள் போல இக்கற்பின் செல்வி அழுது ஏங்கி அரற்றுகின்றனளே! இஃது என்கொல்!" என்று கூறி வருந்தி ஆற்ற முயன்றனர். அரசனைத் தூற்றும் மாந்தர் மிகுந்தனர். அவ்வூரில் ஓர் இடத்திலே பிறர் காட்டத் தன் கணவன் பிணத்தைக் கண்டாள் அக்கற்பரசி. மாலைக் காலமும் வந்தது, காலையிலே வெட்டுண்டு அங்கு விழுந்து கிடந்த தன் கணவனைக் கண்ணகி மாலையிலே கண்டாள்.

பிணத்தின்மேற் புரண்டு விழுந்து புலம்பி, “தலைவரே, என் பெருந்துயர் கண்டும் இவள் துயருறுகின்றாள் என்று எண்ணுகிலீர். சந்தனாதிகளால் ஆடும் தன்மை பெற்ற நும்முடைய பொன் போன்ற திருமேனி இவ்வண்ணம் பொடியாடிக் கிடக்கத் தகுவதோ? மன்னனால் இயன்ற இக்கொலைத் தொழில் இவ்வாறு முடிந்ததென்றறியாத எனக்கு முற்பிறப்பிலே யான் செய்த தீவினைப்பயன் தான் இது என்று யாரேனும் உரையாரோ? துணையொருவரு மின்றி, மருண்ட மாலை நேரத்திலே துன்புறும் தமியேன் முன் உமது திருமார்பு தரையில் மூழ்கிக் கிடத்தலாமா? உலகமெல்லாம் பழி தூற்றப் பாண்டியன் கொடுங்கோன்மையால் யான் அடைந்த இத்துயரம் என் வினைப்பயனே யென்று எவரும் உரையாரோ? கண்ணீர் சோர்ந்து வருந்தும் கடிய தீவினையுடையேன் முன் புண்ணினின்று பொழியும் இரத்தவெள்ளத்திலே படிந்து இவ்வாறு நீர் பொடியாடிக் கிடத்தலாமா? உலகத்தார் பழி தூற்ற இவ்வண்ணம் மன்னன் செய்த தவறு இன்னவர் தீவினைப் பயன் என்று எவரும் கூறாரோ?" என்று பலவாறு புலம்பினள். மேலும்,

“பெண்டிரு முண்டுகொல்! பெண்டிரு முண்டுகொல்!
கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டுகொல்! பெண்டிரும் உண்டுகொல்!
சான்றோரும் உண்டுகொல்! சான்றோரும் உண்டுகொல்!
ஈன்ற குழவி யெடுத்து வளர்க்குறாஉம்
சான்றோரும் உண்டுகொல்! சான்றோரும் உண்டுகொல்!
தெய்வமும் உண்டுகொல்! தெய்வமும் உண்டுகொல்!
வைவாளிற் றப்பிய மன்னவன் கூடலிற்

றெய்வமும் உண்டுகொல்! தெய்வமும் உண்டுகொல்!"[3]

என்று கூறி அழுதாள். பிறகு கணவனைத் தழுவிக் கொண்டாள். அவன் உறங்கி விழிப்பான் போல எழுந்து, ’மதிபோன்ற உன் முகம் கன்றியதே!' என்று கூறி, அவள் கண்ணீரைக் கையால் மாற்றினான். அவள் கணவன் அடியிற் பணிந்தாள். தன்னுடம்பைக் கைவிட்டுச் சுவர்க்கம் புக எழுந்த அவன், 'நீ இங்கிருக்க,' என்று கூறி, அமரரொடு சென்றான்.

அது கண்ட கண்ணகி, “இஃது என்ன! மாயமோ, வேறென்னோ! என்னை மருட்ட வந்த தெய்வமோ? என் தலைவரை எங்குப்போய்த் தேடுவேன்? அஃது எளிதாயினும் என் சினம் தணிந்தன்றிக் கூடேன். கொடிய வேந்தனாகிய பாண்டியனைக் கண்டு, இச்செய்தியைக் கேட்பேன்,” என்றாள். பின்னர் எழுந்து, தான் முன் கண்ட தீக்கனவை நினைந்து, கண்ணீர் சொரிந்து, பிறகு கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, பாண்டியன் நெடுஞ்செழியன் அரண்மனை வாயில் முன் போய் நின்றாள்.

IV

பாண்டியன் நெடுஞ்செழியன் அரண்மனையின் அந்தப்புரத்தில் இருந்த கோப்பெருந்தேவி, சூரிய உதய காலத்துக்குச் சிறிது நேரத்திற்கு முன்பு ஒரு கொடுங் கனவைக்கண்டு, தன் தோழியரிடம் கூறுவர்ளாயினள். கோப்பெருந்தேவி, தோழியரே, அரசர் வெண்கொற்றக் குடை விழவும், செங்கோல் சரிந்து விழவும், ஆராய்ச்சி மணி நின்று நடுங்கவும் காண்பேன். அன்றியும், எட்டுத் திசைகளும் அதிர்கின்றன. கதிரை இருள் விழுங்கவும் காண்பேன். மின்னற் கொடி இரவிலே தோன்றி விழும். சூரியனும் நக்ஷத்திரங்களும் பகலிலே தோன்றி விழக் காண்பேன். என்ன விளையுமோ! செங்கோலும் வெண்குடையும் நிலத்து மறிந்து விழுதலாலும், நம் அரசர் பிரானது அரண்மனை வாயிலில் உள்ள ஆராய்ச்சி மணி நடுங்குதலாலும், என் உள்ளம் நடுங்கும். இரவிலே மின்னல் விழுதலாலும், பகலிலே விண்மீன்கள் விழுதலாலும், எண்டிசைகளும் அதிர்தலாலும் நமக்கு விரைவிலே பெருத்ததொரு துன்பம் விளையும் எனத்தோன்றுகிறது. அரசர் பெருமானிடம் இதனை நாம் தெரிவிப்போம்,” என்று கூறினள்.

உடனே அரசன்றேவியின் சிலதியராகிய பெண்டிர் பலர் அங்குக் கூடி, அவிர்ந்து விளங்கும் மணியிழையினராய், ஆடி, கலன், கோடி, பட்டு, செப்பு, வண்ணம், சுண்ணம், மான்மதச் சாந்து, கண்ணி, பிணையல், கவரி, தூபம் முதலியவற்றை ஏந்தி, முன் செல்வாராயினர். கூனும் குறளுங்கூடிய குறுந்தொழில் இளைஞர் செறிந்து சூழ்ந்தனர். ‘வையங் காக்கும் பாண்டியன் பெருந்தேவி வாழ்க,’ என்று பேரிளம் பெண்டிர் பலர் வாழ்த்தினர். தன்னைச் சூழ்ந்து வந்த பெண்கள் கூட்டத்தோடு கோப்பெருந்தேவி அரசனை யடைந்து, தான் கண்ட தீக்கனாவை உரைத்தாள். அதைக் கேட்டு இன்னது விளையும் என அறியானாய், அரியணைமீது அமர்ந்திருந்தான் அம் மன்னர் பெருமான்.

இங்கு இவன் இவ்வாறு இருக்கக் கண்ணகி அரண்மனை வாயிலில் வந்து நின்று கொண்டு, “வாயிலோயே, வாயிலோயே, அடியோடு அறிவிழந்து, செல்லும் நெறி யறியாது மயங்கிய மனத்துடன் அரச நெறி பிழைத்த பாண்டியன் அரண்மனை வாயிலகத்துள்ள வாயிலோயே, ‘இரட்டைச் சிலம்புகளில் ஒன்றை ஏந்திய கையினள், கணவனை இழந்தவள், வாயிலகத்திருக்கின்றாள்,’ என்று அறிவிப்பாய்,‘ என்றாள். அதுகேட்ட வாயில் காவலன், அரசன் முன் சென்று நின்று,

“தென்னம் பொருப்பிற் றலைவ வாழி!
செழிய வாழி! தென்னவ வாழி!

பழியொடு படராப் பஞ்சவ வாழி!”[4]

என்று அவனை வாழ்த்திவிட்டு, “அரசே, மகிஷாசுரனைச் சங்கரித்து, அவன் முடித் தலைமேல் ஏறிய துர்க்கையல்லள்; சப்தகன்னியரில் இளைய நங்கையாகிய பிடாரியும் அல்லள்; இறைவனைத் தன்னொடு ஒப்ப ஆடச்செய்தருளிய கானகம் உகந்த காளியும் அல்லள்; தாருகன் மார்பைக் கிழித்த பெண்ணும் அல்லள்; கோபம் கொண்டவள் போலவும் பகைத்தாள் போலவும் தோன்றுகின்றாள்; பொன்னால் அழகுற அமைந்த சிலம்பொன்றை யேந்திய கையினை யுடையளாய்க் கணவனையிழந்தாள் ஒருத்தி வாயிலில் நிற்கின்றாள்; நம் அரண்மனை வாயிலில் நின்று முறையிடுகின்றாள்,” என்று கூறினன். அதைக் கேட்ட பாண்டியன், ‘அவளை இங்கே அழைத்து வருக!’ என்று ஆணையிட்டனன்.

வாயில் காவலன் வாயிலுக்கு வந்து, கண்ணகியை அழைத்துச்சென்று, அரசன் முன் விடுத்தான். அவள் நெருங்கியபோது பாண்டியன் அவளைப் பார்த்து, ‘நீர் வார்ந்த கண்ணுடன் எம் முன் வந்து முறையிடுகின்ற மடக் கொடியே, நீ யார்? உனக்கு எய்திய தென்ன?’ என்று கேட்டான். அதற்கு மறுமொழியாகக் கண்ணகி, “ஆராயாது முறை செய்யும் அரசே, யான் சொல்வது கேட்பாயாக: இகழ்தற்கில்லாத சிறப்பினையுடைய இமையவர் வியக்குமாறு, வல்லூற்றால் புறாவுக்கு நேர்ந்த இடையூற்றை நீக்கும் பொட்டுப் புறாவின் நிறையளவு ஊன் தருவதாகக் கூறித் தன் உடம்பின் தசையை மிகுதியாய் அரிந்து வைத்தும் பற்றாமையால் தானே துலையில் ஏறி நின்று அடைக்கலங் காத்த சிபியும், அரண்மனை வாயிலிற் கட்டி வைத்திருக்கும் ஆராய்ச்சி மணியின் நடு நா நடுங்கும்படி கன்றை யிழந்த பசு அம்மணியைத் தன் கோட்டாற் புடைத்துக் கண்ணீர் சொரிந்து நிற்க அவ்வருத்தத்தைக் காணச்சகியாது மனம்வருந்தித் தான் தனது அரும்பெறற்புதல்வனைத் தேர்ச்சக்கரத்தாற் கொன்றவனாகிய மனுச்சோழனும் இருந்து அரசாண்டதாற் புகழ் படைத்த புகார் நகரம் என்ற காவிரிப்பூம் பட்டினம் எனது பிறப்பிடமாம், அவ்வூரிலே இகழ்ச்சி யற்ற சிறப்பையுடைய புகழ் மிக்க பெருங்குடி வாணிகருள் மாசாத்துவான் என்பாரது மகனாராய்ப் பிறந்து, இந்நகரில் வாழ வேண்டும் என்ற கருத்தோடு வந்து, வினைப் பலனாற் கொலைக் களத்திலே இறந்த கோவலர் என்பாரது மனைவி யாவேன். கண்ணகி என்பது என் பெயர்,” என்று கூறினள்.

அது கேட்ட பாண்டியன், “பெண்ணணங்கே, கள்வனைக் கொல்லுதல் கடுங்கோல் அன்று; செங்கோலின் சிறப்பேயாம்,” என்று கூறினன். அதற்குக் கண்ணகி, “நன்னெறியை நயவாத கொற்கை வேந்தே, என் காற் பொற்சிலம்பின் பரல் மாணிக்கமாம்,” என்றாள். அது கேட்ட அரசன், அச்சிலம்பைத் தருவித்து வைக்கக் கண்ணகி அதனை உடைத்தாள். உடனே மாணிக்கப் பரல் அரசன் முகத்தெதிரில் தெறித்து விழுந்தது. அதனைக் கண்ட நெடுஞ்செழியன், மனம் மிகவும் வருந்தி, “தாழ்ந்த குடையன்! தளர்ந்த செங்கோலன்! பொன்செய் கொல்லன் தன் சொற்கேட்ட யானோ அரசன்! யானே கள்வன் !! உலகவுயிர்களை அற நெறியி னின்று காப்பாற்றும் தென்னாட்டரசு என்னிடம் தவ றியது, இனி 'யான் உயிர் வாழ்வதைக்காட்டிலும் இறப்பதே சிறப்பாம். இன்றே, இன்னே, என் வாழ்வு, கெடுக,” என்று கூறிக்கொண்டு, அரசு கட்டிலிற் சாய்ந்தான். அங்கு அருகிலிருந்த கோப்பெருந்தேவி குலைந்து நடுங்கி, “கணவனை யிழந்தோர் மனம் அமைதியடையும்படி, ‘இன்னவரைப் பார்த்து ஆறுக; இப்பொருளைப் பார்த்து ஆறுக’ என்று காட்டக் கூடிய பொருள் ஒன்றும் இல்லை,” என்று கூறிக்கொண்டு, கண்ணகியைத் தொழுது விழுந்தாள்.

அவளைக் கண்ட கண்ணகி, “பாவம் செய்தார்க்குத் தர்ம தேவதையே கூற்றமாம் என்னும் அறிவுடையோர் சொல் பழுதன்று. ஆகையால், சொல்லற்கரிய அக்கிரமத்தைச் செய்த பாண்டியன் தேவியே, தீவினைப் பயத்தால் இப்பாடுபடும் யான் செய்வது காண்: என் கண்ணிலிருந்து பொழிந்த கண்ணீரும் கையிலுள்ள ஒற்றைச் சிலம்பும் உயிர் ஒப்பாம் நாயகரையிழந்த தோற்றத்தோடு யான் வந்த காட்சியும் மாபாவியாகிய எனது கருங்குழலும் கண்டு நினது நாயகனாகிய கூடல் வேந்தன் நெடுஞ்செழியன் உயிரையிழந்து உடம்பு வெறுங் கூடு ஆக அரசு கட்டிலிற் கிடந்தான்,”என்று கூறினள்.

செங்கோன்மையைத் தம் செல்வமாகக் கருதிப் போற்றும் பாண்டியர் குடியிற் பிறந்த நெடுஞ்செழியன், அறம் நிலை பெற்ற தனது அவைக்களத்திலே செங்கோலும் குடையும் தளரத் தனது தேவி கண்ட கனா உள்ளவாறே பலிக்க இந்நாள்காறும் தான் காத்திருந்த அறத் தெய்வமே தன்னை பொறுக்க, உயிர் இழந்த அதனாலும் தன் பெருமையே விளக்கினான். ‘மானம் பட வரின் வாழாமை யினிது’ என்றும், ‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்,’ என்றும் பெரியார் பேசிய அறவுரை பொய்யாகப் பார்ப்பனோ அவ்வேந்தல்? களவு செய்தாரைக் கையறுத்தலே முறையென்று அறநூல் விதித்திருக்கத் தன் தேவியின் சிலம்பைக் களவாடினன் என்று பொற்கொல்லன் சொல்லாற் குற்றவாளியெனத் தான் கருதிய கோவலனுக்கு விதித்த தண்டம் பொருத்த முடைத்தன்றே ? செங்கோன்மைச் சிறப்பே தன் சிறப்பாக எண்ணியிருந்த நெடுஞ்செழியன் இவ்வண்ணம் செய்தது எவ்வாறு பொருந்தும்?’ எனவெழும் வினாக்களுக்கு விடையிறுத்தல் எளிதன்று. சாமானியமாகக் களவு செய்தாரைக் கையறுத்தலே தண்டமாம். ஆயினும், அரசனது தேவி சிலம்பைக் களவாடிய ஒருவன் கள்வருள் மிகவும் பயின்று தழும்பேறியவனாதலால், அவன் வேறு பல பாவங்களும் செய்து குடி மக்கட்குத் தீங்கு இழைக்கக் கூடுமாதலால், அத்தகையானைக் கொல்லுதலே முறையென்று அறிவுடையார் சொற்கேட்டு விதித்துக்கொண்டனன் போலும், கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று என்று நெடுஞ்செழியனே கூறுதலால், மாந்தராவார் எல்லாம் அவ்வாறு தண்டித்தல் பொருத்தம் என்றே அங்கீகரித்திருந்தனர் என்று அறியலாம். கள்வருக்குச் சிறை வாசம் விதிக்கும் இந்நாள் முறைபற்றி முன்னோர் முறையை யாராய்தல் பொருத்தம் உடைத்தன்றாம்.

“மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையிற் றனிச்சிலம்புங் கண்ணீரும்-வையைக்கோன்
கண்டளவே தோற்றான் அக் காரிகைதன் சொற்செவியில்

உண்டளவே தோற்றான் உயிர்.”[5]

V

ண்ணகி, அரசன் இறந்ததையும், இராசமாதேவி மயங்கிக் கிடந்ததையும் பொருட்படுத்தாது, பின்னும் சில கூறினள். அவள் பேசியன அனைத்தும் இராசமாதேவி உயிர் போக்கும் அம்பும் வேலும் வாளும் ஆக இருந்தன. முழக்கம் மிகப் பேசும் பத்தினித் தெய்வத்தின் வஞ்சின மொழியை இராசமாதேவி மயக்கத்தினிடையே கேட்டாள். அவள் தன் தலைவன் நெடுஞ்செழியன் மயங்கி வீழ்ந்தான் என்று எண்ணி அவன் இறந்ததை அறியாதிருந்ததால் கண்ணகியை நோக்கி, “யாம் செய்த குற்றத்தைப் பொறுத்து எம்மைக் காப்பாற்றுக. பத்தினிக் கடவுளின் மிக்க தெய்வமுண்டோ?” என்று வணங்கி வீழ்ந்தாள்.

அதனைக் கேட்டும் கண்ணகி, “அரசன் தேவியே, மாபாவியாகிய யான் மாதர்க் கணிகலமாகிய பேதைமையே பூண்டு உலகவியல்பு ஒன்றும் தெரியாத இயல்பினை உடையேனாயினும், கூறுவதைக் கேட்பாய்: பிறனொருவனுக்கு முற்பகலிலே கேடு செய்தவன், பிற்பகலிலேயே தனக்குக் கேடு வருதலைக் காண்பான்.

“பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா
பிறபகற் றாமே வரும்.”

என்பது அறவுரையன்றோ? பிறிதோர் ஊரிலே தான் மணம் புரிந்த செய்தியை நம்பாது தன்னை இழித்துரைத்த தன் தலைவன் மூத்த மனைவிக்குத் தான் - மணம் புரிந்த ஊரிலே சான்றாய் இருந்த வன்னி மரமும் மடைப்பள்ளியுமே வந்து தன் உண்மைக் கற்பு” நிலையை விளக்குமாறு செய்த வணிகர் குலக்கொடியும்; காவிரிக் கரையிலே தன்னை யொத்த பெண்களுடன் நீராடி வண்டலயர்ந்துகொண்டிருக்கையில் ஒரு மணற்பாவையைக் காட்டி, ‘இஃதுன் கணவன்,’ என்று பிறர் கூற, அவ்வுரையை அவ்வாறே யேற்றுக்கொண்டு, மனையகம் நோக்கித் திரும்பிய பெண்களொடு திரும்பாது, தண்ணீரலை வந்து அம்மணற் பாவையை அழியா வண்ணம் காவல் செய்து நின்ற இளங்குமரியும்; சோழன் கரிகாற் பெருவளத்தானுக்கு மகளாய்ப் பிறந்து, வஞ்சி வேந்தனாகிய ஆட்டனத்தி என்பானுக்கு வாழ்க்கைப்பட்டுக் காவிரிப் புதுப்புனல் விழாக் காலத்தில் அவனோடு நீராடச் சென்று, அக்காலத்தில் அவனைக் காவிரி இழுத்துக்கொண்டு செல்ல, அது கண்டு பொறாது புலம்பிக்கொண்டே காவிரி செல்லுமிடமெல்லாம் சென்று கடலையடைந்து தேடி அங்குத் தன் கணவனைக் கண்டு, அவனை யழைத்துக்கொண்டு தன்னாடு வந்து அடைந்த ஆதி மந்தி யென்ற கற்பாசியும்; தனது கணவன் திரை கடலோடித் திரவியம் தேடச் சென்றிருந்ததால் அவன் வருங்காறும் வேறு எவர் முகத்திலும் விழியாதிருக்குமாறு கடற்கரை சென்று கலம் வரு திசையை நோக்கிக் கல்லாய்ச் சமைந்து நின்று, அவன் வந்ததும் முன்போல உயிர் பெற்று எழுந்து அவனுடன் மனையகம் வந்து புகுந்த மாதர்க்கரசியும்; தன்னையொத்த மாற்றவள் குழவி கிணற்றில் விழக்கண்டு தன் குழவியையும் கிணற்றிலே வீழ்த்துப் பிறர் எவரும் அறியத் தன் கற்பின் சிறப் பால் இரு குழவியரையும் எடுத்து வளர்த்துக்கொண்ட பெண் மணியும்; அயலா னொருவன் தன் முகத்தைத் தீய நோக்கத்தோடு பார்க்கக் கண்டு முழு மதி யொத்த ஒளி விளங்கிய தனது முகத்தைத் தன் கணவன் வருங் காறும், '‘குரக்கு முகமாயிருக்க,’ என நினைத்து அவ்வாறு அமையப் பெற்றுத் தலைவன் வந்ததும் இயற்கை யுருவத்தை யடைந்த ஏந்திழையும்; பெரியோர் கூறிய

“நுண்ணறி வுடையோர் நூலொடு பழகினும்

பெண்ணறி வென்பது பெரும்பே தைமைத்தே.”
என்ற அறிவுரைக் கிணங்கப் பெண்கள் வண்டலாடுமிடத்தில், ‘யான் ஒரு மகளும் நீ யொரு மகனும் பெற்றால், அவ்விருவருக்கும் மணம் புரிவிக்கலாம்,’ என முன்னே தாம் பேசிக்கொண்டதை யெண்ணி அவ்வாறு செய்ய மனமின்றி வருத்தமுற்ற பெற்றோர் உரையை மறைந்து கேட்டுத் தன் தாயின் மனத்தில் எண்ணிய சிறுவனே தனக்குத் தலைவனாகுகவென மணப்பெண் போல ஆடையணி யணிந்து, பெற்றோர் ஆணை எதிர்பாராமலே அவனுக்கு மாலையிட்ட மங்கையர்க்கரசியும்; அவள் போன்ற பிற பெண்டிரும் பிறந்த புகார் நகரத்திலே பிறந்தேன். அறமுறைக்கேற்ப யானும் ஒரு கற்புடைப் பெண்ணாயிருப்பது மெய்யாகில், உங்களை இனி இவ்வுலகில் வாழவொட்டேன்; உங்கள் அரசாட்சியையும் அரசிற்கிடமாகிய மதுரையையும் அழிப்பேன். எனது இப்பிரதிஞ்ஞையின் முடிவை நீயே காண்பாய்,” என்று கூறி, அவ்விடம் விட்டகன்றாள்.

பாண்டிய மன்னர் பிறகு கண்ணகி மறுகின் நடுவில் நின்றுகொண்டு, “நான்மாடக் கூடல் நகரில் வாழும் மகளிரும் மைந்தரும் வானகத்தில் வாழ்வுறும் தேவரும் பிற மாதவரும் கேண்மின்கள்: என் அன்பிற்குரிய தலைவரைக் கொடுங்கோன் முறையாற் கொன்ற அரசன்மீதும் அவன் ஆண்ட நகரின் மீதும் யான் சினம் கொண்டேன். என்னிடம் யாதும் குற்றமில்லை,” என்று கூறிவிட்டு, இடமார்பை வலக் கையால் திருகி, மதுரை நகரை மூன்று முறை வலம் வந்த பிறகு, பெருந்தெரு நடுவிலே எறிந்தாள். அக்கணத்தில் அவளெதிரே, நீல நிறத்தினனும் செக்கர் வார் சடையானும் பால்போல் வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலம் பூண்டானும் ஆகிய அக்கினி தேவன் தோன்றினன். அவன், “மாபத்தினியே, நினக்கு மன வருத்தம் தரும் தவற்றை இழைக்கும் காலத்தே இந்நகரத்தை விழுங்கி யழிக்குமாறு முன்பே யான் ஓர் ஆணை பெற்றுளேன். இப்பொழுது யான் யார் யாரை யொழித்து, யார் யாரை யழித்தல் வேண்டும்?” என்று கேட்டனன். கண்ணகி,

“பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனும் இவரைக் கைவிட்டுத்

தீத்திறத்தார் பக்கமே சேர்க.”[6]
என்று ஆணை தந்தாள். பாண்டியன் நெடுஞ்செழியனால் அறநெறி பிழையாது ஆளப்பெற்றுவந்த மதுரை நகரம், அன்று கண்ணகி யென்ற மாபெரும்பத்தினியின் கற்புத் தீயால் எரிந்து அழிந்தது.

“பொற்பு வழுதியுந்தன் பூவையரு மாளிகையும்
விற்பொலியுஞ் சேனையுமா வேழமும்-கற்புண்ணத்
தீத்தரு வெங்கூடற் றெய்வக் கடவுளரும்

மாத்துவத் தான் மறைந்தார் மற்று.”[7]

கற்புடைப் பெண்டிரும் மாதவரும் நல்லோரும் கண்ணகி கற்பின் சிறப்பைப் பாராட்டினர். கண்ணகியென்ற பத்தினிக் கடவுளின் கோபத்தை ஆற்ற வேண்டும் என்ற கருத்தோடு மதுரை நகர்க் காவற்றெய்வம் ஆகிய மதுராபதி என்ற அணங்கு, அவளிடம் வந்தாள்.

அவள் சடை தாழ்ந்து பிறை யணிந்த தலையினள்; குவளை மலர்போலும் கண்ணும் வெள்ளொளி தங்கும் முகமும் உடையாள்; நிலவொளி ததும்பும் முத்துப் போன்ற நகையினள்; இடப்பால் நீல நிறமும் வலப்பால் பொன்னிறமும் பொருந்தியமேனியினள்; இடக்கையில் பொற்றாமரை மலரும் வலக்கையில் சுடர் மிக்க கொடுவாளும் பிடித்தவள்; வலக்காலில் வீரக்கழல் கட்டி இடக் காலில் சிலம்பு அரற்றும் செவ்வியினள் ; கொற்கை வேந்தன் குமரித் துறைவன் பொற்கோட்டு வரம்பன் பொதியப்பொருப்பன் ஆகிய பாண்டியன் நெடுஞ்செழியனது குலமுதற் கிழத்தியாகலின், மிகவும் மனம்வருந்தியிருந்தவள். அத்தகைய மதுராபதி திருமாபத்தினியாகிய கண்ணகியின் முன்னே வராமற் பின்னே நின்று கொண்டு, “பெண்ணே, யான் சொல்வது கேள்,” என, அதுகேட்ட கண்ணகி வலப்புறமாகத் தலையைத் திருப்பிச் சாய்த்து, “என்பின் வரும் நீ யார்? எனது துன்பத்தின் அளவை அறிவாயோ?” என்று கேட்டாள்.

மதுராபதி, “அணியிழாய், யான் நின் துயரமும் - அதன் காரணமும் அறிவேன் ; இக்கூடலுக்குரிய மதுராபதி என்பேன்; உண்மையே கூறுவேன்: நின் கணவன் இறந்ததன் பொருட்டு யானும் வருந்துவேனாயினும், பெருந்தகைப்பெண்ணே, யான் சொல்வதொன்று கேட்பாயாக: என் மனம் மிகவும் வருந்துகின்றது. எம் அரசற்கு ஊழ்வினைப்பயன் அனுபவிக்க நேர்ந்த காலத்தில் உன் கணவனுக்குத் தீவினைச் சூழ்ச்சி உண்டாயிற்று. இந்நாள் காறும் எமது தலைவனாகிய பாண்டியன் வேத முழக்கம் கேட்டதுண்டேயன்றி, ஆராய்ச்சி மணியோசை கேட்டறியான். இந்நாட்டுக் குடிகள் இம்மன் எனை அடிதொழுது வாழ்வுபெறாத பிறமன்னரைத் தூற்றுவதுண்டேயன்றி இவனது செங்கோன்மையைப் பற்றிப் பழிதூற்றியதில்லை. நன்னுதல் மடந்தை, நான்சொல்வதை இன்னும் கேட்டி: பெண்டிரது பேதைமை விளங்கும் நோக்கினால், மதமுகம் திறப்புண்டு இடம் கடந்து செல்லும் நெஞ்சத்தையுடைய இளமையெனும் யானை, கல்வியென்ற பாகன் கையில் அகப்படாது அச்சமற்று ஓடுமாயினும், ஒழுக்கத்தொடு சிறந்த இப்பாண்டிய குலத்துப் பிறந்தோர்க்கு இழுக்கம் விளையாது. இதுவும் கேட்பாய்: மிகவும் வறுமை வாழ்வில் வாழ்ந்து வந்த கீரந்தை யென்ற பார்ப்பான் மனைவியின் மனைவாயிற் கதவை, நள்ளிரவில் வேற்றுக் குரல் ஒன்று கேட்பதாய் எண்ணிப் பாண்டியன் குலசேகரன் புடைத்தான். அவ்வோசையைக் கேட்ட மனையகத்திருந்த கணவனும் மனைவியும் வெவ்வேறுவகை மனத்தோற்றம் பெற்றனர். அப்பொழுது அப்பெண்மணி தன் தலைவனை நோக்கி, “அரச வேலி அல்லால் வேறு குற்றமற்ற காவல் ஒன்றும் இல்லை,’ என்று கூறி, என்னை இங்கே அரசன் காப்பான் என்று தனித்து விட்டு, காசி யாத்திரை சென்றீர். அவ்வேலியின் காவலால் இந்நாள் வரை மனக் கவலையற்று வாழ்ந்து வந்தேன். இன்று அவ்வேலி காவாதோ?” என்று கூறினள். அச்சொல் லைக்கேட்டு மனைக்கு வெளியில் நின்ற பாண்டியன்செவி சுடப்பெற்று, மனம் வருந்தி, அந்நாள்வரை அப்பெண் மணியின் கற்புக்குக் கேடு வராவண்ணம் தானே பாதுகாத்திருந்தும், அன்று தான் ஆராயாமற் செய்த செயலால் கீரந்தை தன் மனைவியின் கற்பு நிலையில் ஐயுறுதற் கிடமுண்டாயிற்றே யென்று மிகவும் கவலை கொண்டு, மறு நாள் பலருமறியத் தன் கையைக் குறைத்துப் பொற் கை பெற்றுப் பொற்கைப் பாண்டியன் ஆன வரலாறும் நீ அறிவாய். இந்நெடுஞ்செழியனே திருத்தங்கால் என்ற ஊரில் வாழ்ந்த வார்த்திகன் என்ற 'வேதியன் பொருட்டுச் செய்த அறச் சிறப்பும் கேட்டறிந்திருப்பாய். இத்தகைச் சிறப்புள்ள பாண்டியர் குலச் செம்மல் கோ முறை பிழைத்த காரணம் கேட்பாயாக: ‘ஆடி மாதத்திலே கிருஷ்ணபக்ஷத்தில் அஷ்டமி திதியில் வெள்ளிக்கிழமையன்று கார்த்திகை பரணி என்ற இரண்டு நக்ஷத்திரங்களும் இருக்கும் காலத்திலே தீப்படுதலால் இம்மாபெரு நகரம் மதுரை கேடுறும்,’ என்றதோர் உரை உளது. மேலும், நின் கணவன் கொலையுண்ட காரணம் கூறுவேன்; கேள்: முன்பு கலிங்க நாட்டில் உள்ள சிங்கபுரத்தரசனாகிய வசுவென்பவனும் கபில புரத்தரசனாகிய குமரன் என்பவனும் தம்முட் பகைகொண்டு ஒருவரை யொருவர் வெல்லக் கருதியிருந்தனர். அப்பொழுது சிங்க புரத்துக் கடை வீதியிற் சென்று இயல்பாகப் பண்டம் விற்றுக் கொண்டிருந்த சங்கமன் என்ற வணிகனை அந்நகரத்து அரச சேவகனாகிய பரதனென்பான் இவன் பகையரசனாகிய குமானது ஒற்றனென்று கூறித் தன்னரசனுக் கறிவித்துக் காட்டிக் கொலை செய்துவிட்டான். அச் சங்கமன் மனைவியாகிய நீலி என்பவள் மிக்க துயரமுற்றுப் பதினான்கு நாள் பலவிடத்தும் அலைந்து, பின்பு ஒரு மலையின் மேல் ஏறிக் கணவனைச் சேரக்கருதித் தன் உயிரை விடும் நிலையில், ‘எமக்குத் துன்பம் செய்தோர் மறு பிறப்பில் இத்துன்பத்தையே அடைவார்களாக,’ என்று சாபமிட்டிறந்தாள். அப்பரதன் நின் நாயகனாகிய கோவலனாய்ப் பிறந்தான். ஆதலின், நீவிரும் இந் நகரில் இவ்விதமான பெருந்துயர் அடைந்தீர்.

“உம்மை வினைவந் துருத்த காலைச்

செம்மையி லோர்க்குச் செய்தவ முதவாது.”

ஆகையால், இந்நாட்டினீங்கி வேறொரு நாட்டில் இன்னும் பதினான்கு தினங்களில் நினது நாயகனை வானவ உருவிற் காண்பாய்.”

இவ்வாறு மதுராபதி என்ற தெய்வம் கண்ணகிக்குச் செய்தியெல்லாம் விளக்கியுரைத்து, அவளது சினத்தை அடக்கியமையச் செய்து, மதுரை நகர் முழுதும் பற்றி யெரிந்த தீ அடங்கிக் குளிருமாறு செய்துகொண்ட பிறகு, கண்ணகி அங்கிருந்து புறப்படலாயினள். அவள் அப்பொழுது, “என் உள்ளத்துக் கோயில் கொண்ட நாயகரைக் கண்ட பின்பு அல்லாமல், அதன் முன்பு யான் இருத்தலும் நிற்றலும் செய்யேன்,” என்று கூறி, துர்க்கை கோயில் வாயிலிலே தன் கைக் கடகத்தை உடைத்தாள்.

‘கீழ்த்திசை வாயிலாற் கணவனோடு புகுந்தேன்; மேற்றிசை வாயிலால் வெறுமையோடுதிரும்புகின்றேன்,’ என்று கூறி, இரவும் பகலும் மயங்கி வருந்திப் புறப்பட்டாள். துயரமே உருவெடுத்ததுபோலப் பதினான்கு நாட்கள் அலைந்து இறுதியில் திருச்செங்குன்று என்னும் மலைமீது ஏறித் தேவர்கள் வந்து வாழ்த்தத் தேவவுருவொடு வந்த கோவலனொடு விமானம் ஏறி உயர்ந்த வுலகம் புகுந்தாள்.

“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத்
தெய்வந் தொழுந்தகைமை திண்ணமாற்—றெய்
மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி [வமாய்

விண்ண கமா தர்க்கு விருந்து.” [8]

அன்று தொட்டுப் பாண்டியன் நாடு மழை வளம் இழந்து, வறுமை யெய்தி, வெப்பு நோயும் குருவும் தொடாக் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் என்ற இளஞ்செழியன் கண்ணகி தேவிக்கு விழவொடு சாந்திசெய்ய நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமும் நீங்கினது.

முடிகெழு வேந்தர் மூவ ருள்ளும்
படைவிளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்

பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்

விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்
ஒடியா வின்பத் தவருறை நாட்டுக்
குடியுங் கூழின் பெருக்கமும் அவர்தம்
வையைப் பேரியாறு வளஞ்சுரந் தூட்டலும்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும்,"

பிறவும் விளக்கிக் கூறும் இளங்கோவடிகள், பாண்டியன் நெடுஞ்செழியன் செங்கோன்மை பிழைத்த செய்தியைத் தெரிவிக்கும்போது, அடையும் வருத்தத்திற்கு எல்லை யுண்டோ? அத்தகைய தவப் பெரியார், சேரர் குடியிற் பிறந்த இளங்கோவேயாயினும், பாண்டியன் நெடுஞ்செழியனது உண்மைப் புகழை உலக மறிய விளக்கிக்கூறியுளர். இறுதியில் அவர் அருளிய வாக்கு இங்கு எடுத்துக் காட்டப்படுவதோடு, இப்பாண்டியன் வரலாறு நிறைவேறும்:

"வடவாரியர் படைகடந்து
தென்றமிழ்நா டொருங்குகாணப்
புரைதீர் கற்பிற் றேவி தன்னுடன்
அரசு கட்டிலிற் றுஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழி யன்றன் நெடும்புக ழளந்து
வழுத்தலும் அவன்பழி மறையுமா றாய்ந்து
நிலத்தவர் உளங்கொள நிகழ்த்தலும் எளிதோ?”

முற்றிற்று.





The B. N. Press, Mount Road, Madras.

  1. புறநானூறு - செய்யுள், 183.
  2. சிலப்பதிகாரம் - கொலைக்களக் காதை.
  3. சிலப்பதிகாரம் - ஊர் சூழ் வரி
  4. சிலப்பதிகார்ம்-வழக்குரை காதை
  5. சிலப்பதிகாரம் - வழக்குரை காதை
  6. சிலப்பதிகாரம் - வஞ்சின மாலை
  7. சிலப்பதிகாரம்-வஞ்சின மாலை
  8. சிலப்பதிகாரம் - கட்டுரை காதை.