பாண்டிய மன்னர்/பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
2. பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்
துஞ்சிய நன்மாறன்
I
தமிழணங்கின் தலை மகனாராகிய அகத்தியனார் வாழும் பொதிய மலையின் சரிவிலுள்ள தவச்சாலை யொன்றில் பொன்னிறமாகிய மாலை வெயிலின் எழிலைக் கண்டு மன மகிழ்வு மிகப் பெற்ற முனிவர் ஒருவர் அமர்ந்திருந்தார். இயற்கைச் செல்வியின் இனிய தோற்றத்தைத் தம்உள்ளத்தாற் கொள்ளை கொள்வாராய் இருந்த அத்தவச் செல்வர், இனிய நீர்ப் பெருக்கும் இன்கனி வளமும் மண மிகு தென்றலுங் கொண்ட அம்மலை வாழ்வை விடுத்து மன்னர் மன்னனாய் இருக்கும் வாழ்வையும் விரும்பார் எனவே அவர் முகத் தோற்றம் விளக்கியது. ஆயினும், அவர் முகத் தோற்றம் அறிவால் முதியவர் என அவரைத் தெரிவித்ததாயினும் ஆண்டினால் முதியவரென விளக்கவில்லை. சமீபத்திற் சென்று பார்ப்போர்க்கு அவரை யௌவனப் பருவம் கடவாதவர் என்றே மதிக்கத் தோன்றும். இளமையும் இளமைக் கேற்ற எழிலும் அவரிடம் பொருந்தியிருந்தவாயினும், உலக நிலையில் அவ்விரண்டாலும் அடைதற்குரிய அறப் பயனை அவர் விலக்கி வந்து வன வாழ்க்கை பூண்டிருந்ததால், அவர் உடம்பின் நிறமும் பொன்னிறமாய் விளங்கியது. எழுமையும் ஏமாப்பு உதவுவதாகிய அறத்தைக் கொண்டு ஆமை போல ஐந்தும் அடக்கக் கருதி அவர் ஆங்கு வாழ்ந்தனர் எனத் தோன்றியது. இத்துணைச் சிறந்த இன்பப் பேற்றை அடைந்து வாழ்ந்திருந்த அம்முனிவர் சடுதியில் எழுந்து நின்றார். அவர் அவ்வாறு நின்றதற்குக் காரணம் அவரருகில் அவரளவே வயதுள்ள சிறந்த போர் வீரன் ஒருவன் வந்து நின்றதேயாம். அவன் வில்லும் அம்பறாத் தூணியும் வாளும் தோலும் தாங்கி, மிகவும் கம்பீரமாய் விளங்கினன்.
தவச் செல்வர் அவனைக் கண்டு எழுந்து நின்றது. என்ன காரணத்தால் என்பது அவ்விருவர்க்கும் இடையில் நிகழ்ந்த பின் வரும் சம்பாஷணையால் விளங்கும்:
முனிவர்:--வருக! வருக!! மாற, வருக! நின் வரவு நல்வரவாகுக. சமீப காலத்தில் உனது நிலைமை சிறிது மாறுபாடு அடைந்திருப்பதாகத் தோன்றுகிறது. அதற்கு ஏற்ப நான் வரவேற்கக் கூடாமைக்கு மன்னிக்கவும்.
மாறன்:- முனிவரே, தற்காலம் இருக்கும் நிலையில் - நான் நும்மை முன்புபோல் உரிமை முறையால் அழைக்கக் கூடாதாயினும், நான் வேண்டும் வரத்தைப் பெற்றுக்கொண்டு போகலா மன்றோ?
முனிவர்:-- அன்ப, மாற, நீ கேட்கும் வரம் கொடுக்கத் தக்க தவச்சிறப்பை நான் இன்னும் தேடிப் பெற்றிலேன், நமது ஆசிரியரிடம் கல்விச் செல்வம் பெறும் பணி நிறைவேறிய பிறகு நம் நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்கச் சென்றேன்; பல புண்ணிய க்ஷேத்திரங்களையடைந்து, மூர்த்தியைத் தரிசித்தேன்; தீர்த்தங்களிலே ஆடினேன்; மோன விரதம் பூண்ட பெரியார் பலரையும், அடைந்தார்க்கு அவரவர் பக்குவ நிலைக்கேற்ப அருள் பொழியும் ஆன்றோரையும் தரிசித்தேன்; நம் நாட்டிலே பல விடங்களிலும் சென்று அறிதற் கரும்பொருளாகிய ஆத்மானந்தத்தை அறிவிப்பாரிடம் அறிய முயன்றேன் ; அனுபவத்தில் அப்பெரும்பேற்றை யடையவெண்ணியே இங்கு அடைந்தேன். இவ்விடத்தில் சாமானியர் கண்கட்குப் புலப்படாத பெரியார் பலர் வாழ்கின்றனர். இயற்கைச் செல்வியும் இங்கு அரசு புரிகின்றாள். இனி என் சிந்தை இன்றிருந்து நாளை யழியும் வாழ்வை நாடாது; கணத்திலே தோன்றி பழியும் இன்பத்தில் ஈடுபடாது; ஒருவகை நிலையுமற்ற செல்வத்தினைத் துய்ப்பதிற் செல்லாது; என்னால் இந்நிலையில் உனக்குக் கொடுக்கக் கூடிய வரம் ஒன்றும் இல்லை யென்பதை நீயே ஊகித் துணரலாம்.
மாறன்:— ஐய, உமது முன்னோர் தேடி வைத்த பெருஞ்செல்வத்தையும் நீவிர் அநேக ஆண்டுகளாய்த் தேடிய அரும்பெற லறிவையும் நீவிர் பிறந்த நாட்டுக் குப் பயன்படுமாறு உதவல் செயற்கருஞ்செயலோ ? நான் கேட்க எண்ணி வந்த வரம் இதுவே.
முனிவர்:—வாராணா - க்ஷேத்திரத்தில் விசுவநாதரைத் தரிசனம் செய்துகொண்டிருக்கையில் என் மனமார என் முன்னோர் தேடிவைத்த நிலம் பொன் முதலிய எல்லாப் பொருள்களையும் என் நாட்டுக்கென்றே அர்ப்பணம் செய்துவிட்டேன். என் பொருள் என் நாடு என்று கூற எனக்கு இனி ஒன்றும் இல்லை. ‘உலக முழுவதும் என் நாடே; உயிர்கள் எல்லாம் என் உயிரே’ என்ற உண்மையைப் பெரியோரால் நன்கு அறிந்துகொண்டேன். என்னுடைய அறிவு என்று சொல்ல என்னிடம் ஒன்றும் இல்லை. இருப்பதாகப் பிறர் எண்ணுவது அழிவுள்ளது. அறிவு தன் உருவமாகக் கொண்ட பொருளை அறியும் அறிவே அறிவாமாகையால், அவ்வறிவை இன்னும் பெறாத யான் அறிவுள்ளேன் என்று எவ்வாறு கூறிக் கொள்வது ? ஆகையால், என் நாடு என்று ஒரு நாடு இல்லாத யான் என்னிடம் இல்லாத அறிவைப் பயன்படுத்துவது என்பது எவ்வாறு என்று எனக்குத் தோன்றவில்லை. எல்லாவுலகங்களும் எல்லாவுடம்புகளும் எவனுக்கு ஆலயமோ, அவனே அறிவின் உருவம்; அவனே அறியப்படும் பொருள். அறிபவனும் அவனேயாவன். இவ்வுண்மை வாசா கயிங்கரியம் ஆகாது, அநுபவ முதிர்ச்சியாகவே இங்கு முயற்சி செய்ய வந்தேன். இவ்வுடம்பைக் கொண்டு பெறலாகும் பயன் இதுவே. இது பெற்ற பிறகு இவ்வுடம்பு இருக்குமாயின், எந்நாட்டுக்கும் எவ்வுலகத்துக்கும் எவ்வுயிர்க்கும் உரிமையே. அப்பயன் பெறுங்காறும் இவ்விடத்தை விட்டு அசையுங் கருத்திலேன்.
மாறன்:—இவ்வுயர்ந்த நோக்கம் கொண்ட நும்மை இவ்விடத்தினின்று அகற்றுவதும் எனக்குப் பெருமை தராது. இளம்பருவத்திலே ஒரு சாலை மாணவராய்ப் பயின்றோமாகையால், அவ்வுரிமை கருதி இப்பொழுது எனது அரசியற் பொறையைத் தாங்கி யுதவும் அமைச்சராயிருக்குமாறு வேண்டிக்கொள்ள லாமோவென இங்கு வந்தேன். இங்கிருந்த வண்ணமே எல்லாவுயிர்க்கும் ஏமமாகிய அருந்தவம் இயற்றக் கருதியிருக்கும் நமக்கு அரசனாகிய அடியேனும் இயன்றவுதவி செய்யக் கடமைப்பட்டவனே. இத்தகைத் துறவுள்ளங் கொண்ட பெரியார் என் நாட்ட கத்திருப்பதே எனக்குப் பெருமையாம். அவகாச காலங்களில் வந்து தரிசனம் செய்துபோக அனுமதி கொடுத்தால் அதுவே போதுமானது. பெரும்பொறை வகித்திருக்கும் எனக்கு ஏற்ற அறவுரை பெரியார் வாக்காற் பிறப்பது எனது மேம்பாட்டுக்கு அறிகுறியாம் அன்றோ ?
முனிவர்:— அன்ப, மாற, நீ முடி சூடிய செய்தி இப்பொழுதே அறிந்தேன். இறைவன் அருள் வயத்தால் எல்லா நலமும் எய்துக ; எல்லா வுயிர்க்கும் இன்பம் வளர்க்கும் இயல்பினன் ஆகுக. அரசின் சிறப்பு அறத்தில் அடங்கும். ஒறுக்கப்படுமாறு வந்து நிற்கும் குற்றவாளியும் ஒறுப்பவனாக இருக்கும் அதிகாரியும் அதற்கு வேண்டிய அறநெறியமைத்த அரசனும் அரசர்க் கரசனாகிய அவன் முன்னிலையில் ஒரு நிகரே. எள்ளளவு தவறு நேரிடுமாயினும் அறம் என்னும் தெய்வம் அதனைக் காத்திருந்த அரசனையே அழித்துவிடும். ஆகையால் அறத்தெய்வத்தின் ஆணை கடவாது நல்வாழ் வெய்த முயல்க.
மாறன்:— முனிவரே, பாண்டிய நாட்டில் பழையதொரு பெருங்குடியாகிய நுமது குடும்பம் இவ்வாறு நும்மோடு முடிவடைகின்றதாயினும், இதுவும் அக்குடிக்கு ஒரு பெருஞ்சிறப்பே. அமைச்சரும் புலவரும் அறநெறி யறிந்த பெரியாரும் கூறும் அறவுரைகளைச் செவியேற்று அரசியல் நடத்தி யான் நமது நாட்டுக்கு நலமியற்ற முயல்வேன் ; எப்பொழுதேனும் அறியாமை அயர்ச்சி முதலிய காரணங்களால் சிறிதே னும் பிறழ்வேனாயின், நும்மைப்போன்ற பெரியோர் தவத்தால் யான் அடையும் பேறு என்னைக் காத்தளிக்கும் என்றே நம்பியிருக்கின்றேன்; மதுரை நகர் செல்கின்றேன்; விடை பெற்றுக் கொள்ளுகின்றேன்.
முனிவர்:— அவ்வாறே செய்க.
இச்சம்பாஷணை முடிந்த பிறகு போர் வீரன் போல வந்த பாண்டிய மன்னன் நன்மாறன் என்பான் தனது அரசிருக்கை நகராகிய மதுரையை நோக்கித் திரும்பினன். விரைந்து செல்லும் பரிமா ஒன்றின் மீது இவர்ந்து மெய் காவலர் இருவர் அருகிலே பின்பற்றி வர, நால்வகைக் கதிகளாலும் அதனை நடத்திக் கொண்டு போயினன்.
இடையிலே சில இடங்களிலே தங்கி இளைப்பாறி நாட்டு வளத்தையும் கண்காணித்துக்கொண்டு இரண்டு தினங்களில் மதுரை நகர் வந்து அடைந்தான் ; வெளிப்படையாக வரவேற்றல் முதலிய ஆடம்பரங்கள் ஒன்றும் இல்லாது அடக்கமாக அரண்மனைக்குட் சென்றான்; தன் அந்தரங்க அறைக்குச் சென்று இளைப்பாறினன்.
பின்னர் நன்னீராடி நல்லுடை யுடுத்து நம்பனைத் தொழுது, மலர் தூவிப்பணிந்து, உண்டியயின்று வெள்ளடை பாகு தின்று, முக வாசங் கொண்டு, அறிஞர், புலவர், அமைச்சர், தண்டத்தலைவர், முதலியோர் தன்னை எதிர் பார்த்துக் காத்திருந்த ஆஸ்தான மண்டபத்தை அடைந்தான். அங்கிருந்தார் அனைவரும் அரசனைக் கண்டதும் எழுந்து, தத்தம் நிலைக்கு உரிய முறையால் வணங்கினர். மாறன், மாகதர் வாழ்த்த வந்தியர் பாடத் தனது அரியணை யடைந்து அதன் மீது ஏறி யமர்ந்தனன். சிறிது பொழுது சென்றதும் அவைக் களத்தார் அனைவரும் தத்தமக்கு ஏற்ற ஆதனங்களில் அமர்ந்தனர்.
அமைச்சர் தலைவர் எழுந்து, “மன்னர் பெருமானே, தாங்கள் சென்றிருந்த அரும்பணி எவ்வாறு ஆயதோ வென அறிய யாம் பெரிதும் ஆவல் உடையோம்,” என்றார்.
அரசன்:— ஒரு வகையில் வெற்றியும் மற்றொரு வகையில் தோல்வியுமாயின. எவ்வாறெனில், நமது மூதாதையர் காலம் முதல் அமைச்சர் தலைவராயிருந்து வரும் குடியிலே பிறந்த குணசாகரனார் அப்பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு நாம் வேண்டியும் மறுத்தார். அவர் தவச் செல்வத்தையே நாடி நின்றார். அவரது அருளும் அன்பும் நமக்குக் கிடைத்தன. அன்றியும், அவரது குலதனமாகிய பெருஞ்செல்வம் நம் நாட்டுக்குப் பொதுப்பொருளாயிற்று. அவரது பெரிய மாளிகையும் அரசாங்கத்திற் குரியதாயிற்று.
அமைச்சர்:— இவ்வாறு நேர்ந்தது கருதி மகிழ்வதோ, வருந்துவதோ என்பது தோன்றவில்லை. அறிவு விளக்கப் பெருங்கடலாகிய அமைச்சரை யிழந்தது இந் நாட்டுக்குப் பெருத்த நஷ்டமே. ஆயினும், அவரையே ஒரு பெருமுனிவராகப் பெறுவது உலகத்துக்கே பெருத்த லாபமாகும். அவரது பரம்பரைச் செல்வம் நல்வகையில் விநியோகிக்கப்படுதல் நலம்.
அரசன்:— அதற்கும் நாம் ஒரு யோசனை செய்து முடிக்கலாம். கல்விப் பெருஞ்செல்வர் குடியாகிய குணசாகார் குடிப்பொருள் கல்விப் பொருளை வளர்க்க வுதவுவது சிறப்பன்றோ ? நமது அவைக்களப் புலவராகிய நக்கீரனார் கருத்தென்ன ?
நக்கீரர்:— அரசரேறே, புரவலர்க்குக் கருத்து எதுவோ அதுவே புலவர்க்கும் கருத்தாம். குணசாகரர் குடிப்பொருளைத் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குக் கொடுப்பதோடு அவரது மாளிகையைப் பெரியதொரு தமிழ்க் கல்விச்சாலையாக்கி, நூற்றுக்கணக்கான இளஞ்சிறார்களை உண்டியும் உடையும் நல்கிக் கல்வி கற்கச் செய்தல் சிறப்பாம்.
அரசன்:— நக்கீரனார் கூறியது நல்ல யோசனையே. அப்பொருளில் ஒரு சிறிதும் அரசாங்கத்துக்கு வேண்டா. எல்லாம் அறமுறைக் கல்வி வளர்த்தற்கே ஆதல் நலம். மாளிகையை என் செய்யலாம் என்று நாம் யோசனை செய்திருந்தபோது புலவர்கூறியது பொருத்தமாயமைந்தது. அவ்வாறே முடிவு செய்து விடுவோம்.
அமைச்சர் :--அவ்வாறே ஆகுக, இன்றே இதற்கு அமைந்த அரசு விளம்பரங்களை நாடெக்கும் பரப்புவிக்க வேண்டுவன செய்கின்றேன்.
அரசன்:--இஃது இவ்வாறிருக்க. தண்டத் தலைவரே உமக்கு யாம் கொடுத்த பணி என்ன ஆயிற்று ?
தண்டத் தலைவர்:--மன்னர் மன்னரே, நம் படை நாம் எதிர் பார்த்த ௮ளவுக்குமேல் மும்மடங்கு வளர்ந்துவிட்டது. நம் நாட்டில் உள்ள அண் மக்களிற் பெரும்பாலார் படைப்பயிற்சி உடையராயினர். இதனால், நாட்டுக் காவற்குவேண்டுமளவு நிலைப்படையிருப்பதோடு அயல் நாடுகள்மேற் சென்று போர் இயற்றவும் போதுமான வீரரும் படைக்கலங்களும் பரிகளும் தேர்களும் களிறுகளும் பிறவும் நம்மிடம் உள்ளன. நாளைக்கே வேண்டுமாயினும்,; அயல் மன்னரை அடக்கப் புறப்படலாம்.
அரசன்:--அவ்வாராயின், சோழர் சேரர் முதலிய அரசர்களை முதற்கண் எதிர்த்துப் போராடித் தமிழ்நாடு முழுவதையும் நமது ஆட்சிக்குள் ௮மைப்போம். குறுநில மன்னர் இச்செய்திகளைக் கேட்டால், தாமே அடங்குவர்.
தண்டத் தலைவர்:-அவ்வாறே செய்யலாம்.
அரசன்:--அமைச்சரே, இது அமக்கும் சம்மதந்தானே!
அமைச்சர்.--இந்நாட்டில் உள்ளார் அனைவருக்கும் சம்மதமே.
அரசன்:--புலவருக்கோ ? போர் என்றால் புலவர் வெறுப்பரோ?
கக்கீரர்:--அரசே, அவ்வாறு புலவரை எண்ணலாமோ ? அறநெறி வழுவிய அரசரை அறநெறி நிறுத்தவும், தம் நாட்டின் செல்வத்தை வளர்க்கவும் அரசர் போர் செய்தல் முறையேயன்றோ? இருந்ததைக் கொண்டு அமைவது அரசர்க்கு ஏற்ற குணமென அறநூல்கள் கூறவில்லையே !
அரசன்:--இவ்வாறு எல்லார்க்கும் சம்மதமாயிருப்பதால் யாம் தமிழ் நாடு முழுவதையும் நம் ஆளுகைக்குள்ளடக்கப் போர்புரியத் துணிந்தோம். அதற்கு நீவிர் அனைவீரும்.இயன்ற வுதவி புரிவீராக.
நக்கீரர் :--எம்மால் இயன்ற வுதவியை இப்பொழுதே யாம் செய்இன்றோம், அரசே, அனேற்றை வெற்றிக்கறிகுறியாகக் கொடியெனப் பிடித்த நெருப்புப்போல் நிறம்உள்ள சடையினையுடைய விலக்கற்கரிய- மழுப் படையைத் தாங்க நீல கண்டனும், கடலில் வளர்கின்ற வலம்புரி சங்கம்போன்ற மேனியையுடைய வலிமை மிக்க கொடிய கலப்பைப் படையும் பனைக்கொடியும் உடைய பலராமனும், கழுவிய அழகிய நீல மணி போன்ற மேனியையுடைய விண்ணில் உயர்ந்துbபறக்கும் கருடக்கொடியினையுடைய வலிமை மிக்க திருமாலும், மயிற்கொடியையெடுத்த மாறாத வெற்றியையுடைய ௮ம்மயிலாகிய வாகனத்தையுடைய செவ்வேளாககிய முருகனும் என்ற உலகங் காக்கும் வலிமை சிறந்த நால்வருள்ளும், மாற்றலரிய சினத்தால் நீ சிவபிரானைநிகர்ப்பாய்; வலிமையால் பலராமனை நிகர்ப்பாய்; புகழால் இகழ்வாசை ௮டும் திருமாலை நிகர்ப்பாய் ; நினைத்ததை முடிப்பதால் முருகனை நிகர்ப்பாய்; அவ்வாறு அந்நால்; வரையும் அவ்வக்குணங்களால் நீ நிகர்ப்பாய் ஆதலால், உன்னால் ஆகாததோர் அரிய செயலும் உளதோ? அதனால், இரவலராய் வருவார்க்கு அருங்கலங்களைக் குறைவின்றி ஈந்த, யவனர் நல்ல கலங்களிலே தந்த மணமிக்க தேறலைப் பொற்கலங்களிலே எந்தித்தினந்தோறும் பெண்டிர் கொடுப்பப் பருகி மகிழ்ச்சி மிக்கு அவ்வாறே இனிது வாழ்க, ஓங்கிய வாட்படை தாங்கிய நன்மாறனே, அகன்ற இடமுள்ள விண்ணகத்தில் பரந்த இருளை அகற்றும் சூரியன்போலவும் சந்திரன்போலவும் இவ்வுலகம் உள்ள காலம் எல்லாம் நின்று நிலைபெறுவாயாக.
அரசன் :-- புலவரேறே, நும்மால் ஆகும் உதவி இவ்வளவேயோ? இக்கருத்துக்கள் செய்யுளில் அமைவது சிறப்பாய் இருக்குமே! நுமக்கும் எமக்கும் பெயர் சிறப்ப எதிர்காலத்திற் பிறர் எண்ணி யியம்ப ஏற்றவுதவியாகவும் இருக்குமே!
நக்கீரர்:-- அவ்வாறே செய்யுளில் அமைத்துக் கூறுகின்றோம்; செவி சாய்ப்பாயாக:
“ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடந் றோனும்
கடல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல்வேந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வேய் யோனும்
மணிமயி லுயரிய மாறா வேன்றிப்
பிணிமுக வூர்தி யோண்செய் யோனுமேன
ஞாலங் காக்குங் கால முன்பிற்
றோலா நல்லிசை நால்வ ருள்ளும்
கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்
புகழொத் தீயே யிகழுந ரடுநனை முருகொத் தீயே முன்னியது முடித்தலின் ஆங்காங் கவரவ ரொத்தலின் யாங்கும் அரியவும் உளவோ நினக்கே யதனால் இரவலர்க் கருங்கலம் அருகா தீயா யவனர், நன்கலந் தந்த தண்கமழ் தேறல் பொன்செய் புனைகலத் தேந்தி நாளும் ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந் தாங்கினி தொழுகுமதி யோங்குவாள் மாற, அங்கண் விசும்பின் ஆரிரு ளகற்றும் வெங்கதிர்ச் செல்வன் போலவும் குடதிசைத் தண்கதிர் மதியம் போலவும் நின்று நிலைஇய ருலகமோ டுடனே.”[1]
அரசன், “உரை நடையைக் காட்டிலும் அருங்கருத்துக்களை அமைத்து அழியாது போற்றச் செய்யுள் நடையே சிறந்தது என்பது இதனால் விளங்குகின்றது. புலவரேறே, இவ்வுதவியைக் காட்டிலும் சிறந்த வுதவி வேறு என்னுளது? இங்கு நம் நாட்டிலேயே யிருந்து பரம்பரையாய்த் தமிழ்ப்பயிரை வளர்த்துவரும் நுமக்கு யாம் உபசாரம் கூறுவதும் குற்றமேயாம். இச்சிறு பொருளைப் பரிசிலாய் ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்," என்று கூறி ஆயிரம் பொன் பரிசில் உதவினன்.
பிறகு இனி ஆவனவற்றிற்கு வேண்டும் முயற்சி செய்யக் கருதிய அமைச்சரும் தண்டத் தலைவரும் பிறரும் அரசனிடம் உத்தரவுகள் பெற்றுக்கொண்டனர். அரசனும் எல்லோர்க்கும் விடை கொடுத்து, அரண்மனைக்குட் சென்றான்.II
சோழ மன்னனும் சேர-வரசனும், பாண்டியன் நன்மாறன் பெரும்படை திரட்டிக்கொண்டு தம்மோடு போர் செய்ய வருவதாய் அறிந்தனர். சோழன் கரிகாற் பெருவளத்தான் குடித்தோன்றல் போருக்குப் பின்னிடைவனோ ? இமயவரம்பன், வானவரம்பன் முதலிய சிறப்புப் பெயர்கள் பூண்ட சேரனும் சிறுமை பெறுவனோ ? இருவரும் தத்தம் படைகளைத் திரட்டினர்; தம்மிருவர்க்கும் பகையாய் வரும் பாண்டியனைத் தாமிருவரும் ஒன்று சேர்ந்தே எதிர்த்துப் போரியற்றத் துணிந்திருந்தனர். இச்செய்தியை ஒற்றர் மூலம் அறிந்த நன்மாறன், “தனித்தனி ஒவ்வோரரசரை வெல்வதைக்காட்டிலும், இருவரையும் ஒரு சேர வெல்வதே நமக்குச் சிறந்த வெற்றியும் புகழுமாம்,” என்று எண்ணினன்.
பாண்டிய சேனை விரைவிலே போர்க்குப் புறப்பட்டது. படைத் தலைமை பூண்ட வீரர் பலரும் தத்தம் அணிகளை முறையே வகுத்துக்கொண்டு முன்னே நடத்திச் சென்றனர். தண்டத் தலைவர் இன்ன இன்ன இடத்தில் இன்ன இன்ன படைஞர் இவ்வண்ணம் நின்று போர்புரிய வேண்டும் என்று ஆணை பிறப்பித்துக் கொண்டு பின்னே சென்றனர். புலவர் சிலர் உடன் வர, நன்மாறனும் போர்க்கோலம் பூண்டு கூழைப்படைக்கும் இடைப்படைக்கும் இடையிலே சென்றுகொண்டிருந்தான். வழியெல்லாம் இருந்த வயல்களிலும் தோட்டங்களிலும் பாண்டியன் படை யானைகள் வேண்டுமளவு தமக்குரிய உணவைக் கொண்டு மேற் சென்றன. வீரர்கள் வழியில் உள்ள ஊரவர் உபசரித்திடும் உணவை உட்கொண்டு செல்வா ராயினர். பாண்டிய நாட்டிலிருந்து இப்படையோடு புறப்பட்டு வந்த பண்ட சாலை வண்டிகளும் படைஞர்க்கு வேண்டுவன தந்தன. இவ்வாறு இவர்கள் சென்று சேரர் படைஞரும் சோழர் படைஞரும் இவர்களை எதிர் பார்த்திருந்த போர்க்களத்தைக் குறுகினார்கள்.
பாண்டியன் நன்மாறன் ஒரு தூதனை யழைத்து, “சேரனும் சோழனும் நம் அடியில் வந்து பணிந்து, நம்மைத் தமிழ் நாட்டுப் பேரரசன் என அங்கீகரிக்கின்றனரா என்று கேட்டு வருக,” எனக் கூறி அனுப்பினன். அவர்கள் அத்தூதனிடம், ”நாங்கள் போர் என்று கேட்ட வளவில் அஞ்சிப் பதுங்கும் அடிமைகளல்லேம்; எங்கள் முன்னோர் பெருமையைப் போற்றவும் எங்கள் நாட்டைப் பாதுகாக்கவும் எங்களில் ஒரு வீரன் உயிரோடு இருக்கும் அளவும் போர் புரிவோம்; படைகளும் படைஞரும் உள்ளவளவும் எவர்க்கும் பணியோம். சமாதானமாகக் கருதி எம்மையும் தம்மோடு ஒப்பாக மதித்து நட்புச் செய்து கொள்ள நும்மரசர் கருதுவாராயின், எமக்குச் சம்மதமே அப்படியன்றி, யாம் அவர்க்குக் கீழ் அடங்கித் திறையளக்கும் நிலைமையை உவப்போடு ஏற்றுக்கொள்வோம் என அவர் எண்ணியது தவறென யாம் தெரிவிக்கின்றோம்,” என்றனர்.
இச்செய்தியைத் தூதன், பாண்டியன் நன்மாறனிடம், வந்து தெரிவித்தான். அவன் அது கேட்டதும் போர் தொடங்குக என ஆணையிட்டான். போர் முழக்கம் இப்படையில் முரசு எக்காளம் முதலிய வாத்தியங்களால் எழுந்தது. கொடிகளும் யானைகள்மீது பிடிக்கப்பட்டன. வீரர் படைக் கலங்களை வீசத் தொடங்கினர். இதனை அறிந்த சேர சோழரும் தம் படைகளை ஊக்கி முன்னே செலுத்தினர். போர்க் களத்தின் நடுவிலே இரு படைகளும் கைகலந்தன. இரவுக்காலத்தில் ஓய்வு பெற்றுக் குடை கொடி முதலிய ஆடம்பரங்களை இரு திறத்தாரும் உரிய இடங்களில் நிறுத்திக்கொண்டு ஏழு நாட்கள் போர் புரிந்தனர். இரு திறத்துப் படைஞரிலும் எண்ணிறந்தார் வீர சொர்க்கம் புகுந்தனர்.
பாண்டிய நாட்டுப் படைஞர் போர் வெறி கொண்டு மேன்மேலும் பாய்த லாயினர். சேரர் படையும் சோழர் படையும் சிறிது தளர்ந்தன. அப்படைஞரின் தலைவரும் தம்மால் இயன்றவளவு அவரை ஊக்கி முன்செலுத்தினர். உடம்பெங்கும் அம்பு துளைத்து ஆயிரம் புண்களாய் இருக்கும் போது மனோ தைரியமும் ஊக்கமும் எவ்வளவிருந்தும் என் செய்யலாம்? மேன் மேலும் பாய்ந்து சென்ற சிறந்த வீரர் பலர் விழுப்புண் பட்டு மாய்ந்தனர். தம் படையில் நேர்ந்த இந்நிலையைக் கண்டு சேரனும் சோழனும் சிந்திக்க லாயினர். இவ்விருவரும் தாமே முன்னணியில் வந்து போர் புரிந்தனர். பாண்டியன் நன்மாறன் அவ்விருவரொடும் ஒருவனாய் நின்று போர் செய்தனன். ஒரு நாள் முழுவதும் போர் நிகழ்ந்தது. பாண்டியன் சிறிதும் தளர்ச்சி யடையவில்லை. சேர சோழர் அம்பு துளைத்த புண்கள் பெருகச் சோர்வு அடைந்தனர்; இரவிலே பாசறை யடைந்து, "இறைவன் திருவருள் என்ன ஆகுமோ! நாளைக்கும் முயன்று பார்ப்போம்!" என்று பேசிக் கொண்டிருந்தனர்.
இவர்கள் இவ்வாறு இருக்கையில், பாண்டியர் படையிலிருந்து ஒரு தூதன் சேர சோழர் பாசறைக்கு வந்தான். அவன் தனது அரசர் ஆணையென்று பின் வரும் செய்தியைக் கூறினன்:
"மாட்சி மிக்க மன்னர்காள், நாம் முதற்கண் அமைதியை நாடினாம். நீவிர் போர்க்குத் துணிந்தீர். எத்துணைப் படை வீரர்களை இழந்தீர்! எத்துணை வீரர் குடிகளை ஆண் மக்கள் அற்றவையாய்ச் செய்தீர்! நுமது மனவுறுதியால் வந்த ஊதியம் என்ன? ஓர் ஆண் மகன் உள்ள வளவும் போராடுவோம் என்றீர்! இன்னும் அத்துணிவு உம் உள்ளத்தில் உள்ளதா? இந்த ஒரு வார காலம் போர் செய்ததால் நீவிர் அறிந்த உண்மை யென்ன? இன்னும் எத்தனை மாதங்களாயினும் யாம் போரியற்றத் துணிந்திருக்கிறோம். ஆயினும், வீணாக நும் இருவருடைய பிடிவாதத்தால் அநேக ஆயிரவுயிர்கள் அழிவது எமக்குத் திருப்தி யளிக்கவில்லை. இப்பொழுதும் நும்மிருவர்க்கும் மரியாதையான நிலைமை தருகின்றோம். இன்று எம்மை வணங்கி எமக்குக் கீழ் அடங்குவதால் உமக்கு வரும் இழிவென்னை? தமிழ்நாடு முழுமைக்கும் ஒரு பேராசன் இருந்து அரசாள்வது பல சிற்றரசர் தனித்தனி சிறு சிறு நாடுகளை ஆள்வதைக்காட்டிலும் சிறப்பன்றோ? அயல் நாட்டவர் நம்மை எதிர்க்க வருவராயின், நாம் ஒரு நாட்டவராய் இருப்பதை அறிய நேரிடுமன்றோ? நாம் ஓர் அரசும் ஒரு நாடுமாய் இருப்பதால் வட நாட்டிலிருக்கும் பிற அரசுகளையும் வென்று அடக்கல் எளிதாமன்றோ? நம் முன்னோர் எம் முன்னோர்க்குக் கீழே அடங்கியிருந்தவரலாறுகளும் உண்டு என்பது நீவிர் அறியாததன்றே? ஆகையால், இன்னும் அதிக நஷ்டம் அடையாமல் நாட்டில் நன்கு வாழ எண்ணம் இருப்பின், இன்று இரவே சமாதானத்துக்கு வரலாம். இல்லையென்றால், நாளைக் காலையில் மறுபடியும் போர்க்கு வந்து, எது விளையுமோ அதனைப் பெறலாம். தம் பெருமையைக்காட்டிலும் நாட்டின் நன்மையைப் பெரிதாய்க் கருதி அமைதிக்கு வருவீர்கள் என்பதே எமது நோக்கமாம்.
சோழனும் சேரனும் இவையனைத்தையும் கேட்டுச் சிறிது நேரம் தனித்து யோசனை செய்து ஒரு தீர்மானத்துக்கு வந்தனர். பிறகு தூதனை முன்னே யனுப்பித் தாமும் பின்னே புறப்பட்டுப் பாண்டியன் பாசறையடைந்தனர். இவ்வாறு நேரிடும் என்பதை முன்னே எதிர்பார்த்திருந்த நன்மாறன் தனது பாசறை வாயிலில் வந்து நின்று இருவரையும் முக மலர்ச்சியோடு வரவேற்றான்; உள்ளே அழைத்துச் சென்று, அவ்விருவர்க்கும் தக்க ஆசனங்களை அளித்துத் தானும் தன் ஆசனத்தில் அமர்ந்தான். பாண்டிய நாட்டுத் தண்டத் தலைவரும் அங்கு இருந்தனர். பிறகு பின் வரும் சம்பாஷணை நிகழ்ந்தது:
பாண்டியன்:- மன்னர்காள், நும் வரவு நல்வரவாகுக. நுமது நாட்டின் நலத்தைக் கருதி எமது வேண்டுகோளைப் பொருட்படுத்தியதற்காகப் பெரிதும் உம்மைப் பாராட்டுகின்றோம்.
சோழன்:- மன்னர் பிரானே, நாட்டின் நலத்தைக் கருதுவதே நம் நாட்டம் என்பதை நான் கூற வேண்டா! மானம் படவரின் வாழாமை யினிதன்றோ? வணங்கா முடி மன்னராய் இருக்கும் வாழ்வு ஒரு பேரரசன்கீழ் அடங்கி யிருப்பதைக்காட்டிலும் சிறந்த தன்றோ?
பாண்டியன்:--ஒரு பேரரசன் கீழ் அடங்காவிடினும், ஒரு பேரரசனோடு சமாதான உடன்படிக்கை செய்துகொண்டு ஒருவர்க்கொருவர் வேண்டும்போது உதவத் தக்க நிலையில் சகோதர பாவம் கொண்டாடலாமன்றோ? ஒவ்வொரு சிறு நாடும் தனித்தனி தலைமை கொள்வதாயின், அயலவர் எளிதிலே அழித்துவிடக் கூடும் அன்றோ? தமிழ் வழங்கும் நாடு முழுவதும் அவ்வாறு அழிந்துபோகாமல் இருக்கவும் நாட்டுமக்கள் அடிக்கடி போராற் கலங்காதிருக்கவும் என்ன செய்யலாம் என்பதை நீவிர் கருத வேண்டும்.
சேரன்:- தமிழ் மன்னரே, தமிழ் வழங்கும் நாடு முழுவதும் ஒரு தலைமைக்குள் அடங்கி ஒரே முறையான அறநெறியைக் கடைப்பிடித்து வாழ்வது நலமே. ஏன்? இப்பாரத பூமி முழுதும் ஓர் அரசுக்குள் வரக் கூடுமாயின், அதுவும் நலமே. ஆயினும், அது சுலப சாத்தியம் அன்றே! பல வகை வேறுபாடுகள் நமக்குள் உண்டே!
பாண்டியன்:- நாம் அனைவரும் அறநெறி யொன்றாக அரசியல் ஒன்றாக ஓர் அரசு கொள்ளுதல் எவ்வாறு சிரமமாம்? நம்முடைய மொழியும் குலமும் மதமும் தெய்வமும் வாழ்வும் நோக்கங்களும் எல்லாம் ஒன்றேயன்றோ? இவ்வாறு இருக்க, நாம் நம் தமிழ் நாட்டுக்கு ஒரு தலைமையை நாட்ட வியலாது என்று கூறலாகுமா?
சோழன்:-- சிறிது சிரமத்தின்மேல் நிறைவேற்றலாம். இப்பொழுது நாங்கள் இருவரும் நுமது படையோடு எம் படையைச் சேர்த்து நட்பாளர் ஆய்விடுகின்றோம். நாம் மூவரும் ஒன்றாய்விட்டோம் என்று அறிந்தாற் பிற குறுநில மன்னர் தாமே வந்து வணங்கிவிடுவார். வேறு போரியற்ற வேண்டும் அவசியமும் இராது. தமிழ் நாடு முழுமைக்கும் தலைவராகியிருக்கும் பெருமை எம்மிருவரையும் ஒருவராய் நின்று எதிர்த்து வணங்க வைத்த உமக்கே ஏற்றதாம்.
சேரன்:- எனக்கும் அது சம்மதமே. அதற்கு அடையாளமாக எம் நாட்டுக்குரிய விற் கொடியைக் கயற்கொடியோடு சேர்க்க அனுமதியளிக்கின்றேன்.
சோழன்:- எனது சம்மதத்தையும் புலிக்கொடியை அதனோடு சேர்ப்பதால் நாடறிய வெளியிடுகின்றேன்.
பாண்டியன்:- இனித் தமிழ் நாடெங்கும் நலம் பெருக நாம் மூவரும் ஒரே மனத்தோடு அற நெறி கடைப்பிடித்து அரசாள வேண்டும் என்பதே எமது நோக்கம். குறுநில மன்னர் விரைவிலே வந்து பணிவர். அவரைப்பற்றி நாம் அதிகம் கவனிக்க வேண்டா. சந்தர்ப்பம் நேரிடும்போது வட நாட்டவரோடு போர் புரிந்து வெற்றி பெற நாம் அனைவரும் சித்தமாய் இருக்க வேண்டும். நீவிர் இருவீரும் இனி விடை பெறலாம்.
சேரனும் சோழனும் உரிய மரியாதைகளைப் பெற்றுத் தம் பாசறையடைந்து அன்றோடு போர் முடிந்து சமாதானம் நிலை பெற்றதாக விளம்பரம் செய்வித்தனர். படைஞர் எல்லாம் முழுச்செய்தியையும் அறிந்து தாம் பெரிய தேர்ப் படையிலே உறுப்பின ரானதைப்பற்றி மகிழ்ச்சி மிகப் பெற்று, அன்று இரவைக் கவலையற்ற உறக்கத்திலே கழித்து மறுநாட் காலையில் தத்தம் ஊர்க்குத் திரும்பினர். மன்னர் இருவரும் பரிவாரங்களோடு தத்தம் அரசிருக்கைகட்குப் புறப்பட்டனர். பாண்டிய மன்னனும் படையோடு பாண்டிய நாடு சென்றான். போர்க்களத்திற்கு அரசனோடு வந்திருந்த பலரும் மதுரைக்குத் திரும்பினர்; இரண்டு தினங்களில் மதுரையையடைந்தனர். நாட்டு மக்களுட் பெருமை மிக்க அறிவுடையோர் பல்லோர் வெற்றி பெற்றுத் திரும்பி வரும் தம் மன்னனை வரவேற்று உபசரித்தனர்; வீதிகளிலெல்லாம் தோரணங்களும் கொடிகளும் கட்டிப் பாண்டியன் நன்மாறனை வாவேற்றனர். பாண்டிய மன்னன் தண்டத் தலைவரோடும் புலவர் பெருமக்களோடும் அமைச்சரோடும் அரண்மனையடைந்து ஆத்தான மண்டபத்தில் அரியணை மீது அமர்ந்தான். அங்கு வந்தடைந்த அனைவரும் தத்தமக்குத் தகுந்த ஆதனங்களில் அமர்ந்த பிறகு, அமைச்சர் தலைவர் எழுந்து பின் வருமாறு பேசினர்:
"அரசர் தலைவரே, அறிஞர்களே, இன்று நம் நாட்டின் சரித்திரத்தில் ஒரு சிறந்த நாள் ஆகும். சில தினங்களின் முன் நாம் இங்கே ஆலோசனை செய்த விஷயம் நன்கு நிறைவேறியுள்ளது. நமது அரச பரம்பரையினர், பூர்வத்தில் இப்பாரத பூமி முழுவதையும் அடக்கி யாண்டு, ஏக சக்கராதிபத்தியம் நடாத்திய துண்டு சில காலம் நம் அரசரின் ஆதிக்கம் குறைக்திருந்தது. பண்டைய வரலாறுகளை யறிந்த எமக்கு அது பெரிதும் வருத்தம் தருவதாயிருந்தது. அவ்வருத்தத்தைத் தவிர்க்கப் பிரகிருதத்தில் நம் அரசராய் இருக்கும் வழுதியர் குலத் தோன்றல் வேண்டுவன செய்யத் தொடங்கி யிருக்கின்றார். மும்மண்டலங்களாகிய தமிழ் நாடு முழுமைக்கும் தலைவராய் முக்கொடியும் ஒன்றாக்க வல்ல வேந்தராய் நம் அரசரை நாம் பெற்றது நம்மனோர் பாக்கியமே. இப்பொழுது நடந்து முடிவு பெற்ற போரின் பயனாக நமது கயற்கொடி, விற்கொடியையும் புலிக்கொடியையும் தன்னுள் அடக்க வல்லதாயிற்று. இவ்வாறே இனி நாடு முழுவதும் சென்று, இமய மலையில் நமது நாட்டுக் கயல் பொறிக்கப்படுமாறு இறைவன் திருவருள் பொழிக.
உடனே மங்கள வாத்தியங்கள் பல முழங்கின. அங்கு வந்து நிறைந்திருந்த அறிஞரெல்லாம் புலவர் குழுவை நோக்கினர். வாத்திய முழக்கம் நின்றதும், மதுரை மருதன் இளநாகனார் என்ற புலவர் எழுந்து. பேசியதன் சுருக்கம் வருமாறு:
"மகா மேரு மலையாகிய வில்லிலே வாசுகியாகிய நாணைக் கோத்து, ஒப்பற்றதோ ரம்பைச் செலுத்தி, மூன்று மதில்களையும் எய்து, மிக்க வலிமையுடைய தேவர்க்கு வெற்றி தேடிக் கொடுத்த கறைமிடற்றண்ணலது அழகிய நெற்றியில் விளங்கும் ஒரு கண் போலச் சேர சோழரைக்காட்டிலும் மேம்பட்டு விளங்கும் நன் மாற, மிக்க சினமுடைய போர்க்களிறுகளும், விரைந்து செல்லும் குதிரைகளும், நெடுங்கொடிகளைக் கட்டிய பெரிய தேர்களும், உரம் மிகுந்த போர் விருப்பங் கொண்ட வீரரும் என்ற இந்நாற்படையால் சிறப்புற்றதாயினும், அரசினது வெற்றி அறநெறியை முக்கிய காரணமாய் உடையதாம். ஆகையால், இவர் நமர் என எண்ணி அவர் செய்த குற்றத்துக் கேற்ற தண்டம் விதியாமலும், இவர் பிறர் என எண்ணி அவரிடம் உள்ள குணத்தை மறந்து அநீதி இயற்றாமலும், சூரியன் போன்ற வெந்திறல் ஆண்மையும் சந்திரன் போன்ற குளிர்ந்த பெருங்குணமும் மேகம் போன்ற வண்மையும் என்ற மூன்று குணங்களையும் உடையவனாக இல்லாதவர் இல்லையாம் படி நெடுந்தகாய் , ஆழ் நீர்க்கடலின்கண் வெண்மை நுரைத் தலையுடைய அலைகள் மோதும் திருச்செந்தில் நகரின் முருகவேள் திருக்கோயிற் றுறையில் பெருங்காற்றாற் றிரண்டு குவிந்த அநேகம் வடுக்களையுடைய மணல் மேட்டிலுள்ள மணலைக்காட்டிலும் பல காலம் வாழ்வாயாக.
"அரசே, சிவபிரானுக்குள்ள மூன்று கண்களில், மேம்பட்டது சிறந்தது என்ற கருத்தாலன்றே சந்திரன் சூரியன் என்ற மற்ற இரண்டும் இடக்கண் வலக்கண்ணாய்க் கீழிருக்கக் கனற்கண் நெற்றியில் நிலைபெற்றது. அதுபோல, சேர சோழர் வணங்கத் தக்க மேம்பாடு பெற்ற நீ, உலகம் தொழத் தக்க பெருமை பெற்றனை யன்றோ? படைப் பெருக்காற் பிறரை வென்று உயர்நிலை யடைந்தனையாயினும், அயல் நாட்டவரையும் நினது ஆளுகைக்குள் அடக்கியிருக்கும் இக்காலத்தில், நமர் பிறர் என்று அற நெறிக்கு மாறாக ஆதரிப்பதும் ஒறுப்பதும் செய்வாயாயின், அரசினும் பெரிதாகிய அறத்தெய்வம் தினக்குப்பகையாம். ஆகையால் அறநெறியைக் கடைப்பிடித்து நாற்படை வலியைக்காட்டிலும் அதுவே அரசுக்குச் சிறந்த வலியெனக் கருதி நின்கீழ் வாழும் எவரும் நின்னைத் தாயும் தந்தையும் என மதிக்கத் தக்கவாறு அரசியற்றுவாயாக.
அரசற்கு ஆண்மை எவ்வளவு சிறந்ததோ, அவ்வளவிற் சிறிதும் குறையாது கருணையும் வண்மையும் வேண்டப்படுவனவே. ஆகையால், யாம் நின்னை எல்லா நற்குணங்களும் நிரம்பி நாடனைத்துக்கும நலம் புரிந்து வாழ்கவென வாழ்த்தினாம்."
நக்கீரர்:-- ஐய, அன்பரே, இவ்வாழ்த்தைச் செய்யுளாய்ச் செய்திடின், தேயம் எங்கெங்கும் உள்ள அரசர்க்கும் ஓர் அறவுரையாய் அறிவுரையுமாய் இலங்குமே! மருதனிள நாகனார்:- அவ்வாறே செய்கின்றோம்:
“ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல
வெந்துமேம் பட்ட பூந்தார் மாற,
கடுஞ்சினத்த கொல்களிறும்
கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும்
நெஞ்சுடைய புகல் மறவருமென
நான்குடன் மாண்ட தாயினு மாண்ட
அறநெறி முதற்றே யரசின் கொற்றம்;
அதனால், நமரெனக் கோல்கோடாது
பிறரெனக் குணங்கொல்லாது
ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்
திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்
வானத் தன்ன வண்மையும் மூன்றும்
உடையை யாகி இல்லோர் கையற
நீ,நீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர்
வெண்டலைப் புணரி யலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன்றுறைக்
கடுவளி தொகுப்ப வீண்டிய
வடுவாழ் எஃகர் மணலினும் பலவே.[2]
III
போர் என்பது இருவகையாம். அவற்றை அறப்போர் மறப் போர் என்பர். பாண்டியன் நன்மாறன் செய்த போர் எவ்வகையைச் சேர்ந்தது என்பது ஆராய்ச்சிக்குரியது. அவன் தன் நாடு கல்வி செல்வங்களாற் பெருகவும், நில வளமும் புனல் வளமும் பெற்றோங்கவும் வேண்டுவன செய்யக் கடமைப்பட்டவனே. ஆயின், அதன்பொருட்டு அயலரசர்களோடு போர் இயற்றி, அவர்கள் தலைமையைக் குறைக்க வேண்டும் என்ற அவசியம் என்ன? எவரேயாயினும், அவரவர் தத்தம் உரிமைகளைப் போற்றி அமைதியோடு வாழ்க என்று விட்டுவிடுவதன்றோ அறமாவது என்று கேட்க இடம் உண்டு. சேர சோழரோடு நடந்த சம்பாஷணையில் இக் கேள்விகளுக்கு ஒருவாறு விடை கூறப்பட்டுள்ளதாயினும், இங்கும் இரண்டொரு சமாதானங்கள் கூறப் படும்:
பாரத பூமி பெரியதொரு கண்டம். அதில் உள்ள பேரரசுகளே ஐம்பத்தாறு என்பர். அவற்றுள் அடங்கிய சிற்றரசுகள் நூற்றுக் கணக்காக இருக்கும். வேளிரும் பிற குறுநில மன்னரும் இத்துணையர் என எண்ணல் எளிதன்று. ஒவ்வோரரசும் தனித்தனி தலைமை பூண்பது அவ்வவ்வரசுக்குப் பெருமையை விளைக்குமேயாயினும், அவை ஒன்றோடொன்று போர் இயற்றாமை அயலவர் போரெதிர்ந்தால் ஒன்று சேர்ந்து தாங்குதல் முதலிய உடன்படிக்கைகள் செய்துகொண்டிருந்தாலன்றி இத்துணை யரசுகள் இருப்பதால் விளையும் நன்மையைக்காட்டிலும் தீமை அதிகம் அன்றோ? பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பாரத பூமி முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆண்டதால், நாடெங்கும் ஒரு மொழி தலையெடுத்தோங்கவும் அற நெறி ஒரு படித்தாய் எங்கும் ஆணை நடத்தவும் செய்து அரசியற்றினன். அவ்வாறு இல்லாத பிற பாண்டியர், தாம் இருந்த இடமும் பெயரும் பிறர் அறியா வண்ணம் மறைந்தனர். இவ்வுண்மையை யுணர்ந்த நன்மாறன் போராற் பிறரைத் தனக்குக் கீழ் அடக்கி நாடெங்கும் ஒரு குடையும் ஒரு கொடியும் ஓர் அரசும் ஆக்கத் துணிந்தது பொருத்தமேயன்றோ?
மும்மலையும் முந்நதியும் முப்பதியும் முக்கொடியும் மூவரசும் கொண்ட மூன்று நாடுகட்கும் நன்மாறனே தலைவனாயினன். எஞ்சியிருந்த சில தமிழ வரசரோடு போரியற்றத்துணிந்து தண்டத்தலைவர் ஆணைக்கடங்கும் பெரும்படை யொன்றை அனுப்பினன். அப்படை தமிழ் வழங்கும் நாடுகளில் தனித் தலைமை கொண்ட ஒவ்வொரு சிறு நாட்டையும் தாக்கிப் போர் செய்து சென்ற விடமெல்லாம் சிறப்பும் வெற்றியும் பெற்று, நாடு நோக்கி வந்தது. இவ்வாறு போர் செய்து அடக்கப்பட்ட நாடுகளில் உள்ள பல புலவரும் தத்தம் நாடுகளில் தாம் தாம் காண நேரிட்ட போர்த் திறங்களைப்பற்றிப் புனைந்து பாடுவாராயினர். அவர் தம்மை யாதரித்த சிறு சிறு தலைவர்க்கு நேர்ந்த நஷ்டத்தைக் கண்டு பெரிதும் மனமுளைந்தனராயினும், தமக்கெலாம் பெருந்தலைவனாகத் தமிழ் மன்னனாகப் பேரரசன் ஒருவன் அமைந்ததைக் கண்டு மகிழ்ந்தனர். அவ்வண்ணம் மகிழ்ந்த புலவர்களுள் ஒருவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் என்பவர். அவர் பாண்டிய நாடு நோக்கி வெற்றியோடு திரும்பி வரும் படைகளோடு தாமும் நன்மாறனைக் காண வந்தனர்.
போர்ச் செய்தி இவ்வாறு நன்று நிறைவேறியது கேட்ட பாண்டியன், வேறொன்றிலும் நினைப்பிலனாய், மேலும் மேலும் போரியற்றி அயல் நாடுகளையும் வெல்ல இயலுமோ என்று ஆராயும் கருத்தினனாய், அரசவையில் அமர்ந்திருந்தான். அமைச்சரும் தண்டத் தலைவரும் அரசன் கருத்துக்கு மாறுபடா நிலையில் ஆலோசனை கூறிக்கொண்டிருந்தனர். அரசன் இந்நிலையில் இருக்கையிற் காரிக்கண்ணனார் அரண்மனை வாயிலுக்கு வந்து, தமது வருகையை யவனர் மூலம் தெரிவித்தனர். புலவர்களை எக்காலத்தும் வரவேற்கும் இயல்புடையனாய் இருந்தானாகையால், மன்னன் அவர்க்கு அங்குவர ஆணையனுப்பினன். பல திறப்பட்ட வாயில்களிலும் உள்ள காவல்களைக் கடந்து, அரசன் அமைச்சரோடு இருந்த ஆலோசனை மண்டபத்தை அடைந்தனர் புலவர். சோணாட்டுப் புலவராகையால், சோழனையே மனமார வாழ்த்தும் இயல்பு உள்ளவராய் இருத்தல் பொருத்தமே யாயினும், தமிழ் நாடு முழுமைக்கும் தலைமை பூண்ட தமிழ் மன்னனிடம் தம் அன்புரிமையைத் தெரிவிக்கச் சந்தர்ப்பம் அதுவே எனக் குறித்து, அவர் அங்கு வந்தார். அரசன் அவரைக் கண்ட தும், உவப்போடு வரவேற்று, நக்கீரனாரையும் மருதனிள நாகனாரையும், பிற புலவர்களையும் அழைத்து வருமாறு ஆட்களை யனுப்பினன். அவர்களும் சமீபத்திலேயே யிருந்தன ராகையால், விரைவிலே அங்கு வந்தடைந்தனர். மந்திராலோசனை மண்டபமே புலவர் அவைக் களமாக மாறியது. அங்குப் பின் வருமாறு சம்பாஷணை நிகழ்ந்தது:
நன்மாறன்:--புலவரேறே, வருக! வருக!! நும் வரவு நல்வரவு ஆகுக! நமது படைஞர்கள் அயல் நாடுகளை வென்று புகழ் பெற்று வந்துள செய்தியைக் கேட்ட இவ்வமயமயத்திலே நும்மைக்காண நேரிட்டது நமது பாக்கியமென்றே எண்ணுகிறோம்.
காரிக்கண்ணனார்:- இவ்வமயத்தில் நின்னைக் காண நேர்ந்தது எமக்கும் பெரும்பேறேயாம். தமிழ் நாடெங்கும் கயற்கொடி பறக்க வைத்த நின்னைக்கண்டு பாட வாய்த்த இந்நாளே எம் வாழ்வில் நன்னாள்.
நக்கீரனார்:--புரவலரே, புலவரே, இவ்வரும்பேரமயத்துக் கேற்பப் புலவர் புரவலரைப் போற்றுவது பொருத்தமே யன்றோ?
மருதனிள நாகனார்:-சோழ நாட்டுப் புலவர் இவ்வாறு பாண்டியர் வெற்றியினைப் பாராட்டுவாராயின், இவ்வமயத்துக்கு மிகவும் பொருத்தமாம்.
காரிக் கண்ணனார்:-- எம் நாட்டின் தனித் தலைமையை இழந்தேம் ஆயினும், எமக்குத் தமிழ் மன்னன் தலைமை கிடைத்தது. வழுதியர் பிரானே, அளக்கலாகா அருங்குணம் அமைந்த திருமாலைப்போல நீயும் எம்போற் புலவராவார்க்கு இனியனாயும், அடைதற்கெளியனாயும், நின்பகைவர்க்கு வலியனாயும் அரியனாயும் இருக்கின்றாய். நினது புகழை அளந்து பாட வல்லுநர் சிலர் உளரேல், அவர் வாக்களவில் நின் புகழ் அடங்குவதோ? பாட அறியாராயினும், அவர் அன்போடு அமைத்த பாடலின் அளவில் நின் புகழ் அடங்குவதும் உண்டே! நின்னிடம் யாம் கூறுவது ஒன்று உண்டு. நின் படைஞர் பிறர் நாடு கவர்ந்த பெருமையால் மகிழ்ந்திருக்கும் இவ்வமயத்தில் அது கேட்டற்குரிதாம்! பாண்டிய நாட்டு மறவர்கள் அயல் நாடுகளை வென்று அடக்கும்போது, அப்பகைவர் நாடுகளில் உள்ள சாய் கதிர்க் கழனிகளைக் கவர்கின்றனர்; பெரிய ஊர்களிலே தீயிடுகின்றனர். மின்னொளியுடைய நின்னுடைய வேற்படை பகைவரை அழிக்கும். இவ்வாறெல்லாம் நிகழினும் நிகழ்க. ஆயினும் அவ்வந்நாடுகளிற் புறத்துள்ள காவற் காடுகளில் நின்று நிலைத்த கடி மரங்களை வெட்டும் வழக்கத்தை நிறுத்தி விடுமாறு ஆணையிட வேண்டுகிறோம். ஏனெனில், நினது போர்க் களிறுகள் தம்மைக் கட்டி வைத்த கட்டுத் தறிகளுள் அடங்கி நில்லாது அவற்றை முறித்துவிடு மாகையால், அவ்வாறு முறித்துக்கொண்டோடும் களிறுகளைக் கட்டி வைக்க மேற்குறித்த கடி மரங்கள் உதவு மன்றோ?
நக்கீரனார்:-- புலவரேறே, நீவிர் கூறுவதைக் கவனித்தால் நம் நாட்டுப் படைஞர் அயல் நாடுகளிலே நெல் விளை கழனிகளைப் பாழ்படுத்தி ஊர்களிலே தீயிட்டு அழித்துப் பகைவரை வென்று வந்துள்ளார் என்றும், அநேக இடங்களிற் காவற் காடுகளில் உள்ள கடி மரங்களையும் வெட்டியிருக்கிறார்கள் என்றும் அறிய நேரிடுகிறது.மருதனிள நாகனார்:- அந்நாடுகளுக்கு இனிமேற் கடி மரங்கள் வேண்டுவதில்லை. நம் அரசர் தலைமையின் கீழ் அடங்கியுள்ள நாட்டை எதிர்க்கப் பகைஞர் இருக்கவியலாதாகையால், பகைவர் வருகையை அறிதற் பொருட்டு உதவுவதாகிய கடிமரம் இனிவேண்டியிராதன்றோ? நம் அரசர் ஆணை செல்லும் இடங்களில் அவர் ஆணையே அறந் துணையாகக் காவல் செய்யும் ஆகையால், காவல் மரமாகிய கடி மரம் வேண்டுவதில்லை.
காரிக் கண்ணனார்:- ஆயினும், நாம் அமைத்த கருத்தையும் சிறிது கவனிக்க வேண்டுகிறோம். இவர்கள் கடி மரத்தைத் தடிவராயின், தமிழ் நாட்டரசின் படையில் உள்ள களிறுகள் கட்டுத் தறியின்றிக் காட்டில் ஓடிவிட நேரிடும் அன்றோ?
நன்மாறன்:- சோழ நாட்டுப் புலவராகிய நீவிர் கூறிய கருத்தும் நம் நாட்டுப் படைக்குப் பெருமையே விளைக்கின்றது, ஆகையால், நம் படைஞர் பெருமை எதிர் காலத்தும் அறியலாம்படி தாம் கூறிய பொருள் அமையத் தக்கது என எண்ணுகிறோம்.
நக்கீரனார்:- அன்பரே, நம்மனோர் பெருமை எதிர் காலத்து வழங்க வேண்டுமாயின், இத்தகைய கருத்துக்கள் செய்யுள் உருவம் பெறலே சிறப்பாம். நீவிர் இங்குப் பேசிய பேச்சைப் பிற்காலத்தார் வேறு எவ்வழியால் அறிய வியலும்?
மருதனிள நாகனார்:- புலவர் பேசியதே செய்யுள் போல இருந்தது. செய்யுள் என்பது, உள்ளக் கருத்தை ஒளியாது உலகிற்கு உணர்த்துவதற்கு உள்ள ஒரு வழிதானே! காரிக் கண்ணனார்:-- நீவிர் எல்லீரும் கருதுமாறு செய்துவிடுகின்றோம். அரசரேறே, இச்செய்யுளை யேற்றுக் கொள்க:
“வல்லா ராயினும் வல்லுந ராயினும்
புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன
வுரைசால் சிறப்பிற் புகழ்சால் மாற,
நின்னொன்று கூறுவ துடையேன் என்னெனில்
நீயே, பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட்
டிறங்குகதிர்க் கழனிநின் னிளையருங் கவர்க
நனந்தலைப் பேரூர் எரியும் நக்க
மின்னுநிமிர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉங்
கடிமரந் தடித லோம்புநின்
நெடுநல் யானைக்குக் கந்தாற் றாவே."[3]
நக்கீரனார்:- நாம் கூறிய கருத்துக்களை ஒருவாறு ஏற்றுக்கொண்டு மறுத்தது போலச் செய்யுள் அமைந்திருக்கிறது.
நன்மாறன்:-புலவரேறே, நும் கருத்து நன்கு அமைந்துளது. இச்சிறிய பொருளைப் பரிசிலாகப் பெறுக.
காரிக் கண்ணனார்:- அன்போடு புலவர்க்கு உதவும் அருங்குணத்துப் பெருந்தகைமை வாய்ந்த அரசாகையால், நீ தருவது எவ்வளவிற்றேயாயினும், நமக்கு உவப்பே விளைக்கும். இனி யாம் விடை பெற்றுக் கொள்கிறோம். நன்மாறன்:- அவ்வாறே போய் வருக. நீவிர் இருக்கும் நாட்டில் தமிழ்ப் பயிரை வளர்க்கும் திருப்பணி நுமதேயாம்.
நக்கீரனார்:--
‘உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.'
என்பர் பெரியோர்.
மருதனிள நாகனார்:--
'தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.'
என்பதும் பெரியோர் திருவாய் மொழியே.
நன்மாறன்:- அமைச்சர்காள், பெரும்புலவர்காள், தண்டத் தலைவீர், நாமோ அயல் நாடுகளோடு போர் தொடங்கி ஒவ்வொரு நாடாக நம் ஆளுகைக்குள் அடக்கத் தொடங்கி விட்டோம். இதனால், எத்துணையோர்களின் மனக் கலக்கத்தை விளைப்போமோ! எத்துணையோரது மன மாறுபாட்டைத் தேடிக் கொள்வோமோ? எது விளையினும் விளைக. நம்மால் இயன்ற வளவுக்கும் ஆளுகைக் கடங்கிய நாட்டுள் வாழ்வார் யாவரேயாயினும், அவர்க்கு நன்மை புரியவே எண்ணினோம். இனியும் மேலும் மேலும் போர் புரியவே நேரிடுமாகையால், சமாதான காலத்தில் நடைபெறக் கூடிய சில காரியங்களை இனி நாம் கவனிக்க வியலாது, சங்கத்தையும் சங்கப் புலவரையும் நாம் தக்கவாறு ஆதரிக்கின்றோம் என்ற எண்ணம் நமக்கும் இல்லை; புலவர்க்கும் இல்லை. நம்மைத் தேடி எவரேனும் புலவர் வந்தால், வந்த அவசரத்தில் ஏதாவது மரியாதை செய்து அனுப்பு கின்றோமே யல்லாமல், நூற்றுக் கணக்கான புலவர்களைக் கூட்டி நூல் இயற்றவும் உரை செய்யவும் நூலாராய்ச்சி செய்யவும் உதவி செய்யக்கூடிய நிலையில் நாம் இப்போது இல்லை. நமது குலத்தினரில் முன்னிருந்தோரிற் சிலர் செய்யுள் செய்யும் திறமும் வாய்ந்தவராயிருந்தனர் என்று கேள்வியுற்றிருக்கிறோம். நம் வழி வருவோரும் அவ்வாறு பலர் இருக்கக் கூடும். ஆயினும் நாம் சதா காலமும் போரிலும், நாட்டின் எல்லையை வளர்த்தலிலும், இவ்விரண்டுக்கும் வேண்டிய முயற்சிகளிலும் ஈடுபட்டிருத்தலால் தமிழ்த் தெய்வத் திருப்பணி இயற்றுதற்குச் சிறிதளவேனும் அவகாசம் பெறாதிருக்கின்றோம். இனி இவ்வளவோடு நமக்கு வயதேற வேற நமது குண வேறுபாடு முதலியவற்றால் வேறே சில தோற்றங்களும் உண்டாகலாம். அரசியற் கருமங்களில் ஈடுபடுவர்க்குப் பொழுது போக்கு என்பது வேறு வழியிலில்லை. நாமும் அரசியற் பொறையையேற்றுக்கொண்டு பல ஆண்டுகள் ஆயின. இறைவன் திருவருளால் இனியும் நம் எண்ணம் நிறைவேறவே முயல்வோமாக.
அமைச்சர்:- அரசர் பெருமானே, இப்பொழுது தொடங்கிய முயற்சி யன்றே இது! நீவிர் அரசுரிமை யேற்றுக்கொண்ட அன்றே தொடங்கிய தன்றோ? இஃது இவ்வாறே மேன்மேலும் வளர்ந்து நம் நாட்டின் புகழைப் பாரத பூமி முழுவதும் பரப்பச் செய்யும் காலம் வரும் வரையில் நாம் முயல வேண்டும். -
தண்டத் தலைவர்:- பெருமை மிக்க பேரரசே, நம் முன்னோர் காலத்திலே நிகழ்ந்ததுபோல நாமும் இம்யத்திற் கயல் பொறித்த பிறகே இம்முயற்சியை நிறை வேற்றிவிட்டதாய் எண்ணக் கூடும். அதுவரையில் முன் வைத்த காலைப் பின் வைக்க லாகாது.
நக்கீரர்:- அரசே, இவ்வாறெல்லாம் சிந்திப்பதால் இனி வரும் புலவர்கள் பரிசில் பெறாது திரும்ப நேரிடுமோ என்று நாங்கள் சந்தேகிக்கின்றோம்.
மருதனிள நாகனார்:- நாமும் அவ்வாறே எண்ணுகிறோம். ஏனெனில், எல்லார் உள்ளமும் போர்க்குத் திரும்பிவிடின், இயற்புலவரை ஏன் என்று திரும்பிப் பார்க்க எவருக்கும் அவகாசம் இராதன்றோ? அரசர்க்கு அவகாசம் இராதபோது வாயில் காவலர் புலவர் உள்ளே வர எளிதில் விடார்.
நன்மாறன் :- அவ்வாறெல்லாம் ஆகாதிருக்கவே இறைவனை யான் வேண்டுகின்றேன். எல்லாம் இறைவன் செயல். இனி இச்சபை கலையலாம்.
IV
அறிவிற் சிறந்த அமைச்சரும், தண்டத்தலைவரும், மாசனத்தாரும் பிறரும் அவ்வவ்வமயங்களிற் கூறும் அறைவுரைகளைச் செவியேற்று அரசு புரிந்து வந்த பாண்டியன் நன்மாறன், நல்லோர்க்கு நாயகனாய், அல்லோர்க்கு அற மகனாய் அநேக ஆண்டுகள் தமிழ்நாட்டுக் குத்தலைமை பூண்டிருந்தான்; ஆண்டில் மூத்தானாயினும், அறிவிலும் ஆண்மையிலும் சிறிதும் தளர்ச்சி யெய்தினானில்லை. போர் என்றால் விரைந்து முன் சென்று ஆவன செய்யும் தன்மை இளமைப் பருவத்தில் இருந்தது போலவே இப்பொழுதும் இருந்தது. வயதேறவேற ஒரு மாறுபாடு விளங்கலாயிற்று: புலவருடன் பயிலும் பழக்கம் அதிகமாயிருந்தது மாறிச் சிறிது சிறிதாய்க் குறைந்துகொண்டே வந்து, இக்காலத்தில் அநேகமாய் இல்லையென்று சொல்லும் நிலைக்கே வந்துவிட்டது. எப்பொழுதும் தூதரோடும் அமைச்சரோடும் தண்டத் தலைவரோடும் இருந்து மந்திராலோசனை செய்வதே பொழுது போக்காயிற்று. இடையிடையே அவகாசம் கிடைத்தால், அயல் நாடுகளிலிருந்தும் உள்நாட்டிலிருந்தும் வரும் ஒற்றர்கள் கொணரும் செய்தியைக் கேட்டு, அவர்கட்கு வேண்டும் ஆணை பிறப்பித்து, அவரவர்க்கு அமைந்த இடங்கட்கும் வினைகட்கும் அனுப்புவதில் அச்சிறு பொழுதும் கழிவதாயிற்று. இந்நிலையில் வாழநேர்ந்த நன்மாறன், மதுரையிற் பரம்பரைக் கணக்காயராய்த் தமிழ்ப் பயிரை வளர்த்து வந்த நக்கீரனாரையும் மதுரை மருதனிள நாகனாரையும் பிறபுலவரையும் பார்த்துப் பேசியே அநேக மாதங்கள் ஆய்விட்டன. இவன் இந்நிலையில் இப்பொழுதிருக்கும் உண்மையை அறியாத சோணாட்டுப்புலவர் சிலரும் சேரநாட்டுப் புலவர் சிலரும் இவனைக் கண்டு பரிசில் பெறக் கருதிப் பாண்டிய நாட்டுக்கு வந்து, தாம் எதிர் பார்த்த பயன் பெறாது மனஞ்சோர்ந்து மீண்டனர்.
சோணாட்டுப்புலவருள்ளே ஆவூர் மூலங்கிழார் என்பவர் மிகச் சிறந்த இயற்றமிழ்ப் புலவர்; அரும்பெருங் கருத்துக்களை அழகுறத் தெரிவிக்கும் செய்யுள் இயற்ற வல்ல சீரியர்; வறுமையினைத் தமக்கு அணியெனத்தாங்கிய புலவருட் பெரியார்; குமண வள்ளலது உண்மைப் பெருமையை உலகறியச் செய்த பெருந்தலைச் சாத்தனார்க்குத் தந்தையார். இத்தகைய பெரியாரது புகழ் நாடெங்கும் பரந்திருந்தது, தமை நன்கு ஆதரித்திருந்த சோணாடு நீங்கிப் பாண்டிய நாட்டின் கொடைக் குணத்தளவை அளந்தறிய வந்தார் போல மதுரை நகர் நோக்கி வந்தார். மதுரை நகர்ப் புலவரெல்லாம் அவரைக் கண்டு மிகவும் போற்றிப் பாராட்டினர். அரசரது ஆதரவைப் பெற்றாலன்றிப் புலவர்க்குப் பெருமையில்லையாகையால், பாண்டியன் நன்மாறனைக்கண்டுபாடிப்பரிசில் பெறுமாறு வந்திருப்பதை ஆவூர் மூலங்கிழார் மற்றப் புலவர்களிடம் கூறினர். மற்றப் புலவர்கள் தற்காலம் பாண்டியன் இருக்கும் நிலையை அறிந்தவர்களாகையால், ஆவூர் மூலங்கிழாரிடம் இன்னது சொல்வது என்று அறியாது இருந்தனர். தமிழ் நாடெங்கும் புகழ் பெற்ற பெரும்புல வராகையால், ஒரு வேளை அவரை யேற்று உப்சரித்து அனுப்பும் எண்ணம் அரசனுக்குத் தோன்றினும் தோன்றலாம் என்ற எண்ணம் அவர்கள் உள்ளத்தில் உதித்தது. அதனால், மதுரைப் புலவர் எல்லாரும் ஆவூர் மூலங்கிழார்க்கு உரிய மரியாதைகள் செய்து, அரண்மனைக்கனுப்பினர்.
சோணாட்டுப் பூஞ்சாற்றார்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனைப் பாடிய பார்ப்பன வாகைச் செய்யுளால் தமது புகழை வளர்த்துக்கொண்ட ஆவூர் மூலங்கிழார், மதுரை யரண்மனை யடைந்தனர் வாயிற் காவலர் அவரது முகப்பொலிவால் அவர் பெரும்புலவராகவே யிருக்கவேண்டும் என அறிந்தனர். ஆயினும், முன் போலத் தடையின்றிப் புலவர்களை அரண்மனைக்குட் புகவிட அனுமதி பெறாதிருந்தனராதலால், இன்னது செய்வதென அறியாது சிறிதுநேரம் தயங்கிப் புலவரை இரண்டாவது வாயில்வரையிற் செலவிட்டு, அரசன் கருத்தையறிய ஒரு காவலன் முன்னே விரைந்து சென்றான். நன்மாறன் அமைச்சரோடும் தண்டத் தலைவரோடும் முன்னாள் ஆலோசனை செய்த பெரியதோர் அரசியல் வினையைப்பற்றித் தனித்துச் சிந்தனை செய்து கொண்டிருந்தான்; வாயிற் காவலன் வந்து சொல்லிய செய்தியைக் கேட்டான்; புலவரை வரவேற்கும் வழக்கத்தை யொழித்து அநேக ஆண்டுகள் ஆயின வாயினும், ஆவூர் மூலங்கிழார் என்றபெயரைக் கேட்டதும் அவரை எவ்வண்ணம் வரவேற்காது அனுப்புவது என்ற எண்ணம் தோன்ற, அரசியல் சம்பந்தமாக எண்ணியிருந்த சிந்தனையைச் சிறிது நேரம் நிறுத்தி, அவரை வாவேற்கச் சித்தமாயினன். வாயிற் காவலன் புலவரை உள்ளே அழைத்து வர அனுமதி பெற்றுச் சென்றனன்.
வாயிற் காவலன் புலவர் வரும் வழிக்குச் சென்று அவரை உரிய மரியாதையோடு அழைத்து வந்தான். நன்மாறன் இருந்த அறைக்குப் புலவர் வந்து சேர்ந்தனர். அவன் முக மலர்ச்சியைக் காட்டி, “புலவரேறே, வருக! வருக!!” என்று கூறி வரவேற்றனன். அவரும் அரசனைத் தம் நிலைமைக்கேற்ப வாழ்த்தி வணங்கி, 'வழுதியர் தலைவ, தமிழர் இறையே, எத்துணையோ புலவர்களை ஆதரித்து எண்ணிறந்த தமிழ்ச் செய்யுட்களை உலகிற்குதவிய பாண்டியர் குடியிலே தோன்றிய நின்னை இந்நாள்காறும் நேரிற் கண்டு புகழ்ந்து பாடும் பேறு பெற்றிலேம். சோழ நாட்டுப் பிறந்து வாழ்வேமாகையால், இந்த இன்பப்பேறு கிடைக்க எமக்கு இத்துணை நாள் ஆயது. இன்றே எம் வாழ் நாளிற் சிறப்புற்ற நாளாம். தமிழ் நாடெங்கும் ஒரு தலைமைக் கீழ் ஆளும் பெருமை பெற்ற தமிழ் மன்னனே, அரசர் இயற்றவுரிய அறங்களிலெல்லாம் தலை சிறந்தது நாட்டு மக்களின் அறிவை வளர்த்து அற நெறியிற் செலுத்த முயற்சி செய்தலேயாம். போர் இயற்றலும் பிற நாடுகளைத் தன் வசப்படுத்தலும் அரசன் கடமையேயாமாயினும், அவ்வாறடக்கிய நாடுகளில் வாழும் குடிகள் எல்லாம் அமைதியோடும் அரசனிடம் அன்போடும் வாழுமாறு செய்ய வேண்டுவது அதனினும் சிறந்த கடமையாம். வாட்படையும் வேற்படையும் வில்லும் அம்பும் அரசின் பெருமைக்கு உதவுவனவேயாம். ஆயினும், அவற்றைக்காட்டிலும் சிறப்பாக அரசனிடம் இருத்தற்குரிய பொருள்கள் சில உள. அவை செங்கோலின் சிறப்பை விளக்க மிகவும் அவசியமாம். அவை தாம் உழவு கோலும், துலைக் கோலும், பல வகைத் தொழிலாளர் படைக் கலங்களுமாம். வியவசாயம் வியாபாரம் என்ற இரண்டும் இல்லை யென்றால், எந்நாடும் சிறப்படையாது. தொழில் வளம் மிகப் பெறா நாடு செல்வ வளம் பெற வழியில்லை. ஆகையால், இவற்றை நிலை பெறச் செய்ய முயல்வது அரசர் கடமையேயா மென்பதை யாம் கூற வேண்டுமோ!" என்று கூறினர். பாண்டியன் நன்மாறன், அவற்றைக் கேட்டுத் தன்னுடைய சிந்தனைகளுக்கு மாறுபாடாகத் தோன்றினும் தலையசைத்து, அங்கீகரித்துக்கொண்டான். பிறகு புலவர் சில பாடல்கள் பாடி, அவனை மனமார வாழ்த்தினர். அவர்தம் பாடல்களை ஏற்றுக்கொண்ட பாண்டியன் உடனே பரிசில் வழங்கக் கூடிய நிலையில் அப்பொழுது இருக்கவில்லை. ஆகையால், புலவரைப் பார்த்து, "ஐய, அருந்தமிழ்ப் புலவரே, நுமது செய்யுட்கள் செவிக்கின்பம் பயப்பனவாய் உள்ளன. நும்மைப் போன்ற பெரும்புலவர்களைக் கண்டு அளவளாவிப் பல நாட்கள் ஆயின. இன்னும் சில நாட்கள் நீவிர் இந் நகரிலேயே இருக்க வேண்டும். பிறகு பரிசில் தந்து விடை கொடுத்து அனுப்புகின்றேன். இப்பொழுது விடை பெற்றுக் கொள்ளுங்கள், என்று கூறி அனுப்பினன். புலவரும், அரசன் சில நாள் இருக்கச் சொன்னதற்காக மகிழ்ந்து, அங்கிருந்து வெளியேறி, மதுரை நகர்ப் புலவர்களோடு அளவளாவிச் சில நாள் தங்கியிருந்தனர்.
இவ்வாறு இருக்கையில், இரண்டொரு முறை: அரண்மனைக்குப் போய் அரசனைக் கண்டனர். அவன் பரிசில் வழங்காமல் இன்னும் சில நாள் பொறுத்திருக்கவெனக் கூறி அனுப்பினன். புலவர் பொறுத்தும் பொறுத்துப் பார்த்தனர். பரிசல் வருகின்ற வழியைக் காணவில்லை. அரசன் இல்லையென்று சொல்ல மாட்டாமல் இப்படிச் சொல்லுன்றானோ என்று அவர்க்குத் தோன்றியது. மதுரை நகர்ப் புலவர்க்கும் அரசன் இவ்வாறு இப்பெரும்புலவரை மனம் வருந்தச் செய்வது அதிசயம் விளைத்தது. பாண்டியன் மனமே மாறியிருக்கும்பொழுது எவர் வருத்தம் என்ன செய்யும் ? ஆவூர் மூலங்கிழார் பொறுக்க வியன்றவரை பொறுத்தார். இதுதான் நடை முறையென்று அரண்மனைக்குப் போனார். அப்பொழுதும் ௮ரசன் அவர்க்குப் பரிசில் தந்து விடை கொடுக்கும் கருத்தடையனாய் இருக்கவில்லை. ஆகையால், அவர் அரசனைப் பார்த்துப்பின் வருமாறு பேசினர் :
“அரச பறிசில் வாழ்நர் என்ற இறப்புப் பெயர் புலவர்க்கு உரியதேயாயினும், வறுமையால் மிகவும் வாடும் காலத்தும், தமது மானம் இழந்து வரிசை தப்பி வாழ்ந்த புலவர் எவரும் இலர், யாம் வெயில் என்றும் பனியென்றும் பாராது பல முறை நடந்து நின்னிடம் வந்து பரிசில் பெறக்கருதிச் காத்திருந்தோம். எமது வறுமையோ கல்லாற் சமைந்ததுபோல உறுதியாய் இருக்கிறது, காற்று உட்புகாது மறைக்திருக்க வேண்டுமளவு அமைந்த எமது சிறு குடிலில் மழையும் வெயிலும் புகுமாயினும் அவற்றுக் கஞ்சாது, பொன்னணி மணியணி பூணாமல், நாணம் ஒன்றே பெரும்பணியெனப் பூண்டு வாழும் எமது கற்பிற் சிறந்த மனைவியை எண்ணியாம் இங்கிருந்து இனிப் புறப்படவேண்டுவதே ஆகும் என்றால் ஆகும் என்பதும், ஆகாது என்றால் இயலாது என்பதும் வெளிப்படச் சொல்வது முறையேயாம். கொடுக்க வியலாத வொன்றைக் கொடுப்பேன் என்று கூறி யேமாற்றலும், கொடுக்க வியல்வதைக் கொடாது ஒளித்தலும் புலவரை வாட்டுவதோடு புரவலர் புகழையும் குறைப்பதாம். இவ்வாறு நீ செய்தாயாகையால், இந்நாள் வரை எமது குடியிற் பிறந்தார் எவரும் இவ்வாறு அரசரால் அவமதிக்கப்படாத வாழ்வுடையராய் இருந்தாராகையால், இதுவரை காணா ஒரு காட்சியை இங்குக்கண்டேம், புலவரை அவமதிப்பதால் அரசர்க்குக் கேடுண்டாகும் என்று கூறுவராதலால், எமக்கு நீ ஒரு நன்மையும் செய்யவில்லையாயினும், நின் நாட்டின் நலத்தின் பொருட்டேனும் நீயும் நின் புதல்வரும் நன்று வாழ்க. நாம் போகின்றோம்.
“அரசே, எம்முள்ளத்தில் தோன்றிய இக்கருத்துக்கள் பிற்காலத்தில் உனக்கு நன்மையுண்டாம் பொருட்டும் உன் குடியிற் பிறந்தார் எவரும் இவ்வாறு புரியாமைப் பொருட்டும் பயன்படுமாறு இறைவன் திருவருளால் செய்யுளாகவே எழுகின்றன. அச்செய்யுளைச் செவியேற்ற பிறகேனும் உனது மனம் மாறிப் பண்டு போலப் புலவரைப் போற்று வாய் என நம்புகின்றோம். செய்யுளைக் கேட்பாயாக:
“ஒல்லுவ தொல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லா தில்லென மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கிற் கேண்மைப் பாலே;
இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்ட லன்றியும் புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் அத்தை;
அனைத்தா கியரினி யிதுவே; எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம்; அதனால்,
நோயில ராகநின் புதல்வர்; யானும்
வெயிலென முனியேன் பனியென மடியேன்
கல்குயின் றன்னவென் னல்கூர் வளிமறை
நாணல தில்லாக் கற்பின் வாணுதல்
மெல்லியற் குறுமக ளுள்ளிச்
இச்செய்யுளைக் கேட்டதும் பாண்டியன் தனது குற்றத்தை யறிந்து, புலவர்க்கு ஏற்ற பரிசில் தந்து, விடை கொடுத்தனுப்பினன். ஆவூர் மூலங்கிழார் சோழ நாடு சேர்ந்தார்.
பின்னரும் பாண்டியன் முன்போல ஆயினன். ஒருவர் மனத்தை மாற்றுவது என்பது மற்றொருவர்க்கு எளிதன்று. அவரவரே தம் அறிவின் திறத்தால் மாற்றிக்கொள்வது எளிதாம். பாண்டியன் நன்மாறனோ, புலவர்களைக் கண்டு பயின்று அநேக ஆண்டுகள் ஆய்விட்டதால், அவர்களிடம் உள்ள பெருமையை அளந்தறியும் அறிவையே இழந்துவிட்டான். அரசன் அவ்வாறு ஆனதால், மன்னரைச் சார்ந்தொழுகுவார் பலரும் புலவர்களை அரண்மனைக்குள் வரவேற்கும் பண்டைப் பழக்கத்தைக் கைவிட லாயினர். நாட்டில் இந்நிலை ஏற்பட்டுவிட்டதால், மதுரை நகரில் வெகு நாளாய் வாழ்ந்து வந்த புலவரன்றிப் பிற நாட்டுப் புலவர்களின் போக்கு வரவு அருமையாய்ப் போயின. இந்நிலைமையிலிருந்த பாண்டிய நாட்டுக்கு வேறொரு புலவர் வந்தார். அவர் வறுமையின் பெருமையை உள்ளவாறு தம் வாழ்வில் உணர்ந்தவர். பாண்டிய வேந்தன் ஆதரவு கிடைப்பது அருமையெனப் பலர் கூற அறிந்தா ராயினும், 'நம் அதிருஷ்ட பலனையும் அறிந்து பார்ப்போம்,' என அவரும் வந்தார் அவர் தமிழ் நாட்டிற் பிறந்தவர் அல்லர்; வடநாட்டிற் பிறந்தவர். நாணயப் பரிசோதனை செய்யும் திறம் வாய்ந்த பண்டைப் பழங்குடி யொன்றிற் பிறந்தவர்; பெரிய சாத்தனார் என்னும் பெயரினர்; தம் நாட்டிலே மிகவும் விரும்பிப் பயிலப் பெறுவதும் போற்றுவாரைப் பெறா ததுமாகிய தமிழ் மொழியைப் பெரிதும் வருந்திக் கற்றுத் தேர்ந்திருந்தார். அவர் தமிழ் நாட்டு வேந்தன் எனப்பெறும் பாண்டியன் நன்மாறனிடம் தமது புலமையை விளக்கிப் பரிசில் பெற விழைந்ததும் வியப்பாகுமோ? உள் நாட்டு நிலைமையை நன்கறியாதவராகையால், தம் ஊரிலிருந்து வெகு சிரமப்பட்டு மதுரை வரை வந்து சேர்ந்தார்; அரண்மனையை அடைந்து, வாயில் காவலரிடம் தம் வருகையைத் தெரிவித்து அரச சமுகம் அடைய முயன்றார். அவர் எண்ணம் நிறைவேறுவது அரிதாயிற்று. மிகுந்த மனவருத்தம் கொண்டார். ஒரு நாள் மிக்க சிரமத்தின்மேல் அரசன் முன் போயினர்; தம் வருகையைத் தெரிவித்துச் சில செய்யுட்கள் பாடினர்.அரசன் மனம் இரங்குவதாய்த் தோன்றவில்லை. அதனால், அவர் மிக்க வெறுப்புக் கொண்டு, பின் வருமாறு பேசினர்:
"விரைந்து செல்லும் குதிரைப் படையையுடைய நன்மாறனே, திண்ணிய தேர்களையுடைய தலைவனே, உன்னைப் பாராட்டி, அருவி பாயும் பெரிய மலைபோல மாலையொடு விளங்கும் உன் மார்பகத்துக் குறையாத அன்புடைய தெய்வக் கற்புள்ள நின் கோப்பெருந்தேவி பயந்த பவளமணி போன்ற அழகிய வாயையுடைய கிண்கிணிக் காலினராகிய உனது புதல்வர் பொலிக என்று வாழ்த்தி, உன்னிடம் கொண்ட பக்திப் பெருக்கால் கனாப் பொழுதிலும் அரற்றுகின்ற எம் மனம் மிகவும் இன்புற்று மகிழ ஆல் அமர்ந்த கடவுள் போன்ற நினது செல்வத்தை யெல்லாம் கண்டோம்; விடை பெற்றுக் கொண்டோம்; வேல் கெழு குரிசில், வாழ்க நின் கண்ணி; தொடுத்த தமிழ் நாட்டெல்லை முழுவதும் கொள்ளையாகக் கொண்டு நின் பகைவரை வணங்குவித்து அவர் பொருளை வாங்கி யுண்ணும் குறைவற்ற வலி மிக்க நின் போன்ற திறல் சிறந்த நின்னுடைய மைந்தர் கண்ணோட்டத்தால் எந்நாளும் பகைவர் வாட அவரது அருங்கலங்களைக் கைக்கொண்டு நுமது பொன்மயமான பெரு நகரிற் சேர்ந்த உன் முன்னோர்களைப் போல நீயும் ஆண்டும் நாளும் மிகுந்து, திரைகள் மிக்க பெரிய கடனீரினும் அக்கடல் கொழிக்கும் மணலினும் நீண்டுயர்ந்த மழைத் துளியினும் மிகுதியாக இவர் பெறும் பிள்ளைகளைக் காணுந்தோறும் மகிழ்ந்து விரும்பிச் செல்வத்தோடு புகழும் இனிது விளங்க நெடுங்காலம்வாழ்க. பெருந்தகையே, யாமும் உறவினரில்லாத தூரதேசத்திலே நாடோறும் மழைத் துளியை விரும்பி எதிர்பார்க்கும் வானம்பாடிப் பறவைபோல உன்னுடைய வண்மையை எதிர் பார்க்கும் ஆசையால் மனம் வருந்தி இரங்கி நினது அடி நிழலின்கட் பழகிய அடியுறை போல வாழ்வோம். நீ இவ்வாறு யாம் மனம் வருந்தச் செய்த செய்கையை மறவாதொழிவாயாக.”
நன்மாறன்:- புலவரே, அரசியற்றுறையில் பெரிதும் ஈடுபடுவதால் நும்போல்வாரைத் தக்கவாறு ஆதரிக்க இப்பொழுது என்னால் இயல்வதில்லை. இப்பரிசிலைப் பெற்றுக்கொண்டு விடை பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.
பெரிய சாத்தனார்:- அரசே, பெறும் பரிசில் சிறிதேயாயினும், அன்போடு உதவும் வள்ளலரிடம் ஆதரவோடு பெறுதலே புலவர் இயல்பாம். ஆகையால், நம் இருவர்க்குள் நிகழ்ந்த இப்பேச்சுப் பிறர்க்கும் தெரியும் பொருட்டு எமது கருத்துக்களைச் செய்யுளாக்கித் தெரிவித்துப் பிறகு பரிசில் பெறுவோம், செய்யுட்குச் செவி சாய்ப்பாயாக:
“அருவி தாழ்ந்த பெருவரை போல
ஆரமொடு பொலிந்த மார்பிற் றண்டாக்
கடவுள் சான்ற கற்பிற் சேயிழை
மடவோள் பயந்த மணிமரு ளவ்வாய்க்
கிண்கிணிப் புதல்வர் பொலிகென் றேத்தித்
திண்டே ரண்ணல் நிற்பா ராட்டிக்
காதல் பெருமையிற் கனவினும் அரற்றுமென்
காமக நெஞ்சம் ஏமாந் துவப்ப
ஆலமர் கடவுள் அன்னநின் செல்வம்
வேல்கெழு குருசில் கண்டே னாதலின்
விடுத்தனென் வாழ்கநின் கண்ணி தொடுத்த
பணித்துக்கூட் நண்ணுந் தணிப்பருங் கடுந்திறல்
நின்னோ ரன்னநின் புதல்வர் என்றும்
ஒன்னார் வாட அருங்கலந் தந்துநும்
பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின்
முன்னோர் போல்கிவர் பெருங்கண் ணோட்டம்
யாண்டும் நாளும் பெருகி யீண்டுதிரைப்
பெருங்கட னீரினும் அக்கடல் மணலினும்
நீண்டுயர் வானத் துறையினும் நன்றும்
இவர்பெறும் புதல்வர்க் காண்டொறும் நீயும்
புகன்ற செல்வமொடு புகழினிது விளங்கி
நீடு வாழிய கெடுந்தகை, யானும்
கேளில் சேஎய் நாட்டின்எந் நாளும்
துளிநசைப் புள்ளினின் அளிநசைக் கிரங்கிநின்
அடிநிழற் பழகிய அடியுறை
நன்மாறன்:-- செய்யுள் நன்றாகவே அமைந்திருக்கின்றது. இப்பரிசிலைப் பெற்றுக்கொள்ள வேண்டுகின்றேன்.
பெரிய சாத்தனார்:- அரசே, யாம் விடை பெற்றுக் கொள்கிறோம். இனியேனும் புலவர்களை அவமதியாது ஆதரிக்க வேண்டுகின்றோம். இச்சம்பாஷணையின் பிறகு அரசன், அரசியல் அதிகாரிகளைக் காணற்குரிய அறைக்குச் சென்றான். புலவர், அரண்மனைக்கு வெளியே வந்து, தம் ஊர் சென்றார்.
V
இறைவன் திருவருட் செயலை அளவிட வல்லார் எவரே? ஒருவன் சிவிகைமீது அமர்வோனாகவும், மற்றொருவன் அதனைப் பொறுப்பவனாகவும் அமைவதும்; ஒருவன் புரவலனாகவும், மற்றொருவன் அவனிடம் கையேந்தி நிற்றற்குரிய இரவலனாகவும்; ஒரு தாய் வயிற்று மக்களுள்ளே ஒருவன் சிறந்த அறிவுடையானாகவும், மற்றொருவன் நிரக்ஷர குக்ஷியாகவும் மந்த மதியாகவும் இயன்றிருப்பதும் அவனருட் செயலன்றோ? பிறந்தன இறத்தலும், இறந்தன பிறத்தலும், கண்டனமறைதலும், முன்னர்க் காணாதன காண்டலும் பிற அற்புதங்களும் அவனுக்கு இயல்பேயன்றோ? எண்ணிறந்த மக்களும் பற்பல மன்னரும் தம்மைப் பணிய முடி மன்னராய் அரசாண்டவரும், திக்கற்றுத் திருமகள் பகைஞராய்த் திரிந்தவரும் முடிவில் ஒரு பிடி சாம்பர் ஆதல் அமைவுதானே? இன்ன காலத்தில் இன்ன இடத்தில் இவர்க்கு இன்னது விளையும் என்று எத்தகை அறிவுடையோராலும் அறுதியிட்டுரைக்கக் கூடாமல் இருப்பதன்றோ இறைவன் திருவருட் செயலிற் பெருத்த அற்புதமாம்?
பாண்டிய மண்டலாதிபதியாய்த் தமிழ் நாட்டரசர் தலைவனாய் வணங்காமுடி மன்னனாய் வாழ்ந்து வந்த நன்மாறன் போர்க்களங்களிலும் அரசியற்றுறை யாராய்ச்சியிலும் பெரும்பகுதியான காலத்தைக் கழித்துக் குடிமக்களுக்கு இயன்றவளவு நன்மை புரிந்து அரசாண்டு வயோதிக தசை யடைந்தான். நல்லோர் குடியிற் பிறந்த வல்லோனாகையால், முதுமைப்பருவம் குறுகவும், நல்லோர் சேர்க்கையிலும் தத்துவ விசாரத்திலும் சிந்தை செலுத்தலாயினன். நரையும் திரையும் பஞ்சேந்திரியங்களின் சக்தி குறைதலும் ஆகிய குறிகள் தோன்றா முன்னரே இறைவன் திருவடி நீழல் எய்தலாகாதா என்ற எண்ணமுடையவ னாயினன், எண்ணிய எண்ணத்தில் திண்ணியராயிருப்பின் எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் என்று பெரியோர் கூறும் அறிவுரையும் அவன் உள்ளத்தில் உதித்து விளக்கம் பெற்றது.
அந்நிலையில் ஒரு நாள் மதுரை நகரில் உள்ள இளமரக்கா ஒன்றில் உலவச் சென்றான். மெய்காவலர் சிலர் இரு புடையிலும் வரவேற்று எவரும் தொடராது பின்னிற்கத் தனித்து ஏதோ பெருஞ்சிந்தனையுடையனாய் நன்மாற மன்னன் சோலைக்குட் புகுந்தான்; அவ்விளமாக் காவினுள் ஆனந்தத் தாண்டவ மாடியிருந்த இயற்கைச் செல்வியின் எழிலைக் கண்டு இன்புற்றான்; திலகமும் வகுளமும் வெட்சியும் குரவமும் மாவமும் கோங்கும் கொன்றையும் ஆதிய மரங்கள் மலர்க்காட்சி தந்ததைக் கண்டு மனம் பூரித்தான்; மல்லிகை முல்லை முதலிய கொடிகள் மலர்ந்திருந்த மாட்சியைக் கண்டு உலக மயக்கத்தை மறந்தான்; மணம் மிக்க மலர்கள் நிரம்பிய தடாகங்களின் கரைகளில் உள்ள ஆதனங்களிலே சிறிது நேரம் அமர்ந்து, நீர் வளர் மலர்ப் பொலிவை நிறைய நோக்கினான். கொடி வீடுகளின் உட்புகுந்து சாய்வான அணைகளில் சார்ந்து அமர்ந்திருந்து மனக் கவலைகளை மறந்தான்; இடையிடையே சிறு சிறு நீர் நிலைகளில் நாற்பாலுமுள்ள அழகிய பதுமைகள் நீர் நிறைக்கப் பசுமை மிக்க இலைகள் நிரம்பியிருக்கும் அணிகிளர் காட்சியையும் பார்த்துத் திரும்பினான்; என்னதான் வெளிக் காட்சியைக் கண்டாலும், மனத்தினுள் இருந்த தளர்ச்சி இடைவிட்டு எழுந்து எழுந்து தோன்றுவதையும் உணர்ந்தான். இளமாக்காவை அடுத்துள்ள இலவந்திகைக்குச் சென்று இன்புறுவோம் என்று அத்திசை நோக்கினான். அவன் குறிப்பறிந்த மெய் காவலர் முன்னும் பின்னும் சென்றனர். இளமரக் காவிலிருந்து இலவந்திகைச் சோலைக்குச் செல்லும் சிறியதொரு வாயில் வழியே சென்று, அங்குப் புகுந்தான்.
அவ்விலவந்திகைச் சோலை, அரசனும் அவனுக்கு. உரிய பெண்டிரும், அவகாச முள்ள காலங்களில் வந்து இன்பமுறப் பொழுது போக்குவதற்காக அமைந்ததாம்; பெரியதொரு சுற்று மதிலையுடைய தாய், வெளிப் புறத்தார் எவர்க்கும் தன்னுள் அடங்கிய இன்பக் காட்சிகளின், நலத்தை அளியாதிருப்பதாம் அரசனும் உரிமை மகளிரும் அங்கு வருங்காலங்களிலே தங்கியிருத்தற்குரிய சிறிய மாளிகைகள் சில அங்கு இருந்தன. அவர்கள் நீராடி இன்புறற்குரிய சிறிய பொய்கைகள் சில இருந்தன. பல வகையாகிய மணமிக்க மலர்கள் நிரம்பிய மரங்களும் செடிகளும் கொடிகளும் இயற்கை நலந் தோன்ற வளர்ந்திருந்தன. சில இலை அழகின் பொருட்டும், வேறு சில மலர் அழகின் பொருட்டும், மற்றும் சில இலை மணத்தின் பொருட்டும், பின்னும் சில மலர் மணத்தின் பொருட்டுமாய்ப் பயிரிட்டு வளர்க்கப்பட்ட செடிகள் பல அங்கிருந்தன. எத்திசை நோக்கினும் மலர் நிறைந்த காட்சியாகவே இருந்ததால், அச்சோலை பன்மலரடுக்கிய நன்மாப் பந்தருடைய மனோகரமாகிய மாட்சியுடையதாய் விளங்கியது.
அச்சோலையின் நடு நாயகமாய் அமைந்த காட்சி நலஞ் சான்ற இலவந்திகையிலே தான் பெரும்பாலும் அரசன் அமர்ந்து இளைப்பாறுவது வழக்கம். அதன் அமைதி மிகவும் அற்புதமானது. பளிங்கினாற் கரையமைத்த சிறியதொரு நீர் நிலை அங்கு இருந்தது. அந்நீர் நிலையைச் சுற்றிலும் உள்ள பளிங்குக் கரையின் ஆறு கோணங்களிலும் ஆறு கந்தருவச் சிலைகள் இருந்தன. நடுவிலே சிறியதொரு திட்டு இருந்தது. அத்திட்டின் மேலும் அழகியதொரு பளிங்குச் சிலை நின்றது. நடு நின்ற பளிங்குச் சிலை, எல்லாவற்றிலும் வேலைப்பாட்டால் மிகவும் அழகுடையதாய் இருந்தது. அப்பளிங்குச்சிலை ஒவ்வொன்றிலுமிருந்து சிறு சிறு துளிகளாய் மழைத்துளிபோல நீர் பாய்ந்து பொய்கைக்குள் விழும். இப்படி விழும் நீரால் பொய்கை நிறைவதற்கு ஐந்து நாழிகைக்குமேல் ஆகும். நிறைந்து கரை தட்டியதும், கீழே வைத்திருந்த சில யந்திர விசைகளால் தண்ணீர் எல்லாம் விரைவிலே வெளியே ஓடி, அடுத்துள்ள மரங்களுக்குப் பாய்ந்துவிடும். இவ்வண்ணம் நிறைத்துப் போக்கப் பொறிப்படை அமைந்த இலவந்திகை அடைந்திருந்த காரணத்தினால், அச்சோலை இலவம் திகைச் சோலை என்ற பெயர் பெற்றது.கண்டவர் மனத்தைக் கவரும் எழில் வாய்ந்த அவ்விலவந்திகைக் கரையோரமாக அரசரும் அரசியரும் அமரத் தக்கவாறு ஆதனங்கள் பல அமைந்திருந்தன. அவற்றுட் சில பளிங்கினாலும் வேறு சில இரும்பினாலும் மற்றும் சில மரத்தினாலும் அழகிய பல வகை வேலைப் பாடுகளோடு அமைந்திருந்தன. அவற்றுட் பளிங்கினால் அமைந்த உயர்ந்த ஆதன மொன்றில் அரசர் பெருமான் அமர்ந்தனன். மெய் காவலர் சிறிது விலகி நின்றனர். இலவந்திகையின் காட்சியில் ஈடுபட்டிருந்த அரசன் சிறிது பொழுது சென்றதும், உள்ளத் தளர்ச்சியும் உடம்பின் சோர்வும் கொண்டு, ஒரு புறம் சாய்ந்தான்; தான் பிறந்த நாள் தொட்டு அந்நாள்காறும் தன் வாழ்விலே நிகழ்ந்துள்ள பல செய்திகளையும் பற்றி ஆராயலாயினன்; அறிவுடைப் பெரியரால் அலட்சியம் செய்யப்பெற்ற அற்பப் பொருள்களிலே ஆசை கொண்டு அன்புடையார் பலரோடு அருஞ்சமரம் புரிந்து அடைந்த பயன்களை யெல்லாம் அளந்து அளந்து பார்த்தான், இன்ப வாழ்வு என்பது அழிவற்றதாயிருக்க, இவ்வுலகில் இடமும் காலமும் எதுவும் இல்லை என்று தெளிவுற அறிந்தான்; பின் வரும் பாடல்களை இனிய இசையோடு பாடினன்:
மறப்பரிய பெரும்பொருளை
- வழித்துணையை மறந்தயர்ந்தேன்
துறப்பரிய பெருவாழ்வைச்
- சுகவழியைத் துறந்திருந்தேன்
பிறப்பரிய சிறப்புரிமை
- பெறுமாறு முயன்றறியேன்
இறப்பரிய வின்பநிலை
யெங்ஙனம்யான் எய்துவனே!
இன்பமெனத் துன்பமென
வெண்ணுவன விரண்டுமெனை
வன்பினொடு பிணித்துலகில்
மயக்கமுற வாட்டுவன
அன்பினெறி யுணர்வெளி தாம்
அரும்பொருளை யறிந்தடைய
முன்புமுயன் றறியாதேன்
முயன்றுபயன் பெறலெளிதோ?
“என் முன்னோர் இருந்த நிலையென்ன? இப் பொழுது யான் உள்ள நிலையென்ன! பாரத பூமி முழுதையும் ஒரு குடைக்கீழ் ஆண்டு வந்த பாண்டியர் குடியிற் பிறந்த யான் மிகச் சிறிய நாட்டினையே ஆளும் ஆற்றல் பெற்றவனா யிருந்தேன். எல்லாம் இறைவன் செயல். இனிஎன்வழி வருவோருள் யாவனேனும் சிறந்த வீரன் ஒருவன் என் எண்ணத்தை நிறைவேற்றலுமாம். இந்நாள்காறும் புவிப் பொறை தாங்கியது போதும். இனித் தவவேடம் பூண்டு பாவத்தைக் களைய முயல்வதே சிறப்பாம். இந்த வுடம்பினுள் இன்னும் எத்தனை நாட்களுக்கு யான் வாழவேண்டும் என்ற திருவுள்ளம் இறைவனுக்கு உளதோ? அந்நாள் எல்லாம் அவனையே ஆராய்ந்தறிய முயல்கின்றேன். அவனருளால் அன்றோ அவன் தாள் வணங்கலாம்?” என்று தனக்குட் கூறிக்கொண்டனன்.
பிறகு வானக் காட்சியைக்கண்டு மனமகிழ்ந்தான்; பளிங்குப் பீடத்தில் ஒரு புறமாகச் சாய்ந்தான்; ஏதோ சிறிதளவு மயக்கம் தோன்றுவதாய் உணர்ந்தான். எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை எண்ணி யெண்ணி இன்புற்றவாறே முக மலர்ச்சி பெருகத் தன்னுணர் விழந்து பரவச மடைந்து, பளிங்குப் பீடத்தின்மேலே ஒரு கை வைத்துக்கொண்டு சிறிது பொழுது நின்று, பிறகு அமர்ந்து, அதன் பின்னர்ப் படுத்துக்கொண் ன்; இறைவன் திருவருள் வசத்தால் அவ்வாறு இருந்த நிலையிலேயே அநித்தியமாகிய இவ்வுலக வாழ்வைத் துறந்தான். உடம்பு சிறிது வேறுபாடு அடைந்தது.
மெய் காவலர் உடனே நெருங்கி வந்து, அரசன் இருந்த நிலையை அறிந்து, உண்மையை உணர்ந்து கொண்டு, அரண்மனைக்குச் செய்தி தெரிவித்து, உரிய முறையால் மேல் நிகழ்தற்குரிய வினைகளை மந்திரிமார் கவனிக்கத் தக்கவாறு செய்தனர். மந்திர சுற்றத்தார் அவன் மைந்தனுக்கு அரசுரிமையை நல்கி, முடி கவித்து, அப்பொழுது செய்தற்குரிய சடங்குகளை நிறைவேற்றி, நன்மாறன் வாழ்வின் வரலாற்றை நாட்டவர் அறியுமாறு விளக்கிக் கூறி, இறைவன் திருவருளால் அவன் இலவந்திகைப் பள்ளியில் துஞ்சிய செய்தியை எங்கணும் பரப்பிப் புதிய அரசனுக்கு உரிய காலத்திலே பட்டாபிஷேகம் நிகழும் என்ற செய்தியையும் தெரிவித்தனர்.
நாடெங்கும் தூதர் சென்று இச்செய்தியைப் பரப்பிப் பலவகைச்சிற்றரசர்களையும் புலவர்களையும் மதுரை நகரத்தில் வந்து குழுமச் செய்தனர். அவரனைவரும், பூரண சந்திரன் அஸ்தமனம் ஆவதைக் கண்ட பிறகு இளங்கதிரின் உதயத்தைக் கண்டு மகிழ்வார்போல இளவரசனது வாழ்வின் நோக்கத்தை எடுத்துரைப்பாராய்த் தமிழ்த் தெய்வத்தின் தனித் திருப்பணி புரிய வருவோருள் அவன் தலை சிறந்திருக்கவென வாழ்த்து வாராயினர். நல்லோர் பலர் மனமாரவாழ்த்தி நல்லுரை நவில, இளவரசன் நன்னாளில் முடி கவிக்கப்பெற்றுத் தன் முன்னோர் வழி வழியே தனக்கு வைத்த பேறாகிய அரசுரிமையைத் தாங்குவா னாயினன். அவன் காலத்தில் மேன்மேலும் நாடு வளர்ச்சி பெற்று மிக்க நல்வாழ்வு அடைந்தது.