பாதுகாப்புக் கல்வி/பாதுகாப்புக் கல்வியும் பயன்களும்

விக்கிமூலம் இலிருந்து
3. பாதுகாப்புக் கல்வியும் பயன்களும்

1. பாதுகாப்பு - ஒரு விளக்கம்

உயிர் உன்னுடையது. நீ காப்பாற்றிக் கொள்ள இருக்கும் உயிர், உனக்குச் சொந்தமானது. அதனால் உன் குடும்பத்திற்கு உதவி. அதுவே அந்த சமுதாயச் செழிப்புக்கு ஆணிவேர். அந்தச் செழுமையே நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆதாரம். என்று தனி ஒருவனை தகுந்த முறையில் பாதுகாப்புடன் வாழச் சொல்கின்ற. வாழச் செய்யும் வழியைக் காட்டுகின்ற கல்விதான் பாதுகாப்புக் கல்வியாகும்.

'திறமை உள்ளவர்களே உலகில் தரமாக, நிம்மதியாக வாழ முடியும்' என்ற உலக நியதியின் அடிப்படையில் தோன்றியது தான் பாதுகாப்புக் கல்வி.

தூசி விழாமல் நமது கண் இமைகள் மூடிக்கொள்கின்றன. மீறி விழுந்தாலும் கண்ணிர் கரைத்தெடுத்துத் தூய்மைப்படுத்திவிடுகிறது. மூக்கிற்குள்ளே தூசி புகுந்துவிடாமல் உள்ளே உள்ள பாதுகாப்பு முறைநோய்க் கிருமிகளைக் கொல்லக் காத்திருக்கும் வெள்ளை அணுக்கள், தூங்கும்போது நிகழ்கின்ற அனிச்சைசெயல்கள் எல்லாம், உடல் உள்ளே நிகழ்கின்ற முக்கியமான பாதுகாப்புப் பணிகளாகும்.

அந்த ஒப்பற்றப் பணிகள், சிறப்பாக உடலை உலவச் செய்கின்றன. பாதுகாக்கும் உளப்பாங்கை, உயர்ந்த அறிவை அப்பணிகள் நமக்கு ஊட்டுவதுபோல, பாதுகாப்புக் கல்வியும் அமைந்திருக்கிறது.

2. பாதுகாப்புக் கல்வியின் பணி

1. எத்தனையோ வழிகளில், விபத்துக்கள் உருவாகும் சூழ்நிலையை விளங்கிக் கொள்ளுதல்.

2. விபத்துக்குள்ளாகின்ற சூழ்நிலைகளில் இருந்தாலும், அதினின்றும் விலகி, விபத்து நேராமல் வாழ்கின்ற வழிகளை மேற்கொள்ளுதல்.

3. தான் உணர்ந்து தெளிந்துகொண்ட உண்மைகளை வளர்த்துக் கொள்வதுடன், அதுபோன்ற முறையைப் பின்பற்ற, மற்றவர்களுக்கு அறிவுறுத்தல்.

மேலே கூறிய வழிமுறைகளை தனி ஒருவருக்கு உணர்த்தி, அவரைப் பாதுகாப்புடன், பத்திரமாக வாழும் முயற்சியில் ஈடுபடுத்துவதுதான் பாதுகாப்புக் கல்வியின் சிறந்த பணியாகும்.

சந்தரப்பங்களை சாதுரியமாகக் கையாண்டு சக்தியைப் பெருக்கிக்கொண்டு, பாதுகாப்பான பழக்க வழக்கங்களை மேற்கொண்டு, சந்தோஷமாக வாழ வைக்கப் பிறந்த பாதுகாப்புக் கல்வி, கடலில் செல்லும் கப்பலில் இருக்கும் உயிர்ப் படகாக, விமானத்தில் இருக்கும் பறக்கும் குடையாக விளங்கி வருகிறது.

3. பாதுகாப்புக் கல்வியின் தோற்றம்

பரந்து எல்லையற்றுக் கிடக்கும் உலகம், தூரத்தின், அளவில் சுருங்கிவிட்டது என்று கூறுவார்கள். விரைவான வாகன வசதிகள், நேரடி பேச்சு வசதி முறைகள், மற்றும் விஞ்ஞான வளர்ச்சி நிலைகளைக் குறிப்பிட்டுத்தான் அவ்வாறு கூறினார்கள். மகிழ்ச்சிக்குரிய முன்னேற்றந்தான் இது.

என்றாலும், வசதிகளுக்குள்ளேயே மறைந்து கிடக்கும் அபாயங்களையும் மக்களினம் அண்மைக் காலத்தில், அதிகமாக சந்திக்கத் தொடங்கியிருக்கிறது.

நாளுக்கு நாள், நிமிடத்துக்கு நிமிடம் பயங்கர விபத்துக்களும் அதிகமாகவே உண்டாகிறதே தவிர, குறைந்தபாடில்லை என்ற மனக்குமுறல், எல்லோரிடையிலும் எழத்தான் செய்திருக்கிறது.

ஆபத்துக்களில் அதிகம் துவளும் மனித இனத்திற்கு ஆதரவு ஊட்டவும், அதனைக்காக்கவும் அறிஞர் கூட்டம் மிகுந்த அக்கறையுடன் ஆராயத் தொடங்கியது. அந்த விழிப்புணர்ச்சியின் விளைவாகப் பிறந்ததுதான் இந்தப் பாதுகாப்புக் கல்வியாகும்.

தொழில்களில் மறுமலர்ச்சி தோன்றி, தொழிற்சாலைகள் பற்பல மேலை நாடுகளில் தோன்றியதும் அதனால் நாடுகளில் புத்துணர்ச்சி பிறந்ததும். நாம் அறிந்ததே!

கி.பி. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தொழிலாளர்கள் பட்ட துன்பமும் துயரமும் அளவிலா. வேலையோ அதிகம், கூலியும் குறைவு, தொழிலாளர் கூட்டமோ அதிகம். அதனால் வேலைக்குப் போட்டி மனப்பான்மை, தொழிலாளர்களிடையே நெருக்கடி, அந்த நிலையில், விபத்துக்கள் அதிகமாயின, போட்டி இருந்த தால் விபத்துக்கு ஆளானோர் வேலையை இழந்தனர். அந்த இடத்தில் வேறொருவர் என்று நியமிக்கப்பட்டனர்.

விபத்துக்கு ஆளானோர், வேலையும் இழந்து, கூலியும் இழந்து, மேலும், அதற்குரிய நட்ட ஈட்டுத்தொகையையும் இழந்து தவித்தனர். தொழிற்சாலை உரிமையாளர்களின் வக்கீல்கள் சாமர்த்தியத்தால், தொழிலாளர்கள் முறையீடு எந்தவிதப் பலன்களையும் அளிக்காது போயின. "விபத்துக்குத் தொழிலாளர்களே காரணம்" என்று முதலாளிகள் சாட்டிய குற்றத்துக்கு ஆளாகி தொழிலாளர்கள் தோற்றார்கள். துவண்டார்கள். அமெரிக்காவைவிட, இங்கிலாந்தில் இந்தக் கொடுமை அதிகமிருந்தது.

இருபதாம் நூற்றாண்டு வரை, இந்த நிலை நீடித்தாலும், பிறகு, 'இன்சூரன்ஸ்' மூலம் தொழிலாளர்கள் பாதுகாப்புப் பெற முடிந்தது. சட்டங்கள் பல ஆதரவாகத் தோன்றின. எந்திரங்களில் இருந்து விபத்து நேரா வண்ணம். பாதுகாப்புச் சாதனங்கள் தொழிலாளர் களுக்குத் தரப்பட்டன.

விபத்துக்குள்ளானவர்கள், முதலாளிகளின் அனுதாபத்தைப் பெறத் தலைப்பட்டனர். பண வசதியும் பெற முடிந்தது. இதனால், விபத்துக்கள் வரவரக் குறையத் தொடங்கின.

பிறகு தான், ஒரு முறையான பாதுகாப்பு விதி முறைகள் தோன்ற ஆரம்பித்தன. அந்தப் பாதுகாப்புக் கல்வியின் முக்கிய நோக்கமானது - பாதுகாப்பு முறைகளை அதிகமாகப் புரிந்துகொள்ளுங்கள். அதன்படி நடந்து கொள்ளுங்கள். அனுதினம் சிறந்து நில்லுங்கள். என்பதுதான்.

இத்தகைய இனிய வாழ்வு தரும் பாதுகாப்புக் கல்வி முறை, சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்தான், பள்ளிக்கூடப் பாடத் திட்டங்களில் ஒன்றாகப் புகுத்தப்பட்டுப் பெருவாரியான அளவில் முன்னேற்றமடைந்து வருகிறது.

4. பாதுகாப்புக் கல்வியும் பள்ளி மாணவர்களும்

சிக்கல் நிறைந்த குழ்நிலைகளுக்குள்ளே உலா வருகின்ற மாணவர்களும், இளைஞர்களும், சுற்றுப்புற அபாய நிலைகளிலிருந்து விடுபட வேண்டும்.

அவர்கள் இளமையிலே பெறுகின்ற இந்த அறிவுரைகளும், செயல்களும், செயல் பழக்கமுறை களும், பெரியவர்களாக வளர வளர, வளர்ந்து கொண்டே வந்து பொறுப்புள்ள பொதுமக்களாக, பற்றுமிக்கக் குடிமக்களாக பத்திரமாக வாழும் வாய்ப்பினை நல்கும்.

பள்ளிகளிலும், விளையாடுமிடங்களிலும், நீச்சல் குளங்களிலும், சாலைகளிலும், மற்றும் வீடுகளிலும் அவர்கள் பத்திரமாகப் பாதுகாப்புடன் வாழ்கின்ற முறைகளைக் கற்றுக் கொள்வதால், தன்னைப் பற்றிய அறிவு, தனது கடமை, தன் கடமையின் பெருமை, அது நாட்டுக்குப்பயன்படும் தன்மையெல்லாம் விளங்கும்.

ஆகவேதான், 'இளமையிற் கல்' என்பதுபோல, பாதுகாப்புக் கல்வியையும் பாடத்திட்டமாக்கி இருக்கின்றார்கள்.

உலகம் முழுதும் இந்த முயற்சி இந்நாளில் பேரளவில் முன்னேறி வருகிறது. பெரும் பயனை நல்கி வருகிறது. மாணவர்களின் அரிய ஒத்துழைப்பினைப் பெறுகிறது. இத்தகைய முயற்சியில் ஈடுபடும் நமது மாணவச் செல்வங்களும், நாட்டின் நாளைய நாயகர்களாக, தானைத் தலைவர்களாக மாறுகின்ற போழ்தில், மாபெரும் பயனை அளிக்கும்.

5. பாதுகாப்புக் கல்வியால் பெறும் பயன்கள்

1. பாதுகாப்புக் கல்விக்குரிய விதிமுறைகளை ஆழ்ந்த விருப்புடன் கற்றுப் பின்பற்றும்போதும், தொடர்ந்து நடக்கும் போதும் ஏற்படுகின்ற பழக்க வழக்கங்கள், நாட்டின் சட்ட திட்டங்களையும் அவ்வாறே ஏற்றுப், பின்பற்றி வாழ்கின்ற பழக்கத்தினை அளிக்கிறது.

2. தன் உரிமையை தெரிந்து கொண்டு, அதன் வழி தன்னைக் காத்துக்கொள்ள விரும்புவது போலவே, பிறரது உரிமையையும் புரிந்துகொண்டு, அவர்களை மதிக்கவும், வளர்க்கவும் போன்ற பண்புகளைத் தருகிறது.

3. இத்தகைய இனிய பழக்க வழக்கங்கள். சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதுடன், வலிமைமிக்க நாட்டையும் படைக்கின்றன.

4 'வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தூறுபோலக் கெடும் ' என்ற வள்ளுவர் வாக்கு போல, வருமுன்னர் காக்கின்ற வாழ்க்கையை வழங்கி நிற்கிறது. .

5. விளையாட்டுக்கள் மற்றும் வீரச் செயல்கள் செய்தால் விபத்து வராதா என்ற கேள்வியைக் கேட்டு விட்டு, வீணே ஒதுங்கிக் கொள்ளும் சோம்பேறிகளுக்கு, 'வேண்டிய திறமையுடன் விதி முறைகளைப் பின்பற்றிச் செய்தால் விபத்து நிகழாது தடுக்கலாம்' என்று கூறி, அஞ்சும் மனப்பான்மையை அகற்றி, விவேகத்தை வளர்க்கிறது.

6. பாதுகாப்புக் கல்வியால் இனிய சுயகட்டுப்பாடு (Self control) மிகுந்து வருகிறது.

7. அதனால், ஒன்று கூடி உறவாடுதல், ஒருவருக்கொருவர் உதவி செய்தல், பெருந்தன்மையுடன் பழகுதல், பொது இடங்களில் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுதல் போன்ற சிறந்த பண்புகள் செழிந்தோங்க உதவுகிறது.

8. விபத்து ஒன்று நடந்தால், அதனால் விபத்துக்கு உள்ளானவருக்கு மட்டும் நஷ்டமல்ல. அவருக்கு உடல் வருத்தம், ஊதியம் இழப்பு. முதலாளிக்கு உற்பத்திக் குறைவு. தொழிலில் விலைவாசி ஏற்றம், நாட்டிற்கு மூலப் பொருள் இழந்து வளர்ச்சி குன்றுதல். இப்படி ஒன்றுக்கொன்று சங்கிலித் தொடர்போல ஒரிடத்தில் நடக்கும் விபத்து, நாட்டினை எவ்வாறு உருக்குலைக்கிறது என்று தெள்ளத் தெளிய எடுத்துரைக்கிறது.

அதனால்தான், இக்கருத்துக்களை பொதுமக்கள் உணர்வதைவிட, பள்ளி மாணவர்கள் பெரிதும் உணர்ந்து பின்பற்ற வேண்டும் என்று நாட்டுப்பற்றுள்ள நல்லவர்கள் எல்லோரும் விரும்புகின்றனர். அதற்கும் காரணங்கள் உண்டு.

1. மாணவர்கள் தங்கள் உடலை நல்ல முறையில்பாதுகாத்துக் கொள்கின்றார்கள்.

2. எதிர்காலத்தை சிறந்த முறையில் உருவாக்கிக் கொள்கின்றார்கள்.

3. பொறுப்பான மன வளர்ச்சியைப் பெறுகின்றார்கள்.

4. பிறருக்கு உதவுகின்ற நல்ல பண்பினில் திளைக்கின்றார்கள். 5. விபத்துக்களிலிருந்து விலகிக் கொண்டாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் விபத்துக்குள்ளானாலும், ஏற்கனவே அதைப்பற்றி நன்கு அறிந்து கொண்டிருப்பதால், அதற்காக அனாவசியமாக அச்சப்படாமலும், அதே நேரத்தில் பிறரையும் அஞ்சாமல் இருக்கத் தைரியம் கூறுகின்ற தைரியம் பெறுகின்றார்கள்.

6. ஒழுங்குமுறையைப் பின்பற்றும்போது, நேர்கின்ற உண்மையான இன்பத்தின் பயனை நேரில் அனுபவித்து மகிழ்கிறார்கள்.

7. செய்கின்ற செயல் முறைகளில், குழப்பமோ கொள்கை பிணக்கோ இல்லாமல், சிறப்பாகச் செய்யும் ஆற்றலைப் பெறுகின்றார்கள்.

8. அவர்களால் விபத்தின் கொடுமையை உணர முடிகின்றது. அதாவது, விபத்து நேர்ந்து ஒருவர் சாகாமல் தப்பித்துக் கொண்டாலும், காலம் பூராவும் ஊனமுற்றவர்களாக, பார்வை இழந்தோ, பயங்கரத் தழும்பு கொண்டோ, செயற்கை கை, கால்கள் என்று கொடுமையான வாழ்வு வாழ்வதை இளமையிலே உணர்வதால்,தவிர்த்து வாழும் அறிவு தானாகவே ஏற்படுகிறது.

அத்தகைய அரிய வாழ்வையும், இனிய பயிற்சியையும் இதமாக அளிக்கின்ற பாதுகாப்பு முறைகளை மாணவர்கள் எங்கெங்கே எவ்வெவ்வாறு பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறைகளையும், கட்டுக்கோப்பான வழிகளையும் இனி காண்போம்.