பாபு இராஜேந்திர பிரசாத்/சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜன்பாபுவே!

விக்கிமூலம் இலிருந்து
11. சுதந்திர இந்தியாவின்
முதல் ஜனாதிபதி ராஜன்பாபுவே!

பீஹாரில் ஏற்பட்ட கொடுமையான பூகம்பத்தை விட மிகப் பெரியதாக, பயங்கரமாக, ஏறக்குறைய 25 ஆயிரம் மக்களுக்கு மேல் மாண்டதாகக் கணக்குக் கூறும் கோரமான பூகம்பம், பெலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகராக உள்ள குவெட்டாவில் ஏற்பட்டது.

குவெட்டா நிலப்பிளவால் துன்புற்ற மக்களுக்கு நேரிடையாகச் சென்று வேண்டிய நிவாரண உதவிகளை ராஜன் பாபு செய்யத் திட்டமிட்டிருந்தார். ஏனென்றால், பீகாரில் ஏற்பட்ட பூகம்ப அழிவுச் சக்திகளை நேரில் கண்டு நிவாரணத் தொண்டு புரிந்தவர் அல்லவா? எனவே, குவெட்டா மக்களின் துயரத்தை நீக்குவதற்கான திட்டங்களோடு புறப்படத் தயாரானார்.

ஆனால் பிரிட்டிஷ் அரசு, ராஜன் பாபுவையும், காந்தியடிகளாரையும் குவெட்டா பூகம்ப நிவாரண வேலைகளுக்குப் போகக் கூடாது என்று தடை செய்து விட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எந்தெந்த வகையில் உதவி செய்தது என்பதையும் மக்களால் அறிய முடியவில்லை. காரணம், பூகம்பச் செய்திகளைப் பத்திரிக்கைகள் பிரசுரிக்கக் கூடாது என்று அரசு தடைவிதித்துவிட்டதேயாகும். அதனால், பூகம்ப இடங்களிலே என்ன நடக்கிறது என்பதையே அறிய முடியாத நிலையாகி விட்டது. இவைதானே அடிமைத் தனத்தின் கொடுமைகள்?

இந்திய நாட்டின் சுதந்திரப் போரில் 1930 -ஆம் ஆண்டு முதல் மக்கள் தீவிரமாகப் போராடி வருவதை பிரிட்டிஷ் ஆட்சியினரால் அலட்சியப்படுத்தவோ, புறக்கணிக்கவோ முடியவில்லை. ஆனால், ஏதாவது சில சீர்திருத்தங்களை வழங்கி, பாரத மக்களை மகிழ்விக்க எண்ணியது அரசு!

1935 ஆம் ஆண்டிலே வெள்ளையராட்சி இந்தியருக்கு மாகாண சுயாட்சி அளித்தது. சுயாட்சி என்றால் என்ன? கவர்னருக்கும் வைசியராயிக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய ஆட்சிக்கு மாகாண சுயாட்சி என்று பெயர். அரசியல் திருத்தச் சட்டம் என்று பேசுவதெல்லாம் வெறும் கண்துடைப்பு வேலைதான் என்றுணர்ந்த காங்கிரஸ் சபை, அதை ஏற்றுக் கொள்ள அறவே விரும்பவில்லை.

அப்படியானால், காங்கிரஸ் கட்சியின் கருத்து என்ன என்வதை உலகமும், அரசாங்கமும் அறிய வேண்டுமல்லவா? ஆனால், மாகாண சட்டசபைகளின் தேர்தல்களில் போட்டியிட்டுக் காங்கிரஸ் கட்சி எட்டு மாகாணங்களில் வெற்றி பெற்று அமைச்சரவையை அமைத்தது.

பீகார் மாகாணத்தில் அமைந்த அமைச்சரவைக்கு ராஜன் பாபுவை முதல் மந்திரியாக இருக்கும்படி அங்குள்ள காங்கிரஸ்காரர்கள் வற்புறுத்தினார்கள். ஆனால் அவர் பிடிவாதமாக அதை மறுத்து விட்டார். எனக்குப் பதிலாக எனது நண்பர்களே மந்திரிப் பதவிகளை ஏற்பார்கள் என்று கூறினார். காரணம் என்ன? பதவிகளை விடக் கட்சித் தொண்டே முக்கியமானது என்றார். இவ்வாறு அவர் கூறியது பாபுவின் பெருமைக்குமேலும் பெருமை தந்தது. அதனால், அமைச்சர் அவையைக் கண்காணிக்கும் குழுவிற்கு பாபு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

ஒவ்வொரு மாகாணத்திலும் உருவான மந்திரி சபைகள் மிகத் திறமையாக நடந்து வந்தன. 1939 ஆம் ஆண்டு இரண்டாவது உலகப் போர் மூண்டது. இந்தியர்களையோ, மாகாணங்களில் பதவி வகித்த காங்கிரஸ் அமைச்சர்களையோ, மந்திரி சபையையோ கலந்து யோசியாமல், பிரிட்டிஷ் வைசியராய் இந்தியாவையும் போரில் சேர்த்து விட்டார். வைசியராயின் இந்த ஆணவப் போக்கைக் கண்டிப்பதற்காக மாகாண காங்கிரஸ் மந்திரி சபைகள் தங்களது பதவிளைத் தூக்கி எறிந்து விட்டன.

காந்தியடிகள் தனிமனிதர் சத்தியாக்கிரகம் ஒன்றைத் தொடங்கினார். ஏன் இதை ஆரம்பித்தார்? சத்தியாக்கிரகத்தை ஓர் இயக்கமாக்கி அதனால் பிரிட்டிஷ் அரசுக்குத் தொல்லைகளை உருவாக்கக் கூடாது என்று அவர் எண்ணினார். அதனால் தான் - தனி மனிதர் அறப்போரை நடத்தினார். இதை உணராத எதேச்சாதிகார வெள்ளையராட்சி அறப்போர் செய்தவர்களைச் சிறையில் அடைத்தது. அதே காரணத்தைக் கொண்டு ராஜன் பாபுவையும் சிறையிலே அடைத்தது அந்த ஆட்சி.

இதனை நன்கு உணர்ந்த மகாத்மா காந்தி, இதற்கு மேல் வெள்ளையராட்சிக்கு பணிந்து போகக் கூடாது என்றெண்ணி ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற தனது கடைசி அறப்போரை 1942 ஆம் ஆண்டு துவக்கினார்.

பம்பாய் மாநாட்டில் எல்லாத் தேசியக் காங்கிரஸ் தலைவர்களும் கூடினார்கள். ராஜன் பாபுவும் செயற்குழுவில் அமர்ந்திருந்தார். வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தைக் காந்தியடிகள் அந்த மாநாட்டில் முன் மொழிந்து போராட்டக் காரண காரியங்களை விளக்கிப் பேசினார். மாநாட்டிற்கு வந்திருந்த எல்லா தேசியத் தலைவர்களும் ஒருமுகமாக ஆதரித்தார்கள். அவரவர் கருத்துக்களையும், அதனால் உருவாகும் நன்மை தீமைகளையும் வெளிப்படையாகப் பேசி, தீர்மானத்தை ஆதரித்து வரவேற்றார்கள்.

இந்த மாநாட்டில் நடைபெற்ற எல்லா விவரங்களையும் இரகசிய ஒற்றார்கள் மூலமாகத் தெரிந்து கொண்ட பிரிட்டிஷ் அரசு, மறுநாளே எல்லாத் தலைவர்களையும் கைது செய்தது. ராஜன் பாபுவும் கைது செய்யப்பட்டார். அனைவரையும் ஆமதுநகர் சிறையிலே அடைத்தது. அந்த சிறையிலே உள்ள ஓர் உணவுண்ணும் அறையிலே தலைவர்கள் கூடிப் பேசியும் எதிர்காலத் திட்டத்திற்கு எவ்வழியும் புலப்படாமையால், மூன்றாண்டுகளாக இவ்வாறு சிறையிலே வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

மூண்டது இரண்டாவது உலகப் போர் - 1945 ஆம் ஆண்டில்! அரசு எல்லாத் தலைவர்களையும் சிறையிலே இருந்து விடுதலை செய்து வெளியே அனுப்பிவிட்டது. இந்தியர்களை இனிமேல் அடக்கி வைக்க முடியாது என்பதையும் அரசு திட்டவட்டமாக உணர்ந்து விட்டது.

அப்போது, இங்கிலாந்திலே தொழிற்கட்சி அரசு ஆட்சி செய்து கொண்டிருந்தது. வைசியராய் காங்கிரஸ் கட்சியையும் - முஸ்லீம் லீக் கட்சியையும் இடைக்கால அரசு அமைக்குமாறு கூறினார். வைசியராயைத் தலைவராகக் கொண்ட மந்திரி சபையில் இரண்டு கட்சியினரும் பங்கேற்றார்கள்.

ஆனால், முஸ்லீம் லீக் கட்சியின் பிடிவாதத்தால் இடைக்கால அரசு பணியாற்ற முடியவில்லை. லீக் கட்சியைச் சேர்ந்த மந்திரிகள் அடிக்கடி இடையூறுகளை எழுப்பி, நாட்டுப் பிரிவினைதான் எங்களுக்குத் தேவை என்று பிடிவாதம் செய்து இடைக்கால அரசை இயங்கவிடாமல் செய்து வந்தார்கள். அதனால், அரசு நிலைகுலையும் நிலையேற்பட்டது.

வைசியராயின் இடைக்கால அரசில் ராஜன்பாபு உணவு அமைச்சராக இருந்தார். அக்காலம் உணவுத் தட்டுப்பாடு இருந்த காலமாதலால் ராஜன் பாபு அதைத் திறமையாகச் சமாளித்தார். முஸ்லீம் லீக் கட்சியுடனும், அதன் தலைவரான ஜனாப் ஜின்னாவுடனும் சமரசம் கண்டிட ராஜன் பாபு பெரும் முயற்சி மேற்கொண்டார். ஆனால், முஸ்லீம்களுக்கென தனிநாடு தேவை என்ற கோரிக்கையை ஜின்னா கைவிடுவதாக இல்லை. அதனால், ராஜன் பாபு செய்த சமரசப் பேச்சு வெற்றி பெறாமல் போய்விட்டது.

பாரதம் சுதந்திரம் பெற வேண்டுமானால், ஓர் அரசியல் சட்டம் தேவை அல்லவா? அந்தச் சட்டத்தை எழுதுவதற்காக ஓர் அரசியல் நிர்ணய சபை அமைக்கப் பெற்றது. அந்தச் சபைக்குத் தலைமை ஏற்றிடத் தகுதி பெற்றவர் ராஜேந்திர பிரசாத் என்று ஒருமனதாக அந்தச் சபை தீர்மானம் செய்தது.

இடைக்கால அமைச்சரவையில் உணவு அமைச்சராக இருந்த ராஜன்பாபுவை அரசியல் நிர்ணய சபைத் தலைவராக்கினார்கள். இந்த அவை, டாக்டர் அம்பேத்கர், கே.எம். முன்ஷி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் போன்ற பேரறிஞர்களின் துணையோடு இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்தது.

இதற்கிடையில், முஸ்லீம் லீக் கட்சியின் வைராக்கியத்தால், காங்கிரஸ் கட்சி நாட்டுப் பிரிவினைக்குச் சம்மதிக்க வேண்டியதாயிற்று. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாள், இந்திய நாடு, இந்துஸ்தான், பாகிஸ்தான் என்ற இரு சுதந்திர நாடுகள் ஆயிற்று.

மகாத்மாக காந்தியடிகளின் தலைமையில் நடந்த அறப் போராட்டங்களால் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது. நாமும் இன்று சுதந்திர பாரதத்தில் வாழ்கின்ற நிலை உருவானது. காந்தியண்ணலின் உழைப்பு வெற்றி பெற்றது; பாரதத்தலைவர்கள், மக்கள் கனவுகள் சுதந்திரமாகப் பலித்தன.

ஆனால், பாகிஸ்தான் பிரிவினை என்பது கொடுமையானது தான், ‘எனது பிணத்தின் மீதுதான் பாகிஸ்தான் நாடு பிரிய வேண்டும்’ என்று மகாத்மாக காந்தி கூறுமளவுக்குத் தீமையானதுதான். என்றாலும் பிரிட்டிஷ்காரனிடம் அடிமை வாழ்க்கை வாழ்வதை விட, நாடு பிரிவினையே மேலானது என்று அந்த நேரத்துக்கேற்றவாறு காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தார்கள்.

இவ்வாறு அரும்பாடுபட்டுப் பெற்ற பாரத நாட்டிற்குத் தான் முதல் தலைவராக, முதல் ஜனாதிபதியாக பாபு இராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.