பாபு இராஜேந்திர பிரசாத்/குடியரசு விழா

விக்கிமூலம் இலிருந்து

12. குடியரசு விழா

இராஜேந்திர பிரசாத் அரசியல் நிர்ணய சபைத் தலைவராக இருந்து, மூன்றாண்டு காலமாக அரும்பாடுபட்டு அரசியல் சட்டத்தைத் தயாரித்தவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.

இந்த சபை அரசியல் சட்டத்தை தயாரிக்கும் போது, எவ்வளவோ கருத்து வேற்றுமைகள், தகராறுகள் அவரவர் இன சுயநலத் திட்டங்கள், யார் பெரியவர் என்ற மனப்போராட்டங்கள் எல்லாம் எழுந்தன. ஆனால், அவற்றை எல்லாம் ராஜன் பாபு பொறுமையோடும், பொறுப்போடும் அவரவரைச் சரி செய்து, சமரசம் உருவாக்கும் பேராற்றலோடு செயலாற்றிய திறமையால் அரசியல் சட்டமே உருவாகி வெளிவந்தது.

ஆனால், அரசியல் சட்ட உருவாக்கப் பெருமையை இன்று யார் யாரோ கொண்டாடிக் கோலாகல விழா எடுத்துக் கொள்கிறார்கள். அரசியல் சட்டத்தை உருவாக்கியதில் பெரும் பொறுப்பு டாக்டர் அம்பேத்கருக்கு உண்டு என்றாலும் அதை எல்லோரும் ஏற்கும் வண்ணம் செய்த பெருமை டாக்டர் ராஜன்பாபுவுக்கே உண்டு.

தனது சொந்தக் கருத்து எதற்கும் வளைந்து கொடுக்காமல், மாறுபட்ட கருத்துக்களை அரசியல் நிர்ணய மன்றம் ஏற்குமானால், ஏற்றுவிட்டால், அதை ராஜன் பாபுவும் ஏற்றுக் கொண்டு பொறுமையாகவும், திறமையாகவும், அருமையாகவும் சமாளிக்கும் மனதிடம் கொண்டவராக விளங்கினார்.

1950 ஆம் ஆண்டு, ஜனவரி 26 ஆம் நாளன்று, பாரதநாடு குடியரசு நாடாக மாறியது. குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடந்தது! இதில் ராஜன் பாபுவே போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார். பொதுவாழ்க்கைப் பொறுப்புடையவன் எவனாக இருந்தாலும் அவனுக்குத் தொண்டுள்ளமும், தியாகமும் தலைமையேற்று நடத்தும் பண்புமிருந்தால், அவனைத் தேடி நிச்சயமாக எப்படிப்பட்ட பதவியானாலும் வந்து சேரும்.

ஜனாதிபதி அதிகாரங்கள் ஒரு வரம்க்குட்பட்டவைதான் என்றாலும், பாரத அமைச்சரவைக்குத் தேவையான நேரங்களில், தேவையான அறிவுரைகளையும், உதவிகளையும் செய்து வந்தவர் பாபு. அவர், ஜனாதிபதி என்ற பெரும் பதவியிலே இருந்தாலும், அந்தப் பதவிக்கே அழகு சேர்த்தவர் என்பதற்கான எளிமையோடு வாழ்ந்தவர் ஆவார்.

மறுபடியும் இரண்டாவது முறையாவும் ராஜன் பாபுவே குடியரசுத் தலைவரானார். அரசியலில் அவருக்கு இருந்த ஒவ்வொரு காரியத்தின் மீதிருந்த கவனமும், விரோதியானாலும் சரி, அவனே நேராகவே பார்த்து சமரசம் செய்யும் பணிவான போக்கும், கருத்து வேறுபாடோ, முரண்பாடோ கொண்டு கட்சிப் பணிகளிலே இருந்து விலகி, மனம் குமுறும் தொண்டர்களையும், சில தலைவர்களையும் இணைக்கும் பாலமாக அவர் இயங்கும் கடமை ஆற்றலும்தான் ராஜன்பாபுவை மிகப் பெரிய மனிதராக மாற்றிற்று எனலாம்.

ராஜன் பாபுவின் உடன் பிறந்தவர் தமக்கை படவதிதேவி. அந்த அம்மையார் ராஜன் பாபுவைக் குழந்தையாக இருந்த நேரம் முதல் அவரது குடியரசுத் தலைவர் பதவி பெறும் காலம் வரை தனது கண்களைப் போல அல்லும் பகலும் பாதுகாத்து வளர்த்த அருந்தாய் அவர். அந்த அம்மையாரோடு தில்லி ராஜபவனத்தில் ராஜன்பாபு வசித்து வந்தார்.

அந்த அன்னை, பண்புடைய தாய், அதாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் அருமைத் தமக்கையான படவதிதேவி பெருமாட்டி, 1960 - ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதியன்று இரவு திடீரென்று இறந்து விட்டார்.

மறுநாள் ஜனவரி 26ஆம் நாள் குடியரசு நாள். ஆண்டுதோறும் இந்திய அரசு மிகக் கோலாகலமாக கொண்டாடி வரும் விழா நாள். மத்திய அரசு மட்டுமல்ல, ஒவ்வொரு மாநிலமும் மிகச் சிறப்பாக இந்த நாளை விழாவெடுத்துக் கொடியேற்றி, ராணுவ மரியாதைகள் ஏற்று மகிழும் நாள் என்பதை பாபு ராஜேந்திர பிரசாத் எண்ணி ஒரு முடிவுக்கு வந்தார்.

தனது தமக்கை இரவிலே இறந்து போன விடயத்தை அரசுக்கு அறிவிக்கவில்லை.நாட்டுக்கும் தெரியப்படுத்தவில்லை. வெளியே தமக்கையின் மரணச் செய்தி தெரிந்துவிட்டால், குடியரசு தினக் கொண்டாட்ட விழாக்களுக்கு இடையூறாக இருக்குமே, விழாவுக்குக் களங்கம் சூழுமே என்று சிந்தித்தார். அதனால் பாபு அதை வெளியிடாமல் மறைத்து வைத்து விட்டார்.

டாக்டர் ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவர் என்ற பெருமையோடு முப்படை அணிவகுப்புக்களைப் பார்வையிட்டார். ராணுவ வணக்கத்தை ஏற்றார். தனது நாடு எதிர்காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டுமென்ற திட்டங்களை விழா மேடையிலே பேசி விவரித்தார். விளக்கினார். ஜனகண மன பாடலும் முடிந்தது.

நேராகக் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி வந்தார். தனது தமக்கை படவதிதேவியின் மரணச் செய்தியை வெளியிட்டார்.

தனது சொந்த விவகாரங்களால் அரசாங்கப் பணிகளுக்கு தடையேற்பட்டு விடக் கூடாது என்பதுடன், இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் அந்தப் புனித விழாவிற்குத் தன்னால் களங்கமேதும் சூழ்ந்துவிடக் கூடாதே என்றும் முன்னெச்சரிக்கையுடன் பணியாற்றினார்.

இராஜன் பாபுவுக்கு 1962 ஆம் ஆண்டில் அரவது கட்சி, அரசியல், சமூக, கல்வித் தொண்டுகளைப் பாராட்டி, இந்தியாவின் மிகப் பெரிய விருதான ‘பாரத ரத்னா’ என்பதை வழங்கியதுடன் பாரத அரசு பாராட்டி அவருக்கு விழாவெடுத்து மகிழ்ந்தது. இவ்வாறு ராஜன்பாபு அமைதியின் உருவமாக, ஆற்றலின் திறனாக ஏறக்குறைய பதினாறு ஆண்டுகள் தில்லி மாநகரிலே தங்கி எல்லோருக்கும் நல்லவராகவும் வல்லவராகவும் வாழ்ந்தார்.