பாப்பா முதல் பாட்டி வரை/002-024

விக்கிமூலம் இலிருந்து

குழந்தைகள் தோட்டப்பள்ளி மயிலாப்பூர்

இப்பள்ளி 1937 செப்டெம்பரில் தொடங்கப்பட்டது. பண்டைய குருகுலக் கல்வியின் உண்மையை ஒட்டியும், பெருமை பெற்ற அறிவாளிகளான பால்கஹேப், புரோபெல் (ஜெர்மனி), பெஸ்டலாஜி (சுவிட்ஸர்லாந்து) மான்டிசோரி (இத்தாலி), டுயி (அமெரிக்கா) முதலானவர்களின் முறைகளை ஒட்டியும், இந்தியர் பண்பாட்டிற்கு ஒத்ததான கல்வி இங்கே போதிக்கப்படுகிறது. குழந்தைகள் வீட்டில் பழகுவது போலவே, ஆசிரியர்களுடன் பயமின்றிப் பழகுகிறார்கள். குழந்தைகள் துணிவுடனும் தன்னம்பிக்கையோடும், பொருள்களை ஆராய்ந்து அறிந்து கொள்ளக் கூடிய முறையில் இப் பள்ளி நடைபெறுகிறது.

இரண்டு முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்குப் புலன் பயிற்சி முக்கியமாகையால், விளையாட்டு முறைப்படி உபகரணங்கள், பொம்மைகள் கொண்டு பயிற்சி தரப்படுகிறது. குழந்தைகள் பொறுப்பை உணர்வதற்கான வாய்ப்புக்கள் பல கொடுக்கப்படுன்றன. சமூகப் பழக்க வழக்கங்களைக் கற்பிக்கக் கவனம் செலுத்தப்படுகின்றது. சிறு குழந்தைகள், இப் பருவத்தில் படிக்கவும், எழுதவும் கற்றுக்கொள்வதில்லை. ஆனால், மற்றச் சிறு குழந்தைகளுடன் வர்ணம் தீட்டியும், வீடு கட்டியும், பாடியும், ஆடியும் மகிழ்கின்றனர். குழந்தைகள் எப்பொழுதும், தனியாகவும், ஆசிரியருடனும், இயற்கைக் குழுவினருடனும் சேர்ந்து வேலை செய்வதில் ஊக்கம் பெறுகின்றனர்.

5-7 வயதுள்ள குழந்தைகள், படிக்கவும், எழுதவும் கூடிய கால அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கிறது. இசை, நாட்டியம். கைவேலை, காகித வேலை, படம் வரைதல் இவைகள், காலையிலும், மாலையிலும், கடைசி நேரத்தில் நடத்தப்படுகின்றன. 7-12 வயதுள்ள குழந்தைகளுக்காக இடைநிலைப் பள்ளியில் பாடமும் நடத்தப்படுகிறது.

பிருந்தாவனப் பயிற்சிப் பகுதி என்ற போதனா முறைப்பள்ளி ஒன்று, கிண்டர் கார்ட்டன் ஆசிரியர்களைத் தயாரிக்க இதனுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. கிண்டர் கார்ட்டன் பிரிவு, இடைநிலைப் பள்ளிப் பிரிவு, பிருந்தாவனப் பயிற்சிப் பகுதி, ஆகிய மூன்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவைகளே அல்லாமல் தாய்மார்களுக்குக் குழந்தைப் பராமரிப்பு வகுப்புக்களும் நடத்தப்படுகின்றன.