பாப்பா முதல் பாட்டி வரை/013-024

விக்கிமூலம் இலிருந்து

குழல் இனிது, யாழ் இனிது மழலைச் சொல் இனிக்க...

காது நோய்கள் குறித்த விழிப்புணர்வு, இந்தியர்களிடையே மிகக் குறைவு. பார்வைத் திறனுக்குக் கொடுக்கப்படுவதைப் போல இல்லாவிடினும், அதற்கடுத்த இரண்டாம் பட்ச முக்கியத்துவமும் காதுக்குக் கொடுக்கப்படவில்லை. பலத்த சத்தங்களையும், கேட்க இயலாத அளவு கேட்கும் திறனை இழக்க நேரிட்டால், மட்டுமே, மருத்துவரை ஆலோசிக்கும் எண்ணம் மக்களுக்கு தோன்றுகிறது.

பெற்றோரே : மற்ற குழந்தைகளைப் போலப் பேச முடியாமல் போனாலும் கூட, குழந்தைக்குக் குறை உள்ளதென பெற்றோர்கள் யூகிப்பதில்லை. மாறாக, சிறிது வயதானதும், குழந்தை பேசத் துவங்கிவிடும் என்ற தவறான நம்பிக்கையில், குழந்தையின் பேசும் திறனை வளர்க்கும் முக்கியக் காலகட்டத்தை வீணடித்து விடுகின்றனர்.

ஊனத்தின் கொடிய வடிவம்: காது கேளாமை, ஊனத்தின் மிகக் கொடுமையான வடிவம் செவிப்புலன் இன்மையால், ஒரு மனிதனின் வாழ்க்கைப் பாதையே மாறிவிடும். பிறவி முதல் சாகும் வரை, செவிடராகவே வாழ்க்கையை முடித்த நிலையை மாற்றி, காது கேளாதவர் எவரும் இல்லை எனக் கூறும் அளவுக்கு, நவீன விஞ்ஞானம் முன்னேறியுள்ளது. பிறவியில் இருந்தே காது கேளாமல் இருப்பது, பிறந்த பிறகு காது கேட்கும் திறனை இழப்பது, என காது கேளாமையை, இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

ஊமைக்கு முக்கிய காரணம் : காது கேளாமையால், தான் பேச்சு வருவதில்லை என்பதைப் பலரும் அறியாமல், உள்ளனர். ஊமை என்பது, காது கேளாமையால் ஏற்படுவதாகும். காது கேட்பதால் தான் குழந்தை பேசும் திறனைப் பெறுகிறது.

குழந்தைப் பருவத்தில் முதல் 6 ஆண்டுகள் பேச்சுக்கு மிகவும் முக்கியம். அக் காலத்தில மூளையின் பேச்சுக்குரிய பாகம் (Speech Area) காது கேட்டால் தான் வளரும். காது கேட்காமல் இருக்கும்போது, எந்த வித வளர்ச்சியும் இல்லாமல் போய்விடும். இதனால், தொடர்ந்து பேச்சு வராமலேயே போய்விடும்.

வாய் பேசாத, காது கேளாத குழந்தைகளக்குத் தக்க சமயத்தில், அதாவது 2 முதல் 3 வயதுக்குள் சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், எக் காரணம் கொண்டும் அவர்களைப் பேச வைக்க முடியாது. அதனால், குழந்தைகளை அழைக்கும் போது, சப்தத்தைக் கேட்டு திரும்பா விட்டாலோ, ஒன்றரை வயதுக்குப் பிறகு பேச்சு வராமல் இருந்தாலோ, உடனடியாகக் காது மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

3, 4 வயதுக்குப் பிறகு குழந்தை தானாகவே பேசிவிடும் என்ற தவறான நினைப்பில், பல மருத்துவர்களும், பெற்றோர்களும், பொன்னான காலத்தை வீணாக்கிக் குழந்தையின் எதிர்காலத்தைப் பாழடித்து விடுகின்றனர். பெற்றோர்களின் அறியாமையால், ஒரு இயல்பான குழந்தை, ஊனமுற்றதாக மாறி விடுகிறது.

முன்கூட்டியே வந்தால் : பேச்சுத்திறனை இழந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சையாலோ, காது கேட்கும் கருவியாலோ, பேச்சுப் பயிற்சி அளித்து நன்றாகப் பேச வைத்துவிடலாம். குழந்தையின் கேட்கும் திறனை, உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். பள்ளியில் ஆசிரியர் கூறுவதைச் சரியாகக் கவனிக்காமல் இருந்தாலோ, தொலைக்காட்சியில் கூடுதல் ஒலி வைப்பதாலோ காது கேட்காமல் இருப்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாம். காது கேளாத குழந்தையை 8, 9 வயதில் மருத்துவரிடம் அழைத்துச் செல்வதில் பயனில்லை.

காது கேளாமையைக் கண்டுபிடிப்பதற்கு, Audio Metry imedance. OAE/ BERA போன்ற பாிசோதனைகள் உள்ளன. பரிசோதனைகளில் காது கேளாமை உறுதி செய்யப்பட்டபின், நாட்களை வீணாக்காமல், உடனடியாக அறுவைசிச்சைசையோ, அல்லது காது கேட்கும் கருவியையோ, பொருத்தவேண்டும்.

முற்றிலும் காது கேட்காவிட்டாலும் கூட காக்ளியர் : (Cochlear) என்ற நவீன காது கேட்கும் கருவியைப் பொருத்தி, முற்றிலும் காது கேட்கும் திறனை இழந்ததை, குழந்தைகளையும், வயதானவர்களையும் காது கேட்க வைக்க முடியும். இக் கருவி, ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்படுகிறது. காதின் உள்புறம் உள்ள மிக நுண்ணிய உறுப்பான காக்ளியா (நத்தைக்கூடு) பழுதடைந்த நிலையில், அறுவைசிகிச்சை மூலம், அதனுள் 22 அல்லது 24 மின்தகடுகள் பொருத்தப்படும். ஓசைகளை மூளைக்கு எடுத்துச் செல்லும் செவி நரம்புகள், இந்த காக்ளியாவில் இருந்து துவங்குவதால், பழுதடைந்த காக்ளியாவில் இருந்து, இந்த மின்தகடுகள் செவி நரம்புகளை நேரடியாகத் தூண்டும். இக் கருவி பொருத்தும் சிகிச்சைக்கு ‘காக்ளியர் இம்பிளாண்ட்’, என்று பெயர்.

காதினுள் பொருத்தப்படும் மின் தகடுகளைத் தவிர, வெளிப்புறம் (Speech Processor) ஒலி இழுப்பு என்ற சாதனமும், மைக்ரோபோனும், பயன்படுத்தப்படுகின்றன. பிறர் பேசும் சப்தங்களை, அதன் அதிர் வெண்களுக்குத் தகுந்தவாறு, ஸ்பீச் பிராசஸர் டிஜிட்டல் சிக்னல்களாக மாற்றுகிறது. அதனுடன் இணைக்கப்பட்டு, காதின் பின்புறமாகத் தலை மீது, பொருத்தப்படும் டிரான்ஸ்மீட்டர் Transmitter இந்த டிஜிட்டல் சிக்னல்களை தோலுக்கு அடியில் பொருத்தப்படும் ரிசீவர் மூலமாக, அதனுடன் இணைக்கப்பட்டு, காக்ளியாவினுள் உள்ள மின் தகடுகளுக்கு அனுப்புகிறது. அங்கிருந்து செவி நரம்புகள், இந்த டிஜிட்டல் எலக்ட்ரிக்கல் சிக்னல்களால் தூண்டப்படுகின்றன. காக்ளியா பழுதடைந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள், வரை அனைவருக்கும் இந்தச்சாதனத்தை பொருத்த முடியும்.

கருவிலேயே தாய்க்கு ஏற்படும் பல நோய்கள், குழந்தையின் உள்காது வளர்ச்சியைப் பாதிக்கலாம். பிறந்தவுடனேயே பல குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சலாலும், உள்காது பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற குழந்தைகளுக்கு, அறுவை சிகிச்சை மூலம் இந்த நவீன கருவியைப் பொருத்திக் கேட்கும் திறனைப் பெறச் செய்யலாம். சில குழந்தைகளுக்குப் பிறவியில் இருந்தே - காதில் உள்ள எலும்புகள், மற்றும் செவிப்பறை இல்லாத நிலையில், நவின அறுவை சிகிச்சை மூலம், செயற்கை எலும்புகளையும், செவிப்பறையையும் பொருத்தலாம்.

கேட்கும் திறனைப் பெற்ற பின் இழப்பது : சில குழந்தைகளுக்கு நடுக்காதில் சளி கோர்ப்பதால், ஏற்கெனவே பாதிக்கப்பட்ட காது கேட்கும் திறன், முழுமையாகப் பாதித்து விடுவதுண்டு. கே.டி.பி லேஸர் எனும் நவீனக் கருவியால், ஜவ்வின் வழியாக நடுக் காதில் உள்ள சளியை நீக்கிவிட்டு, சின்தடிக் டெப்லானால் செய்யப்பட்ட சிறிய டியூப்களை இட்டவுடன், குழந்தை உடனடியாகக் கேட்கும் திறனைப் பெற்று விடும்.

பெரும்பாலான பெற்றோர்களும், மருத்துவர்களும் Imedance மற்றும் மைக்ராஸ்கோப் பரிசோதனையை மேற்கொள்ளத் தவறிவிடுவதால், நடுக் காதில் சளி அடைத்திருப்பதை அறியாமலேயே விட்டு விடுகின்றனர்.

பேச்சுப் பயிற்சி அவசியம் : கேட்கும் திறன் பெற்ற, பிறகு பேச்சுப் பயிற்சி கொடுப்பது மிகவும் அவசியம். குழந்தையின் வயது, மூளை வளர்ச்சி, பேச்சுத் திறன், காது கேளாமை, ஆகியவற்றைப் பரிசீலித்து, அதற்கேற்ப, ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் தனியாக, தக்க பயிற்சி அளிக்க வேண்டும். இத்துடன் பெற்றோர்கள், குழந்தை உறங்கும் நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் பயிற்சி அளித்தால், ஊமை என்ற ஊனத்தை உலகில் இருந்தே நீக்கிவிட முடியும்.

காதில், வெளிக்காது, நடுக்காது, உள்காது என 3 பாகங்கள் உண்டு. அலை ஒசைகள் (சப்தம்) வெளிக்காது மூலமாக வந்து நடுக்காதில் உள்ள முதல் எலும்பைத் தள்ளி, 2-வது எலும்பு வழியாக, 3-வது எலும்பை, பிஸ்டன் போல அசைய வைக்கிறது. அப்போது, உள்காதில் உள்ள நீர், அசைந்த நரம்பு வழியாக மூளைக்குச் செல்கிறது. வெளிக்காதில் அழுக்கு அல்லது மெழுகு காதை அடைக்கும் போது, கேள்வி பாதிக்கும். இதைச் சுத்தம் செய்த உடனே சரியாகி விடும்.

காதில் சீழ் வடிதல், சளி கோர்த்தல் மற்றும் எலும்பு வளர்ச்சி, போன்றவற்றால், பாதியில் கேள்வித்திறன் பாதிக்கப்படும்.

காதில் சீழ் வடிதல் : பெரும்பாலும் சளித் தொந்தரவே காதில் சீர் வடிவதற்குக் காரணம். மூக்கில் இருந்து, காதுக்குச் செல்லும் குழாய் மூலம், சைனஸ், மற்றும் மூக்கில் உள்ள சளி, சீழ் ஆகியவை நடுக்காதில் சேர்ந்து, பின்னர் செவிப்பறை இற்று, வெளியே வரத் துவங்கும்.

ஆரம்ப நிலையில் இதுபோன்று வரும் சீழ், சளித் தொந்தரவை, மருந்துகளாலோ, அறுவை சிகிச்சை மூலமாகவோ கட்டுப்படுத்தி விடுவது நல்லது. முக்கியமாக, காது வலி உள்ள குழந்தைகளுக்குச் சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

காதில் சீழ் வடிதல், செவிப்பறையை ஓட்டை ஆக்கிவிடலாம். இதே போல், காதிலுள்ள எலும்புகளும் இற்றுவிடலாம். இதனால், காது கேட்கும் திறனை இழப்பதோடு, சீழ் மூளைக்குப் பரவி, உயிருக்கு ஆபத்து விளைவிக்க வாய்ப்பு உள்ளது.

காதில் சீழ் வடிவதை கவனத்தோடு, மருந்தாலோ, அல்லது அறுவை சிகிச்சையாலோ நிறுத்தி, எலும்புகளையும், செவிப்பறையையும் (Tympanoplasty) என்ற அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ள வேண்டும்.

தங்கஎலும்பு : மூன்று எலும்புகளுமே பாதிக்கப் பட்டிருந்தாலும், அதற்கு 24 காரட், தூய்மையான தங்கத்தால் செய்யப்பட்ட செயற்கை எலும்பைப் பொருத்தி, காது கேட்கும் திறனைப் பெற முடியும். ஏற்கெனவே, சில முறை, அறுவை சிகிச்சை செய்து, காதில் சீழ் வடிவதை நிறுத்த முடியாவிட்டாலும், நவீன முறையில், மைக்ரோ சர்ஜரி செய்து, கேட்கும் திறனைப் பெற வைக்க முடியும்.

இதுபோல் பலமுறை அறுவை சிகிச்சை செய்தும், சீழ்வடிவதை முற்றிலும் நிறுத்தலாம்.