பாரதிதாசன்/இதழாசிரியர்

விக்கிமூலம் இலிருந்து

1O

இதழாசிரியர்

நறுமண இதழ்ப்பெண்ணே உன்
நலம் காணார் ஞாலம் காணார்


பாரதிதாசன் ஓர் எழுத்து மழை. அம்மழை பொழியாத ஏடுகள் தமிழில் எதுவும் இல்லை. புதிய கவிதை நடைக்குப் பாரதி எப்படி வெளிச்சமாக இருந்தோரோ, அதேபோல், இதழ்ப்பணிக்கும் அவரே வழிகாட்டி பாரதி நடத்திய இந்தியா ஏடு இவரை மிகவும் கவர்ந்தது. 'இந்தியா' ஏடு தாங்கி வந்த கவிதைகளும், அரசியல், சமுதாய, இலக்கியக் கட்டுரைகளும் பாரதிதாசனை மிகவும் கவர்ந்தன.

பாரதிதாசன் நடத்திய ஏடுகள் சில. ஆனால் அவ்வேடுகளில் அவர் ஆற்றிய பணி பல. "மொழிப்பணி, இனப்பணி, நாட்டுப்பணி, சமுதாயப்பணி, உலக அமைதிப்பணி, திருக்குறள் உரைப்பணி, கவிதைப்பணி, கட்டுரைப்பணி, எழுத்துச் சீர்திருத்தப்பணி, இலக்கணப்பணி, திறனாய்வுப்பணி, இசைப்பணி, நாடகப்பணி, திரைப்படக்கலைப்பணி, சொல்லாராய்ச்சிப்பணி, மதிப்புரைப்பணி, காப்பியப்பணி, சிறுகதைப்பணி, திறனாய்வுப்பணி, மருத்துவப்பணி, ஓவிய சிற்பக்கலைப்பணி எனப் பலவகையாக இடம் பெற்றுள்ளன. இதழ்களின் வழி எத்தகைய பணிகளை ஆற்ற இயலும் என்பதற்தோர் எடுத்துக் காட்டாகப் பாரதிதாசன் இதழ்கள் விளங்கியுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளார் முனைவர் சி. பாலசுப்பிரமணியம்.

பாரதிதாசன் புதுவை அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய காரணத்தால், சில ஏடுகளுக்கு மறைவாகவும், சில ஏடுகளுக்கு வெளிப்படையாகவும் ஆசிரியராக இருந்திருக்கிறார்.


*

பாரதிதாசன் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள்.

புதுவை முரசு - 1930

பெரியார் ஈ.வெ.ராவின் தன்மான இயக்கத்தில் தொடர்பும் ஈடுபாடும் ஏற்பட்ட பிறகு பாரதிதாசன் துவக்கிய ஏடு புதுவை முரசு. பெரியாரின் கருத்துக்களைப் பரப்புவதற்காகவே இந்த ஏடு தோற்றுவிக்கப்பட்டது. பாரதிதாசன் நண்பர்களான நோயேல், எஸ். சிவப்பிரகாசம் போன்றவர்களின் பெயர்கள் ஆசிரியர்களாக அச்சிடப்பட்டிருந்தாலும், அதன் உண்மையான ஆசிரியர் இவரே! தன்மான இயக்கத்தின் மத எதிர்ப்புக் கொள்கையை இவ்வேடு தீவிரமாகக் கடைப்பிடித்தது. பிரெஞ்சு அரசின் ஆதரவோடு புதுச்சேரியில் ஆதிக்கம் செலுத்திவந்த கத்தோலிக்கக் குருமார்கள் 'புதுவை முரசின் ஆசிரியராக அப்போதிருந்த நோயேல் மீது வழக்குத் தொடர்ந்தனர். நோயேல் பொறுப்பாசிரியர் பதவியிலிருந்து விலகும் நிலை ஏற்ப்பட்டது. பிறகு பாரதிதாசன் மாணவரான எஸ். சிவப்பிரகாசம் ஆசிரியர் பொறுப்பேற்றார். அவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டது. அதனால் அவரும் அப்பொறுப்பிலிருந்து விலகினார். 'சுயமரியாதைச் சுடர்' என்ற நூலை எழுதி வெளியிட்ட போது அந்நூலில் 'புதுவை முரசின் ஆசிரியர் திரு. எஸ். குருசாமி பி.ஏ. அவர்கட்குச் சமர்ப்பணம்' என்று குறிப்பிட்டு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் பாரதிதாசன். இதனால் ஒரு குறுகிய காலத்துக்குப் புதுவை முரசின் ஆசிரியராகத் திரு.எஸ். குருசாமி அவர்களும் இருந்திருப்பார் என்று தெரிகிறது. பாரதிதாசன் இதன் ஆசிரியராக இல்லாவிட்டாலும் கே.எஸ்., நாடோடி, அடுத்த வீட்டுக்காரன், சுயமரியாதைக்காரன், வழிப்போக்கன், கிண்டற்காரன், உண்மை உரைப்போன் போன்ற புனை பெயர்களில் தலையங்கம், கவிதைகள், கட்டுரைகள், விகடத்துணுக்குகள், மதிப்புரைகள், எழுதிவந்தார். இடையில் ஏற்பட்ட மத எதிர்ப்பாலும், வேறு பல சிக்கல்களாலும் புதுவை முரசு நின்றது.

ஸ்ரீசுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் - 1935

'கனக சுப்புரத்தினம் கவிபாட வல்லவன்' என்று நண்பர்கள் எதிரில் முதன் முதலில் பாரதி கூறியபோது 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்ற பாடலைச்சுப்புரத்தினம் பாடினார். அப்பாடல் "ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த சுப்புரத்தினம் எழுதியது" என்ற பரிந்துரையுடன் சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது என்று முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பே இந்த இதழுக்குப் பெயராக அமைந்தது எனலாம்.

தம்புசாமி முதலியார் என்பவர் எஸ்.ஆர். சுப்பிரமணியத்துக்கு வழங்கிய உருபா 5000 இவ்வேடு தோன்றக் காரணமாயிருந்தது. பத்திரிகை நடத்தும் பொறுப்பையும் இளைஞரான எஸ்.ஆர். சுப்பிரமணியம் ஏற்றார். தம்புசாமி முதலியார் உரிமையாளராகவும், எஸ்.ஆர். சுப்பிரமணியம் வெளியீட்டாளராகவும் பாரதிதாசன் ஆசிரியராகவும் பொறுப்பேற்கத் தனிப்படி நான்கணா விலையில் திங்கள் இதழகாகப் பிறந்தது. கவிதா மண்டலத்தின் நோக்கங்களாகப் பாரதிதாசன் வெளியிட்ட கருத்துக்கள் வருமாறு:

1. எண்ணங்கள் யாவும் கவிதை வடிவில் அமைந்திருக்க வேண்டும். எதைப்பற்றியும் எழுதலாம்.

2. எளிய நடையில் நவகவிதை சுவையொழுகும்படி தந்த ஸ்ரீசுப்பிரமணிய பாரதியாரைப்போல் நூற்றுக் கணக்கான பாரதிகள் நமது கவிதா மண்டலத்தில் தோன்ற வேண்டும்.

3. தேசியம், சமுதாய சீர்திருத்தம், பெண்ணுரிமை, இயற்கையழகு காதல், வீரம் பற்றிய பாடல்களை விரைந்து உதவுக. நாடக வடிவிலும் கவிதை இருக்கலாம்.

முகப்பில் பாரதியின் படமும், பாட்டினில் அன்பு செய் என்ற ஆத்திசூடி வரியும் இடம் பெற்றன. சுத்தானந்த பாரதி, தேசிக விநாயகம் பிள்ளை, சங்கு சுப்பிரமணியம், ப. ஜீவானந்தம் ஆகியோரும் இவ்வேட்டில் எழுதினர். பாரதியின் வெளிவராத பாடல்களும், ஆங்கில பிரெஞ்சுக் கவிஞர்களின் சிறந்த பாடல்களின் மொழிபெயர்ப்புகளும் இதில் இடம் பெற்றன. மொத்தம் ஏழு இதழ்களே வெளிவந்தன. பின்னர் கவிதா மண்டலம் கருத்து வேற்றுமையால் நிறுத்தப்பட்டது.


முல்லை - 1946

'இதன் ஆதரவாளர் கவியரசர் பாரதிதாசன்' என்ற முத்திரையோடும். பதிப்பாளர் ப. முத்தையா என்ற குறிப்போடும் சென்னை பிராட்வேயிலிருந்து பளபளப்பாக வெளிவந்தது 'முல்லை' எனும் ஏடு.

"தமிழின்பமே முல்லையின் குறிக்கோள். முல்லையில் சிறப்பாக நம் கவியரசரின் கவிதைகளும், அவர்களைப் பற்றிய கருத்துக்களும் முகிழ்த்து மலர்ந்து மணம்தரும். தமிழ் ஆக்கம் ஒன்றே முல்லையின் நோக்கம். அரசியற் சூழ்ச்சி சமயவாதம் இவற்றிற்கு இடமில்லை. இயன்றவரை தமிழைக் கையாளுவது. பொருட்செறிவும் கருத்து நயமும் இருப்பின் பிற சொற்களின் பகைமை இல்லை. எண்ணத்தில் கருத்தில் சொல்லில், செயலில் தமிழாட்சி நிலை பெறக் காண வேண்டும்" என்று முல்லையின் நோக்கமாகக் குறிக்கப்பட்டுள்ளது. ஆறு இதழ்கள் வெளிவந்தன. பாவேந்தரின் இதழ்க் கொள்கைக்கு மாறுபட்டு நடந்தமையால், பதிப்பாசிரியர் முத்தையாவுக்கும் இவருக்கும் ஆழமான கருத்து வேறுபாடு முளைத்துவிட்டது. முல்லை குறுகிய கால அளவிலேயே உதிர்ந்துவிட்டது. அண்ணா, திரு.வி.க., எம். தண்டபாணி தேசிகர், சுப. நாராயணன், புதுமைப் பித்தன், பேராசிரியர் க. அன்பழகன், மு. அண்ணாமலை ஆகியோரின் படைப்புக்கள் முல்லையில் சிறப்பாக வெளியிடப்பட்டன.

குயில் திங்களிதழ் - 1947

பாவேந்தருக்கு வழங்கிய நிதியிலிருந்து உருபா 2000 குயில் என்னும் கவிதை ஏடு நடத்த ஒதுக்கப்பட்டது. டி.என். இராமனும் இவரும் சேர்ந்து நடத்த ஏற்பாடு. பாரதிதாசனை ஆசிரியராகக் கொண்டு 'குயில்' என்னும் கவிதை ஏடு வெளிவரும் என்று நாளிதழ்களில் விளம்பரப் படுத்தப்பட்டன. சென்னையிலிருந்து முதல் குயில் இதழ் வெளிவந்தது. அவ்விதழின் உரிமயைாளர் டி.என். இராமன் என்றும், பாரதிதாசனுக்கு திங்கள் தோறும் ரூ.200 ஆசிரியர் பணிக்கு ஊதியமாக வழங்கப்படும் என்றும் அவ்விதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே பாரதிதாசன், "அந்தக் குயிலுக்கும் எனக்கும் யாதொரு தொடர்பும் இலலை, விற்பனையாளரிடம் வாங்கிய முன் பணத்திற்கு நான் பொறுப்பாளி அல்லேன் இனிநான் என் வாயிலாக வெளியிட இருக்கும் குயிலுக்கு ஆதரவுதருக" என்று நாளிதழ் அறிக்கை வெளியிட்டார். குயில் இதழின் உரிமை யாருக்கு என்ற வழக்கு நீதிமன்றம் சென்றது. டி.என். இராமன் வழக்கைக் கைவிட்டு விடுவதாகக் கூறினார். பாரதிதாசன் குயில் திங்களிதழ் புதுவையிலிருந்து வெளிவந்தது. இதற்குத் தடை விதிக்கப்பட்ட காரணத்தால் 01.10.1948இல் நிறுத்தப்பட்டது.

குயில் நாளேடு 1948

இந்த நாளேடு முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகத் துவக்கப்பட்டது. புதுச்சேரியின் தனி நலன்களையும், பிரெஞ்சு இந்தியாவின தனி நலன்களையும் வலியுறுத்த 13.9.1948 முதல் வெளிவந்தது. 14 நாட்களே நடைபெற்ற இந்த இதழ் 12.10.1948இல் நின்றது. இதன் நோக்கங்கள்:

1. இந்திய யூனியனிலிருந்து திராவிட நாடு விடுதலை பெற வேண்டும்.

2. உடனடியாகப் பிரெஞ்சு இந்தியா இந்திய யூனியனில் சேரக்கூடாது.

3. இந்திய யூனியனில் சேர மறுத்தபின் அது தன் விடுதலைக்குரிய இடையூறுகளைக் களைந்து கொள்ள வேண்டும்.

குயில் கிழமை இதழ்-1958

குயில் நாளேடு நிறுத்தப்பட்டு பத்தாண்டுகளுக்குப் பிறகு குயில் கிழமை இதழ் தோன்றியது. இது தொடர்ந்து இரண்டாண்டு ஏழு திங்கள் வெளி வந்தது. முதல் கிழமை இதழின் தலையங்கம் பின்வருமாறு:

"குயில் பாட்டும் உரைநடையுமாக வெளிவரும்; குயில் தமிழின் அருமை பெருமைகளைக் கூறும். தமிழ்மேல் பகைவர் வீசிய-வீசுகின்ற குப்பைகட்குப் புயலாகும். குயில் தமிழர்கள் நல்வாழ்வு பெறுவதில்தான் வெற்றி இருக்கின்றது என்ற உண்மையை உணரச் செய்யும்.”

இக்கிழமை இதழில் 'பாரதிதாசன் திருக்குறள்' என்ற தலைப்பில் குறள் வெண்பாக்களை எழுதினார். மொத்தம் 15 குறள் வெண்பாக்கள் இடம் பெற்றன.

தானும் உயிர்களும் வாழ்கஎனும் தன்மையே
தானம் எனும்நற் றமிழ்.

வள்ளுவர் உள்ளம் என்ற பெயரில் திருக்குறள் உரைப்பகுதி 1-12-1959 முதல் தொடங்கப் பெற்றுக் கிழமை தோறும் இதழில் இடம் பெற்றது. இவ்வேடு நிற்கும் வரையிலும் உரைப்பகுதியும் தொடர்ந்து வந்தது. சில குறட்பாக்களுக்குப் புதிய உரையும், பழைய உரைகள் சிலவற்றுக்கு மறுப்புமாக இவ்வுரை விளங்கியதால் தமிழறிஞரிடையே ஒரு பரபரப்பான வரவேற்பு இதற்கு இருந்தது. ஏறக்குறைய 83 குறளுக்குப் பாரதிதாசன் பரிமேலழகர் உரைக்கு மாறுபட்டும் உடன்பட்டும் கருத்துக்கள் வழங்கியுள்ளார். ஆனால் இவ்வுரைப் பணி முற்றுப் பெறவில்லை.

தலையங்கம், வெண்பா, வினா விடைப் பகுதி, துணுக்குச் செய்திகள், புதுவைச் செய்திகள், மாசுக்குள் மதிஎன்ற தலைப்புகளின் கீழும் நிறைய செய்திகள் வெளியிடப்பட்டன.

பாரதிதாசன் புதுவை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுச் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காரணத்தால் தமக்கென்று ஓர் இதழ் இருக்க வேண்டும் என்று எண்ணினார். எனவே, குயில் கிழமை இதழ் தோன்றியது. இது முன்பு பாரதிதாசன் நடத்திய இதழ்களை விடச் சிறப்பாக வெளிவந்தது. புதுச்சேரி மாநிலத்தின் அரசியற் செய்திகளைச் சூடாக அலசியது. தமிழறம், தமிழ் ஒழுக்கம், ஆகியவற்றைப் போற்றியது; சாதிசமயத்தைச் சாடியது. சமுதாயப் பொருளாதாரச் சிந்தனைகளை வாரி வழங்கியது.

குயில் திங்களிருமுறை இதழ், 1962

இத்திங்களிருமுறை இதழ் சென்னையிலிருந்து வெளிவந்தது. சென்னையில் பாரதிதாசன் தலைமையில் நிறுவப்பட்ட அனைத்துலகக் கவிஞர் மன்றத்தின் கவிதைக் குரலாக இது வெளிவந்தது, எட்டு இதழ்களே வெளிவந்தன. இந்த எட்டு இதழ்களும் மிகச் சிறப்பானவை. பாரதிதாசனின் பன்முக ஆளுமையையும் கொள்கை முதிர்ச்சியையும் இவ்வேடுகள் விளம்பரப்படுத்துகின்றன.

அரசியலிலும் கட்சிக் கோட்பாடுகளிலும் இருந்த இறுக்கம் நெகிழ்ச்சியுற்றதையும் நடுநிலை ஆய்வையும் இந்திய ஒருமைப் பாட்டையும் உலகளாவிய சிந்தனைகளையும் காணலாம்.

1962ஆம் ஆண்டு 'பம்பாய் அஞ்சுமன் தாராகி உருது' என்ற தாய்மொழிகாக்கும் நிறுவனம் இந்திய நாட்டின் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு கவிஞரை வரவழைத்துக் கவியரங்கம் ஒன்று நடத்தியது. தமிழின் சார்பாகப் பாரதிதாசன் அழைக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் பாடிய பாடல் இந்திய நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்திப் பாடப்பட்டது.

'இப்பரந்த நிலத்திற்கு நாவலந்தீவு என்று பெயர் வைக்க வேண்டும்; நாட்டில் கட்டாயக் கல்வி வேண்டும். மதவெறி தொலைக்கப்பட வேண்டும். இத்திட்டங்கள் நிறைவேறினால் நாட்டில் நிலையான ஒற்றுமை நிலவும்' என்று அவர் தமது பாட்டில் குறிப்பிட்டார். அப்பாடல் முழுதும் 1.7.62 இதழில் வெளியாகியுள்ளது.

'பிரிய நினைத்தவர் பிழை உணர்கின்றனர்'.
'இமையச் சாரலில் ஒருவன் இருமினான்
குமரி வாழ்வான் மருந்துகொண் டோடினான்'

என்ற வரிகள் தேசிய உணர்வோடு கூடிய புதிய நடைக் கருத்துக்கள். 21 இளங்கவிஞர்கள் அவர்களுடைய படத்தோடும் படைப்போடும் இந்த இதழ்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வோர் இதழிலும் சூடான தலையங்கங்களும், பாட்டுக்கிலக்கணம், கேட்டலும் கிளத்தலும் என்ற பகுதிகளும் இடம் பெற்றன. இளங்கவிஞர்களின் வளர்ச்சிக்காகப் புதுப்புது வெண்பாக்களும், கட்டளைக் கலித்துறைகளும், சந்தப்பாடல்களும் பாரதிதாசன் எழுதிக் குவித்தார்.



"https://ta.wikisource.org/w/index.php?title=பாரதிதாசன்/இதழாசிரியர்&oldid=1509752" இலிருந்து மீள்விக்கப்பட்டது