பாரதிதாசன்/திரைப்பட நாடக எழுத்தாளர்

விக்கிமூலம் இலிருந்து


9

திரைப்பட நாடக எழுத்தாளர்

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா?

புதுவைக் 'கெப்ளே' நாடக அரங்கில் கலைவாணர் என்.எஸ். கிருட்டிணனின் 'கிந்தனார் காலட்சேபம்' நடந்தது. காலட்சேபம் முடிந்ததும் அரங்கின் உள்ளே சென்று கலைவாணரைப் பார்த்தார் பாரதிதாசன். கவிஞரைக் கண்டதும் அவர் கையைப் பிடித்துக் கொண்டு "ஐயா! தங்கள் ஆசி பெறவே புதுவைக்கு வந்தேன்" என்றார் கலைவாணர்.

"சம்பாதிக்க வரவில்லையா?" என்றார் கவிஞர்.

"உங்கள் ஆசியைச் சம்பாதிக்கவே வந்தேன். ஐயா! புதுச்சேரி ஒரு குளம். அதில் தாங்கள் ஓர் தாமரைப்பூ இவ்வூர்க்காரர் உங்கள் பெருமையை உணராத தவளைகள்; ஆனால் நாங்கள் வண்டுகள். எங்கேயோ இருந்து இங்கு வந்து உங்கள் ஆசியாகிய தேனைப் பெற்றுச் செல்கிறோம்" என்றார் கலைவாணர்.

"பரவாயில்லையே! இவன் கூடக் கவி பாடுவான் போலிருக்கிறதே" என்றார் கவிஞர்.

பாரதிதாசனுக்கு இளமையிலிருந்தே நாடகத்தின்பாலும், நடிகர்கள்பாலும் அன்பும் ஈடுபாடும் அதிகம். தம் குழந்தைகளான சரசுவதியும், கோபதியும் நடிக்க வீரத்தாய் என்ற கவிதை நாடகத்தை எழுதினார். தம் நண்பர்கள் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் நடிப்பதற்குச் சிந்தாமணி என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தார், சேக்ஸ்பியரின் 'வெனிசு நகர வாணிகன்' என்ற நாடகத்தையும் தமிழ்ப்படுத்திக் கொடுத்தார்.

1934ஆம் ஆண்டு இரணியனைப் பெரிய தமிழ் வீரனாகச் சித்திரித்து 'இரணியன்' அல்லது 'இணையற்ற வீரன்' என்ற நாடகத்தை எழுதிப் பெரியார் தலைமையில் அரங்கேற்றினார். அந்நாடகத்தில் குத்துசி குருசாமி இரணியனாகவும், சத்தியவாணி முத்து இரணியன் மனைவியாகவும், திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியம் பிரகலாதனாகவும் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி. அந்நாடகம் அன்றைய தமிழக அரசால் தடை செய்யப்பட்டது.

நாடகங்களைப் பொறுத்த வரையில் இளைஞர்களுக்காகவும், பெரியவர்களுக்காகவும் நாற்பத்தெட்டு நாடகங்கள் எழுதியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை குமர குருபரர், தமிழச்சியின் கத்தி, கற்கண்டு, நல்ல தீர்ப்பு, லதாக்ருகம், செளமியன், அமிழ்து எது? சமணமும் சைவமும், அம்மைச்சி, தலைமலை கண்ட தேவர், கோயில் இருகோணங்கள், குடும்பவிளக்கும் குண்டுக்கல்லும், அமைதி (ஊமைநாடகம்), பிசிராந்தையார் என்பன. பிசிராந்தையார் நாடகம் சாகித்திய அகாதமியின் பரிசு பெற்ற நாடகம்.

நடிப்புக்கலை பாரதிதாசன் குருதியில் ஊறியது என்று சொல்லலாம். 1944ஆம் ஆண்டில் அவரே 'இன்ப இரவு' என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் துவக்கினார். நாமக்கல் செல்லப்ப ரெட்டியார் என்பவர் அக்குழுவை முன்னின்று நடத்தினார். பாரதிதாசன் படைப்புக்களில் உள்ள முத்தமிழ்க் காட்சிகளும் இன்ப இரவில் இடம் பெற்றன. கவிஞர் சுரதா, ஜனாதிபதி பரிசு பெற்ற ஒவியர் வேணுகோபால சர்மா, இசை மேதை ஞானமணி போன்றவர்களும் வேறுசில நாட்டிய மேதைகளும் அக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். முதன் முதலாக சேலம் நகரில்தான் 'இன்ப இரவு' அரங்கேறியது.

நாடகத்தில் ஈடுபாடு மிக்க பாரதிதாசனின் கவனம் திரைப்படத் துறையிலும் திரும்பியது. 1937 ஆம் ஆண்டு 'பாலாமணி அல்லது பக்காத் திருடன்' என்ற திரைப்படத்துக்குப் பாடல்களும், 1940 ஆம் ஆண்டில் 'கவி காளமேகம்' என்ற திரைப்படத்துக்குத் திரைக்கதை, உரையாடல் பாடல்களும் எழுதினார். 1938ஆம் ஆண்டு எழுத்தாளர் வ.ரா.வின் விருப்பத்திற்கிணங்க 'இராமானுஜர்' என்ற படத்துக்கும் பாடல்கள் எழுதினார். பாலாமணியில் டி.கே. சண்முகம் சகோதரர்களும், கவிகாளமேகத்தில் நாதசுவரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை இராசரத்தினமும் நடித்தனர்.

பாரதிதாசன் கலைத்துறை வாழ்வில் சேலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தார் எடுத்த ஆயிரம் தலைவாங்கிய அபூர்வசிந்தாமணி(1945) சுபத்திரா(1946) சுலோசனா(1947) வளையாபதி(1952) ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை உரையாடல் பாடல்கள் எழுதினார். இவருடைய 'எதிர்பாராத முத்தம்' என்ற காவியம் 'பொன்முடி' என்ற பெயரால்(1950) திரைப்படம் ஆக்கப்பட்டது.

நாடகப்பித்தும், திரைப்படத்துறையின் தொடர்பும் பாரதிதாசனை வன்மையாக ஈர்த்த காரணத்தால், திரைப்படம் பிடிக்கும் நோக்கத்தோடு 1961 ஆம் ஆண்டு அவர் புதுவையிலிருந்து சென்னைக்குக் குடி பெயர்ந்தார். அவர் கையில் திரைப்படம் எடுக்கப் போதிய வசதியோ, பொருளோ இல்லாத நிலையில் புதுச்சேரியில் இருந்த வீட்டை அடகு வைத்துக் கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு வந்தார். சில நண்பர்களையும் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டார். சென்னை தியாகராய நகர் இராமன் தெருவில் இருந்த 10 ஆம் எண் வளமனையின் முன்பகுதியை வாடகைக்கு எடுத்து அதில் தமது 'பாரதிதாசன் பிக்சர்ஸ்' என்ற திரைப்படக் கம்பெனியைத் துவக்கினார். பழைய பியட் கார் ஒன்று வாங்கி அதற்கு ஓர் ஒட்டுநரையும் அமர்த்தினார். அலுவலகத்துக்குத் தேவையான ஆட்களையும் ஏற்பாடு செய்து அமர்க்களப் படுத்தினார். முதலமைச்சர் காமராசரை அழைத்துப் பாரதிதாசன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் துவக்கவிழா நடத்தினார். 'பாண்டியன் பரிசு' என்ற தமது காப்பியத்தைத் திரைப்படமாக்குவது அவர் நோக்கம். திரைப்பட நடிகர்கள் இயக்குநர்கள் இசை வல்லுநர்கள் விழாவில் கூட்டமாகக் கலந்து கொண்டனர். காப்பியத் தலைவன் வேலன் வேடத்தில் சிவாஜி கணேசனும், காப்பியத் தலைவி அன்னம் வேடத்தில் சரோஜா தேவியும் நரிக்கண்ணன் வேடத்தில் எம்.ஆர்.இராதாவும் நடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களும் ஒத்துக் கொண்டனர்.

திரைப்படத்துறை என்பது ஒரு பெரிய கடல் போன்றது. பெரிய பணக்காரத் திமிங்கிலங்களும், சுறாமீன்களும் உலாவரும் இடம். அதில் தம்மை ஈடுபடுத்தி வெற்றி கொள்ளும் திறமை பாவேந்தருக்குக் கிடையாது. எவர் எதைச் சொன்னாலும் நம்பும் இயல்பினர் அவர். படம் எடுக்க வேண்டுமென்றால் நடிகர்களுக்கும், இயக்குநர்களுக்கும், படப்பிடிப்பு அரங்கிற்கும் முன்பணம் கொடுக்க வேண்டும். வரலாற்றுப் படமான பாண்டியன் பரிசைப் பெரும்பாலும் வெளிப்புறக் காட்சியில் படமாக்க கேவண்டும். இதை நிர்வாகம் செய்யப் பட்டறிவு மிக்க திரைத்துறை ஆட்கள் தேவை. கவிஞர் நிலைக்கு இதெல்லாம் சாத்தியமா?

திரைப்படத்திற்குரிய கதை, வசனம் எழுதித் தயார் நிலையில் உள்ளது. சென்னை வாழ்க்கை இவர் கொண்டு வந்த பணத்தை வேகமாகக் கரைத்தது. படப்பிடிப்பு துவங்கவில்லை. கூட்டாளிகள் முணுமுணுத்தனர். ஒரு கூட்டாளி வங்கியில் இருந்த பணத்தின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு புதுச்சேரிக்குச் சென்றுவிட்டார். காரோட்டி இவர் பெட்டியிலிருந்து கணிசமான தொகையை எடுத்துக் கொண்டு ஊருக்குச் சென்றுவிட்டான். புவனகிரி பாலு என்ற பங்குதாரர் பாரதிதாசன் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார்.

சிவாஜி கணேசன் வீட்டுக்கு அடிக்கடி சென்று, அவரைப் பாரதிதாசன் பார்த்துவிட்டு வருவார். சிவாஜி கணேசனும், இயக்குநர் பீம்சிங்கும் பாரதிதாசனுக்குக் கீழ்க்கண்டவாறு யோசனை கூறினர்;

"பாண்டியன் பரிசு வரலாற்றுப் படம். அதை எடுக்க நிறையப் பணம் செலவாகும். வெளிப்புறக்காட்சிகள், போர்க்காட்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். வேறு ஏதாவது சமூகப் படமாக இருந்தால் செலவு குறையும். வேறு ஒரு கதையைத் தேர்ந்தெடுங்கள்" என்றனர். பாண்டியன் பரிசு கைவிடப்பட்டது. முட்டாள் முத்தப்பா என்ற கதை தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்குக் கதை வசனம் எழுதத் தொடங்கினார் பாரதிதாசன். வீண் செலவின் காரணமாக நிறுவன ஆட்கள் நிறுத்தப்பட்டனர். காரும் விற்கப்பட்டது. இந்தச் சூழ் நிலையில் புலவர் பொன்னம்பலனாரின் மாணவரான பொன்னடியான் பாரதிதாசனின் துணைக்கு வந்து சேர்ந்தார்.

பாரதிதாசனுக்குத் திரைத் துறையில் சில நல்ல நண்பர்களும் இருந்தனர். அவர்களுள் நடிகர் எம்.ஆர். இராதாவும் ஒருவர். அவர் எப்போதும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். அவர் பாரதிதாசனிடம் ஒருநாள், "வாத்தியாரய்யா! உங்களுக்கு ஏன் இந்த வெட்டிவேலை. திரைப்படத்துறையில் உள்ளவர்களை நம்பி வீணாக ஏமாந்து போகாதீர், நீங்கள் கவிதை எழுதுவதில் கவனம் செலுத்துங்க” என்று கூறினார். பாரதிதாசன் கவனம் கவிதையின் பக்கம் மீண்டும் திரும்பியது. தாம் எழுதி வைத்திருந்த மணிமேகலை வெண்பா, கண்ணகி புரட்சிக் காவியம் இரண்டையும் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டார். அன்பு நூலக உரிமையாளர் திருவாளர் இராமரத்தினம் அவர்கள் அவ்விரண்டு நூல்களை அழகாக அச்சிட்டு வெளியிட்டார்.

வீண் செலவினங்களைக் குறைக்கும் முகத்தான், தாம் குடியிருந்த வளமனையின் முன்பகுதியைக் காலி செய்துவிட்டுப் பின்பகுதியில் இருந்த சிற்றில்லில் பாரதிதாசன் குடியேறினார். பாவேந்தர் நூல்களை வெளியிடும் உரிமை பெற்ற அன்பு நூலகத்தில் பணி செய்யத் திரு. பொன்னடியான் அனுப்பப்பட்டார். குயில் ஏடும் நிறுத்தப்பட்டது.

பாவேந்தரின் பாண்டியன் பரிசு என்னும் திரைப்படக் கனவு, முட்டாள் முத்தப்பா வாகத்தேய்ந்து உள்ளத்தினின்றும் மறைந்தது. ஆனால் அவர் வாழ்வின் கடைசி விருப்பமாகப் பாரதியார் வாழ்க்கையை யாவது திரைப்படம் ஆக்க வேண்டுமென்று விரும்பினார். உடல் நிலை சரியில்லாத நிலையிலும் இரவு பகலாகப் பாரதி படத்திற்கான திரைக் கதை வசனத்தை எழுதி முடித்தார். அப்படப் பிடிப்புக்கென ஒரு திட்டத்தையும் உருவாக்கினார். நாட்டு மக்களையே பங்குதாரர்களாக ஆக்கி, அவர்களிடமிருந்தே பணம் தண்டி இப்புனிதப் பணியை முடிக்க விரும்பினார். அதற்குரிய அறிக்கையும் வெளியிடப்பட்டு, நாடெங்கிலும் நண்பர்கள் மூலம் வழங்கப்பட்டது. அவ்வறிக்கை:

திரைப்படத்தில் மகாகவி பாரதி

தமிழ்ச் சான்றோர்களே!

உலகு தொடங்கிய நாள் முதல் மேம்பட்டு வந்த நம் தமிழ்மொழி - புலவர்களாலும் புரவலர்களாலும் வளர்ந்து வந்த நம் தமிழ்மொழி, பத்தொன்பதாம் நூற்றாண்டை அடைந்தபோது அந்தத் தண்டமிழ் உண்டா இல்லையா என்று நிலையை அடைந்திருந்தது. அந்நிலையில்,

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று எழுந்த மகாகவிபாரதி, அவர் சொன்னது போல இனிக்க எழுதிப் பாடிக் குவித்துத் தமிழுக்கோர் ஒளியை தமிழுக்கோர் எழுச்சியை, உண்டு பண்ணினார். தம் வறுமையிலும் இவ்வரிய தொண்டு பண்ணினார்.

இந்நாள் அவர் இளைஞர், முதியர், கல்விச் செல்வர், பொருட் செல்வர் அனைவர் உள்ளத்துள்ளும் வாழ்கின்றார் எனின் அது வியப்பன்று.

மகாகவி பாரதி வாழ்க்கை வரலாற்றை - பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்த திறத்தை, திரைப்படம் ஆக்க விழைந்தேன்.

“எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப்பெரும் தொழில் நாட்டுவம் வாரீர்”

(பாரதி)


இங்ஙனம் தங்கள்
பாரதிதாசன்


திருவாளர் எஸ். இராமநாதன் - முன்னாள் அமைச்சர்
திருவாளர் மணவாள இராமானுசம் - முன்னாள் துணைவேந்தர்
திருவாளர் வி.பி. இராமன் - சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
திருவாளர் அருண். - எழுத்தாளர் நூலாசிரியர்
திருவாளர் அகிலன் - எழுத்தாளர் நூலாசிரியர்
திருவாளர் பத்பநாபன் - துணையாசிரியர், சுதேசமித்திரன்
திருவாளர். முருகதாசா - திரைப்பட இயக்குநர்
திருவாளர். கிருஷ்ணசாமி - திரைப்பட இயக்குநர்
திருவாளர். நாரண துரைக்கண்ணன் - நூலாசிரியர், பத்திரிகாசிரியர்
திருவாளர். இராதாமணாளன் - துணையாசிரியர், நவ இந்தியா
திருவாளர். அம்மையப்பன் - கலை இயக்குநர்
திருமதி. தங்கம்மாள் பாரதி - பாரதி மகள்
திருமதி. சகுந்தலா பாரதி - பாரதி மகள்

தாம் எழுதிய பாண்டியவன் பரிசையும், பாரதி வரலாற்றையும் யாராவது ஒரு திரைப்பட முதலாளியிடம் கொடுத்து அவற்றைத் திரைப்படமாக்கியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் இவரே திரைப்படத் தயாரிப்பாளராக மாறியது அவருக்குத் தோல்வியையும் ஏமாற்றத்தையும் தந்தது.