பாரதிதாசன்/பெண்ணுரிமை பேணியவர்

விக்கிமூலம் இலிருந்து

8

பெண்ணுரிமை பேணியவர்

கல்வியில் லாத பெண்கள்
களர்நிலம்; அந்தி லத்தில்
புல்விளைந் திடலாம்; நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை

"ஒருவன் வெற்றிகரமாக வாழ்க்கை நடத்த உதவுபவள் மனைவிதான். மனைவியால்தான் ஓர் ஆடவன் ஒழுங்கும் தூய்மையும் பெறுகிறான்" என்று ஆங்கிலப் பேரறிஞர் பெர்னாட்ஷா கூறியுள்ளார். இதைப் புவிப்பெரியோன் கூறிய பொன்மொழி என்று குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.

சங்ககாலத்தில் பெண்கல்வி சிறப்பாகவே இருந்திருக்கிறது. ஆண்களுக்கு இணையாகப்பெண்களும் கவிபாடும் ஆற்றல் பெற்று விளங்கியதை அவர்கள் இயற்றிய பாடல்களும் இலக்கியங்களும் மெய்ப்பிக்கின்றன.ஆனால் காலப்போக்கில் அவர்கள்கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் உரிமைகள் மறுக்கப்பட்டன. பெண் போகப் பொருள் என்ற அளவிலே மதிக்கப்பட்டாள். சமூகச் சட்டங்கள் பெண்களை மிகவும் கேவலப்படுத்தின.அவள் தேரையாக, பொட்டுப் பூச்சியாக, ஊமையாக வாழும் அவல நிலை ஏற்பட்டது. புழுதி, குப்பை, உமியைவிடக் கேவலமாகப் பெண்ணினம் மதிக்கப்படும் நிலையை,

புழுதி குப்பைஉமி - இவற்றின்
புன்மைதனைக் களைந்தே
பழரசம் போலே அவற்றைப்
பயன்படுத்து கின்றார்!
அழகிய பெண்கள் - நமக்கோ
அழுகிய பழத்தோல்

என்று குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.

'கூண்டில் கிளி வளர்ப்போரும் குக்கல் வளர்ப்போரும் அவைகளின் விருப்பமறிந்து வேண்டியதைக் கொடுப்பர். ஆனால் கணவனை இழந்த பெண்ணுக்கு எது தேவையென்று யாரும் நினைப்பதில்லை' என்று வருந்துகிறார் கவிஞர்.

இளமைத் திருமணத்தால் ஏற்படும் கொடுமையை ஒரு தாய் வாயிலாக உள்ளம் உருகச் சித்தரிக்கிறார்.

கண்களோமருகனும் மகளும் கனிந்து
காதல் விளைப்பதைக் காண ஓடின
வாயின் கடைசியில் எச்சில் வழியக்
குறட்டை விட்டுக், கண்கள் குழிந்து
நரைத்தலை சோர்ந்து நல்லுடல் எலும்பாய்ச்
சொந்த மருகக் கிழவன் தூங்கினான்!
இளமை ததும்ப, எழிலும் ததும்பக்
காதல் ததும்பக் கண்ணிர்ததும்பி
என்மகள் கிழவன் அருகில் இருந்தாள்!

கைம்மை நிலையைப் பற்றிக் குறிப்பிட வந்த கவிஞர்,

கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே -இங்கு
வேரில் பழுத்த பலா -மிகக்
கொடியதென் றெண்ணிடப் பட்டதண்ணே -குளிர்
வடிகின்ற வட்டநிலா.

என்று பாடுகிறார். இரக்கமற்ற ஆண்கள் சமுதாயத்தைப் பார்த்து,

காதல் சுரக்கின்ற நெஞ்சத்திலே -கெட்ட
கைம்மையைத் துர்க்காதீர் -ஒரு
கட்டழகன் திருத்தோளினைச் -சேர்ந்திடச்
சாத்திரம் பார்க்காதீர்

என்று அறிவுரை கூறுகின்றார்.


வீட்டில் அடைபட்டிருக்கும் பெண்டிர் நிலையை விளக்கவந்த பாரதிதாசன்

தனித்துக் கிடந்திடும் லாயம் -அதில்
தள்ளியடைக்கப் படுங்குதிரைக்கும்
கனைத்திட உத்தரவுண்டு -வீட்டில்
காரிகை நாணவும் அஞ்சவும் வேண்டும்

என்று பாடுகிறார். இவ்வாறு வீட்டில் அடைபட்டு அடிமைபோல் வாழ்ந்த பெண்ணினம் அடைந்த இழிநிலையை 'நம்மாதர்' என்ற கவிதையில் அழகாகச் சித்தரித்துக் காட்டுகிறார்.

பழங்கல அறைக்குளே பதினைந்து திருடர்கள்
பதுங்கிடவும் வசதி யுண்டு
பதார்த்தவகை மீதிலே ஒட்டடையும் ஈக்களும்
பதிந்திடவும் வசதி யுண்டு
முழங்கள் பதினெட்டிலே மாற்றமில் லாவிடினும்
முன்றானை மாற்ற முண்டு
முடுகிவரும் நோய்க்கெலாம் கடவுளினை வேண்டியே
முடிவடைய மார்க்க முண்டு
தொழுங்கணவன் ஆடையில் சிறுபொத்தல் தைக்கவும்
தொகைகேட்கும் ஆட்கள் வேண்டும்
தோசைக் கணக்கென்று கரிக்கோடு போடவோ
சுவருண்டு வீட்டில் இந்த
ஒழுங்கெலாம் நம் மாதர் வாரத்தின் ஏழுநாள்
உயர்விரதம் மேற்கொள்வதால்
உற்றபலன் அல்லவோ அறிவியக் கங்கண்
டுணர்ந்த பாரத தேசமே!

பெண்டிரின் இவ்விழி நிலைக்கும் கொடுமைகளுக்கும் காரணம் கல்வியறிவின்மையே என்பதை உணர்த்த வந்த பாரதிதாசன் பெண் கல்வியின் இன்றியமையாமையை விளக்க அழகிய இசைப் பாடல்களை எழுதியுள்ளார். பள்ளிக்குச் செல்லமறுக்கும் தன் பெண் குழந்தைக்குத் தந்தை அறிவுரை கூறுவதுபோல அமைந்த பாடல் சிறப்பானது.

தலைவாரிப் பூச்சூடி உன்னைப்-பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை

சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ
சிந்தாத கண்ணீரை ஏன்சிந்து கின்றாய்?

என்று மகளைக் கேட்ட தந்தை அடுத்த வரிகளில் கல்வியின் சிறப்பையும் உயர்வையும் எடுத்துச் சொல்கிறார். மேலும் கல்வியை விலை கொடுத்து வாங்க முடியாது என்பதையும் விளக்குகிறார்.

விலைபோட்டு வாங்கவா முடியும்?-கல்வி
வேளைதோறும் கற்று வருவதால் படியும்
மலைவாழை அல்லவோ கல்வி-நீ
வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி!

இவ்வாறு கல்வியின் சிறப்பை விளக்கிய தந்தை, தன்மகள் சரியாகப் படித்து முன்னேறாவிட்டால் எதிர்காலச் சமூகம் தன்னைப் 'பொறுப்பற்ற தந்தை' என்று இகழும் என்பதையும் எடுத்துச் சொல்லிப் பெண்கல்வியை வற்புறுத்துகிறார்.

பாரதிதாசன் 'அன்னையின் ஆவல்' என்ற இசைப்பாடலொன்று எழுதியுள்ளார். அதில் ஓர் அன்னை 'உன்மகள் ஓவியம் கற்றாள்; காவியம் கற்றாள். அவள் எழுதிய கவிதை தாளிகையில் வந்தது. அதைப்படித்து ஊரில் ஏற்பட்ட கலவரம் அடங்கியது என்று கூறி ஊர் மக்கள் என்னைப் பாராட்ட வேண்டும். எதிர் காலத்தில் உன் கணவனை நீயே தேர்ந்தெடுத்து 'தேவை இவன்' என்று துணிவுடன் கூற வேண்டும். அவ்வாறு நீ கூறும் சொல் எனக்குக் கற்கண்டு போல் இனிக்கும்!' என்று கூறுகிறாள்.


ஓவியம்கற் றாள் உன்மகள் காவியம் கற் றாளெனவே
ஊரார் உன்றனை மெச்சும் போது - கண்ணே
உவகைதான் தாங்குமோஎன் காது நீ ஓர்
பாஎழுதும் திறத்தால் ஊர் அமைதி கொண்டதென்று
பாரோர் புகழ்வ தெந்தாள்? ஓது

மாவடு நிகர்விழிச் சின்னஞ் சிறுமியே -நீ
மங்கை எனும் பருவம் கொண்டு -காதல்

வாழ்வுக்கோர் மாப்பிள்ளையைக் கண்டு -காட்டித்
தேவை இவன் எனவே செப்பும் மொழி -எனக்குத்
தேன்கனி! தித்திக்குங்கற் கண்டு

இந்த வளர்ச்சியெல்லாம் பெண்களுக்குக் கல்வியால்தான் வரும் என்று கூறுகிறார் கவிஞர். அதனாற்றான் பெண்களுக்குக் கல்வியே சிறந்த அணிகலன் என்பதை

கற்பது பெண்களுக்காபரணம் - கெம்புக்
கல்வைத்த நகை தீராத ரணம்

என்று பாடுகிறார்.

செல்வர்கட்கு வரதட்சணை அவர்கள் தகுதியை வெளிப்படுத்தும் அளவுகோலாக இருக்கலாம். ஆனால் பெண்களைப் பெற்ற ஏழைகளுக்கு அது கசையடி.

படித்துப் பட்டம் பெற்று. அரசாங்கட் பணிகளில் இருக்கும் தம் பிள்ளைகளின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்வதில் பெற்றோர்கள் குறியாய் இருக்கின்றனர்.

பெண் படித்தவளா, அறிவுள்ளவளா, அழகானவளா, குடும்பத்துக் கேற்றவளா என்பதைவிட அவள் சுமந்துவரும் நகைகளின் எடை, அவள் கொண்டு வரும் வரதட்சணை, பேழைப்பணம் ஆகியவற்றின் அளவு ஆகியவற்றிலேயே அவர்கள் கவனம் உள்ளது. பெற்றோரின் இந்தப் பேராசையையும், அறிவீனத்தையும் 'பெண்குரங்குத் திருமணம்' என்ற பாடலில் எள்ளி நகையாடுகிறார் பாவேந்தர்.

ஏழை அண்ணாசாமி தன் மகனுக்குப் பணக்காரர் வீட்டில் பெண் தேடுகிறான். ஏழையின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட பணக்காரன் 'உன் மகனுக்குப் பெண் கொடுப்பதில் தடையேது மில்லை. ஆனால்...' என்று இழுக்கிறான்.

ஆனால் என்ன?’ என்று கேட்கிறான் ஏழை. அதற்குப் பண்ககாரன,

'பெற்ற பெண்ணைக் கொடேன்
வளர்க்கின்ற பெண்ணுண்டு
பேச்செலாம் கீச்'

என்றனன். அதற்கு அண்ணாசாமி "பெண்ணுக்குக் கீச்சுக் குரல் அவ்வளவுதானே? பரவாயில்லை. அதற்காக வரதட்சணையை வளர்ப்புப் பெண்ணுக்குக் குறைவாகவா கொடுக்கப் போகிறீர்கள்?" என்று சாதுரியமாகப் பேசினான். பணக்காரன்,

'என் பெண்
இரட்டை வால் அல்ல'

என்று சொன்னான்.

"உங்கள் பெண் அடக்கமானவள் என்பதை இவ்வாறு குறிப்பிடுகிறீர்கள். 'மகிழ்ச்சிதான்" என்றான் ஏழை அண்ணாசாமி.

'என்றன் பெண்
கால்வரைக்கும் கருங்கூந்தல்'

என்றான் பணக்காரன். "ஒட்டுமயிர் வைத்து அலங்கரித்துக் கொள்ளும் இக்காலத்தில் கால்வரையிலும் நீண்ட கருங்கூந்தல் சிறப்புத்தானே?" என்று மகிழ்ந்து கூறிய அண்ணாசாமி திருமணத்துக்கு நாள் குறித்தான். அண்ணாசாமியின் அறியாமை யையும் பேராசையையும் கவிஞர் கீழ்க்கண்ட வரிகளால் அளந்து காட்டுகிறார்.

கண்ணுள்ள மகனுக்குத்
தந்தைநிய மித்தபெண்
கழுதையா? அல்ல அதுதான்
பெரும்பணக் காரன்
வளர்த்திட்ட ஒற்றைவால்
பெட்டைக் கருங்குரங்கு

பீடுகய மரியாதை
கண்டுநல முண்டியிடும்
பெரியஎன் அன்னைநாடே!

பணக்காரன், தகுதி தெரியாமல் பெண்கேட்க வந்த ஏழை அண்ணாசாமியைக் கேவலப்படுத்த நினைக்கிறான். தன் எண்ணத்தைப் 'பேச்செலாம் கீச்', 'இரட்டை வால் அல்ல கால் வரைக்கும் கருங்கூந்தல்' என்ற சொற்களால் குறிப்பாக வெளிப்படுத்துகிறான்.

ஏழையின் பேராசை அவன் அறிவைக் குருடாக்கிவிட்டது. இப்பாடலில் அமைந்துள்ள கற்பனை மிகச் சிறப்பானது. பணக்காரனின் பேச்சுச் சாதுரியம் கவிஞரின் அறிவு நுட்பத்துக்கு அளவுகோல்.

பெண்ணியம் பற்றித் தீவிரமான கருத்துக்களை மற்ற எந்தக் கவிஞரும் கூறாத அளவுக்குப் பாரதிதாசன் கூறியுள்ளார். கைம்பெண் மறுமணம் பற்றி எழுத்தாளர் வ.ரா. போன்றவர்களும் வேறு சிலரும் உரைநடையில் புதினங்களாகவும், சிறுகதைகளாகவும் எழுதி யுள்ளனர். ஆனால் கவிதையில் கைம்மை மணத்தை முதன் முதலில் ஆதரித்து எழுதியவர் பாரதிதாசனே. எனவே பெண்கள் சமுதாயம் பாரதிதாசனுக்கு நிறையவே நன்றிக் கடன்பட்டிருக்கிறது.