உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதிதாசன்/மனித நேயர்

விக்கிமூலம் இலிருந்து

7

மனித நேயர்

"மானிடம் என்றொரு வாளும் - அதை
வசத்தில் அடைந்திட்ட உன்இரு தோளும்
வானும் வசப்பட வைக்கும் - இதில்
வைத்திடும் நம்பிக்கை, வாழ்வைப் பெருக்கும்".

பாரதிதாசன் தொடாத பொருளில்லை; அவர் தொட்டுப் பொன்னாகாதது எதுவுமில்லை. அவர் வாழ்க்கை பலபடிகளையும், பக்குவங்களையும் கொண்டது. ஆத்திகர், நாத்திகர், தேசியவாதி, பகுத்தறிவுவாதி, சீர்திருத்தவாதி, மனிதநேயர் என்ற பல படிகளைக் கடந்து வந்தவர். ஒவ்வொரு நிலையிலும் அவருள்ளத்தில் முகிழ்த்து எழுந்த கருத்துக்களைத் தமது கவிதைகளில் நிரல்படத் தொகுத்து முத்துக்களாக வரிசைப்படுத்தியுள்ளார். வாழ்க்கையில் எந்த நிலையிலும் அவர் மனிதநேயத்துக்கு மாறாகப் பேசியதில்லை.

அவர் வீரத்தை பற்றிப் பாடினார். ஆனால் போரையும் போர்க் கொடுமைகளையும் வெறுத்தார். மனிதர்களின் மடமையையும் அறியாமையையும் கடுமையாகச் சாடினார். ஆனால் மனிதநேயம் அவர் நூல்களில் எங்கும் பேசப்படுகிறது. உலக ஒற்றுமை என்ற பாடலில் மாந்தன் உள்ளம் எப்படி விரிவடைய வேண்டும் என்பதைப் படிப்படியாக விளக்கிச் செல்கிறார்.

"தன் பெண்டு பிள்ளைகளை மட்டும் நேசிப்பவன் உள்ளம் கடுகுபோல் சிறியது; தன் ஊரை மட்டும் நேசிப்பவன் உள்ளம் துவரை போன்றது. தனது நாட்டை மட்டும் நேசிப்பவன் உள்ளம் தொன்னை போன்றது. ஆயுதங்களை ஒதுக்கித் தீவிரவாதத்தை வெறுத்துத் தன் நாட்டில் வாய்த் திறத்தாலும் கைத்திறத்தாலும் அமைதியை நிலைநாட்டுபவர் உள்ளம் மாம்பிஞ்சு போன்றது. ஆனால் 'தாயுள்ளம்' என்ற உயர்ந்த உள்ளம் ஒன்று உண்டு" என்று கூறி அதைக் கீழ்க் கண்டவாறு விளக்குகிறார் கவிஞர்:

தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்
தொல்லுலக மக்களெல்லாம் 'ஒன்றே' என்னும்
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே
சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே!

"உலக மக்கள் எல்லாரும் இறைவன் படைப்பு என்றால், அவர்களுள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு தோன்றுவது எங்ங்னம்? ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளில் வேறுபாடு விளைவது எங்ங்னம்? ஒரு கொடியில் பலவிதப் பூக்கள் மலர்வது எப்படி?" என்று பகுத்தறிவு வினாவை எழுப்புகிறார் பாரதிதாசன்.

பொற்புடை முல்லைக் கொத்தில்
புளியம்பூ பூத்ததென்றால்
சொற்படியார் நம்புவார் - சகியே
சொற்படி யார் நம்புவார்?

மலத்தைத் தொட்டால் தொட்ட இடம் மட்டும் தீட்டு என்று கையைக் கழுவிக் கொள்கிறோம். ஆனால் சேரியில் வாழ்பவனைத் தொட்டால் உடம்பெல்லாம் தீட்டாவது எங்ங்னம்? என்று கேட்கிறார் கவிஞர்.

மலம்பட்ட இடம் தீட்டாம்
மக்கள் சிலரைத் தொட்டால்
தலைவரைக்கும் தீட்டாம்-சகியே
தலைவரைக்கும் தீட்டாம்

ஒரு பண்ணை முதலாளி, தனது பண்ணையைப் பார்வையிடச் செல்கிறான். பண்ணை வயலில் ஓர் உழவன் உழுது கொண்டிருக்கிறான். கடுமையான வெயில் சுடுகிறது. வெயிற்கொடுமையைத் தாங்க முடியாமல் பண்ணை முதலாளி பக்கத்தில் இருந்த மரத்து நிழலில் சற்று நேரம் நின்று பார்த்தான். அப்போதும் வெப்பம் தகிக்கிறது. பக்கத்திலிருந்த வளமனைக்குச் சென்றான். குளிர்வசதி பொருத்தப்பட்டிருந்த மாடி அறையில் படுத்து ஓய்வு பெற்றான். பிறகு மாலையில் மீண்டும் பண்ணைக்குச் சென்றான். உழவன் தொடர்ந்து உழுது கொண்டிருந்தான். பண்ணை முதலாளிக்குப் பெரிய வியப்பு! காலையிலிருந்து வெயிலில் நிலத்தை உழும் உழவன் எப்படிச் சாகாமல் இருக்கிறான் என்று வியந்தான். இப்பாடலின் தலைப்பு 'சாவாத உழவன்' என்பது.

வெயிலில் உழவன் வியர்க்க உழுதிடும்
வயல் அயல் மரத்து நிழலும் சுட்டதால்
குளிர்பொருந்து கூடம் சென்றுபின், மாலைஅவ்
வயிலிடை வந்தேன் உழவன்
உயிரோ டின்னும் உழுகின்றானே!

தனது துன்பத்தைப்போல், மற்றவர் துன்பத்தையும் கருதும் உயர் பண்பு வாய்த்துவிட்டால் உலகமக்களுக்குத் துன்பமில்லை என்பது வள்ளுவர்வாக்கு. இக்கருத்தை,

துன்பம் பிறர்க்கு நல் இன்பம் தமக்கெனும்
துட்ட மனோபாவம்
அன்பினை மாய்க்கும்; அறங்குலைக்கும்; புவி
ஆக்கந்தனைக் கெடுக்கும்.

என்று பாடுகிறார். ஓர் வல்லரசு மற்ற நாட்டின் பெருமையை அழிக்க நினைக்கும் கொடிய எண்ணம்தான் 'உலகத்தின்மீது விழும் பேரிடி' என்று கூறவந்த கவிஞர்

நல்லவர் நாட்டினை வல்லவர் தாழ்த்திடும்
நச்சு மனப்பான்மை
தொல்புவி மேல்விழும் பேரிடியாம்; அது
தூய்மைதனைப் போக்கும்

என்று பாடுகிறார். சிறிய நாடான வியட்நாம் மீது இரக்கமின்றிப் போர்தொடுத்து அந்நாட்டைச் சுடுகாடாக்கிய அமெரிக்க நாட்டுக்குக் கீழ்க்கண்டவாறு எச்சரிக்கை விடுக்கிறார் கவிஞர்.

அமெரிக்கக் காலடியில் வியத்நாம் மக்கள்
ஆயிரம் ஆண் டானாலும் பணிவதில்லை
திமிருற்ற ஏகாதி பத்தி யத்தைத்

திசைதோறும் எதிர்க்கின்றார்; அவர் நாட்டாரே!
ஊன்றி எழும் நிறவெறிப்போர்களைய வில்லை
உலகமக்கள் உறவென்னும் அன்பும் இல்லை
ஈன்றவரும் வெறுக்கும் வண்ணம் வியத்நாம் வீரம் இடுப்பொடித்துப் போடும் உனை எச்சரிக்கை

ஜப்பானில் இரோசிமா, நாகசாகியில் அணுக்குண்டுத் தாக்குதல் நடந்தபோது, அதன் கொடுமையை அறிந்து வருந்திய பாரதிதாசன்,

நானிலம் அனைத்தும் உள்ள
நச்சுப்பாம் பனைத்தும் கூட்டி
வானில் ஓர் அணுக்குண் டாக
வன்பகை நெருப்பழுத்தித்
தான்பொழிந் தானோ பாவி

என்றும்

இன்னும்ஓர் நூறாண் டுக்கும்
இரண்டுரின் சுற்றுப் பக்கம்
ஒன்றுமே முளையா தாமே
வாழ்தலும் ஒண்ணா தாமே

என்றும் உள்ளம் உருகப் பாடியுள்ளார்.

குவெட்டாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கொடுமைகளை எண்ணிப் பாரதிதாசன் எழுதிய பாடல்கள் உள்ளத்தை உலுக்கும் தன்மையன. நிலநடுக்கம், ஆழிப் பேரலை, எரிமலை வெடிப்பு போன்ற கொடுமைகளை முன்கூட்டி அறிவது கடினம். அவ்வாறு அறிந்தாலும் அதைத் தடுப்பது அவ்வளவு எளிதன்று. இக்கருத்தை

நாளைய காலையிலே-இந்த
ஞாலம் உடைவதெனில்
வேளை அறிந்ததனை - நீ
விலக்கல் சாத்தியமோ?

என்று கேள்வியாக எழுப்புகிறார். ஐம்பத்தாறாயிரவர் மடிந்த அந்தக் கோர சம்பவத்தின் காட்சியை


மாடம் இடிந்தனவாம் - அவை
மண்ணில் புதைந்தனவாம்
ஆடும் தரையோடும் -மெத்தை
அடுக்கொடிந் தனவாம்.
கூடத்து மக்களெலாம் - எழில்
கொழுஞ்சிப் பழம்போலே
வாட நசுங்கினராம் - ரத்த
வாடை எடுத்ததுவாம்

என்ற கண்ணீர் வரிகளால் படம்பிடித்துக் காட்டுகிறார். ஏழைகள் படும் துயரை இவர்போல சித்தரித்தவர் எவருமில்லை.


கந்தையணிந்தோம் இரு
கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்
மொந்தையில் கூழைப் பலர்
மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடப்போம்
சந்தையில் மாடாய் - யாம்
சந்ததம் தங்கிட வீடு மில்லாமல்
சிந்தை மெலிந்தோம் - எங்கள்
சேவைக்கெல்லாம் இது செய்நன்றிதானோ?

என்று ஏழைகள் கேட்கும் கேள்வி நம் உள்ளத்தைப் பிசைகிறது.

பொதுவுடைமைக் கொள்கையின்பால் பற்றும் ஈடுபாடும் கொண்டவர் பாரதிதாசன். "பொதுவுடைமைக் கொள்கை திசை யெட்டும் சேர்ப்போம்" என்ற முரசு கொட்டியவர்.உருசியத் தொழிலாளி ஒருவன் பொதுவுடைமைத் தாள் ஒன்றில் ஏவுகணை பற்றி எழுதிய கருத்துகள் இவருடைய சிந்தனையைக் கிளறின. "ஏவுகணைகளை ஏவுவதால் என்னைப் போன்ற ஏழைகளுக்கு என்ன கிடைக்கும்?" என்று அத்தொழிலாளி கேட்டிருந்தான். எனவே உருசிய நாட்டிலும் ஏழைகள் வருந்தும் நிலையில் இருந்து வந்ததை அறிந்த பாரதிதாசன், வல்லரசுகளின் போட்டியின் நிமித்தம் பெரும் செலவில் ஏவப்பட்ட ஏவுகணை முயற்சிகளைக் கண்டிக்கிறார். அறிவியல் வெற்றியை விட ஆன்ம நேயத்தைச் சிறந்ததாகக் கருதுகிறார் கவிஞர்:

எழில்நிலவு நோக்கி ஏவுகணைகள்
ஏவு கின்றதால் என்னைப் போன்ற
ஏழைகட் கென்ன கிடைக்கக் கூடும்?

வீட்டு வசதியை ஏவுகணை கூட்டுமா?
பணிமனைப் பெண்ணின் பாதுகாப்பிற்குப்
பறக்கும் நிலவு பண்ணிய தென்ன?

ஏவுகணை ஒன்றை இயற்று தற்குச்
செலவிடும் பெருந்தொகை இருந்தால்
உலவும் ஏழை மக்களுக் குதவுமே!

என்று கூறி உலக மக்களின் சிந்தனையையும் கிளறுகிறார். 'புதியதோர் உலகு செய்வோம்' என்று உலக மக்களுக்கு அறை கூவல் விடுக்கிறார்.

ஏறு வானை இடிக்கும் மலைமேல்
ஏறு! விடாமல் ஏறு! மேன்மேல்!
ஏறி நின்று பாரடா எங்கும்;
எங்கும் பாரடா இப்புவி மக்களைப்
பாரடா உனது மானிடப் பரப்பைப்
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
'என்குலம்’ என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்
அறிவை விரிவு செய்! அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
அணைந்து கொள் உன்னைச் சங்கம மாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
பிரிவிலை எங்கும்; பேதமில்லை
உலகம் உண்ணஉண்: உடுத்த உடுப்பாய்!

என்று உலகில் உள்ள மக்களுக்கு மனிதநேயத்தை ஊட்டுகிறார் கவிஞர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாரதிதாசன்/மனித_நேயர்&oldid=1509740" இலிருந்து மீள்விக்கப்பட்டது