உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதிதாசன் கதைப் பாடல்கள்/பெண்கள் விடுதலை

விக்கிமூலம் இலிருந்து


7 பெண்கள் விடுதலை

கிழக்கு வெளுக்கக் கிளிமொழியாள் தங்கம்
வழக்கப் படி, வீட்டு வாயிற் படி துலக்கிக்
கோலமிட்ட பின்பு குடித்தனத்துக் கானபல
வேலை தொடங்கி விரைவாய் முடிக்கையிலே
ஏழுமணிக் காலை எழுந்தாள். அவள் மாமி,
வாழுகின்ற பெண்ணாநீ வாடிஎன்றாள் தங்கத்தை,
இந்நேரம் தூங்கி இருந்தாயா? என் பிள்ளை
எந்நேரம் காத்திருப்பான் இட்டலிக்கும் காப்பிக்கும்?
நின்றபொற் பாவை நிலத்தில் விழச்செய்தாள்.



வாரிச் சுருட்டி மலர்க்குழலைத் தான் செருகிக்
கூரிய வேல்விழியாள் கொண்டதுயர் காட்டாமல்
தொட்ட பணிமுடிந்துச் சுள்ளி அடுப்பேற்றி
இட்டலியும் பச்சடியும் இட்டஒரு தட்டுடனும்,
காப்பி யுடனும் கணவன் தனி அறையில்
போய்ப்பார்த்தாள் இன்னும் பொழுது விடியவில்லை
என்று நினைத்தே இருவிழி திறக்காமல்
பன்றிபோல் பாயில் படுத்துப் புரளுகின்ற
அத்தான் நிலைகண்டாள். அந்தசொல் தான்நினையாள்
முத்தான் வாய்திறந்து மொய்குழலாள் கூறலுற்றாள்:
எட்டு மணி அத்தான் எழுந்திருப்பீர். தந்தையார்
திட்டுவார், கண்கள் திறப்பீர் விரைவாகக்

காலைக் கடன்முடித்துக் காப்பீர் விரைவாகக்
காலைக் கடன்முடித்துக்க் காப்பி முடிந்துடனே
வேலைக்குப் போவீரே என்று விளம்பக்
கழுதைபோல் தன்னிரண்டு கால்கள் உயர்த்தி
அழகுமனையாளை அப்படியே தானுதைத்தே
தூக்கத்தில் வந்தெனக்குத் தொல்லை கொடுக்கின்றாய்
போக்கற்ற நாயே நீ போடிஎனப் புகன்றான்.



செம்போடும் தட்டோடும் சேயிழையாள் கூடத்தில்
வெம்பும் உளத்தோடும் மீளவந்து பார்க்கையிலே
மாமனார் வந்து மலைபோலக் காத்திருக்க
ஊமைபோல் சென்றே உணவை எதிர்வைத்தாள்.
எங்கே உன் அத்தான்? எழுந்திருக்கவில்லையா?
எங்கிருந்து வந்தாய்நீ என்குடித்தனம்பெடுக்க?
இன்னுமாதுங்குகின்றான்? ஏன்குரங்கே? மூஞ்சியைப் பார்.
ஒன்பதுக் கெழுந்திருந்து பத்துமணிக்கு ஊண்முடித்துக்
கையில் குடையேந்திக்காலிற் செருப்பணிந்தே
ஐயாதம் வேலைக்குச் சென்றால் அடுத்த நாள்
வீட்டுக்குப் போக விடைபெறலாம் அல்லவோ?
காட்டுக் குறத்திபோல் கண்னெதிரில் நிற்காதே!
என்றுதன் பிள்ளை இழைத்த பிழைக்காகக்
கன்னல் மொழியாள்மேல் காய்ந்து விழுந்தே மாமன்
உண்ணத் தலைப்பட்டான் இட்டலியை ஒண்டொடியாள்
எண்ணத் தலைப்பட்டாள்தன்னிலையை! என்செய்வான்.

அத்தான் எழுந்தான்் அரைநொடியிற் பல்துலக்கிப்
பொத்தல்நாற் காலியின்மேற் பொத்தென்று குந்தினான்,
உள்ளே எழுந்தபடி ஓவென்று கூச்சலிட்டான்,
பிள்ளை நிலைகண்டும் பெற்றோர் அருகிருந்தும்
கொல்லைக் கிணற்றில் குடிதண்ணி மொண்டிருந்த
மெல்லி விரைந்துவந்து மேலே எடுத்துவிட்டாள்.

புண்பட்டதோஎன்று பூவையவள் பார்க்கையிலே
கண்கெட்டதுண்டோ? கடிய நீ ஓடிவந்து
தூக்கினால் என்ன? தொலைந்துபோஎன்றுரைத்துத்
தாக்கினாள், தையல் தலைசாய வீழ்ந்தெழுந்தாள்.



அப்போது மாமி அருமை மகனிடத்தில்
கொப்பேறிக் குந்தும் குரங்குபோல் உன் மனைவி
மேலேறிக் குந்தியே நாற்காலி மேற்பிரம்பைக்
கேலி பிறச் செய்யக் கிழித்துத் தொலைத்துவிட்டாள்
என்றாள். அருகில் இருந்திட்ட மாமனோ
நின்றால் அடித்திடுவான் நீபோ என்றே உரைக்க
அப்படியே பிள்ளையும் ஐந்தாறு தந்திடவே
பொற்பாவை கண்ணிற் புனல்சாய உட்சென்றாள்.



மாலை ஒருமணிக்கு மங்கை அடுப்பருகில்
வேலைசெய்யும் போது முற்பகுதி வீட்டறையில்
எண்ணெய்ஏ னத்தை எலிஉருட்டிப் போயிருக்கப்

பெண் உடைத்தாள் என்று பெரும்பழியை மாமி அவள்
சூட்டினாள் அந்தக் துடுக்குமகன் தாயின் சொல்
கேட்டுக் கயிற்றால் கிளிமொழியை ஒர்தூணில்
கட்டினான்; கட்டிக் கழியால் அடிக்கையிலே
மங்கையைப் பெற்றவர்கள் வந்தார். நிலைகண்டார்:

தங்கமே என்று தலைமீது கைவைத்துத்
தேம்பி அழுது, சிறிது பொறுப்பீரோ
கட்டவிழ்க்க மாட்டீரோ என்று கதற, அவன்
கண்ணான பெண்ணாளைக் கட்டவிழ்த்துவிடு என்றான்.
பெண்ணாளின் மாமியவள் “பெண்ணெனன்றால் இப்படியா!

கொண்டவனை மீறுவதா? கொண்டவனை அண்டாமல்
கண்டவனை அண்டிக் கதை பேசப்போவதுண்டா!
என்று பலபொய் எடுத்தெடுத்து வீசலுற்றாள்;
என்றைக்கும் வாழாள் இவள் என்றாள் மாமனும்.



அந்நாள் இரவில், அணங்குதனை, பெற்றவர்கள்
பொன்னையன் வீட்டுக்குப் போய், இதனைக் கூறி
எதுசெயலாம் என்று வினவ, அவன் சொல்வான்;
இதுவெல்லாம் முன்னாள் பிரமன் எழுதியதால்
ஆரும் அழிக்க முடியாது, கொண்டவனால்
நேருவதை நாம்தடுக்க எண்ணுவதும் நேர்மையில்லை,
பெண்டாட்டி என்றும் பிழைசெய்யக் கூடியவள்,
கொண்டவன் கொல்வான், அணைப்பான் அவன் விருப்பம்

இந்நாள் இதுவெல்லாம் நான்சொல்லும் சொல்லல்ல.
அந்நாள் மனுவே அழுத்தி எழுதியவை.
என்றுரைக்கப், பெற்றவர்கள் உள்ளம் எரிந்தவராய்க்
கன்றைப் பிரியும் கறவைஎனக் காலையிலே
பெண்ணைப் பிரிந்து பெருந்துன்பம் மேலிட்டு
வெண்ணெய்நல்லூர் வண்டியின் மேலேறிச் சென்றார்கள்.

வஞ்சி, மரச்சருகு வாதானூர்ச் சாலையிலே
கொஞ்சநஞ்சமல்ல குவிந்து கிடந்திடுசே
ஆலைச்சங் கூதும் அதிகாலையில் நீபோய்
நாலுசுமை கட்டிவந்தால் நாலுபணம் மீதியன்றோ?
என்றுரைத்தாள் மாமி. இதுகேட்ட தங்கம், தன்
பொன்னான அத்தான்்பால் போயுரைப்பா ளாயினாள்:
வஞ்சி, சருகுக்கு மாமியார் போ என்றார்,
கொஞ்சம் விலையே கொடுத்தால் அதுகிடைக்கும்;
பத்துக்கல் ஓடிப் பாடாய்ப்பாடு பட்டிட நாம்
சொத்தில்லா ஏழைகளா சொல்லுங்கள் என்றுரைத்தாள்.

நன்செயிலும் புன்செயிலும் நானுறு காணியுண்டு
இன்னுமுண்டுதோப்பும் இருப்பும். இருந்தாலும்
என்தாயின் சொல்லை நீ ஏன்மறுத்தாய்? நாள்தோறும்
சென்று சுமந்துவர வேண்டுஎன்றான் தீயவனும்!
நெஞ்சம் துடித்தாள். நிலைதளர்ந்தாள். அத்தானைக்
கெஞ்சினாள், அந்தப் பழக்கம் கிடையாதே!
ஒன்றியாய்ப் போவதற்கும் என்னுள்ளம் ஒப்பாதே.
சென்றுரைப்பீர் மாமியிடம் செல்லாவகைசெய்ய,
என்றான். பயனில்லை. இரவு கழிந்தவுடன்

சென்றாக வேண்டுமென்று சிங்கக் கணாக்கண்டாள்.

மாடியிலே மங்கையர்களோடிருந்து பந்தாடி
வாடினேன் என்று வலஞ்சுழியம் அப்பவகை
உண்ணென்று தாய்எனக்கே ஊட்டுகையில் நான் அவற்றை
மண்ணென் றுமிழ்ந்ததெலாம் எண்ணி அழுவேனா?
சூட்டுமலர் வாட, மணிச் சுட்டியொடு நான்களைந்தே
போட்டு வயிரப் புதுச்சுட்டி வாங்கியதை
எண்ணி அழுவேனா எருமைமுதுகென்புபோல்
பண்ணிய தங்கமணிக்கோவை பழையதென்று
வேலைக்கா ரிக்கு விடியலில் நான்தந்து
மாலையிலே மற்றொன்று வாங்கியதை எண்ணி
அழுவேனா? மான்குட்டிகேட்ட அளவில்
எழுதி வரவழைத்த தெண்ணி அழுவேனா?

அண்டைத் தெருவுக்கும் ஆடும் இருகுதிரை
வண்டிஎன்றால் வந்துநின்ற தெண்ணி அழுவேனா?
இந்நாளில் என் கணவர் இல்லத்தில் நாள்தோறும்
தொன்னையிலே நொய்க்கஞ்சி தூக்கிக்குடி என்னும்
அன்பில்லார்க் காட்பட்ட தெண்ணி அழுவேனா?
என்பொடிய நான் உழைப்பதெண்ணி அழுவேனா?
உள்ளம் அறிய ஒருபிழைசெய் யாவிடினும்
தள்ளித் தலையுடைப்ப தெண்ணி அழுவேனா?
வஞ்சிக் சருகெடுத்து வா' என்ற சொல்லுக்கே
அஞ்சி நடுங்குவ தெண்ணி அழுவேனா?
என்று துடித்தழுதான் ஏனழுதாய் என்றுரைத்த
முன்வீட்டு முத்தம்மா என்னும் முதியவள்பால்!
அவ்போது தங்கத்தின் அத்தானும் மாமனும்
எப்போதும்போல இருந்தார்கள் திண்ணையிலே!

ஆளவந்தார்க் காளாய் அமைந்திட்ட காவலர்கள்
வாள்இடுப்பில் கட்டிவலக்கையில் செப்பேட்டை
ஏந்தி, இவர்கள் எதிரினிலே வந்து நின்று
சூழ்ந்துள்ள மக்களுக்குச் சொல்வார் வெங்குரலில்:
பெண்டாட்டி என்ற பெயர்அடைந்த நாள்முதலே
ஒண்டொடிக்கும் சொத்தில் ஒருபாதிக் குண்டுரிமை!
தம்மனைவி செத்தால்தான் வேறுமணம் தான்செயலாம்
இன்னல் மனைவிக் கிழைத்தல் கொலைக்குற்றம்.
ஆளவந்தார் ஆணைஇதுவென்றே அறிவித்து.
வாளுருவிக் காட்டி வழிநடந்து சென்றார்கள்.



மங்கை அதுகேட்டாள், ம்ணவாளனும் கேட்டான்
அங்கிருந்த மாமனும் கேட்டாள், அவன் சென்று
தன்மனைவி காதில் தனியாக நின்றுரைத்தான்
முன்நிகழந்த துன்ப வரலாறு முற்றிற்றே,



பின்பொருநாள் வீட்டுப் பெருங்கணக்கு மாறுபட
என்னவகை கண்டறிவ தென்றறியா மாமன்தான்
தன் மகனைக் கேட்டும் சரிசெய்யத் தோன்றாமல்
அன்பு மருமகளை அண்டி “ஒருவிண்ணப்பம்
என்றான், மருமகளும் என்னவென்றாள்” இக்கணக்கில்
நின்ற பிழைதன்னை நேராக்க வேண்டுமென்றான்,
இன்னும் அரைமணிக்குப் பின்னால் நினைப்பூட்டிச்
சொன்னால் சரிபார்க்கத் தோதுபடும் என்றுரைத்தாள்.

அப்போது மங்கையின் அன்னையும் தந்தையும்
எப்போது போல்பார்க்க எண்ணியங்கு வந்தார்கள்.



வீட்டுத் தனியறையில் மெல்லிஇருந்தாள், தலையை
நீட்டாமலே வெளியில் நின்றிருந்தார் மாமனார்,
அத்தான் அலுவலகத்தினின்று வீடுவந்து
முத்துநகைக் காரி முகம்பார்க்க எண்ணி
மனையின் அறைக்குள் “வரலாமா“ என்று
தனிவிரலால்கதவைத் தட்டி வெளிநின்றான்,
காத்திருக்கச் சொன்னாள், கனிமொழியாள், தான் கணக்குப்
பார்த்தபின் பெற்றோரைப் பார்த்துப் பல பேசி
மாமன் கணக்கை வகைசெய்து காட்டிய பின்
நாமலர்ந்தாள் நல்லத்தானோடு.