உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதிதாசன் கதைப் பாடல்கள்/போர் மறவன்

விக்கிமூலம் இலிருந்து


4 போர் மறவன்

1

(காதலனின் பிரிவுக்கு ஆற்றாதவளாய்த்
தலைவி தனியே வருந்துகிறாள்.)

தலைவன்

என்றன் மலருடல் இறுக அணைக்கும்அக்
குன்றுதேர் தோளையும், கொடுத்த இன்பத்தையும்
உளம்மறக்காதே ஒருநொடியேனும்!
என்னை அவள் பிரிந்ததை எவ்வாறு பொறுப்பேன்!
வான நிலவும், வண்புனல், தென்றலும்
ஊனையும் உயிரையும் ஊக்கின் இந்தக்
கிளிப்பேச் சோஎனில் கிழித்தது காதையே!
புளித்தது பாலும்பூ நெடிநாற்றம்!

(காதலன் வரும் காலடி ஓசையிற் காதைச்
செலுத்துகிறாள்.)

தலைவி

காலடி ஓசை காதில் விழுந்தது.
நீளவாள் அரை சுமந்தகண்
ணாளன் வருகின்றான் இல்லை அட்டியே!

(தலைவன் வருகை கண்ட தலைவி
வணக்கம் புகலுகிறாள்.)

தலைவன்

வாழிஎன் அன்பு மயிலே, எனைப்பார்!
சூழும்நம் நாட்டுத் தோலாப் பெரும்படை
கிளம்பிற்று முரசொலி கேள்நீ விடைகொடு!

(தலைவி திடுக்கிடுகிறாள். அவள் முகம்
துன்பத்தில் தோய்கிறது.)

தலைவி

மங்கை என்னுயிர் வாங்க வந்தாய்!
ஒன்றும் என்வாய் உரையாது காண்க!

தலைவன்

பாண்டி நாட்டைப் பகைவன் சூழ்ந்தான்!
ஆட்டகை என்கடன் என்ன அன்னமே?
நாடு தானே நாட்டைக் காப்பவர்?
உடலும் பொருளும் உயிரும், ஈன்ற
கடல்நிகர் நாட்டைக் காத்தற் கன்றோ?
பிழைப்புக் கருதி அழைப்பின்றி வந்த
அழுக்குளத்தாரிய அரிவைநீ அன்றே!
ஒல்காப் பெரும்புகழ் தொல்பெரும் பழங்குடி
நல்லியல் நங்கை, நடுக்குறல் தகுமோ?
வென்றுவா என்று நன்று வாழ்த்திச்
சென்றுவர விடைகொடு சிரிப்பொடும் களிப்பொடும்!

தலைவி

பிரியாதுன்பால் பெற்ற இன்பத்தை
நினைந்துளம், கண்ணில் நீரைச் சேர்த்தது!
வாழையடிவாழைஎன வந்தஎன் மாண்பு
வாழிய சென்று வருக என்றது.

(தலைவன் தலைவியை ஆரத் தழுவிப் பிரியா
உளத்தோடு பிரிந்து செல்கிறான்.)

3

(பகைவன் வாளொடு போர்க்களத்தில்
எதிர்ப்படுகின்றான்; வாளை உருவுகின்றான்.
தலைவனும் வாளை உருவினான்.)

தலைவன்

பகையே கேள்நீ, பாண்டிமா நாட்டின்
மாப்புகழ் மறவரின் வழிவந்தவன்நான்!
என்வாள் உன்உயிரிருக்கும் உடலைச்
சின்ன பின்னம் செய்ய வல்லது!
வாளை எடுநின் வல்லமை காட்டுக.

4

(தலைவன் எதிரியின் வாள் புகுந்த தன் மார்பைக்
கையால் அழுத்தியபடி சாய்கிறான்.)

தலைவன்

ஆ என் மார்பில் அவன்வாள் பாய்ந்ததே!
(தரையில் வீழ்ந்து, நாற்றிசையும் பார்க்கிறான்.)

என்னை நோக்கி என்றன் அருமைக்
கன்னல் மொழியாள், கண்ணி உகுத்துச்
சாப்பாடும் இன்றித் தான்நின்றிருப்பாள்
என்நிலை அவள்பால் யார்போய் உரைப்பார்!

(வானில் பறவை ஒன்று மிதந்து போவதைக்
காணுகின்றான்.)

பறவையே ஒன்றுகேள்! பறவையே ஒன்றுகேள்!
நீபோம் பாங்கில் நேரிழை என்மனை,
மாபெரும் வீட்டு மணிஒளி மாடியில்
உலவாது மேனி, உரையாது செவ்வாய்,
இமையாது வேற்கண், என்மேல் கருத்தாய்
இருப்பாள், அவள்பால் இனிது கூறுக;
பெருமையை உன்றன் அருமை மணாளன்
அடைந்தான். அவன்தன் அன்னை நாட்டுக்கு,
உயிரைப் படைத்துஉன். உடலைப் படைத்தான்.
என்று கூறி ஏகுக, மறந்திடேல்

(தலைவன் தோள் உயர்த்தி உரத்த குரலில்)

பாண்டி மாநாடே, பாவையே!
வேண்டினேன் உன்பால் மீளாவிடையே!

1948