உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதியாரின் சின்னச் சங்கரன் கதை/2

விக்கிமூலம் இலிருந்து

இரண்டாம் அத்தியாயம் - பிஞ்சிலே பழுத்தது.

சின்ன சங்கரன் பிஞ்சிலே பழுத்து விட்டான். நம்முடைய கதாநாயகனுடைய பெயர் அத்தனை நயமில்லையென்றும், எவரும் கவலையுறலாகாது. போகப்போக இந்தப் பெயர் மாறிக்கொண்டே போகும். கடைசியில் படிப்பவர்கள் பயப்படும்படி அத்தனை படாடோபமாக முடியும்படி ஏற்பாடு செய்கிறேன்.

சின்ன சங்கரன், சங்கரன், சங்கரய்யர், சங்கர நாராயண ய்யர், சங்கரநாராயண பாரதியார் இத்யாதி இத்யாதி. சின்ன சங்கரன் கவுண்டனூர் இங்கிலீஷ் பள்ளிக்கூடத்திலே மூன்றாவது வகுப்பில் படிக்கிறான். அந்தக் காலத்தில் இதை "மிடில் ஸ்கூல்" என்பார்கள். பையனுக்கு வயது பன்னிரண்டு அல்லது பதின்மூன்றிருக்கும். இதற்குள் தமிழில் புலவராய் விட்டான்.

கவுண்டனூரில் ஜலம் குறைவு; பணம் குறைவு; நெல் விளைவு கிடையாது. வாழை, தென்னை, மா, பலா, இவையெல்லாம் வெகு துர்லபம்; பூக்கள் மிகவும் குறைவு; புலவர்களுக்கு மாத்திரம் குறைவில்லை. அந்தச் சரக்கு மலிவு.

தமிழில் சங்கரன் பலபல நுல்கள், பலபல காவியங்கள் படித்து முடித்திருந்தான். இவை பெரும்பாலும் "சிங்கார" ரஸம் மிகுந்திருப்பன. இந்த ஜாதிக் காவியங்கள்தான் சங்கரனுக்குப் பிடிக்கும்.

கவுண்டனூர்ப் புலவர்கள் எல்லோருக்கும் இப்படியேதான். மன்மத விகாரத்தைப் புகழ்ந்து பேசியிருக்கும் நூல்களும் தனிப்பாடல்களும் அவ்வூரிலே வெகு சாதாரணம். சங்கரனுக்கும் அவை வெகு சாதராணமாயின.

"பாஷகளிலே தமிழ் சிறந்தது. தமிழில் இருளப்ப நாயக்கன் காதல், செறுவூர்க்கோவை, பிச்சித் தேவன் உலா மடல் முதலிய காவியங்கள் நிகரற்ற பெருமையுடையன. இவற்றிலுள்ள சுவை உலகத்தில் வேறெதிலும் இல்லை" என்பது சின்ன சங்கரனுடைய கொள்கை. சங்கரன் கொஞ்சம் குள்ளனாக இருந்தபடியால் பள்ளிக்கூடத்தில் மற்றப் பிள்ளைகள் அவனுக்குச் "சின்ன சங்கரன்" என்று பெயர் வைத்து விட்டார்கள்.

தென்பாண்டி நாட்டிலே, பொதிய மலைக்கு வடக்கே இருபது காத தூரத்தில் பூமி தேவிக்குத் திலகம் (வைத்து அது உலர்ந்து போயிருப்பது) போலக் கவுண்டபுரம் என்ற நகரம் திகழ்ச்சி பெற்றது. அதைத்தான் பாமர ஜனங்கள் கவுண்டனூர் என்பார்கள். இந்நகரத்தில் நமது கதை தொடங்கும் காலத்திலே மகா கீர்த்திமானாகிய ராமசாமிக் கவுண்டரவர்கள் அரசு செலுத்தி வந்தனர். வெளியூர்ப் பாமர ஜனங்கள் இவரை "ஜமீந்தார்" என்பார்கள். கவுண்டபுரத்திலே இவருக்கு "மகாராஜா" என்றும் பட்டம். கவுண்டரின் மூதாதைகளின் மீது பண்டைக் காலத்துப் புலவர்கள் பாடியிருக்கும் "இன்ப விஸ்தாரம்" முதலிய நூல்களை அவ்வூர்ப் புலவர்களும், அவர்களைப் பின்பற்றி மற்ற ஜனங்களும் வேதம் போலக் கொண்டாடுவார்கள்.

ராமசாமிக் கவுண்டர் (இவருடைய முழுப் பெயரைப் பட்டங்கள் சகிதமாகப் பின்பு சொல்லுகிறேன்) தமிழில் அபிமானமுடையவராதலால், கவிதை பாடத் தெரிந்தவர்களுக்கு அவ்வூரில் மிகுந்த மதிப்புண்டு. சின்னச் சங்கரனுக்குப் பத்து வயது முதலாகவே கவி பாடும் தொழிலில் பழக்கம் உண்டாய் விட்டது. எப்போதும் 'புலவர்'களுடனேதான் சகவாஸம். ஒத்த வயதுப் பிள்ளைகளுடன் இவன் சேர்ந்து விளையாடப் போவதில்லை

எங்கேனும் மதன நூல்கள் வாசித்துப் பலர் உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருப்பதைக் கண்டால், இவனும் அங்கே போய் உட்கார்ந்து விடுவான்.

பள்ளிக்கூடத்துப் பாடங்களெல்லாம் கிருஷ்ணார்ப்பணந்தான். பூகோள சாஸ்திரம், கணக்கு, சுகவழி முதலிய எத்தனையோ பாடங்கள் கீழ் வகுப்புகளிலே இவனுக்குக் கற்றுக் கொடுக்க முயற்சி செய்தார்கள். ஒன்றிலும் இவன் கருத்தைச் செலுத்தவில்லை. இவனுக்கு எப்போதும் ஒரே சாஸ்திரம், ஒரே கணக்கு. ஒரே வழிதானுண்டு. "சாற்றுவதும் காமக்கலை, சாதிப்பதும் போற்றுவதும் காமனடிப்போது"

கவுண்டனூர்ப் 'புலவர்' கூட்டத்திலே சங்கரன் ஒருவனாகிவிட்டான். சுருக்கம் அவ்வளவுதான். இவன் பாட்டுக்களில் சில சில பிழைகள் இருந்த போதிலும் இவனுடைய சிறு வயதைக் கருதி அப்பிழைகளை யாரும் கவனிப்பதில்லை. சுவை மிகுதியைக் கருதி இவனை மிதமிஞ்சிப் புகழ்வோர் பலராயினர். ஒரு பாட்டில் எத்தனைக் கெத்தனை அசுத்தமான வார்த்தைகள் சேர்கின்றனவோ, அத்தனைக்கத்தனை சுவை யதிகமென்பது கவுண்டனூர்ப் புலவர்களுடைய முடிவு.

எனவே, பையன் நாவும் கையும் சிறிதேனும் கூசாமல் காமுகர்களுக்கு வேண்டிய பதங்களைத் தாராளமாகப் பொழிந்து பாடல்கள் செய்யலானான். சங்கரனுடைய பந்துக்களுக்கெல்லாம் இந்த விஷயத்தில் பரமானந்தம்.

இவனுக்கு மூன்று வயதிலேயே தாய் இறந்து போய்விட்டாள். தகப்பனார் பெயர் சுப்பிரமணிய ஐயர். அவர் ராமசாமிக் கவுண்டருடைய ஆப்தர்களிலே ஒருவர். இங்கிலீஷ் படித்துப் பழைய காலத்துப் பரீட்க்ஷை ஏதோ தேறி சர்க்கார் உத்தியோகத்துக்குப் போகாமல் வியாபாரஞ் செய்து சிறிது பணம் தேடி வைத்து விட்டார். இவருக்கு இரண்டாந்தாரம் விவாகமாய் விட்டது எனவே இவனது தாயைப் பெற்ற பாட்டனாரும், பாட்டியும் சங்கரனைப் பிராணனாகவே நினைத்து விட்டார்கள். சங்கரன் விளையாடுவதற்கு வேண்டுமென்று கேட்டால் தாத்தா தாம் பூஜை செய்யும் சிவலிங்கத்தைக் கூடக் கொடுத்து விடுவார். அத்தனை செல்லம். ஆனால் சிவலிங்கத்தைப் பற்றி யாதொரு விதமான பயத்துக்கும் இடமில்லை. பையன் தான் விளையாட்டில் புத்தி செலுத்தும் வழக்கமில்லையே!

பையனுடைய கையும் காலும் வாழைத்தண்டைப் போலிருக்கும். பிராணசக்தி வெகு சொற்பம். நெஞ்சு அரையே மாகாணி அடி அகலம். கண்கள் ருதுவாகி நோய் பிடித்திருக்கும் கன்னிகளின் கண்களைப் போலிருக்கும். முதுகிலே கூன். ஆணாயினும், பெண்ணாயினும் ஏதேனும் ஓர் புதிய முகத்தைப் பார்த்தால் கூச்சப்படுவான். தற்காலத்தில் நமது தேசத்துப் பள்ளிக் கூடங்களிலேயே பிள்ளைகளைப் பெண்களாக்கி விடும் திறமை உபாத்திமார்களுக்கு அதிகமுண்டு. அத்துடன் 'கவிதையுஞ்' சேர்ந்து விட்டது -- கவுண்டனூர்க் கவிதை. பையனுக்கு ஜீவதாது மிகவும் குறைந்து பொய்ம்மை நிறைந்த சித்த சலனங்கள் மிகுதிப்பட்டு விட்டன.

இந்த வினோதமான பிள்ளையைத் தாத்தாவும் பாட்டியும் ஏதுமறியாத வெறும் பொம்மை போலப் பாராட்டினார்கள். 'பால் மணம் மாறாத குழந்தை' என்பது அவர்களுடைய கருத்து. அவனுக்கென்று தனியாக ஒரு சுபாவமும், தனி சமஸ்காரங்களும் ஏற்பட்டதாகவே அவர்களுக்கு நினைப்பில்லை. அவனுடைய புலமை ஈசனால் கொடுகப்பட்ட வரம் என்றெண்ணினார்கள். ஏதுமறியாத குழந்தைக்கு இப்படிக் கல்வி ஏற்பட்ட ஆச்சரியத்தால் அவர்களுக்கு அளவிறந்த மகிழ்ச்சி யுண்டாயிறே யல்லாது அவன் 'பாப்பா' என்ற எண்ணம் மாறவில்லை. இரண்டு மூன்று தினங்களுக்கொரு முறை பாட்டி அவனுக்குச் 'சாந்தி' கழிப்பாள். சுண்ணாம்புக்கும் மஞ்சளுக்கும் செலவதிகம் - சங்கரனுக்குக் 'கண்' பட்டது கழியும் பொருட்டாக.

தகப்பனார் இவனைப் 'பையன்' என்று பேசுவார். இவன் முற்றிப்போன விஷயம் அவருக்குத் தெரியாது. இவனுடைய 'கீர்த்தி' புலவர்களுக்குள்ளே பரவி கவுண்டரவர்கள் செவி வரை எட்டிப் போயிற்று. இதிலிருந்து சுப்பிரமணிய அய்யருக்கு மிகுந்த சந்தோஷம்.

ஆனால் பள்ளிக்கூடத்துப் பாடங்களை நேரே படிப்பதில்லை யென்பதில் கொஞ்சம் வருத்தமுண்டு. இவனைப் பெரிய பரீக்ஷைகள் தேறும்படி செய்து சீமைக்கனுப்பி ஜில்லா கலெக்டர் வெலைக்குத் தயார் செய்ய வேண்டுமென்பது அவருடைய ஆசை. அதற்கு இவர் புலவர்களிடம் சகவாஸம் செய்வதுதான் பெரிய தடை யென்பது அவர் புத்தியில் தட்டவில்லை.

இவனுடைய மாமனாகிய கல்யாணசுந்தரம் முதலிய சில துஷ்டப் பையன்களுடன் சேர்ந்து 'விளையாடிக்' கெட்டுப் போகிறானென்றும், தாய் வீட்டார் கொடுக்கும் செல்லத்தால் தீங்கு உண்டாகிறதென்றும், இவ்விரண்டையும் கூடியவரை குறைத்துக் கொண்டு வரவேண்டுமென்றும் அவர் தீர்மானஞ் செய்தார்.

இனி, இவனுடன் ஒத்த வயதுள்ள பிள்ளைகள் ஆரம்பத்திலே சங்கரனை இகழ்ச்சியில் வைத்திருந்தார்கள். பிறகு, நாளடைவில் சங்கரன் ஒரு 'வித்துவான்' ஆகிவிட்டதைக் கண்டவுடனே அந்தப் பிள்ளைகளுக்கெல்லாம் அவனிடம் ஒருவிதமான பயமும் வியப்பும் உண்டாயின. 'இவன் நோஞ்சப் பயல்; ஒரு இழவுக்கும் உதவ மாட்டான்" என்று முன்போல வாய் திறந்து சொல்வதில்லை. மனதிற்குள் அவ்வெண்ணத்தை அடக்கி விட்டார்கள்.

பள்ளிக்கூடத்துக்குப் போனால் சங்கரனை உபாத்திமார், "புலவரே! பலகையின் மேல் ஏறி நில்லும்" என்பார்கள்.

பாடங்கள் நேரே சொல்லாதது பற்றி நமது சின்னப் புலவர் பலகையின் மேல் ஏறி நின்றுகொண்டு மனதிற்குள்ளே எதுகைகளடுக்கிக் கொண்டிருப்பார்.

உபாத்தியாயரும் கரும்பலகை மேல் கணக்குப் போட்டுக் கொண்டிருப்பார்.

இவன் "புலவன், அலவன், வலவன், பலகை, அலகை, உலகை நில், நெல், வில், பல், சொல், அல், எல், கல், மல், வெல், வல் கணக்கு, வணக்கு, இணக்கு" என்று தனக்குள்ளே கட்டிக் கொண்டு போவான்.

வாத்தியார் 002853...... என்று கணக்குப் போட்டு முடிவு கட்டிக் கொண்டு போகையில், சங்கரனை நோக்கி, "சங்கரன்! புள்ளியை எந்த இலக்கத்தின் மேல் போடுகிறது? சொல் பார்ப்போம்" என்பார்.

இவன் மறுமொழி சொல்லாமல் பித்துக் கொண்டவன் போலிருப்பான். அவர், "என்னடா, விழிக்கிறாய்?" என்று கேட்டுத் திட்டிய பிறகு அடுத்த பையனிடம் வினவுவார்.

அடுத்தவன் ஏது சொல்கிறான் என்பதைகூடக் கவனியாமல் இவன் மனதிற்குள் விழி, இழி, கிழி, பிழி, வழி, கழி, அழி, பழி, மொழி, ஒழி புள்ளி, உள்ளி, பள்ளி, அள்ளி, கள்ளி, தெள்ளி, வெள்ளி என்று அடுக்கிக் கொண்டே போவான்.

தமிழ்ப் பாடம் வரும்போது மாத்திரம் கொஞ்சம் கவனிப்பான். அதிற்கூட இலக்கணம் தடவும்.

இவருடைய தகப்பனாரின் மதிப்பையும் ராமசாமி கவுண்டர் இவனிடம் தயவு பாராட்டுகிறார் என்பதையும் உத்தேசித்து உபாத்திமார் இவனை அதிகமாக அடித்துக் கொல்வதில்லை. "இவன் கடைசிவரை உருப்பட மாட்டான்" என்பது அவர்களுடைய முடிவு.

ஊரிலுள்ள பெண் குட்டிகளெல்லாம் "சங்கரன் அப்பாவி" என்று சொல்லும். இவ்வாறு அவரவர் தத்தமக்கு ஒத்தபடி நினைத்துக் கொண்டிருக்கையில், சங்கரன் பிரத்யேகமாக ஒரு வகையில் முதிர்ந்து வருகிறான். எல்லார் விஷயமும் இப்படியேதான். ஒருவனுடைய உள்ளியல்பை மற்றொருவன் முழுதும் அறிந்து கொள்ளுதல் எக்காலத்திலும் சாத்தியம் இல்லை. அவனவனுடைய இயல்பு அவனவனுக்கே தெளிவாகத் தெரியாது. பிறனுக்கெப்படி விளங்கும்?

பிள்ளைகளையு பெண்களையும் பற்றித் தாய் தகப்பன்மார் கொண்டிருக்கும் எண்ணம் பெரும்பாலும் தப்பாகவே யிருக்கும். குழந்தைகளின் அறிவும் இயல்பும் எவ்வளவு சீக்கிரத்தில் மாறிச் செல்லுகின்றன வென்பதைப் பெற்றோர் அறிவதில்லை. "பாப்பா பாப்பா" என்று நினைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். பதினாறு, பதினேழு வயதாகும்போது, "அப் பாப்பா" அப்பப்பா என்கிறார்கள்.