பாரதியாரின் சின்னச் சங்கரன் கதை/3

விக்கிமூலம் இலிருந்து

மூன்றாம் அத்தியாயம் - ராமசாமிக் கவுண்டர் திருச்சபை.

மகாராஜ ராஜபூஜித மகாராஜ ராஜஸ்ரீ ராஜமார்த்தாண்ட சண்டப் பிரசண்ட அண்ட பகிரண்ட கவுண்டாதி கவுண்ட கவுண்டனூரதிப ராமசாமிக் கவுண்டரவர்களுக்கு வயது சுமார் ஐம்பதிருக்கும். நல்ல கருநிறம். நரைபாய்ந்த மீசை, கிருதா, முன்புறம் நன்றாகப் பளிங்குபோல் தேய்க்கப்பட்டு, நடுத் தலையில் தவடு பாய்ந்து, பின்புறம் ஒரு சிறிய முடிச்சுப் போட்டு விளங்கும் முக்கால் நரையான தலை. நெடுந்தூரம் குழிந்த கண்கள். இமைப் புறங்களில் 'காக்கைக்கால்' அடையாளங்கள். பொடியினால் அலங்கரிக்கப்பட்ட மூக்கு. வெற்றிலைக் காவியினாலும், புகையிலைச் சாற்றினாலும் அலங்கரிக்கப்பட்ட பற்கள். குத்துயிரோடு கிடக்கும் உதடு. ஆபரணங்கள் பொருந்திய செவிகள். பூதாகாரமான உடல். பிள்ளையார் வயிறு. ஒருவிதமான இருமல். அரையில் பட்டு ஜரிகை வேஷ்டி. விரல் நிறைய மோதிரங்கள். பக்கத்திலே வெற்றிலை துப்புவதற்கு ஒரு காளாஞ்சி. ஒரு அடப்பைக்காரன் - இதுதான் ராமசாமிக் கவுண்டர்.

இவர் காலையில் எழுந்தால் இரவில் நித்திரை போகும் வரை செய்யும் தினசரிக் காரியங்கள் பின் வருமாறு.

காலை எட்டு அல்லது எட்டரை மணி வேளைக்கு எழுந்து கைகால் சுத்தி செய்து கொண்டு ஒன்பது மணியானவுடன் பழையது சாப்பிட உட்காருவார். பழையதிற்குத் தொட்டுக்கொள்ள தமது அரண்மனையிலுள்ள கறிவகை போதாதென்று வெளியே பல வீடுகளிலிருந்து பழங்கறிகள் கொண்டு வரச் சொல்லி வெகு ரஸமாக உண்பார். (அதாவது காலை 'லேகியம்' முடிந்த பிறகு.. இந்த அபினி லேகியம் உருட்டிப் போட்டுக் கொள்ளாமல் ஒரு காரியங்கூடத் தொடங்க மாட்டார். பார்ப்பார் எடுத்ததற்கெல்லாம் ஆசமனம் செய்யத் தவறாதிருப்பது போல) பழையது முடிந்தவுடன் அந்தப்புரத்தை விட்டு வெளியேறி இவருடைய சபா மண்டபத்தருகேயுள்ள ஒரு கூடத்தில் சாய்வு நாற்காலியின் மீது வந்து படுத்துக் கொள்வார். ஒருவன் கால்களிரண்டையும் பிடித்துக் கொண்டிருப் பான். இவர் வெற்றிலைப் போட்டுக் காளாஞ்சியில் துப்பியபடியாக இருப்பார்.

எதிரே அதாவது உத்தியோகஸ்தர், வேலையாட்கள், கவுண்டனூர்ப் பிரபுக்கள் இவர்களில் ஒருவன் வந்து கதை, புரளி, கோள் வார்த்தை, ஊர்வம்பு, ராஜாங்க விவகாரங்கள் - ஏதேனும் பேசிக் கொண்டிருப்பான். சில நாட்களிலே வெளி முற்றத்தில் கோழிச்சண்டை நடக்கும்.

வெளியூரிலிருந்து யாரேனுமொரு கவுண்டன் ஒரு நல்ல போர்ச் சேவல் கொண்டு வருவான். அரண்மனைச் சேவலுக்கும் அதற்கும் சண்டை விட்டுப் பார்ப்பார்கள். அரண்மனைச் சேவல் எதிரியை நல்ல அடிகள் அடிக்கும்போது, ஜமீன்தாரவர்கள் நிஷ்பக்ஷபாதமாக இருபக்கத்துக் கோழிகளின் தாய், பாட்டி அக்காள், தங்கை எல்லோரையும் வாய் குளிர வைத்து சந்தோஷம் பாராட்டுவார். களத்திலே ஆரவாரமும் கூக்குரலும், நீச பாஷையும் பொறுக்க முடியாமலிருக்கும்.

பெரும்பாலும் சண்டை முடிவிலே அரண்மனைக் கோழிதான் தோற்றுப் போவது வழக்கம். அங்ஙனம் முடியும்போது வந்த கவுண்டன் தனது வெற்றிச் சேவலை ராமசாமிக் கவுண்டரவர்கள் திருவடியருகே வைத்து சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுவான்.

இவர் அச்சேவலைப் பெற்றுக் கொண்டு அவனுக்கு நல்ல பாகை, உத்தரீயம், மோதிரம், ஏதேனும் சன்மானம் பண்ணி அனுப்பி விடுவார். பிறகு பழைய அரண்மனைச் சேவலைத் தள்ளிவிட்டுப் புதிதாக வந்த சேவலைச் 'சமஸ்தான வித்வானாக' வைப்பார்கள். அடுத்த சண்டையில் மற்றொன்று வரும். எத்தனை வீரமுள்ள சேவலாக இருந்தாலும் கவுண்டனுர் அரண்மனைக்கு வந்து ஒரு மாதமிருந்தால் பிறகு சண்டைக்குப் பிரயோஜனப்படாது. ஜமீன் போஷணையிலேயே அந்த நயமுண்டாகிறது.

பகல் ஒன்றரை மணிக்கு ஸ்நானம் தொடங்கும்.. வெந்நீரிலேதான் ஸ்நானம் செய்வார். ராமசாமிக் கவுண்டர் ஸ்நானஞ் செய்வதென்றால், அது சாதாரணக் காரியமன்று. ஜலத்தையெடுத்து ஊற்றுவதற்கு இரண்டு பேர்; உடம்பு தேய்க்க இரண்டு பேர். தலை துவட்ட ஒருவன். உடம்பு துடைக்க ஒருவன். வேறு வேஷ்டி கொண்டு அரையில் உடுத்த ஒருவன். நேபாளத்து ராஜாவின் பிரேதத்துக்குக் கூட இந்த உபசாரம் நடக்காது.

ஸ்நானம் முடிந்தவுடனே பூஜை. ஜமீன்தார் பூக்களை வாரி வாரி முன்னே வைத்திருக்கும் விக்கிரகத்தின் மேல் வீசுவார். பூஜா காலத்தில் ஸ்தல பாகவதர்கள் வந்து பாடுவார்கள். சில சமயங்களில் சங்கீத விஷயமாக சம்பாஷணைகள் நடப்பதுண்டு. ஜமீன்தார் தாம் ‘கவனம்’ செய்த கீர்த்தனைகளைப் பாகவதர்களிடம் பாடிக் காட்டுவார். (சங்கீதத்திலும், சாஹித்யத்திலும் ராமசாமிக் கவுண்டர் புலி. அந்தச் சங்கதி ஞாபகமிருக்கட்டும்)

ஒரு சமயம் சமஸ்தான வித்வான் – அண்ணாதுரை ஐயர், தோடி நாராயணய்யங்கார், பல்லவி வேதாசலக் குருக்கள் முதலிய வித்வான்களனைவரும் வந்து கூடியிருந்தனர். அண்ணாதுரை அய்யரை நோக்கி ஜமீன்தார், “நான் அடாணாவில், “மானே யங்கே போனவகை என்னடி” என்ற வர்ண மெட்டிலே பரமசிவன் மேல் ஒரு சாஹித்தியம் பார்த்திருக்கிறேன். (ஒரு கீர்த்தனை செய்திருக்கிறேன் என்று அர்த்தம்). அதை நீங்கள் கேட்கவில்லையே” என்றார்.

“உத்தரவாகட்டும்” என்றார் பாகவதர். (சொல்லு கேட்போம் என்று அர்த்தம்)

உடனே ஜமீன்தார் ஜலதோஷம் பிடித்த பன்னிரெண்டு குயில்கள் சேர்ந்து சுருதியும், லயமும் ஒன்றுபடாமல் பாடுவது போன்ற தமது திவ்விய சாரீரத்தை எடுத்துப் பின் வரும் கிர்த்தனையைப் பாடலாயினர். ஒரு பாகவதர் தம்பூரில் சுருதி மீட்டினார். ஜமீன்தார் அந்தச் சுருதியை லக்ஷ்யம் பண்ணவில்லை. ராகம்: அடாணா தாளம்: ரூபகம். (மானே யங்கே போனவகைபோனவகை யென்னடி? என்ற வர்ண மெட்டு) பல்லவி மானே கையில் தானே தரித்தானே – ஒரு மாதைத் தரித்தானே மழுவைத் தரித்தானே (மானே)

(பல்லவியில் முதல் வரி பாடி முடிப்பதற்குள்ளாகவே அண்ணாதுரை பாகவதர் “பேஷான கீர்த்தனம்!” பேஷான கீர்த்தனம்! சபாஷ் சபாஷ்! என்றார்.

“ ஒரு வரி பாடுமுன்னே இது நல்ல கீர்த்தனையென்று எப்படித் தெரிந்தது? என்று ஜமீன்தார் கேட்டார்.

“ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் பார்த்தால் போதாதா?” என்றார் பாகவதர்.

ஜமீன்தாரும் இந்த நியாயத்துக்குக் கட்டுப்பட்டுச் சந்தோஷ மிகுந்தவராய் மேலே பாடலாயினர்.) பல்லவி மானே கையில் தானே தரித்தானே – ஒரு மாதைத் தரித்தானே மழுவைத் தரித்தானே (மானே) அனுபல்லவி கோனே சிவனே குருவே யருவே மெய்ஞ் ஞான பான மோனமான நாதா தாமரைப் பாதா (மானே)

(“அனுபல்லவியில் இரண்டாம் அடியில் ‘முடுகு’ வைத்திருக்கிறேன் பார்த்தீர்களா” என்று ஜமீன்தார் கேட்க, பாகவதர்களெல்லோரும் “பேஷ், பேஷ், பேஷ்” என்றனர்.)

சரணம் எந்தனை மோக்ஷ கதியினில் சேர்த்திட இன்னமு மாகாதா? உன்னைச் சொந்தக் குல தெய்வமென்று நித் தந்துதி சொன்னது போதாதா? விந்தை யுடனிங்கு வந்தென்னை யாளவும் மெத்த மெத்த வாதா? வந்தனை தந்துனைப் போற்றிடும் ராமசா மிக் கவுண்டராஜ – போஜனுக் கருள் செய்ய்யும் பாதா (மானே) “மிக்கவுண்டா ராஜபோஜ நுக் கருள் செய் யும்பாதா!”

என்று கடைசியடியை இரண்டாம் முறை திருப்பிப் பாடி ராமசாமிக் கவுண்டர் மிகவும் திருப்தியுடன், தியாகையர் ‘நகுமோமு’ கீர்த்தனத்தை ஒரு சிஷ்யனிடம் முதல் முறை பாடிக் காட்டிய பிறகு புன்சிரிப்புச் சிரிப்பது போல நகைத்தருளினார்.

பாகவதர்களெல்லோரும் சபாஷ் சொல்லிக் கொட்டி விட்டார்கள்.

பிறகு அண்ணாதுரை பாகவதர், “மகாராஜா இந்தக் கீர்த்தனத்தை எழுதிக் கொடுத்தால், நான் வீட்டிலே போய்ச் சிட்டை ஸ்வரங்கள் சேர்த்துப் பாட்டையும் நன்றாகப் பாடம் செய்து கொண்டு வருவேன். இதை நித்தியம் பூஜா காலத்தில் பாட வேண்டுமென்று என்னுடைய அபிப்பிராயம்” என்றார்.

“அதுக்கென்ன? செய்யுங்கள்!” என்றார் ஜமீன்தார்.

பூஜை முடிந்தவுடனே போஜனம். பழையது தின்ன ஊரார் வீட்டுக் கறிகளெல்லாம் தருவித்த மனிதன் பகற்சோற்றுக்கு ஊரைச் சும்மா விடுவானா? கிருஷ்ணய்யங்கார் வீட்டிலிருந்து ‘உப்புச்சாறு’, கேசவய்யர் வீட்டிலிருந்து ‘அவியல், குமாரசாமிப் பிள்ளை வீட்டுக் கீரைச் சுண்டல், இன்னும் பலர் வீட்டிலிருந்து பலவித மாமிசப் பக்குவங்கள். இவ்வளவு கோலாகலத்துடன் ஒரு மட்டில் போஜனம் முடிவு பெறும்.

ராமசாமிக் கவுண்டர், பார்ப்பார் சொல்லுவது போல, நல்ல “போஜனப் பிரியன்”. மெலிந்த சரீரமுடைய ஒரு சிநேகிதனுக்கு அவர் பின்வருமாறு பிரசங்கம் செய்ததாகச் சரித்திரங்கள் சொல்லுகின்றன.

”இதோ பாரு ரங்கா, நீயேன் மெலிஞ்சு மெலிஞ்சு போறே (போகிறாய்) தெரியுமா? சரியாய்ச் சாப்பிடவில்லை. சாப்பாடு சரியானபடி செல்ல ஒரு வழி சொல்கிறேன் கேளு! ஒரு கை நிறையச் சோறெடுத்தால் அதுதான் ஒரு கவளம். அப்படி நீ எத்தனை கவளம் தின்பே? எட்டுக் கவளம். ரொம்ப அதிசயமாய்ப் போனால் ஒன்பது கவளம் வைச்சுக்கோ, அவ்வளவுதான். சாஸ்திரப்படி முப்பத்திரண்டு கவளம் சாப்பிட வேணும். அதற்கு நீ என்ன செய்ய வேண்டு மென்றால் இன்றைக்கு ஒன்பது கவளம் சாப்பிடுகிறாயா? நாளைக்குப் பத்துக் கவளமாக்க வேணும். நாளன்றைக்குப் பதினொன்றாக்க வேணும். நாலாம் நாள் பன்னிரண்டு. இப்படி நாள்தோறும் ஒவ்வொன்றாக அதிகப்படுத்திக் கொண்டே போய் முப்பத்திரண்டாவதோடு நிறுத்திவிட வேணும். பிறகு ஒருபோதும் முப்பத்திரண்டு கவளத்திற்குக் குறையவே செய்யலாகாது.”

இந்த உபதேசம், மெலிந்த உடல் கொண்ட ரங்கனுக்கு எவ்வளவு பயன்பட்டதோ, அதனை அறிய மாட்டோம். ஜமீன்தாரவர்களுக்கு இந்த அநுஷ்டானம் சரிப்பட்டு வந்தது. அவர் முப்பத்திரண்டு கவளத்திற்குக் குறைவாக ஒருபோதும் சாப்பிடுவதில்லை. ஒருபோதும் மெலிவதுமில்லை.

பகல் போஜனம் முடிந்தவுடனே ஜமீன்தார் நித்திரை செய்யத் தொடங்குவார். அரண்மனைக்கு வெளியேகூடச் சில சமயங்களில் சத்தங்கேடும்படியாகக் குறட்டை விட்டுத் தூங்குவார். மாலை ஐந்து மணிக்கு விழிப்பார். விழித்தவுடன் ஆறாவது அல்லது ஏழாவது முறை “ஆசனம்”. கொஞ்சம் பலகாரம் சாப்பிடுவார்.

உடனே ஐரோப்பிய உடை தரித்துக் கொண்டு கச்சேரிக்குப் போவார். அங்கே பலர் பலவிதமான விண்ணப்பங்கள் கொண்டு கொடுப்பார்கள். அவற்றையெல்லாம் வாங்கிக் கொள்வார். அதாவது பக்கத்தில் நிற்கும் குமாஸ்தா அவற்றை வாங்கி வைக்கும்போது இவர் பார்த்துக் கொண்டிருப்பார்.

விண்ணப்பங்கள் வாங்கி முடித்த பிறகு காகிதங்களில் கையெழுத்துப் போடும் காரியம் தொடங்கும். பழைய மனுக்கள், திவான் கச்சேரிக் கடிதங்கள், இவற்றின் மேல் தனதிஷ்டப்படி எல்லாம் உத்தரவுகளெழுதி வைத்திருப்பான். அவற்றின் கீழ் வரிசையாகக் கையெழுத்துப் போட்டுக் கொண்டே வரவேண்டும். இன்னின்ன விவகாரங்களைப் பற்றிய காகிதங்களின் மேல் இன்னின்ன உத்தரவுகள் எழுதப்பட்டிருக்கின்றன என்ற சமாச்சாரமே ‘லேகிய’க் கவுண்டருக்குத் தெரியாது.

ஒரு சமயம் வழக்கப்படி உத்தரவுகள் தயார் பண்ணிக்கொண்டு வரும் குமாஸ்தா ஊரிலில்லை. அவன் இடத்திற்கு மற்றொருவன் வந்திருந்தான். ஜமீன்தார் தாமே மனுதார்களுக்கு உத்தரவு எழுதுவாரென்று அவன் நினைத்து மனுக் காகிதங்களை அப்படியே மேஜை மேல் வைத்து விட்டான். ஜமீன்தாரும் விட்டுக் கொடாதபடி அந்த மனுக்களை ஒவ்வொன்றாகத் திருப்பிப் பார்த்து மேலே உத்தரவுகள் எழுதத் தொடங்கினார்.

கவுண்டபுரத்துக்கு மேலே இரண்டு நாழிகை தூரத்திலுள்ள நடுக்கனூர் கிராமத்திலிருந்து வில்வபதிச்செட்டி என்ற ஒரு கிழவன் பின்வருமாறு மனுக் கொடுத்திருந்தான்.

“பிதா, மகாராஜா காலத்தில் நான் மிகவும் ஊழியம் செய்திருக்கிறேன். இப்போது பலவிதக் கஷ்டங்களால் நான் ஏழையாய்ப் போய், மக்களையும் சாகக் கொடுத்துவிட்டுத் தள்ளாத காலத்தில் சோற்றுக்குச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறேன். மகாராஜா அவர்கள் சமூகத்தில் கிருபை செய்து எனக்கு ஜீவனத்துக்கு ஏதேனும் மனோவர்த்திச் செலவிலே கொடுக்குபடி பிரார்த்திக்கிறேன்.”

இந்த மனுவை ஜமீன்தார் தமது குமாஸ்தாவின் உதவியினால் வாசித்து முடித்துவிட்டுப் பிறகு காகிதத்தின் புறத்திலே அடியிற் கண்டபடி உத்தரவெழுதி விட்டார்.

“தாசில்தார் குமரப் பிள்ளைக்கு வில்வபதிச் செட்டி பேருக்கு நிலம் விட்டு விடவும்”. இதை எழுதி நீளமாக ராமசாமிக் கவுண்டர் என்று கையெழுத்துப் போட்டுத் தீர்த்து விட்டார்.

இப்படிப் பலவிதமான உத்தரவுகள் பிறப்பித்து ஜமீன்தார் தமது கச்சேரியை முடித்து விட்டார். மறுநாள் இந்த வில்வபதிச் செட்டியின் மனு திவான் கச்சேரிக்கு வந்து சேர்ந்தது. கவுண்டருடைய உத்தரவைத் திவான் படித்துப் பார்த்தார். தாசில்தார் குமரப் பிள்ளையின் அதிகாரத்துக்குட்பட்ட பூமியில் மேற்படி செட்டிக்கு ஜீவனாம்சத்துக்கு நிலம் விட வேண்டுமென்று கவுண்டரவர்களுடைய திருவுள்ளம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிந்து கொண்டார்.

ஆனால், எவ்வளவு நிலம், எந்தவிதமான நிலம், என்ன நிபந்தனைகள் – முதலிய விவரங்களொன்றும் தெரியவில்லை. உத்தரவை அடித்து விட்டுத் திவான் வேறு மாதிரி எழுதிக் கொண்டு வந்து ரகசியமாகக் கவுண்டரின் கையெழுத்து வாங்கிக் கொண்டு போய்விட்டார். கடைசியில் வில்வபதிச் செட்டிக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. உத்தரவில் உள்ள பிழைகளை திவான் எடுத்துக் காட்டியபோது ஜமீன்தார் குற்றம் முழுவதையும் குமாஸ்தாவின் தலையிலே தூக்கிப் போட்டு விட்டார்.

“நான் மனுவை வாசித்துப் பார்க்கவேயில்லை. வேறே பெரிய விவகாரமொன்றிலே புத்தியைச் செலுத்திக் கொண்டிருந்தேன். இந்த மனு என்ன விஷயம் என்று குமாஸ்தாவைக் கேட்டேன். ‘செட்டி மிகவும் ஏழை; அவனுக்கு உதவி செய்ய வேண்டியதுதான்’ என்று குமாஸ்தா சொன்னான். தங்களுடைய அபிப்பிராயந் தெரிந்துதான் சொல்கிறான் என்று நினைத்து உத்தரவு எழுதி விட்டேன். மனோவர்த்தியிலே பணத்துக்குத்தான் திண்டாடுதே! இதிலே இந்த இழவையும் கொண்டு போய்ச் சேர்ப்பதெப்படி? இதை யோசனை செய்துதான் குமரப்பிள்ளை இலாகாவில் நிலம் விட்டுக் கொடுக்கும்படி எழுதினேன். எனக்கு அந்த வில்வபதிச் செட்டியைப் போதுமானபடி தெரியும். அவர் சுத்த அயோக்கியப் பயல். பட்டினி கிடந்து செத்தால் சாகட்டுமே! நமக்கென்ன!” (என்று சொல்லிவிட்டார்).

சாயங்காலத்துக் கச்சேரி முடிந்தவுடன் கவுண்டரவர்கள் குதிரை வண்டியில் ஏறி ஊரைச் சுற்றிச் சவாரி செய்து கொண்டு வருவார். கவுண்டநகரம் சரித்திரப் பெருமையும், க்ஷேத்திர மகாத்மியமும் வாய்ந்த ஊராயினும், அளவில் மிகவும் சிறியது. ஐந்து நிமிஷத்துக்குள் குதிரை வண்டி இதைச் சுற்றி வந்து விடும். இதற்குப் பன்னிரண்டிடத்தில் “வாங்கா” ஊதுவார்கள். இந்த ‘வாங்கா’ என்பது பித்தளையில் ஒருவித ஊது வாத்தியம். பறையர் இதனை ஊதிக்கொண்டு ஜமீன்தாரவர்களின் வண்டி உடனே குடல் தெறிக்க ஓடுவார்கள்.

சில தினங்களில் பல்லக்குச் சவாரி நடக்கும் இன்னும் சில சமயங்களில் ஜமீன்தாரவர்கள் ஆட்டு வண்டியிலே போவதுண்டு. ‘ஆட்டு வண்டி” சவாரிக்கு உதவுமா என்று படிப்பவர்களிலே சிலர் வியப்படையக் கூடும். இரண்டு ஆடுகளைப் பழக்கப்படுத்தி, அவற்றுக் கிணங்க ஒரு சிறு வண்டியிலே பூட்டி, வண்டி, ஆடுகள் இவற்றைச் சேர்த்து நிறுத்தால், அவற்றைக் காட்டிலும் குறைந்த பக்ஷம் நாலு மடங்கு அதிக நிறை கொண்ட ஜமீன்தார் ஏறிக்கொண்டு தாமே பயமில்லாமல் ஓட்டுவார்.

குதிரைகள் துஷ்ட ஜந்துக்கள். ஒரு சமயமில்லா விட்டாலும் ஒரு சமயம் கடிவாளத்தை மீறி ஓடி எங்கேனும் வீழ்த்தித் தள்ளிவிடும். ஆடுகளின் விஷயத்தில் அந்தச் சந்தேகமில்லை யல்லவா? இன்னும் சில சமயங்களில் ஜமீன்தார் ஏறு குதிரை சவாரி செய்வார். இவருக்கென்று தனியாக ஒரு சின்ன குதிரை மட்டம் – ஆட்டைக் காட்டிலும் கொஞ்சம் பெரிது – தயார் செய்து கொண்டு வருவார்கள். அதன்மேல் இவர் ஏறி இட்கார்ந்தவுடனே அதற்கு முக்கால் வாசி மூச்சு நின்று போகும். பிரக்கினை கொஞ்சம்தான் மிஞ்சியிருக்கும்.

எனினும் இவருக்குப் பயந் தெளியாது. இவருடைய பயத்தை உத்தேசித்தும், குதிரையை எப்படியாவது நகர்த்திக் கொண்டு போக வேண்டுமென்பதை உத்தேசித்தும் முன்னும் பின்னும் பக்கங்களிலுமாக ஏழெட்டு மறவர் நின்று அதைத் தள்ளிக்கொண்டு போவார்கள். ஜமீன்தார் கடிவாளத்தை ஒரு கையிலும், பிராணனை மற்றொரு கையிலும் பிடித்துக் கொண்டு பவனி வருவார். வாங்காச் சத்தத்துக்குக் குறைவிராது. இந்த விவகாரம் ஒரு நாள் நடந்தால், பிறகு மூன்று நான்கு வருஷங்களுக்கு இதை நினைக்க மாட்டார். அதற்கப்பால் மனுஷன் க்ஷத்திரியனல்லவா? பயந் தெளிந்து பின்னொரு முறை நடக்கும்.

இவர் இப்படிக் கோழையாக இருப்பதைக் கருதி யாரும் நகைக்கலாகாது. அர்ஜூனனும், வீமனும், அபிமன்யுவும் தோன்றிய சந்திர வம்சத்தில் நேரே பிறந்ததாக இதிகாசங்களிலே கோஷிக்கப்படுகின்ற கவுண்டனூர் ராஜ குலத்தில் இவர் சேர்ந்திருந்தும், இவ்வாறு கொஞ்சம் அதைரியப் படுவதற்குச் சில ஆந்த காரணங்களுண்டு. இவருக்குப் புத்திர பாக்கியம் இல்லை. அதற்காகப் பலவித ஹோமங்கள், பூஜைகள், கிரக சாந்திகள், தீர்த்த யாத்திரைகள், யந்திர ஸ்தாபனங்கள் முதலியன செய்து கொண்டு வருகிறார். இந்த அவசரத்திலே குதிரையில் இருந்து தவறி விழுந்து உயிர் போய்விடுமானால் பிறகு இவருடைய சக்ராதிபத்யத்துக்கு ஒரு மகன் பிறக்க இடமே இல்லாமல் போய் விடுமல்லவா?

எத்தனை பேர் குதிரையிலிருந்து விழுந்து செத்திருக்கிறார்கள். அதையும் கவனிக்க வேண்டாமா? சில மாதங்களுக்கு முன்புகூட ருஷியா தேசத்தில் ஒரு குதிரைப் பந்தயத்தில் ஒருவன் வேலி தாண்டி விழுந்து உயிர் போய்விட்டதாகச் “சுதேசமித்திரன்” பத்திரிகையில் எழுதியிருந்த விஷயத்தை இவரிடம் யாரோ வந்து சொல்ல வில்லையா? நாலு காரியத்தையும் யோசனை செய்துதானே நடக்க வேண்டும். ஒரு தரம் போன உயிர் திரும்பி வருமா?

சாயங்காலத்துச் சவாரி முடிந்தவுடனே கவுண்டரவர்கள் அரண்மனைக்குள் வருவார். நாலைந்து பேராக இருந்து இவருடைய ஐரோப்பிய உடுப்புகளைக் கழற்றி யெறிந்து விட்டு வேஷ்டி உடுத்துவார்கள். உத்தரீயத்தைத் தாமாகவே வாங்கி மேலே போட்டுக் கொள்வார். மனுஷன் வேலைக்கு மட்டும் பின்வாங்க மாட்டார். அது ஒரு குணம் இவரிடத்தில். பிறகு கைகால் சுத்தி செய்து கொண்டு லேகியம் சாப்பிட்ட பிறகு சாய்வு நாற்காலிக்கு வந்து விடுவார். அப்பால் வெற்றிலை, புகையிலை, ஊர்வம்பு, கதை முதலியன.

இரவு சுமார் பத்து மணியாகும்போது, ஜமீன்தாருக்கு ஒருவாறு புகையிலைச் சாறும் லேகிய வெறியுமாச் சேர்ந்து தலையை மயக்கிச் சாய்ந்தபடி, கதை கேட்கக்கூட முடியாதவாறு செய்துவிடும். வம்பு பேசும் ‘காரியஸ்தர்களுக்கும்’ நின்று காலோய்ந்து போய்விடும். எனவே கவுண்டர் எழுந்து கைகால் சுத்தி செய்வித்துக் கொண்டு ஸந்தியாவந்தனம் செய்து முடித்து, லேகியம் தின்று விட்டு அந்தப்புரத்திலே போய்ச் சாய்ந்தபடி முப்பத்திரண்டு கவளம் சாப்பிட்டு உடனே நித்திரைக்குப் போய்விடுவார்.

ஜமீன்தாரவர்களுக்கு ஐந்து மனைவிகளுண்டு. ஆனால் ஜமீன்தாரவர்களோ அர்ஜுனனுக்கு நிகரானவர் – விராட நகரத்தில் இருந்த அர்ஜுனனுக்கு – அதாவது, மகாராஜ ராஜ பூஜித மகாராஜ ராஜஸ்ரீ மகாராஜ மார்த்தாண்ட சண்ட பிரசண்ட அண்ட பகிரண்ட கவுண்டாதி கவுண்ட கவுண்ட நகராதிப ராமசாமிக் கவுண்டரவர்கள் பரிபூரண நபும்ஸகனென்று தாத்பரியம்.

இவருடைய தினசரிக் காரியம் ஒருவாறு சொல்லி முடித்தோம். இன்னும் எவ்வளவோ சொல்ல வேண்டியிருக்கிறது. சந்தர்ப்பம் வாய்க்குமிடத்து அப்போதப்போது சொல்லுகிறோம்.

இவ்வத்தியாயத்தின் மகுடத்திலே குறிப்பிட்டபடி இவருடைய சபையைப் பற்றி மாத்திரம் கொஞ்சம் விவரித்துச் சொல்லப் போகிறோம். நம்முடைய கதாநாயகனாகிய சங்கரன் இந்தச் சபையைச் சேர வேண்டியவனாக இருக்கிற படியால், ராமசாமிக் கவுண்டர் தமிழிலும் சங்கீதத்திலும், வித்வானென்று முன்னமேயே சொல்லியிருக்கிறோம். அவருடைய சபையிலுள்ள பண்டிதர்களுடைய பெயர், இயல், சிறப்பு முதலியவற்றைச் சிறிது விஸ்தரிக்கின்றோம்.

வித்துவான் அண்ணாதுரை ஐயர், தர்காலங்கார சர்வ சாஸ்திர சாகர உபய வேதாந்த பிரவர்த்தன, நிவர்த்தன, சம்வர்த்தன காரிய பெருங்குன்றம் கிடாம்பியாசான் ஆம்ரோதனா சார்யம், முத்தமிழ்ச் சிங்கக் குட்டி முத்துக் கருப்பண பாவலர், தோடி நாராயணய்யங்கார், முடுகு பல்லவி வேதாசலக் குருக்கள், கம்பராமாயணப் பிரசங்கம், ஆறுமுகக் கவுண்டர், வேலக் கவுண்டர், மூங்கிலறுப்பு ராமச்சந்திர பாகவதர், அறுபத்து நாலக்ஷரப் பிச்சாண்டி பாகவதர், பரமபத தூஷணஸ்மத பூஷண சர்வமத பாஷான பூர்ண பரமசிவனவர்கள், தொல்காப்பியம் இருளப்பப் பிள்ளை, காமரஸ மஞ்சரி சுந்தரய்யர் இவர்களே முக்கிய வித்துவான்கள். இனிச் சில்லறை வித்வான்கள் பலருண்டு.

மேலே சொல்லப்பட்ட வித்துவான்களெல்லோரும் புடை சூழ்ந்திருக்க வானத்துப் புலவர்களுக்கு நடுவே இந்திரன் போலவும் (வானத்து மீன்களுக்கு நடுவே ஆமை (சந்திரன்) போலவும் இன்னும் எதையெல்லாமோ போலவும் கவுண்டர் கொலு வீற்றிருந்தார்.

அப்போது அடப்பை தூக்கும் தொழிலுடையவனும் ஆனால்முத்தமிழ்ப் புலவர்களுக்குள்ளே, மிகச் சிறந்த வகுப்பில் வைத்து எண்ணத்தக்கவனுமாகிய முத்திருளக் கவுண்டன் வந்து பின் வருமாறு விண்ணப்பஞ் செய்து கொள்ளலானான்.

“புத்தி” என்றான் முத்திருளன்.

(ஜமீன்தாரவர்களிடம் வேலையாட்கள் பேசும் போதே ‘புத்தி’ என்று தொடங்குவது வழக்கம். இந்தச் சொல்லை இதே இடத்தில் இந்த அர்த்தத்தில் வழங்குவதற்குள்ள விசேஷ காரணத்தைக் கண்டுபிடித்துச் சொல்லும்படி தமிழ் நாட்டில் மலிந்து கிடக்கும் பாஷா பரிசோதனைப் பண்டிதர்களிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுகிறேன். நான் யோசனை செய்து பார்த்ததில் எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. சிற்சில காரணங்கள் தோன்றுகின்றன; ஆனால் ஒரு வேளை சரியாக இருக்குமோ இராதோ என்ற அச்சத்தால் இங்கு வெளியிட மனம் வரவில்லை.)

“புத்தி” என்றான் முத்திருளன்.

“என்ன முத்திருளு உன் முகத்தைப் பார்த்தால் ஏதோ நல்ல சமாச்சாரம் கொண்டு வந்திருக்கிறது போல் தோன்றுகிறது, என்ன, நான் நினைத்தது சரியா, தப்பிதமா?” என்று ஜமீன்தார் கேட்டார்.

“ஐயோ! அவ்விடத்து ஊகத்திலே ஒரு வார்த்தை சொல்றது அது தப்பியும் போகிறதா? இது எங்கேயாவது நடக்கிற சங்கதியா? மனுஷ்யாளுடைய நெஞ்சுக் குள்ளிருக்கிற ரகஸ்யம் எல்லாம் மகாராஜாவுடைய புத்திக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலவும், கண்ணிலே விழுந்திருக்கும் பூவைப் போலவும் நன்றாகத் தெரிந்து போகுமே! அடியேன் மனசிலிருக்கிறது தெரியாதா? என்றான் முத்திருளன்.

கொஞ்சம் தெளிவு குறைந்ததும், தர்க்க சாஸ்திர விதிகளுக்கு இசையாததுமான இந்த ஸ்துதியைக் கேட்டுக் கவுண்டரவர்கள் மிகவும் சந்தோஷமடைந்து, முப்பத்திரண்டு பற்களில் விழுந்தது போக மற்றுள்ள காவி பூத்த பற்களெல்லாம், பெரியவும், சிறியவுமாகிய மாதுளங்கனி விதைகளைப் போலவும், வேறு பல உவமைப் பொருள்களைப் போலவும், வெளியே தோன்றும்படி பலமான மந்தஹாசம் புரிந்தார்.

முத்திருளன் மீது பொதுவாக எப்போதுமே ஜமீன்தாரவர்களுக்கு அன்பு அதிகம். அவன் நெடு நாளைய வேலைக்காரன்; பல தந்திரங்கள் தெரிந்தவன் தவிரவும் பாலியத்தில் ஜமீன்தாரவர்கள் கொஞ்சம் சில்லறை விளையாட்டுக்கள் விளையாடியபோது உடந்தையாக இருந்து பலவித உதவிகள் செய்தவன். இன்னும், இன்னும் காரணங்கள் உண்டு. ஆனால் பிரபுக்களின் தயவாகிய நதியின் மூலத்தை விசாரிக்கலாகாது.

“முத்திருளு, மற்றவர்களுடைய கவியும் சரி, உன்னுடைய வார்த்தையும் சரி, அவர்களுடைய கவி கேட்பதிலுள்ள சுகம் உன் பேச்சிலேயிருக்கிறது” என்று ஜமீன்தார் தனது வேலைக்காரனை மெச்சினார். அவன் தம்மைப் புகழ்ந்து பேசியதற்கு வெகுமதியாகச் சபையிலிருந்த புலவர்களுக்கெல்லாம் அடிவயிற்றிலே எரிச்சல் உண்டாயிற்று. இது முத்திருளக் கவுண்டனுக்குத் தெரியும். ஜமீன்தாருக்குக்கூட ஒருவேளை தெரிந்திருக்கலாம். அப்படியிருந்து அவர்களெல்லோரும் தமது எரிச்சலை உள்ளே அடக்கிக்கொண்டு வெளிப்படையாக ஜமீன்தாருடைய கருத்தை ஆமோதித்துப் பேசினார்கள்.

உபய வேதாந்த ஆ……...சாரியர், “ஆமாம், மகாராஜா! ஸம்ஸ்கிருதத்திலே பாணகவியைப் போல நம்முடைய முத்திருளக் கவுண்டன், அவர் தமது காதம்பரியை வசன நடையிலே தான் எழுதியிருக்கிறார். அப்படியிருந்தும் பாட்டாகச் செய்யப்பட்டிருக்கும் எத்தனையோ காவியங்களைக் காட்டிலும் அதைப் பெரியோர்கள் மேலானதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பாணகவி உட்கார்ந்து புஸ்தகமாக எழுதினார். நமது முத்திருளக் கவுண்டன் சிரமமில்லாமலே பேசுகிற பாவனையில் அத்தனை பெரிய திறமை காட்டுகிறான். இவனை வசன நடையில் ஆசுகவி என்று சொல்லலாம்” என்று திருவாய் மொழிந்தருளினார்.

உடனே முத்திருளன் அவரை விரஸத்துடன் நோக்கி, “செய்யுளும் நமக்குப் பாடத் தெரியும், சாமீ!” ஏதோ வாயினால் சும்மா உளறிக் கொண்டிருப்பான், பாட்டுப் பாடத் தெரியாதவன் என்று நினைத்துவிட வேண்டாம்.” என்றான். தனக்குக் கவி பாடத் தெரியுமென்பதையும் அவருக்கு அத்தொழில் தெரியாதது பற்றித் தனக்கு அவரிடம் மிகவும் அவமதிப்புள்ள தென்பதையும், அவருக்குக் குறிப்பிட்டுக் காட்டும் பொருட்டாக.. ஆ……...சாரியார் தமது உள்ளத்திலே எழுந்த கோபத்தை அச்சத்தினால் நன்றாக அடக்கி வைத்துக் கொண்டு, “பாணகவி செய்யுள் பாடுவதில் இளைத்தவரென்று நினைத்தாயோ? ஆஹா, முத்திருளக் கவுண்டா! நீ ஸம்ஸ்கிருதம் படித்திருக்க வேண்டும். படித்திருந்தால் நீ பாணகவிக்கு நிகரானவன் என்பது உனக்கே நன்றாகத் தெரிந்திருக்கும்.” என்று திருவாய் மொழிந்தருளினார்.

(சாதாரணமாக ஆ……..சாரியாரைப் போன்று மகான்கள் பேசுவதை, ‘திருவாய் மலர்ந்தருளினார்’ என்று சொல்வது வழக்கம். அப்படியிருக்க, நாம் ‘திருவாய் மொழிந்தருளினார்’ என்று புதிதாகச் சொல்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அவருக்குத் தமிழ் பாஷையில் அதிக பழக்கமில்லாத போதிலும் திருவாய்மொழிப் பிரபந்தம் முழுவதையும் பாராமல் குட்டி உருவாகச் சொல்லக் கூடியவரென்பதை, நாம் ஒருவாறு குறிப்பிட விரும்புதல் சாமான்யக் காரணம்; சரியான காரணம் இன்னும் சில வரிகளுக்கப்பால் தானே விளங்கும்..) பிறகு முத்திருளக் கவுண்டன் தனக்கு ஸம்ஸ்கிருதம் தெரியாதென்பதை ஆ……..சாரியார் கேலி பண்ணுகிறார் என்று நினைத்துத் தலையை நேரே தூக்கிக் கொண்டு அவனது மீசை கிருதாக்கள் துடிக்கப் பின்வருமாறு உபந்நியாசம் செய்யலானான்.

“சாமி, அய்யங்கார்வாளே! சாமிகளே; அப்படியா வந்து சேர்ந்தீர்கள். (சபையோர் நகைக்கிறார்கள்) இந்தக் கதையா? இதெல்லாம் முத்திருளனிடம் வைத்துக் கொள்ள வேண்டாம். சென்னப் பட்டணத்தில் சி.வை.தாமோதரன் பிள்ளை என்று ஒரு மகா வித்துவான் இருந்தாரே கேள்விப்பட்டதுண்டா? அது சூளாமணி என்னும் காவியத்தை அச்சிட்ட போது அதற்கெழுதிய முகவுரையை யாரைக் கொண்டேனும் படிக்கச் சொல்லியாவது கேட்டதுண்டா? திருவனந்தபுரம் பெரிய கலாசாலையில் தமிழ்ப் பண்டிதராகி அன்னிய பாஷைகள் ஆயிரங் கற்று நிகரில் புலவர் சிகரமாக விளங்கிய சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய நூல்கள் ஏதேனும் ஒன்றை எப்போதாவது தலையணையாக வைத்துப் படுத்திருந்ததுண்டா? அல்லது அவர் புத்தகங்கள் வைத்திருந்த அலமாரியை மோந்து பார்த்தது உண்டா? அப்படி மோந்து பார்த்தவர்களையேனும் மோந்து பார்த்தது உண்டா? (இந்த அற்புதமான வார்த்தையைக் கேட்டு சபை கலீரென்று நகைக்கிறது. ஆ……..சாரியார் பேசுவதற்காகத் திருவாய் மலர்ந்தருளினார். ஆனால் மலர்ந்த திருவாய் மொழிவதற்குள்ளாகவே முத்திருளன் அவரைப் பேசவொட்டாதபடி கர்ஜனை புரியலானான். )

“சாமி, சாமிகளே! அய்யங்கார்வாளே! பிறர் பேசும்போது நடுவிலே, குறுக்கே பாயக் கூடாதென்று உங்கள் ஸம்ஸ்கிருத சாஸ்திரங்களிலே சொன்னது கிடையாதோ? அல்லது ஒருவேளை சொல்லி இருந்தால் அதை நீங்கள் படித்தது கிடையாதோ? சாமிகளே, மேலே நான் சொல்லிய புலவர்களும், இன்னும் ஆயிரக்கணக்கான வித்வத் சிரோமணிகளும் பதினாயிரக்கணக்கான லக்ஷக் கணக்கான கோடிக்கணக்கான பத்திராசிரியர்களும் வடமொழியைக் காட்டிலும் தமிழே உயர்ந்த பாஷையென்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்கிப் பசுமரத்தாணி போல நாட்டியிருக்-கிறார்கள். நீவிர் அதனையுணராது குன்று முட்டிய குரீஇப் (குருவி) போல இடர்ப்படுகின்றீர்.

“தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்து முதலை உண்ட பாலனை யழைத்ததும் ….ம்.......ம்…..ம், தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ? சாற்றீர்?” என்ற பாட்டைக் கேட்டதுண்டா?

இந்தப் பாட்டிலே சில வார்த்தைகள் முத்திருளனுக்கு சமயத்தில் ஞாபகம் வரவில்லை யாதலால் விட்டுப் பிழையாகப் பாட்டைச் சொல்லி முடித்தான்.

சபையில் பலருக்கு இந்தப் பாட்டு நன்றாக ஞாபகமுண்டு. ஆயினும் அவனைத் திருத்தப் போனால் தங்கள் மீது பாய்ந்து விடுவானென்று பயந்து புலவர்கள் வாய்மூடி மவுனமாக இருந்து விட்டார்கள். அவர்கள் திருத்தாமலிருக்கும் படியாகவே முத்திருளன் அவர்களைச் சுற்றி நோக்கி மிகவும் பயங்கரமானதோர் பார்வை பார்த்து விட்டு மேலே கர்ஜனை செய்கிறான்.

“இனி வடமொழியில்தான் வேதம் உளதென்று நீர் ஒருவேளை சொல்லலாம். அஃது எங்கள் தேவார திருவாசகங்களுக்கு நிகராகுமா? இந்தப் பாடலுக்கு நான் இப்போது பொருள் சொல்ல மாட்டேன். உமக்குத் தெரியாவிட்டால், வீட்டிலே போயிருந்து கொண்டு படிப்புத் தெரிந்த வாலிபப் பிள்ளை எவனையேனும் அழைத்து அவனிடம் பொருள் கேட்டுக் கொள்ளும்.

(சபை கலீரென்று நகைக்கிறது. ஆ…….சாரியர் முடி சாய்ந்து விட்டார்) “ஆங்காணும், தமிழ்ப் பாஷைக்கு நேரானதோர் பாஷை இல்லை. அதிலும், வடமொழி நமது தமிழ் மொழிக்குச் சிறிதேனும் நிகராக மாட்டாது. தமிழ் கற்றோர் அனைத்துங் கற்றோர். அறியும், அறியும், அறியும். இனி வித்துவான்களுடைய சபையிலே ஊத்தவாய் திறக்க வேண்டாம்.”

“வாயிலே நுரைக்கும்படி முத்திருளன் இவ்வாக்கியம் சொல்லி முடித்து மேலே பேச மூச்சில்லாமல் கொஞ்சம் நின்றான்.

அப்போது ஆ…...சாரியர் மிகவும் ஹீனஸ்வரத்திலே “முத்திருளா, என்ன இப்படிக் கோபித்துக் கொள்கிறாயே, நான் பாணகவிக்கு நிகரென்று உன்னை ஸ்தோத்திர-மாகத்தானே சொன்னேன். விஷயத்தைக் கவனியாமலே வீண் கோபம் செய்கிறாயே” என்று திருவாய் மொழிந்தருளினார்.