பாரதியாரின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு/எட்டாம் அத்தியாயம்
முற்கூறிய நான்குவித பக்தர்களும் தனித்தனியே கைப்பற்ற வேண்டிய பக்தி வழிகளும், அவைகளுக்குள் வித்தியாசமும் கூறப்படுகின்றன. ஆக்கையினின்றும் ஆவி கிளம்புங்கால் எத்தகைய எண்ணம் மனிதனின் மனதுக்குள் இருக்கின்றதோ, அத்தகைய பலனையே மறுபிறவியில் பெறுவானாதலால் பக்தர்கள் இறக்கும் தருணத்தில், கடவுளைத் தியானித்திருப்பது அவசியம். வாழ்நாட்களில் மனதுக்குக் கடவுளிடம் நிலைத்திருக்கும் பழக்கத்தை உண்டுபண்ணினால்தான் அம்மனம் மரண காலத்தில் கடவுளிடம் நிலைபெறும். ஆகையால் பக்தர் அனைவரும் தங்கள் வாழ்நாட்களில் மனதால் கடவுளை தியானம் செய்துகொண்டே தங்கள் கர்மங்களைச் செய்ய வேண்டும். நான்காவது வகையான பக்தர்கள் பெறும் பரமபதம்தான் அழிவற்றது. மற்ற பலனெல்லாம் அழிவுற்றது. பக்தர்கள் இறந்த பிறகு ஆத்மா செல்லும் வழி இருவகைப்பட்டிருக்கும். ஒன்றில் சென்றால் என்றைக்கும் திரும்பி வராத வீட்டைப் பெறலாம். மற்றொன்றில் சென்றால், காலக்கிரமத்தில் திரும்பி வரவேண்டிய இடத்தை அடையலாம். அர்ஜுனன் சொல்லுகிறான்:
1. அந்த பிரம்மம் எது? ஆத்ம ஞானம் யாது? புருஷோத்தம, கர்மமென்பது யாது? பூதஞானம் யாது? தேவஞானம் என்பது எதனை?
2. யாக ஞானம் என்பதென்ன? தம்மைத் தாம் கட்டியவர்களால் இறுதிக் காலத்திலேனும் இவ்வுலகத்தில் நீ அறியப்படுவ தெங்கனம்? ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்:
3. அழிவற்ற பரம்பொருளே பிரம்மம், அதனியல்பை அறிதல் ஆத்ம ஞானமெனப்படும். உயிர்த் தன்மையை விளைவிக்கும் இயற்கை கர்மமெனப்படுகிறது.
4. அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பூதஞானம். புருஷனைப் பற்றியது தேவஞானம். உடம்பெடுத்தோரில் உயர்ந்தவனே! உடம்புக்குள் என்னை யறிதல் யாகஞானம்.
5. இறுதிக் காலத்தில் உடம்பைத் துறந்து எனது நினைவுடன் இறப்போன் எனதியல்பை எய்துவான், இதில் ஐயமில்லை.
6. ஒருவன் முடிவில் எவ்வெத் தன்மையை நினைப்பனாய் உடலைத் துறக்கின்றானோ, அவன் எப்போதும் அத்தன்மையிலே கருத்துடையவனாய் அதனையே எய்துவான்.
7. ஆதலால் எல்லாக் காலங்களிலும் என்னை நினை, போர் செய். என்னிடத்தே மனத்தையும், புத்தியையும் அர்ப்பணம் செய்வதனால் என்னையே பெறுவாய்.
8. வேறிடஞ் செல்லாமலே யோகம் பயிலும் சித்தத்துடன் சிந்தனை செய்து கொண்டிருப்போன் தேவனாகிய பரம புருஷனை அடைகிறான்.
9. கவியை, பழையோனை, ஆள்வோனை, அணுவைக் காட்டிலும் அணுவை, எல்லாவற்றையும் தரிப்பவனை, எண்ணுதற்கரிய வடிவுடையோனை, இருளுக்கப்பால் கதிரோனது நிறங்கொண்டிருப்பானை, எவன் நினைக்கிறானோ;
10. இறுதிக் காலத்தில் அசைவற்ற மனத்துடன், புருவங்களிடையே உயிரை நன்கேற்றி பக்தியுடனும், யோக பலத்துடனும், எவன் நினைக்கிறானோ, அவன் அந்தக் கடவுளாகிய பரம புருஷனை அடைகிறான்.
11. எந்த நிலையை வேதமுணர்ந்தோர் அழிவற்றதென்பர், விருப்பமற்ற முனிகள் எதனுட் புகுவர், எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் காக்கப்படும், அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.
12. எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மனதை உள்ளத்தில் நிறுத்தி, உயிரைத் தலையின் உச்சியில் நிலையுறுத்தி யோக தாரணையில் உறுதிபெற்று,
13. "ஓ" என்ற பிரம்ம எழுத்தை ஒன்றையே ஜபித்துக் கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய் உடம்பைத் துறப்போன் பரமகதி பெறுகின்றான்.
14. நித்திய யோகத் திசைந்து, பிரிது நினைப்பின்றி என்னை எப்பொழுதும் எண்ணும் யோகிக்கு நான் எளிதில் அகப்படுவேன், பார்த்தா,
15. என்னை யடைந்து பரம சித்தி பெற்ற மகாத்மாக்கள், மறுபடி நிலையற்றதும் துன்பத்தின் ஆலயமும் ஆகிய மறுபிறப்பை யடையமாட்டார்.
16. அர்ஜுனா! பிரம்மலோகம் வரை எல்லா உலகங்களும் மறுபிறப்பு உடையன. குந்தி மகனே! என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை.
17. பிரம்மத்துக்கு ஆயிரம் யுகம் ஒரு பகல், ஆயிரம் யுகம் ஓரிரவு. இதை யறிந்தோரே இராப்பகலின் இயல்பறிவார்.
18. 'அவ்யக்தம்', அதாவது மறைவுபட்ட உலகத்தினின்றும் தோற்றப் பொருள்கள் வெளிப்படுகின்றன. *இரவு வந்தவுடன் அந்த மறைவுலகத்துக்கே மீண்டும் கழிந்து விடுகின்றன.
19. இந்த பூதத் தொகுதி ஆகியாகித் தன் வசமின்றியே * இரவு வந்தவுடன் அழிகிறது; பார்த்தா! *பகல் வந்தவுடன் இது மீண்டும் பிறக்கிறது. (*இங்கு, பகலும் இரவுமான மேற்கூறியபடி பிரம்மத்தின் பகலிரவுகளாகிய யுக சகஸ்ரங்கள்.)
20. அவ்யக்தத்தினும் அவ்யக்தமாய் அதற்கப்பால் சநாதன பதமொன்றிருக்கிறது. எல்லா உயிர்களும் அழிகையில் அப்பதம் அழியாது.
21. அவ்யக்தம் அழிவற்றதெனப்படும். அதனையே பரமகதி யென்பர். எதை எய்தியபின் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம்.
22. வேறிடஞ் செல்லாத பக்தியால், பார்த்தா! அந்தப் பரமபுருஷன் எய்தப்படுவான். அவனுள்ளே எல்லாப் பொருள்களும் நிலைகொண்டன. அவன் இவ்வுலகமெங்கும் உள்ளூரப் பரந்திருக்கிறான்.
23. யோகிகள் இறப்பதால் எக்காலத்தில் மீளா நிலையும் மீளும் நிலையும் பெறுவாரோ, அக்காலத்தைச் சொல்லுகிறேன்.
24. தீ, ஒளி, பகல், சுக்கில பக்ஷம், உத்தராயணத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் பிரம்ம ஞானிகள் பிரம்மத்தையடைகிறார்கள்.
25. புகை, இரவு, கிருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயனத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் யோகி சந்திரனொளியைப் பெற்றிருந்து மீளுகிறான்.
26. உலகத்தில் இந்த ஒளி வழியும், இருள் வழியும் சாசுவதமாகக் கருதப்பட்டன. இவற்றுள் ஒன்றினால் மனிதன் மீளாப் பதம் பெறுவான். மற்றொன்று மீளும் பதந்தருவது.
27. இவ்வழிகளிரண்டையும் உணர்ந்தால் அப்பால் யோகி மயக்கமுறுவதில்லை. ஆதலால், அர்ஜுனா, எப்போதும் யோகத்தில் கலந்திரு.
28. இதனை யறிவதால் யோகி வேதங்களிலும், தவங்களிலும், தானங்களிலும் காட்டிய தூய்மைப் பயனைக் கடந்து, ஆதி நிலையாகிய பரநிலையை எய்துகிறான்.