உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதியார் கதைகள்/சும்மா I

விக்கிமூலம் இலிருந்து

நேற்று சாயங்காலம் நான் தனியாக மூன்றாவது மெத்தையில் ஏறி உட்கார்ந்திருந்தேன். நான் இருக்கும் வீட்டில் இரண்டாவது மெத்தையிலிருந்து மூன்றாம் மெத்தைக்கு ஏணி கிடையாது. குடக்கூலி வீடு. அந்த வீட்டுச் செட்டியாரிடம் படி (ஏணி) கட்டும்படி எத்தனையோ தரம் சொன்னேன். அவர் இன்றைக்காகட்டும், நாளைக்காகட்டும் என்று நாளைக் கடத்திக் கொண்டு வருகிறார். ஆதலால் மூன்றாம் மெத்தைக்கு ஏறிப்போவது மிகவும் சிரமம். சிறிய கைச்சுவர்மேல் ஏறிக்கொண்டு அங்கிருந்து ஒரு ஆள் உயரம் உந்த வேண்டும். மூன்றாங்கட்டின் சுவரோரத்தைக் கையால் பிடித்துக் கொண்டு கைச்சுவர் மேலிருந்து உந்தும்போது கொஞ்சம் கை வழுக்கிவிட்டால் ஒன்றரை ஆள் உயரம் கீழே விழுந்து மேலே காயம்படும்.

நான் தனிமையை விரும்புவோன். ஆதலால், சிரமப்பட்டேறி அடிக்கடி மூன்றாங்கட்டிலே போய் உட்கார்ந்திருப்பது வழக்கம். இந்த மார்கழி மாதத்தில் குளிர் அதிகமானபடியால் வெயில் காய்வதற்கும் இது இதமாகும். இங்ஙனம் நேற்று மாலை, நான் வெயில் காய்ந்து கொண்டிருக்கையிலே குள்ளச் சாமியாரும் வேணு முதலியும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இரண்டாங்கட்டு வெளி முற்றத்தில் வந்து நின்று கொண்டு என்னைக் கைதட்டிக் கூப்பிட்டார்கள். நான் இறங்கி வரும் பொருட்டாக வேஷ்டியை இடுப்பில் வரிந்து கட்டினேன். அதற்குள் குள்ளச் சாமியார் என்னை நோக்கி "நீ அங்கேயே இரு, நாங்கள் வருகிறோம்" என்று சொன்னார்.

இந்தக் குள்ளச் சாமியாரைப் பற்றி முன்னொருமுறை எழுதியிருப்பது ஞாபகமிருக்கலாம். இவர் கலியுக ஜடபரதர் மகா ஞானி, சர்வஜீவ தயாபரன், ராஜயோகத்தால் மூச்சைக் கட்டி ஆளுகிற மகான். இவர் பார்ப்பதற்குப் பிச்சைக்காரன் போலே கந்தையை உடுத்திக் கொண்டு தெருக்களில் உலாவுவார். இவருடைய மகிமை ஸ்திரிகளுக்கும் குழந்தைகளுக்கும் மாத்திரம் எப்படியோ தெரிந்திருக்கிறது. தெருவில் இவர் நடந்து செல்லுகையில் ஸ்திரீகள் பார்த்து இவரைக் கையெடுத்துக் கும்பிடுவார்கள். குழந்தைகளெல்லாம் இவரைக் கண்டவுடன் தாயை நோக்கி ஓடுவது போலே ஓடி இவருடைய முழங்காலை மோர்ந்து பார்க்கும். இவர் பேதை சிரிப்புச் சிரித்துக் குழந்தைகளை உச்சி மோந்து பார்ப்பார்.

ஆனால் சாமானிய ஜனங்களுக்கு அவருடைய உண்மையான மகிமை தெரியமாட்டாது. கண்மூடித் திறக்கு முன்னாகவே கைச்சுவர் மேல் ஒரு பாய்ச்சல் பாய்ந்து அங்கிருந்து மேல் மெத்தைக்கு இரண்டாம் பாய்ச்சலில் வந்து விட்டார். இவரைப் பார்த்து இவர் போலே தானும் செய்ய வேண்டுமென்ற எண்ணங் கொண்டவராய் வேணு முதலியார் ஜாக்கிரதையாக ஏறாமல் தானும் பாய்ந்தார். கைப்பிடிச் சுவர் மேல் சரியாகப் பாய்ந்துவிட்டார். அங்கிருந்து மேல் மெத்தைக்குப் பாய்கையில் எப்படியோ இடறித் தொப்பென்று கீழே விழுந்தார்.

இடுப்பிலேயும் முழங்காலிலேயும் பலமான அடி; ஊமைக் காயம். என் போன்றவர்களுக்கு அப்படி அடிபட்டால் எட்டு நாள் எழுந்திருக்க முடியாது. ஆனால் வேணு முதலியார் நல்ல தடியர். "கொட்டாபுளி ஆசாமி." ஆதலால் சில நிமிஷங்களுக்குள்ளே ஒருவாறு நோவைப் பொறுத்துக் கொண்டு மறுபடி ஏறத் தொடங்கினார்.

குள்ளச் சாமியார் அப்போது என்னை நோக்கி, "நாமும் கீழே இறங்கிப் போகலாம்" என்று சொன்னார். சரியென்று நாங்கள் வேணு முதலியாரை ஏற வேண்டாமென்று தடுத்து விட்டுக் கீழே இறங்கி வந்தோம். இரண்டாங் கட்டு வெளி முற்றத்திலேயே மூன்று நாற்காலிகள் கொண்டு போட்டு உட்கார்ந்து கொண்டோம்.

அப்போது வேணு முதலியார் என்னை நோக்கி "அங்கே தனியாக ஹனுமாரைப் போலப் போய்த் தொத்திக் கொண்டு என்ன செய்தீர்?" என்று கேட்டார்.

"சும்மாதான் இருந்தேன்" என்றேன்.

வந்து விட்டதையா வேணு முதலியாருக்குப் பெரிய கோபம். பெரிய கூச்சல் தொடங்கி விட்டார்.

"சும்மா, சும்மா, சும்மா, சும்மா இருந்து சும்மா இருந்துதான் ஹிந்து தேசம் பாழாய்க் குட்டி சுவராய்ப் போய்விட்டதே! இன்னம் என்ன சும்மா? எவனைப் பார்த்தாலும் இந்த நாட்டில் சும்மாதான் இருக்கிறான். லக்ஷ லக்ஷ லக்ஷமாகப் பரதேசி, பண்டாரம், சந்நியாசி, சாமியார் என்று கூட்டம் கூட்டமாகச் சோம்பேறிப் பயல்கள், கஞ்சா அடிக்கிறதும், பிச்சை வாங்கித் தின்கிறதும், சும்மா உலவுகிறதும்தான் அந்தப் பயல்களுக்கு வேலை. இரண்டு வேளை ஆகாரம் ஒருவனுக்கு இருந்தால், அவன் தொழில் செய்யும் வழக்கம் இந்த தேசத்திலே கிடையாது.

ஜமீன்தார், மிட்டாதார், பண்ணையார், மிராசுதார், இனாம்தார், ஜாகீர்தார், மடாதிபதிகள், ராஜாக்கள் எல்லாருக்கும் சும்மா இருப்பதுதான் வேலை. சோம்பேறிப் பயல்களுடைய தேசம்" என்று பல விதமாக வேணு முதலியார் ஜமாய்க்கிற சமயத்தில் குள்ளச்சாமி மேற்குமுகமாகச் சூரியனை நோக்கித் திரும்பிக் கொண்டு "சும்மா இருப்பதுவே மட்டற்ற பூரணம் என்றெம்மால் அறிதற்கெளிதோ பராபரமே" என்ற தாயுமானவர் கண்ணியைப் பாடினார்.

வேணு முதலியார் அவரை நோக்கி, "சாமியாரே, நீர் ஏதோ ராஜயோகி என்று காளிதாஸர் சொல்லக் கேள்விப்பட்டேன். உம்முடன் நான் பேசவில்லை. காளிதாஸரிடம் நான் சொல்லுகிறேன். நீர் சந்நியாசியென்று சொல்லி ஜன்மத்தையே மரத்தின் ஜன்மம்போலே யாதொரு பயனுமில்லாமல் வீணாகச் செலவிடும் கூட்டத்தைச் சேர்ந்தவர். மரமாவது பிறருக்குப் பழங்கள் கொடுக்கும், இலை கொடுக்கும், விறகு கொடுக்கும். உங்களை மரத்துக்கொப்பாகச் சொல்லியது பிழை. உங்களாலே பிறருக்கு நஷ்டம்; மரத்தால் பிறருக்கு எத்தனையோ லாபம்" என்றார். இங்ஙனம் வேணு முதலியார் சொல்லிக் கொண்டிருக்கும்போதே குள்ளச் சாமியார்,

சும்மா இருக்கச் சுகம் சுகமென்று சுருதி யெல்லாம் அம்மா நிரந்தரம் சொல்லவும் கேட்டு அறிவின்றியே பெம்மான் மவுனி மொழியையுந் தப்பி என் பேதைமையால் வெம்மாயக் காட்டில் அலைந்தேன் அந்தோ என் விதி வசமே!

என்று தாயுமானவருடைய பாட்டொன்றைச் சொன்னார்.

வேணு முதலியாருக்குக் கீழே விழுந்த நோவு பொறுக்க முடியவில்லை. அந்தக் கோபம் மனதில் பொங்குகிறது. அத்துடன் சாமியார் சிரித்துச் சிரித்துப் பாட்டு சொல்வதைக் கேட்டு அதிகக் கோபம் பொங்கி விட்டது. வேணு முதலியார் சொல்லுகிறார்.

"ஓய் சாமியாரே, நீர் பழய காலத்து மனிதர். உம்முடன் நான் தர்க்கம் செய்ய விரும்பவில்லை. என்னுடைய சாமர்த்தியம் உமக்குத் தெரியாது. நான் பன்னிரண்டு பாஷைகளிலே தேர்ச்சியுடையவன். உமக்குத் தமிழ் மாத்திரம் தெரியும். நான் இந்த யுத்தம் முடிந்தவுடன் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவிற்கும் போய் அங்கெல்லாம் இந்து மதத்தை ஸ்தாபனம் செய்யப்போகிறேன். நீர் தெருவிலே பிச்சை வாங்கித் தின்று திண்ணை தூங்குகிற பேர்வழி. உமக்கும் எனக்கும் பேச்சில்லை. தேசத்திற்காகப் பாடுபடுவதாக 'ஹம்பக்' பண்ணிக் கொண்டிருக்கிற காளிதாசர்-இந்தவிதமான சோம்பேறிச் சாமியார்களுடன் கூடிப் பொழுது கழிப்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை விளைவிக்கிறது. உங்களிடமிருந்துதான் அவர் இந்த சும்மா இருக்கும் தொழில் கற்றுக் கொண்டார் போலும்!" என்று வேணுமுதலியார் இலக்கணப் பிரயோகங்களுடன் பேசத் தொடங்கினார்.

மறுபடி சாமியார்;

சும்மா இருக்கச் சுகம் உதய மாகுமே இம்மாயா யோகம் இனி ஏனடா-தம்மறிவின் சுட்டாலே யாகுமோ சொல்ல வேண்டாம் கர்ம நிஷ்டா சிறு பிள்ளாய் நீ.

என்ற தாயுமானவருடைய வெண்பாவைப் பாடினார்.

அப்போது வேணு முதலியார் என்னை நோக்கி "ஏனையா? காளிதாஸரே, இந்தச் சாமியார் உமக்கு எத்தனை நாட்பழக்கம்?" என்று கேட்டார்.

நான் பதில் சொல்லாமல் "சும்மா" இருந்துவிட்டேன். அப்பொழுது குள்ளச்சாமியார் சொல்லத் தொடங்கினார்.

அத்துடன் இந்தக் கதையே வெகு நீளம். அது சுருக்கிச் சொன்னாலும் இரண்டு பாகங்களுக்குள்ளே தான் சொல்ல முடியும். நாலைந்து பாகம் ஆனாலும் ஆகக்கூடும்.

அவ்வளவு நீண்ட கதையை இத்தனை காயிதப் பஞ்சமான காலத்தில் ஏன் சொல்லப் புறப்பட்டீர் என்றாலோ அது போகப் போக ஆச்சரியமான கதை. அற்புதமான கதை! இதைப்போல கதை நான் இதுவரை எழுதினது கிடையாது. நான் வேறு புஸ்தகங்களிலே படித்ததும் கிடையாது. நீங்கள் கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள். எழுந்து கூ கூ கூ என்று கூவி ஆடிப்பாடிக் குதிக்கத் தொடங்குவீர்கள். நான் கேட்காத அற்புதத்தைக் கேட்டேன். காணத்தகாத அற்புதத்தைக் கண்டேன்.

ஆதலால் உலகத்திலே இதற்குமுன் எழுதப்பட்ட கதைகள் எல்லாவற்றிலும் அற்புதத்திலும் அற்புதமான கதையை உங்களுக்குச் சொல்லப் புறப்பட்டேன். ஆனால் இந்த வியாசம் நீண்டு போய்விட்டதே; அடுத்த பாகத்தில்தானே சொல்ல முடியும். நான் வாக்குத் தவற மாட்டேன். இரண்டாம் பாகம் சீக்கிரம் உங்களுக்குச் சொல்லுகிறேன். கொஞ்சம் பொறுமையுடன் இருங்கள்.

அப்போது குள்ளச்சாமியார் சொல்லுகிறார்; "கேள் தம்பி, நான் சும்மா இருக்கும் கட்சியைச் சேர்ந்தவன். நீ சொல்லியபடி சந்நியாசிகள் சும்மா இருந்ததினால் இந்தத் தேசம் கெட்டுப்போகவில்லை. அதர்மம் செய்ததினால் நாடு சீர் கெட்டது. சந்நியாசிகள் மாத்திரம் அதர்மம் செய்யவில்லை. இல்லறத்தார் அதர்மம் தொடங்கியது துறவறத்தாரையும் சூழ்ந்தது. உண்மையான யோகிகள் இன்னும் இந்தத் தேசத்தில் இருக்கிறார்கள். அவர்களாலே தான் இந்தத் தேசம் சர்வ நாசமடைந்து போகாமல் இன்னும் தப்பிப் பிழைத்திருக்கிறது.

இப்போது பூ மண்டலம் குலுங்கிப் பல ராஜ்யங்களும் சரிந்து கொண்டிருக்கையிலே ஹிந்து தேசம் ஊர்த்துவமுகமாக மேன்மை நிலையை நோக்கிச் செல்லுகிறது. தானும் பிழைத்தது. உலகத்தையும் உஜ்ஜீவிக்கும்படி செய்யலாம் என்ற தைரியம் ஹிந்து தேசத்தின் மனதில் உண்டாயிருக்கிறது.

இதற்கு முன் இப்படி எத்தனையோ பிரளயங்களில் இருந்து தப்பிற்று. சில தினங்களுக்கு முன்பு ஜகதீச சந்திரவஸ¤ கல்கத்தாவில் தம்முடைய நவீன சாஸ்திராலயத்தை பிரதிஷ்டை செய்யும்போது என்ன சொன்னார்-வாசித்துப் பார்த்தாயா? "பாபிலோனிலும், நீல நதிக் கரையிலும் இருந்த நாகரீகங்கள் செத்து மறுஜன்ம மடைந்து விட்டன. ஹிந்துஸ்தானம் அன்று போலவே இன்றும் உயிரோடிருக்கிறது, ஏனென்றால் எல்லா தர்மங்களிலும் பெரிய தர்மமாகிய ஆத்மபரித் தியாகம் இந்த தேசத்தில் சாகாதபடி இன்னும் சிலரால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது" என்று ஜகதீச சந்திர வஸ¤ சொன்னார்.

இங்ஙனம் குள்ளச் சாமியார் சொல்லி வருகையில் வேணு முதலியார் "சாமியாரே! உமக்கு இங்கிலீஷ் தெரியுமா? நீர் பத்திரிகை வேறே வாசிக்கிறீரா? ஜகதீச சந்திரவஸ¤ பேசிய விஷயம் உமக்கெப்படித் தெரிந்தது?" என்று கேட்டார். அப்போது குள்ளச்சாமியார் சொல்லுகிறார்: அநாவசியக் கேள்விகள் கேட்காதே. நான் சொல்வதைக் கவனி: ஹிந்து தேசத்தினுடைய ஜீவனை யுக யுகாந்தரங்களாக அழியாதபடி பாதுகாத்து வருவோர் அந்த யோகிகளே. கடூரமான கலியில் உலகம் தலை கீழாகக் கவிழ்ந்துபோகும் சமயத்தில் கூட ஹிந்துஸ்தானம் அழியாமல் தானும் பிழைத்து மற்றவர்களையும் காக்கக்கூடிய ஜீவசக்தி இந்நாட்டிற்கு இருப்பது அந்த யோகிகளின் தபோபலத்தாலன்றி வேறில்லை.

ஹா, ஹா, ஹா, ஹா! பலவிதமான லேகியங்களைத் தின்று தலைக்கு நூறு நூற்றறைம்பது பெண்டாட்டிகளை வைத்துக் கொண்டு தடுமாறி நாள் தவறாமல் ஒருவருக்கொருவர் நாய்களைப்போல அடித்துக் கொண்டு, இமயமலைக்கு வடபுறத்திலிருந்து அன்னியர் வந்தவுடனே எல்லாரும் ஈரச் சுவர் போலே இடிந்து விழுந்து ராஜ்யத்தை அன்னியர் வசமாகத் தந்த உங்கள் ராஜாக்களுடைய வலிமையினால் உங்கள் தேசம் பிழைத்திருக்கிறதென்று நினைக்கிறாயா? போது விடிந்தால் எவன் செத்துப் போவான், ஸபண்டீகரணம், பிராமணார்த்த போஜனங்கள் பண்ணலாம் என்று சுற்றிக் கொண்டு, வேத மந்திரங்களைப் பொருள் தெரியாமல் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருந்த உங்கள் பிராமணர்களால் இந்த தேசம் சாகாத வரம் பெற்று வாழ்கிறதென்று நினைக்கிறாயா? உங்கள் வைசியருடைய லோபத் தன்மையால் இந்த நாடு அமரத் தன்மை கொண்டதா? சூத்திரருடைய மௌட்டியத்தாலா? பஞ்சமருடைய நிலைமையாலா? எதால் ஹிந்துஸ்தானத்துக்கு அமரத் தன்மை கிடைத்ததென்று நீ நினைக்கிறாய்?

அடா, வேணு முதலி, கவனி. நீ யுத்தம் முடிந்த பிறகு அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் போய் ஹிந்து தர்மத்தை நிலை நாட்டப் போவதாகச் சொல்லுகிறாய். நீ ஹிந்து ஸ்தானத்து மகாயோகிகளின் மகிமை தெரியாமல் ஹிந்து மதத்தை யெப்படி நிலைநிறுத்தப் போகிறாய்,-அதை நினைக்கும்போதே எனக்கு நகைப்புண்டாகிறது.

அடா, வேணு முதலி, கேள்; ஹிந்துஸ்தானத்து மகா யோகிகளின் மகிமையால் இந்த தேசம் இன்னும் பிழைத்திருக்கிறது. இனி இந்த மண்ணுலகம் உள்வரை பிழைத்திருக்கவும் செய்யும். அடா வேணு முதலி, பார்! பார்! பார்!"

இங்ஙனம் குள்ளச் சாமி சொன்னவுடன் நானும் வேணு முதலியாரும் அவரை உற்றுப் பார்த்தோம்.

குள்ளச் சாமி நெடிய சாமி ஆய்விட்டார்.

நாலே முக்கால் அடிபோல் தோன்றிய குள்ளச் சாமியார் ஏழேமுக்கால் அடி உயரம் வளர்ந்துவிட்டார்.

ஒரு கண்ணைப் பார்த்தால் சூரியனைப் போல் இருந்தது. மற்றொரு கண்ணைப் பார்த்தால் சந்திரனைப்போல் இருந்தது. முகத்தின் வலப்புறம் பார்த்தால் சிவன்போல் இருந்தது. இடப்புறம் பார்த்தால் பார்வதியைப் போலவே இருந்தது. குனிந்தால் பிள்ளையார் போலிருந்தது. நிமிர்ந்து பார்க்கும்போது விஷ்ணுவின் முகத்தைப் போலவே தோன்றியது. அப்போது குள்ளச் சாமி சொல்லுகிறார்:

அடா, வேணு முதலி, கேள். நான் ஹிந்துஸ்தானத்து யோகிகளுக்கெல்லாம் தலைவன், நான் ரிஷிகளுட்குள்ளே முதலாவது ரிஷி. நான் தேவர்களுக்கெல்லாம் அதிபதி. நானே பிரம்மா, நானே விஷ்ணு, நானே சிவன், நான் ஹிந்துஸ்தானத்தை அழியாமல் காப்பாற்றுவேன். நான் இந்தப் பூமண்டலத்தில் தர்மத்தை நிலைநிறுத்துவேன்.

நான் கிருதயுகத்தை ஸ்தாபனம் செய்வேன். நானே பரமபுருஷன். இதற்குமுன் ஆசாரியர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள்? எல்லா உயிரும் ஒன்று. ஆதலால் காக்கை, புழு முதலிய ஜந்துக்களிடம் குரூரமில்லாமல் கருணை பாராட்டுங்கள் என்றனர்.

அடா, வேணு முதலி, கவனி.

சைவாச்சாரியர் வைஷ்ணவத்தை விலக்கினர், வைஷ்ணாச்சாரியார் சைவத்தை விலக்கினர்.

நான் ஒன்று செய்வேன்.

காக்கையைக் கண்டால் இரக்கப்படாதே. 'கும்பிடு' கைகூப்பி நமஸ்காரம் பண்ணு. பூச்சியைக் கும்பிடு! மண்ணையும் காற்றையும் விழுந்து கும்பிடு! என்று நான் சொல்லுகிறேன்.

நான் வேதத்திலே முன் சொன்ன வாக்கை இப்போது அனுபவத்திலே செய்து காட்டப் போகிறேன். புராணங்களையெல்லாம் விழுங்கி ஒன்றாக நாட்டப் போகிறேன். ஹிந்து தர்மத்தைக் கூட்டப் போகிறேன்.

அடா, வேணு முதலி கேள், மண்ணும் காற்றும், சூரியனும் சந்திரனும், உன்னையும் என்னையும் சூழ்ந்து நிற்கும் உயிர்களும், நீயும் நானும் தெய்வ மென்றும் வேதம் சொல்லிற்று. இவைதான் தெய்வம். இதைத் தவிர வேறு தெய்வமில்லை. நம்முன்னே காண்பது நாராயணன். இதை நம்முள்ளே நாட்டி, இதை வணங்கி இதன் தொழுகைக் கனியில் மூழ்கி, அங்கு மானிடன் தன்னை முழுதும் மறந்து விடுக.

அப்போது தன்னிடத்து நாராயணன் நிற்பான். இந்த வழியை நான் தழுவியபடியால் மனுஷ்யத் தன்மை நீங்கி அமரத்தன்மை பெற்றேன். ஆதலால் நான் தேவனாய் விட்டேன். இவைதான் தெய்வம். இதைத் தவிர வேறு தெய்வமில்லை. தேவர்களுக்குள்ளே நான் அதிபதி. என் பெயர் விஷ்ணு: நானே சிவன் மகன் குமாரன். நானே கணபதி, நான் அல்லா, யேஹோவான். நானே பரிசுத்த ஆவி, நானே யேசு கிருஸ்து, நானே கந்தர்வன், நானே அசுரன், நான் புருஷோத்தம்மன், நானே ஸமஸ்த ஜீவராசிகளும்.

"நானே பஞ்ச பூதம்! அஹம்ஸத்! நான் கிருதயுகத்தை ஆக்ஞாபிக்கிறேன்! ஆதலால் கிருதயுகம் வருகிறது. எந்த ஜந்துவும், வேறு எந்த ஜந்துவையும் ஹிம்சை பண்ணாமலும் எல்லா ஜந்துக்களும் மற்றெல்லா ஜந்துக்களையும் தேவதா ரூபமாகக் கண்டு வணங்கும்படிக்கும் விதியுண்டானால் அதுதான் கிருதயுகம்-அதை நான் செய்வேன். அடா வேணு முதலி! நான் உன் முன்னே நிற்கிறேன், என்னை அறி" என்று குள்ளச் சாமி சொன்னார். நான் அத்தனைக்குள்ளே மூர்ச்சை போட்டு விழுந்து விட்டேன்.

சுமார் அரைமணி நேரத்துக்குப் பின்பு எனக்கு மறுபடி பிரக்கினை ஏற்பட்டது. அப்போது பார்க்கிறேன், வேணு முதலியார் என் பக்கத்தில் மூர்ச்சை போட்டுக் கிடக்கிறார். பிறகு அவருக்குச் சிகிக்சை செய்து நான் எழுப்பினேன்.

குள்ளச் சாமியார் எங்கேயென்று வேணு முதலியார் என் பத்தினியிடம் கேட்டார்.

அவள் சொன்னாள்: "குள்ளச்சாமி இப்படித்தான் கீழே இறங்கி வந்தார். கொஞ்சம் பாயசமும் ஒரு வாழைப்பழமும் கொடுத்தேன். வாங்கித் தின்றார். குழந்தைகளுக்கும் எனக்கும் விபூதி பூசி வாழ்த்தி விட்டுப் போனார். "நீங்கள் மெத்தையிலே என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு இரட்டைப் பாஷையென்றால் அர்த்தமென்ன? என்பதைப் பற்றி அந்த வேணு முதலி மடையன், தர்க்கம் பண்ணுகிறான் என்று சொல்லிச் சிரித்து விட்டுப் போனார்" என்று சொன்னாள்.