பாரதியார் கதைகள்/பேய்க் கூட்டம் II
பேய்க் கூட்டம்
II
[பூர்வ கதை: பாதி யிரவில் என் வீட்டுக் கதவை யாரோ இடி இடியென்றிடிக்க நான் யாரென்று கேட்க, வேணு முதலியும் சில நண்பர்களும் என்று எதிர் உத்தரம் வர, நான் கீழே போய்க் கதவைத் திறக்க, அப்போது அங்கு வந்திருந்தோரை நான் பார்க்கு முன்னாகவே, அவர்கள் பளிச்சென்று என் கண்களைக் கட்டிக் குதிரை வண்டியில் போட்டுக்கொண்டு செல்ல, நெடுந்தூரம் போன பின்பு குதிரை வண்டி சடேலென்று நின்றது.]
மேலே கதை சொல்லுகிறேன். ஆச்சரியமான கதை; ஜாக்கிரதையுடன் கேளுங்கள்.
என்னை ஒருவன் வந்து பந்தைத் தூக்குவது போலே கையில் தூக்கிக் கொணடான். தெய்வ கிருபையால் அவர்கள் என் செவியைக் கட்டவில்லை. சத்தங்கள் செவிப்பட்டன. குதிரையை வண்டியிலிருந்து அவிழ்த்து சமீபத்தில் கொண்டு கட்டினார்கள் என்று சில ஒலிக் குறிப்புகளாலே தெரிந்து கொண்டேன். என்னைத் தூக்கிக் கொண்டு போய்க் கண்ணை அவிழ்த்தபோது பார்க்கிறேன், சுமார் நூறு தீவட்டிகள் கைக்கொணடு சுமார் நூறு கன்னிப்பெண்கள் வரிசையாக நிற்கிறார்கள். எதிரே ஒரு பொன்னாசனம் போட்டிருந்தது. அதன் மேலே கந்தை யுடுத்துக் கருந்துணி போர்த்துத் தலைமொட்டையாய், முகம் நரைத்தும், புகையிலைச் சுருட்டுப் பிடித்துக் கொண்டு ஒரு பரதேசி உட்கார்ந்திருந்தார். அவரைச் சுற்றி அநேகம் சாமியார்கள் நின்றிருக்கிறார்கள். கையை உயரத் தூக்கி அப்படியே பல வருஷம் வைத்துக் கொண்டிருந்தபடியால், கை மரம்போல் அசைக்க முடியாமல் போன சந்நியாசிகளும் காவி யுடுத்தவர்களும் கந்தை தரித்தவரும், சடை நீட்டினவரும், மொட்டையடித்தவரும், நிர்வாண ரூபமாக நிற்போரும் இங்ஙனம் பல பல வகைகளில் சுமார் முப்பது சந்நியாஸிகள் இருந்தார்கள். வேணு முதலியாரைக் காணவில்லை. என்னை இவர்களில் சிலர்தான் தூக்கிக்கொண்டு வந்திருக்க வேண்டுமென ஊகித்துக் கொண்டேன். அங்ஙனம் கொண்டு வந்ததோரில் ஒருவன் வேணு முதலியார் போலே பொய்க் குரல் காட்டி என்னை வஞ்சனை செய்து விட்டானென்பதையும் உணர்ந்து கொண்டேன்.
ஆதலால், மிகுந்த கோபத்துடன் நான் பொன்னாசனத்தில் வீற்றிருந்த பண்டாரத்தை நோக்கி, “யாரடா நீ! என்னை ஏன் இந்த நின் சேவகர் மூலமாக இங்கு கொணர்வித்தாய்?” என்று கேட்டேன். அப்போது அந்த சந்நியாஸி, “பாரடா!“ என்று சொல்லித் திரும்பி வட திசையைக் காட்டினான். அவன் கிழக்கைப் பார்க்க உட்கார்ந்திருந்தான். அந்த ராத்திரியில் உனக்குத் திசை எப்படித் தெரிந்ததென்று கேட்பீர்களே? அந்தப் பண்டாரஞ் சொன்னான்: “வட திசையைப் பார், அங்கே எரிகின்ற சிதைகளைக் கண்டாயா?“ என்றான். அங்கு பார்த்தேன். முப்பது நாற்பது பிணங்கள் வரிசையாக அடுக்கி எரிந்து கொண்டிருந்தன. பாதி ராத்திரியில் அந்தப் பண்டாரங்களின் கூட்டத்தைப் பா‘க்கும்போதே எனக்குப் பயமாக இருந்தது. அந்த இரவிலே இந்த முப்பது நாற்பது பிணங்கள் எரிவதையும் சேர்த்துக் காட்டினபோது நான் பயந்து நடுங்கிப் போனேன். அந்தப் பண்டாரம் கொல்லென்று சிரித்தான்.
உடனே அந்த நூறு தீவட்டிகள் கொண்டிருந்த நூறு கன்னிப் பெண்களும் பாடத் தொடங்கினார்கள். தேவகானம் அமிர்த வருஷம். இன்னிசைக் கடல். இன்பக் காட்டுத் தீ-அந்த மாதிரிப் பாட்டு நான் கேட்டதே கிடையாது. அவர்கள் பாடிய பாட்டு திருவாசகம்.
நெறியல்லா நெறிதன்னை
நெறியாக நினை வேனைச்
சிறு நெறிகள் சேராமே
திருவருளே சேரும் வண்ணம்
குயி யொன்று மில்லாத
கூத்தன் தன் கூத்தை யெனக்
கறியும் வண்ண மருளிய வா
றார் பெறுவாரச்சோ வே!
🞸🞸🞸
ஆர் பெறுவார் அச்சோவே!
அறியும் வண்ணம் அருளிய ஆறு
ஆர் பெறுவார்? அச்சோ! ஏ!
அறியும் வண்ணம் அருளிய ஆறு
ஆர் பெறுவார் அச்சோ! ஏ!
சிறிது நேரத்துக்கெல்லாம் கூத்து முடிந்தது. பெண்கள் மறைந்துவிட்டனர்.
தீவட்டி யொளி குறைந்தது. நாலு தீவட்டிகள் மிஞ்சின. அவற்றை நான்கு வலக்கை தூக்கிப் பரதேசிகள் இடக்கையிலே தூக்கி நின்றனர்.
பண்டாரம் சொல்லுகிறான்! எந்தப் பண்டாரம் சொல்லுகிறான்? பொன்னாசனத்தின்மீது வீற்றிருந்த தலைப் பண்டாரம் சொல்லுகிறான்:
“வாப்பா! காளிதாஸா, பயப்படாதே. தரையின் மேல் உட்கார்ந்து கொள். மனதைக் கட்டு. மூச்சை நேராக்கு. ஒன்றும் குடிமுழுகிப் போய் விடவில்லை. நீ செய்த நூல்கள் சில நாம் பார்த்திருக்கிறோம். 'கடலெதிர்த்து வந்தால் கலங்க மாட்டோம். தலைமேல் இடி விழுந்தால் தளர மாட்டோம்; எங்கும் அஞ்சோம்; யார்க்கு மஞ்சோம்; எதற்கு மஞ்சோம்; எப்போதும் அஞ்சோம்" என்று நீ பாடினதை நான் நேற்று ஒரு புஸ்தகத்தில் பார்த்தேன். நீ உண்மையான அனுபவத்தைச் சொன்னாயா, அல்லது வெறுங் கற்பனைதானா என்பதை அறியும் பொருட்டாக நான் உன்னை இங்கே கொணர்வித்தேன். நீ பயப்படுகிற அளவு ஆற்காட் நவாப் கூட பயந்தது கிடையாது. ஆற்காட் நவாப் சங்கதி தெரியுமா? கிளைவ் ஒரு வாயில் வழியே கோட்டைக்குள் புகுந்து பார்த்தபோது நவாப் மற்றொரு வாயில் வழியே வெளியேறி விட்டாராம். உள்ளே போனால் கிளைவ் யாருடன் சண்டை போடுவார்? அவர் பாட்டிலே போய் ஷோக்காகக் கோட்டைக்குள் பீரங்கி சகிதமாக இருந்து கொண்டு கோட்டை கொத்தளங்களைச் சீராக்கித்தான் அதை வைத்துக் கொண்டாரென்று கேள்வியுற்றதுண்டு. நீ அந்த ஆற்காடு நபாவினிடமிருந்த பிராமணச் சோதிடரின் வம்சத்தில் பிறந்தாயோ? ஆற்காட்டு பயம் பயப்படுகிறாயே! மூடா, ஆறுதலடை.”அந்தப் பரதேசி பின்னும் சொல்லுகிறான்: “மனுஷ்ய வாழ்க்கை சதமில்லை. பிறப்பை உடனே ஒழி. மண்ணில் பிறக்காதே. வானத்தில் ஏறு. சந்திர கலைகளில் உண்டாகும் அமிர்தத்தைப் பானஞ்செய்யும் யோகி ஒருவன் தான் உன் பாட்டில் கண்டபடி பயப்படாமலிருக்க முடியும். அதை விட்டு நமக்குத்தான் அகல வெழுதத் தெரியுமென்று நீ கிறுக்கித் தள்ளிவிட்டாய். குண்டலினி அக்கினியைத் தலைக்குக் கொண்டுபோ. அப்போது அமிர்த கலசமொழுகும். அந்த அக்கினியும் அமிர்தமும் ஒன்றாய் இன்ப வெள்ளத்திலே நீந்தலாம். இன்பமிருந்தால் பயமில்லை. இன்பமில்லாதபோது பயம் இயற்கையிலே வரும். இருவினைக் கட்டை அறு. நன்மை தீமையென்ற குப்பையைத் தொலையிலே தள்ளு. எல்லாம் சிவம் என்றறி. உன்னை வெட்டவரும் வாளும் சிவன். அதைக் கும்பிடு. உன்னை அது வெட்டாது. சரணாகதி தான் வழி. பொய் பேசாதே. தீங்கு கருதாதே. பேய்க்குத் தீங்கு செய்யாதே. பகைவனுக்குத் தீமை நினைக்காதே. பகைவனையும் சிவனென்று கும்பிடு. பாம்பின் வாய்க்குள்ளே போய் விரலைவிட்டு ஓம் சிவாய நம என்று சொல். உன்னைக் கடிக்காது.”
தலைமைப் பண்டாரம் பொன்னாசனத்தினின்றும் எழுந்து நின்றான். அப்போது அங்கே ஒரு சங்கொலிப் பண்டாரம் ‘பம்’ ‘பம்‘ ‘பம்‘ என்று சங்கெடுத்து ஊதினான். மற்றொரு சடைப் பண்டாரம் கண, கண, கணவென்று மணியடித்தான். பிறகு பண்டாரங்கள் அத்தனை பேரும் சேர்ந்து பின்வரும் பாட்டைப் பாடினார்கள்.
”வையகத்தே சடவஸ்து வில்லை,
மண்ணுங் கல்லும் சடமில்லை,
மெய்யுரைப்பேன் பேய் மனமே
1
பையப் பையத் தேரடா!
படையும் விஷமுங் கடவுளடா!
பொய்யு மெய்யுஞ் சிவனடா!
பூமண்டலத்தே பயமில்லை!
2
சாவு நோவுஞ் சிவனடா!
சண்டையும் வாளுஞ் சிவனடா!
பாவியு மேழையும் பாம்பும் பசுவும்
பண்ணுந் தானமுந் தெய்வமடா!
3
எங்குஞ் சிவனைக் காணடா!
ஈன பயத்தைத் துரத்தடா!
கங்கைச் சடையா, காலன் கூற்றே
காமன் பகையே வாழ்க நீ!—
4
பாழுந் தெய்வம் பதியுந் தெய்வம்
பாலை வனமுங் கடலுந் தெய்வம்
ஏழு புவியும் தெய்வம் தெய்வம்
எங்குந் தெய்வம் எதுவுந் தெய்வம்.
5
வையகத்தே சடமில்லை,
மண்ணுங் கல்லுந் தெய்வம்
மெய்யுரைப்பேன் பாழ் மனமே
மேலுங் கீழும் பயமில்லை!—
6
இந்தக் கண்ணிகள் அந்தப் பண்டாரங்கள் பாதியிரவில் பாடுவதை அந்த ஸ்மசானத்தில் பாடக் கேட்டபோது எனக்கு மயிர்ச் சிலப்புண்டாயிற்று. அப்போது தலைமைப் பரதேசி என்னை நோக்கிச் சொல்லுகிறான், “காளிதாஸா, அடே! அந்தப் பெண்கள் தீவட்டி வைத்துக் கொண்டு பாட்டுப் பாடி ஆட்டமாடிப் போயினரே. அவர்கள் யார், “நீ அறிவாயா?” என்றான்.
“அறியேன், அவர்கள் யார் சொல்லு“ என்றேன். “அவர்கள் அத்தனை பேரும் பேய்கள். இங்கு மாறுவேஷம் பூண்டு உனக்கு வேடிக்கை காட்டும் பொருட்டுத் தருவித்தேன்“ என்றான்.
“நீ யார்?“ என்று கேட்டேன்.
“நான் இந்தச் சுடுகாட்டிலுள்ள பேய்களுக்கெல்லாம் தலைவன்“ என்றான்.