பாரதியார் கதைகள்/மிளகாய்ப் பழச் சாமியார்
வேதபுரத்துக்கு வடக்கே முத்துப்பேட்டையில் பெரும்பாலும் தெலுங்கு நெசவுத் தொழிலாளரும், தமிழ்க் கைக்கோளரும் வாசம் செய்கிறார்கள். அந்த ஊரில் நெசவுத் தொழிலே பிரதானம். "லுங்கிகள்" என்றும் "கைலிகள்" என்றும் சொல்லப்படும் மகமதியருக்கு அவசியமான கெட்டிச் சாயத்துணிகள் இங்கு மிகுதியாக நெய்யப்பட்டு, சிங்கப்பூர் பினாங்கு முதலிய வெளித் தீவாந்திரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகினற்ன.
இந்த நெசவுத் தொழிலாளர் அத்தனை பேரும் அங்களாம்மனுடைய அவதாரமென்பதாக ஒரு ஸ்திரீயை வணங்குகிறார்கள். அந்த ஸ்திரீ சுமார் நாற்பத்தைந்து வயதுடையவள். சரீரத்தில் நல்ல பலமும், வீரதீர பராக்கிமங்களும் உடையவள். இவளுடைய புருஷன் இறந்துபோய் இருபத்தைந்து வருஷங்களாயின.
இவள் காவி வஸ்திரமும் சடைமுடியும் தரிக்கிறாள். இவளுடைய முகம் முதிர்ந்த, பெரிய, வலிய, உறுதியான ஆண்முகம் போல இருக்கிறது. அத்துடன் பெண்ணொளி கலந்திருக்கிறது. இவளுடைய கண்கள் பெரிய மான் விழிகளைப் போல இருக்கின்றன.
இவள் ஒரு சுப்பிரமணிய சுவாமி கோவில் கட்டிக் கொண்டிருக்கிறாள். கோயில் கட்டிடம் பெரும்பாலும் முடிந்து போய்விட்டது. இன்னும் சிகரம் மாத்திரந்தான் வைக்கவில்லை.
இவள் தன் வீட்டுக்குள் ஒரு வேல் வைத்துப் பூஜை பண்ணுகிறாள். அதன் பக்கத்தில் இரவும் பகலும் அவியாத வாடா விளக்கு எரிகிறது.
கோயிலும் இவள் வீட்டுக்குச் சமீபத்திலேதான் கட்டியாகிறது. இவளுடைய வீடு வேதபுரத்துக்கும் முத்துப்பேட்டைக்கும் இடையே சாலையின் நடுமத்தியில் சுமைதாங்கிக்குச் சமீபத்தில் இருக்கிறது.
திருக்கார்த்திகை யன்று, பிரதி வருஷமும் அடியார்கள் சேர்ந்து இவளுக்கு மிளகாய்ப் பழத்தை அரைத்து உடம்பெல்லாம் தேய்த்து ஸ்நானம் செய்விக்கிறார்கள். அதனாலேதான் இவளுக்கு "மிளகாய்ப் பழச் சாமியார்" என்ற நாமம் ஏற்பட்டது.
நான் இந்த மிளகாய்ப் பழச் சாமியாருடைய கோயிலுக்குப் பலமுறை போய் வேலைக் கும்பிட்டிருக்கிறேன். இன்று காலை இந்த ஸ்திரீ என்னைப் பார்க்கும் பொருட்டு வந்தாள். வந்து கும்பிட்டாள்.
"எதன் பொருட்டுக் கும்பிடுகிறீர்?" என்று கேட்டேன்.
"எனக்குத் தங்களால் ஒரு உதவியாக வேண்டும்" என்றாள்.
"என்ன உதவி?" என்று கேட்டேன்.
"பெண் விடுதலை முயற்சியில் எனக்குத் தங்களால் இயன்ற சகாயம் செய்ய வேண்டும்" என்றாள்.
"செய்கிறேன்" என்று வாக்குக் கொடுத்தேன்.
அப்போது அந்த மிளகாய்ப் பழச் சாமியார் பின் வருமாறு உபந்நியாசம் புரிந்தாள்.
ஹா, ஹா, பொறுத்துப் பொறுத்துப் பொறுத்துப் பொறுத்துப் போதுமடா, போதுமடா, போதும்.
உலகத்திலே நியாயக் காலம் திரும்புவதாம்.
ருஷியாவிலே கொடுங்கோல் சிதறிப் போய்விட்டதாம்.
ஐரோப்பாவிலே ஏழைகளுக்கும் பெண்களுக்கும் நியாயம் வேண்டுமென்று கத்துகிறார்களாம்.
உலக முழுமைக்கும் நான் சொல்லுகிறேன்.
ஆண் பெண்ணுக்கு நடத்தும் அநியாயம் சொல்லுக்கடங்காது; அதை ஏட்டில் எழுதியவர் இல்லை. அதை மன்றிலே பேசியவர் யாருமில்லை.
பறையனுக்குப் பார்ப்பானும், கறுப்பு மனுஷனுக்கு வெள்ளை மனுஷனும் நியாயம் செய்யவேண்டும் என்று சொல்லுகிறீர்கள்.
பெண்ணுக்கு ஆண் நியாயம் செய்வது அதையெல்லாம் விட முக்கியமென்று நான் சொல்லுகிறேன்.
எவனும் தனது சொந்த ஸ்திரீயை அலட்சியம் பண்ணுகிறான். தெருவிலே வண்டி தள்ளி நாலணா கொண்டு வருவது மேல் தொழில் என்றும் அந்த நாலணாவைக் கொண்டு நாலுவயிற்றை நிரப்பி வீடு காப்பது தாழ்ந்த தொழிலென்றும் நினைக்கிறான். பெண்கள் உண்மையாக உழைத்து ஜீவிக்கிறார்கள். ஆண் மக்கள் பிழைப்புக்காகச் செய்யும் தொழில்களில் பெரும்பாலும் பொய், சூது, கனவு, ஏமாற்று, வெளிமயக்கு, வீண் சத்தம், படாடோபம், துரோகம், கொலை, யுத்தம்!
இந்தத் தொழில்கள் உயர்வென்றும், சோற்றுத் துணி தோய்த்துக் கோயில் செய்து கும்பிட்டு வீடுபெருக்கிக் குழந்தைகளைக் காப்பாற்றும் தொழில் தாழ்வென்றும் ஆண் மக்கள் நினைக்கிறார்கள்.
வியபிசாரிக்குத் தண்டனை இகலோக நரகம்.
ஆண் மக்கள் வியபிசாரம் பண்ணுவதற்குச் சரியான தண்டனையைக் காணோம்.
பர ஸ்திரீகளை இச்சிக்கும் புருஷர்களின் தொகைக்கு எல்லையில்லை யென்று நான் சற்றே மறைவிடமாகச் சொல்லுகிறேன். ஆனால் அவர்கள் பத்தினிகளை நேரே நோக்க யோக்கியதை யில்லாமல் இருக்கிறார்கள்.
பூமண்டலத்தின் துக்கம் ஆரம்பமாகிறது. ஆணும் பெண்ணும் சமானம். பெண் சக்தி. பெண்ணுக்கு ஆண் தலைகுனிய வேண்டும். பெண்ணை ஆண் அடித்து நசுக்கக்கூடாது. இந்த நியாயத்தை உலகத்தில் நிறுத்துவதற்கு நீங்கள் உதவிசெய்ய வேண்டும். உங்களுக்குப் பராசக்தி நீண்ட ஆயுளும் இஷ்டகாமய சித்திகளும் தருவாள்" என்று அந்த மிளகாய்ப் பழச் சாமியார் சொன்னாள். சரி என்று சொல்லிதான் அந்தத் தேவிக்கு வந்தனம் செய்தேன். அவள் விடை பெற்றுக்கொண்டு சென்றாள்.