பாரதி பிறந்தார்/7

விக்கிமூலம் இலிருந்து

மீண்டும் பாரதியைச் - சுதேச
மித்திரன் ஆசிரியர்
வேண்டிக் கூப்பிட்டார் - கவிதை
வீரன் புறப்பட்டான்

பாட்டும் கட்டுரையும் - இன்பம்
பாய்ச்சும் சிறுகதையும்
தீட்டிப் புகழ்பெற்றான் - நாட்டார்
தேன்போல் வரவேற்றார்





குமுறும் பேரலைகள் - தாவிக்
குதிக்கும் கடற்கரையில்
இமயப் பெருமலைபோல் - நின்றான்
இடிபோல் முழக்கமிட்டான்

சித்திரப் பாவையைப்போல் - மக்கள்
சிறிதும் அசையாமல்
முத்திரைப் பொன்னழகன் - பேச்சை
முன்னின்று கேட்டார்கள்

மானும் மயிலினமும் - குரங்கும்
மதம்பொழி யானைகளும்
காணும் விருப்போடு - மிருகக்
காட்சிச் சாலைசென்றான்

கூட்டுக் குள்ளிருந்த - சிங்கக்
கோளரி ஒன்றைக்கை
நீட்டித் தடவிநின்றான் - அது
நிமிர்ந்து முழங்கியது





பொக்கை வாய்ச்சிரிப்பால் - இந்தப்
பூமியில் உள்ளோரைக்
கைக்குள் அடக்கிவிட்ட - காந்தி
கடற்கரைச் சென்னைவந்தார்

காந்தியைக் காண்பதற்குப் - பாரதிக்
கவிஞன் சென்றிருந்தான்
மாந்தருள் தெய்வத்தைக் - கவிதை
மன்னவன் வாழ்த்திநின்றான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பாரதி_பிறந்தார்/7&oldid=1016575" இலிருந்து மீள்விக்கப்பட்டது