பாரதி பிறந்தார்/8
சந்தத் தமிழ்க்கவிஞன் - பார்த்த
சாரதி கோவிலுக்குச்
சிந்தை மகிழ்ச்சியுடன் - வெள்ளிக்
கிழமை செல்வதுண்டு
கோயில் யானைக்குத் - தேங்காய்
கொடுத்துப் பழகிவந்தான்
தாயினும் அன்போடு - பழம்
தந்து பழகி வந்தான்
கொல்லும் மதம்பிடித்தே - யானை
கோபம் கொண்டொருநாள்
செல்வோர் வருவோரைக் - கண்டு
சீறத் தொடங்கியது
பாட்டுக் கவியரசன் - அதன்
பக்கம் சென்றுவிட்டான்
போட்டுத் துவைத்தவனை - நிலத்தில்
புரட்டி விட்டதடா
சீற்ற யானையிடம் - அன்று
சிக்கிய பாரதியைக்
காற்றைப் போலவந்தே - குவளைக்
கண்ணன் மீட்டுவிட்டான்
பொன்னைப் போன்ற உடல் - எங்கும்
புண்ணாய்ப் போனதடா
சின்னஞ் சிறியஉடல் - மாறிச்
சிதைந்து விட்டதடா
செல்லம் மாள் அழுதாள் - இளஞ்
சிட்டுக் குழந்தைகளும்
மெல்ல அருகில்வந்தே - தந்தை
மேனியைப் பார்த்தழுதார்
மன்னவன் பாரதியும் - மூன்று
மாதம் கழிந்தபின்னர்
பொன்னுடல் தன்னைவிட்டான் - அழியாப்
புகழுடம்பு எய்திவிட்டான்