பார்த்திபன் கனவு/மூன்றாம் பாகம்/ஆற்றங் கரையில்
ஆற்றங் கரையில்
[தொகு]குந்தவியின் முகத்தில் தோன்றிய மாறுதலை மகேந்திரன் கவனித்தான்.
"என்ன தங்காய்! என்ன" என்றான்.
தனித்து வந்த குதிரையை வெறித்து நோக்கிய வண்ணம் இருந்தாள் குந்தவி. அவள் வாயிலிருந்து வார்த்தை ஒன்றும் வரவில்லை. இதைக் கவனித்த மகேந்திரன், "தங்காய்! அதோ வருகிறது குதிரைதானே புலி, சிங்கம் அல்லவே? எதற்காக இப்படிப் பயப்படுகிறாய்?" என்று கேட்டான்.
குந்தவிக்கு ரோசம் பிறந்தது; பேச்சும் வந்தது. "புலி, சிங்கமாயிருந்தால் தானென்ன, அண்ணா! நீ பக்கத்திலே இருக்கும்போது?" என்றாள்.
"பின் ஏன் இப்படி வெறித்துப் பார்க்கிறாய்! - பேய் பிசாசுகளைக் கண்டதைப் போல!"
"அண்ணா! அந்தக் குதிரை யாருடைய குதிரை தெரியுமா?"
"தெரியாது; யாருடையது?"
"அப்பாவினுடையது!"
"என்ன?"
"ஆமாம்; இதே மாதிரி உயர் ஜாதிக் குதிரைகள் இரண்டு அப்பாவிடம் இருக்கின்றன. இது புஷ்பகம்; இன்னொன்று பாரிஜாதம்."
"அப்படியா? இது எப்படி இங்கே தெறிகெட்டு வருகிறது? அப்பாவிடந்தான் நாம் காஞ்சியில் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினோமே? அவர் இந்தக் குதிரையில் வந்திருக்க முடியாது?"
"செண்பகத் தீவின் இரத்தின வியாபாரிக்கு அப்பா தம் குதிரையை கொடுத்ததாகச் சொன்னார்."
"ஓஹோ!"
இதற்குள் குதிரை மிகவும் நெருங்கி வந்துவிட்டது. மகேந்திரன் கட்டளைப்படி உடன் வந்த வீரர்களில் ஒருவன் குதிரையைப் பிடித்துக் கொண்டான். அதைத் தன்னருகில் வரும்படி குந்தவி கூறி, அதன் முதுகைத் தடவிக் கொடுத்தாள். குதிரை உடம்பைச் சிலிர்த்துக் கொண்டு கனைத்தது. பிறகு, அக்குதிரையையும் பிரயாண கோஷ்டியோடு கொண்டு போனார்கள்.
"அண்ணா! அந்த இரத்தின வியாபாரிக்கு என்ன நேர்ந்திருக்கும்?" என்று குந்தவி மிக்க கவலையுடன் கேட்டாள்.
இரத்தின வியாபாரியை விக்கிரமன் என்பதாகக் குந்தவி சந்தேகிக்கிறாள் என்னும் விஷயம் மகேந்திரனுக்குத் தெரியாது. ஆகையால் அவன் அலட்சியமாக, "பல்லவ சக்கரவர்த்தியைச் சுமந்த குதிரை கேவலம் ஒரு வியாபாரியைச் சுமக்குமா? எங்கேயாவது கீழே தள்ளிக் குழியும் பறித்துவிட்டு வந்திருக்கும்!" என்று சிரித்தான்.
குந்தவியின் உள்ளம் துடித்தது. ஆனால் ஒரு நிமிஷத்துக்கெல்லாம் ஓர் ஆறுதலான எண்ணமும் உண்டாயிற்று. உண்மையிலே இந்தக் குதிரை அவனைத் தள்ளிவிட்டு வந்திருக்குமானால் அவன் சோழ ராஜகுமாரனாக இருக்க மாட்டான். சாதாரண வர்த்தகனாய்த் தானிருப்பான்- ஆனால் அந்த இரத்தின வியாபாரியின் தீரத்தைப் பற்றியும் போர்த்திறமையைப் பற்றியும் அப்பா ரொம்பச் சொன்னாரே? ஐயோ! அவனுக்கு என்ன நேர்ந்திருக்கும்? - இவ்வளவு அறிவுள்ள பிராணியான குதிரைக்குப் பகவான் பேசும் சக்தி மட்டும் கொடுக்காமல் போய்விட்டாரே? அந்தச் சக்தி இருந்தால் இரத்தின வியாபாரிக்கு என்ன நேர்ந்தது என்ற இரகசியத்தை அது வெளியிடுமல்லவா? - புஷ்பகத்துக்குப் பேசும் சக்தி திடீரென்று ஓர் அற்புதத்தினால் வந்து விடாதா என்று ஆசைப்பட்டவளைப் போல் குந்தவி அதன் முதுகை அடிக்கடி தடவிக் கொண்டு வந்தாள்.
இப்படிப் பிரயாணம் நடந்து கொண்டிருக்கையில், கொஞ்ச நேரத்துக்குப் பிறகு சுற்றுப்புறக் காட்சியின் தோற்றத்தில் ஒரு மாறுதல் காணப்பட்டது. தரை ஈரமாயிருந்தது, அங்கங்கே பள்ளமான இடங்களில் நீர் தேங்கியிருந்தது. மரங்கள் பளிச்சென்று இருந்தன, காற்றும் குளிர்ந்து வந்தது.
"தங்காய்! நேற்று இங்கெல்லாம் பெருமழை பெய்திருக்கிறது. காஞ்சியில் ஒரு துளிகூட விழவில்லையே?" என்றான் மகேந்திரன்.
அதைப்பற்றியேதான் குந்தவியும் சிந்தித்துக் கொண்டிருந்தாள். ஒருவாறு அவளுக்கு உண்மை புலப்பட ஆரம்பித்தது, நேற்று மாலை திடீரென்று இந்தப் பக்கத்தில் பெரும் புயலும் மழையும் அடித்திருக்கிறது. அதில் புஷ்பகமும் இரத்தின வியாபாரியும் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குதிரை எப்படியோ தப்பிப் பிழைத்து வந்திருக்கிறது. இரத்தின வியாபாரி - ஐயோ பாவம்! அவனுக்கு என்ன நேர்ந்ததென்பது வழியில் எங்கேயாவது தெரியவருமா? விபத்து நடந்த இடத்தைப் புஷ்பகம் காட்டுமா? ஒருவேளை உயிர்போன அவனுடைய உடலைக் காணும்படியாக நேருமோ? ... சிவசிவ!....அந்தச் சகிக்க முடியாத நினைப்பினால் குந்தவி கண்களை மூடிக் கொண்டாள்.
இவ்விதம் ஈரமான பிரதேசங்கள் வழியாக அரைக்காத தூரம் போன பிறகு சூரியன் அஸ்தமிக்க ஒரு நாழிகைப் பொழுது இருக்கும் சமயத்தில் காட்டாற்றங்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். நேற்று மாலை அந்தக் காட்டாறு அளித்த காட்சிக்கு இப்போதைய காட்சி நேர்மாறாயிருந்தது. நேற்று அங்கே ஊழிக்காலத்து மகாப் பிரளயத்தைப் போல, கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே ஜலப் பிரவாகமாய்,பிரம்மாண்டமான சுழல்களுடனும் ஹோ என்று பேரிரைச்சலுடன் அலைமோதிக் கொண்டு போன வெள்ளம் பார்க்கப் பீதிகரமான காட்சியை அளித்தது.
இன்று அதே பிரதேசம் பிரளயத்துக்குப் பிறகு ஏற்படும் புது உலக சிருஷ்டியில் நவ மோகனத்தைப் பெற்றிருந்தது. காட்டாற்றின் மத்தியில் முழங்காலளவு ஜலம் சலசலவென்ற சத்தத்துடன் போய்க் கொண்டிருந்தது. அஸ்தமன சூரியனின் பொற்கிரணங்கள் பசுமரக் கிளைகளின் வழியாக வந்து ஓடும் ஜலத்தில் தவழ்ந்து விளையாடி வர்ண ஜாலங்களைக் காட்டின. நதிக்கரைப் பறவைகள் மதுரகானம் செய்துகொண்டு மரங்களில் உள்ள கூடுகளை நோக்கி வந்தன. அழகும், அமைதியும், ஆனந்தமும் அங்கே குடி கொண்டிருந்தன.
ஆனால் குந்தவியின் உள்ளத்திலோ நேற்று அங்கே அடித்த புயலும் மழையும் இப்போது குமுறிக் கொண்டிருந்தன. நேற்று அந்தக் காட்டாற்றில் பெருவெள்ளம் பெருகியிருக்க வேண்டுமென்று அவள் தெரிந்து கொண்டாள். நதிக்கரை மரங்களின் அடிமரத்தில் தண்ணீர்ப் பிரவாகத்தின் புது அடையாளம் நன்றாகப் பதிந்திருந்தது. தாழ்ந்த கிளைகளில் வெள்ளத்தில் வந்த வைக்கோல் முதலியவை சிக்கிக் கொண்டிருந்தன. காட்டாற்று வெள்ளமாதலால் மளமளவென்று பெருகியிருக்க வேண்டும். இரத்தின வியாபாரியின் கதியை ஒருவாறு குந்தவி இப்போது ஊகித்தாள். காட்டாற்று வெள்ளத்தின் சக்தியை அறியாமல் அவன் நதியில் இறங்கியிருப்பான். அல்லது அவன் இறங்கிய பிறகு பிரவாகம் திடீரென்று பெருகியிருக்கும். குதிரை எப்படியோ தப்பி கரையேறியிருக்கிறது. பாவம்! அது வெகுநேரம் கரையிலேயே இரத்தின வியாபாரியை எதிர்பார்த்துக் காத்திருக்கும். அவன் கரைக்கு வராமல் போகவே காஞ்சியை நோக்கிக் கிளம்பியிருக்கிறது. இரத்தின வியாபாரி - ஐயோ! - பிரவாகத்துக்கு இரையாகியிருக்க வேண்டும். அடாடா! தாயாரைப் பார்ப்பதற்காக அவசரமாக உறையூருக்குப் போவதாக சக்கரவர்த்தியிடம் சொன்னானாமே? அவனுக்கு இந்தக் கதியா நேரவேண்டும்?...
இப்படிக் குந்தவி எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் பல்லக்கு நீரோட்டத்தின் அருகில் வந்தது. எல்லாரும் ஜலத்தில் இறங்கினார்கள். ஆனால் புஷ்பகம் மட்டும் நீரில் இறங்கத் தயங்கிற்று. நதிக்கரைக்கு வந்ததிலிருந்தே அதனுடைய தயக்கம் அதிகமாயிருந்ததை எல்லாரும் கவனித்தார்கள். அதைப் பிடித்து வந்த போர் வீரன் நீரோட்டத்தில் இறங்கும்படியாக அதைப் பலவந்தப்படுத்தினான் குதிரையும் இறங்கிற்று. அவ்வளவுதான்; உடனே அது ஒரு திமிறு திமிறிக் கொண்டு போர் வீரனுடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டது. வந்த கரையை நோக்கித் திரும்பி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து ஓடியது. கரையையடைந்ததும் அது நிற்கவில்லை. வேகம் இன்னும் அதிகமாயிற்று. வில்லிலிருந்து கிளம்பிய இராமபாணம் என்பார்களே, அதுமாதிரி நாலு கால் பாய்ச்சலில் பறந்து ஓடி எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே காஞ்சி செல்லும் சாலையில் கண்ணுக்கெட்டாத தூரம் வரையில் சென்று மறைந்தது.
"புஷ்பகம் என்று அப்பா பெயர் வைத்தது சரிதான். தரையில் அதன் கால்கள் தொட்டதாகவே தெரியவில்லையே!" என்றான் மகேந்திரன்.