உள்ளடக்கத்துக்குச் செல்

பார்த்திபன் கனவு/மூன்றாம் பாகம்/இரத்தின வியாபாரி

விக்கிமூலம் இலிருந்து


இரத்தின வியாபாரி

[தொகு]

அமைதியான நீலக் கடலில் அழகிய அன்னப் பறவை போல் வெள்ளைப் பாய் விரித்த கப்பல் மேற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சூரியன் உதயமாகும் நேரம். அவனுடைய தேஜோ மயமான வரவை எதிர்பார்த்துக் கீழ்வான முகட்டில் இயற்கைத் தேவி வர்ணக் கோலங்கள் போட்டுக் கொண்டிருந்தாள்.


கப்பலில் இருந்தவர்களிடையே பரபரப்பு அதிகமாய்க் காணப்பட்டது. அவர்கள் பெரும்பாலும் வர்த்தகர்களாகக் காணப்பட்டார்கள். எல்லாரும் அவரவர்களுடைய மூட்டைகளை எடுத்து வைத்து, கப்பலிலிருந்து இறங்குவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந் தார்கள். சிலர் கப்பல் மேல் தளத்தின் ஓரமாக வந்து, மேற்குத் திசையை ஆவலுடன் நோக்கினார்கள்.


இப்படி மேற்குத் திக்கை நோக்கி நின்றவர்களில் வாலிப வர்த்தகன் ஒருவன் காணப்பட்டான். பிராயம் இருபது, இருபத்தொன்று இருக்கலாம். அவனுடைய உடையிலிருந்தும் அவன் பக்கத்தில் கிடந்த மூட்டையிலிருந்தும் தான் அவனை வியாபாரி என்று சொல்லலாமே தவிர, மற்றபடி தோற்றத்தை மட்டும் கவனித்தால் அவன் இராஜ குலத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லும்படியிருந்தது. அவன் வியாபாரியாயிருக்கும் பட்சத்தில், சாதாரண வியாபாரியாயிருக்க முடியாது; பெருஞ் செல்வனான இரத்தின வியாபாரியாகத் தான் இருக்க வேண்டும்.


கப்பலிலிருந்த மற்றவர்கள் அடிக்கடி அந்த இளம் வர்த்தகன் நிற்கும் இடத்தை நோக்கினார்கள். அப்போது அவர்களுடைய கண்களில் பயபக்தி காணப்பட்டது; சிறிது கவலையும் தோன்றியது.


அந்த வாலிப வர்த்தகனோ மற்றவர்களையெல்லாம் சிறிதும் கவனிக்கவில்லை. கண்கொட்டாமல் மேற்குத் திக்கையே நோக்கிக் கொண்டு நின்றான். அவனுடைய முகத்திலேதான் எத்தனை ஆவல்? எவ்வளவு கிளர்ச்சி? அவ்வளவு ஆவலுக்கும் கிளர்ச்சிக்கும் என்னதான் காரணமாயிருக்கும்? நீண்ட காலம் அன்னிய நாட்டில் இருந்துவிட்டுத் தாய் நாட்டுக்குத் திரும்பி வருகிறானோ இந்த வாலிபன்? ஜன்ம பூமியின் தோற்றம் எப்போது கண்ணுக்குப் புலனாகும் என்றுதான் இவ்வளவு ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறானோ?


"ஆமாம்; அதுதான் உண்மை யாயிருக்க வேண்டும். ஏனென்றால், அதோ கொஞ்ச தூரத்தில் கருநிறமாக வரம்புபோல் காணப்படும் பூமியைக் கண்டதும் அவனுடைய முகம் மலர்வதைக் காண்கிறோம். சூரியனைக் கண்ட தாமரை இப்படித்தான் மலரும் போலும்!


சற்று நேரம் அப்படியே அசைவின்றி நிற்கிறான் அந்த வாலிப வியாபாரி. ஆரம்பத்தில் வெறும் வரம்பாக மட்டும் தோன்றிய காட்சியானது வரவர மரங்கள், குன்றுகள், கோவில் கோபுரங்களாக மாறிவரும்போது, அவனுடைய உள்ளத்தில் ஆனந்தம் பொங்குவதை முகம் காட்டுகிறது. இதற்கிடையில் கிழக்கே சூரியனும் ஜகஜ்ஜோதியாக உதயமாகித் தன் வன யாத்திரையைத் தொடங்கினான்.


கரையையே பார்த்துக் கொண்டிருந்த வாலிபன் சட்டென்று திரும்பி நோக்கினான். கப்பலிலிருந்தவர்களில் பெரும்பாலோர் அச்சமயம் அவனையே கவனித்துக் கொண்டிருந்தார்களாதலால், அவன் சமிக்ஞை செய்ததும் உடனே நெருங்கி அவனருகில் வந்து பயபக்தியுடன் நின்றார்கள். "நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா?" என்று வாலிபன் கேட்டான்.


"இருக்கிறது மகா...!" என்று சொல்லத் தொடங்கிய ஒருவன், சட்டென்று வாயைப் பொத்திக் கொண்டான்.


"பார்த்தீர்களா? இதுதானா நீங்கள் என் கட்டளையை நிறைவேற்றுகிற லட்சணம்?" என்று வாலிபன் கோபமாய்க் கேட்டான்.


"மன்னிக்க வேண்டும், சுவாமி!"


"என்னுடைய கட்டளையைச் சத்தியமாய் நிறைவேற்றுவீர்களா?"


"நிறைவேற்றுவோம். சுவாமி!"


"தாய் நாட்டில் இருக்கும்போது என்னை நீங்கள் சந்திக்க முயலவே கூடாது, தெரியுமா?"


"தெரியும் சுவாமி!"


"ஒருவேளை தற்செயலாய்ச் சந்தித்தால் என்னைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளக் கூடாது."


"சித்தப்படி நடக்கிறோம்."


"அடுத்த அமாவாசையன்று எல்லாரும் இந்தத் துறைமுகத்திற்கு வந்துவிடவேண்டும்."


"வந்துவிடுகிறோம்!"


"அன்று நான் எக்காரணத்தினாலாவது கப்பலுக்கு வந்து சேராவிட்டால் என்னைப் பற்றி எவ்விதம் விசாரிப்பீர்கள்?"


"இரத்தின வியாபாரி தேவசேனர் என்று விசாரிக்கிறோம்."


"இதிலெல்லாம் கொஞ்சங்கூடத் தவறக்கூடாது."


"இல்லை, சுவாமி!"


மேற்படி வாலிப இரத்தின வியாபாரி உண்மையில் யார் என்பதை நேயர்கள் இதற்குள்ளாக ஊகித்துக் கொண்டிருக்கலாம். ஆம்; பார்த்திப சோழ மகாராஜாவின் புதல்வனும், தற்போது செண்பகத் தீவின் அரசனுமான விக்கிரமன் தான் அவன்.


சென்ற அத்தியாயத்தில் கூறிய சம்பவங்கள் நடந்து ஏறக்குறைய மூன்று வருஷங்கள் ஆகிவிட்டன. இந்த மூன்று வருஷத்தில் விக்கிரமனுடைய ஆட்சியில் செண்பகத் தீவு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றமடைந்து பேரும் புகழும் அடைந்து வந்தது. விக்கிரமனுடைய வரவுக்குப் பிறகு ஒரே தடவை செண்பகத் தீவின் மீது பகைவர் படையெடுத்து வந்தார்கள். அவர்களுக்கு நேர்ந்த கதியை அறிந்த பிறகு செண்பகத் தீவின் மீது படையெடுக்க யாரும் துணியவில்லை. அதற்கு மாறாக, விக்கிரமனுடைய தலைமையில் செண்பகத் தீவின் படை வீரர்கள் வேறு தீவுகளின் மேல் படையெடுத்துச் சென்று அந்தத் தீவுகளிலெல்லாம் புலிக்கொடியை நாட்டி விட்டுத் திரும்பினார்கள். விக்கிரமனுடைய வீரப் பிரதாபங்களையும், மேதா விலாசத்தையும், மற்ற உயர் குணங்களையும் பற்றிய கீர்த்தியானது தூர தூரத்திலேயுள்ள தீவாந்திரங்களிலெல்லாம் பரவத் தொடங்கியது. பல தீவுகளிலுள்ள ஜனங்கள் நல்லாட்சியையும், பாதுகாப்பையும், விரும்பித் தாங்களே விக்கிரமனுடைய ஆட்சிக்குள் வந்து கொண்டிருந்தார்கள். இந்த மூன்று வருஷ காலத்தில் விக்கிரமன் தன்னுடைய தாயாரையாவது, தாய்நாட்டையாவது மறந்து விடவில்லை. மற்றும், பல்லவ சாம்ராஜ்யத் தலைநகரின் வீதியில் அவன் கண்ட இளநங்கையின் சந்திர வதனத்தையும் அவனால் மறக்க முடியவில்லை. செண்பகத்தீவின் பிரஜைகள் தங்களுடைய பாக்கிய வசத்தினால் கிடைத்த புதிய அரசனின் வம்சம் நீடூழி விளங்க வேண்டுமென்னும் ஆசையுடன், விக்கிரமனுடைய விவாகத்தைக் குறித்துச் சிலமுறை விக்ஞாபனம் செய்து கொண்டார்கள். மகாராஜா விடை கொடுத்தால், தாய்நாட்டுக்குச் சென்று சிறந்த அரசர் குலத்துப் பெண்ணை மணம் பேசி வருவதாகவும் சொன்னார்கள். அப்போதெல்லாம் விக்கிரமன் அவர்களுடைய விக்ஞாபனத்தை மறுதளித்து, விவாகத்தைப் பற்றிப் தன்னுடைய பரிபூரண வெறுப்பையும் தெரிவித்தான். இதற்கு அடிப்படையான காரணம், அந்தக் காஞ்சி நகர்ப் பெண்ணினுடைய கருவிழிகள் ஞாபகந்தானோ, என்னவோ, யாருக்குத் தெரியும்?


நாளாக ஆக, விக்கிரமன் செண்பகத் தீவில் தன்னுடைய தனிமையை அதிகமாய் உணரத் தொடங்கினான். எவ்வளவோ ஜனக்கூட்டத்துக்கு நடுவில் இருந்தும் தான் துணையின்றித் தனித்திருப்பதை அவன் கண்டான். வெற்றியும், புகழும், செல்வாக்கும், திரளான மக்களின் போற்றுதலும் இருந்தும் அவனுடைய இதயத்தில் நிறைவு ஏற்படவில்லை. அதில் ஒரு மூலை சூன்யமாக இருந்தது. அந்தச் சூன்ய மூலையானது நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டு வந்தது. 'நீண்ட நயனங்களையுடைய அந்தப் பெண் மட்டும் இங்கே என் அருகில் இருந்தால்?' - என்ற எண்ணம் அடிக்கடி உண்டாயிற்று. அது அவனுக்கு அளவிலாத வேதனையையளித்தது. அந்த வேதனை தரும் எண்ணத்தை அவனால் மறக்க முடியாமலிருந்ததோடு, அந்த வேதனையின் நடுவிலேயே ஒருவித இன்பமும் இருப்பதை அவன் உணர்ந்தான். தன்னை அறியாமல் அடிக்கடி அவன் பெருமூச்சு விட்டான். சில சமயம் அவனுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பெண்ணின் முகம் அவன் மனக்கண்ணின் முன்னால் தோன்றும்போது, அவனுடைய இருதயமானது விரிந்து பொங்கி மேல் நோக்கி எழுந்து நெஞ்சை அடைத்து விடுவதுபோல் உணர்ச்சி உண்டாகும்.


வேதனையுடன் இன்பமும் கலந்து உண்டாக்கிய இந்த ஞாபகத்தை அவன் ஓரளவு மறப்பதற்கு உதவியான ஒரு சம்பவம் இரண்டு மாதத்திற்கு முன்பு நேர்ந்தது.


ஒருநாள் இரவு விக்கிரமனுடைய கனவில் அருள்மொழி ராணி தோன்றினாள். மகாராணிக்குரிய ஆடை ஆபரணங்கள் ஒன்றுமில்லாமல், தூயவெள்ளைக் கலையுடுத்தி விபூதி ருத்திராட்சமணிந்து அவள் சிவபக்தியில் கனிந்த சிவவிரதையாகக் காட்சி தந்தாள்! முன் எப்போதையும் விட அவளுடைய முகத்தில் தேஜஸ் அதிகமாக ஜொலித்தது. நாவில் நமசிவாய மந்திரத்தை ஜபித்துக் கொண்டு வந்த அருள்மொழித் தேவி விக்கிரமனைக் கனிவு ததும்ப நோக்கி "குழந்தாய் எனக்கு விடை கொடு!" என்றாள். விக்கிரமன் ஒன்றும் புரியாமல் திகைத்து "அம்மா! இத்தனை நாள் கழித்து இப்போது தானே உன்னைப் பார்த்தேன்? அதற்குள் போக விடை கேட்கிறாயே? எங்கே போகப் போகிறாய்?" என்றான். அருள்மொழி ராணி அதற்கு விடை கூறாமல், "அப்பா குழந்தாய்! நான் ஒரு வாக்குறுதி கொடுத்து விட்டேன். அதை நீ நிறைவேற்றித் தரவேண்டும். முக்கியமாக அதன் பொருட்டே உன்னைப் பார்க்க வந்தேன்" என்றாள்.


"என்ன வாக்குறுதி, அம்மா? யாருக்குக் கொடுத்தாய்?"


"சக்கரவர்த்தியின் மகள் குந்தவியை நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்!" விக்கிரமன் திடுக்கிட்டு,


"இது என்ன அம்மா சொல்கிறாய்? சக்கரவர்த்தி மகளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? யாருக்கு இம்மாதிரி வாக்குக் கொடுத்தாய்?" என்று கேட்டான்.


"சிவனடியாருக்கு வாக்குக் கொடுத்தேன். குழந்தாய்! இராமபிரான் தகப்பனாரின் வாக்கை நிறைவேற்றியது போல் நீ என்னுடைய வாக்கைக் காப்பாற்ற வேண்டும்." இவ்விதம் சொல்லிவிட்டு, அருள்மொழித் தேவி விக்கிரமனுடைய அருகில் நெருங்கி அவனுடைய சிரசின் மீது கையை வைத்து ஆசீர்வதித்தாள். உடனே, விக்கிரமன் கண் விழித்து எழுந்தான். "நல்ல வேளை! இதெல்லாம் கனவாய்ப் போயிற்றே!" என்று சந்தோஷப்பட்டான்.


கனவில் கண்டதெல்லாம் வெறும் சித்தப்பிரமை என்பதில் ஐயமில்லை. பழைய பேச்சுகளும் நினைவுகளும் குழம்பி இப்படிக் கனவாகத் தோன்றியிருக்க வேண்டும். இல்லாவிடில் இத்தனையும் நடந்த பிறகு, "சக்கரவர்த்தி மகளைக் கல்யாணம் செய்துகொள்" என்று தாய் தனக்குக் கட்டளையிடுவாளா? இதைப் பற்றிச் சிவனடியாருக்கு அவள் ஏன் வாக்குக் கொடுக்க வேண்டும்?


ஆனாலும் இந்தக் கனவுதான் விக்கிரமன் காஞ்சி நகர்ப் பெண்ணின் நினைவை ஒருவாறு மறப்பதற்கு உதவி செய்தது. கனவு கண்டது முதல், அவனுக்குத் தன் அன்னையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை மிகுந்தது. அவள் எங்கே இருக்கிறாளோ? தன்னைக் காணாமல் எவ்விதம் பரிதவிக்கிறாளோ?


அன்று முதல், தாய் நாட்டுக்குத் திரும்பிப் போக வேண்டுமென்ற ஆர்வம் விக்கிரமனுடைய உள்ளத்தில் பொங்கத் தொடங்கிற்று. போய், அன்னையை இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிடலாம்; தந்தை கொடுத்து விட்டுப்போன சோழர் குலத்து வீர வாளையும் திருக்குறளையும் எடுத்துக் கொண்டு வரலாம் - இவ்விதம் தீர்மானித்துக் கொண்டு மந்திரி பிரதானிகளிடமும் மற்றுமுள்ள முக்கிய பிரஜைகளிடமும் தன் தீர்மானத்தைத் தெரிவித்தான். அவர்கள் எவ்வளவோ ஆட்சேபித்தும் விக்கிரமனுடைய உறுதியை மாற்ற முடியவில்லை. "ஒருவேளை திரும்பி வரும்போது உங்களுக்கு ஒரு மகாராணியை அழைத்துக் கொண்டு வந்தாலும் வருவேன்" என்று விக்கிரமன் விளையாட்டாகச் சொன்னது அவர்களுக்கு ஒருவாறு திருப்தி அளித்தது. ஆகவே, தாய் நாட்டுக்குப் போகச் சகல வசதிகளுடன் வர்த்தகக் கப்பல் ஒன்று சித்தமாயிற்று. அந்தக் கப்பலில் இரத்தின வியாபாரியாக வேஷம் பூண்டு விக்கிரமன் பிரயாணமானான். வர்த்தக வேஷம் தரித்த மெய்க்காவலர் சிலரும், செண்பகத் தீவின் நிஜ வியாபாரிகள் சிலரும் அவனுடன் கப்பலில் புறப்பட்டார்கள்.


தாய் நாட்டில் எந்தத் துறைமுகத்தில் இறங்குவது என்பது பற்றிக் கொஞ்சம் சர்ச்சை நடந்தது. விக்கிரமன் முக்கியமாகப் போக விரும்பிய இடம் உறையூராதலால், நாகப்பட்டினம் துறைமுகத்தில் இறங்கலாம் என்று மற்றவர்கள் சொன்னார்கள். ஆனால், விக்கிரமனோ மாமல்லபுரத்துக்கே போகவேண்டும் என்றான். அவன் குழந்தையாயிருந்த காலத்திலிருந்து மாமல்லபுரத்துச் சிற்ப வேலைகளைப் பற்றிக் கேட்டிருந்தான். அவற்றைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை அவனுக்கு நெடுநாளாக உண்டு. பல்லவ வீரர்கள் அவனைச் சிறைப்படுத்திக் கொண்டு வந்து மாமல்லபுரத்துக் கடற்கரையில் கப்பலேற்றியபோதே, "ஐயோ! இவ்வூரின் சிறந்த சிற்பங்களைப் பார்க்காமல் போகிறோமே?" என்று வருந்தினான். இப்போது அங்கே இறங்கினால் அந்த ஆசை நிறைவேறுமல்லவா?


இதுவன்றி, இன்னொரு முக்கிய நோக்கமும் இருந்தது. தாய் நாட்டிலிருந்து சிறந்த சிற்பிகளையும், சித்திரக்காரர்களையும் செண்பகத்தீவுக்கு அழைத்துப்போக அவன் விரும்பினான். நாளடைவில் செண்பகத் தீவை ஓர் அற்புத சிற்பக் கூடமாகவே செய்துவிட வேண்டுமென்பது அவன் கொண்டிருந்த மனோரதம். அத்தகைய சிற்பங்களையும் சித்திரக்காரர்களையும் மாமல்லபுரத்திலல்லாமல் வேறு எங்கே கண்டுபிடிக்க முடியும்? சோழநாடுதான் இப்போது பழைய பெருமையெல்லாம் போய் பாழடைந்து கிடக்கிறதே!


இதையெல்லாந் தவிர, ஒருவேளை விக்கிரமன் மாமல்லபுரத்தில் இறங்க விரும்பியதற்கு இன்னொரு காரணமும் இருந்திருக்கலாம். காஞ்சிநகர் வீதியிலும், பின்னர் மாமல்லபுரத்துக் கடற்கரையிலும் அவன் பார்த்த இளநங்கையை மீண்டும் ஒருகால் பார்க்கக் கூடுமோ என்ற ஆசை அவன் உள்ளத்தின் அடிவாரத்தில் கிடந்திருக்கக்கூடும். இது விக்கிரமனுக்குக் கூடத் தெரியாமலும் இருக்கலாம். மனித உள்ளத்தின் அந்தரங்க மர்மம் அனைத்தையும் அறிந்து விட்டதாக யார் தான் சொல்ல முடியும்?