பார்த்திபன் கனவு/மூன்றாம் பாகம்/என்ன தண்டனை?
என்ன தண்டனை?
[தொகு]அமாவாசையன்றைக்கு மறுநாள் பொழுது புலர்ந்ததிலிருந்து மாமல்லபுரத்து அரண்மனையில் குந்தவி தேவிக்கு ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்து கொண்டிருந்தது. அடிக்கடி அரண்மனை உப்பரிகை மாடத்தின் மேல் ஏறுவதும், நாலாபுறமும் பார்ப்பதும், மறுபடி அவசரமாகக் கீழிறங்குவதும், பணியாட்களுக்கு ஏதேதோ கட்டளையிடுவதும், உறையூரிலிருந்து அவளுடன் வந்திருந்த வள்ளியிடம் இடையிடையே பேசுவதுமாயிருந்தாள். என்ன பேசினாலும், எதைச் செய்தாலும் அவளுடைய செவிகள் மட்டும் குதிரைக் குளம்படியின் சத்தத்தை வெகு ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தன. பணியாட்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே சட்டென்று பேச்சை நிறுத்தி காதுகொடுத்துக் கேட்பாள். விக்கிரமனையும் பொன்னனையுந்தான் அவள் அவ்வளவு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் என்று சொல்லவேண்டியதில்லை.
விக்கிரமனும் பொன்னனும் வந்தவுடனேயே என்ன செய்ய வேண்டுமென்று குந்தவி தீர்மானித்து வைத்திருந்தாள். விக்கிரமனுடன் அதே கப்பலில் தானும் போய்விடுவது என்ற எண்ணத்தை அவள் மாற்றிக் கொண்டு விட்டாள். அதனால் பலவிதச் சந்தேகங்கள் தோன்றி மறுபடியும் விக்கிரமன் பிடிக்கப்படுவதற்கு ஏதுவாகலாம். இது மட்டுமல்ல; தந்தையிடம் சொல்லிக் கொள்ளாமல் அவ்விதம் ஓடிப் போவதற்கும் அவளுக்கு மனம் வரவில்லை! நரசிம்மச் சக்கரவர்த்தியின் பரந்த கீர்த்திக்குத் தன்னுடைய செயலால் ஒரு களங்கம் உண்டாகலாமா! அதைக் காட்டிலும் விக்கிரமன் முதலில் கப்பலேறிச் சென்ற பிறகு, தந்தையிடம் நடந்ததையெல்லாம் கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, விக்கிரமனையே தான் பதியாக வரித்து விட்டதையும் தெரிவிப்பதே முறையல்லவா? அப்போது சக்கரவர்த்தி தன்னை கட்டாயம் மன்னிப்பதுடன், கப்பலில் ஏற்றித் தன்னைச் செண்பகத் தீவுக்கும் அனுப்பிவைத்துவிடுவார். 'உன்னுடைய கல்யாணத்துக்காக நான் ஒரு பிரயத்தனமும் செய்யப் போவதில்லை. உன்னுடைய பதியை நீயேதான் ஸ்வயம்வரம் செய்து கொள்ளவேண்டும்' என்று சக்கரவர்த்தி அடிக்கடி கூறிவந்திருக்கிறாரல்லவா? அப்படியிருக்க, இப்போது தன் இஷ்டத்திற்கு அவர் ஏன் மாறு சொல்ல வேண்டும்?
இத்தகைய தீர்மானத்துடன் குந்தவி விக்கிரமனுடைய வரவுக்கு வழி நோக்கிக் கொண்டிருந்தாள். வானவெளியில் சூரியன் மேலே வர வர, குந்தவியின் பரபரப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. கடைசியாக, கிட்டதட்ட நடு மத்தியானத்தில் குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்டபோது, குந்தவியினுடைய இருதயம் விம்மி எழுந்து தொண்டையை அடைத்துக் கொண்டது. மறுபடியும் ஒரு தடவை விக்கிரமனைக் கப்பலில் ஏற்றி அனுப்பி விட்டுத் தான் பின் தங்குவதா? கதையிலே, காவியத்திலே வரும் வீரப் பெண்மணிகள் எல்லாரும் அவ்விதந்தானா செய்திருக்கிறார்கள்? அர்ச்சுனனோடு சுபத்திரை கிளம்பிப் போய்விடவில்லையா? கிருஷ்ணனோடு ருக்மணி போகவில்லையா? தான் மட்டும் எதற்காகப் பின்தங்க வேண்டும்? விக்கிரமனுக்கு விடை கொடுத்தனுப்புவது தன்னால் முடியாத காரியம் என்று அவளுக்குத் தோன்றிற்று. குதிரைகளின் காலடிச் சத்தம் நெருங்க நெருங்க அவளுடைய மனக்குழப்பம் அதிகமாயிற்று.
வந்த குதிரைகள் அரண்மனை வாசலில் வந்து நின்றன. வாசற்காப்பாளருக்கு, இரத்தின வியாபாரி தேவசேனர் வந்தால் உடனே தன்னிடம் அழைத்து வரும்படிக் குந்தவி கட்டளையிட்டிருந்தாள். இதோ, குதிரையில், வந்தவர்கள் இறங்கி உள்ளே வருகிறார்கள். அடுத்த வினாடி அவரைப் பார்க்கப் போகிறோம்! ஆகா! இதென்ன? உள்ளே வருகிறது யார்! சக்கரவர்த்தியல்லவா? குந்தவியின் தலை சுழன்றது. எப்படியோ பல்லைக் கடித்துக் கொண்டு சமாளித்துக் கொண்டாள். சிறிது தடுமாற்றத்துடன், "அப்பா! வாருங்கள்! வாருங்கள்! இத்தனை நாளாய் எங்கே போயிருந்தீர்கள்?" என்றாள்.
சக்கரவர்த்தி ஆவலுடன் குந்தவியின் அருகில் வந்து அவளைத் தழுவிக் கொண்டார். உடனே, திடுக்கிட்டவராய், "ஏன் அம்மா! உன் உடம்பு ஏன் இப்படிப் பதறுகிறது?" என்று கேட்டார். "ஒன்றுமில்லை, அப்பா! திடீரென்று வந்தீர்களல்லவா?" என்றாள் குந்தவி.
"இவ்வளவுதானே? நல்லது, உட்கார், குழந்தாய்! நீ உறையூரிலிருந்து எப்போது வந்தாய்? எதற்காக இவ்வளவு அவசரமாய் வந்தாய்?" என்று கேட்டுக் கொண்டே சக்கரவர்த்தி அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்தார். குந்தவிக்கு அப்போது ஏற்பட்ட இதயத் துடிப்பைச் சொல்ல முடியாது.
'அப்பா இங்கே இருக்கும்போது அவர் வந்து விட்டால் என்ன செய்கிறது? இப்பொழுது வருகிற சமயமாச்சே! அரண்மனைக்குள் வராமல் நேரே போய்க் கப்பலேறச் செய்வதற்கு வழி என்ன?' என்றெல்லாம் எண்ணி அவள் உள்ளம் தவித்தது. அவளுடைய தவிப்பைக் கவனியாதவர் போல் சக்கரவர்த்தி, "குழந்தாய்! இன்று சாயங்காலம் நான் உறையூருக்குக் கிளம்புகிறேன். நீயும் வருகிறாயா? அல்லது உறையூர் வாசம் போதுமென்று ஆகிவிட்டதா?" என்றார்.
"உறையூருக்கா? எதற்காக அப்பா?" என்றாள் குந்தவி.
"ரொம்ப முக்கியமான காரியங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன, அம்மா! அருள்மொழித்தேவி அகப்பட்டு விட்டார்."
"ஆகா!" என்று அலறினாள் குந்தவி.
"ஆமாம், அருள்மொழித் தேவியைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்தது யார் தெரியுமா? நீ அடிக்கடி சொல்வாயே, யாரோ வேஷதாரிச் சிவனடியார் என்று, அவர்தான்!"
"என்ன! என்ன!.. தேவி எங்கே இருந்தார்? யார் கொண்டு போய் வைத்திருந்தார்கள்? அந்தப் போலிச் சிவனடியார்... ஒருவேளை அவரேதான்..."
சக்கரவர்த்தி புன்னகையுடன், "இன்னும் உனக்குச் சந்தேகம் தீரவில்லையே, அம்மா! இல்லை. அந்தச் சிவனடியார் அருள்மொழி ராணியை ஒளித்து வைத்திருக்கவில்லை. ராணியைக் கொண்டு போய் வைத்திருந்தவன் நான் முன்னமேயே ஒரு தடவை சொன்னேனே - அந்தக் கபாலிகக் கூட்டத்தின் பெரிய பூசாரி - மகாக் கபால பைரவன். சிவனடியார் அருள்மொழி ராணியைக் காப்பாற்றிக் கொண்டு வந்ததின் பலன், அவருடைய உயிருக்கே ஆபத்து வருவதாயிருந்ததாம். நேற்று இராத்திரி மகாக் கபால பைரவன் சிவனடியாரைக் காளிக்குப் பலிகொடுப்பதாக இருந்தானாம். அவரைக் கட்டிப் பலிபீடத்தில் கொண்டு வந்து போட்டாகிவிட்டதாம். கழுத்தில் கத்தி விழுகிற சமயத்தில் சிவனடியாரை யார் வந்து காப்பாற்றினார்களாம் தெரியுமா?"
"யார் அப்பா?"
"செண்பகத் தீவிலிருந்து வந்திருந்தானே - இரத்தின வியாபாரி தேவசேனன் - அவனும் படகோட்டி பொன்னனும் நல்ல சமயத்தில் வந்து காப்பாற்றினார்களாம்!"
குந்தவி ஏதோ சொல்வதற்கு வாயைத் திறந்தாள். ஆனால் வார்த்தை ஒன்றும் வெளியில் வரவில்லை. அவளுடைய அழகிய வாய், மாதுளை மொட்டின் இதழ்கள் விரிவது போல் விரிந்து அப்படியே திறந்தபடியே இருந்தது.
"இன்னும் ஒரு பெரிய அதிசயத்தைக் கேள், குழந்தாய்! இரத்தின வியாபாரி தேவசேனன் என்பது உண்மையில் யார் தெரியுமா? அவனும் ஒரு வேஷதாரிதான். தேசப் பிரஷ்டனான சோழநாட்டு இளவரசன் விக்கிரமன்தான் அம்மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு அவனுடைய தாயாரையும் தாய்நாட்டையும் பார்ப்பதற்காக வந்தானாம்! என்ன தைரியம், என்ன துணிச்சல், பார்த்தாயா குழந்தாய்!"
குந்தவி விம்மிய குரலுடன், "அப்பா! அவர்கள் எல்லாரும் இப்போது எங்கே?" என்று கேட்டாள். "யாரைக் கேட்கிறாய், அம்மா! விக்கிரமனையும், பொன்னனையுமா? அவர்களை உறையூருக்குக் கொண்டு போகச் சொல்லியிருக்கிறேன். நானே நேரில் வந்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறேன். அதற்காகத் தான் முக்கியமாக உறையூருக்குப் போகிறேன். நீயும் வருகிறாயா?"
இத்தனை நேரமும் குந்தவி அடக்கி வைத்துக் கொண்டிருந்த துக்கமெல்லாம் இப்போது பீறிக்கொண்டு வெளியில் வந்தது. தந்தையின் மடியில் தலையை வைத்துக் கொண்டு 'கோ' என்று கதற ஆரம்பித்தாள்.
இவ்வளவு நேரமும் புன்னகையுடன் பொலிந்து கொண்டிருந்த சக்கரவர்த்தியின் முகபாவத்தில் இப்போது மாறுதல் காணப்பட்டது. அவருடைய கண்களின் ஓரத்தில் ஒரு துளி ஜலம் முத்துப்போல் பிரகாசித்தது. குந்தவியின் தலையையும் முதுகையும் அவர் அன்புடன் தடவிக் கொடுத்து, "குழந்தாய்! உனக்கு என்ன துக்கம்? உன் மனத்தில் ஏதோ வைத்துக் கொண்டு சொல்லாமலிருக்கிறாய். என்னிடம் மறைப்பானேன்! எதுவாயிருந்தாலும் சொல்!" என்றார்.
குந்தவி கொஞ்சங் கொஞ்சமாக எல்லாவற்றையும் சொன்னாள். காஞ்சி நகரின் வீதியில் சங்கிலிகளால் கட்டுண்டு சென்ற விக்கிரமனைச் சந்தித்ததிலிருந்து தன்னுடைய உள்ளம் அவனுக்கு வசமானதைத் தெரிவித்தாள். பிறகு, மகேந்திர மண்டபத்தில் ஜுரத்துடன் உணர்வு இழந்து கிடந்த விக்கிரமனைப் பல்லக்கில் ஏற்றி அழைத்துச் சென்றதிலிருந்து இன்று அவனைக் கப்பலேற்றி அனுப்ப உத்தேசித்திருந்த வரையில் எல்லாவற்றையும் கூறினாள். கடைசியில், "அப்பா! அந்தச் சோழ ராஜ குமாரனையே என் நாதனாக வரித்து விட்டேன். மற்றொருவரை மனதிலும் நினைக்கமாட்டேன்" என்று கூறி விம்மினாள்.
சக்கரவர்த்தி அப்போது அன்பு கனிந்த குரலில் கூறினார். "குழந்தாய், இந்த உலகில் அன்பு ஒன்றுதான் சாசுவதமானது; மற்றதெல்லாம் அநித்தியம். இரண்டு இளம் உள்ளங்கள் அன்பினால் ஒன்று சேரும்போது, அங்கே அன்பு வடிவமான கடவுளே சாந்நித்தியமாயிருக்கிறார். அவ்விதம் அன்பினால் சேர்ந்த உள்ளங்களுக்கு மத்தியில் நின்று தடைசெய்ய யாருக்குமே பாத்தியதை கிடையாது; தாய் தகப்பனுக்குக்கூடக் கிடையாதுதான். ஆகையால், நீ சோழ நாட்டு இளவரசனை மணம் புரிய விரும்பினாயானால், அதை ஒரு நாளும் நான் தடை செய்யேன். ஆனால், குழந்தாய்! நமது பல்லவ வம்சம் நீதிநெறி தவறாது என்று புகழ் பெற்றது. பல்லவ சாம்ராஜ்யத்தில் ராஜகுலத்தினருக்கும் ஒரு நீதிதான்; ஏழைக் குடியானவனுக்கும் ஒரு நீதிதான். ஆகையால், சோழ ராஜகுமாரன் விஷயத்தில் ராஜ்ய நீதிக்கிணங்க விசாரணை நடைபெறும். குற்றத்துக்குத் தகுந்த தண்டனை கிடைக்கும். அதற்குப் பிறகும், நீ அந்த ராஜகுமாரனை மணக்க விரும்பினால், நான் குறுக்கே நிற்கமாட்டேன்."
இதைக் கேட்ட குந்தவி, "அப்பா! தேசப்பிரஷ்டமானவர்கள் திரும்பி வந்தால் தண்டனை என்ன?" என்றாள். "சாதாரணமாக, மரண தண்டனைதான்; ஆனால், சோழ ராஜகுமாரன் விஷயத்தில் யோசிக்க வேண்டிய அம்சங்கள் இருக்கின்றன."
"என்ன அப்பா?"
"நீதான் அடிக்கடி சொல்வாயே, அந்த ராஜகுமாரனுடைய காரியங்களுக்கெல்லாம் அவன் பொறுப்பாளியல்ல - போலிச் சிவனடியாருடைய போதனைதான் காரணம் என்று. அது உண்மைதான் என்று தோன்றுகிறது. அந்தச் சிவனடியாரும் இப்போது அகப்பட்டிருக்கிறார். அவரையும் விசாரித்து உண்மையறிய வேண்டும்."
அப்போது குந்தவி, மனதிற்குள், 'ஆமாம், அந்தப் போலிச் சடை சாமியாரால் தான் எல்லா விபத்துக்களும் வருகின்றன. அவர் அநாவசியமாக நேற்றிரவு ஒரு ஆபத்தில் சிக்கிக் கொண்டிராவிட்டால், இத்தனை நேரம் அந்த வீரராஜகுமாரர் கப்பலில் ஏறி இருப்பாரல்லவா?" என்று எண்ணமிட்டாள்.
"அதோடு இன்னும் ஒரு விஷயமும் யோசிக்க வேண்டியிருக்கிறது. செண்பகத் தீவின் இரத்தின வியாபாரிக்குக் குதிரை கொடுத்துச் சோழ நாட்டுக்கு அனுப்பி வைத்தது யார்? ஞாபகம் இருக்கிறதா, குழந்தாய்?"
"அப்பா!" என்று வியப்பும் ஆனந்தமும் கலந்த குரலில் குந்தவி கூச்சலிட்டாள். ஒற்றர் தலைவன் வேஷத்திலிருந்த சக்கரவர்த்தி குதிரை கொடுத்து அனுப்பித்தானே விக்கிரமன் சோழ நாட்டுக்குப் போனானென்பது அவளுக்கு நினைவு வந்தது.
"அப்படியானால் எப்படி தண்டனை ஏற்படும் அப்பா?" என்றாள்.
"எல்லாம், விசாரிக்கலாம் குழந்தாய்! விசாரித்து எது நியாயமோ, அப்படிச் செய்யலாம். பல்லவ ராஜ்யத்தில் நீதி தவறி எதுவுமே நடக்காது" என்றார் சக்கரவர்த்தி.