உள்ளடக்கத்துக்குச் செல்

பார்த்திபன் கனவு/மூன்றாம் பாகம்/வேஷதாரி

விக்கிமூலம் இலிருந்து


வேஷதாரி

[தொகு]

ஒற்றர் தலைவன் அவ்விதம் இராஜ, பரிவாரங்கள் வருவதைப் பொருட்படுத்தாமல் முன்னால் காஞ்சிப் பாதையில் சென்றதைக் குந்தவி, மகேந்திரன் இருவரும் கவனித்தார்கள்.


குந்தவியின் பல்லக்கும், மகேந்திரனுடைய குதிரையும் ஒன்றையொன்று ஒட்டியே சென்று கொண்டிருந்தன.


மகேந்திரனுடைய தோற்றத்தில், குந்தவியின் மென்மையும் வனப்பும், நரசிம்மவர்மரின் கம்பீரமும் வீரமும் கலந்து பொலிந்தன. அண்ணனும் தங்கையும் அச்சாலையில் பவனி வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது.


ஓர் ஆண்டு காலமாக நரசிம்மவர்மருடைய ஸ்தானத்தில் யுவராஜா மகேந்திரன் இராஜ்ய பரிபாலனம் செய்து வந்தான். அப்படியிருந்தும், மேற்கூறிய குதிரை வீரன் இராஜ பரிவாரங்களைக் கண்டு ஒதுங்கி நிற்காமலும் மரியாதை செய்யாமலும் முன்னால் விரைந்து சென்றது எல்லாருக்குமே வியப்பை அளித்தது.


"அண்ணா! அதோ குதிரைமேல் போகிறானே அந்த வீரனைப் பார்த்தாயா? என்ன கம்பீரமான வடிவம்! அவன் யார் தெரியுமா?" என்று குந்தவி கேட்டாள்.


"எனக்குத் தெரியவில்லையே, தங்காய்! அவனுடைய தோற்றத்தில் இராஜ வம்சத்தின் களை காணப்பட்டது. நல்ல ஆஜானுபாகுவாவும் தோன்றினான். அவன் குதிரையைப் பார்! இதற்குள் எவ்வளவு தூரம் போய்விட்டது!" என்றான் மகேந்திரன்.


"காஞ்சிக்குத்தான் போகிறான் போல் தோன்றுகிறது. ஒருவேளை அயல் தேசத்தானோ, என்னமோ? இல்லாவிடில், இப்படி நம்மைக் கண்டும் நிற்காமல் போக மாட்டான். நாலு நாளைக்கு முன்பு துறைமுகத்துக்கு வந்த கப்பலின் அயல்தேசத்தார் ரொம்ப பேர் வந்து இறங்கியிருக்கிறார்கள். ஆகையினால் தான் தெரியாத முகங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன!" என்று குந்தவி சொன்னாள்.


"குந்தவி, செண்பகத் தீவின் இரத்தின வியாபாரியைப் பற்றிச் சொன்னாயே; அவன் வரவேயில்லையே?" என்றான் மகேந்திரன்.


"இல்லை" என்று சொன்னபோது, குந்தவியின் குரலில் மிகுந்த ஏமாற்றம் தொனித்தது.


"எப்படியும் காஞ்சி அரண்மனைக்கு அவன் வராமலா போகிறான்? கண்டிப்பாக வருவான்."


குந்தவி இதற்கு ஒன்றும் மறுமொழி சொல்லவில்லை; மௌனமாயிருந்தாள். தன்னுடைய சந்தேகம் உண்மையாயிருக்குமானால், அவன் அரண்மனைக்கு வரமாட்டான் என்று எண்ணினாள்.


குந்தவியின் மனக்கண்ணின் முன்னால், மூன்று வருஷங்களுக்கு முன் காஞ்சிபுரத்து வீதியில் அவள் பார்த்த சோழ ராஜகுமாரனுடைய முகமும், நேற்று மாமல்லபுரத்துத் தெருவில் சந்தித்த இரத்தின வியாபாரியின் முகமும் மாறிமாறித் தோன்றின. அவர்கள் இரண்டு பேரும் வெவ்வேறு மனிதர்களா? அப்படியானால் அந்த முக ஒற்றுமை மிகவும் அதிசயமான ஒற்றுமைதான்!


குந்தவியின் மௌனத்தையும், அவளுடைய முகவாட்டத்தையும் மகேந்திரன் கவனித்தான்.


"தங்காய்" என்று அருமையாக அழைத்தான்.


"என்ன, அண்ணா!" "ஒரு மாதிரியாக இருக்கிறாயே, ஏன்?"


"ஒன்றுமில்லை, அண்ணா!" "நான் ஒரு யோசனை செய்திருக்கிறேன், சொல்லட்டுமா?"


"சொல்லு, அண்ணா!"


"அப்பாவிடம் நான் சொல்லப் போகிறேன்; இந்தப் பல்லவ இராஜ்யத்தின் பாரத்தை அவர்தான் சுமக்க வேண்டும், என்னால் முடியாது என்று."


"ஏன், அப்படிச் சொல்லுகிறாய், அண்ணா!"


"அவர் இருக்கும்போது நான் இராஜ்யம் ஆளுவது, சிங்கம் இருக்க வேண்டிய இடத்தில் பூனை உட்கார்ந்திருப்பது போல் இருக்கிறது! தேசத்தில் எல்லாரும் அப்படித்தான் நினைக்கிறார்கள்."


"கிடையவே கிடையாது, அண்ணா!"


"அதோடு எனக்கு வேறொரு முக்கிய காரியமும் இருக்கிறது. இன்னொரு தடவை கடற்பிரயாணம் செய்ய வேண்டும்."


"இலங்கைக்கு மறுபடியும் போகப் போகிறாயா?"


"இல்லை, செண்பகத்தீவுக்குப் போகப் போகிறேன்."


"என்ன அண்ணா, சொல்கிறாய்?"


"ஆமாம், விக்கிரமனை மன்னிக்க வேண்டுமென்று அப்பாவிடம் கேட்கப் போகிறேன். பிறகு செண்பகத் தீவுக்கும் நானே போய் அவனை அழைத்து வரப் போகிறேன். தங்காய்! நான் இந்த நாட்டுக்குத் திரும்பி வந்து ஒரு வருஷம் ஆகிறது. இதுவரையில் ஒரு தடவையாவது நீ சிரித்து நான் பார்க்கவில்லை; உன் முகத்தில் சிரிப்பைப் பார்த்து விட்டுத்தான் இனிமேல் வேறு காரியம் பார்ப்பேன்!" என்றான் மகேந்திரன்.


இதைச் சொல்லும்போது, அவனுடைய நாத்தழுதழுத்தது. அவனுடைய தொண்டை அடைத்துக் கொண்டது.


குந்தவியின் கண்களில் நீர் ததும்பப் பார்த்தது. அவள் சற்று நேரம் சும்மா இருந்துவிட்டு, "அப்பா சம்மதிக்க மாட்டார்!" என்றாள்.


"நான் சம்மதிக்கச் செய்கிறேன். நேற்றே அப்பாவிடம் கேட்க வேண்டுமென்றிருந்தேன். இராத்திரி அவர் வரவேயில்லை. இன்று அவரை அவசியம் கேட்கப் போகிறேன்."


"அப்பா சம்மதித்து நீ செண்பகத் தீவுக்குப் போனாலும் என்ன பிரயோஜனம்?"


"என்ன பிரயோஜனமா? எனக்கு ஒரு மைத்துனன் கிடைப்பானல்லவா?"


"அது நடக்காத காரியம், அண்ணா! அந்தக் கர்வம் பிடித்த சோழ ராஜகுமாரன், பல்லவர் குலப்பெண்ணை மணக்கச் சம்மதிக்கமாட்டான்!" என்றாள் குந்தவி.


அப்போது மகேந்திரன் கலகலவென்று சிரித்தான். "தங்காய்! எப்போதாவது உன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டதுண்டா?" என்று கேட்டான்.


"போ, அண்ணா!" என்றாள் குந்தவி.


"போகிறேன் தங்காய், போகிறேன். செண்பகத்தீவுக்குப் போய் அந்தச் சோழ ராஜகுமாரனைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்து உன் முன்னால் நிறுத்தி, கன்னத்தில் போட்டுக் கொள்ளச் சொல்லாவிட்டால் நான் மகேந்திர பல்லவ சக்கரவர்த்தியின் பேரன் அல்ல!" என்றான் யுவராஜா மகேந்திரன்.


குந்தவியும் மகேந்திரனும் காஞ்சியை அடைந்ததும், அரண்மனையில் அவரவர்களுடைய பகுதிக்குச் சென்றார்கள். குந்தவி தன்னுடைய அந்தப்புர அறைக்குள் பிரவேசித்த போது, அங்கே சக்கரவர்த்தி வந்தால் உட்காருவதற்காகப் போட்டிருந்த ஆசனத்தில் வேற்று மனுஷன் ஒருவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டாள்! அந்த வேற்று மனுஷன், காட்டுக்குறுக்குப் பாதை வழியாக வந்து இராஜபாட்டையில் தங்களைத் தாண்டிச் சென்ற வீரன்தான் என்பது நினைவுக்கு வர ஒரு நிமிஷம் பிடித்தது. இதனால் அவளுடைய ஆச்சரியம் பன்மடங்கு பெருகியதோடு கோபம் பொங்கிற்று.


"யார் ஐயா, நீர்? என்ன தைரியத்தினால் அந்தப்புரத்துக்குள் நுழைந்தீர்?" என்றாள்.


"தேவி! பல்லவ சாம்ராஜ்யத்தின் ஒற்றர் தலைவன் நான். என் பெயர் வீரசேனன். தங்களிடம் ஒரு துப்பு விசாரிப்பதற்காக வந்தேன்!" என்று அம்மனிதன் சொன்னதும், குந்தவியின் முகத்திலிருந்த கோபம் ஒரு நொடியில் குதூகலமாக மாறியது.


"அப்பா! இதென்ன வேடிக்கை?" என்று கூச்சலிட்டுக் கொண்டே குந்தவி ஓடிப்போய் ஒற்றர் தலைவனுடைய தோள்களைக் கட்டிக்கொண்டு அவனுடைய பொய் மீசையைக் களைந்தெறிந்தாள். அப்போது ஒற்றர் தலைவர் இருந்த இடத்தில் நரசிம்மவர்ம சக்கரவர்த்தி காட்சியளித்தார்.


"உங்களுடைய குரலைக் கொண்டுதான் அப்பா, கண்டுபிடித்தேன். இல்லாவிட்டால் அடையாளம் தெரிந்திராது. எப்படி அப்பா இவ்வளவு நன்றாக வேஷம் போட்டுக் கொள்கிறீர்கள்?" என்று குந்தவி கேட்டாள்.


"குழந்தாய்! என் தந்தை மகேந்திர சக்கரவர்த்தி எனக்குச் சொல்லிக் கொடுத்த வித்தைகளில் இதுதான் மிகவும் அருமையான வித்தை!" என்றார் சக்கரவர்த்தி.