உள்ளடக்கத்துக்குச் செல்

பாற்கடல்/அத்தியாயம்-1

விக்கிமூலம் இலிருந்து


பாற்கடல்

ந்தத் தலைப்பில் 'அமுதசுரபி'யில் என் கதை, ஒரு தீபாவளி மலரில் வந்தது. எனக்குப் பெயரைத் தேடித் தந்த கதைகளில் ஒன்று.

பாற்கடலிலிருந்துதான் லக்ஷ்மி வந்தாள்.

ஐராவதம் வந்தது. உச்சைஸ்ரவஸ் வந்தது.

ஆலகால விஷம் வந்தது. கடைசியில் அமிர்தமும் வந்தது.

யானையையும் குதிரையையும் இந்திரன் எடுத்துக் கொண்டான்.

லசுஷ்மியை விஷ்ணு மார்பில் வைத்துக்கொண்டார்.

சிவனுக்கு விஷம் பங்காயிற்று.

தேவர்களுக்கு அமுதம்.

கூடக் கடைந்த அசுரர்கள் ஏமாந்து போனார்கள்.

ஏனெனில் தேவர்கள் நல்லவர்கள்.

அசுரர்கள் கெட்டவர்கள். 'அளவுகோல்' தேவாதி தேவனுடையது.

நீ அவல் கொண்டு வா - நான் உமி கொண்டு வருகிறேன்.

கலப்போம். நீ ஊது. நான் தின்கிறேன்.

இந்த நியாயம் அன்றிலிருந்தே வழங்கி வருகிறது. அசுவத்தாமா ஹத: (குஞ்சர:) குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்துதான் – பல்லவி

தட்டாமான்லத் தாமரைப் பூ
சுத்திச் சுத்திச் சுண்ணாம்பு.
கிட்டவந்தால் குட்டுவேன்
எட்டப் போனால் துப்புவேன்.

ஏகலைவன் குருதக்ஷணையாகத் தன் கட்டை விரலைக் கொடுத்துத் தான் கற்ற வித்தையையும் குருவுக்கே சமர்ப்பித்துவிட்டான். வேறெப்படி அர்ச்சுனன் முகத்தை குரு காப்பாற்றுவது?

அன்றிலிருந்து இன்றுவரை நியாயங்கள் பாற்கடலின் பங்குகளாய்த்தான் நடைபெற்று வருகின்றன. வாழ்க்கையின் நியதியே அதுதான். ஆகையால் சோர்வுக்கு இடங்கொடேல். அது கடலோ, பூமியோ, வானோ - இயற்கைக்கு ஒரு செயல்தான் உண்டு. அது தான் விருத்தி எடுக்க எடுக்கப் பெருக்கம். இறைக்க இறைக்க ஊற்று.

அதற்கென்று ஒரு தனிப் ப்ரக்ஞை இருந்தால்:

"இயங்கிக்கொண்டிருப்பதுதான் என் வழி, என் மெய், என் உயிர், என் உண்மை.

எவ்வளவு எடுத்தாலும் மிச்சம் நான் உண்டு.

எவ்வளவு குறைந்தாலும் உன்னை எனக்கு அடையாளம் தெரியாது.

என்னையே எனக்குத் தெரியாது. எனக்கும் நான் வேண்டாம்.

ஆனால் ஆரம்பம்

நடு

முடிவே அற்று

நான் இருப்பதை

என்னால் தவிர்க்க முடியாது.

"யாருக்கு? எதற்கு? ஏன்? கேள்விகள்தான் பங்கின் பாஷை."

தி.ஜ. ர. சொல்வார்: "எழுதுவது நீந்துகிற மாதிரி தண்ணீர் வெதவெதக்கிறதா, சில்லிட்டிருக்கிறதா என்று விரலை ஆழம் விட்டுப் பார்த்துக்கொண்டு வேளை பார்த்துக் கொண்டிருந்தால் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான் குதி, குதித்துவிடு.”

தி.ஜ.ர. பெரிய ஆள். அவருடைய தரத்தை யாரும் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. தெரிந்து கொண்டவர், தெரிந்துகொண்டவரைப் பறைசாற்றவில்லை. அவரும் சாற்றிக்கொள்ளவில்லை. செட்டியார் மிடுக்கா, சரக்கு மிடுக்கா என்ற முறையில்தானே பண்டம் விலை போகிறது! தம்பட்டம் வாழ்க்கையின் உயிர்நாடி.

எனக்குப் பதினான்கு வயதிலிருந்து அவர் பழக்கம். இடையிடையே எங்கள் தனித்தனி லௌகீகங்களில் எங்கள் பாதை பிரிந்ததெனினும் எங்கள் உறவுக்குப் பங்கம் இல்லை. கடைசியாக உத்யோக ரீதியில் தென்காசியில் இருந்தேன். அது குற்றாலம் கிட்ட என்பதோடு சரி. தகவல் சட்டென்று எட்டாத இடம். ஓய்வு பெற்று நான் சென்னை திரும்பிய பின்னர்தான் அவர் மறைவு பற்றி அறிந்தேன்.

தி.ஜர. எனக்கு குரு. அப்படியென்றால் அவர் என் கட்டைவிரலைக் கேட்கவில்லை. நான் பிடித்துக் கொள்ளத் தன் விரலையும் எனக்குத் தரவில்லை. ஆனால் இந்த குரு சிஷ்ய பாவம் எனக்கு எப்பவுமே பிடிக்கும். எழுத்து, ஸங்கீதம் மாதிரி. ஸங்கீதத்தில் நான் இந்தச் சிஷ்ய பரம்பரையில் வந்தவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையே ஒழிய, நான் தான்தோன்றி, வரப்ரசாதி என்று மார்தட்டிக் கொள்ளுதல் நேர் எதிர். அந்த பாவனையில் ஒரு "க்ளாமர் காண்கிறேன். அதற்காகவே அவரை நான் குருவாக வரித்தேன். விஷயம் தெரிந்தவர். தன் துறையில் சாதனை புரிந்தவர். என்னிலும் நன்கு மூத்தவர். அந்த நாளிலிருந்து 'வாடா'ன்னு அன்புடன், உரிமையுடன் விளிப்பவர். எனக்கு நாளுக்கு நாள் குறைந்துதானே போகிறார்கள்!

ஆகையால் திஜ.ர. என் குரு. அந்த பாவனையே துணைக்குத் தோளைத் தொட்டுக்கொள்ளுவது போல.

என் உத்யோகத்தில் என்னோடு வேலை செய்தவர்கள் இப்போ என்னைத் தாண்டிப்போன பின்னர், பாதி கேலி பாதி வினையாக என்னை 'குருஜி என அழைக்கையில் சந்தோஷமாகத்தானிருக்கிறது.

"வாத்யாரே, உங்கள் சிஷ்யன் ராகவன், தன் பிள்ளை பூணூலுக்கு உங்களுக்குப் பத்திரிகை அனுப்பினானா?”

பத்திரிகை என்ன? வீடு தேடி வந்து அழைத்துச் சென்று வேட்டி அங்கவஸ்திரமே போர்த்தினான்.

"உங்கள் சிஷ்யன் சங்கரநாராயணன்?

டீக்காக உடுத்தும் ஆசாமி. மடிப்புக் கலைவதைக் கூடப் பொருட்படுத்தாது என்னைக் கண்டதும் நடுக்காரியாலயத்தில் அத்தனைபேர் நடுவில் காலில் விழுந்து நமஸ்கரித்தான். அது அவனுக்கும் விளம்பரம் தான் என்றாலும் எனக்குப் பெருமையாகத்தானிருக்கிறது.

இதில் ஏதோ கவிதை நயம் இல்லை?

பெரியோரைப் புகழ்வோம்.

பூவோடு சேர்ந்த நாராக மணப்போம் என்று மனப்பூர்வமாக எண்ணினும் அதிலும் சூட்சுமமான சுய புராணம் வெளிப்படுகிறது. பக்கத்து இலைக்குப் பரிமாறச் சொன்னவனுக்கும் பாயசம் கிடைக்கிறது.

Let us praise great men.

நன்றியுடன், அவர்களைப் பற்றிய நினைவுக்காகவே நன்றியுடன், அதுவே நம் சந்தோஷமாகப் பெரியோரைப் புகழ்வோம்.

நான் புகழும் பெரியோர்கள், அச்சிலோ, மேடையிலோ, வேறெந்த சம்பிரதாய முறையிலோ பொது மக்கள் கவனத்திற்கு வந்திருக்கமாட்டார்கள்.

தான் உண்டு தன் காரியமுண்டு. தன் தறியில் அறுந்த நூலை முடி போட்டு, அதுவே கவனமாய், அதுவே தங்கள் பரவசமாக, முழம் முழமாய் திரௌபதியின் துகிலை நெய்பவர்கள்.

ஒரு முறுவலில், ஒரு சொல்லில், ஒரு சிறு சைகையில் ஒரு சிடுசிடுப்பில் ஒரு திருப்புமுனையையே ஏற்படுத்தும் சக்தர்கள், சக்திகள் இன்னும் இருக்கத்தான் இருக்கிறார்கள். என்னுடைய பெரியவர்கள் அவர்கள்தான். தங்கள் பிரஸன்ன வாஸத்தை இங்கேயே விட்டுச் சென்றவர்கள்.

செயல் என்னவோ ஒன்றுதான். ஆனால் அதன் மொழிபெயர்ப்புகள் தனித்தனி அந்தந்த சமயத்தில் அவரவர் கண்டபடி அவரவர்க்குக் கிடைத்த வரப்ரஸாதம், முகூர்த்த வேளைகள் நம்மைத் தாண்டிய வண்ணமிருக்கின்றன. அந்த வேளைச்சிறகு தோல்மேல் உராயும் படபடப்பை அடையாளம் கண்டுகொள்வதோ, அந்த வேகத்தை இருத்திக்கொள்ள முயல்வதோ, அதில்தான் எழுத்தின் இறுமாப்பு.

ஆனால் நாளடைவில் வெறும் சாதகவாயிலாகவே எழுத்துக்கு ஒரு செருக்குச் சேர்ந்துவிடுகிறது. ரோசனப் பிசுக்கு இருக்கட்டும். இருக்க வேணும். எழுத்தும் இதயமீட்டல்தானே! புவனமென்னும் இந்தப் பெரிய வாத்ய ஸம்மேளனத்தில் - இங்கே தொட்டதெல்லாம் வாத்யம். பட்டதெல்லாம் நாதம். எழுத்தாளனுக்கு இல்லாத பங்கா?

நான் இருக்கிறேன்’ இதுவே புவனகீதம். இதைப் பாடுவது ஜீவனுக்கு ஏற்பட்ட வாய்ப்பு, பாக்கியம்.

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகை ஆசிரியர் தன் பத்திரிகையில் ஒன்றரைப் பக்கங்களுக்கு மேற்படாமல் எழுத எனக்கு ஒரு தலைப்புக் கொடுத்தார், “எங்கள் லால்குடி வீடு”

எங்கள் வீடு பற்றி அவருக்கென்ன தெரியும்? அவர் விதித்த மீட்டருக்குள், - ஏன், எந்த மீட்டருக்குள்ளும் எங்கள் வீடு அடங்காது. ஆதலால் அவர் அழைப்பை நான் ஏற்கவில்லை.

ஆனால் அந்தத் தலைப்பு கடுக்க ஆரம்பித்து விட்டது. தன் உயிர் வளர்ந்து, இன்னொரு வாரப் பத்திரிகையில் ‘எங்கள் வீடு' என்கிற தலைப்பில், இன்னும் கொஞ்சம் தாராளமான இடத்தில் - ஆனால் அதுவும் ஒரு ஆரம்பம்தான் - என் கட்டுரை வெளிவந்தது. அதற்குரிய பாதிப்பையும் விளைவித்தது.

அந்த அடிப்படையில் கலைஞன் பதிப்பகம் திரு. மாசிலாமணி சொன்னார்: "உங்கள் எழுத்துலகத்தைப் பற்றி நீங்களே ஏன் எழுதக்கூடாது? நம்முடைய இருபத்துஐந்து வருடத் தொடர்பில் அதுபற்றி நாம் எவ்வளவு பேசியிருப்போம்! வேணுமானால் நானே அவ்வப்போது அடியெடுத்துக் கொடுக்கிறேன். கணிசமான ஒரு புத்தகத்துக்கு விஷயமிருக்கிறது. நானே அதை வெளியிடுகிறேன்.”

நல்ல யோசனைதான். ஆனால் கதை அல்லாத நீண்ட பாடு (Non-Fiction) எனக்கு ஒரு புது அனுபவம். எப்பவுமே நேரிடையாகப் புத்தகத்தில் இறங்குவது எனக்குச் சுலபமாக இல்லை. பாதிக்கிணறு தாண்டலில் சில முயற்சிகள் இன்னும் முடிவுறாமல் நிற்கின்றன. முதலில் அத்தியாயமாகப் பார்க்கக் கிடைக்கட்டும். புத்தகம் தன்னை கவனித்துக் கொள்ளும்.

இந்த அத்தியாய வாய்ப்பு அமுதசுரபியில் நேர்வதற்கு ஒரு நியாயமிருக்கிறது. சுரபியின் பிறப்பிதழில் என் கதை வெளியாயிற்று. குழந்தையின் தொட்டிலை ஆட்டியவர்களில் நான் ஒருவன். சுரபிக்கும் எனக்கும் நீண்ட சொந்தம். ஒருகாலத்தில் அமுதசுரபியின் ஆஸ்தான எழுத்தாளன் என்றே எனக்குப் பேர் உண்டு. அதன் சக்கரத்துடன் என் எழுத்தின் விதியும் இணைந்திருந்ததுண்டு.

"ஐயோ பிஸ்கே! இவ்வளவு பிரமாதம் பண்ணிக்க என்ன இருக்கு? இப்போ யார் எழுதவில்லை? அந்தந்த எழுத்துக்கு எந்தெந்தப் பத்திரிகைகள் இல்லை ? இதென்ன மூக்கு உறிஞ்சல், உணர்ச்சி நாடகம் ?”

இந்தக் கூற்றுக்கு என்னிடம் ஒரு பதில்தான் உண்டு.

எல்லாமே அவரவர் பூத்ததுக்குத் தக்கபடி.

இந்த விஞ்ஞான யுகத்திலும், பகுத்தறிவு சகாப்தத்திலும்கூட மணங்களை விரும்புபவர்கள், தேடுபவர்கள் இருக்கிறார்கள்.

தொண்டை மட்டும்தானே ருசி? மூக்குவரைதானே மணம் ?

இந்தக் கேள்விகள் இன்றா பிறந்தன? இன்னும் கேட்டுக்கொண்டுதாணிருக்கிறோம். உயிர் வாழ்ந்து கொண்டுதாணிருக்கிறோம். மணக்க, மணக்க.

பாசம், பாசத்தின் விளைவாக மதிப்பு சமுதாயத்தில் கமழும் மணம்தானே! உறவின் தாது இந்த மணம்.

இது ஒரு சிந்தனை ஓட்டம். அதில் அவ்வப்போது தோன்றுவன, தோன்றியவர், தோன்றுபவர் எழுத்தின் மூலம், என்னால் முடிந்தவரை, தோன்றியபடி, பாற்கடல் உத்தி, கடைந்துகொண்டேயிருப்போம். கிடைப்பது கிடைக்கட்டும் - கிடைக்கிற வேளையில். இது தவிர வேறேதும் அறியேன்.

நாற்பத்துஐந்து வருடங்களாகக் கடைந்துகொண்டிருக்கிறேன். யார் கண்டது? என் கயிற்றிலேயே கால் தடுக்கிக் கடலில் மூழ்கினாலும் போச்சு.

ஆனால் தம்பி கேட்டது என்னவோ உண்மைதான்.

எழுத்தின் முகம் இப்போ எவ்வளவோ மாறிவிட்டது. தொழிற்சாலை ரீதியில் நடக்கிறது.

“என்னமாதிரி கதை வேண்டும்? எத்தனை பக்கங்களில்? ரெடி...”

செருப்புக்கேற்றபடி காலை வெட்டு.

வாரப் பத்திரிகைகள் மலிந்துவிட்டன. (விலை அல்ல) ஒவ்வொன்றில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தொடர்கதை, தவிர மாதப் புத்தகங்கள். வாராவாரம் விமர்சனக் கடிதங்களுக்கு வாசகர்களுக்கு இடம். கேள்வி பதில் என்கிற முறையில் வேறு வாசகர்கள். தங்கள் அபிப்ராயங்களை விசிறிக்கொள்ள வழி.

இது சாக்கில் எனக்கொரு கதை ஞாபகம் வருகிறது. கதையல்ல குடும்ப சம்பவம்தான்.

என் சிறிய பாட்டனார் மகன், எனக்கு ஒன்று விட்ட சித்தப்பா முறை ஆகிறது அல்லவா? செல்வ மகன். செல்ல மகன். புத்திசாலி; ஆனால் படிப்பு ஏறவில்லை. படிக்கவில்லை, ஏறவில்லை அவ்வளவு தான். அந்த நாளிலேயே அடங்காத பிள்ளை என்று பேர் வாங்கிவிட்டார். ஆனால் இன்றைய நடப்புக்குச் சித்தப்பாவைக் கோயிலில் வைத்துக் கும்பிடவேணும். நிற்க,

அந்த நாளில் இம்பொஸிஷன் என்று ஒரு தண்டனை உண்டு.

"வகுப்பு நேரத்தில் பக்கத்துப் பையன்களுடன் இனிப் பேசமாட்டேன்." நாற்பது தடவை. மறுநாள் வாத்தியாரிடம் காண்பித்தாக வேண்டும்.

ஒரு சமயம் (எத்தனையோ சமயங்களில் ஒன்று) வாத்தியார் வீட்டுக் கணக்கை இனி தவறாமல் செய்து வருவேன்...' ஐம்பது தடவை என்று சித்தப்பாவைப் பணித்தார்.

உடனே மாணவன் இந்தாங்கோ சடாரென்று ஒரு நோட் புத்தகத்திலிருந்து இரண்டு ஏடுகளைக் கிழித்துத் தந்தான்.

வாத்தியார் உள்பட வகுப்பில் எல்லோரும் திணறிப் போயிருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. வாத்தியார் சமாளித்துக்கொண்டு, சரி பாடங்களை ஒழுங்காக வகுப்பில் கவனிப்பேன் நூறுதரம்.

'இதோ, இதோ - நோட்டுப் புத்தகத்திலிருந்து இன்னொரு நான்கு ஏடுகளை - ஏதோ காசோலை கிழிக்கிறமாதிரி.

”நிஜமா, பொய்யா, இதற்கென்ன ருசு?” சாக்ஷிக் கூண்டில் நிறுத்தாதீர்கள். சித்தப்பாவின் பிரதாபங்களைச் சூழ்ந்த கதைகளில் இது ஒன்று. மன்னன் செக்கச்செவேலென்று சுந்தரபுருஷன். அந்திம நாட்களில் விபூதி சந்தனம் குங்குமம் பூஜை புனஸ்காரம் - இவரா அப்படியெல்லாம். ? என்று நம்பமுடியாத வகையில் மாறிவிட்டார். ஐம்பதே தாண்டினாரோ இல்லையோ? நிற்க. இது ஒரு பழைய ப்ரயோகம். பண்ணிப் பார்க்கிறேன். ஹூம், கூர்மையிருக்கிறதே!)

பத்திரிகை எழுத்து நிலவரம் இப்படித்தானாகி விட்டது.

மாறுதல் அவசியம்தான். மாறுதல்தான் உயிரின் நியதி. உயிரின் வலுவுக்குச் சான்று. தேக்கமற்ற ஓட்டத்திற்கு உறுதி. ஓட்டமிருந்தால் மட்டும் போதாது. கடையல் காணணும். கங்கையைக் காட்டிலும் யமுனைக்கே சீறல் கூடவாம். சீறல்சுழல்கள், சுழிப்புகள். நானே பார்த்தேன். டில்லியில் பாலத்தின் மேல் ரயில் போய்க்கொண்டிருக்கையில் சுழிப்பில் தண்ணிரே ஓட்டை விட்டுக்கொண்டது. கடையல் ஓய்ந்தபின் தெளிவு. அந்தத் தெளிவில் திரண்டு வந்திருப்பது என்ன? அவ்வப்போது நாட்டில் கலாச்சாரம் சரித்திர ரீதியாகத் தனித்தனியாகவும் ஒரு மக்களாகவும் நாம் அடைந்திருக்கும் பண்பின் எடை

ஒன்று சொல்ல வேணும். இந்த நாள் எழுத்தின் உற்பத்திக் கொழிப்புக்கு எங்கள் தலைமுறை ஒருநாளும் ஈடு கொடுக்க முடியாது. அப்பப்பா, அசுர சாதகம். இந்தச் சாதக விளைவுதானோ என்னவோ கதை சொல்லும் உத்தி, பாஷையின் பாணி எல்லாம் ஓர் அதம தரத்தில் ஓடுகின்றன, முறைகள் வலுத்துவிட்டன.

விஷயம். விஷயம் ?

வெகுநாட்களுக்கு முன் ஓர் எழுத்தாளர் வீட்டுக்கு வந்திருந்தார். இப்படி வருவார்கள் போவார்கள். என்னத்தையோ எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள். எதிர்பாராமலே வந்தவர்கள் எனக்குப் புது நண்பர்கள் ஆவார்கள். எழுத்து உறவில் எனக்குக் கிடைத்த மதிப்பில்லா லாபம் இதுதான். இன்னமும் அந்த அதிர்ஷ்டம் இருந்துகொண்டுதாணிருக்கிறது. நிற்க. (சபாஷ்! ஆனால் அதிகமாகத் தலை நீட்டுகிறாப்போல் தோன்றுகிறது. இத்தோடு தலையை வெட்டிவிட வேண்டியதுதான்!)

"சார் இதைப்பற்றித்தான் எழுதணும்னு கண்டிஷன் உண்டா என்ன? நான் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதுவேன்.”

"தாராளமா” எந்த வகையில் இவரைக் கோவப்படுத்திவிட்டேன்? நான் ஒரு பயங்கொள்ளி.

திடீரென்று நினைத்துக்கொண்டாற்போல் "ஆபீஸில் டைப் அடிக்கிறேன். என் டைப்ரைட்டரைப் பற்றி எழுதுவேன்."

"நல்லது நல்லது”நான் ஒரு பஹுத் பயங்கொள்ளி.

“ஸார், நான் என் டைப்ரைட்டர்மேல் காதல் கொண்டிருக்கிறேன். செல்லப் பெயரால் ரஹஸ்யமாக அழைப்பேன். அதன் தட்டுகளைத் தொடும்போதெல்லாம் எனக்கு உடலும் உள்ளமும் கூச்செறிகின்றன. தட்டும் எழுத்துக்கு எழுத்து ஸிலிண்டர் நகரும்போது என்னோடு தட்டம்மா பேசுகிறாள். ஆபீஸுக்கு வந்ததும் உறையைக் கழற்றுகிறேன். நாணமுறுகிறாள். முதிர முதிர நாணம் கலைகிறாள். வீட்டுக்குப் போகும்போது உறையைப் போடுகிறேன். மெளனமாக விடை பெறுகிறோம். "நாளை சந்திப்போம்."

நள்ளிரவில் விழிப்பு வந்ததும்,

ஆபீஸ் அறையில் தனியாக அவள், மறுநாள் என் வரவுக்காகக் காத்திருப்பதை எண்ணுகிறேன். ஆறுதல் கொள்கிறேன். இப்படி ஏன் எழுதக்கூடாது?”

நன்றாய்த்தானிருக்கிறது. ஏன் எழுதக்கூடாது? மகளே உன் சமர்த்து. கொண்டையுள்ள சீமாட்டி சீவி முடிந்துகொண்டாலும் அழகுதான். ஜடை பின்னிக் கொண்டாலும் அழகுதான். மதுரை மணியின் ஸ்வரப் ரஸ்தாரம் (மனிதா, 'மதனி' தோடி ராகத்தில் ஒரு முறை அசந்துபோனேன்)

ஆனால் அந்த நாளில், என்னுடைய அனுபவக் குறைவில், விஷய அஞ்ஞானத்தில் நான் நினைத்ததுண்டு; சதை, தசை, உடல், அதன் மேடுபள்ளங்கள், கவர்ச்சி, பேச்சு, சாஹஸம் இத்தனை சவால்களுடன் உயிர் வளைய வருகையில் இந்த மனுஷன் ஒரு ஜட வஸ்துவுக்கு ஆஹுதி ஆகவேண்டிய அவசியம் என்ன? அதுபற்றி எழுதிக் காணப்போவதும் பிறர்க்குக் காண்பிக்கப்போவதும் என்ன?

அப்பவும் அவர் உயிர்மேல் தன் ஆர்வத்தை எனக்குப் பழக்கமில்லாத ஒரு கோணத்தின்மூலம் வெளியிடுகிறார் என்று இப்போது அறிகிறேன்.

ஆம். பூ, புஷ்பம், நந்தவனம், பால்கனி, டூயட், ஓடிப்பிடி விளையாட்டு இதிலேயே வாழ்க்கை நிற்குமா?

“வியட்நாம், வேலையில்லாத் திண்டாட்டம், குவாயிட்டில் வேலை, இடி அமீன், யூனியன், பேச்சுரிமை, செயலுரிமை, ஸ்டிரைக், போனஸ், தலைமுறை இடைவெளி, ஜேம்ஸ்பாண்டு, வாட்டர்கேட், சேஸ், ரஜினி ஸ்டைல், டி.வி. எல்லார் வீட்டிலும் நம் வீட்டைத் தவிர” - பிரச்சினைகள், தடங்கள், எடைகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஆனால் இருந்து கொண்டேயிருக்கின்றன.

தற்சமயம் மார்க்கெட்டில் உச்ச ப்ராக்கெட் எழுத்தாள நண்பன் - நெடுநாளைய நட்பு - அவரைக் கேட்டேன்! “என்னப்பா ஆபீஸ்"க்கும் போய்க்கொண்டு எப்படித் தாக்குப் பிடிக்கிறாய்?"

"உந்தல் இருந்தால் தானே சக்தி வந்துவிடுகிறது. பையன் ‘மாட்டரு‘க்கு காலையில் வாசலில் காத்துக்கிடக்கிறான். எழுந்திருக்க ஏழரை மணி ஆகிவிட்டது. முந்தைய இரவு ஒன்றரை மணி வரை ஒரு தொடர்கதை அத்தியாயம் எழுதி முடித்தேன். பையன் காத்திருப்பது சிறுகதைக்குத்தான். ஒரு மணி நேரத்தில் தட்டிவிடலாம். அவனுக்குக் காப்பியைக் கொடுத்துச் சமாதானப்படுத்தி உட்காரச் சொல்லிவிட்டு ஆரம்பிக்கிறேன். ஆச்சு, இன்றிரவு இன்னொரு ‘தம்’ பிடிச்சாகணும். இன்னொரு பத்திரிகையில் இன்னொரு தொடர்கதை இன்ஸ்டால்மென்ட் - காலையில் ஆள் கிங்கரன் மாதிரி வந்து விடுவான். பெரிய இடம்.”

”நீ சொல்வது எனக்கு பயமாயிருக்கிறது.

”ஆரம்பத்தில் எனக்கும் பயமாய்த்தானிருந்தது. ஆனால் வண்டியைக் கிளப்பிவிட்டால் அப்புறம் அது தானே ஓடவேண்டியதுதானே! கேட்கப்போனால் இந்த மாதிரி நெருக்கடியில்தான் எனக்குக் காரியமே நடக்கிறது. அதிலேயே ஒரு குஷியிருக்கிறது.”

”அப்போ உன்னுடைய தூக்கம், ஒய்வு.”

”அதெல்லாம் பார்த்தால் முடியுமா? தூக்கத்துக்கு மாத்திரையிருந்தால் மாற்றுக்கும் மாத்திரைகள், உற்சாக மாத்திரை, இன்னும் தென்பு ஊட்டிக்க வழிதானாயில்லை?”

“எழுதினதைத் திருப்பிப் பார்ப்பது, திருத்துவது?"

வாய்விட்டுச் சிரித்தார். "என்ன ஜோக் அடிக்கிறீர்! கையை விட்டுப் பிடுங்கிண்டுன்னா போறான்! ஆளை விட்டா போறும். இதுக்கேதான் அல்வா மாதிரி விழுங்கக் காத்திருக்கான்களே! ரவா ஆனியன் ரோஸ்ட் ரெடி!” - கேலியாக உரக்கக் கத்தினார். ”திருப்பிப் போடக்கூடத் தேவையில்லை. தகரத்தின் சூட்டிலேயே மறுபக்கமும் வெந்துவிடுகிறது, ஹஹ்ஹா..!”

சட்டென்று என் பக்கம் திரும்பினார்.

”இது ஜெட்யுகம், ஞாபகம் வைத்துக்கொள்ளும். இருக்கின்றது என்று போடலாமா, ‘இருக்கிறது’ என்று போடலாமா? சரியான வார்த்தை கிடைக்க நாள் கணக்காகக் காத்திருப்பேன். வார்த்தைகளின் ஓசையைச் செவியில் தட்டிப் பார்ப்பேன்” என்று ஒருகாலத்தில் நீங்கள் சொல்ல நாங்களும் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்த நாள் எல்லாம் மலையேறிப்போச்சும் வோய்!”

”அப்படியா?”

ஒரு சமயம் - ஒரு கதையில் ஒரு கட்டம். கதைப் பெயர் கணுக்கள் (அமுதசுரபி). வயிற்றில் பல், நாக்கு நுனியில் நாசூக்காய்ப் புரளும் சொல். இதற்கு ஒரு உவமையே கவனமாக அன்றிரவு கண்ணயர்ந்து விட்டபின் ஒரு கனா. அல்ல, தோற்றம். ஒரு பாழும் சுவரில் ஒரு கரிக்கட்டி எழுதுகிறது:

’மாம்பூவைக் காம்பு ஆய்ந்தாற்போல்’

நான் தேடிய உவமை.

அது ஒரு காலம்.

இது ’ஜெட் ஏஜ்’. அப்படியானால் டைப்ரைட்டருடைய காதலையும் நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாற்கடல்/அத்தியாயம்-1&oldid=1532408" இலிருந்து மீள்விக்கப்பட்டது