பாற்கடல்/அத்தியாயம்-14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
அத்தியாயம்-14

 

பெங்களூரை விட்டுச் சென்னை வந்து சேர்ந்தோம் என்று சென்ற பகுதியில் நான் தெரிவித்துக் கொண்ட சமயத்திலேயே என் வாழ்க்கைப் பிரயா ணத்தில் முதல் கட்டம் முடிந்தது. இது சமயத்தில் ஆயக் கால் போட்டு, நான் வந்த தூரத்துக்கு மூச்சு விட்டுக் கொண்டு கொஞ்ச நேரம் என்னை ஆற்றிக்கொள்ளத் தோன்றுவது சரியென்று நினைக்கிறேன்.

இந்தப் பதின்மூன்று மாதங்களாக, வரலாற்றில் இன்னும் என் பிள்ளைப் பருவம் தாண்டவில்லை. என் பகைப்புலனை மட்டுமே விவரிப்பதற்கு என்னிடம் இவ்வளவு விஷயம் இருந்ததா? இத்தனையும் என்னிடம் இதுகாறும் எங்கே புதைந்திருந்தன என்பதை நினைக்கையில் திகைப்பாக இருக்கிறது. ஆணவமாக இருக்கிறது. யானெனும் அகந்தை சித்தமிசை குடி கொண்டது; கொள்ளட்டும்; நான் இல்லாமல் நீ இல்லை.

யார் நம்பினாலும் நம்பாவிடினும் சரி, தமிழ் எனக்கு இன்னும் தடுமாற்றந்தான். உதாரணமாக, பகைப்புலன் என்கிற வார்த்தையை வழக்கில் காண்கிறேன். நானும் பயன்படுத்துகிறேன். ஆனால் அதன் முழுத் தாத்பரியம் வியாபகம் என்ன?

வெள்ளைக்காரன் ராஜ்யத்தில் வயிற்றுப் பிழைப்புக் காரணமாகப் பழகிப் பழகி, மூதாதையர் நாளிலிருந்தே ஆங்கிலம் ரத்த ஒட்டத்தில் கலந்துவிட்டது. "இது புரளி, உன் தாத்தா தமிழ்ப்பண்டிதர்தானே, மூதாதையரை ஏன் இழுக்கிறாய்?" என்கிற கேள்வி, கேள்விக்கெனக் கேள்வியே அன்றிப் பொருத்தமற்றது. நான் குறிப்பது அந்தக்காலம். அந்தக் காலத்தின் கட்டாயம்.

பகைப்புலனுக்கு Background என்கிற அர்த்தம் கொள்ளுமா? அவ்வளவு மட்டுந்தானா? எனக்குத் தோன்றவில்லை. திருப்தி ஏற்படவில்லை. Backdrob, Canvas, திரைச்சீலை. நாடகமே உலகம். தெருக்கூத்து நாளில்கூடத் திரையில்லாமல் கூத்து நடக்காது. அந்தப் பக்கம், இந்தப்பக்கம் இரண்டுபேர் ஒரு துப்பட்டியைத் திரையாகப் பிடித்துக்கொண்டு நிற்க, பின்னாலிருந்து பாட்டுக் கிளம்பும். துரியோதன மஹாராஜன் வந்தானே!"

திரையைச் சடக்கென்று தாழ்த்தியவுடன், அல்லது இருவரில் ஒருவன் இழுத்துக்கொண்டவுடன், துரியோதன மஹாராஜன் வந்தானே! என்று துரியோதன மஹாராஜனே பாடிக்கொண்டு வேஷத்தின் அத்தனை சுமையுடன் பெஞ்சில் உட்கார்ந்தபடியே, வலிப்புக் கண்டமாதிரி, மேடையே கிடுகிடுக்க ஆடுவான்.

தருமராஜன் வந்தாலும் அதே கிடுகிடுப்புத்தான்.

அந்த நாளில் ஆனந்தவிகடனில் கர்நாடகத்தின் வர்ணனைக்கெதிரே நான் காரைப்பூச்சுகூடக் காண மாட்டேன்.

ஆனால் அன்றைய தெருக்கூத்து முதல் இன்றைய National Theatres நாடகத்துக்குக் கொணர்ந்திருக்கும் நகாசுவரை ஆதாரம் திரைத் துணிதான்.

திரையில்லையேல் 16 mm இலிருந்து 70 mm வரை, சினிமாவே கிடையாது. அந்தத் தொழிலே அதன் அத்தனை யந்திரங்கள், தந்திரங்கள், டெக்னிக்குகள், ராக்ஷஸ் ஸ்டுடியோக்கள் பரம்பரையுடன், அந்த வெள்ளைத் திரையை நம்பித்தான் இயங்குகிறது. அதனின்றுதான் பிதுங்கி வருகிறது.

தெலுங்கு, மாத்வ, மராத்தித் திருமணங்களில் திரையின் பங்கு இன்றியமையாதது. மகத்தானது. மன மகனுக்கும், மணமகளுக்கும் இடையே திரையை இருவர் பிடித்துக்கொண்டு நிற்க, இரு தரப்பு புரோகிதர் களும் பாடுகிறார்கள்- பெண்டிருக்குப் பாடத் தெரியாத தால் என்று நினைக்கிறேன். சட்டென்று திரை விலகு கிறது. வதுக்கள் ஒருவரையொருவர் முதல் முழி எனும் ஐதீகம்; அந்த 'த்ரில் தனிதான். நான் - நீ உனக்கு நான், எனக்கு நீ உன்னைப் பார்க்கிறேனா? உன்னில் என்னைப் பார்க்கிறேனா? உனக்கும் அப்படித்தானே? எங்கிருந்தோ வந்தோம். சந்திக்கவே திரைக்கு வந்து சேர்ந்தோம். திரை விழுந்தது, நமக்கு உலகம் பிறந்தது. நீயும் நானும்தான் இவ்வுலகம். இதில் நம் பிம்பம் கண்டு மகிழ்வோம். புகழ்வோம், மறைவோம், மறப்போம். மறுபடியும் தோன்றி அடையாளம் கண்டுகொள்வோம்.

த்ரில், த்ரில், த்ரில்! வெறும் திரையைப் பார்ப் பவரைப் பற்றிக் கேள்வி இல்லை.

இப்படியெல்லாம் நான் ஸ்தாபிக்க வருவது யாவதுக்கும் பூமி, திரைச்சீலை, Backdrop, Background, Canvas. The world is a stage என்றான் Shakespeare. The world is my canvas என்பேன் நான். நான் எனும் என் ஸ்வயாகாரப் பெருமிதத்தில் உலகமே என் ஓவியச்சீலை, பூமி, சூரியனைச் சுற்றி வருகையில் ஏற்படும் ஒளியின் நிழலில், வேளைக்கு வேளை மாறும் ஒளியின் நிழலில் என்னைப் பல கோணங்களில் கண்டு தீட்டிக் கொண்டிருக்கிறேன். இது ஒரு பாஷை, தூரிகையெடுத்தவன் தான் ஒவியன்; பேனா பயில்பவன்தான் கவிஞன் - கலைஞன் ! உளியெடுப்பவன்தான் சிற்பி என்றல்ல. உயிரின் செயலே, உலகமே என் ஓவியச் சிலையில் ஆடுவதுதான். ஓரளவு கற்பனையில்லாமல் உலகில் வாழ முடியாது. கற்பனை என்பது பலர் நினைப்பது போல் வெறும் கனவு - கட்டுக்கதை புனைவதல்ல. தரிசனத்துக்குத் தன் உள் சக்தியைச் சமயம் வரும்போ தெல்லாம் வளர்த்துக்கொண்டே இருப்பதுதான் கற்பனை. தன் வண்ணத்தை என் கைவண்ணத்தில் விளம்பல். அலுக்காத விளம்பல்.

திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, சூக்ஷமம், வெளிப்படை சத்தியம், உயிர் தேடும் விடுதலை, நித்தியம், எல்லாமே இதில்தான் இருக்கிறது. பிறவியே அதற்குத்தான். திரும்பத் திரும்ப.

'தெலிஸி ராமச்சந்தர மதுரை மணியிடம் எத்தனை முறைதான் கேளுங்களேன், அலுக்காது. நேரில் கேட்டவருக்கு அந்த பாக்கியம் தெரியும். ஏன்? மனுஷன் தனக்காகவே பாடிக்கொண்டிருந்தான். தான் கண்ட இன்பம் வையகமும் உய்ந்தது. உச்சாடனம் கூடக்கூட மந்திரத்துக்கு வலு ஏறுகிறது.

    கோடி கோடி ராமகோடி

          கோடி ராம

    நாம கோடி. 'ஓம்' இன் 'ஹம்'

          கேட்க ஆரம்பிக்கவில்லை?

    ஒமின் ஹம்மில் எது

          நாமம் எது ராமம்?

எது எதுவாய் இருந்துவிட்டுப் போகட்டும்; அதுவே ஆனந்தத்தின் மீட்டல் ஆரம்பித்துவிட்டது.

எவனும் அவனவன் நாமம். அதாவது மேல் சொன்ன நாமம். அதுவே பாரம்பர்யம். பகைப்புலனி லிருந்து விடுபட முடியாது என்பது என் துணிவு.

'பழையன கழிதலும் புதியன புகுதலும்!’ எனும் வழக்கு தான்தோன்றித்தனத்துக்குத் தப்பட்டமல்ல. ஓர் இலை உதிர்கிறது. அதற்கு பதில் மறு இலை துளிர்க் கிறது என்றுதான் அர்த்தம். எதையும் அதன் சந்தர்ப் பத்தினின்றும் பிடுங்கி அதில் புது அர்த்தம் படிக்க முயல்வது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வது மட்டு மல்ல; பாபம். அந்தப் பாபச் செயலால் பல கொடுமை களே விளைகின்றன.

இங்குள்ள மாஞ்செடியை வேருடன் பிடுங்கிக் கொண்டு போய் ஆப்பிரிக்காவில் நட்டால், அது அங்கே மல்லிகையாக மாறிவிடாது. மாறினால் உஷார்; ஏதோ ஆபத்து.

வேர் களைந்தது செத்த பொருள் மட்டுமல்ல, விபரீதப் பொருள்.

'பசு இரவெல்லாம் வேதனைப்பட்டு விடிகாலையில் மூன்று தலை நாலுடலுடன் மனித ஜாடையில் ஒரு செத்த பிறவியை ஈன்று, மூன்று மணி நேரத்துக்குப் பின் தாயும் உயிர் நீத்தது என்று தினசரிப் பத்திரிகை களில் படிக்கிறோமே, அந்தக் கதைதான்.

அதுபோன்ற புதுமை விளைவிக்க நான் ஆசைப்பட வில்லை. வாழத்தான் ஆசைப்படுகிறேன். என் தேக, மன வளர்ப்பின் தர்மப்படி, நான் ஐதீகவாதிதான், ஐயா, நான் தான்தோன்றி அல்ல, ஐதீகம்' எனும் சொல் பிரயோகத்தில் அதனுடன் சேர்ந்த அதன் குற்றம் குணங்களுடன், ஆட்சேபணை ஆமோதனைகளுடன் ஐதீகவாதி. பெருங்காயச் செப்பு, கஸ்தூரிப்பெட்டி, சந்தனக்கட்டை (தேயத் தேய மணம்) உன் மானம் என் மானம், என் கானம் எல்லாமே எனக்கு இதுதான் ஐதீகம்; பாரம்பரியம், சம்பிரதாயம்.

உலகமே செய்துகொண்டிருக்கும் தவத்தின் சேமிப்புதான் சம்பிரதாயம்.

ஐதீகம், சம்பிரதாயவாதி என்பதால் நான் கட்சிக் காரன் ஆகிவிடமாட்டேன். ஏனெனில் இந்த ஐதீகம், சம்பிரதாயம் என்பதே - யாவரும் ஒரு குலமே, எவ்வுயிரும் என்னுயிரே எனும் சமரஸத் தெளிவுக்கு மார்க்கந்தான். எதையும் அதனதன் காரண காரியத் துடன் அதற்குரிய அனுதாபத்துடன் புரிந்துகொண் டால், அது வந்து முடியும் கோட்பாடு - எம்மதமும் சம்மதமே.

இசைத்தட்டில் கிட்டப்பாவின் கிளிக் கண்ணி கேட்கிறோம். மாண்ட் - வெள்ளிக் கிண்கிணிகளின் அலறல், மூல மூர்க்கத்தின் வேதனை, நகூர்த்திரப் பொறிகள், இளமையின் பிரிவாற்றாமை, பீரங்கிகள் கோட்டையைத் தகர்ப்பது போல் நெஞ்சை உலுக்கல்.

அடுத்து காவடிச்சிந்தில் அல்ல; அதுபோன்ற ஒரு ராகத்தில் பட்டம்மாளின் கிளிக் கண் ணியைக் கேட்கிறேன். தடபுடலற்ற அடக்கம். ஆனால் ஏமாற்றல் அடக்கம். ஊறுகாய் ஊறி ஊறித் தேன் கசிவது போன்ற ஒர் இனித்த ஏக்கம். 'உள்ளேயே அரித்து அரித்து எலும்பை உருக்குகிறது; இனிப் பிழைக்கமாட்டேன். என் மார்பில் பாய்ந்துவிட்ட வேலோடு என்னை எரித்து விடுங்கள்’ என்று கேட்கிற மாதிரி இருக்கிறது.

எதனின்று எது மிகை?

"நானும் பார்க்கிறேன். இந்த வரலாறு பூராவே, ஏதோ சொல்ல ஆரம்பித்து, எங்கெங்கேயோ போய், எதிலேயோ முடிக்கிறாய். அதுவும் முடிவற்ற முடிவு! சொல்ல வந்ததுதான் என்ன?”

சபாஷ்! இந்த ஆக்கத்தின் இலக்கணமே நீ சொன்ன படிதான். புரிந்து கொண்டுவிட்டாய் என்பதிலேயே என்ன மகிழ்ச்சி! எந்தப் பிரசவத்திலும் அனுபவ ஸ்திரியான மருத்துவச்சியின் பங்கு பக்க உதவிதான். தான் வெளிவரும் வழி விதம், தன்னை கவனித்துக் கொள்ள ஜீவனுக்கு எப்பவுமே தன் சக்தி உண்டு. அதன் வழிதான் உற்ற வழி எழுத்திலும், எழுத்தாளனின் பங்கு அப்படித்தான். தன் மேதாவித்தனத்தைக் காட்டாமல், சமய உதவியோடு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

"நீ எதை வேணுமானாலும் எழுதுடா, போடு கிறேன்." தி.ஜ.ர. சக்தி ஆசிரியராக இருந்தபோது எனக்குக் கொடுத்த தைரியம்.

அலங்காரம் செய்த பினத்தைக காட்டிலும் உயிருள்ள அவலக்ஷணமான குழந்தையே சிறந்தது. ஏண்டா, குழந்தைக்கு உயிரோ கொடுத்துவிட்டாய். ஆனால் அது எவ்வளவு முரட்டுத்தனமாக, சில சமயங் களில், உன் எழுத்தில், வக்ரமாக இருக்க வேண்டியது அவசியமா? நீயே யோசித்துப் பார்." இதுதான். இவ்வளவுதான், எப்பவுமே அவர் விமர்சனம், வகுப்பு நடத்தமாட்டார். பிரசங்கம் பண்ணமாட்டார். லேசாக, ஜாடையாக, சமயத்தில் ஒரு வார்த்தை; திருத்தல்கூட இல்லே. அத்துடன் சரி. குருவே நமஸ்காரம்.

எழுத்து ஒர் அற்புதமான குழல் வாத்தியம். பிரான ஆஹ"தியை அதனுள் செலுத்தியதும் அந்த ஆஹ"தி வெளிப்படும் உருவத்தில் என்ன என்ன நாதங்கள்!

எழுத்து ஒரு அராபியக் குதிரை. வாஹனமும் சவாரியும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு விட்டால், அப்பப்பா ! என்னென்ன வேகங்கள், அழகுகள் தொடுவானமும் தாண்டிய தூரங்கள் ! கொடுத்து வைத்தால், I am the Horseman in the sky! I am riding Pegasus (கிரேக்க இதிகாசத்தில் வரும் சிறகு முளைத்த தெய்வீகக் குதிரை!) எழுத்தும் விஷயமும் ஒன்றுக்கொன்று போஷாக்கு ஒருநாள், என்றேனும் ஒருநாள் என் மட்டிலேனும் எழுத்துக்கும் செயலுக்கும் இடைக்கோடு அழிந்து, எழுத்தே செயல், செயலே எழுத்து - ஜெய் பவானி! உனக்கும் இடைக்கோடு அழிந்து உன் வெள்ளத்தில் என்னை அடித்துக்கொண்டு போய்விடு - "சொல்லே மந்திரமடா !” சும்மாவா சொன்னான் மீசைக்காரன் !

என்ன சொல்ல வந்தேன்! என்ன சொல்ல வந்தால் என்ன? விடு. இதோ ஒரு மூர்ச்சம் ககன சவாரி போய் வந்தேன். வந்தோம் என்று சொல்வது உன்னைப் பொறுத்தது.

இந்த வரலாறு போகும் பாணி முழுக்கவும் என் வசத்தில் இல்லை. பல இடங்களில் அது என்னைத் தன் வழியில் இழுத்துக்கொண்டு போகிறது. அந்த இடங்களைப் படிக்கும்போதே அவற்றின் தனி இனத்தைக் கண்டுகொள்ளலாம். அது போகும் வழி அதற்குத் தெரியும்.

இது கதையாயிருப்பின் பாயின்டாகச் சொல்லலாம். இது முழு சுயசரிதையுமல்ல. ஆங்காங்கே நேரும் மன நெகிழ்ச்சிகளை, நான் தேர்ந்த தெளிவுகளை, கண்ட தரிசனங்களை வரலாற்றின் ஊடே இழைத்துச் சொல்லிக்கொண்டு போகிறேன். அநுபவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றுடன் சேர்ந்த அவற்றின் காவியத் தன்மையும் கூடவே இழையோடி வருகிறது. கண்கள் கேட்கின்றன. செவிகள் பார்க் கின்றன. ஜன்மேதி ஜன்ம பூர்வாதி மணங்கள் ஏதேதோ 'கம் கம்' வீசுகின்றன. காயத்தை, காலத்தைத் தூக்குகின்றது. உடல் பறக்கிறது - பரபரக்கிறது - இந்த அற்புதம் நேரும்போது எழுத்தில் மாட்டிக்கொண்ட வரை அதன் சலனத்தோடு சொல்லிவிடல் வேண்டும். இல்லையேல் அந்த அனுபவச் சூடு ஆறிப்போய் ஃப்ரிட்ஜில் வைத்த பச்சைக் காய்கறி போல் ஒரு மாதிரி யாகச் சிலிர்த்துக்கொண்டு, வெறும் உபதேசங்களாக, வறட்டுப் பாடமாக, அனுபந்தமாக அம்சம் குறைந்து போய்விடும். மருந்தையே சர்க்கரையாக டில்லி பாதுஷாக்களுக்குக் கொடுக்கத்தானே யுனானி வைத்திய முறை கண்டுபிடிக்கப்பட்டது.

"இதென்ன இந்த மனுஷன் புலன்களின் செயல் களையே மாறாட்டமாகச் சொல்கிறான். ஒஹோஹோ !” நெற்றிப்பொட்டைத் தட்டிக் கொள்கிறீர்களா ? அதுதானே இல்லை! அதுதானே அற்புதம்! பைத்தியம் தான் பைத்தியம் என்று ஒப்புக்கொள்ளுமா என்கிறீர் களா? அப்படியுந்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே, ஆண்டிக்கூத்து!

    நந்தவனத்தில் ஒர் ஆண்டி

    அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

    கொண்டுவந்தான் ஒரு தோண்டி

    அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைத்தாண்டி

இல்லை, போதும், ஒரே அடியாக மிரண்டுவிடப் போகிறீர்கள். கீழே இறங்கிவிடுகிறேன். பூமியே சரணம் ஆயிரம் உயரப் பறந்தாலும், அவ்வப்போது பாதம் பதிய உன் தைரியம் இல்லாவிட்டால், எங்கள் கதி என்ன? அம்மா, நீதான் ஜகன்மாதா! சர்வ ஜனனி! சர்வரக்ஷஇ! கடைசியில் உன் குழந்தைகளை மாறாத தூக்கத்தில் உன் மடியில் ஏந்திக்கொள்பவளும் நீயே!

என் சுயசரிதையை அதன் சம்பவ ரீதியில் மட்டும் எழுதுமளவுக்கு அதை நான் முக்கியமாக ஒருநாளும் கருதியதில்லை. என் வரலாறு என்கிற பெயரில் வாழ்க்கையில் கமழும் மணங்களை நுகர, பிறருடன் பங்கிட்டுக்கொள்ள, விசுவதரிசனம் காணச் சுயசரிதை ஒரு சாக்கு அவ்வளவுதான். மற்றபடி என் வாழ்க் கையில் கரடி வித்தைகள், ஆச்சரியகரமான தப்பித்தல்கள் (Escapes), ஜன்னல் கம்பிகளை வளைத்து வெளியேறல்கள், நூலேணியின் மூலம் இராஜகுமாரி யின் உப்பரிகையில் புகல், ஏழுபேரை ஒரே அடியில் வீழ்த்தும் தீரச் செயல்கள், ஸாம்ஸன் ஸாஹஸங்கள், Bruce Leeஇன் ஒரு கத்தல், ஒரு குத்தல், ஒரு வீழ்த்தல் இவை போன்ற பராக்கிரமங்களுக்கு எங்கே போவேன்? கேவலம், சப்பணம் போட்டுச் சேர்ந்தாப்போல அரை மணி நேரம் உட்கார முடியவில்லை. கொஞ்ச நாட்களாக வலதுகால் சொன்னதைக் கேட்க மறுக்கிறது. இத்தனைக்கும் முடக்குவாதம் மூட்டுவாதம் என்று வெளிப்படையாகத் தெரியவில்லை. Some trouble; சரி, போகட்டும்.

சுகதுக்கங்களில் என்னிலும் அதிகம் பங்குபட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயம் இல்லை, இதில்:

எது வரினும் தட்டிக் கழித்துக்கொண்டு மேல் காரியத்தை கவனிப்பவர் இல்லையா?

குறுக்கு வழியென்று நினைத்துப் பள்ளத்தில் வீழ்ந்து மீள முடியாதவர் -

தற்கொலையில் விடுதலையைத் தேடுபவர் -

வெறும் கட்சி வெறியில் சுய தஹனம் செய்துகொள்பவர் –

உயிரைக் கொடுத்தேனும் சுய விளம்பரம் - இப்படி எத்தனைபேர்?

குடி, கஞ்சா, ஹெராயின், ஹவீஷ்; இத்தனையும் பற்றாமல், எதற்காகவென்று தனக்கே புரியாமல் கைலையிலிருந்து குமரி வரை அலைச்சல், முதுகில் ஒரு மூட்டை, சிக்குப்பிடித்த தாடி, சிக்குப்பிடித்த ஆடை, இஷ்டப்படி இன்ப நுகர்ச்சியால் தொங்கிப்போன அங்கங்கள், அதை மறைப்பதில் கூட அசிரத்தை, அலட்சியம். நாடு பூரா எத்தனை ஜீவநதிகள், ஆறுகள், அருவிகள் ஒடியென்ன? ஏரி, கிணறு, குழாய்கள் இருந்து என்ன? இவர்களின் அழுக்குக் கரைய ஸ்நானம் செய்ய இவர்களுக்கு மட்டும் தண்ணிர் இல்லை - இவர்களின் அர்த்தமற்ற திரியல் ஒருவாறு அலுத்தபின் கப்பலி லிருந்து இறங்கியபோது இருந்த நிலையிலேயே இல்லை, இவர்கள் தங்களுடன் ஏற்றிச் செல்லும் அழுக்கை மறந்தேனே!) மீண்டும் சொந்த நாட்டுக்குக் கப்பலேறும் யுவர், யுவதிகள் –

சாம்பலில் புரண்டெழுந்து உடம்பில் தரையில் புரளும் ஜடாபரத்தைப் பந்தாய்ச் சுருட்டி அக்குளில் வைத்துக்கொண்டு நடமாடும் சாதுக்கள்,

அயல்நாட்டிலிருந்து வந்துபோனவர், இங்கேயே தங்கிப் போனவர், வேறு கிருத்திரியங்களால் திரும்ப முடியாமல் தவிக்கும் வெளவால் வாழ்க்கையினர்.

அங்கே விட்டு வந்த குடும்பத்தை மறந்தோ அல்லது மீண்டும் அத்துடன் சேர இயலாமலோ இங்கே ஒரு புதுச் சந்ததியை ஏற்படுத்துபவர்.

இப்படியிருந்து அப்படி ஆனவர், எப்படி எப்படியோ இருந்து எப்படியோ ஆனவர் எல்லாமே தத்துவந்தான். வணங்காமுடித் தத்துவம், ஏளனத் தத்துவம், ஆசாபங்கத் தத்துவம், மெழுகுவர்த்தியை இரு பக்கமும் கொளுத்தி எரியவிடும் தத்துவம், ஒட்டுண்ணித் தத்துவம், நாளை நமதே என்ற தத்துவம். நாளை நடப்பதை யாரறிவான்? ஏக் ப்ளேட் மட்டன் பிரியாணி, கோழி வறுவல் ஜல்தி லாவ் - தத்துவம்.

சொல்லிக்கொண்டே போகலாம். டிக்கெட் இல்லாத இந்தப் பிரயாணிகளின் வாழ்க்கையில் சம்பவங்களுக்குக் குறைச்சலா? என் வாழ்க்கையில் அதிசயங்கள் இவர்கள் கண்டதுபோல் இல்லை. நிச்சயமாக இல்லை.

ஆனால் –

இந்தப் பேனா முள் என்று ஒன்று இருக்கிறதே, பொல்லாத முள், விஷ முட்கள் கடிகள் அத்தனையைக் காட்டிலும் மாபெரும் சக்தி வாய்ந்தது. தைத்தது எப்போ எங்கே என்று தெரியாது. பேனா மன்னர்கள் எல்லாம் பேனா முள் தைத்தவர்கள் அல்ல. அது விதி யென்றே சொல்லலாம்.

தியானம் என்கிறோம். இறைவனே தியானத்தில் இருக்கிறான் என்கிறார்கள். தியானத்தில் என்ன தெரிகிறது? அல்ல, தெரியும்? ஏதோ ஒரு மகிழ்ச்சி யில்லாமலா, ஊன் துறந்து, ஊன் மறந்து, காலம் கடந்து, தன்னையே மறந்து…

பேனாமுள் தீட்டும் சொல் தரும் மர்மத் தத்து வத்தின் (mysticism) மகிழ்ச்சிதான் என்ன?

வியாபாரம், லாபம், புகழ் நோக்கில் எழுதினாலும் சரி, என் விதி எழுத்து எனப் பயின்றாலும் சரி.

எழுதும் வரையிலேனும் எழுத்தில் ஏதோ வசியம் இருக்கிறது.

முதலில், இந்தச் சேதன வாழ்க்கையில், எழுத்து மூலம் தூண்டப்படும் அசேதன லக்ஷயங்கள் இருக் கின்றனவே, அதுவே பெறும் பேறு இல்லையா?

லக்ஷியம் என்பது என்ன ? நாளை என்பதே லகூழியந்தான். எல்லா லக்ஷயங்களும் நாளை எனும் நம்பிக்கையுள் அடங்கிவிட்டன. அதனினும் பெரிய லக்ஷியம் ஏது?

"எனக்காக அல்ல; என் பேரன்மார் பழம் கடிக்க” என்று இன்று மாஞ்செடி நட்ட கிழவன் கதை சின்ன வயதில் கேட்ட கதை; இப்போதுதான் அதன் உண்மை புரிகிறது; புரிந்துகொண்டே இருக்கிறது.

"என்னால் இந்தப் பிறவியில் முடியாததை, என் பிள்ளைகள் மூலம், பேரன்மார்கள் மூலம், சந்ததி மூலம், வர்க்கத்தின் மூலம் சாதித்து, என் அரைகுறையை முழுமையாக்கிக் கொள்வேன்; இதற்காகவே என் வர்க்கத்தின் ஸ்திரத் தன்மையில், (evolution தத்துவப்படி திரும்பத் திரும்பப் பிறவிமூலம் கடையல்) அது அடைந்திருக்கும் தரம் மேலும் மேலும் உயர்தல் வேண்டும்.

Perpetuation by Continuity and Quality of the race.

(வர்க்கத்தின் தொடர்ச்சி மூலம், தரத்தின் மூலம் அதன் சாசுவதம்)

அர்த்தமுள்ளவையெல்லாம் பயனுள்ளவை அல்ல. பயனுள்ளவை எல்லாம் அர்த்தமுள்ளவையுமல்ல.

அர்த்தமுள்ளவையும் கடைசியில் அர்த்தமற்றுப் போகின்றன. (காரணம்: எல்லாவற்றையும் இங்கேயே விட்டுவிட்டுத்தானே போக வேண்டியிருக்கிறது).

நம்ப வேண்டியவை வேர்கள்; விழுதுகள் அல்ல.

வேர்கள் உன்னைக் கைவிடா. அவற்றில் பரம்பரை யின் தவபலம் அடங்கியிருக்கிறது. விழுதுகளைப் பிடித்துக்கொண்டு தொங்கினால் அவை அறுந்து நாம் வீழ்வோம். அல்லது விழுதுகளுடன் பாம்புகளும் தொங்குகின்றன.

ஆகவே, வேர்களின் வேரோடலுக்குப் பாடுவோம்; வேர்களைப் புகழ்வோம். வேர்களின் பலத்தில்தான் விழுதுகளுக்கு பலம், வேர்கள் ல கூழியங்கள்; நம்பிக்கைகள், புதுப்பிக்கும் சக்திகள். இன்று, நேற்று, நாளை இவை வேரின் விளைவில் எழும் டங்காரத்வனி இன்றின் பின்னோக்கில் பிறந்த நேற்றுக்கு நினைவு மீட்டும் யாழிசை முன்னோக்கில் சிரிப்பது நாளையின் வானவில்,

சாரங்களைத் தட்டி விட்ட முற்றும் துறந்த ஞானியர்தாம் அறிவர், இந்த இன்று, நேற்று, நாளையின் முழு சூட்சமத்தையும். நாம், எப்படியும் நான் அவர் களின் நிலையை அடையாதவரை, எழுத்து, இசை, கலை எனும் வெள்ளைப் பொய்களோ, அல்லது நிஜங்களோ இவைதாம் நம் தஞ்சம். பரவாயில்லை; வைமூலம் நமக்குக் காணக் கிடைத்ததை, கண்டவரை விண்டிடுவோம்.

அப்படியும் காணக் கிடைக்காமல் இல்லை. இருளில் செதில்கள் வெள்ளியும் தங்கமுமாகச் சுடர் விடுகின்றன. "ட்ச்சிக் ட்ச்சிக்” விட்டத்தில் பல்லி எச்சரிக்கிறது.

நடுக்கடலில் யகூஷிணியின் கானம் கேட்கிறது. எனக்குப் பித்துப் பிடித்துவிட்டது. பாய்மரத்தோடு என்னைப் பிணைத்திருக்கும் தளைகளை அறுக்க, அவிழ்க்க முயல்கிறேன். Song of the Sirens Ulysses பாவனை நண்பர்களின் முன்யோசனையால் பத்திரமாக கானம் கடந்து செல்கிறேன்.

இந்தப் பக்கங்கள் சற்று அத்துமீறிவிட்டன. எனக்கே தெரிகிறது. என் சொந்தப் பக்கங்களாகத் தற்சமயத்துக்கு இருந்துவிட்டுப் போகட்டும். இன்று எனக்குச் சொந்தம். நாளைக்கு உங்களுக்குச் சொந்தம்.

இப்போதைக்கு இவை, கிழவன் காற்றாடி விடுகிற மாதிரி.

(உவமை சரியல்ல; ஜப்பானில் முதியோர் காற்றாடி விடுவது முறையே) i

கிழவன் பம்பரம் விடுகிற மாதிரி (ஊ - ஹும் - இதுவும் போதாது)

கிழவன் பாண்டி விளையாடுகிற மாதிரி (ஆ! பரவாயில்லை)

ஒவ்வொருவர் உள்ளேயும் ஒரு துஷ்டப் பையன் இருக்கிறான். அவனை ஒரளவு அடக்கி வைக்கலாமே தவிர, முற்றும் திருத்த முடியாது. சமயமில்லாத சமயத்தில் தலையை நீட்டுவான், அடாதன செய்வான் ஆனால் அவனை நாம் மன்னித்து விடுவோம். ஆனால் நம் மன்னிப்பு அவனுக்கு அக்கறை இல்லை.

ஒரு பிரபல எழுத்தாளர் என் பிள்ளையைக் கேட்டாராம்.

"பாற்கடலைப் படித்துக்கொண்டு வருகிறேன். அப்பாவுக்குத் தான் எழுத்தாளனாகப் போவது, தன் சுயசரிதை எழுதப்போவது எல்லாம் முன்னாலேயே தெரியுமா ? அப்பவே திட்டமிட்டுவிட்ட மாதிரி இளமை நினைவுகள் அவ்வளவு சுத்தமாக, தெளிவாக, அடுக்காக வருகின்றனவே எப்படி?” கேள்வி புத்திசாலித் தனமானது என்று தெரிந்ததே தவிர, அதன் ஸாரம் (Substance), நோக்கம் முழுமையாக உடனே புரிய வில்லை. யோசித்து, என் ஞாபகசக்தி சாகூதிக்கூண்டில் ஏற்றப்படுகிறது என நானே முடிவு செய்துகொண்டு உரிய பதிலை என்னால் இயன்றவரையில் அளிக்கிறேன்.

மேலே போகுமுன் ஒரு வார்த்தை, இப்போ தெல்லாம் இந்தக் கேள்வி பதில் ஸிஸ்டத்துக்கு மவுஸ் அதிகமாகி இருக்கிறது. பத்திரிகைகளிலிருந்து மேடை வரை பரவி இருக்கிறது. இது எனக்குப் பிடிக்கவில்லை என்று கூட தைரியமாகச் சொல்லிவிடுகிறேன். ஏனெனில் இந்தக் கேள்வி பதில் முறையினால் சந்தேகத்தைப் பூரா தெளிவிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. கேள்விக்குப் பதில், இன்னொரு கேள்வியைப் பயக்கின்றது.

உடனே அதற்கு ஒரு பதில் - இப்படிச் சங்கிலி போட்டுக்கொண்டே போய், விஷயம் தண்டவாளம் மாறி, சர்ச்சையில் முற்றி - சண்டை வந்தாச்சு, பிராம்மணா, சோற்று மூட்டையைக் கீழே வையும் என்பதில் முடிகிறது. தவிர எல்லா பதில்களுமே சமா தானங்கள்தாம் என்பது என் துணிபு. கந்தேகங்கள் உண்டு மறுக்க முடியாது. முக்கியமாகச் சிந்தனை விஷயங்களில், அவரவர் சிந்தனையில் ஊறி ஊறித் தெளிவு ஏற்பட வேண்டும். பதிலே அதுதான்.

இது என்னுடைய பார்வை என்கிற மட்டில் நிறுத்திக்கொள்கிறேன். ஆனால் பதிலே சொல்லாமல் இருக்க முடியுமா? பதில் சொல்ல வழியில்லாமல் இப்படி ஒரு தர்க்கம் பண்ணி டிமிக்கி பண்ணுகிறேன் என்று சொல்லமாட்டீர்களா? இந்தப் பீடிகையைப் போட்டுக்கொண்டு என்னால் இயன்றவரை சொல்லுகிறேன்.

கேள்வியைக் கேட்ட எழுத்தாளர் என்னிடம் பதிலை எதிர்பார்க்கவில்லை. அவருக்குத் தோன்றி யதைப் பேச்சுவாக்கில் என் பிள்ளையிடம் சொல்லி யிருக்கிறார் என்பது என் நினைவில் இருக்கிறது. ஆனால் என்றேனும் ஒரு நாள், வேறு யாரிடமிருந்தும் இந்தக் கேள்வி எதிர்பார்க்கக்கூடியதுதானே! தவிர இது இலக்கியத் தரமான கேள்வி. இலக்கிய ரீதியில் சமா தானம் சொல்வது முறையே. நிற்க.

எழுத்துத் துறையில் நான் இறங்கப்போவது, என் சுயசரிதம், அது பாற்கடல் என்கிற தலைப்பில், (அப்போது கர்ப்பவாஸம் கூடக் காணாத) "அமுதசுரபி' என்கிற பத்திரிகையில் இடம்பெறப் போகிறது. இவற்றைத் திட்டங்களாக என் குழவிப் பருவத்தில் எப்படி நான் கண்டிருக்க முடியும்? அந்த எண்ணத்தில் இதற்குப் பின் இது என்கிற வரிசையில், தோன்றும் போதே, என்னுடைய அப்போதைய நினைவுகளை நினைத்துக் கொண்டேனா?

நினைத்துக்கொள்ள முடியுமா? முடியாது என்பதைக் சொல்லவும் வேண்டுமா?

சம்பவம் நேர்ந்தபோது, நேர்ந்தவை. நினைவு ஏற்பாடு, (arrangement) இப்போதைய நிகழ்ச்சி, பின்னோக்கு, அதில் கிடைத்த (அல்லது கிடைத்ததாக நினைத்துக்கொள்ளும்) தெளிவு திருஷ்டி (Perspective) வெளியீடு பாஷை, பிறகு சொந்தத் திருப்பல் (evision) சொந்த editing மூலம் விஷயத்துக்கு முறுக்கேற்றம், ஒசை, கையெழுத்தில் அதற்கு ஒரு தோற்றம், அச்சில் காண் கையில் வேறு அந்தஸ்து (சில சமயங்களில் இதுவே ‘உல்ட்டா ஆகிவிடுவதும் உண்டு) இடையில் இத்தனை கட்டங்கள், கவனங்கள், கட்டுகள், சூதுவாதுகள் இருக்கின்றன. இத்தனைப் பக்குவங்களுக்கிடையில், விஷய பின்னம், உத்தேச (Intention) பின்னம், என் மமதையின் அதிகப் பாசங்கள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். ஸாம்பார் ரஸமாகிவிடக்கூடாது. ஆனால் Processingஇல் எந்தக் கட்டத்தையும் தவிர்க்க முடியாது. இதில் அசிரத்தை காட்டினால் இத்தனை காலம் பயின்ற எழுத்தின் கலையம்சம் என்னாவது?

பொய் வரக்கூடாது. பொய்மை புகின் அது மைக்கும் குற்றமன்றிப் பண்டத்தில் பழுதில்லை.

'சம்பவங்களை - நேர்ந்தபடி, நேர்ந்த சமயத்தின் பாஷையிலேயே சொல்லாவிட்டால் அவை முழு உண்மை எப்படியாகும்?” என்கிற எதிர்க்கேள்விக்கு பதில் சொல்லச் சக்தி அற்றவனாகிறேன்.

முதலில் சாத்தியமாகவும் எனக்குப் படவில்லை. நான் பூமியில் குழந்தையாக விழுந்ததும் 'குவா குவா என்று அழுதேன். 'குவா’ என்கிற சப்தத்தை அழுத நேரத்துக்குப் பக்கம் பக்கமாக நிரப்புவதா? அப்படி அழுகையில் குழந்தை பாலுக்கு அழுததா? அல்லது பிறவி எடுத்ததற்கா? "எங்கே வந்திருக்கிறோம்?’ (குவா~ எங்கே) என்கிற பெரிய தத்துவார்த்தத்தில் ஜீவனின் அலறலா? யார் கண்டது?

அந்தந்த வயதுக்குக் கிடைத்த சுய நினைவு, அதிலும் கூடியவரை கிடைத்த நினைவு கூட்டும் சக்தி, அதையும் கூடியவரை அந்தந்தச் சமயத்தின் பார்வையோடு நோக்க முயற்சி, பிறர் சொல்லக் கேள்வி, இரண்டுக்கும் கிடைக்காததை இட்டு நிரப்பும் சொந்த அனுமானம், இத்துடன் பாஷையும் சேர்ந்த கலவையாகத்தான் என் இளமை - இளமை என்ன, எல்லா நினைவுகளையும் இந்தப் பக்கங்களில் பார்க்கிறீர்கள். இதில் மாட்டிக் கொண்ட உண்மைதான் கிடைத்தவரை, பிற எல்லாம் அந்த உண்மை சாய்க்கும் நிழல்கள் என்று சொல் லட்டுமா? நிழல்களும் பொய்யல்லவே!

முன் அத்தியாயங்களில் ஓரிடத்தில் சொல்லு கிறேன். தங்கள் கடும் சாவினால் குடும்பத்தையே கலக்கி விட்ட என் மாமாக்கள் சுந்தரம், சுப்ரமண்யன் முகங் களை நினைவு கூட்டப் பார்க்கிறேன். எவ்வளவோ முயன்றும் கிடைக்கவில்லை. கூடவே அதே வயதுக் கூறில் இருந்த என் சித்தப்பா கார்த்திகேயன், அப்பளாக் குடுமி, கழுத்துவரை Close Coat அந்த வயதின் அங்க, ஆடை அடையாளங்களுடன் நினைவில் ஸ்பஷ்ட மாகப் பிதுங்குகிறார். மூளையின் கிறுக்கு இப்படி யெல்லாம் விளையாடுகையில் நினைவுகளை எப்படித் திட்டம் போட்டு நினைப்பது?

இன்னொன்று, யாரைச் சுற்றியுமே வெட்ட வெளிச்சத்தை எதிர்பார்க்க முடியாது. ஸ்டுடியோவில் நூற்றுக்கணக்கான candle poverஇல் headlights arc lamp நடுவில் கேமிரா எவ்வளவு பெரிய பொய்களைச் சொல்கிறது தெரியுமா? கேமரா மேதை கே. ராம்நாத் சொல்வார்: "The Camera never liesஇல் வளர்ந்துவிட்ட பேச்சு வழக்கு பெரும் புளுகு. பொய்யைத் தவிர வேறெதுவும் அது சொல்லவில்லை. பொய்க்கென்றே பிறந்தது.”

ஒளியும் நிழலும் சேர்ந்ததுதான், மனிதனின் வெளித் தோற்றம், உள் தோற்றம், பேச்சு, தன்மை, குணாதி சயங்கள் எல்லாமே. யாரையும் அகில்புகை சூழ்ந்து கொண்டிருக்கிறது. முகஸ்துதி, தூற்றல், வதந்தி, அவனே தன்னைச் சுற்றி அறிந்தும் அறியாமலும் ஏற்படுத்திக் கொள்ளும் அரண் (பட்டவர்த்தனம், வெகுளித்தனம் கூட அரண்கள்தாம்) இத்யாதி இந்தப் புகையைப் பயக்கும் திரவியங்கள். இந்த மூட்டத்தில் அவ்வப்போது வெளிப்படும்வரை அந்த ஆளின் காக்ஷி சென்றபின் புகை மேலும் கவிந்துகொள்கிறது.

What is Truth? என்ன அற்புதமான கேள்வி? எதனுடைய உண்மையையும் அதன் முழுமையில் அறிய முடியாது.

இதழ்கள் ஸஹஸ்ராகாரமாக விரிந்துகொண்டே இருக்கின்றன். விரிய விரிய உள்ளே இன்னுமொரு மொட்டு; இதழ்களாக இருத்தல் நம் பாக்கியம்.

ஒரிரு சமயங்களில் கதைப்போக்கின் யூகத்தில் வெளிப்பட்ட விஷயங்கள், உண்மையிலேயே அவை அப்படித்தான் என்று பின்னால் நிரூபணமாகையில் என்னில் நேர்ந்த பெருமிதம், புல்லரிப்பு, அதேசமயம் கலவரம், அச்சத்தை வாசகனுடைய யூகத்துக்கே விட்டுவிடுகிறேன். அப்போ எழுதியதில் ஏதோ ஒரு சத்தியம் பேசுகிறதோ? என்று நான் வியப்புற்றதுண்டு. சிந்தனை எவ்வளவு பெரிய Lab? பேனாதான் கங்கோத்ரி.

இதையொட்டி, காளிதாஸனைச் சூழ்ந்த ஒரு கதை நினைப்பு வருகிறது. ஏற்கெனவே பலருக்குத் தெரிந் திருக்க வேண்டிய கதை. ஆயினும் தெரியாதவர்கள், தேர்ந்தவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று தப்பித்துக்கொள்ளாமல் கூடியவரை சுருக்கமாக, நான் தெரிந்துகொண்டபடி சொல்லிவிடுகிறேன்.

போஜராஜன் நாட்டிலேயே சிறந்த ஒவியனைத் தேடி வரவழைத்து, ராணியை வரைய நியமிக்கிறான். ராணியும், அவன் கட்டளைப்படி உட்கார்ந்து "போஸ்’ கொடுத்தாள் - நாளடைவில் ஒவியம் முற்றுப்பெறும் சமயத்தில் ஒரு சொட்டு வர்ணம் தூரிகையினின்று தற்செயலாகச் சித்திரத்தின் உள்தொடையில் தெறித்தது. ஒவியன் மிகவும் சிரமப்பட்டு அந்தச் சொட்டை நீக்கிவிட்டு ஒவியத் திரவியங்களைக் கடை கட்டுகையில் மீண்டும் அதே அளவில் அதே தெறிப்பு. அந்தச் சொட்டையும் நீக்கியபின் மூன்றாம் முறையும் அதே போல நிகழ ஒவியன் மிரண்டுபோய்க் காளிதாசனிடம் போய்ச் சொன்னான். அவன்தான் காளி வரம் பெற்றவ னாயிற்றே! ஞான திருஷ்டியில் விஷயத்தைப் புரிந்து கொண்டு, ‘பரவாயில்லை, கவலைப்படாதே. ஒவியத்தை அப்படியே ராஜாவிடம் சமர்ப்பித்துவிடு’ என்று சொல்லிவிட்டான்.

ராஜா ஒவியத்தைப் பாராட்டிக் கொண்டிருக் கையில் வர்ணச்சொட்டையும் அது விழுந்திருக்கும் இடத்தையும் கண்ணுற்றதும் திடுக்கிட்டான். ராணியின் தொடை மச்சம் சைத்ரீகனுக்கு எப்படித் தெரியவந்தது? அவள் மஹா பதிவிரதை ஆயிற்றே! யாரைச் சந்தே கிப்பது? மூன்று நாட்களுக்கு அவனுக்கு உணவே செல்லவில்லை. ராஜாங்கக் காரியங்களே ஒடவில்லை. காளிதாஸன் அப்போது அவனிடம் வந்து, “ஹே ராஜன்! இதில் தெய்வச் செயலைக் காண்கிறோம். ஒவியன் தன் கலையைத் தவமாகப் பேணுபவன். ராணியோ பத்தினி. இந்த இடத்தில் சத்தியம் தானாகவே தோன்றி, தானே பேசி, ராணியின் மச்சத்தைத் தானே தீட்டி இருக்கிறது. ஆகையால் நீ யாரையும் சந்தேகப்பட வேண்டாம். தெய்வ ப்ரசன்னத்துக்குச் சந்தோஷப்பட வேண்டிய விஷயம் ! என்று விளக்கி, தேற்றி, சஞ்சலத்தைப் போக்கினான் - என்று கதை.

இந்தக் கதையில் ஒட்டை இருக்கிறது! ராணி உடுத்த படிதானே "போஸ்' கொடுத்திருப்பாள் ? அப்போது மச்சம் வெளியில் தெரிய வாய்ப்பே இல்லையே! மச்சம் வெளியில் தெரியும் அளவுக்கு ராணியின் ஆடை ஸல்லாவா? அப்படி இருக்கலாமா? ஒவியத்தில், ராணி ஆடைமீது வர்ணம் சொட்டி இருந்தால் ஒவியத்தின் அழகு கெட்டுப்போகவில்லையா? இந்தக் கதையை நான் எழுதவில்லை. கேட்ட கதைதான். இதை ஒரு நீதிக்கதை என்று கொண்டு அந்த நீதியை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் போலும்!

எழுத்து, ஒவியம், இசை, சிற்பம், நடனம், ஆய கலைகள் அறுபத்து நான்கும் மடிப்பு விசிறிபோல், விரித்தால் தனித்தனியாக, பல ஜால மடிப்புகள். மடக்கினால் ஒரே விசிறி. நதிகள் கடலில் கலக்கின்றன. கடலும், இந்தச் சங்கமத்தில் நதிகளுடன் கலக்கிறது. பழம் பசலி உவமைதான். ஆனால் வேறு பொருந்து வதாகத் தெரியவில்லை.

ஒரு நண்பர் எழுதுகிறார்:

“இம்மாத(ஜூன்)ப் பாற்கடல் படித்தேன். எத்தனையோ வருடங்களாகியும் அந்த நிகழ்ச்சிகள் பசுமை மாறாமல் ஜீவன் ததும்புகிறது. உங்கள் முன்னோர் களுக்கு நீங்கள் எழுப்பும் ஞாபகச் சின்னங்கள் மகத் தானவை. படிக்கிறவர்கள் தங்கள் முன்னோர்களுக்கும் அவ்வித நினைவுச் சின்னங்களை மனசில் எழுப்பிக் கொள்ளவும் அவை செய்கின்றன. எழுத்தின் உண்மை இதை ரகசியமாக நம்மை அறியாமல் செய்துவிடுகிறது”

இதைவிடப் பேறு எது? விசுவ தரிசனத்தின் மின்னல் அடிக்கிறதா?

குழந்தைகளா, கலத்தில் கொஞ்சம் கூடுதலாகத்தான் விழுந்துவிட்டது. எறியாமல் சாப்பிட்டுவிடுங்கள். சமத்துக் குட்டிகளோன்னோ!

-----------