பாற்கடல்/அத்தியாயம்-17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
அத்தியாயம்-17

 

நாளடைவில், ஆண்டித்தெரு வீட்டு இடம் எங்களைக் கொள்ள முடியவில்லை. வளரும் குழந் தைகள். சித்தி வயிற்றில் வேறு, 'அன்னம்' வைத்து விட்டது. (அப்படி என்றால் என்ன ?) மன்னியும் தாத்தாவும் ஒன்றாகவோ, மாறி மாறியோ, லால்குடியில் பாதி, பட்டணத்தில் பாதி நாளாக வந்து போய்க் கொண்டிருந்தனர். சமாளிக்க முடியாத நிலைமை வந்த பிறகுதான் அம்முவாத்தில் மாறுதலுக்குத் தயாரா வார்கள். அந்தச் சுபாவம் என்னிடமும் போகவில்லை என்பது என் மக்களுடைய கருத்து.

ராயப்பேட்டையிலேயே முத்து முதலித் தெருவுக்குக் குடித்தனம் மாறிற்று. ஏய்டி, பழைய வீட்டைவிட இங்கே நிஜம்மாகவே இடம் தாராளம். இங்கே சித்தப்பாவுக்கும் தனி அறை. எங்களை ராத்திரி வேளையிலேனும் போட்டு அடைக்க எப்பவுமே, அண்ணா, அம்மாவுடன் தனி இடம் உண்டே!

இங்கேயும் பின் கட்டுதான். இந்த இரண்டு படுக்கையறைக்கும் சமையலறைக்கும் இடையே மானம் பார்த்த பெரிய தாராளமான தாழ்வாரம். தாத்தாவும் பாட்டியும் அநேகமாக அங்கேதான் வாசம். முற்றத்தில் தான் குழந்தைகளுக்கு அநேகமாக ராச்சாப்பாடு, நிலாச்சாப்பாடு. வழக்கமான மோருஞ்சாதத்தையே பிசைந்து மன்னி எங்களுக்கு நிலாவில் போட்டால், நிலாச் சாப்பாடு.

இந்த வீட்டிலும் இரண்டு குடித்தனங்கள்தாம். ஆனால் முன் கட்டுக்காரர்களுடன் நாங்கள் - (நாங்கள் என்றால் குழந்தைகளைச் சொல்கிறேன்) ஒட்டிக் கொள்ள முடியவில்லை. அதற்குக் காரணம் வீடு கட்டி யிருக்கும் வாகோ, மனுஷாள் வாகோ, அறியேன். முதலில் அவர்கள் ஒட்டல் வைத்து நடத்தவில்லை. அம்மி மாதிரி அவர்களிடமிருந்து எங்களுக்கு ஸ்வா ரஸ்யமான வரவு இல்லை, வரவே இல்லை.

வீட்டுக்கு இரண்டு பெரிய திண்ணைகள். அங்கு உட்கார்ந்தபடி தெருவில் பறக்கும் வண்டிகளையும் ஜன நடமாட்டத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண் டிருக்கவே எங்களுக்குப் பொழுது போதவில்லை.

ஒரிரு முறை, அம்மி அவளுக்குரிய புன்னகை யுடனும் வந்தாள். எங்களையும் ஒரிரு முறை தன்னுடன் அழைத்துக்கொண்டு போய் வைத்துக்கொண்டு, மாலையில் திரும்பக் கொணர்ந்து விட்டாள்.

ஆனால் அதுவே படிந்த பழக்கமாக எப்படிச் சாத்தியமாகும்? எங்களுக்கும் அக்கறை மங்கிவிட்டது. நான் சொல்கிறேன் கேளுங்கள். குழந்தைகளைப் போன்ற இரக்கமற்ற ஐந்துக்கள் கிடையாது. அவர் களுடைய மறதி சட்டானது, கொடுரமானது. Out of Sight, out of mind - பெரியவர்களுக்கே வசனம் துணை யிருக்கிறதே, சிறியவர்களைப் பற்றிக் கேட்பானேன்!

சமீப காலமாகவே, ஒரு கேள்வி என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது. வட்டத்தின் சுற்றுக் கோடு முடிவதற்குத் தன் ஆரம்ப இடத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாலா?

ஒரு வாழ்நாளில், எத்தனைபேரைச் சந்தித்தாகிறது? எத்தனை நட்புகள், பழகிய கட்டங்கள் நேர்கின்றன. அந்தப் போதுக்கு - நமக்கு ஆகாதவர்களாக, ஆனவர் போக - அந்த நட்புகள், அந்த முகங்கள் இனியவை யாகத்தான் இருந்தன. ஆனால் அந்தத் தொடர்பு களை ஏன் நம்மால் கடைசிவரை பேணிக் காப்பாற்ற முடியவில்லை.

நான் S.S.I.C. பரீட்சை எழுதும்போது எனக்கு வயது பதினைந்துக்கும் பதினாறுக்கும் இடையில். பின்னால் குட்டெழுத்து, தட்டெழுத்துப் பரீட்சைகளில் தேறினேன். என் மொத்தப் படிப்பே அதோடு சரி. என்னையும், எங்கள் வீட்டில் அண்ணாவிடம் படித்துக் கொண்டிருந்த மாமா பிள்ளையையும், அப்போது கள்ளிக்கோட்டையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த என் மாமா வீட்டுக்குக் கோடை விடுமுறைக்காக அண்ணா அனுப்பினார். என் முதல் தனியான ரெயில் பயணம். அண்ணா எங்களை ஏற்றிய பெட்டியில் தற்செயலாக அந்த மார்க்கமாகப் போய்க்கொண் டிருந்த ஒரு குடும்பத்தை, என்னைக் கண்காணித்துக் கொள்ளும்படி அண்ணா கேட்டுக்கொண்டு, பெரியவர் களின் வழக்கப்படி எங்கள் விடுதலைச் சிறகுச் சந்தோ ஷத்தைக் கெடுத்துவிட்டார்.

அந்த மாமாவுக்குச் சுமார் 55 வயது இருக்கலாம். வேட்டி, கோட், தலையில் ஒரு சவுக்கத்தை முண்டாசு கட்டியிருந்தார் - பனிக்கென்று நினைக்கிறேன். கடைசி வரை தானாகவும் தளரவில்லை. அவரும் அவிழ்க்க வில்லை. மாமி வாட்டசாட்டமாகக் கொஞ்சம் குண்டு. இரண்டு பெரிய பெண்கள். இரண்டு பெரிய ஆண் பசங்கள்.

எங்களை கவனித்துக்கொள்ளும் காரணமாக அவர்கள் எங்கள் வழிக்கு வரவில்லை. எங்களுடன் பேச்சுத் தொடங்கவில்லை. மாமா பேரை மட்டும் கேட்டார். அதோடு சரி. புகை வராத ஒரு சுங்கானைப் பற்களுக்கிடையில் கடித்துக்கொண்டு, அவர் பாட்டுக்கு ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். குடும்பத்தில் மற்றவர்கள் தங்களுக்கிடையில் ஏதோ பேசிக் கொட்ட மடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பாஷையே வேறு. துளு என்று பின்னர் அறிய வந்தேன்.

நாங்கள் கொஞ்ச நேரம் வெளியே வேடிக்கை பார்த் தோம். அம்மா பண்ணிக்-கொண்டிருந்த நொறுக்குத் தீனியை மொக்கினோம். அவர்களுக்கும் கொடுக்கலாம் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. எங்களை ஒத்த வயதினர் அவர்கள் இல்லை. இருந்திருந்தால் கொடுக்க மனம் இருக்காது. ஆக மொத்தம் பலன் என்னவோ ஒன்றுதான்.

இன்னும் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தோம். பசிகட முழுக் காரணம் இல்லை. பொழுது போக வில்லை. ராச் சாப்பாட்டுக்குக் கட்டிக் கொடுத்திருந்த தயிர்ச்சாதம், எலுமிச்சம்பழச் சாதப் பொட்டலங் களைக் காலி பண்ணினோம், கையலம்பினோம். இடுப்பு நோகத் தலைப்பட்டது. எத்தனை நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது? படுத்தோம். காலை நீட்டினோம். வண்டியின் தாலாட்டில் கண் சொக்கித் தூங்கியே போனோம்.

காலை வெயில் சூடு கண்ணில் பட்டு, எங்களை எழுப்பிற்று. அவசரமாகப் பல்லை விளக்கிவிட்டு, அம்மா வார்த்துக் கொடுத்திருந்த இட்டிலிப் பொட்ட லத்தை அவிழ்த்தோம். எண்ணெயும், நெய்யும், மிளகாய்ப் பொடிக் கலவையில் அப்படியே இரண்டு பக்கங்களிலும் படும்படி தனித்தனியாக முக்கி எடுத்து, லேசாகத் தண்ணிர் தெளித்து ஊறிய இட்லியைத் தின்று பாருங்கள்.

ருசி முதற்கொண்டு சொல்லிக் கொடுக்கும் நாளாகி விட்டதே இந்தக் காலம்! ஊசிப்போன சட்டினிக்கு அவன் இன்னொரு பேர் வைத்துக் குட்டித் தட்டில் மேசைமேல் கொண்டுவந்து வைத்தால், தனியாகக் காசு கொடுத்துக் கண்டேன் கண்டேன் என்று விழுங்கு வீர்கள்! இப்படி எழுத்தில் விழுந்துவிட்டதற்காக, உங்களுக்குக் கோபம் வராமல் இருப்பதற்காக, நான் துணைக்கு உங்களுடன் சேர்ந்து விழுங்குகிறேன்!)

அவர்கள் எங்களை அங்கு இருப்பதாக பாவித்துக் கண்ணெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. இதுதான் எங்களைக் கவனித்துக் கொள்வதா? அண்ணா இவர் களிடம் ஏன் எங்களை ஒப்படைக்கணும்? எனக்குச் சாவகாசமாக அவர்கள் மேல் கோபம் வந்தது. கள்ளிக் கோட்டை (கோழிக்கோடு) போய்ச்சேர முற்பகல் பதினோரு மணி பிடிக்கும். அதுவரை என் செய்வது? புரியவில்லை. காபி இல்லாமல் பிரம்மஹத்தி பிடித்த மாதிரி ஆகிவிட்டது.

ரெயில், எட்டு மணிவாக்கில் ஒரு பெரிய ஸ்டேஷனில் வந்து நின்றது. அந்தக் குடும்பம் சுறுசுறுப்புக் காண ஆரம்பித்தது. மேல் ராக்கிலிருந்து (Rack) மாமா ஒரு 'டின்னை இறக்கினார். ஆண் பிள்ளைகள் இருவரும் யானை மண்டை போன்ற ஒரு பெரிய வெண்கலக் கூஜா சொம்பு, இரண்டு மூன்று பாட்டில்களுடன் வண்டியை விட்டுக் கீழே இறங் கினர். வண்டியின் 'டிகானா இங்கே பெரிசாகத்தான் இருக்கும்போல இருக்கு. எஞ்சின் அவ்வளவு நீண்ட மூச்சு விட்டது. சற்று நேரம் கழித்து வண்டித் தொடரே ஆடிற்று. எஞ்சினை மாற்றுகிறார்கள் போல இருக்கு.

அந்த அம்மா, டின்னை நாலு காலில் கட்டி இருக்கும் கயிற்றை அவிழ்த்து டின்னின் மேல் மூடியைத் திறக்கும் காரியத்தில் முனைந்திருப்பதை நான் சுவாரஸ்யமாக கவனிக்கிறேன். இதில்தான் எனக்குச் சின்னஞ்சிறு வயதிலிருந்தே 'ஸர்விஸ் ஆச்சே ! என்னென்னவோ பொட்டலங்கள், டப்பாக்கள்; எடுத்து வைக்கிறாள். எத்தனை நாழி பண்றாள்?

யானை அடி அகலத்துக்கு மும்மூன்று பூரி எடுத்து அதன்மேல் ஒரு டப்பாவிலிருந்து திரட்டுப்பால் போன்று கெட்டியான ஒரு பாகை ஏற்றி எங்களிடம் நீட்டுகிறாள். போணி எங்களுக்குத்தான். சட்டென்று ஊறிவிட்ட எச்சிலை (சனியனே) விழுங்கிக்கொண்டு, "நாங்கள் உங்களுக்குக் கொடுக்கல்லியே! எப்படி வாங்கிக்கிறது? எங்கள் அப்பா கோவிச்சுப்பா !” என்று தலையை பலமாக ஆட்டினேன். (எப்படி என் பட்டிக்காட்டான் பட்டணப் பிரவேசம்!)

மாமி பெரிசா வாய்திறந்து - உள்ளே ஒரு குருவி போய் உட்கார்ந்து கொள்ளலாம் - சிரித்துவிட்டாள். "பரவாயில்லை, நீ சொன்னதே கொடுத்தமாதிரிதான். எடுத்துக்கொள்." - (தமிழ் கொச்சை) - என்று திணித் தாள். மாமா பற்களிடையே பைப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்புறம் மாமி, மாமாவிடம் சொல்லி, மாமா எங்களுக்கு ஜாடை காட்டி (ஜாடைதான், ஆனால் அதில் எதிர்க்க முடியாத ஒரு அதிகாரம் இருப்பதை உணர்ந்தேன்), என் பிகு தளர்ந்து, அவர்கள் வெற்றி கண்டார்கள். உங்களிடம் சொல்லுகிறேன். உள்ளபடி வெற்றி கண்டது பூரிதான். நெய் வாசனைதான் மூக்கைத் துளைக்கிறதே!

இதற்குள் வெளியில் போயிருந்த பையன்கள், பாட்டில்களில் குடி ஜலத்துடன், கனக்கும் கூஜா சொம்புடன் திரும்பிவிட்டார்கள். தவிர, அவர்கள் கையில் பெரிய பெரிய தையல் இலைப் பார்சல்கள். அவற்றை அவிழ்த்து சுடச்சுட எங்களுக்கு ஆளுக்கு இரண்டு மெதுவடைகள் இப்போ மாதிரி வெறும் துளையை மட்டும் தாங்கும் வடையா?), மேலே கெட்டிச் சட்டினி. மறுபடியும் இரண்டு இட்டிலி சாம்பார் (அவர்கள் கூடக் கொண்டு போய்க் கொண்டு வந்த பெரிய எவர்ஸில்வர் தூக்கு டப்பாவைச் சொல்ல மறந்துவிட்டேனோ :) இப்போ சூடாக உருளைக்கிழங்கு மசாலாவைச் சுமந்துகொண்டு மறுபடியும் இரண்டு பூரி.

ஒருவழியாக டிபன் கடை முடிந்ததும் கூஜா சொம்பு திறக்கப்பட்டது. சேறாட்டம் காபி எங்களுக்கு ஒரு தம்ளர் வழங்கப்பட்டது. அப்பா, மண்டையிடியும் ஒய்ந்தது. வண்டியும் ஒருவழியாக முக்கி முனகிக் கொண்டு கிளம்பிற்று.

நான் என்னோடு கலந்து ஆலோசித்துக்கொண்டு, மாமா பிள்ளையோடு மண்டையோடு மண்டையை இடித்துக்கொண்டு (அந்த மந்திரிக்கு அப்போது வயது ஒன்பது) எனக்குள் ஒருவாறு ஒரு முடிவுக்கு வந்து, என் பர்ஸ்"க்குள் கைவிட்டுத் துழாவி ஒரு நாலணா வெள்ளி நாணயத்தை எடுத்து மாமாவிடம் நீட்டினேன். அவர் புருவங்கள் வினாவில் உயர்ந்தன.

“காபி, ரெண்டு கப் விலை.”

எங்களைச் சுற்றிக் கொல்’ என்று ஒரு சிரிப்பு விஷ்ணுசக்கரம் மாதிரிக் கிளம்பித்து பாருங்கள், லேசில் ஒயவில்லை. மாமிக்குப் புரைக்கேறி விட்டது. பெண்கள் அம்மா முதுகைத் தட்டி அவள் முதுகில் முகத்தைப் புதைத்துக்கொண்டு சிரிக்கிறார்கள். அவர்கூடச் சிரித்து விட்டார். இதைப் படித்துவிட்டு யாராவது சிரிக்கிறீர் களா? ஞாபகம் இருக்கட்டும். பின்னால்தான் காளி தாஸன் முன்னால் அவன் 'ராபணாத்தான்.

மாமி அந்த அலிபாபா ‘டின்"னிலிருந்து எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருந்தாள். தட்டை, முறுக்கு, போளி, தேன்குழல் - வெட்கத்தை விட்டபிறகு நாங்களும் கொடுப்பதையெல்லாம் வாங்கி வயிற்றுக்குப் போட்டுக்கொண்டிருந்தோம்.

தெரிந்த தாய்மார்களைக் கேட்கிறேன். வெட்கம் கெட்டுப் போனால், இரைப்பை நீளுமா? அல்லது பக்கத்திலேயே ஒன்று புதிதாக முளைத்துக் கொள்ளுமா ?

வண்டி நின்ற அடுத்த ஸ்டேஷனில் மாமா, அவரிடம் நான் கொடுத்த நாலணாவுடன் சேர்த்துப் போட்டு ஒரு பெரிய பிஸ்கட் ரோல் வாங்கிக் கொடுத் தார். அதையும் நாங்கள் யாருக்கும் கொடுக்காமலேயே தீர்த்துக்கட்டினோம். அவர் அப்படி வாங்கிக் கொடுத்தது எங்களுக்கு தண்டனையா? பரிசா ? பாடமா? இன்றுவரை புதிர்.

எங்களை அழைத்துப் போக, மாமா ஸ்டேஷனுக்கு வந்திருந்தார். இந்த மாமாவோடுதான் நாங்கள்வந்தோம் மாமா. ரொம்பப் பிரியமா எல்லாம் கொடுத்தா!" என்று இன்னொரு ராபனா பண்ணினேன்.

-அண்ணா சொல்லுவார். கழுதைக் குட்டிகூட பிறந்த புதுசில் குதிரைக்குட்டி மாதிரி இருக்கும். அப்புறந்தான், முட்டிக்கால் தட்டி, காதுகள் நீண்டு, வாயைத் திறந்து விட்டால் கேட்கவே வேண்டாம். சொந்த மாமா இந்த மாமாவைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனார். ஸ்லாம் போடுவதா, கூப்புவதா? கைகள் தவித்துத் திணறின.

“Hallo, Mr. Halasyam, so you are now in Calicut.”

“Y-Ye-Yes Sir.’

“Nice boys!”

வண்டி புறப்படும் வரை இரண்டு மாமாக்களும் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். வண்டி புறப் பட்டதும் மாமி ஜன்னல் வழியே, முடிந்தவரை குனிந்து, என் கன்னங்களைத் தொட்டாள்.

வண்டி வளைவில் மறைந்தபின்னர் கேட்டேன்: "யார் மாமா அது ? உங்களுக்கு முன்னாலேயே தெரியுமா ?”

"அவர் E.E.டா !” Executive Engineer. மாமா draughtsman என்று முன்னாலேயே சொல்லியிருக்கிறேன்.

"என்னுடைய பழைய மேலதிகாரி"

BOSS என்கிற வார்த்தை இன்னும் புழக்கத்தில் வரவில்லை.

இந்தச் சம்பவத்தில் இவ்வளவு சாவகாசமாகத் துளைந்திருக்கக் காரணம் அதில் இப்போது காணும் சிரிப்பை உங்களுடன் பங்கிட்டுக் கொள்வதற்கே, ஆனால், அடிப்படைக் காரணம், அதற்குப் பின் அந்தக் குடும்பத்தை நான் சந்திக்க நேரவே இல்லை. அப்படி ஏன் நேர வேணும்? அந்த மாமி என் கன்னங்களைத் தொட்டபோதும், எங்களுக்குத் திண்டி வழங்கின போதும், அவள் விரல் நுனிகளில் சொட்டிய அமுத தாரைகள் மறக்க முடியவில்லையே! இந்தச் சந்திப்பு, ரெயில் சந்திப்பு இப்படியே வீணாகிவிடணுமா? டில்லி யில் ஒரு பெண்மணி எனக்காகக் கசப்பு நாரத்தங்காய் ஊறுகாய் தேடிக் கொண்டுவந்து பரிமாறின கதை இந்தப் பக்கங்களில் ஏற்கெனவே வெளியாகி இருக்கிறது. அந்தத் தாய் இப்போ எங்கு இருக்கிறாளோ? முதலில் இருக்கிறாளோ? இல்லையோ? இதுபோன்ற சந்திப்புகள் திடீரென முளைத்தபடியே திடீரென்று அற்றுப் போவானேன்?

தெருவில் நடந்துபோகிறோம். எத்தனை முகங்கள், ஜனநெருக்கடியால், எத்தனை உரசல்கள்.

“I am sorry.”

“Oh that is alright!”

"ஏன்யா, கண் தெரியல்லே?"

அல்லது வெறும் முறைப்பு.

அல்லது மனதை மயக்கம் கொள்ளும் புன்னகை.

எத்தனை உறவுகள் இப்படித் தனித்தனியாக உதிர்ந்த பூக்களாகி வீணாகிவிடுகின்றன.

சில மணங்கள் நெஞ்சில் ஆயுசுக்கும் இப்படி இனங் காணாது நிற்பதும் உண்டு.

"அடடடடா! என்ன மனிதாபிமானம்!”

“எழுத்தாளனோன்னோ ! தனியா இப்படித் தோணும்போல இருக்கு."

"ஆசை அப்படிப் பொங்கினால் தெருவில் போறவா அத்தனைபேரையும் வீட்டுக்கு அழைச்சுண்டு வந்து சமாராதனை நடத்துவதுதானே! தினமும் வைக்கத்து அஷ்டமி! மூணு வருஷமாக் கேட்டுண்டிருக்கேன், தீபாவளிக்கு ஒரு நல்ல புடவைக்கு வழியைக் காணோம்!”

ஏளனத்துக்கும் ஆத்திரத்துக்கும் எங்குதான் குறைவு?

மூன்று நாட்களுக்கு முன் டாக்டரிடம் போகும் நிலைமை வந்துவிட்டது. ஜ"ரம், அது சாக்கில் ஏற்கெனவே மூன்றுநாள் பட்டினி. என் நட்டாமுட்டு வைத்தியத்துக்குக் கேட்கவில்லை. வைத்தியனுக்குக் கொடுக்க வேண்டிய தகூழ்ணையைக் கொடுத்தாக வேண்டும் போலும்! பெண்கூடத் துணைக்கு வந்தாள் என்றாலும் உடம்பு பலஹினம்; நடுவில் மூன்று இடங்களில், ஒரு மரத்தடியில், ஒரு வீட்டு வாசற் படியில், ஒரு தெருவிளக்கு மேடையில் தங்கித் தங்கிக் களைப்புத் தேற்றிக்கொள்ளும்படி ஆகிவிட்டது.

இரண்டாவது கட்டத்தில் தெருவில் போகும் ஒரு ஸ்திரீ - முன்பின் அறியாதவள். தெரிந்தவள் போல் என்னைப் பார்த்துவிட்டு நின்றுவிட்டாள். "என்னம்மா தாத்தாவுக்கு உடம்பு? பால் கொண்டுவந்து கொடுக் கட்டுமா? இங்கேதான் எனக்கு வீடு. சோடா வாங்கி யாரட்டா ? கையைப் புடிச்சு அழைச்சுப் போ. பெரியவரே, என் மேலே தாங்கிக்கோங்க. பால் மாறாதீங்க. என் தகப்பனாருக்குச் செய்யமாட்டேனா?”

தெருவில் நேர்ந்த இந்தக் கவிதை பொய் இல்லை என்பதற்கு என் மகள் சாக்ஷி.

தான் தேவைப்படவில்லை என்று தனக்கு நிச்சய மான பிறகு அந்தப் பெண்மணி தன் காரியமாகப் போய்விட்டாள். ஆனால் அவள் வார்த்தைகள், என் உடல், மன நிலையில் எனக்கு எவ்வளவு தைரியம் தந்தன என்று எந்த அளவில் என் வார்த்தைகள் பதியவைக்க முடியும்?

ஆனால் அந்தத் தாயாருடன் சந்திப்பு அத்துடன் சரி. ஆயிரம் குற்றங்கள் குறைகள் ஒருவரையொருவர் கண்டுகொண்டும் சொல்லிக்கொண்டும் திரிந்தாலும், உயிருக்குயிர் உறவின் உள்சரடு சத்தியம். ஒருநொடிப் பொழுதுக்குத்தான் அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டாலும், "நான் இருக்கிறேன்!” என்கிறது. அப்பா, என்ன பலம்! என்ன சுமை தாங்கல்! இதைத்தான் நான் சொல்ல முயல்வது.

எல்லாம் ஊமை கனாக் காணும் வேதனை! இதற்கு ஒர் ஊமை பதிலும் வேதனை எழுந்த இடத்திலேயே கிடைக்காமலும் இல்லை.

"நீ உனக்கு இருக்கும் இரு கைகளாலேயே உலகத்தை அணைக்க ஆசைப்படுகிறாய். ஜீவசக்தியின் அடிப்படை ஒருமைதான் உன்னுள் நீ உணரும் எழுச்சி. உன் ஆசை பேராசை, சாணளவுகூட இல்லாத உன் வாழ்க்கையில் உன் பங்குக்கு வழங்கி இருக்கும் உறவுகளைப் பேணிக் காத்து இன்புற உன் தகுதியை வளர்த்துக்கொள்ள வழி பார்.

சித்திக்குச் சீமந்தம். நடுமுற்றத்தை அடைத்துப் பந்தல். இந்த நாளில் தாலி கட்டும் கலியாணத்திலேயே வதுக்களில் லஜ்ஜை கைவிரிப்பு. சீமந்தத்தில் மணப் பலகைக்காக மெனக்கெட்டு வரவழைத்துக் கொள்ளும் வெட்கத்தில் ஏதோ ஒரு பரிதாபம் இல்லை? அதுவும் சித்திக்குப் பிறந்த வீட்டுத் துணையும் இல்லை.

ராச்சாப்பாடு முடிந்தவுடன் குஷி ! குஷி! கதை ! கதை ! எதிர்வீட்டுப் பையன், அண்டை வீட்டுப் பையன்களில் ஒரிருவர், முன்கட்டுப் பையன், நாங்கள் எல்லோரும் சேர்ந்து அப்பாமேல் - அதான் தாத்தா மேல், பூச்சி, வண்டுகள் போல் அசலாகவே மொய்த்துக் கொள்வோம்.

“டேய் ஒரு எட்டுக் கத்தரிக்காய், ஒரு டஜன் வெண்டை, ஒரு நாலு கிழங்கு போடுடா !”

தாத்தா மார்க்கெட் வாங்கவில்லை. அவருடைய உடம்பைப் பிடித்துவிடுகையில், பிடிகள், உருட்டுகள், நிமிண்டல்கள், குத்துகள், புரட்டிவிடுதல்கள் (பேஷ்!) களுக்கு ஸங்கேதப் பெயர்கள். “இன்னிக்கு உனக்கு வலதுகால், இவனுக்கு இடது, அதோ அவனுக்கு, உன் பேர் மறந்துபோச்சு, இந்தக் கை, டேய், யாருக்குடா முதுகு வேணும்?” என்று பங்கு போட்டாகிவிடும்.

இத்தனை ஆர்ப்பாட்டங்களிடையே, கதை புறப்படும் ஜரூராக. ஆரம்ப நடைபோட்டு, மெதுவாகி, அப்புறம் கொஞ்சம் சூடு ஆகி, சரியான உயிர் நிலையில் குறட்டையில் நின்றுவிடும். தூங்குபவரைத்தான் எழுப்ப முடியும். இனிமேல் நாளை ராத்திரிக்குத்தான்.

இப்படியேதான் தாத்தாவிடம் நாங்கள் ராமா யணம், திருவிளையாடல் புராணம், பெரிய புரா ணத்தில் சில முக்கிய நாயன்மார்களின் வரலாறு, மஹா பாரதம் (மேலெழுந்தவாரியாக), பஞ்சதந்திரக் கதைகள் அரிச்சந்திரன் கதை எல்லாம் கேட்டது.

தாத்தா - பாணியில் இது இப்போதைய சிந்தனை யில் தோன்றியது - புலியின் வால் சுழட்டல், அடவியில் நிழலோடு நிழலாக வரிக்கோடுகள் இழையும் தன்மை இருந்தது. ஒருதடவை கேட்டால் போதும். அதன் உறுத்தல் விடவே விடாது.

சித்தப்பா (அவரும் ஒன்றும் லேசுப்பட்டவர் அல்ல) சொல்கையில் பாத்திரங்கள் கண்முன் நின்றுவிடும். (Kinetic effect) தோற்றக் காட்சியின் நியாயம் அவர் சொல்லும் முறையில் தூக்கி நிற்கும். ராவணனுடைய பராக்கிரமத்தை அவரிடம் கேட்கையில், இந்த மஹாத்மாவைக் கொல்லவா ஒரு அவதாரம்' என்ற சந்தேகம் அந்தச் சிறுவயதிலேயே வித்து வைத்து விட்டது. அதிலிருந்து பல்வேறு விளைவுகள், வாழ்க்கை நோக்கைப் பலவிதங்களில் பாதிக்கின்றன என்பதை யாவரும் சிந்திக்க வேண்டும்.

"நக்கீரனுக்கும் சிவனுக்கும் நடந்த சம்வாதத்தில் சிவன் எங்கே ஜெயித்தான். வன்முறையைக் கையாண்டு வழுக்கலடித்தான்." அந்தக் கட்டத்தை விவரிக்கையில், திருவிளையாடற் புராணத்தில் பரஞ்சோதி முனிவரின் செய்யுட்களின் வழவழா கொழகொழாவுடன், அதே கட்டத்தில் காளத்தி புராணத்தில் சிவப் பிரகாச சுவாமிகளின் வாக்கையும் ஒப்பிட்டுக் காண்பிப்பார். "சங்கை அறுப்பது எங்கள் குலம், சங்கரனாருக்கு ஏது குலம்” என்று கீரனா கேட்டான்? எங்களுக்குள் புகுந்து கொண்டு அவன் கேட்கையில் நாங்கள் உள் விம்மு வோம். அப்பா! அப்பா! அதுவன்றோ உண்மையாக வாழ்ந்த நாட்கள்!

துரியோதனன் செய்தது நியாயமோ அநியாயமோ! கடைசிவரை வணங்காமுடி மன்னன். வைராக்கியமே ஒரு சத்தியந்தான். “சூதாட்டத்தில் தோற்றவன் வைத்த பணயத்துக்கேற்ப ஜெயித்தவனுக்குக் கட்டுப்பட வேண்டியவன்தானே! அவன் ஆட்டத்துக்கு அழைச் சான்னா தருமபுத்திரனுக்கு புத்தி எங்கேடா போச்சு ?” என்று எங்களைக் கோபிப்பார். அந்தக் கோபம் எங்களிடம் மாற்றப்படுவதை நாங்களே உணர்வோம்.

மனசுக்குத் தனியாகச் சிந்திக்கும் சக்தி உண்டு என்பதைச் சித்தப்பாவிடம்தான் உரிய அஸ்திவாரத் துடன் நான் உணர்ந்துகொண்டேன். நினைக்க ஒரு சக்தி கொடுத்தானே, அதுதான் ஆண்டவன் இழைத்த பெரிய தவறு. தனக்கு எதிர்ப்பு ஏற்படுத்திக் கொண்டது அதனால்தானே! தனித்த நினைப்புத்தான் Forbidden fruit ஆனால் அதைக் காட்டிலும் ருசியும் வேறு இல்லை. Satan ஒரு தத்தாரிப் பிள்ளை, அவ்வளவுதான் -அவன் என் சோதரன்; என் பிள்ளை, என் ரத்தம், என் குலந்தான். என்னால் என் ரத்தத்தை மறுக்க முடியாது.

கதை சொல்லப் பாட்டனார்.

பழையது போடப் பாட்டி.

இளம் வயதில் அவசியம் வேண்டும்.

லக்ஷியங்கள், வாழ்க்கையில் பிடிப்புகள், சோதனை களைத் தாங்கப் பலங்கள், நம்பிக்கைகள், அன்பின் ருசிகள் இப்படித்தான் ரத்தத்திலேயே பெரியவர்களால் ஊட்டப்பட்டன.

ஆம்; அம்மா கைப் பழையதுகூடப் பாட்டி பிசைந்து போட்ட பழையதுக்குப் பின்தான்.

“M”, பரமஹம்சரைக் குறித்து சொல்கிறார் (Gospel of Ramakrishna):

அது சமுத்திரம், அவ்வப்போது நாங்கள் மொண்டு கொண்டது, எங்களால் தூக்க முடிந்த சின்னஞ்சிறு பாத்திரங்களில், எங்களிடம் இருந்த பாத்திரம் கொண்டது அவ்வளவுதான்."

இதேபோல்தான் என் இலக்கிய வன்மையும். முன்னோர்கள் தோண்டி வைத்துவிட்டுப் போன ஊற்றில் இருந்து எடுக்க எடுக்க என் எல்லைகள் எவ்வளவு குறுகியவை என்பதை நாளுக்கு நாள் உணர்ந்துகொண்டே இருப்பதிலேயே ஓர் ஆனந்தம் தெரிகிறது.

கைக்கெட்டமல் அதோ, அவ்வளவு கிட்ட பூமிக்கு அடியில் அதோ தெரியும் புதையல்.

அண்ணாவுக்கு - அதான் அப்பாவுக்கு - அதான் அண்ணாவுக்குக் கதை சொல்ல நேரம் ஏது? (பின்னால் தன் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் நேரம் போக, மிச்சத்துக்குக் கதை சொல்லவுமே அவர் முழு நேரமும் செலவழிந்தது. ஆனால் அண்ணா கதை சொல்லும் விதத்தைப் பற்றிச் சொல்ல இப்போது இடம் இல்லை. அவரும் அந்தக் கலையில் 'கில்லாடிதான். அதற்குச் சமயம் வரும்போது சொல்கிறேன்) இப்போதைக்குப் பள்ளிக்கூடத்துக்கும், டியூஷன் சொல்லிக் கொடுக்கப் போய் வரவுமே நேரம் போத வில்லை. அண்ணாவுக்கு நல்ல சம்பாதனை வேளை. ஆனால் இந்தக் குடும்பம் எத்தனை வந்தாலும் கொள்ளும், அத்தனையும் கொண்டது. தமக்காகச் சேர்த்து வைத்துக்கொள்ளும் எண்ணம் அவருக்குத் தோன்றியதும் இல்லை; அவருக்கு அப்படிச் சொல்லிக் கொடுக்கும் மந்திரியாகவும் அம்மா அமையவில்லை. எப்படிப் பார்த்தாலும் எங்கள் குடும்பம்தானே பெரிசு. அண்ணாவுக்கு முப்பத்துஇரண்டு, முப்பத்து மூன்று வயதுக்குள் நாலு குழந்தைகள்.

சம்பளத்தையும் வருமானத்தையும் அண்ணா அப்படியே சித்தப்பாவிடம் கொடுத்துவிடுவார். சித்தப்பாதான் நிர்வாகம். இப்போது சிந்தித்துப் பார்க்கி றேன், எங்கள் குடும்பத்தின் ஒற்றுமையை இந்நாளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் நமபத்தகுந்ததாகக்கூட இல்லை. ஒருவர் நாணயத்தை ஒருவர் சந்தேகிக்கத் தோன்றியது கூட இல்லை. நிர்வாக ஸ்தனைச் செலவுக்குக் கணக்குக் கேட்டதும் இல்லை. அதனால் அநியாயங்கள் நடக்கவும் இல்லை. அடிப்படைக் காரணம் பாசம் என்றுகூடச் சொல்லமாட்டேன். பெரிய கைகள் (தாத்தா-பாட்டி) இருக்கிறவரை - ஊரில் இருந்தாலும் சரி, இங்கே இருந்தாலும் சரி, அவர்களிடம் இருந்த ஒரு அத்து, மரியாதைதான். வால்கள் இருந்திருக் கலாம். ஆனால் அவர்களுக்கு எதிர்ப்பில் சுழலக்கூடத் தைரியம் கிடையாது. தவிர யாரும் தனி பாவனையாக நினைக்கவில்லை. எல்லோரும் ஒரு குடும்பம். அதுவும் இது பெருந்திருக் குடும்பம். இங்கே வஞ்சனைகளுக்கே இடம் கிடையாது.

ஆனால் இந்த வாழ்க்கை திருப்பம் காணும் வேளை வந்துவிட்டது. மத்தியானம் வரை பொன்னுருகக் காய்ந்து கொண்டிருந்த வெயில் திடீரென்று மறைந்து மேகங்கள் எங்கிருந்தோ திரண்டு வந்து கவிழ்ந்து கொண்டன.

அண்ணாவுக்கு ஆஸ்துமா கண்டுவிட்டது.

காரணம், பையன்களுடன் மாரடிப்பதா? ஆனால் அவருடைய தம்பிகள் வாத்தியார் வேலை பார்க்க வில்லையே! அவர்களும் ஆஸ்துமாக்காரர்கள்தாம். என் தம்பி சிவப்பிரகாசத்துக்கும் ஆஸ்துமா உண்டு. இது பரம்பரை வியாதி என்று சொல்வதற்கு இல்லை. தாத்தாவுக்கும் அவருடன் பிறந்தவர்களுக்கும் லேசாகக் கூட இதன் அடையாளம் கிடையாது. பட்டணம் போன்ற பெரிய இடங்களில் எழும் தெருப்புழுதி சுவாசப்பைக்குள் போய்விடுவதால் என்கிறார்கள். என்னவோ மூடுமந்திரம் மூடுபனியாக அண்ணாமேல் கவிந்துவிட்டது.

இன்னும் ஆஸ்துமாவுக்குப் பூரண குணம் (அதாவது உடம்பை விட்டே விரட்டல்) மருத்துவத்தில் கிட்ட வில்லை என்றே தெரிகிறது. இப்போதாயினும் ஊசிகள், மாத்திரைகள் சமயத்துக்கேனும் உதவ இருக்கின்றன. அறுபது வருடங்களுக்கு முன்னால் அது போன்ற பரிகாரங்கள் ஏது?

அண்ணாவுக்கு வந்த மும்முரம் மாபாரதம். அந்த உடல்வளம் எப்படி? அப்படி நேற்றைக்கும் இன்றுமாகக் குலைந்தது? விலாவில் கோணி ஊசியால் கோத்து வாங்கல் போன்ற இழுப்பு. (மேல், கீழ்) உள்ளங்கை களிடையில் எலுமிச்சம் பழம்போல் ஆளைக் கசக்கிப் பிழிந்தது. சளியின் கல் கல் சப்தத்தில் வீடே அதிர்வது போல் எங்களுக்குத் தோன்றும்.

விடியற்காலை, சரியான பனிக்காலத்தில் குளிர்ந்த ஜலத்தில் ஒருநாள் கூடக் குளிக்கத் தவறாத மனுஷன், இப்போது சேர்ந்தாப்போலக் குளியலுக்கு முழுக்குப் போட வேண்டி இருந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? முழுக்கு குளியலுக்கு மட்டுமா? வழக்கப்படி உணவு போச்சு. டிபன், இது ஆகாது - அது ஆகாது. அளவுகள் கொடுரம் அடைந்தன. ராச்சாப்பாட்டுக்குக் கதவடைப்பு. இட்டிலியோ இரண்டுக்கு மேல் ஆகாது -“தோசையா?” வேண்டாண்டா, சப்தரிஷி ராத்திரி நீதாண்டா கஷ்டப்படுவே !” - நின்றால் குற்றம், உட்கார்ந்தால் அபராதம், திரும்பினால் தண்டனை. வானத்துப் பறவைக்குச் சிறகைச் சேதித்தாகிவிட்டது. ஆயுள் தண்டனை.

நோய்வாய்ப்படும் அவஸ்தையைத் தவிர, அண்ணா வின் கண்ணில் கண்டு விட்ட தி கைப்பையும் மருட்சியையும் இப்போது நினைவுகூட்டிப் பார்க்கி றேன். ஏதோ ஒரு குற்ற உணர்வில் தலை குனிகிறது. அவர் அப்படிக் கஷ்டப்படுகையில், பிறர் வேளா வேளைக்கு இஷ்டப்படி தின்றுகொண்டு, வளைய வந்துகொண்டு வாழ்வதே நியாயமா? பெருந்திருவே! இதுதான் நியாயமா?

இடையில் சித்தி பிரசவம்; பெண் குழந்தை,

அப்பா லால்குடியிலிருந்து வந்து பிள்ளைப் பக்கத்தில் உட்கார்ந்து விட்டார். பெருந்திருவைக் கெஞ்சுகிறார். கொஞ்சுகிறார் சீறுகிறார். லால்குடிக் கோயிலுக்குப் போகாமல் அந்தப் பாவையைப் பாராமல் பிரிந்திருக்கவும் முடியவில்லை. அம்முவாத்து பலமும் அதுதான் - பல ஹினமும் அதுதான். தூண்டிலில் மாட்டிக்கொண்டுவிட்ட குஞ்சுக்கு ஏதும் உதவ இயலாது. அதைச் சுற்றிச் சுற்றி வரும் தாய்மீன் போல் தவிக்கிறார். அந்தத் தலைமுறை வரை அம்முவாத்துப் பாசங்கள் பிரகடனங்களாக வெளி வரா. இந்தமாதிரிச் சமயங்களின் தவிப்பில்தான் தெரியும்.

அவளுந்தான் தவிக்கிறாள்.

எங்களுக்கு என்றும் அவள் கல்லாகவே இருக்க முடியாது. நள்ளிரவில் தைரியமுள்ளவர் கர்ப்பக் கிருகத்துள் போய் விக்கிரகத்தின் கன்னத்தைத் தொட்டுப் பாருங்கள். நனைந்திருப்பது தெரியல்லே?

நான் என்னப்பா செய்வேன்? கர்மா அப்பா. கர்மா யாரை விட்டது? வினையிலிருந்து யாரால் தப்ப முடியும்? என்னால் ஒரு விரலைக்கூட அசைக்க முடிய வில்லையே, என் செய்வேன்?"

அவளுந்தான் எங்களுடன் அழுகிறாள் - ஒரேயடி யாக திடீரென்று அவள் கையை விரித்துவிடாது இருந்தால் எங்கள் பெரும் புண்ணியம்.

அண்ணாவுக்குக் கன்னங்கள் ஒட்டிப்போய்க் கண்கள் குழி விழுந்துவிட்டன. உயிரைக் கோழையாகத் துப்பிக்கொண்டிருந்தார். யானை போன்ற உடல் தேய்ந்து பூனையின் நிழலாகி, அதுவும், அதுவும். திகில் எங்கள் எல்லோரையும் கவ்விக்கொண்டது.

அம்மாவைத் தவிர.

அம்மா முகத்தில் தனி ஒளி வந்துவிட்டது. களை வந்துவிட்டது. அதுமாதிரிக் களை காணக்கூடாது என்றுகூட ஒரு கட்சி உண்டு.

அவள் என்ன சத்தியம் மறந்தவளோ?

அம்மா பாடி நீங்கள் யாராவது கேட்டிருக்கிறீர் களோ? என்னவோ உளறுகிறேன், அந்த வேளையில் சுழலில் மாட்டிக்கொண்டு. அவள் குரலைப் பற்றி வேறு சந்தோஷமான இடத்தில் விவரிக்கிறேன். அவளுடைய பாடும் குரலில் பெண்மை இருந்தது என்று மட்டும் சொல்லி நிறுத்திக்கொள்கிறேன். பெண்ணுக்குப் பெண் கேட்கிறாள்.

"என்னடி உன் கழுத்தில் தொங்கல்லே!” பெருந்திரு பயப்படுகிறாள்.

பிள்ளைக்குக் கிடந்த தவத்தைக் காட்டிலும் இப்போ தாலிக்கு இருந்த தவத்தின் நெருப்பைப் பற்றி என்னால் பேசக்கூட முடியுமா?

எங்களை அழைத்துக்கொண்டு - ராமாமிருதம், சிவப்பிரகாசம், பானு - இடுப்பில் கைக்குழந்தையுடன் கையில் எண்ணெய்க் குடுவையுடன் விளக்கிட, எங்கள் வீட்டையடுத்துப் பத்துப் பதினைந்து வீடுகள் தள்ளி யிருந்த பெருமாள் கோயிலுக்குப் போவாள். துவஜ ஸ்தம்பத்தடியில் எல்லோரும் சாஷ் டாங்கமாக விழுவோம். அண்ணாவுக்கு உடம்பு சரியாக வேண்டும். கைக்குழந்தையையும் குப்புறப் போடுவாள். அது வீல் என்று அழும்.

பட்டர் வெளியே வருவார். முறுவலிப்பார். "குழந்தையை அழவிடாதேம்மா. அது சேவிக்கத் தேவை இல்லை. அதுவே தெய்வம்."

"அப்படியானால் அதன் குரல் அவனுக்குக் கேட்கட்டும்.”

அந்த உக்கிரம், அந்த வெறி, அந்தக் காளித்தனம் அம்மாவிடம் எப்பவுமே உள் உறங்கிக் கொண்டிருந்தது என்று என் அபிப்பிராயம். சமயத்தில் வெளிப்படும்.

குப்புசாமி முதலியார் - வாழ்க்கையில் என் நோக்கை பாதித்த சிலரில் அவரும் ஒருவர். அவர் சொல்வார்: “பெண்களிடம் எப்பவுமே கொஞ்சம் பேய்க்குணம் உண்டு.”

அம்மாவிடம் பாசம், பக்தி, அன்பு, பிரியம் - இந்த அம்மாவுக்கும் இந்தப் பிள்ளைக்கும் உள்ள பந்தம் எங்கள் குடும்பத்துள் பிரசித்தமாகிவிட்டது. அதை மறைக்கவோ, மறுக்கவோ அவசியம் இல்லை.

அம்மாவிடம் அன்பு பிரியம், பாசம், பக்தி - இவை எல்லாவற்றையும் முன்னிட்டுக் கொண்டு எனக்கு அவளிடம் எப்பவுமே ஒரு லேசான அச்சம் உண்டு.

முதலியார் சொன்னது காரணமோ?

--------