பாற்கடல்/அத்தியாயம்-9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
அத்தியாயம்-9

 

நான் பிறப்பதற்கு முன்னரே இறந்துவிட்ட என் அம்மாவைப் பெற்றவளுக்கு அத்தியாயமே ஒதுக்கி விட்டபின், நான் நன்கு அறிந்தவள், என் தந்தையைப் பெற்றவளைப் பற்றி எழுதாவிடின், நான் நன்றி கொன்றவனாவேன் என்பது மட்டும் அல்ல. நான் மேற்கொண்டிருக்கும் காரியத்தின் நோக்கமும் கலையும் தவறினவனாவேன்.

பெரியோரைப் புகழ்வோம்.

மன்னிப்பாட்டியின் செலலத் தீவட்டி' நான். ஆனால் அவள் போனபின், பேரன் நான் அவளுக்கு நெய்ப்பந்தம் பிடிக்கக் கொடுத்து வைக்கவில்லை. அவள் மரணத்தின்போது அவள் பக்கத்தில் நான் இல்லை.

காஞ்சிபுரத்துக்கு (பழைய கணக்கு) ஐந்து மைல் - சென்னைக்கு நாற்பது மைல் தூரத்தில் ஐயன்பேட்டை (அப்போது) கிராமத்தில் வாத்தியார் வேலை பார்த்துக் கொண்டிருந்த அப்பா (அண்ணா)விடம், மன்னி (பாட்டி) இறந்தாள். அந்தச் சமயத்தில் சென்னையில் வாஹினி பிக்சர் (லிமிடெட்)ளில் எனக்கு டைப்பிஸ்ட் வேலை. மன்னி சாகும் தறுவாய் சேதி இருமுறை வந்து, போய்ப் பார்த்துவிட்டு வந்தபின் –

பாட்டிக்குப் புலன்கள் ஒவ்வொன்றாய் ஒடுங்கி விட்டன. "மன்னி, இதோ ராமாமிருதம் வந்திருக்கேன்! மன்னி, இதோ என் முதல் சம்பளம் (அது முதல் சம்பளமல்ல). கையில் வாங்கிக்கொள்ளுங்கள். மன்னி, இதோ நமஸ்காரம் பண்றேன்.” கண்களில் பார்வை போய்விட்டது. கைகள் என்னை ஆசியில் தொடத் துழாவி, ஸ்பரிச உணர்வும் அற்றுவிட்டதோ என்னவோ, கூப்பிக்கொள்கின்றன. உள்நினைவு மட்டும் ஒடிக் கொண்டிருக்கிறது.

போய்ப் பார்த்துவிட்டு வந்தபின், மன்னி செத்துப் போய்விட்டாள் என்று ஆள் வந்ததும் லீவு கேட்டதும் மானேஜருக்குக் கோபம் வந்துவிட்டது. "உனக்கென்ன, பாட்டிங்க செத்துப்போய்க்கிட்டே இருப்பாங்க. அவங்களுக்கும் வேலையில்லை, உனக்கும் வேலை யில்லை” என்கிறான்! வயிற்றுப்பிழைப்பு என்னென்ன வெல்லாம் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது! முறைத்துக்கொண்டால் நான் நடுத்தெருவில், சுளை சுளையா ரூபாய்கள் இருபத்தைந்து. மாதம் சம்பளம், குடும்பம் அப்போது தத்தளித்துக்கொண்டிருந்தது.

"இந்தக் குடும்பம் என்றைக்குத் தத்தளிக்கவில்லை?” கேலிக் கொக்கரிப்புச் சிரிப்பு கேட்கிறது.

(சிரிப்பு எங்கள் உரிமை)

ஞாயிற்றுக்கிழமைகூட வந்தாகணும். பேருக்கு அரைநாள். அந்த வேலையுள் முழுநாளின் சாறு வேறு சக்கை வேறாகப் பிழிந்தாகிவிடும். என் நாள் காலை 9-30 மணியிலிருந்து இரவு எட்டு - எட்டுக்கு மேல் அதன் ஒட்டுக்கள் அன்றன்று எம்மட்டில் நின்றனவோ, அதுவரை. O.T.? அப்படி என்றால் என்ன ? அப்பவே சீட்டைக் கிழித்துக்கொள்ள வழி "மன்னிச்சுக்கோங்கோ ஸார் தெரியாமல் கேட்டுவிட்டேன் ஸார்.”

'ஸாரி தம்பி, இது உன் தப்போடு போகல்லே. இந்த எண்ணம் மத்தவங்ககிட்ட புரையோடாமல் இருக்க உன்னை முன்னால் கழட்டியே ஆகணும், ஆபரேஷன் செய்யறமாதிரி.

வேலைக்கு அமர்ந்த புதிதில், என் அறியாமையில் முதல் ஞாயிற்றுக்கிழமை நான் வேலைக்குப் போக வில்லை. அடுத்தநாள் போனதும், "ஒஹோ, நீங்கள் எல்லாம் Gazetted ஆபீஸர்களா? ஞாயிற்றுக்கிழமை வரமாட்டீங்களாக்கும்!”

சரி, நான் வேலையை உதறிவிட்டு மன்னிப்பாட்டி சாவுக்குப் போயிருந்தாலும் அவள் ஆவி சம்மதித்திருக் காது. அவளுடைய கடைசி மூச்சு என்னைக் கண்டிக்கத் திரும்பினாலும் திரும்பியிருக்கும்.

"அட அசடே! இப்படிப் பொறுப்பில்லாமல் இருப்பையா? குடும்பம் என்னாவறது?”

“எனக்காக வந்தையா? நன்னாயிருக்கு! என்னைப் பார்க்காட்டால்தான் என்ன ? நான் போக வேண்டி யவள்தானே!"

மானேஜர் படபடவெனப் பேசிவிட்டானே ஒழிய, ஒரு கால், அரைமணி நேரம் பொறுத்துத் தானே என்னைப் போகச் சொல்லிவிட்டான். ஆனால் வண்டி கிடைத்து நான் ஊர் போய்ச் சேர்வதற்குள், மன்னிக்கு நெருப்பு வைத்தாகிவிட்டது. அவள் கதை முடிந்து நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாகின்றன.

சில சமயங்களில் சூழ்நிலையின் அலுப்பில் நொந்து போகையில் அவள் நினைப்பு எழும்.

(அலைபாயும் மனந்தானே!)

இந்த வீட்டில், அந்த தடயுடல் கெடுபிடிக்காரர் கள், அசாதாரணிகள், தாங்கள் தனி என்ற இறுமாப்புக் கொண்டவர்கள், அடாவடிகள் - இந்தப் பட்டினிக் கிராக்கி வீட்டில், ஸ்ர்வ ஸாது மன்னி எப்படி மாட்டிக் கொண்டாள்? இந்த நிலை அவளுக்குத் தேவையில்லை. 'ஆஹா ஒஹோ' என்று இல்லாவிடினும் அவள் பிறந்த வீட்டில் பசி கிடையாது. தகப்பனார் கனம் பண்ணினவர். ப்ரவசனம் வேறு சொன்னார். இதில் வருமானம் தவிர, கொஞ்சம் பூஸ்திதியும் இருந்தது. கூடப் பிறந்தவன் ஒரு அண்ணாவுடன் சரி.

ஏன்? ஏன்? ஏன்?

இது எத்தனையாவது முறை சொல்கிறேனோ? ஏன்? ஏது? எப்படி? இந்தக் கேள்விகளுக்கு அவள் காலத்தில் சிறு தலைகளுக்கு உரிமை கிடையாது. ‘எல்லாம் எங்களுக்குத் தெரியும்! எல்லாம் அதில் முடிந்துபோய் விட்டது. அவர்கள் தீர்மானித்து முடித்ததுதான். ஊர்கள் கிட்டக் கிட்ட அவற்றில் முடங்கிய உறவுகள் ஆயிரம், இங்கே தொட்டு அங்கே தொட்டு தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டு ஏற்கெனவே ஒரு முடிச்சு எங்கேனும் இருக்கும். உறவுகள் விட்டுப் போக முடியாது. அம்முவாத்துச் சம்பந்தம் லேசில் கிடைக்கக் கூடியதா? ராஜ சம்பந்தம் அல்லவா?

மன்னி இந்த வீட்டில் புகுகையில் அவளுக்கு வயது எட்டோ, ஒன்பதோ? தாத்தாவுக்குப் பதினாறு. அவர் பொடி போட ஆரம்பித்தாகிவிட்டது. பாடவும் ஆரம்பித்துவிட்டார்.

கஷ்டம் தெரியாமல் வாழ்ந்துவிட்டுச் சோறு துணிக்கு லாட்டரி அடிக்கும் இடத்துக்கு திடீரென மாறியதும் குழந்தைக்கு எப்படி இருக்கும்? அவரவர் நினைத்துப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

அண்ணா அடிக்கடி சொல்வார்: "இந்த மன்னி யிருக்கிறாளே, அவள் தலையில் பிரம்மா எல்லோருக்கும்போல் எழுதவில்லை. என்ன ஆயுதம் கொண்டு எழுதினானோ? இப்படியும் ஒரு பரம சூன்ய ஜாதகம் உண்டா?” என்று வேதனையில் அங்கலாய்ப்பார். "அம்முவாத்துச் 'சாப்பா வேறு விழுந்தபின் விமோசன மேது?”

ஆனால் மன்னி என்ன நினைத்தாள்? அவள் குழந்தைப் பருவத்தில் நினைத்ததைக் குறிக்கவில்லை.

போகப் போக.

கண்ணதாசன் பாடல் அற்புதமாக ஆரம்பிக்கின்றது.

இரண்டு மனம் வேண்டும்

நினைத்து வாட ஒன்று

மறந்து வாழ ஒன்று

ஆனால், நினைப்பதற்கே மன்னியிடம் மனம் என்று ஒன்று இருந்ததோ?

பெண்களுக்கு மானத்தைப் பற்றி மாறி மாறி உபதேசம் செய்வதே ஒழிய, அவர்களுடைய மனத்தைப் பற்றி ஆண்களே ஆகட்டும், வெளிப்படையாகக் காட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை.

அடுக்குள்தான் உன் ஆலயம்.

அடுப்புதான் உன் வழிபாடு.

கல்லானாலும் கணவன்.

புல்லானாலும் புருஷன்.

உனக்கு வாய்த்ததுதான் உன் வாழ்க்கைக்கு உபதேசம்.

மணமாகும் வரை பெற்றோர், மணம் ஆனபின் புக்ககம், கணவனுக்குப் பின் பிள்ளைகள் - ஆகவே அண்டிப் பிழைப்புதான். உன் வாழ்வின் வழி, நோக்கம், விடிவு முடிவு எல்லாமே - இந்த அடிப்படையில்தான் சொல்லிலும் செயலிலும் பெண்டிருக்கு அந்தக் காலத்து புத்திமதிகள்,

உளைமேல் நடக்கிறேன். எனக்கே தெரிகிறது. எந்த நிமிடம் அடி பிசகிச் சேற்றில் விழுந்து மூழ்கி விடுவேனோ? பயமாயிருக்கிறது.

பெண்டிர் ஆண்டு கொண்டாடி ஆகிவிட்டது.

பாரதி நூற்றாண்டு விழா நடந்துகொண்டிருக்கிறது.

மேற்கண்டதைப் படித்து, புதுமைப்பெண் படை என்மேல் வெகுண்டு எழும் பயத்தில் ஒடுங்குகிறேன். நான் என் செய்ய? யார் கட்சியும் நான் பேசவில்லை. அந்நாள் சமுதாயம் பெண்டிருக்கு மனமே இல்லாமல் போக அடித்தது நியாயம் என்று கூறவில்லை. அந்நாளின் நடப்பு இப்படி என்று சொல்கிறேன். கூடவே அந்தச் சாக்கில் இதையும் சொல்ல வேண்டி யிருக்கிறது. மன்னியின் சூழ்நிலையில், அவளுக்கு மனம் என்று ஒன்று இருந்தால் நினைத்து வாடிக்கொண்டே யிருக்க வேண்டியதுதான். மனம் அவளுக்குக் கட்டுப்படி யாகாத சொகுசு. அவளுக்குள் இருந்ததற்குள். நல்ல வேளை, அதையும் அவள் அறியாததுதான்.

வீட்டுக்குப் புதுப்பெண் வந்தவுடனே, அவளை அடுக்குள்ளில் அடைத்தார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. அம்முவினம் பெண்களைச் சிறை வைக்கும் குடும்பமல்ல. அது அவர்கள் இயற்கை அல்ல. ஆனால் வந்தவளுக்குத் தனிச் சலுகை கிடைத்திருக்கும் என்கிற அர்த்தம் அல்ல. தனிக் கனிவும் கிடைத்திருக் காது. பத்தோடு பதினொன்று - தப்பு, குடும்பத்தில் அவள் வந்தபோது எத்தனை எத்தனை பேர் என்று எனக்குத் தெரியாது. எல்லோருக்கும் வழங்கப்படும் பொதுப்படை அலட்சியத்தில், தன் நாமதேயமற்று, (ஏ குட்டீ !' அல்லது) “ஏ , கிருஷ்ண சாஸ்திரிகள் பெண்ணே!” - கண்டிப்பாக அவளுக்கு இட்ட பெயர் ஸ்ரீதாலக்ஷமி என்று அழைக்கவில்லை. அது நிச்சயம். அந்தக் காலத்துப் பாணி அப்படி) வளைய வந்திருப்பாள்.

வந்த புதிதில் மன்னிக்கு இந்தக் கூட்டத்தில் ஸல்லோ புல்லோ என்று சந்தோஷமாகத்தான் இருந் திருக்கும். பிறந்த வீட்டில் அவள் தாயில்லாக் குழந்தை. இந்தக் கலகலப்பு ஏன் பிடிக்காது? ஆனால் போகப் போக, ஒருநாள் குழம்பு தீர்ந்துபோச்சு, ஒருவேளை சாதம் தீர்ந்துபோச்சு, ஒருநாள் மூலைப் பழையதும் காலி’ என்கிற நிலைமை அடிக்கடி நேர, பசி தாங்காமல் அழுகை வருகையில் யாரிடம் போய்ச் சொல்லிக் கொள்ள முடியும்?

நாலு மாதம், ஆறு மாதங்களுக்கொரு முறை பார்க்க வரும் தந்தையோடு தனியாகப் பேச, இடமும் சமயமும் தேட முடியுமா? அப்படியே அவசரமாக இரண்டு வார்த்தைகளுக்கு இடம் கிடைத்தாலும் தந்தையிடம் ஆதரவு கிடைக்குமா?

“எது எப்படியிருந்தாலும் அம்மா, இனி இதுதான் உன் இடம். பிறந்த வீட்டு மண்டை தரையில் உருளாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உன் பொறுப்பு. எல்லாம் போகப் போகச் சரியாப் போயிடும்.”

அப்படித்தான் ஆறுதல் சொல்வார்கள்.

தற்செயலாகச் சம்பந்தி அம்மாள் அந்தப் பக்கம் வந்துவிட்டால், மிகவும் பணிவுடன், "குழந்தை மனம் கோணாமல் நடந்துகொள்கிறாளா? அவள் உங்கள் வீட்டுச் சொத்து. அப்படி வாய்த்தது எங்கள் பாக்கியம்.”

சம்பந்தி அம்மாள் அதற்கு பதில் சொல்வாளா? உதட்டைப் பிதுக்கிக்கொண்டு ஒரு புன்னகை, அதற்கு என்ன அர்த்தம்?

இந்த நாளுக்கு இது சினிமா டயலாக்.

அந்த நாளின் யதார்த்தத்தில் பாஷையே இதுதான்; புடித்துச் சொல்கிறேன்.

"போகப் போகச் சரியாப் போயிடும்."

என்ன பொன்னான வார்த்தைகள், மருந்து வார்த்தைகள்! சிந்திக்கச் சிந்திக்க ஒளஷதத்தின் ஸ்புடத் தினின்று ஏதோ அகிற்புகை சூழ்ந்து அதில் மணம் மிதக்கிறது.

வெறும் ஆறுதல் வார்த்தைகளா அவை? gigsLDIT வின் தேடலின் முடிவே அதில் அடங்கியிருப்பதாக ஒரு சமயம் தோன்றுகிறது. சத்தியத்தின் நீரோட்டம் அதில் தெரிகின்றது. சீடனுக்கு குருவின் உபதேசங்கள் ஏதேதோ ஜிகினா காட்டுகின்றன.

பொறு.

காத்திரு.

அடக்கு.

வளைந்து கொடு.

அது அது அதன் வேளையில்தான் வரும்.

உன்னிடமே இருப்பதை

எங்கே தேடிக்கொண்டிருக்கிறாய்?

இன்னும் ஏதோ தொடுவானத்துக்கு விரிவு கொடுத்துக் கொண்டே போகும் mystic வார்த்தைகள்.

போகப் போகச் சரியாப் போயிடும்.

ஆம், எது சரியாகப் போகவில்லை?

மன்னிக்கு - அப்போது அவள் இன்னும் மன்னி அல்ல. சீதாலக்ஷமிக்கு - அவள் சீதாலகஷ்மியும் அல்ல. சரி, குட்டிக்கு, இந்த வீட்டுப் பட்டினிகள் பழகிவிட வில்லையா? அரைத்தவளுக்கு ஆட்டுக்கல், சமைத்த வளுக்குச் சட்டி - இதுதான் குடும்பம். குடும்பம் ஒரு பாற்கடல்.

மனத்துடன் பசிவயிறு சமாதானமாகி விடவில்லை. சமாதானம் என்றால், விலக்க முடியாததை அநுபவித்தே யாக வேண்டும் என்கிற நிலை.

வாழ்க்கையில் வயிறு ஒர் அத்தியாயம், வயிறு மட்டும் வாழ்க்கை அல்ல.

அக்கிரமங்களுக்கு அத்தியாயம் ஒண்ணா ரெண்டா? கண்ணைத் திறந்துகொண்டே அவற்றில் வாழ்ந்துகொண்டு மிஞ்சவில்லையா? மன்னி அப்படி வாழ்ந்து மிஞ்சா விட்டால் நான் ஏது? அவள் வழிப் பேரன் அவனும் இதோ தன் ஒடத்துக்குக் காத்திருக்கிறான்.

Life marches on.

குழந்தை குமரியாகி, தன் மலர்ச்சியின் புது விழிப்பில், தன் மன்னவனைக் காண்கையில் உள்ளூர உவகை பொங்கியிருக்க மாட்டாளா?

ஆனால் இந்த ராமசுவாமிக்கு இந்தச் சீதாலட்சுமி யிடம் அதே பரஸ்பரம் நேர்ந்ததோ ?

தோற்றத்தைக் கண்டு ஏமாறாதே.

நிறம் பார்க்காதே, குணம் பார்.

பார்யா ரூபவதி சத்ரு.

இந்தக் கோட்பாடுகளின் கண்களுடன், ராம சுவாமிக்குச் சீதாலகழ்மியைப் பார்க்க முடிந்ததா? அவர் ஏற்பாடு பண்ணிக்கொண்ட லக்ஷமியைத்தான் கேட்க வேண்டும். அவரையே கேட்டால் –

"நிகரில்லா நேசமடி இது

மோசம் மோகம் எனக் கேதுக்கடி?”

என்று கவி பாடியிருப்பாரா?

மன்னியைக் கேட்டிருந்தால் எதுவும் சொல்லி யிருக்கமாட்டாள். மெளனமாய் அநுபவிப்பதில் அவள் வல்லவள் இல்லை. மெளனம் அவள் பாஷை அல்ல. அவள் சதை.

ராமசுவாமி.

சீதாலக்ஷமி.

பெயரோடு ஒற்றுமை சரி.

ஆனால் ஜோடி சேர்க்கும் பெரியவர்களுக்கு இந்தப் பொருத்தம் ஒன்றே போதும். இதுவே மாபெரும் சகுனம். உடனே அடுத்துச் சகுனம் காட்டும் பதவி.

மன்னிப் பாட்டியை நான் நினைப்போடு பார்க்கும் போது எனக்கு வயது ஐந்து. அவள் அறுபதுக்குள் நுழைந்துகொண்டிருந்தாள். நெற்றியில் தகடு அளவில் பிரகாசித்த குங்குமத்தையும் வெண்பட்டுப் போல் மின்னிய கூந்தலையும் தவிரத் தனியாக எனக்கு வேறு தெரியும் வயது அல்ல அப்போ நாளடைவில் உப்பும் தண்ணியும் காரமும் உடம்பில் எனக்கு ஊற ஊற அவளைத் தனியாகவும் தாத்தாவோடும் சேர்ந்து பார்க்கையிலும் பிறர் சொல்வதைக் கேட்பதையும் வைத்துக்கொண்டு அவள் தன் சிறிய வயதினில் ஆகிலும் சரி - உற்ற வயதிலும் சரி எப்படி இருந்திருப் பாள் என்று அனுமானிக்க முடிந்தது. என் பாட்டியைப் பற்றி வேறு ஏதும் சொல்ல நான் தயாராயில்லை. இது பாற்கடலா? அக்கப்போரா? அவள் கூன், குருடு, செவிடு, ஊனம் இல்லை.

ஒன்று மட்டும் சொல்லி நிறுத்திக்கொள்கிறேன். தோற்றத்தைப் பொறுத்தவரை அம்முவாத்து இனத்துக்கு நேர் எதிரிடை. படிப்பா, எழுத்தா, வாஸனை கிடை யாது. சரியான உழவு மாடு. இந்தச் சம்சாரத்துக்கு அவளைப் போல உழவுமாடுதானே சரிப்படும்.

கல்யாணங்கள் சுவர்க்கத்தில் ஏற்பாடாகின்றன.

காவல்கள் இங்கு எப்படியோ ஆகிவிடுகின்றன. வியப்பும் அதில்தானே இருக்கிறது. "போகப் போக எல்லாம் சரியாப் போயிடும்."

சண்டையோ, பூசலோ, உதையோ, குத்தோ, ஆசைக் கிழத்தி லக்ஷமியோ இத்தனை நடுவிலும் சப்தரிஷி, அமிர்தகடேசன், அகிலாண்டம், ஸ்ரீமதி, கார்த்திகேயன் தவிர இவர்களுக்கிடையிலோ முன்னாலோ கணக்குத் தீர்ந்துவிட்டவை இரண்டு.

கொழுந்தன் மைத்துனன்மார்களுக்குக் கல்யாண மாகி, ஒரகத்திகள் ஒவ்வொருவராய்ச் சேரச் சேர, "மன்னி" என்று அழைத்து, ஊருக்கே மன்னியாகி விட்டாள். பாட்டி எங்களுக்கும் மன்னியான கதை இதுதான்.

குடும்பம் எப்போது உடைந்தது? உடைந்ததா? அத்தியாவசியத்தால் பிரிந்ததா? நாஸுக்கில் பிரிந்ததா? மன்னி மூடின கதவு. எதற்கும் காரணம் மன்னியில்லை. அதனால் அவளுக்குத் தெரியாது. எல்லாமும் இருந் திருக்கும். சகோதரர்கள் ஆறுபேரும் ஆறு திக்குகள் ஆச்சே!

இத்தனை பேர் சேர்ந்து இருந்த சமயத்திலும், பிரிந்து போன பின்னர், நாள் கிழமையென்று, ஒன்று சேரும் சமயத்திலும் உழைப்பு என்னவோ மன்னியுடையது தான். விடிகாலை சாணி தெளிக்க எழுந்தாளெனில் இரவு, இருக்கிற அழுக்கு, கல்லிட்டுவிட்ட தலையணை யில் தலை சாய்க்க மணி பத்து, பதினொன்றாகிவிடும். வாரத்துக்கு இரு முறையாகினும் மாப்பிள்ளை வாத்தியார் விகாரி போய் வந்து இரவு பன்னிரண்டு மணிக்குக் கதவைத் தட்டினால், எழுந்து கதவைத் திறந்து அவருக்குச் சாதம் போட்டு, பிறகு தான் சாப்பிட்டுவிட்டு இடையில் தேக அலுப்பில் முனகி னால் 'கும்பா கும்மா - ராக்கூத்து இன்னும் நீடிக்கும்.

அபூர்வ இடைவேளைகளில் மன்னி பிறந்தகமும் போய் வருவாள். இதோ வாளாடி - தானே! காலையில் போனால் மாலையில் அநாயாசமாகத் திரும்பி விடலாம். நான் ரயிலை மனத்தில் வைத்துக்கொண்டு சொல்லவில்லை.

அந்தநாள் எல்லாமே கால்நடைதான். திரும்பி வரும்போது இடுப்பில் மூட்டைகளோடுதான் வருவாள்.

அரிசி, பருப்பு, உளுந்து, மிளகுப்பொடி, மூட்டைமேல் நடுவழியில் தெரிந்தவர் கொடுத்த வாழைக்காய், கீரைத்தண்டு, குடும்பம் இரண்டுவேளை பசியாமல் சாப்பிடும் வலுவில்தான் மூட்டை இருக்கும்.

மன்னிக்கு அப்பா இருந்தவரை இந்தச் சீர் நடந்து கொண்டிருந்தது. அண்ணனுக்கும் தங்கைக்கும் என்றைக்குமே ஒற்றுமை இருந்ததில்லை.

“என்னடா நீ குடுமியோடு பிறந்தால், நான் கொண்டையோடு பிறந்தேன். உனக்கு இருக்கும் உரிமை எனக்கும் உண்டு!” என்று மன்னி சண்டை போடு வாளாம். இது என் தகப்பனாரின் அலாதிக் கிண்டல் கதையா? உண்மையிலேயே அப்படித்தானா? மன்னிக் குத்தான் வெளிச்சம். தகப்பனார் காலமாகிவிட்ட பின் சுப்பராமன் உள்ளே நுழையக்கூட விடவில்லை. அப்புறம் மன்னிக்குப் பிறந்த வீட்டுப் பிரமேயமே அற்றுப்போயிற்று.

அண்ணனும் பிறகு விளங்கவில்லை. ஏனோ போண்டியாகிவிட்டான். அதோடு அந்த அத்தியாயம் சரி.

நான் அறிந்த மன்னிப் பாட்டிக்குப் பற்கள் ஒன்றிரண்டு தவிர, மற்றவை விழுந்து விட்டன. சிரித்தால் முகம் ரப்பர் பொம்மை மாதிரி சுருங்கும். அழுகிறாளா? சிரிக்கிறாளா? உண்மையிலேயே சந்தேகம் தோன்றும். ஏன் அழப்போகிறாள்? ஆனால், “மன்னி மன்னி, அழாதேயுங்கோ " என்று பேரக்குழந்தைகள் கேலி பண்ணப் பண்ண, முகம் இன்னும் சவுங்கும். அதுவே எங்களுக்கு ஒரு பெரிய தமாஷ். அந்த முகம் எங்களுக்கு அலுக்காது.

மன்னி சமையல் நளபாகம் தோற்றது. நாளுக்கு நாள் தேவாமிர்தம்; ஒரு உப்பு கூட மினுக்கும். ஆனால் அதுவே தனி ருசி.

“சப்தரிஷி சரிஞ்சு போயிட்டான். அவனோடு நான் இருந்தால் அவனுக்குச் சிரமந்தானே?” என்று சொல்ல மாட்டாள். ஆனால் அதுதான் அவள் எண்ணம். ஆகையால் அவள் நாட்கள் பெரும்பாலும் இரண்டாம் பிள்ளையிடமே கழிந்தன. தவிர, சித்தி நோஞ்சான். சப்தரிஷி பிள்ளைகள் இங்கேதான் படிக்கின்றன. அமிர்தகடேசனுக்கு மூன்று பெண்கள். சம்சாரமும் வேலையும் இங்கேதான். கூட நம்மால் முடிந்தவரை பார்வதிக்கு ஒத்தாசையாக இங்கே இருப்போம்!”

மனம் அங்கே, இடம் இங்கே.

நோஞ்சான் சித்தி நாளடைவில் நோயாளி ஆகிவிட்டாள். வலது முழங்காலில் முட்டியில் வீக்கம் கண்டு எந்தச் சிகிச்சைக்கும் மசியவில்லை. அப்புறம் ஒருநாள் வாய் வைத்துக்கொண்டு, முளை கண்டு, புரையோடிப் படுத்த படுக்கையாகிவிட்டாள். அதற்குக் கான்சர் எனும் பெயர் அப்போது கண்டுபிடிக்கப் படவில்லை. அல்லது டாக்டர்களிடம் பெயர் 'குட்டாக இருந்ததோ என்னவோ? நோய்க்குப் பேரே தெரியாத போது, மருந்து ஏது? டாக்டர் இருட்டில் குருட்டாண்டி.

அப்போது நாங்கள் திருவட்டீஸ்வரன் பேட்டை கோயில் குளத்துக்கெதிர் நாகப் பையர் சந்தில் குடியிருந்தோம். கீழே மூன்று குடித்தனங்கள். மாடியில் ஒன்று. இன்னும் மின்சாரமும் டிரெயினேஜ"ம் வராத நாட்கள். இந்த வீடு என் வாழ்க்கையில் பல சம்பவங் களுக்கு அரங்க மேடை. இதில் மன்னி நிலை என்ன?

தேறாத நோயில் படுக்கையாகி, நாட்டுப்பெண், மாமியார் ஆகிவிட்டாள். அவளுக்குப் பணிவிடையில் மாமியார் மருமகளாகிவிட்டாள். வாழ்க்கையின் கேலி எப்படி? விதியின் மோனச் சிரிப்பு எப்பவும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது நம் செவிக்கு. ஒட்டுக் கேட்டால் கேட்கும்.

விதவைக் கோலத்தில், வயது எழுபதை நெருங்கிக் கொண்டு, என் முழு பிரக்ஞையில் அழுத்தக் கோடாக விழுந்த மன்னி இவள்தான்.

சித்தப்பா குழந்தைகளுக்கு இரண்டுங்கெட்டான் வயதுகள், பத்து, ஏழு, நாலு இதுபோல். நானும் என் தம்பியும் வேறு. சித்தப்பா கடும் ஆஸ்துமாக்காரர். இழுக்க ஆரம்பித்துவிட்டால் எண்ணெய் காணா கில், கீச் கீச் பயமாய்க்கூட இருக்கும். விலாவில் இழுத்து இழுத்து, மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு, கை மார்மேல் முஷ்டியாகி நடப்பார். அவருக்கு அதிலேயே உடல் கூனிவிட்டது. அதற்குரிய மருந்துப் பொடியைப் புகை பிடித்துக் கபம் கழன்று மூச்சு கொஞ்சம் சுவா தீனப்படுவதற்குள் அவர் படும் வேதனை பெரிதா ? பார்ப்பவர் வேதனை பெரிதா? தாய் படும் வேதனை பெரிதா ? நள்ளிரவில் தாக்குதல் வந்துவிட்டால், பயங்கரம் கேட்க வேண்டாம். பனிக்காலத்தில் நாள் கணக்கில் சித்தப்பா குளியலுக்கு முழுக்குத்தான்.

ஆகவே மன்னி பாடு என்ன என்று அறிவதற்கு இவ்வளவு விபரம்.

மருமகளின் காலைக்கடன்கள் - எடுப்பு, குளிப்பாட்டு, படுக்கை மாற்றல், உணவு, மருந்து கவனித்தல் - மருமகளுக்குச் செவிலித்தாய்.

சித்தப்பா குழந்தைகள் - குளிப்பாட்டல், அவர்கள் உடை மாற்றல் இத்யாதி குழந்தைகளுக்குச் செவிலித் தாய்.

நாங்கள், நானும் என் தம்பியும் வேறு, படித்துக் கொண்டு இருக்கிறோம்.

மகனுக்கு வேளை பொழுது பாராமல், தாக்குதல் வரும் - மகனுக்குச் செவிலித்தாய்.

தவிர சமையல் - இதர, வீட்டுக் காரியங்கள்.

வயது எழுபது.

"மன்னி, வாஸ்தவந்தான். பலகாரத்துக்கு இட்டிலி மல்லிப்பூவா வார்த்திருக்கு. மிளகாய்ப் பொடியிருக்கு. மத்தியானச் சாம்பார் இருக்கு. சட்னி வேறே அரைச் சிருப்பே. இருந்தாலும், தேங்காய் வாங்க வக்கில்லாமல் லால் குடியில் உன் கையால் வெறுமனே பச்சை மிளகாயும் உப்புக்கல்லையும் சேர்த்து இழைச்சு அந்த அம்மிக்கல் சூட்டோடு கொண்டுவந்து இட்லிமேல் தடவுவையே, அதென்னவோ இப்போ ஞாபகம் வந்துடுத்து. இதெல்லாம் அதுக்கு இணையாகுமோ? கறிகாய்க் கூடையில் எலுமிச்சம் பழம் ஒண்ணு பார்த்தேன். இழைச்ச பச்சை மிளகாய் மேல் ஒரு சொட்டுப் பிழிஞ்சு, கடுகையும் தாளிச்சுட்டா. ஹூம்!"

உடனே, மன்னி, மண்ணெண்ணெய் கைவிளக்கு வெளிச்சத்தில் பச்சை மிளகாயும் உப்பும் சேர்த்து இழை இழையென்று இழைத்து, எலுமிச்சம்பழம் பிழிந்து, கடுகு தாளித்துக்கொண்டு வந்து இட்டிலி மேல் இடுவாள்.

“மன்னி, உன்னை நான் பண்ணச் சொன்னேனா? என்னவோ பழைய நாள் கதையைச் சொன்னேன். ஏற்கெனவே, மிளகாய்ப்பொடி, மத்தியான சாம்பார், இப்போ தேங்காய்ச் சட்டினி. இது போறாதா ?”

மன்னி, நீங்கள் மனுஷியா? மாடா ? மெஷினா?

மன்னி பழங்காலக் கட்டை இல்லாவிடில், அந்த வயதில், அந்தச் சுமைக்கு ஈடு கொடுக்க முடியுமா? இந்தக் காலத்து நாரிமணிகள் அந்த உழைப்பை நினைத்துக்கூடப் பார்க்க முடியுமா?

மன்னி பாதங்களில் நொத நொத வென்று சேற்றுப்புண். காலில்தான் வந்து கண்டிருக்கிறோம். கையில் சேற்றுப்புண் யாரேனும் பார்த்திருக்கிறீர்களோ? விரல்களின் இடுக்குச் சதையை அரித்துவிட்ட இடத்தில் ஒரு குழிப்புண்ணே விழுந்திருந்தது.

மன்னி கையால் சாப்பிடவே வெறுப்பாயிருக்கும். ஆனால் வேறு வழி? சமையல்காரி தனியாகப் போட முடியுமா?

சித்திக்குக் கட்டுக் கட்ட வரும் வைத்தியன் அல்லது கம்பவுண்டர், "என்ன பாட்டி, உங்கள் கையையும் காலையும் இப்பிடி வெச்சுக்கிட்டு இருந்தால், மத்தவங் களுக்கு நீங்கள் செய்யறது எப்பிடி?” என்று அவனாகப் பார்த்து மருந்து கொடுத்தாலாச்சு, தா னாகக் கேட்பாளா? மாட்டாள். ரோசம் காரணமல்ல. ஏற்கெனவே அம்பி கஷ்டப்பட்டுண்டிருக்கான். நான் வேறு செலவு வைக்கணுமா? இதுதான் அவள் போக்கு.

அல்லது கேட்கவே தோன்றாது.

சித்திக்கு இனி விமோசனமே இல்லை. அவளுக்கே அது தெரிந்துவிட்டது. குடித்தனக்காரர்கள் ஒருவருக் கொருவர் கிசுகிசுத்தனர். யார் வத்தி வைத்தனரோ, வீட்டுக்காரன் ஒருநாள் வந்து, எங்கள் கட்டுக்குள் வந்ததும் அவனுக்கு மூக்குத் தண்டு சுருங்கிற்று - சித்தப்பாவைத் தனியாக அழைத்துக்கொண்டு போய், அவரோடு கிசுகிசுத்தான்.

சித்தப்பா சித்தி, குழந்தைகளை மன்னியோடு ஐயன்பேட்டைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டார். அது கிராமாந்தரம். அங்கே கேட்பார் கிடையாது. உதவியாகக்கூட இருப்பார்கள். அம்மா இருந்தாள். வேலைக்காரி இருந்தாள்.

மன்னிக்குக் கையிலும் காலிலும் சேற்றுப்புண் அத்தரதையாக மறைந்துபோயிற்று - வந்ததா என்று சந்தேகப்படும்படி உடம்பில் சதை பிடித்தது. பழங் காலத்துக் கட்டை, இப்போதுகூட அதற்குத் துளிர்க்கச் சக்தி இருந்தது.

இறக்கையிலும்கூட, சாக்குக்கேனும் ஏதேனும் நோய் என்று மன்னிக்குக் காணவில்லை. வயது, அங்கங்கள் ஒய்வு, படிப்படியாக ஒவ்வொன்றாய்ப் புலன்களின் ஒடுங்கல். கடைசிவரை உள் நினைவு. அதுவும் அதன் வேளையில், எண்ணெய் காய்ந்த திரிபோல் அணைந்து போயிற்று. வியாதிக்கும் உடலுக்கும் போராட்டம் என்கிற நிலையே இல்லை. பெட்ரோல் தீர்ந்துவிட்டது. வண்டி நின்றுவிட்டது. மன்னி விடுதலை அடைந்தாள்.

இந்தக் கட்டத்தில் எங்கள் மன்னியை இப்படி விட எனக்கு மனமில்லை. அவள் மஞ்சளும் குங்குமுமாக இருந்த வருடங்களுக்குச் சற்று முன் இழுத்துச் செல்கிறேன். சென்னையில், ராயப்பேட்டை பெருமாள் கோயில் தெருவில் ஒரு வீட்டில், பின்கட்டுப் பூரா வாடகைக்கு எடுத்துக்கொண்டு, அண்ணா சித்தப்பா கூட்டுக் குடும்பம். ரூ 15-க்குக் கடல்போல் இடம். ஆஸ்துமாக் கொடுமையில் கிராமத்துக்குத் தள்ளப்படும் முன் அண்ணாவின் சம்பாதனையின் பொற்காலம் அது. எங்கள் குட்டி சித்தப்பா பையன், நாங்கள் குழந்தைகள், குடும்பம் பச்சையாக வாழ்ந்த காலம்; மன்னியின் சந்தோஷ காலமும் அதுதான்.

மன்னியின் சந்தோஷந்தான் என்ன? ராமஜபம். ராம ராம ராம. அப்புறம் 'ஆபதாமப ஹத்தாரம். அப்புறம் ஒன்றிரண்டு ஸம்ஸ்கிருத வாக்கியத் தொடர். அவைகளும் ராம தோத்திரந்தான். தன் தந்தையிடம் கற்றுக்கொண்டதோ என்னவோ. ஒருவாறு அவைகளின் நிரடல்களினின்று, தட்டுத்தடுமாறி மீள்வாள். அப்புறம் தாத்தா இயற்றிய பெருந்திரு ஸ்தோத்திரம்.

ஸ்நானம் பண்ணிவிட்டு, உட்கார்ந்தாளெனில் குறைந்தது மூணு மணிநேரம் ஆகும். அப்புறம் சாப்பாடு. அந்தக் காலத்து மனிதர்களின் சாப்பாட்டுக்கும் இப்போதைய கொரிப்புக்கும் சம்பந்தமே இல்லை. ஒரு காலை நீட்டிக்கொண்டு, மெதுவாக - பல் வேறு இல்லை - வெண்கலப் பானை காலியாகும். அப்படிச் சாப்பிட்டதுதான் அவளுக்குப் பின்னால் அவவளவு தாங்க உரம் தந்தது.

இரண்டு வேளை திடமான சாப்பாடு. போதும். விரதம், பட்டினி, பலகாரப் பாட்டி அல்லள். கோயில், குளம், ஸ்தலம் என்று தேடி அலைபவள் அல்லள்.

பிற்பகலில் இருந்தால் நொறுக்குத் தீனி. அதுவும் அவளுக்கு அவசியமில்லை. பொக்கை வாயில் மென்று அரைத்து உள்ளே செலுத்துவதற்குள் பேரக்குழந்தைகள்,

நாங்கள்தான், எங்கள் பங்கை எப்பவோ காலி பண்ணி விட்டு அவள் வாயைப் பார்த்துக்கொண்டு சுற்றி உட்கார்ந்திருக்கோமே! பிடுங்கித் தின்றுவிடுவோம்.

இரவு எங்களுக்குக் கதை சொல்வாள். தாத்தா மாதிரி காட்சிகளைத் தத்ரூபமாகக் கண்ணெதிரில் நிறுத்தத் தெரியாவிட்டாலும் நன்றாகச் சொல்வாள். அவள் கூறும் கதை கேட்டுக் கதை அலுத்த குழந்தை ஏது? "நான் பிறந்த கதை சொல்லவா? வளர்ந்த கதை சொல்லவா? பூந்தமல்லி செட்டி வீடு புகுந்த கதை சொல்லவா?" இந்த வசனத்துக்கு அர்த்தம் எங்களுக்குத் தெரியாது. அவளுக்கும் தெரியாது. ஆனால் இந்த நெற்றிக் குட்டலுடன்தான் அவள் கதை ஆரம்பிக்கும். அவளுடைய ராமஜபம், வழிபாடு, சொந்த ஆர்வத்தி னின்று எழுந்ததா? சொல்ல முடியாது. நல்லது என்று பெரியவர்கள் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் சொன்னதை, செய்ததை நாமும் செய்வோம்.

எங்கள் பரீட்சைகளுக்கோ, பின்னால் வேலை தேடிச் சென்றபோதோ, அவள் அம்பாளை வேண்டிக் கொள்ளும் விதத்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

"பெருந்திருவே, குழந்தைகளின் பேனா முள்ளில் நின்று, அவாளைப் பாஸ் பண்ணவை."

"பெருந்திருவே, மானேஜர் மனசில் புகுந்து, குழந்தை களுக்கு வேலை கிடைக்கும்படிப் பண்ணு."

பேனா முள்ளில் நின்று - ஏதேது, மன்னியா? இல்லை, கம்பன் வீட்டுக் கட்டுத்தறியா?

நிஜமாகவே மன்னிப்பாட்டி ஒன்றும் அறியா தவளா? எல்லாம் தெரிந்தவளா? புதிரே இல்லாத இடத்தில் புதிரைத் தேடுகிறேனா?

உழைப்பும், கஷ்டமும், சோதனைகளும் ஆயுள் தண்டனையாக அவள் விதியின் தீர்ப்பாகி விட்டபின், அந்த நிலைமையுடன் சமாதானமாகிவிட்ட பலனாக, பொறை அவள்மேல் பூஷணமாக இறங்கிவிட்டதா? பிறகு அதுவே கழுத்தில் விழுந்த மாலை கழற்ற முடிய வில்லையா? இதுபோன்ற சகிப்புத் தன்மையைத்தான் ஆண்டவன், ஜன்மாவிடம் எதிர்பார்க்கிறானா? மன்னி மஹிமைதான் என்ன !

இப்போது தெரிகிறது. அவளுடைய ஸர்வ ஸாதா ரணந்தான் - அதுதான் இந்தக் குடும்பத்தின் அத்தனை புத்திசாலிகள், கெட்டிக்காரர்களின் 'குட்டுகளுக்கும் முட்டல்களுக்கும் முட்டுக் கொடுத்துக் குடும்பத்தை வழிப்படுத்தியிருக்கிறது.

மன்னியை மனத்தில் வைத்துக்கொண்டு நான் பேசும் இந்தச் சர்வ சாதாரண நிலையில், மக்குக்கும், மஹானுக்கும் வித்தியாசம் சாத்தியம் இல்லை.

'பெரியோரைப் புகழ்வோம். இந்தச் சங்கல்ப ரீதியில், இந்த வரலாற்றில் இதுவரை வந்துபோனவர்கள், இனிமேல் வரப்போகிறவர்கள், எல்லாரைக் காட்டிலும் மன்னிதான் மிகப் பெரியவள்.

சிந்திக்கச் சிந்திக்க இந்த எண்ணம்தான் உறுதி யாகிறது.

------------------

"https://ta.wikisource.org/w/index.php?title=பாற்கடல்/அத்தியாயம்-9&oldid=514147" இருந்து மீள்விக்கப்பட்டது