பாலஸ்தீனம்/சமரஸ மகாநாடு
VIII
சமரஸ மகாநாடு
பாலஸ்தீனத்தில், அராபியர்களின் கலகம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கையிலும், அதனை அரசாங்கத்தார் அடக்கிக் கொண்டு வந்த போழ்தும், யூதர்கள் சும்மாயிருக்கவில்லை. உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் தங்களுக்குச் சாதகமான அபிப்பிராயங்களைத் திரட்டி வந்தார்கள். அமெரிக்காவிலிருந்து இவர்களுக்கு அதிகமான ஆதரவு கிடைத்தது. பாலஸ்தீனத்தில் ‘மாண்டேடரி’ நிருவாகத்தை மாற்றியமைப்பதாகிற உத்தேசம், பிரிட்டிஷ் அரசாங்கத்தாருக்கு உண்டெனின், அதற்கு முதலில் அமெரிக்காவின் சம்மதத்தைப் பெறுதல் அவசியமென்று அமெரிக்கா ஐக்கிய அரசாங்கத்தார் தெரிவித்தனர். இது, யூதர்களுக்குப் பெரிய ஆதரவளித்தது போலல்லவா? தவிர, போலந்திலிருந்தும், இன்னும் சில நாடுகளிலிருந்தும் யூதர்கள் சிறு, சிறு படையினராகச் சேர்ந்து பாலஸ்தீனத்திற்கு வந்தார்கள். அராபியர்களுடன் எதிர்த்துப் போராடும் யூதக் கூட்டத்தினரோடு இவர்கள் சேர்ந்து கொண்டார்கள். போலந்தின் தலை நகரமான வார்ஸாவிலிருந்து, யூதர்கள் சார்பாக ஓர் அறிக்கை பிறந்தது. இதில், எல்லா யூதர்களும் ஆயுதமேற்று, பாலஸ்தீன யூதர்களுக்காகப் போர் புரிய வேண்டுமென்றும், பாலஸ்தீனத்தில் ஏராளமான யூதர்கள் குடி புக வேண்டுமென்றும், பாலஸ்தீனத்தையும், ட்ரான்ஸ் ஜார்டோனியாவையும் சேர்த்து யூத நாடாக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார்கள். இது தவிர, யூத இளைஞர்களைப் பாலஸ்தீனத்திலும், இன்னும் பிற இடங்களிலும் குடி புகுத்த, லண்டனில் ரெடிங் சீமாட்டியின் பெரு முயற்சியில், ஒரு லட்சம் பவுன் நிதியொன்று திரட்டப்பட்டது. இங்ஙனம், யூதர்கள் பல திறப்பட்ட முயற்சிகளைச் செய்ததோடு, அராபியர்களின் எதிர்ப்பையும் பலமுகமாகச் சமாளித்து வந்தனர்.
இந்த நிலையில், வுட்ஹெட் கமிஷன் அறிக்கை வெளியாயிற்று. 1938ம் வருஷம் மார்ச் மாதம் நியமனம் செய்யப் பெற்ற இந்தக் கமிஷனானது, நவம்பர் மாதம் ஒன்பதாந் தேதி தன் அறிக்கையை வெளியிட்டது. மிகுந்த அவ நம்பிக்கையோடுதான், வுட்ஹெட் கமிஷனார் தங்கள் அறிக்கையை வெளியிட்டனர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. ‘எந்த நிபந்தனையின் மீதும், அராபியர்கள் மட்டுமோ, அல்லது அராபியர்களும் யூதர்களும் சேர்ந்தோ, பிரிவினையை அங்கீகரிப்பார்களாவென்பது சந்தேகமாகவே இருக்கிறது. அப்படி பிரிவினையை ஏற்றுக் கொள்ளாவிட்டால், என்ன செய்வது என்ற பிரச்னைக்குப் பரிகாரந் தேடிக் கொடுப்பது எங்கள் வேலையல்ல’ என்கிறது இந்தக்கமிஷனின் அறிக்கை. தவிர, இந்தக் கமிஷனார், ஒரு முகமான சிபார்சுகளைச் செய்யவில்லையென்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மையோர், அறிக்கையென்றும், சிறு பான்மையோர் அறிக்கை யென்றும் பிறந்தன.
வுட்ஹெட் கமிஷன் அறிக்கையானது, பீல் கமிஷன் அறிக்கையின் சிபார்சுகள் அநுஷ்டானத்திற்குக் கொண்டு வர முடியாதவையென்று கூறி, அதனை நிராகரித்து விட்டது. அதற்குப் பதிலாக, இது புதிய மதிரியானதொரு பிரிவினையைச் செய்ய வேண்டுமென்று கூறியது. இந்தப் பிரிவினை முறை வருமாறு:-
2. அங்ஙனமே, பாலஸ்தீனத்தின் தெற்குப் பாகமும் (நெகெப்) பிரிட்டிஷ் ‘மாண்டேடரி’ நிருவாகத்திற்குட் பட்டிருக்க வேண்டும்.
3. பாலஸ்தீனத்தின் மத்திய பாகத்தை மூன்று பிரிவாக்கி, ஒன்றை யூதர் நாடாகவும், இன்னொன்றை அராபிய நாடாகவும், பிறிதொன்றை ஜெருசலேம் பகுதியாகவும் வகுக்க வேண்டும்.இவ்வாறு பிரிவினை செய்வதால், எந்தச் சமூகத்தாருக்கும், எந்த விதமான இடையூறும் ஏற்படாதென்பதற்கு வுட்ஹெட் கமிஷன் பின் வரும் ஆதாரங்களை எடுத்துக் காட்டுகிறது:-
2. ‘நெகெப்’ என்கிற தெற்குப் பிரதேசத்தை யூதர்களுக்கென்று ஒதுக்கிக் கொடுக்க முடியாது. அதற்குப் பதில் அராபியர்களுக்குக் கொடுப்பது யூதர்களுக்குப் பாதகஞ் செய்வதாகும். ஏனென்றால், இந்தப் பிரதேசத்தில், தற்போதுள்ள பிரதேசங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், யூதர்களை இங்குக் குடியேற்றுவது சுலப சாத்தியமானதாகும்.
3. ஆகையால், பாலஸ்தீனத்தின் வட பாகமும், தென் பாகமும் ‘மாண்டேடரி’ நிருவாகத்திற் குட்பட்டதாகவே இருக்க வேண்டும்.வுட்ஹெட் கமிஷனுடைய இந்தப் பிரிவினைத் திட்டப்படி, பாலஸ்தீனத்தின் வட பாகமும், தென் பாகமும் பிரிட்டிஷாருடைய ஆதிக்கத்துக் குட்பட்டிருக்கும். மத்தியிலுள்ள பிரதேசம் அராபிய நாடாக்கப்படும். அராபிய நாட்டு எல்லைக்குள்ளாகவே, கடலோரமாக ஒரு சிறு பிரதேசம் யூதர் நாடாக அமையும். இந்த யூதர் நாட்டுக்கு மத்தியில், ஜெருசலேம், பெத்ல்ஹெம் முதலிய புண்ணிய ஸ்தலங்கள் நிறைந்த பிரதேசம், பிரிட்டிஷ் ‘மாண்டேடரி’ நிருவாகத்திற் குட்பட்டிருக்கும். புண்ணிய ஸ்தலங்களைப் பாதுகாப்பதாகிற பொறுப்பு பிரிட்டிஷாரைச் சேர்ந்ததே யாதலால், இந்த ஜெருசலேம் பகுதி, இங்ஙனம் பிரிட்டனுடைய நிரந்தர நிருவாகத்திற்குட் படுத்தப் பெற வேண்டுமென்று காரணங் கூறப்பட்டது.
எந்த முகாந்திரத்தைக் கொண்டும் பிரிவினையை விரும்பாத அராபியர்கள், வுட்ஹெட் கமிஷனுடைய பிரிவினைத் திட்டத்தை மட்டும் அங்கீகரிப்பரென்று எதிர்பார்க்க முடியாதல்லவா? இதற்கேற்றாற் போல், 1938ம் வருஷம், நவம்பர் மாதம் முதல் வாரத்திவிருந்து பாலஸ்தீனப் போராட்டம் வலுத்து நிற்கிறது. நவம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து மூன்று நாட்கள் வரை, அராபியர்கள் பொது வேலை நிறுத்தமொன்று வெற்றிகரமாக நடத்தி, தங்கள் அதிருப்தியைக் காட்டிக் கொண்டார்கள்.
வுட்ஹெட் கமிஷனுடைய சிபார்சுகள், பிரிட்டிஷ் அரசாங்கத்தாரின் முந்திய அபிப்பிராயங்களைக் கூட மாற்றி விட்டதென்று சொல்ல வேண்டும். 1938ம் வருஷம் நவம்பர் மாதம் 10ந் தேதி, பிரிட்டிஷ் அரசாங்கம், தனது குடியேற்ற நாட்டு மந்திரி ஸ்ரீ மால்கோம் மாக்டோனால்ட் மூலம், பாலஸ்தீன விஷயமாக இனி, தான் அநுசரிக்கப் போகும் கொள்கையைப் பின் வரும் அறிக்கை வாயிலாக வெளியிட்டது:-
2. பாலஸ்தீனத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சங்கடங்களுக்குப் பரிகாரமாக வேறு மார்க்கங்கள் காணப்படுகிற வரையில், அந்த நாட்டின் அரசாங்க நிருவாகப் பொறுப்பைப் பிரிட்டிஷ் அரசாங்கமே தொடர்ந்து நடத்தும்.
3. பாலஸ்தீன எதிர் கால பிரச்னைகளைப் பற்றி—அங்குக் குடிபுகும் உரிமை விஷயம் உள்பட —கலந்தாலோசிக்க, பாலஸ்தீன அராபியர்கள், அதற்கு அடுத்தாற் போலுள்ள நாடுகள் ஆகிய இவற்றின் பிரதிநிதிகளும், யூத ஸ்தாபனங்களின் பிரதிநிதிகளும் அடங்கிய ஒரு மகாநாட்டை லண்டனில் உடனே பிரிட்டிஷ் அரசாங்கத்தார் கூட்டுவர்.
4. இந்த மகாநாட்டின் பயனாக, நியாயமான ஒரு காலத்திற்குள் அராபிர்களுக்கும், யூதர்களுக்கும் சமரஸம் ஏற்படாவிட்டால், பிரிட்டிஷ் அரசாங்கத்தார், தங்களுடைய அநுபவத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு, தாங்கள் எதிர்காலத்தில் அநுஷ்டிக்கப் போகும் முறைகள் இன்னின்னவை யென்பதை வெளியிடுலர்.இந்த மகாநாடு வெற்றிகரமாக முடியுமாவென்ற சந்தேகம், பிரிட்டிஷ் அரசாங்கத்தாருக்கே ஏற்பட்டிருக்கிற தென்பது, மேற்படி அறிக்கையின் நான்காவது பகுதியிலிருந்தே தெரிகிறதல்லவா? இதே மாதிரியான சந்தேகம், அராபியர்களுக்கும், யூதர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அப்படி ஏற்பட்டிருப்பதற்கு ஆதாரங்கள் இல்லாமல் இல்லை. முதலாவது, அராபியப் பிரதிநிதிகளாக வருவோரில், அரசாங்கத்தாருக்குப் பிடித்தமில்லாதவர் இருந்தால், அவர்களை விலக்கும் உரிமை அரசாங்கத்திற்கு உண்டு. இரண்டாவது, அராபிய தேசிய இயக்கத்தின் உண்மையான பிரதிநிதியென்று அழைக்கப் படுகிற ஜெருசலேம் ‘கிராண்ட் மப்டி’ மகா நாட்டுக்கு அழைக்கப் படவில்லை. மூன்றாவது, ‘கிராண்ட் மப்டி’யின் பிரதிநிதிகளாக மகாநாட்டுக்கு வருவோர், மற்றப் பிரதிநிதிகளைப் போல் எல்லா உரிமைகளையும் பெறுவார்களா வென்ற சந்தேகம் பாலஸ்தீனிய அராபியர்களிடையே பரவியிருக்கிறது. நான்காவது, பாலஸ்தீனத்தைச் சுற்றியுள்ள இஸ்லாமிய நாடுகளாகிய எகிப்து, ஈராக், அரேபியா, எமன், ட்ரான்ஸ் ஜார்டோனியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் மகா நாட்டுக்கு வர வழைக்கப்படுகிறார்கள் என்பது ஒரு விதத்தில் திருப்திதான். ஆனால், பாலஸ்தீனத்தோடு, மேற்படி நாடுகளை விட, அதிகமான தொடர்பு கொண்ட சிரியா, லெபனோன் நாடுகளின் பிரதிநிதிகள் ஏன் மகாநாட்டிற்கு வரவழைக்கப்படவில்லை? ஐந்தாவது, இந்த மகாநாடு, சர்வ கட்சியினரும், சம நிலையிலிருந்து பேசக் கூடிய ஒரு வட்ட மேஜை மகாநாடாயிருப்பதற்குப் பதிலாக, குடியேற்ற நாட்டு மந்திரியும், யூதர்களும் ஒரு கட்சியினராகவும், மேற்படி குடியேற்ற நாட்டு மந்திரியும் அராபியப் பிரதிநிதிகளும் எதிர்க் கட்சியினராகவும் இருந்து வாதஞ் செய்வார்களானால், எவ்வளவு தூரம் இந்த மகாநாடு கோரிய பலனைக் கொடுக்குமென்று அரசியல் தீர்க்கதரிசிகள் சந்தேகிக்கிறார்கள். யூதர்கள், அராபியர்கள், பிரிட்டிஷார் ஆகிய மூன்று சாராரும், மூன்று கட்சியினராக மகாநாட்டு மேஜையைச் சுற்றியமர்ந்து, ஒரு முடிவு காண்டலே சிறப்பு என்பது இவர்கள் கருத்து. ஆனால் மகாநாடு, இந்த முறையில் நடை பெறாது போலிருக்கிறதே.
இந்தப் பாலஸ்தீன மகாநாட்டைப் பற்றி, அராபிய விஷயங்களில் பெரிய நிபுணன் என்று கருதப்படுகிற எச். எஸ் .ஜே.பில்பி, என்பவன் பின் வரும் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறான்:-
பாலஸ்தீனத்தில் எதிரெதிர்க் கட்சியினராசுப் பிரிந்துள்ள அராபியர்களும் பிரிட்டிஷ்
லண்டன் மகாநாடு எவ்வாறு முடிவு பெற்ற போதிலும், அதன் சிபார்சுகள் யாருக்குச் சாதகமாகவோ, பாதகமாகவோ இருந்த போதிலும், பாலஸ்தீனத்தில், பிரிட்டிஷ் அரசாங்கத்தார் நிரந்தரமான ஒரு பிடிப்பை வைத்துக் கொண்டிருப்பர் என்பது மட்டும் நிச்சயம். சென்ற இரண்டு நூற்றாண்டுகளாகவே மத்திய தரைக் கடலின் கிழக்குக் கரையோரப் பிரதேசங்களின் மீது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பார்வை விழுந்து வந்திருக்கிறது. தங்களுடைய ஏகாதிபத்திய எண்ணங்கள் நிறைவேறுவதற்க நுகுணமாகவே, பிரிட்டிஷ் அரசாங்கத்தார் பழைய துருக்கி சாம்ராஜ்யத்தை ஆதரித்தும், சைப்ரஸ் தீவைச் சுவாதீனப் படுத்தியும், எகிப்திலும், பாரசீக வளைகுடாவிலும் தலையிட்டும், துருக்கிக்கு விரோதமாக அராபியர்களைக் கிளப்பி விட்டும், பலவிதமான முறைகளைக் கையாண்டு வந்திருக்கின்றனர். இங்ஙனம், பலவிதமான முறைகள் கையாளப்பட்டு வந்த போதிலும், பிரிட்டனின் அடிப்படையான- நோக்கம் மட்டும் ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. அதாவது, ஏகாதிபத்திய காரணங்களுக்காக, அராபிய உலகத்தில் ,பிரிட்டனுடைய ஆதிக்கம் ஓங்கி நிற்க வேண்டுமென்பதுதான். இந்த நோக்கமே, ஐரோப்பிய யுத்தத்திற்குப் பிறகு, கீழைப் பிரதேசங்களில், பிரிட்டன் அநுசரித்து வந்த ராஜதந்திர முறைகளுக்கெல்லாம் அடிப்படையான காரணமாயிருந்திருக்கிறது. ஆனால், ஐரோப்பிய யுத்தத்தின் கடைசி பாகத்தில்—அதாவது 1917ம் வருஷத்தில்—பிரிட்டனுக்கு யூதர்களுடைய உதவி அவசியம் தேவையாயிருந்தது. இதனால், பிரிட்டன், தன்னுடைய ஏகாதிபத்திய முறைகளில் சில மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டுவது அவசியமாயிற்று.
பாலஸ்தீனத்தின் நிருவாகத்தை பிரிட்டன் திடீரென்று ஏற்றுக் கொண்டு விடவில்லை.ஏற்கனவே செய்து கொள்ளப் பட்டிருந்த மூன்று வித ஒப்பந்தங்கள், ‘மாண்டேடரி’ நிருவாகத்திற்கு மூல காரணங்களா யிருந்தன.
(1) 1915ம் வருஷத்தில், அராபியர்களுடைய சுதந்திரம் அங்கீகரிக்கப் பட்டது.
(2) 1916ம் வருஷம் மே மாதம் பிரிட்டனும், பிரான்ஸும் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டன. அராபியப் பிரதேசங்களை, பிரிட்டனும், பிரான்ஸும் பங்கிட்டுக் கொள்வதென்பதே இந்த ஒப்பந்தத்தின் சாரம். அதாவது, பாலஸ்தீனத்தைச் சர்வதேச அரசாங்க நிருவாகத்திற் குட்படுத்துவதென்றும், ஆனால், ஹைபா துறைமுகத்தைச் சுற்றியுள்ள ஒரு சிறு பிரதேசம் மட்டும் பிரிட்ட னுடைய சுவாதீனத்திலிருப்பதென்றும், பாக்காத் வரையிலுள்ள தெற்கு ஈராக் பிரதேச முழுவதையும், பிரிட்டனும், ஹைபாவிலிருந்து மெர்ஸீனா வரையிலுள்ள கடலோரப் பிரதேசத்தை பிரான்ஸும் எடுத்துக் கொள்வதென்றும் மேற்படி ரகசிய ஒப்பந்தம் கூறியது.
(3) 1917ம் வருஷம் நவம்பர் மாதம் பிறந்த பால்பர் அறிக்கை.
இந்த ஒப்பந்தங்கள், அறிக்கைகள் முதலியவற்றின் பரிணாமமாகவே, பாலஸ்தீனம், ஈராக் முதலியன பிரிட்டனின் மேற்பார்வைக்கும், சிரியா, லெபனோன் முதலியன பிரான்ஸின் மேற்பார்வைக்கும் போய்ச் சேர்ந்தன.மற்றும், ஹைபா துறைமுகம், தன்னுடைய சுவாதீனத்திலிருக்க வேண்டுமென்ற எண்ணம் 1916ம் வருஷத்திலிருந்தே பிரிட்டனுக்கு இருந்திருக்கிறது. ஹைபா துறைமுகம், பிரிட்டிஷாருடைய நிருவாகத்திலிருக்க வேண்டுமென்பதைப் பற்றி, பீல் கமிஷனும், வுட்ஹெட் கமிஷனும் அபிப்பிராய வேற்றுமை கொள்ளவில்லை. மத்திய தரைக் கடலோரமாயுள்ள பிரதேசத்தை யூதர்களின் ஆதிக்கத்தில் விடுவதுதான், பிரிட்டனுடைய ஏகாதிபத்திய நலனுக்கு உகந்ததாகும். தன்னுடைய கொள்கைகளுக் கிசைந்தவாறு அந்த யூத நாட்டு நிருவாகம் நடைபெறுமென்ற நம்பிக்கை பிரிட்டனுக்கு இருக்கிறது. பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேறும் விஷயத்தில், 1920ம் வருஷ முதற் கொண்டு பிரிட்டன் அதிகமான சிரத்தை காட்டி வருவது இந்த நம்பிக்கையினால்தான் என்று ராஜதந்திரிகள் கூறுகிறார்கள்.
சென்ற சில வருஷங்களாகவே, பாலஸ்தீனத்தின் முக்கியத்துவம் அதிகமாகிக் கொண்டு வருகிறது. எகிப்தில் தேசீய இயக்கம் வெற்றி பெற்று, அதற்கும், பிரிட்டனுக்கும் ஒரு வித சிநேக ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, மத்திய தரைக் கடலின் கிழக்குப் பிரதேசங்களில் தனது பிடிப்பைத் தளர விடாமல் பார்த்துக் கொள்வது பிரிட்டனுக்குச் சிறிது சிரமமாகவே இருக்கிறது. இந்தப் பிடிப்பை தளர்த்திக் கொடுக்கவும் முடியவில்லை. அதற்கு மாறாக, இன்னும் இறுக்க வேண்டி யிருக்கிறது. ஏனென்றால், மத்திய தரைக் கடலின் மேற்குப் பிரதேசங்களில், இத்தலி கண் வைக்கத் தொடங்கி விட்டது. கீழைப் பிரதேசங்களில் பிரிட்டனுக்கு உள்ள செல்வாக்குக்கு, அது போட்டியாக வரும் போலிருக்கிறது. முஸோலினியும், அவனுடைய பாசிஸ்ட் சகபாடிகளும் இந்தத் தோரணையிலேயே, சில வருஷங்களாகப் பேசிக் கொண்டு வருகிறார்கள். தவிர, ஹைபா துறைமுகம், பிரிட்டனுக்கு இப்பொழுது மிகவும் முக்கியமான இடம். ஏனென்றால், மோசூலிலிருந்து தொடங்கும் பெட்ரோல் குழாய்கள் இங்குதான் வந்து முடிகின்றன.[2]
மற்றும், ஏராளமான கப்பற் படைகளைக் கொண்டு வந்து நிறுத்துவதற்கு, ஹைபா துறைமுகம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த எண்ணத்துடனேயே, இதன் துறைமுகம் விசாலிக்கப்பட்டது. உலக யுத்தம் ஒருவாறு ஏற்படுமானால், மத்திய தரைக் கடல் வழியாகக் கீழ் நாடுகளுடன், தான் வைத்துக் கொண்டிருக்கும் தொடர்பானது, எவ்விதத்திலும் பாதகமடையாமல் இருக்க வேண்டுமென்பது பிரிட்டனின் கவலை. இதனாலேயே, பாலஸ்தீனத்தையும், ஹைபா துறைமுகத்தையும், அது முக்கியமாகக் கருதுகிறது. தளபதி ரிச்மண்ட் என்ற ஒரு ராணுவ நிபுணன் கூறும் கருத்து இங்குக் கவனிக்கத்தக்கது:-
இது தவிர, மேனாட்டுக்கும் கீழ் நாட்டுக்குமிடையிலே யுள்ள, எல்லா ஆகாய விமான மார்க்கங்களும் பாலஸ்தீனத்தில் சந்திக்கின்றன. அடுத்து வரும் யுத்தத்தில், இஃதொரு முக்கியமான அநுகூலமல்லவா? எப்படியும், பிரிட்டனானது, உலக வல்லரசுகளில் ஒன்றாக, இன்னுஞ் சிறிது காலம் மதிக்கப்பட வேண்டுமானால், அதற்கு பாலஸ்தீனம் மிகவும் அவசியமாகும். இதுவே பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வாதிகளின் கருத்து.
அரசியல்வாதிகளின் கருத்து ஒருபுறமிருக்கட்டும். அரசியலிலே சம்பந்தப் படாதவர்கள் கூட, அடுத்து வரும் உலக மகா யுத்தத்தில், பரலஸ்தீனந்தான் முக்கிய போர்க்களமா யிருக்குமென்றும், இங்குதான், இந்த யுத்தத்தின் வெற்றியோ, தோல்வியோ முடிவு கட்டப்படுமென்றும் கூறியிருக்கிறார்கள்.[3] இந்த அபிப்பிராயங்களை ஆராய்ச்சி உலகம், எவ்வளவு தூரம் அங்கீகரிக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். பாலஸ்தீனத்தின் மீது இதுகாறும் ஐரோப்பிய வல்லரசுகள்—சிறப்பாக பிரிட்டன்—செலுத்தி வந்த கண்ணோட்டம் இனி தீட்சண்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமிராது. பாலஸ்தீனத்தின் எதிர்கால வாழ்வு எவ்வாறிருந்த போதிலும், தற்போது அங்கு நடைபெறும் போராட்டத்தில், இந்தியாவின் அநுதாபம் அராபியர்கள் பக்கமே இருக்கிறது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக, மகாத்மா காந்தி, 26-12-38 ‘ஹரிஜன்’ பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில், பாலஸ்தீனத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள பாகத்தை மட்டும் எடுத்துக் காட்டி, இந்நூலை முடிப்போம்:-
- ↑ World Review—January 1939.
- ↑ மோசூலில், பெட்ரோல் கிணறுகள் இருக்கும் இடத்திற்கு கிர்குக் (Kirkuk) என்று பெயர். இங்கிருந்து மணிக்கு 900 டன் விகிதம், பழுப்பும், கருப்பும் கலந்த ஒரு வகை எண்ணெய் ‘பம்ப்’ செய்யப்படுகிறது. இது, 620 மைல் தூரம் பன்னிரண்டு அங்குல உள் அகலமுள்ள குழாய் வழியாக ஹைபா துறைமுகத்தில் கட்டப் பெற்றிருக்கும் பெரிய ‘டாங்கு’களில் (Storage Tanks) வந்து சேர்கிறது. இங்கு பெட்ரோலாகச் சுத்தஞ் செய்யப்பட்டு, கப்பல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுகிறது.
- ↑ Cheiro's World Predictions.