உள்ளடக்கத்துக்குச் செல்

பாலஸ்தீனம்/பால்பர் அறிக்கை

விக்கிமூலம் இலிருந்து

II
பால்பர் அறிக்கை

ரோப்பிய மகாயுத்தம் முடிந்ததும், நேசக் கட்சியினர் விருப்பப்படியே வார்சேல் சமாதான உடன்படிக்கை தயாரிக்கப்பட்டதென்பதும், இந்தக் காலத்திலேயே சர்வதேச சங்கம் சிருஷ்டிக்கப் பட்டதென்பதும் எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இதற்குப் பிறகு, தோல்வியடைந்து போனதாகக் கருதப் பட்ட ஜெர்மனி, துருக்கி முதலிய நாடுகளின் ஆதிக்கத்திலிருந்த குடியேற்ற நாடுகளை, நேச வல்லரசுகள் தங்கள் தங்கள் நாடுகளுடன், தாங்களே சேர்த்துக் கொள்ளாமல், சர்வதேச சங்கத்தின் மேற்பார்வையில் விடுவதென்றும், அச்சங்கத்தின் பிரதிநிதியாக இருந்து ஒவ்வொரு வல்லரசும், சில சில நாடுகளை நிருவாகம் செய்து வருவதென்றும் ஏற்பாடு செய்யப்பட்டன. இங்ஙனம் சர்வதேச சங்கத்தின் சார்பாக, ஒரு நாட்டை ஆள்வதற்குரிய அதிகாரத்திற்கே, ‘மாண்டேட்’ என்று பெயர். இந்த அதிகாரத்திற்குட்பட்டு, ஆட்சி புரியும் அரசாங்கத்திற்கு ‘மாண்டேடரி அரசாங்கம்’[1] என்றும், ஆளப்படுகிற நாட்டுக்கு ‘மாண்டேடெட் நாடு’[2] என்றும், அரசியல் வழக்கில் கூறுவார்கள்.

சர்வதேச சங்க ஒப்பந்தத்தின் 22வது ஷரத்துப்படி, ‘மாண்டேடரி’ ஆட்சிக்குட்படுத்தப் பெறும் நாடுகள் அ, ஆ, இ என்று மூன்று பிரிவாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றன. அந்தந்த நாடுகளின் பூகோள அமைப்பு, ஜனங்களின் அரசியல் பரிபக்குவ நிலை, பொருளாதார நிலை முதலியவைகளைப் பொறுத்து இந்தப் பாகுபாடு செய்யப்பட்டிருக்கிறது.

பிரிவு அ: சுதந்திர நாடுகளென்று தற்காலிகமாக அங்கீகரிக்கப் படலாமெனக் கருதப்பட்டவையும், முன்னர் துருக்கிய ஏகாதியத்தியத்துக்குட் பட்டிருந்தவையுமான நாடுகள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவை. இங்ஙனம், சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்கத்தக்கவையே யெனினும், இவை தங்கள் சுயபலத்தைக் கொண்டு ஆளக் கூடிய நிலைமைக்கு வரும் வரையில், ‘மாண்டேடரி’ அரசாங்கமானது, இவற்றிற்கு அரசாங்க நிருவாக சம்பந்தமாக ஆலோசனைகள் கூறிக் கொண்டிருக்கும்.

பிரிவு ஆ: மத்திய ஆப்ரிக்காவிலுள்ள நாடுகள். இந்த நாடுகளில் வசிக்கும் பிரஜைகளின் மதம், நாகரிகம் முதலியவற்றின் உரிமைக்குப் பங்கம் வராமல் பாதுகாப்பதும், அடிமைத் தொழில், ஆயுதங்களை உற்பத்தி செய்து, அதில் வியாபாரம் செய்தல், மதுபான வியாபாரம் முதலியன நடைபெறாமல் தடுப்பதும், ‘மாண்டேடரி’ அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

பிரிவு இ: தென் மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள சில பிரதேசங்களும், பசிபிக் மகா சமுத்திரத்திலுள்ள தீவுகளும், இந்தப் பிரிவைச் சேர்ந்தவை. நில விஸ்தீரணம், ஜனத் தொகை முதலியன குறைவாயிருப்பதாலும், இங்குள்ள ஜனங்கள் அதிக நாகரிகமில்லாதவர்களாயிருப்பதாலும், இந்த நாடுகளை ‘மாண்டேடரி’ அரசாங்கத்திற்குட்பட்ட ஒரு நாட்டின் உட்பிரிவாகக் கருதி ஆளலாம்.

இந்த மூன்று பிரிவைச் சேர்ந்த நாடுகளின் விவரத்தை அநுபந்தத்தில் பார்க்க.

1920ம் வருஷம் ஏப்ரல் மாதம் 24ந் தேதி சான் ரிமோ என்ற நகரத்தில் கூடிய சமாதான் மகாநாட்டில், சர்வதேச சங்கத்தின் மேற்படி 22வது ஷரத்துப்படி, பாலஸ்தீனத்தின் நிருவாகம் பிரிட்டன் வசம் ஒப்புவிப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. இதனை 24-7-1922ல் சர்வதேச சங்கம் ஊர்ஜிதம் செய்தது. இந்த அதிகாரப் பத்திரத்தில், 28 ஷரத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றின் சாரத்தை மட்டும் இங்குத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.

பாலஸ்தீனத்தில் ‘யூதர்களின் தேசீய ஸ்தலம்’ ஏற்படுவதற்கு அநுகூலமாக அதன் அரசியல், நிருவாக, பொருளாதார நிலைமைகள் அமைக்கப்பட வேண்டும். மேற்படி யூதர்களின் தேசீய ஸ்தல சம்பந்தமான விஷயங்களில்
அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறவும், அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவும் ‘ஜையோனிய ஸ்தாபனம்’ யூதர்களின் பிரதிநிதி ஸ்தாபனம் என்று அங்கீகரிக்கப் பட வேண்டும். தவிர, மேற்படி ‘யூதர்களின் தேசீய ஸ்தலம்’ ஏற்படுத்தும் விஷயத்தில் எல்லா யூதர்களின் ஒத்துழைப்பையும் பெற அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். யூதர்கள் தகுந்த நிலைமைகளில் குடிபுகுவதற்கு அனுகூலங்கள் செய்து கொடுக்கப்பட வேண்டும். அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலங்களிலும், கரம்பு நிலங்களிலும், யூதர்கள் ஒன்று சேர்ந்து வசிப்பதற்கு ஆதரவு காட்டப்பட வேண்டும். பாலஸ்தீனத்திலேயே நிரந்தரமாக வசிக்க வேண்டுமென்று விரும்புகிற யூதர்கள், பாலஸ்தீனத்துப் பிரஜா உரிமையைப் பெற சௌகரியங்கள் செய்து கொடுக்கப் பெற வேண்டும். பொது நல சம்பந்தமான கம்பெனிகளை ஆரம்பிக்கவோ, நடத்தவோ, தேசத்தின் இயற்கைப் பொருள்களை விருத்தி செய்யவோ, மேற்படி ‘ஜையோனிய ஸ்தாபன’த்துடன் அரசாங்கம் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

பாலஸ்தீனத்தின் நிருவாகத்தை, பிரிட்டன் வசம் ஒப்புவிக்கிற இந்த அதிகார பத்திரத்தில், யூதர்களுக்கு ஏன் இவ்வளவு விசேஷமான சலுகைகள் காட்டப் படவேண்டுமென்று யாருமே கேட்கக் கூடுமல்லவா?

இந்தப் பூர்வாங்கப் பிரச்னையில் நாம் பிரவேசிப்பதற்கு முன்னர் ‘ஜையோனிஸம்’ என்றால் என்ன என்பதைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொண்டு விடுதல் நல்லது. பாலஸ்தீனம் தங்களுடைய பூர்விக நாடென்றும், அது மீண்டும் தங்களுக்குரித்தான நாடாக வேண்டுமென்றும் யூதர்கள் நீண்ட காலமாகக் கிளர்ச்சி செய்து வந்தார்கள். ஆனால், இதனை ஓர் அரசியல் இயக்கமாக உருவகப்படுத்தியவன் தியாடோர் ஹெர்ஸல் (Theodor Herzl) என்பான். இவன் 1896ம் வருஷத்தில் இந்த ஜையோனிய இயக்கத்தை ஆரம்பித்தான்.[3] தங்களுடைய தேசீய புனருத்தாரணத்திற்காக ஏற்படுத்தப் பெற்ற இயக்கம் இஃது என்று நம்பி, உலகத்தின் நானா பாகங்களிலுமுள்ள யூதர்கள் இதற்கு ஆதரவு அளித்து வந்தார்கள்.1901ம் வருஷம் இந்த இயக்கத்தின் சார்பாக ‘யூதர்களின் தேசீய நிதி’யொன்று தொடங்கப் பெற்றது. ஏராளமான பணம் இதற்குச் சேர்ந்தது. யூதர்கள் சென்று குடியேறுவதற் கநுகூலமாக, பாலஸ்தீனத்தில், விஸ்தீரணமான பூப்பிரதேசங்கள், இந்த நிதிப் பணத்திலிருந்து வாங்கப் பெற்றன. வெளிநாடுகளிலிருந்த யூதர்கள் பலர், பாலஸ்தீனத்தில் வந்து குடி புகுந்தார்கள். அப்பொழுது இந்த நாடு, துருக்கி சுல்தான் ஆதீனத்திலிருந்துதல்லவா? சுல்தான், யூதர்கள் இங்ஙனம் பாலஸ்தீனத்தில் நிலம் வாங்குவதை விரும்பவில்லை. ஆனாலும், யூதர்கள், உலகத்தின் மற்றப் பாகங்களில் தங்களுக்குள்ள செல்வாக்கை உபயோகித்து, பாலஸ்தீனத்தில் தங்கள் உரிமையை விருத்தி செய்து கொண்டு வந்தார்கள். 1908ம் வருஷத்தில் ‘பாலஸ்தீன நில அபிவிருத்தி கம்பெனி’யொன்று ஏற்படுத்தி, அதன் மூலமாக தென்னமெரிக்கா, ஈரான் முதலிய நாடுகளிலிருந்து கூட அநேக யூதர்களை வரவழைத்துக் குடியேற்றினார்கள். ஐரோப்பிய யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, துருக்கிய அதிகாரிகள் அநேக யூதர்களை பாலஸ்தீனத்திலிருந்து, தேசப்பிரஷ்டம் செய்தார்கள். இதன் விளைவாக, இவர்களின் ஜனப் பெருக்கம் சிறிது குறைந்திருந்தது. 1918ம் வருஷம் பாலஸ்தீன யூதர்களின் ஜனத்தொகை சுமார் 55,000தான். இப்பொழுது —சுமார் இருபது வருஷங்களுக்குப் பிறகு—நாலரை லட்சம் பேருக்கு மேல் இருக்கிறார்கள்.

இங்கு ஒரு விஷயம் குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீனத்தை யூதர்களுக்கு உரிமை நாடாக்கிக் கொடுக்க வேண்டுமென்ற கிளர்ச்சிக்கு, பதினெட்டாவது, பத்தொன்பதாவது நூற்றாண்டுகளிலிருந்தே பிரிட்டிஷார் ஆதரவு காட்டி வந்ததற்குக் காரணங்கள் என்ன என்ற விவரங்களைப் பற்றி நாம் இந்த நூலில் ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. பொதுவாக, ஜையோனிய இயக்கத்திற்கு பிரிட்டிஷ் ராஜதந்திரிகளுடைய ஆதரவு, ஐரோப்பிய யுத்தத்திற்குப் பிறகு மட்டுமல்ல, சென்ற இரண்டு நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது என்பதை மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது. இந்த விஷயத்தை நாம் மனத்தில் வைத்துக் கொண்டு, ஐரோப்பிய மகாயுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், பாலஸ்தீன விஷயமாக யூதர்கள் கொண்டிருந்த அபிலாஷைகளை ஆதரித்து, பிரிட்டிஷ் ராஜதந்திரிகள் வெளியிட்ட அறிக்கைகளைப் படித்தால், அதில் ஆச்சரியம் ஒன்றும் நமக்கு ஏற்படாது.

ஐரோப்பிய யுத்தத்தின் போது, உலகத்தின் பல பாகங்களிலும் சிதறிக் கிடந்த—ஆனால், செல்வாக்கு நிறைந்த—யூதர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் நேசக் கட்சியினருக்கு—சிறப்பாக பிரிட்டிஷாருக்கு—தேவையா யிருந்தது.அப்பொழுது, அமெரிக்காவின் துணையை நேசக் கட்சியினர் தேடிக் கொண்டிருந்தனர். அமெரிக்காவிலோ, யூதர்களின் எண்ணிக்கையும், செல்வாக்கும் அதிகம். எனவே, யூதர்களின் அநுதாபம், நேசக் கட்சியினருக்கு அப்பொழுது அவசியமாயிருந்தது.

இன்னொரு விஷயம். ஐரோப்பிய யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், பிரிட்டிஷாருடைய யுத்த தளவாடங்களில், ஒரு வித பலக் குறைவு ஏற்பட்டிருந்தது. அதாவது, சத்துருக்களின் கப்பல்களை உடைத்தெறிவதற்காக, வெடி குண்டுகள் உபயோகிக்கப் பட்டனவல்லவா? இந்த வெடி குண்டுகளில் சேர்க்கப்பட்டு வந்த முக்கியமான ரஸாயனப் பொருள் ஒன்று குறைந்து விட்டது. இந்தப் பொருளின் ரகசியத்தை ஜெர்மானியர்கள் மட்டுந்தான் தெரிந்து வைத்திருந்தார்கள். பிரிட்டிஷார் என்ன செய்வர்? ‘இந்த ரகசியத்தைக் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்’ என்று அப்பொழுதைய பிரிட்டிஷ் மந்திரிச் சபையானது, பிரிட்டிஷ் விஞ்ஞான சாஸ்திரிகளுக்கு விண்ணப்பம் செய்து கொண்டது. அந்தச் சமயம் மான்செஸ்டர் சர்வ கலாசாலையில் டாக்டர் செயிம் வீஸ்மான் (Dr. Chaim Weizmann) என்ற ரஸாயன போதகாசிரியன் ஒருவன் இருந்தான். இவன் யூதன். ‘ஜையோனிய இயக்க’த்தின் தலைவன். இவன் மேற்படி ரஸாயனப் பொருளின் ரகசியத்தைக் கண்டு பிடித்துப் பிரிட்டிஷாருக்குத் தெரிவித்தான். நேசக் கட்சியினரின் வெற்றிக்கு இஃதொரு முக்கிய காரணமாயிருந்தது. இந்தப் பேருதவியைச் செய்த டாக்டர் வீஸ்மானுக்குப் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் சன்மானமளிக்க விரும்பினர். ஆனால், சமூக நலச் சிந்தை வாய்ந்த வீஸ்மான் இதனை மறுத்து விட்டான். அதற்குப் பதிலாக, பாலஸ்தீனத்தில் யூதர்கள் கொண்டாடும் உரிமைகளுக்கு நேசக் கட்சியினர் ஆதரவு அளிக்க வேண்டுமென்று கேட்டான். யூதர்களின் சாஸனமென்று கருதப் படுகிற பால்பர் அறிக்கை (Balfour Declaration) பிறந்ததற்கு இஃதொரு முக்கிய காரணம்.

1917ம் வருஷம் பிரிட்டிஷ் மந்திரிச் சபையில், ஏ.ஜே. பால்பர் என்பவன் அந்நிய நாட்டு மந்திரியாயிருந்தான். இவன் 2-11-1917ல் பிரிட்டிஷ் மந்திரிச் சபையின் பூரண அங்கீகாரம் பெற்று, லார்ட் ராத்ஸ்சில்ட் என்ற யூக முதலாளியின் மூலமாகப் பின்வரும் அறிக்கையை வெளியிட்டான்:-

பாலஸ்தீனத்தில் ‘யூதர்களின் தேசீய ஸ்தலம்’ ஸ்தாபிக்கப் படுவதை, அரசாங்கத்தார் ஆதரிப்பர். இந்த நோக்கம் நிறைவேறுவதற்கு வேண்டிய அநுகூலங்களைச் செய்வர். ஆனால், இதனால் தற்போது பாலஸ்தீனத்திலுள்ள யூதர்களல்லாத பிற சமூகத்தாருடைய பிரஜா உரிமைகளோ, மத சம்பந்தமான உரிமைகளோ பாதிக்கக் கூடிய காரியங்கள் செய்யப் படமாட்டா. அல்லது இதனால் பிற நாடுகளில் யூதர்கள் அநுபவித்து வரும் உரிமைகளும் அரசியல் அந்தஸ்தும் பாதிக்கப்படமாட்டா

இதுதான் பால்பர் அறிக்கையென்று சொல்லப் படுவது. இந்த அறிக்கை சம்பந்தமாக நாம் இரண்டொரு விஷயங்களைத் தெளிவு படுத்திக் கொண்டு விட வேண்டும். முதலாவது, இந்த அறிக்கையானது, பிரிட்டிஷாருடைய தனிக் கொள்கையை மட்டும் வெளிப்படுத்துவதா யில்லை. இந்தக் கொள்கையை—அதாவது, பாலஸ்தீனத்தில் யூதர்களின் உரிமையை அங்கீகரிக்கிற கொள்கையை—மற்ற எல்லா நேசக் கட்சியினரும் அங்கீகரித்தனர். பின்னர்க் கூடிய சமாதான மகாநாட்டிலும், இஃது ஊர்ஜிதம் செய்யப் பட்டது. இரண்டாவது, இந்த பால்பர் அறிக்கை வெளியான பிறகு, உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் யூதர்கள் வந்து, பிரிட்டிஷ் படையில் போர் வீரர்களாகத் தங்களைப் பதிவு செய்து கொண்டு, நேசக் கட்சியினரின் சார்பாக யுத்தம் செய்திருக்கிறார்கள். பாலஸ்தீனத்தில் துருக்கியர்களுக்கும், பிரிட்டிஷாருக்கும் நடைபெற்ற போராட்டத்தின் போது, யூதர்கள் மட்டும் அடங்கிய ஒரு தனிப் படை, பிரிட்டிஷார் பக்கம் இருந்து போர் புரிந்திருக்கிறது. இதனால் ஒரு சமயம், யூதர்கள் வசித்து வந்த இடத்திற்குக் கூட ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆயினும் யூதர்கள், பிரிட்டிஷ் தளகர்த்தர்கள் வியந்து பாராட்டும் வண்ணம் மிகத் தைரியமாகப் போர் புரிந்து, பிரிட்டிஷ் ராஜ தந்திரிகளின் அபிமானத்தையும், அநுதாபத்தையும் பெற்று விட்டார்கள்.

மூன்றாவது, பாலஸ்தீனத்தைத் தன்னுடைய செல்வாக்குக்குட்பட்ட ஒரு சமூகத்தார் வசம் வைத்திருப்பது, பிரிட்டனின் ஏகாதிபத்திய எண்ணத்திற்கு அநுகூலமாயிருந்தது. ஏனென்றால், பாலஸ்தீனத்தின் பூகோள அமைப்பானது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஸ்திரமாக இருப்பதற்குச் சௌகரியமான ஓரிடத்தில் இருக்கிறது. இதைப் பற்றி, முதல் அத்தியாயத்தில் கூறியிருக்கிறோம்.

எனவே பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலனுக்கும், பாலஸ்தீனத்தில் யூதர்களின் தேசீய ஸ்தலம் ஸ்தாபனமாவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதென்பது நன்கு புலனாகிறது. மெனாஷெம் உஸ்ஸிஷ்கின் என்ற பிரபல ஜையோனியத் தலைவன் ஒருவன், ‘பாலஸ்தீன் ரெவ்யு’ என்ற பத்திரிகையில் 1936ம் வருஷம் பின் வருமாறு எழுதியிருக்கிறான்:-

பாலஸ்தீன முழுவதும் அராபியர் வசமாகி விட்டால், சீக்கிரத்தில் பிரிட்டிஷார், எகிப்திலிருந்து மெதுமெதுவாக விலகிக் கொண்டிருப்பது போல் பாலஸ்தீனத்திலிருந்தும் விலகிக் கொள்ள வேண்டியதுதான்; பாலஸ்தீனம் யூதர் வசமாகி விட்டால், யூதர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் நெருங்கிய அரசியல் தொடர்பு ஏற்பட்டு விடும்.


  1. Mandatory Power.
  2. Mandated Territory.
  3. ஜையோன் (Zion) என்ற ஒரு குன்றின் மீது, பாலஸ்தீன நகரம் கட்டப் பெற்றிருப்பதாக யூதர்களின் ஐதிகம். யூதர்களின் தேசீய இயக்கத்திற்கு ‘ஜையோனிஸம்’ என்ற பெயர் கொடுக்கப்பட்டது, இந்தக் குன்றின் பெயரைக் கொண்டுதான்.