பாலஸ்தீனம்/பூகோளமும் சரித்திரமும்
1. பூகோளமும் சரித்திரமும்
வேகமாகச் செல்லும் ஒரு மோட்டார் வண்டியில் ஏறிக் கொண்டு, இரண்டு மணி நேரம் நீங்கள் பிரயாணஞ் செய்வீர்களானால், பாலஸ்தீனத்தை வடக்கும், தெற்குமாகச் சென்று பார்த்து விடலாம். நில வீஸ்தீரணத்தில் மிகச் சிறிய பிரதேசந்தான். ஆனால், முக்கியமான இடத்தில் இருப்பதினாலேயே, எல்லாருடைய பார்வையும் இதன் மீது விழுந்திருக்கிறது.
பாலஸ்தீனம் ஒரு முச்சந்தியில் இருக்கிறது. ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா ஆகிய மூன்று கண்டங்களையும் இணைத்து வைக்கிற ஒரு பாலம் மாதிரியுள்ளது இந்த நாடு. அராபியர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் ஆகிய மூன்று மதத்தினரும், தங்களுடைய புனித நாடாக இதனைக் கொண்டாடுகிறார்கள். பிரிட்டன், ஜெர்மனி, இத்தலி ஆகிய மூன்று வல்லரசுகளும் இந்த நாட்டின் மீது கண்ணோட்டம் செலுத்தி வருகின்றன. கீழ் நாட்டையும், மேனாட்டையும் சேர்த்து வைக்கிற ஆகாய விமான வழிகள், கடல் மார்க்கங்கள் ஆகிய இவற்றிற்கெல்லாம் ஒரு ‘ஜங்க்ஷன்’ மாதிரியாகவும், சூயஸ் கால்வாயின் பாதுகாவலனாகவும் பாலஸ்தீனம் இருக்கிறது.
பாலஸ்தீனத்திற்கு வடக்கில் சிரியா; கிழக்கில் ட்ரான்ஸ்–ஜார்டோனியா; தெற்கே ஹெட்ஜரஸ், எகிப்து முதலியன; மேற்கே மத்திய தரைக்கடல். ஐரோப்பிய யுத்த முடிவுக்குப் பின்னரே, இந்த எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டனவென்பது இங்குக் குறிப்பிடத் தக்கது. இந்த எல்லைக்குட்பட்ட தற்போதைய பாலஸ்தீனம், சுமார் பதினாயிரம் சதுர மைல் விஸ்தீரணமுடையது. 1931ம் வருஷத்தில் எடுக்கப்பட்ட ஜன கணிதப்படி, மொத்த ஜனத் தொகை 10½ லட்சம். ஆனால், இதற்குப் பிறகு ஜனத் தொகை அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் எடுத்த ஒரு கணக்குப்படி, அராபியர்கள் மட்டும் பத்து லட்சம் பேரும், யூதர்கள் மட்டும் நாலரை லட்சம் பேரும் இருக்கிறார்களென்றால், மற்ற ஜாதியாருடைய எண்ணிக்கையையும் சேர்த்து, ஜனத் தொகை அதிகம் பெருகியிருக்கிறதல்லவா?
யூதர்களில் பெரும்பாலோர் ஜையோனியர்கள். அதாவது பாலஸ்தீனத்தில் புதியதொரு யூத சமுதாயத்தை அமைக்க வேண்டுமென்ற நோக்கமுடையவர்கள். யூதர்களில் நூற்றுக்கு இருபத்தைந்து பேர் விகிதம் விவசாயத்தையே ஜீவனோபாயமாகக் கொண்டிருக்கிறார்கள். யூதர்களில், அரசியல் கட்சி பேதங்கள் அதிகமாயில்லை.
அராபியர்கள் நாடோடி வாழ்க்கையை நடத்தும் ஒரு பூர்விக ஜாதியார் என்று சிலர் நினைக்கின்றனர். இது மிகத் தவறு. இவர்களுடைய தலையணி முதலியன, புராதன நாகரிகத்தைக் காட்டுகிறதேயாயினும், நவீன நாகரிகப் போக்கில் இவர்கள் ஈடுபடாமலில்லை. அராபியர்களில் ஐந்தில் மூன்று பங்கினர் விவசாயிகள். இவர்கள் அநேகமாக மலைப் பிரதேசங்களிலேயே தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். அராபியர்களின் மொத்த ஜனத் தொகையில் எட்டில் ஒரு பங்கு பேர் கிறிஸ்தவர்கள். இவர்கள் அநேகமாக நகரங்களில் வசிக்கும் வியாபாரிகளாகவும், உத்தியோகஸ்தர்களாகவும் இருக்கிறார்கள். அராபியர்களில் ஆறு விதமான அரசியல் கட்சிகள் இருந்தன. ஆனால், 1935ம் வருஷத்தில் இவற்றில் ஐந்து கட்சிகள் ஒன்று சேர்ந்து விட்டன.
1936ம் வருஷத்திற்கு முன்னர், யூதர்களும், அராபியர்களும் சிநேகப் பான்மையுடனேயே பழகி வந்தார்கள். ஆனால், இப்பொழுது இந்தப் பழக்கமெல்லாம் நின்று விட்டன. இரு ஜாதியினரும் ஒரே நகரமாயிருந்தாலும், தனித் தனி இடங்களிலேயே வசிக்கிறார்கள். யூதர்கள், தங்கள் ஜாதியினருடைய ஹோட்டல்களில்தான் சாப்பிடுகிறார்கள்; மோட்டாரில் ஏறிச் செல்கிறார்கள்; சிகரெட் பிடிப்பதும், தீப்பெட்டி உபயோகிப்பதும் கூட யூதருடையதுதான். இங்ஙனமே அராபியர்களும், தங்கள் ஜாதியினருடைய சாமான்களையே உபயோகிக்கிறார்கள். இரு ஜாதியினருக்கும் தனித்தனிப் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. அந்தந்த ஜாதிப் பிள்ளைகள், அந்தந்த ஜாதிப் பள்ளிக்கூடங்களுக்கே செல்கின்றன. பாலஸ்தீனத்தில், மத்திய தரைக்கடலோரமாகத் தென் கிழக்கில் உள்ள சமதரைப் பிரதேசம் செழிப்புள்ளது. மத்தியிலுள்ள பிரதேசத்தில் குன்றுகளும், முட் புதர்களும் நிரம்பியிருக்கின்றன. தெற்குப் பிரதேசம் வெறும் வனாந்திரம். இங்ஙனம், மூன்று விதமாகப் பாலஸ்தீனத்தைப் பிரிக்கலாம்.
பாலஸ்தீனத்தில் இயற்கை வளம் மிகக் குறைவு. கடலோரப் பிரதேசத்தில் ஆரஞ்சு, திராட்சை முதலிய பழ தினுசுகள் அதிகமாக உற்பத்தி செய்யப் படுகின்றன. நீர்ப்பாசன வசதிகள் மிகக் குறைவாயுள்ள படியால், விவசாய அபிவிருத்திக்கு இந்த நாட்டில் வழி கிடையாது. மரணக் கடலிலிருந்து, கைத் தொழில்களுக்கு வேண்டிய சில ரஸாயனப் பொருள்கள் கிடைக்கின்றன.
‘பாலஸ்தீனம் எப்பொழுதுமே ஒரு சமூகத்தாருக்குச் சொந்தமாயிருந்ததில்லை. இனியும் அநேகமாக அப்படியிராது’ என்று ஸர் ஜார்ஜ ஆடம்ஸ் ஸ்மித் என்ற ஓர் ஆங்கிலேய அறிஞன் கூறினான். பாலஸ்தீனத்தின் பூர்விக சரித்திரத்தை நாம் சிறிது புரட்டிப் பார்க்கிற போது, இந்த வாக்கியங்கள் எவ்வளவு உண்மையாயிருக்கின்றன?
முற்காலத்தில் எதியோப்பியர், அஸ்ஸிரியர், பாரசீகர், மங்கோலியர் முதலிய இன்னும் யாராரோ இந்த நாட்டில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார்கள். இவர்களில், ஒவ்வொருவரும் தங்கள் அதிகார பலம் குன்றியவுடன், தங்களாலியன்றவளவு இந்த நாட்டை அழித்தும் விட்டிருக்கிறார்கள். கிரேக்க மன்னனாகிய மஹா அலெக்ஸாந்தர், கி. மு. 322ம் வருஷத்தில் இந்த நாட்டின் வழியாகத்தான் எகிப்தின் மீது படையெடுத்துச் சென்றான். இந்த நாட்டின் தெற்குப் பாகத்திலுள்ள காஜா என்ற ஊரைக் கைப்பற்ற இவன் இரண்டு மாத காலம் முற்றுகை போட வேண்டியிருந்தது. மஹா அலெக்ஸாந்தரின் செல்வாக்குக்கு இந்த நாடு உட்பட்டிருந்ததேயாயினும், இவன், நாட்டு மக்களின் தினசரி வாழ்க்கையில் தலையிடவில்லை.
அலெக்ஸாந்தருக்குப் பிறகு, அவனுடைய முக்கிய தளகர்த்தர்களில் ஒருவனாகிய டாலெமி என்பவனுடைய ஆதிக்கத்தின் கீழ் பாலஸ்தீனம் இருந்தது. இவன் காலத்தில் கிரேக்க நாகரிகம் இந்த நாட்டில் தலை காட்டத் தொடங்கியது. ஆனால், கிரேக்கர்களுடைய ஆதிக்கம் அதிக நாள் நீடிக்க வில்லை. கி.மு.63ம் வருஷத்தில் பாம்பே (Pompey) என்பவனுடைய முயற்சியால், இந்த நாடு, ரோம ஏகாதிபத்தியத்தின் செல்வாக்குக்குட்பட்டது. இவர்களுடைய காலத்தில், பாலஸ்தீன ஜனங்கள் கலகத்திற்குக் கிளம்பினார்கள். இதனால், ரோமர்கள் கோபங் கொண்டு தங்களின் சிறந்த தளகர்த்தனாகிய வெஸ்பேஸிபான் என்பவனுடைய தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பி கி.பி.70ம் வருஷம் செப்டம்பர் மாதம் ஜெருசலேம் நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அப்பொழுது இந்த ஊரிலுள்ள பல கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தக் காலத்திலிருந்தே, பாலஸ்தீனத்தின் புராதன வாசிகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டிருந்த யூதர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பரவத் தொடங்கினார்கள்.
கி.பி. ஏழாவது நூற்றாண்டிலிருந்து பாலஸ்தீனத்தின் ஆட்சி அராபியர்களிடமிருந்து வந்தது. கி.பி.11, 12வது நூற்றாண்டுகளில், முஸ்லீம்களிடமிருந்து, கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமாகிய ஜெருசலேத்தை விடுவிக்க வேண்டு மென்னும் நோக்கத்துடன் ஐரோப்பாவிலிருந்து பல 'சமயத் தொண்டர் படை'கள் (Crusades) கிளம்பின. இவர்கள் வசத்தில் இந்த நாடு கொஞ்ச காலம் இருந்தது. இதற்குப் பிறகு, கி. பி. 1516ம் வருஷத்திலிருந்து துருக்கியர்கள், இந்த நாட்டின் ஆதிக்கத்தை ஏற்று நடத்தி வந்தார்கள். 1914ம் வருஷம் ஐரோப்பிய மகா யுத்தம் தொடங்கிய காலம்வரை துருக்கிய சாம்ராஜ்யத்தின் செல்வாக்கே இந்த நாட்டில் ஓங்கி நின்றது.
ஐரோப்பிய யுத்தத்தில், துருக்கி ஜெர்மனியுடன் சேர்ந்திருந்ததல்லவா? இதனால் நேசக்கட்சியினர், துருக்கியின் ஆதீனத்திற்குட்பட்டிருந்த நாடுகளையும் தாக்க வேண்டு மென்று திட்டம் போட்டனர். இதன்படி, நேசக் கட்சியினரில் முக்கியஸ்தர்களான பிரிட்டிஷார், பாலஸ்தீனத்தின் மீது படை யெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். 1918ம் வருஷம் செப்டம்பர் மாதத்திற்குள் பாலஸ்தீனம் முழுவதும் நேசக் கட்சியினர் வசமாகி விட்டது. பின்னர், சர்வ தேச சங்கத்தின் சார்பாக, இதன் நிருவாகம் பிரிட்டிஷார் வசம் ஒப்புவிக்கப்பட்டது. இதனை ஒரு ஹை கமிஷனர் மேலதிகாரியாயிருந்து நிருவாகம் செய்கிறார். இவர், பிரிட்டிஷ் குடியேற்ற நாட்டு மந்திரி இலாகாவினால் நியமிக்கப் படுகிறவர். இவருடைய வருஷச் சம்பளம் 4,000 பவுன்.
பாலஸ்தீனத்திலுள்ள முக்கியமான நகரங்களும், அவற்றின் ஜனத் தொகையும் வருமாறு:-
பெயர் |
ஜனத் தொகை |
|
நிருவாக சௌகரியத்திற்காக, பாலஸ்தீனத்தை வட பாலஸ்தீனம் என்றும், தென் பாலஸ்தீனமென்றும் இரண்டு ஜில்லாக்களாகப் பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஜில்லாவும், ஒவ்வொரு டிப்டி கமிஷனரின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது. வட பாலஸ்தீன ஜில்லாவின் தலைநகரம் ஹைபா. தென் பாலஸ்தீன ஜில்லாவின் தலைநகரம் ஜாபா. ஜெருசலேம் நகரத்தை மட்டும் தனி ஜில்லாவாகப் பிரித்து, ஒரு டிப்டி ஜில்லா கமிஷனரின் மேற்பார்வையில் விடப்பட்டிருக்கிறது.
பாலஸ்தீனத்தின் தலைநகரம் ஜெருசலேம். இங்கு கிறிஸ்தவர்களுக்குப் புனிதமான ஒரு தேவாலயமும், முஸ்லீம்களின் முக்கிய மசூதியொன்றும், யூகர்களின் ‘அழுகைச் சுவரும்’ சரித்திரப் பிரசித்தமான சின்னங்களாக இலங்குகின்றன. உலகத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் மிகப் புராதனம் வாய்ந்த தேவாலயம் பெத்ல்ஹெம் என்ற நகரத்தில் இருக்கிறது. நாஜரெத் என்ற நகரத்தில்தான் கிறிஸ்து நாதர் தமது இளமையைக் கழித்தாரென்று விவிலிய நூல் கூறுகிறது.
பாலஸ்தீனத்தின் முக்கிய துறைமுகங்கள் இரண்டு. அவையே, ஜாபா, ஹைபா என்பன. இரண்டும் செயற்கைக் துறைமுகங்கள்தான். ஹைபா துறைமுகம் 1933ம் வருஷந்தான் கட்டி முடிக்கப் பட்டது. மோசூல் எண்ணெய்க் கிணறுகளிலிருந்து குழாய் வழியாக இந்தத் துறைமுகத்திற்கு பெட்ரோல் கொண்டு வரப்பட்டு, வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது.
பாலஸ்தீனத்தில் பேசப்படுகிற முக்கியமான பாஷைகள் மூன்று. அவையே இங்கிலீஷ், அரபு, ஹீப்ரூ.