உள்ளடக்கத்துக்குச் செல்

பாலைப்புறா/அத்தியாயம் 13

விக்கிமூலம் இலிருந்து

ந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில், ஏதோ ஒரு வீட்டில் திருமிகு சந்திரசேகர், தொலைக்காட்சிப் பெட்டியில், தாடியும், மீசையுமாய் பிரதமராய் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட அரசியல் நிகழ்வுகளை, ஓரம் கட்டாமல் ரசித்துப் பார்க்கும் கலைவாணியோ…

முகம் வீங்கிக் கிடந்தாள். செங்குத்தாய் உயர்ந்த குத்துக் கால்களில் முகம் போட்டு, அந்தக் கால்களுக்கும், கையால் கட்டுப் போட்டுக் கிடந்தாள். முந்தானை, கால்களுக்குத் திரையானது. முடிக் கற்றைகள் நெற்றியில் இருந்து மூக்கு வரை பரவி, அவள் முகம், சன்னமான இரும்புக் கம்பிகளுக்குள் சிறைப்பட்டது போன்ற தோரணை… அவள் உடம்புக்குள்ளேயே, ஒரு வித பம்பரச் சுற்று; உள் உறுப்புகள் கழன்று போனது போன்ற பிராண வாதை, எலும்பிலும், சதையிலும் இவற்றைக் கட்டிப் பிடிக்கும் நரம்பிலும், எங்கும் பல்கிப் பரவி ஒடும் குருதியிலும் உள்ள அத்தனை அணுக்களும், ஒன்றை ஒன்று பிய்த்துக் கொண்டு, வெளியேறத் துடிப்பது போன்ற இயக்கம். இணைந்து நின்றவை, எதிரிகளாய் ஆனது போன்ற எதிர் இயக்கம்… ஆனாலும், நேரம் ஆக ஆக, மனோவலி, உடல் வலியை வெல்ல, கலைவாணி மரத்துப் போய்க் கிடந்தாள். அவள் காலடியில் கிடந்த பத்திரிகைகள், பக்கம் பக்கமாகச், சிதறி, மின்சார விசிறியில் அவளைக் கேலிச் செய்வது போல், துள்ளித் துள்ளிக் குதித்தன. ‘எங்களைப் பார் எங்களைப் படித்துப் பார்’, என்று சலசலப்பாய் சத்தமிட்டன. தமிழ்ப் பத்திரிகைகளோ, கட்டம் போட்ட செய்தியை காட்டிக் காட்டி காற்றில் அடக்கமாய் ஆடின. இந்த மனோகரை அகில உலக கவனத்திற்கு கொண்டு போன செய்தி… நியூயார்க் விமான நிலையத்தில், அவனுக்கு நடத்தப்பட்ட எய்ட்ஸ் சோதனையை, ராய்ட்டரோ அல்லது வேறு ஏஜென்சியோ சுற்றுக்கு விட, அதை இந்திய ஏஜென்சி பாலைப்புறா

118

நிறுவனங்கள், எடுத்தாள, இந்தியப் பத்திரிகைகளும், மனோகரைப் பந்தாடி விட்டன. எய்ட்சின் பெயரால், இந்தியாவைப் பந்தாட நினைத்த மேற்கு நாட்டினருக்கு, இந்தப் பத்திரிகைகளே, அறிந்தோ அறியாமலோ அறிவிப்பாளராகிவிட்டன. எய்ட்ஸ் நோயைப் பற்றியோ அல்லது அதைத் தரும் கிருமிகளைப் பற்றியோ இலக்கணம் வகுக்கப்படாத சமயம் என்பதாலோ என்னவோ, இந்தச் செய்தியே, எய்ட்ஸை விடக் கொடுரமாகி விட்டது.

‘அமெரிக்கா என்ன இந்தியாவா... பொறியாளர் மனோகர், எய்ட்ஸ் பொறிக்குள் சிக்கிய கதை’.

‘எஞ்சினியர் மனோகருக்கு எய்ட்ஸ் நோய்; கண்டபடி சல்லாபம் செய்தவர்க்கு நேர்ந்த கதி...’

‘தமிழ்நாட்டு எஞ்சினியருக்கு எய்ட்ஸ்... அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்படுகிறார்'.

‘ஹெச்.ஐ.வி. எஞ்சினியர் அமெரிக்காவில் இருந்து திரும்பி அனுப்பப்படுகிறார்.'

"ஹெச்.ஐ.வி. இன்பெக்டட் இன்டியன் சென்ட்பேக் ஹோம்” இந்தப் பத்திரிகை செய்திகளின் ஒவ்வொரு எழுத்தும், ஒரு எய்ட்ஸ் கிருமி போலவே, பீதியை எழுப்பியது. இந்த நோயைப் பற்றி தெரிந்த உண்மைகளைவிட, தெரியாத கைச்சரக்கே, அந்த செய்திக்குப் பின்னணியாக எழுதப்பட்டிருந்தது. 'எய்ட்ஸ் நோயாளியைத் தொட்டாலே, நோய் தொற்றிக் கொள்ளும். அவர்கள் எச்சில்பட்டாலே, பட்டவர்கள் எச்சமாவார்கள்.... எய்ட்ஸ் நோயாளியைத் தனியாய் வைக்க வேண்டும். மனிதாபிமான அடிப்படையிலும், அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டியதுதான். அதே சமயம், அவர்களுக்கு நாமே உணவாகி விடக் கூடாது. உணவு கொடு. ஆனால் தொலைவில் நின்று தூக்கி எறி. இருக்க இடம் கொடு. ஆனால் பக்கத்தில் வைக்காதே. ஆறுதல் சொல்... அதற்காக முதுகைக் கூட தட்டிக் கொடுக்காதே... எய்ட்ஸ் உனக்கும் வந்திடும்...’

அந்தச் செய்தி, இப்படிப் பச்சையாக சொல்லவில்லையானாலும், படிப்பவர் மனதில் இப்படிப்பட்ட கொச்சைத்தனந்தான் எஞ்சி நிற்கும்படி வெளியிடப்பட்டிருந்தது.

இந்தச் செய்தி தாங்கிய பத்திரிகைகளை, கலைவாணி வருவித்துக் கொண்ட விதமே தனிச்செய்தி. மனோகர் வேலை பார்க்கும் அந்த நிறுவனம், நியூயார்க்கில் உள்ள ஒரு பன்முக பன்னாட்டுக்கம்பெனிக்கு, கணிப்பொறித் 119

சு. சமுத்திரம்

துறையில் ஆலோசனை வழங்கும் கான்டிராக்டைப் பெற்றுக் கொண்ட சாதனையை சுட்டிக்காட்டி, அதை அங்கே சென்று நிறைவேற்றுவதற்காக ஐந்து பொறியாளர் கொண்ட குழுவை அனுப்பி இருப்பதாகவும், ‘தடபுடலாக' ஒரு செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டி அறிவித்தது. இந்த ஐந்து உறுப்பினர்களின் புகைப்படங்களையும், செய்தியாளர்களிடம் கொடுத்திருந்தது. மேகங்கள் ஒரு சதுர மீட்டருக்கு ஆறு வாட்ஸ் பெறுமான சூரிய வெளிச்சத்தை உள் வாங்கிக் கொள்கின்றன என்ற பழைய அடிப்படையில், வானிலை, கணிக்கப்பட்ட காலம் போய், இந்த மேகங்கள் இருபத்தைந்து வாட்ஸுக்கும், அதிகமாக சூரிய வெப்பக் கதிர்வீச்சை உள்வாங்குகின்றன என்ற புதிய கண்டுபிடிப்பிற்கு ஏற்ப, அந்த பன்னாட்டுக் கம்பெனிக்கு, வானிலையை, புதிய முறையில் கணிக்கும் கம்ப்யூட்டர் மாடல்கள் தேவைப்படுவதைச் சுட்டிக்காட்டியும், இதற்காக இந்த இந்தியக் கம்பெனியை, அந்த நிறுவனம், ஆலோசனை நிறுவனமாய் நியமித்திருப்பதையும் விளக்கும் இரண்டு பக்கக் குறிப்பு ஒன்றும், செய்தியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது... இதை நியூயார்க்கில் இருந்து கால் போட்ட மனோகர் மூலமே தெரிந்து கொண்ட கலைவாணி, அன்றும், அதற்கு முந்தின தினமும், வீட்டிற்கு வழக்கமாக வரும் இந்து பத்திரிகை தவிர, இதர பத்திரிக்கைகளையும் மீனாட்சி மூலம் வரவழைத்தாள். நேற்று எந்தச் செய்தியும் வரவில்லை. இன்றைக்காவது வந்திருக்கும் என்றுதான் மீனாட்சியை அனுப்பினாள். கணவனின், புகைப்படத்தைப் பத்திரிகைகளில் பார்க்க அப்படி ஒரு துடிப்பு... ஐவரில் அர்ச்சுனனாகக் கருதப்படும் கணவனை, அவன் வாழ்க்கைக் குறிப்போடு பார்ப்பதற்காக, மீனாட்சி கடையில் இருந்து வருவதற்கு முன்பே, வீட்டுக்கு வெளிப்பக்கமாய் உள்ள சிட் அவுட்டில்: நின்று கீழே எட்டிப் பார்த்தாள். அந்த வேலைக்காரச் சிறுமியை, கீழே பார்த்ததுமே, அங்கிருந்தபடியே அவளை பெயர் சொல்லிக் கூப்பிட்டு, ‘சீக்கிரம் சீக்கிரம்’ என்று கையாட்டினாள். லிப்ட் பக்கமாய் ஒடிப் போனாள். அதிலிருந்து இறங்கிய மீனாட்சியின் கைப்பிடித்த பத்திரிகை மொந்தையை, வழிப்பறி செய்வதுபோல் பறித்துக் கொண்டு, அங்கு நின்றபடியே புரட்டினாள். புரட்டப் புரட்ட... அந்த கம்பெனியின் சாதனையை, எய்ட்ஸ் கலவையோடு படிக்கப்... படிக்க... அவளைத்தான் யாரோ... எதுவோ புரட்டுவது போல் இருந்தது.

கலைவாணி, எப்படித்தான் வீட்டுக்கு வந்தாளோ... இருண்டு போன கண்கள் எப்படித்தான் வீட்டைக் கண்டுபிடித்தனவோ,... துவண்டு போன கால்கள் எப்படித்தான் நடந்தனவோ, இதுதான்நம் வீடு என்று 'பெருச்சாளி’ பிடித்த மூளை எப்படித்தான் கண்டுபிடித்ததோ... பார்வை அற்றோர் வைத்திருக்கும் ஊன்றுகோல் போல, அங்கும் இங்கும் ஒருகை ஆட, மறுகை 120 பாலைப்புறா

தலைக்கு மேல் போக, கால்கள் பழக்கதோஷத்தில் தள்ளாடி, அல்லாடி அவளை சுமந்து செல்ல, கலைவாணி, கட்டிலில் போய் தொப்பென்று விழுந்தாள். அதை இறுகப் பிடித்து, அவள் குப்புறக் கிடந்தாள். வேலைக் காரச் சிறுமிக்குக் கையும் ஒடவில்லை, காலும் ஒடவில்லை... எக்கா... எக்கா என்று அந்தக் கட்டிலையே சுற்றிச் சுற்றி வந்தாள்... கிராமங்களில், கட்டிலில் போட்ட பிணத்தைச் சுற்றி வருவார்களே, அப்படி, கலைவாணி, அடிக்கடி எழுவதும், அந்தப் பத்திரிகைச் செய்தியைப் படித்துப் பார்த்து, கசக்கிப் போட்டுவிட்டு, படுக்கையிலேயே மீண்டும் விழுவதுமாக இருந்தாள். மீனாட்சி, பயந்து போனாள். அக்கம் பக்கத்துப் பெண்களை வரவழைப்பதற்காக, வாசலுக்கு வந்தாள். ஆனாலும், அவள் படிதாண்ட வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. சியாமளா... மோனிகா... பாலா நாராயணசாமி, வேதாப்பாட்டி... திருமதி. கல்யாணராமன், திருமதி எட்வர்ட் சாமுவேல் எல்லோருமே வந்து விட்டார்கள். எவரெல்லாம், இந்தக் கலைவாணியின் வீட்டில் பக்கடாவைச் சுவைத்துக் கொண்டே, பெண்கள் சங்கம் அமைப்பது பற்றி ஆலோசிக்க வந்தார்களோ, அவர்களில் திருமதி நாகராஜன் தவிர அத்தனை பெண்களும் வந்துவிட்டார்கள். முகத்தில் பெளடரை அப்புவது போல், அனுதாபம் அப்ப, கவலையோடுதான் காணப்பட்டார்கள். சியாமளா ‘அய்யய்யோ' வென்று கூட கையை நெறித்தாள். ‘பாவம்... பரிதாபம்' என்று சொன்னபடியே, சியாமளா அங்குமிங்கும் சுழன்றாள்; அத்தனைபேரும், ஆகாயத்தைக் கூடப் பார்த்து, ஆண்டவனைத் தேடினார்கள். ஜன்னல் வழியாகவும், வாசல் வழியாகவும், இப்போது மல்லாந்து கிடந்தவளை மனம் நொந்து பார்த்தார்கள். ஆனால் ஒருத்திகூட உள்ளே போகவில்லை. வாசலுக்கு அப்பால் கழுத்தை நீட்டிக் கூடப் பார்க்கவில்லை... கணவனுக்கு இருந்தால், கட்டியவளுக்கும் நிச்சயம் என்பதை தெரிந்து வைத்திருக்கும் பெண்களாயிற்றே... தொட்டாலே ஒட்டிக் கொள்ளும் எமநோய் என்பதைச் செய்தியாய் - அதுவும் பத்தி பத்தியாய் படித்த பெண்களாயிற்றே... வெளியிலேயும் நிற்க முடியாமல் - உள்ளேயும் போக முடியாமல் அல்லாடினார்கள்.

ஆனால், கைநாட்டான மீனாட்சி சிறுமிக்கு - இது புரியவில்லை. கட்டிலில் மல்லாக்கக் கிடந்த கலைவாணி அக்கா, கண்விழிக்க வேண்டும் என்பதே அவளுடைய விருப்பம்- ஆசை... ஆனால் எப்படி என்பது தெரியாமல் போனதால், திருதிருவென்று விழித்தாள். இறுதியில், வெளியில் நின்றவள்களில், அவளுக்குப் பிடித்த சியாமளாவைக் கையைப் பிடித்து ‘வாங்கக்கா... அக்காவை பாருக்கா' என்று முனங்கியபடியே உள்ளே இழுத்தாள். ஆனால், சியாமளா பயந்து போய் கையை பயங்கரமாக உதறியதால், மீனாட்சிதான் வெளியேவந்து விழுந்தாள். முட்டிக்கால்களில் சு. சமுத்திரம் 121

ரத்தக் கசிவோடு, அவள், சியாமளாவை குரோதமாகப் பார்த்தபடி எழுந்தாள். திருமதி கல்யாணராமன்தான், மீனாட்சியை, மென்மையாய் மீண்டும் அந்த வீட்டிற்குள் தள்ளிவிட்டு, உபதேசம் செய்தாள்.

‘செம்பு நிறைய தண்ணீர் எடுத்து... அவள் முகத்துல தெளிடி... மூக்குல கை வச்சு பாரு... மொதல்ல மூக்கு... அப்புறம் தண்ணீரு...’

மீனாட்சி, கலைவாணியின் மூக்கைத் தொடவேண்டியதில்லை... அந்த அளவுக்கு, இப்போது அவள் 'எம்மோ... எய்யோ... எத்தான்... எத்தான்...’ என்று மூச்சே பேசுவதுபோல் முணங்கினாள். அப்படியும் மீனாட்சி அவள் மூக்கில் கை வைத்துவிட்டு, சமையலறைக்குள் போய், ஒரு செம்பு நிறைய தண்ணீர் கொண்டு வந்தாள். கலைவாணியக்காவின் முகமெங்கும், நீரை உள்ளங் கையில் வாங்கி வாங்கி, வாரி வாரி அடித்தாள். ‘எக்கா... எக்கா... எழுந்திருங்க அக்கா...’ என்று அவளைத் தோளைப் பிடித்துக் குலுக்கினாள்.

மெள்ளக் கண்விழித்த கலைவாணி, வெளியே திரண்டு நின்ற சிநேகிதிகளை, அரண்டு பார்த்தாள். அப்படி பார்த்த கண்களில் நீர் கொட்டின. அவள் கரங்களோ, பார்வைக்குத் திரையிட்ட அந்தக் கண்களைத் துடைப்பதற்குப் பதிலாக, தலையை அடித்தன. தங்க வளையல்கள் தலைமுடியில் சிக்கி, வலி கொடுக்கும் உணர்வு அற்றுப்போய், தலையில் இருந்து முடிமுடியாய்ப் பிய்த்த கலைவாணியின் கரங்களை, மீனாட்சி பிடிக்கப் போனாள். முடியவில்லை. கீழேதான் விழுந்தாள். விழுந்தவள் மீண்டும் எழுந்து, அக்காவின் அருகே போகப் போனாள். கட்டில் சட்டத்தில் தலையை மோதியவளைப் பிடிக்க முயற்சித்தாள். அந்த முயற்சிக்கு இடையிலேயே, ‘அக்காவைப் பிடிங்கம்மா... அக்காவைப் பிடிங்கம்மா...’ என்று கலைவாணியைப் பிடித்தபடியே, வெளியே நின்றவள்களுக்கு விண்ணப்பம் வேறு செய்தாள். அவர்கள், உடம்பைத்தான் ஆட்டினார்களே தவிர, உள்ளே வரவில்லை. ஆனாலும் வேதாப்பாட்டிக்கு மனம் கேட்கவில்லை; யானைச்சரீரத்தை ஆட்டியபடியே உள்ளே வந்தாள். “எம்மா... கலைவாணி" என்று சொல்லப் போனாள். அதற்குள், வெளிக் கூட்டத்தில் நின்ற அவள் பேத்தி உமா, உள்ளே வந்து, பாட்டியின் சேலையைப் பிடித்து இழுத்தாள். உடனே வேதாப்பாட்டி, அம்மணமாகாமல் இருப்பதற்காக பேத்தியோடு வெளியே வந்தாள். ‘மனோகர் மாமாவுக்கு.. வந்த எய்ட்ஸ் கலைவாணி மாமிக்கும் வந்திருக்கும்... தொட்டால் ஒட்டிக்கும்... இனிமே உள்ளே போனே... எங்க வீட்டுக்கு வெளிலதான் நீ நிக்கணும்’ என்று ஒரு போடு போட்டாள். ‘எங்க' என்ற அந்த ஒற்றைச் சொல்லில் தன்னை ஒதுக்கப்பட்டவளாகக் காட்டிய, கல்லூரிப் பேத்தியை, சிறிது நேரம் வெறித்துப் பார்த்த வேதாப் பாட்டி, ஒதுங்கிக் கொண்டாள். 122 பாலைப்புறா

சைதாப்பேட்டையில் குடியிருக்கும் சின்னமகன் ஈன்ற பேரனாவது "நம்ம”... என்ற சொல்லை உச்சரிக்க மாட்டானா என்ற ஆதங்கத்தோடும், ஆசையான எதிர்பார்ப்போடும் புறப்பட்டாள் சைதாப்பேட்டைக்கு, அப்போதே...

கலைவாணிக்கு, இன்னும் யதார்த்தம் உறைக்கவில்லை. அந்தப் பெண்கள் ஏன் வெளியே நிற்கிறார்கள் என்ற உண்மை புரியவில்லை... இன்னும் சொல்லப் போனால், அவர்கள் அப்படி நிற்பதுகூட நிழல் உருவங்களாகவே தோன்றின. அடிக்கடி இவளைக் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டோமே என்று கதிகலங்கி நிற்கும் திருமதி பாலா நாராயணசாமி, ஊரில் இருந்து அம்மா கொடுத்தனுப்பிய எள்ளுருண்டையை, இவளோடு சேர்ந்து கடித்ததற்காக வருந்தும் மோனிகா, யாருமே கலைவாணியின் பார்வையில் பழகியவர்களாய் பதியவில்லை. அவை ஆவி உருவங்களோ, அசல் உருவங்களோ.. அதுவும் மனதில் படவில்லை...

இதற்குள், ஆங்காங்கே ஜன்னல்களில் இருந்து கோபக் குரல்களும், குற்றேவல் குரல்களும், கெஞ்சும் குரல்களும் ஒலித்தன. அத்தனைபேரும் - அதுதான் சாக்கென்று தத்தம் வீடுகளுக்குள் ஒடினார்கள். அலுவலகத்திற்கு கணவன்மாரை ஆயத்தப்படுத்த வேண்டுமே... காலநேரம் பார்க்காமல், கலைவாணிக்கு இரங்க முடியுமா...

ஆயிற்று... எல்லாமே சூன்யமாயிற்று...

எப்படியோ, ஒரு வழியாய் விஷயத்தை அரைகுறையாய்க் கேள்விப்பட்ட மீனாட்சி, மோனிகாவின் யோசனைப்படி, சமையலறைக்குப் போய், இரண்டு இட்லிகளைப் பிய்த்து விள்ளல்களாக்கி, சிறிது சட்னியையும் ஊற்றி, இப்போது மூலையோடு மூலையாய் முடங்கிக் கிடந்த கலைவாணியின் அருகே உட்கார்ந்து, ஒரு இட்லித்துண்டை எடுத்து வாயில் ஊட்டினாள். அவளோ, வாய்க்குள் அந்த உணவுத் துண்டு போகிற உணர்வற்று, கண்கள் திறந்திருக்கக் குருடானாள். எங்கேயோ அந்தரத்தில், வேர்களான கால்கள் அற்று, பார்வை தரும் கண்களற்று, உடலற்றும் உயிரற்றும் போனதுபோல் கிடந்தாள். மீனாட்சி ஒரேயடியாய் உலுக்கிய போது, அந்த இட்லித் துண்டு அவள் வாயில் இருந்து தானாக வெளியே விழுந்தது. ஆனாலும், மீனாட்சி எக்கா எக்கா என்று அவள் காதுகளையும், உடலையும் உலுக்கிய போது, கலைவாணி உலகுக்கு வந்தாள். தன்னையே திடுக்கிட்டுப் பார்த்தாள். அவள், மனோகர் என்கிற எய்ட்ஸ் நோயாளியின் மனைவி. அவள் சென்னையில் இருக்கிறாள். கொட்டு மேளத்தோடு போன மனோகர், இன்றோ, நாளைக்கோ, வரப் போகிறான்.

மீனாட்சி, மலங்கமலங்கப், பார்த்தபோது, கலைவாணி திடீரென்று சு. சமுத்திரம் 123

அவளைக் கட்டிப்பிடித்து அழுதாள். அந்தச் சிறுமியின் தலையில் முகம் போட்டு தன் சுமையைக் கொடுப்பதுபோல், அதை அழுத்தி அழுத்தி அழுதாள். உடனே மீனாட்சியும், உடம்பை மேல் நோக்காய் திருப்பி, எக்கா எக்கா என்று அரற்றியபோது, கண்ணீர்கள் கலந்தன. கன்னங்களை மாற்றிக் கொண்டன.

சிறிது நேரத்தில், கலைவாணிக்கு ஒரு சின்னத் தெளிவு... ஒரு நப்பாசை... பத்திரிகைச் செய்தி பொய்யாக இருக்கலாம். வேறு எவரின் பெயருக்கோ, மனோகர் பெயர் இடம் மாறி இருக்கலாம். அந்த ஐவர் குழுவில், வேறு ஒருத்தருக்கு டெஸ்ட் நடத்தி இருக்கலாம். உதவிக்குப் போன மனோகர், டாக்டரோ, எவரோ பெயரைக் கேட்டபோது, தெரியாத்தனமாய், தன் பெயரைச் சொல்லி இருக்கலாம்...

கலைவாணி,... தலையை நிமிர்த்தப் போனாள். முடியவில்லை. பிணக்கனமாய் கனத்தது. கால்களைச் சுருக்கப் போனாள்; விறகுக் கட்டையாய் விறைத்தன. ஆனாலும் மீனாட்சியின் உதவியோடு, சுவரோடு சுவராய்ச்சாய்ந்து, கரங்களைப் பற்றி எப்படியோ எழுந்து, கம்பெனி அதிகாரி சூரிய நாராயணனிடம், தன் சந்தேகத்தை உண்மையாக்க நினைத்து, டெலிபோனைத் தொட்ட போது...

பொத்துப் பொத்தென்ற சத்தம்... இரண்டு சூட்கேஸ்கள் தானாய் விழுவது போல் விழுகின்றன... எவரோ... ஒருத்தரின் பூட்ஸ் காலடிச்சத்தம் சன்னம் சன்னமாய்க் குறைந்து கொண்டே போகிறது. மனோகர். ஒருவாரத் தாடியோடும் மீசையோடும் உள்ளே வந்து நிற்கிறான்... பிடிபட்ட ஒரு குருவி இறுதியில்... இனி செய்வதற்கு ஏதுமில்லை. என்பது போல் பார்க்குமே ஒரு பார்வை..., அப்படிப்பட்ட பார்வையாய், பார்க்கிறான். கசங்கிப் போன உடம்பில் கலங்கிப் போன கண்கள். படுகுழியான கன்னங்கள்... அன்றைய மனோகரின் இன்றைய எலும்புக் கூடு; கலைவாணியை, அடிக்கடி முகம் நிமிர்த்திப் பார்ப்பதும்... தலையைக் கவிழ்ப்பதுமாக நின்றான். அவளருகே நடந்து போவதும், அப்புறம் பின்வாங்குவதுமாக அலைக்கழிந்தான்.

கலைவாணி, கையில் ரிசீவரைப்பிடித்தபடியே, அவனை, அண்ணாந்து பார்த்தாள். பிறகு ரிசீவரை, குமிழில் வைக்காமல், தரையில் வீசிப் போட்டபடியே, ஒரே தாவாய்த் தாவி, அவன் மீது முட்டுக்கம்பு மாதிரி சாய்ந்தாள். இதனால் ஒருவரை மேல் ஒருவர் சாய்த்து கீழே விழாமல், அசைவற்று நின்றனர். இறுதியில் சுதாரித்துக் கொண்ட கலைவாணி, வார்த்தைகளை விழுங்கிய ஒலிகளை ஓலமாக எழுப்பியவனை, ஏதோ ஒரு அசுர பலத்தில் குண்டுக்கட்டாய் தூக்கிக் கட்டிலில் போட்டாள். ஒரு தலையணையைக் குறுக்காய்ப் போட்டு, அவன் தலையை அதில் சாய்த்தாள். 124 பாலைப்புறா

பிறகு அவன் உடலோடு உடல் போட்டு, அவன் தலையைக் கோதிவிட்டபடியே சபதமிட்டாள்.

‘கவலைப்படாதீங்க... அத்தான்.. ஊர் உலகம் கைவிட்டாலும், நான் ஒங்க பக்கமே இருப்பேன். நீங்க எவளோடேயும் உறவாடி, உங்களுக்கு இந்த நோய் வந்ததாய் நான் நினைக்கல. சொல்லுங்க அத்தான் அப்படி எதாவது உண்டா... எனக்கு தெரியாதா... என் மனோகரைப் பற்றி? இந்த ஆறு மாதத்தில இதைக்கூட தெரிஞ்சுக்காட்டால், நான்... என்ன மனுஷி? ஏதோ விதிவசமாவந்துட்டு. அழாதீங்க அத்தான். அழாதீங்க... அய்யோ இது என்ன கொடுமை... கையெடுத்துக் கும்பிடாதீங்க. கும்பிடாதீங்க. அத்தான். ஒங்களை கைவிடமாட்டேன்’.

எல்லாவற்றையும், ஒசைப்படாமல் கவனித்துக் கொண்டிருந்த மீனாட்சி, ‘எக்கா... எக்கா... இங்கே பாருங்க'... என்றபோது திரும்பிப் பார்த்த கலை வாணியின் கண்களில், டாக்டர் சந்திராவும், சங்கரனும் அகப்பட்டார்கள்.

கலைவாணி, குலுங்கி குலுங்கி அழுதாள். கட்டிலில் இருந்து குதித்து, டாக்டர் சந்திராவைக் கட்டிப்பிடித்து விம்மி விம்மி, வெடி வெடியாய்ப் பேசினாள். "பார்த்தீங்களா டாக்டரம்மா.. உங்க கண்ணு முன்னாலயே மானும் மயிலுமாய் சுற்றித் திரிந்த நாங்க, எப்படி ஒநாயும், பல்லியுமாய் ஆயிட்டோம்... பாத்தீங்களா... பாத்தீங்களா டாக்டரம்மா...!”

கலைவாணியை, சந்திரா, பார்க்க முடியாமல் பார்த்தாள்.

சூரியப் பிரகாச முகம், இவளை நெருப்பாய் சுட்டது. அவளது கண்ணிரும் கம்பலையும், இவள் உடம்பில் பூகம்பத்தையும், தலையில் எரிமலையையும் ஏற்படுத்தின. கட்டிலில் பிணமாய்க் கிடந்தவனை கோபமாய்ப் பார்த்தாள். பார்க்கப் பார்க்க ஏனோ ஒரு பச்சாதாபம். இதற்குள் சங்கரன், சத்தம் போட்டே கேட்டான்.

"ஏன் மிஸ்டர் மனோகர். ஒங்களுக்கு எய்ட்ஸ் கிருமிகள் இருக்கிறதாய் எங்க சந்திரா. கல்யாணத்துக்கு முன்னாலயே படித்து படித்து சொல்லி இருக்காள். இந்த அப்பாவி கலைவாணியை காவு கொடுக்காதீங்கன்னு காலுல விழாத குறையா கெஞ்சி இருக்காள். அப்படியும் இந்த பெண்ணை சீரழிச்சிட்டிங்களே... இது அடுக்குமா... உங்களை மாதிரியே இந்தப் பெண்ணும் எய்ட்ஸ்ல கருகப் போறாள். இப்போதாவது ஒங்களுக்கு திருப்தியா மனோகர்...?”

கலைவாணி, திகைத்துப் போனாள். திக்குமுக்காடினாள். சிறிது நேரம், சு. சமுத்திரம் 125

பேச்சற்று மூச்சற்றுப் போனதுபோல் நின்றாள். கரங்களை கோர்த்தும், சேர்த்தும், நெறித்தும் ஆகாயமேட்டையும், அப்புறம் தன்னையும் வெறித்துப் பார்த்தாள். தரைவிலகி, கால்கள் ஆகாயத்தில் தொங்குகின்றன. உதடுகளை பற்கள் கோபம் கோபமாய் கடிக்கின்றன. ஒரு கண் எரிகிறது. மறுகண் உறைகிறது. வாயகல, தலையில் கைபோட்டு நிற்கிறாள். பிறகு கல்யாணத்துக்குப் பரிசோடு வந்த டாக்டர் சந்திராவை உற்றுப் பார்த்தாள். அவளோ தலைகவிழ்ந்து நின்றாள். கட்டிலில் கிடந்தவனை, எட்டிப்பார்த்தாள். அவன் குப்புறப் புரண்டான். குப்புறத்தள்ளி... குழியையும் பறித்துவிட்டு, இப்போது முகம் காட்டவே நடுங்குகிறான்.

‘என்ன இது..? அநியாயம்... இப்படி ஒரு நோய் இருப்பது. இவனுக்குத் தெரியும். அவளுக்கும் தெரியும்... அப்போ இவன் கட்டியது தாலியா... தூக்குக் கயிறா. இந்த இவன் கொடுத்தது பரிசா... அல்லது பரிகாசமா... ஏமாந்துட்டேனே. ஏமாந்தால்கூட பரவாயில்லை. ஏமாற்றப்பட்டனே... அவனுக்கும், இவளுக்கும் என்ன சம்பந்தம்? எப்படியான உறவு...’

மலைமகளாய் நின்ற கலைவாணி, துர்க்கையாய், மகிஷாகரமர்த்தினியாய் மாறிக் கொண்டிருந்தாள்.

சங்கரன், மனோகரைச் சாடியதை, அட்சரம் பிசகாமல், வாயகலக் கேட்டுக் கொண்டிருந்த அவளின் பார்வை கூர்மைப்பட்டது. வாய் கோணல்மானலானது. மெள்ள மெள்ள முயல் குட்டியாய்த் தோன்றிய அவள் முகபாவம், மோவாய் நீண்ட புலிக்குட்டியானது... கை விரல்கள், இரும்புக் கம்பிகள் போல் கூர்மைப்பட்டன. துவண்ட கால்கள் நிமிர்ந்து நீண்டன. அவளால், டாக்டரம்மா என்று அழைக்கப்பட்ட சந்திராவும், பாசத்தின் உச்சமாகத் தோன்றிய மனோகரும், இப்போது மானிடத்தின் எச்சங்களாக, அடுத்துக்கெடுத்த துரோகிகளாகத் தோன்றினார்கள். கல்யாணப் பரிசாக, சந்திரா கொடுத்த நிரோத்துக்களும், மனோகர் விமான நிலையத்திற்கு, போகும் போது தன்னை அறியாமலே ‘எனக்கு ஹெச்.ஐ.வி. இல்லை’ என்று சொன்னதும், அவர்களை அடுத்துக் கெடுக்கும் துரோகிகளாய் காட்டும் ஆதாரங்களாயின. சங்கரன் சொல்லச்சொல்ல, அதை நம்ப முடியாததுபோல், காதுகளுக்குமேல், இரண்டு கரங்களையும் தலையோடு சேர்த்து உயர்த்தி, அசல் மான்குட்டி மாதிரி காதுகள் சிலிர்க்க, கண்களை வெட்டியவள், இப்போது அவர்களை வெட்டப் போவதுபோல் விறைத்துப் பார்த்தாள். ஒரு அநியாயக்காரியும், ஒரு அக்கிரமக்காரனும், பாதுகாப்பான கூட்டில் இருந்து, தன்னை தள்ளிவிட்டதாய் நினைத்துத் தவித்தாள். கால் இடறிய ஒரு பந்து போலத்துடித்தாள்.

கலைவாணி, தானும் ஒரு ஹெச்.ஐ.வி.க்காரி என்பதையும், எதிர்கால 126 பாலைப்புறா

எய்ட்ஸ் பாடையில், அவனோடு சேராமலே, அதே சமயம் அவனாலேயே உடன்கட்டை ஏற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதையும் மெள்ள, மெள்ளப் புரிந்து கொண்டாள். உடலுறவால் இது ஏற்படும் என்பதைத் தெரிந்து வைத்தவள்தான். ஆனால் அளப்பரிய கணவ பக்தியால், அவனை மட்டுமே முன்னிலைப்படுத்தியதால், தன்னைப் பற்றி அவள் நினைத்தாளில்லை. முகம் தெரியாயந்திரநாட்டில், கணவன் எப்படிக் கலங்குகிறானோ என்று மட்டுமே துடித்துப் போனவள், இப்போதுதான், தனக்காகத் துடித்தாள். தனக்காக கழிவிரக்கம் கொண்டாள். சுயபயம் ஏற்பட ஏற்பட, அவள் ஒரு பயங்கரியாய் மாறிக் கொண்டிருந்தாள். ‘டாக்டரம்மா...! நீயுமா...? என்பது போல் சந்திராவைப் பார்த்தாள். பார்த்துக் கொண்டே நின்றாள்.

இந்தக் கொடுரமான அமைதியில் தலை தாழ்ந்து நின்ற சந்திரா, சங்கரனை எரிச்சலோடு பார்த்தாள். மாமா வீட்டில், இவள் கத்திய கத்தலில், உள்ளே வந்த மாமாவுக்கும், அத்தைக்கும், தலைக்குமேல் வெள்ளம் போன விரக்தியில், நடந்ததை எல்லாம் எடுத்துரைத்தாள். டாக்டர் வேலையில் சேர்த்து விட்டதால், தங்கை மகள், தன்னையோ, தான் பெற்ற மகனையோ மதிக்கவில்லை என்று மாமாவிற்கு ஒரு தவறான அபிப்ராயம் வரக் கூடாது என்பதற்காகவே, அவள், மோகன்ராம் விரட்டியது உட்பட எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னாள். இதைக் கேட்க கேட்க ஆத்திரப்பட்ட மாமா, கிட்டத்தட்ட சங்கரனைப் பார்த்து கையை ஓங்கிவிட்டார். மகனை, ஒருநாளும் திட்டாத அத்தை கூட அவனை ‘நாயே... பேயே’ என்பது மாதிரி திட்டி விட்டாள். ஒருவர் துக்கத்தில், சந்தோஷப்படுவது, ஒரு மனிதன் செய்கிற காரியமில்லை என்று அத்தை படபடத்துப் பேசினாள். சங்கர், சித்தம் தெளிந்து, தவறுக்கு வருந்துகிறவன்போல் தலை தாழ்த்தி நின்றான். அன்று மாலையிலேயே, கலைவாணியை உடனடியாகப் பார்க்க புறப்பட்ட சந்திராவை, அவர்கள்தான், மறுநாள், காலையில் போகலாம் என்று சொல்லி விட்டார்கள். இந்தச் சங்கரையும் பாவப்பரிகாரமாய், இவளுக்கு உறுதுணையாய் அனுப்பி வைத்தார்கள். இவளும், இவனை கட்டிக்கப் போகிறவனாய்க், கூட்டி வராமல், மாமா.. அத்தைக்கு ஒரு நல்ல மருமகளாய் தன்னைக் காட்டிக் கொள்ளவே கூட்டி வந்தாள். ஆயிரம் கத்தினாலும், இந்த சங்கரனை, தான் கழித்து விடவில்லை என்று, அவன் பெற்றோரிடம் காட்டிக் கொள்ள, இங்கே கூட்டி வந்தாள். இவரோ, சொல்லக்கூடாததைச் சொல்லி, நடக்கக் கூடாதது நடப்பதற்கு, நடைபாதை போட்டுவிட்டாரே!

டாக்டர் சந்திரா, சங்கரனை கோபமாகவும், கலைவாணியை தாபமாகவும் ஒரே சமயத்தில், வேறு வேறு பார்வையாகப் பார்த்தாள். சங்கரன், எதுவும் நடக்காதது போல் மதர்ப்பாய் நின்றபோது, கலைவாணியின் சு. சமுத்திரம் 127

பார்வை, கட்டிலில் இப்போது மல்லாக்கக் கிடந்த மனோகர் மேல் பட்டது. சொல்லிக் கொடுத்தும் கேளாத துரோகி... அடுத்துக் கெடுத்த பாவி... அவனையே வெறித்துப் பார்த்த கலைவாணி, சந்திரா பக்கம் திரும்பினாள்.

"சொல்லு. டாக்டர். இந்த துரோகிக்கு ஹெச்.ஐ.வி. இருக்குதுன்னு, ஒனக்கு முன்கூட்டியே தெரியுமா...? இது தெரிந்தும்தான் என் கருமாந்திரத்துக்கு வாழ்த்த வந்தியா... சொல்லு... சொல்லுடி...”

சந்திராவால், கலைவாணியை ஆச்சரியமாகக்கூடப் பார்க்க முடியவில்லை. ஏறிட்டுப் பார்க்கப் போனால், முகத்தை எதுவோ கீழே பிடித்து இழுக்கிறது. தன்னிலை விளக்கம் சொல்லப் போனால், தானே அங்கே இல்லாமல் போனதுபோன்ற இருள்நிலை. இதற்குள், மனோகர். அரைகுறையாய் முனங்கினான்.

‘கலை... கலைவாணி, அவங்க நிரபராதி... நான் நான்தான்...’

‘பாவ மன்னிப்பாடா கேட்கிறே? செய்யுறதையும் செய்திட்டு... இன்னுமாடா ஒனக்கு பேச்சு வருது...’

மனோகர், போர்வையை இழுத்து தலையோடு சேர்த்து, முகத்திற்கு முக்காடு போட்டுக் கொண்டான். சந்திரா, குன்றிப் போய் நின்றாள். சங்கரன் ‘டா’ போட்டு பேசிய கலைவாணியைப் பார்த்தபடியே, அங்குமிங்குமாய் நடைபோட்டான். பிறகு ‘போகலாம்’ என்பது போல் சந்திராவைப் பார்த்து கண்ணடிக்கப் போனான். வேலைக்காரச் சிறுமி மீனாட்சி, ஒவ்வொருவர் முகமாய் பார்த்து, ஒன்றும் புரியாமல் நின்றாள்... மெளனத்தின் கொடுங்கோல்... உலகமே அஸ்தமித்தது போன்ற அருவ நிலை... வெளிச்சமே இருளாகி, அப்போதே அமாவாசை ஏற்பட்ட இருண்மை நிலை. வார்த்தைகள், தொண்டைகளுக்குள் சிக்கிக் கொண்டன. வெளியே உள்ள இரைச்சல்,... வானொலிப் பாட்டு, தெருக் கூச்சல் அத்தனையும் அற்றுப் போன காதுகள், மரத்துப் போன நிலை...

முந்தானை சரிய விரல் கடித்து நின்ற கலைவாணி, ஆங்காரியாய், ஓங்காரியாய்க் கூச்சலிட்டாள்... மனோகரை நோக்கிப் பாய்ந்தாள்... அவன் தலைமாட்டுப் பக்கம் போய், அவன் முகத்தைக் கடித்துத் தின்னப் போவது போல் பற்களைக் கடித்தாள். அவன் கழுத்தைத் திருகப் போவதுபோல், கரங்களை மார்புக்கு முன்னால் கொண்டு போய், வளைவாகக் குவித்தாள். பிறகு என்ன நினைத்தாளோ... ஏது நினைத்தாளோ... ‘என்னை என்ன செய்தாலும் தகும்' என்பதுபோல மல்லாந்து கிடந்த மனோகரின் முகத்தைப் பார்த்த மாற்றமோ... அவளுக்கே தெரியாது... கணவனின் கழுத்தை நெரிப்பதற்குப் பதிலாக, நெரிக்கப் போன தன் கரங்களையே, ஒன்றோ 128 பாலைப்புறா

டொன்று நெரிக்கவிட்டாள். அவன்தலையில் அடிப்பதற்குப்பதிலாக, தன் தலையிலே அடித்துக் கொண்டாள்; அப்புறம் அவன் தலைமாட்டில் நின்றபடியே, சத்தம் போடாமலே ஏங்கினாள். அவள் அழுகைக்குக், குரல் கிடைக்கவில்லை. வடிவற்ற உணர்வுகளின்தாக்குதல்... வடிகால் கிடைக்காத அநாதை நிலை. ஆத்திரம் உருவாக்கப் போன வன்முறையை, துக்கம், மென்மையான அழுகையாய் மாற்றிய ரசவாதம். இடியற்றமழை... இணையற்ற தவிப்பு...

கலைவாணி, அப்படியே குன்றிப் போனாள். நேராய் நின்றவள், சிறுகச் சிறுகக் குறுகி, குறுகிக் குறுகி குமைந்து, சன்னஞ் சன்னமாய் சரிந்து, அப்படியே தரையில் சாய்ந்தாள்... கால்களை மடித்துப் போட்டு, இடுப்பின் மேல் பகுதியை அதில் இழுத்துப் போட்டு, அப்படியே கிடந்தாள். உருவம் கலைத்து, அருவமாய் ஆனவள்போல் இருந்தாள்; சிறிது நேரத்தில் மீண்டும் அழுகைச் சத்தம்... பிறகு மனோகரை தாக்கப் போவதுபோல் தலை நிமிர்கிறது. அப்புறம் தனக்கு வந்ததை, தானே தாங்கியாக வேண்டும் என்று நினைத்ததுபோல் தலை தானாய்க்கவிழ்கிறது... மனம். தானாய்க் கேட்டது. இப்படியும் ஒருத்தன் இருப்பானா... இப்படியும் ஒரு மூர்க்கன்... இப்படியும் ஒரு கொலைகாரன் இருப்பானா... இருப்பானா... இப்படியும் ஒரு டாக்டர். இப்படியும் ஒரு பெண்... இருப்பாளா... இருப்பாளா... இருக்கின்றானே... இருக்கின்றாளே.”

சந்திராவைப் பார்த்து, சங்கரன் மீண்டும் கண்ணடித்தான். அவளோ, திகைத்துப் போனவளாய் கைபிசைந்து நின்றாள். அவளுக்கு பூமி குலுங்கியது. ஆகாயம் சுருண்டு போய் அங்கேயே வந்தது... அந்த வீடு சுற்றுகிறது... அத்தனையும் சுற்றுகின்றன.

மீனாட்சிதான், கட்டில் பக்கம் போய் எண்ணா... எண்ணா என்றாள். கீழே குனிந்து எக்கா... எக்கா என்றாள்... என்ன செய்யலாம் என்ற கேள்விப் பாவனையோடு சங்கரனைப் பார்த்தாள். ஏதாவது செய்யுங்கள் என்பது போல் சந்திராவை, கெஞ்சல் பார்வையாய் பார்த்தான்.

இதற்குள், கலைவாணி எழுந்தாள்... உள் பாடியும், பாவாடை விளிம்பும் பளிச்சென்று தெரிய எழுந்தாள். மனோகரின், கால்மாட்டில் போய் நின்று கொண்டாள். ஒப்பாரியே ஓங்காரமானது. இதயத்துடிப்பே, வார்த்தைகளானது... மனமே வாயானது...

‘ஒன்னை கெடுத்து.. என்னையும் கெடுத்திட்டியே பாவி... ஒன்னை நீ கெடுக்கலாம்... ஆனால் என்னை எப்படிப்பா கெடுக்கலாம்? என்கையப் பிடித்து அக்கினியைச்சுற்றி வந்து, என்னை அக்கினியில் தள்ளிட்டியேடா... இதைவிட தாலிச் செயினாலயே... என் கழுத்தை இறுக்கிக் கொன்னுருக் சு. சமுத்திரம் 129

கலாமே பாவி... படுபாவி... என்னை... இந்த பாடுபடுத்தின நீ...என்ன பாடுபடப்போறியோ... உயிரோட கொன்னுட்டியே... என்னை பிணமா பேச வச்சுட்டியே... என்னை இந்த நிலைக்கு ஆளாக்குன... ஒன்னை விடமாட்டேன்... விடவே மாட்டேன்.”

கலைவாணி, குறுக்கே வந்த மீனாட்சியை உதறிப் போட்டுவிட்டு, இடைமறித்த சந்திராவை எட்டித் தள்ளிவிட்டு, மனோகர் மேல் பாயப் போகிறவள் போல், கைகளை மீண்டும் வளைத்தபடி, கட்டில் சட்டத்தில் வயிற்றை அழுத்தி, அவனை நோக்கி, அப்படியே குனியப் போனாள். பிறகு, அப்படியே நிமிர்ந்து, மேல் நோக்காய் வந்து, செங்குத்தாய் நின்றபடிக் கேட்டாள். குரல் மாற்றிக் கேட்டாள். ஆங்காரக் குரல் அழுகையாக, பழிபோட்ட பார்வை விழிபிதுங்கிப் போக, வாதாடுவதுபோல் கேட்டாள்...

"மனோகர். ஒனக்கு... நான் எப்போவாவது இம்சை கொடுத்திருக்கேனா... பள்ளிக் கூடத்துல படிக்கும் போதோ... அம்மன் கொடை... ஆத்தாள்கொடைன்னு ஊர்ல விசேஷம் நடக்கும் போதோ... ஒன் வீட்டுக்கு நான் வரும்போதோ, என் வீட்டுக்கு நீ வரும்போதோ, ஒன்னை, நோகடித்தேனா. அவமானப்படுத்துனேனா.. அலட்சியப்படுத்துனேனா சொல்லுப்பா... இந்த பாவிகிட்ட சொல்லுப்பா.”

மனோகர், லேசாய் தலையைத் தூக்கினான். வாய் ‘இல்லல்ல”... என்று இழுத்தது. தலை, அங்குமிங்குமாய் ஆடியது. கைகள், சமிக்ஞையிட்டன... கலைவாணி, சிறிது இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்தாள்.

"அப்போ... எதுவுமே செய்யாத என்னை... ஒனக்கு மனசாலயும் கெடுதல் நினைக்காத என்னை... எதுக்குப்பா இப்படி ஆக்கிட்டே...? நீ மெட்ராஸ்லே இருந்து வரும் போதெல்லாம், வாய் நிறைய சிரிப்பேனே... நீ... கம்ப்யூட்டரைப் பற்றியும், டார்வின் தியேரி பற்றியும் பேசுறதை மாணவியாய் நின்று கேட்டேனே! ஒன்னை மாதிரி அறிவாளி கிடைக்கிறது... அபூர்வமுன்னு போகிற ஊரெல்லாம் பேசுனனே... பேசுன வாயை பூட்டிட்டியே... என்னை ஒரு புழுப் பூச்சாய் ஆக்கிட்டியே மனோகர், இது அடுக்குமா? அப்போ நீ பேகன பேச்சும், சிரித்த சிரிப்பும், வெறும் நடிப்புத்தானா... பரவாயில்ல... மனோகர், உனக்கு ஆஸ்கார் பரிசேகிடைக்கும்பா...அய்யோ... அய்யய்யோ... அம்மோ... யார்கிட்ட சொல்லுவேன்... என்கிட்டயே சொல்ல முடியாததை, எப்படிச் சொல்வேன்...?”

மனோகர், மீண்டும் குப்புறப்படுத்தான். மீனாட்சி... 'எக்கா... எண்ணா’ என்று அரற்றியபடியே, பூனைக்குட்டி மாதிரி சுற்றி வந்தாள். அதே சமயம், டாக்டர் சந்திரா, மெள்ள மெள்ள விழிப்புற்றாள். தட்டுத்தடுமாறி நடந்தாள், ஆடி அடங்கியது போல் நின்ற கலைவாணியின் தோளைத் தொட்டாள். 130 பாலைப்புறா

கலைவாணி, அந்த வீடே கத்துவதுபோல் கத்தினாள்.

"என்னைத் தொடாதடி. தொடாதே. ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லு. நான்... ஒன் தங்கையாய் இருந்தால், இப்படி மறைப்பியா... நாம் இரண்டு பேரும் இடம் மாறி நின்னு... என்னால ஒனக்கு இப்படி ஏற்பட்டிருந்தால்... ஏத்துக்குவியா... அடியே பாவி... டாக்டரம்மா... டாக்டரம்மான்னு வாய் நிறையக் கூப்பிட்டேனே.. அம்மா என்கிற வார்த்தையை அழுத்தி உச்சரித்தேனே... ஒரே ஒரு சொல்லு... உண்மையான சொல்லு. அதை என்கிட்ட சொல்லி இருந்தால், இப்படிச்சொல்லத் தகாதது நடந்திருக்காதே... உண்மையைக் கொன்னு என்னை ஒரேயடியாய்க், கொன்னுட்டியே... உனக்கு எதாவது தான் கெடுதல் செய்தால்... அதையாவது சொல்லுடியம்மா... என்மனசை சமாதானப்படுத்திக்கிறேன்...”

டாக்டர் சந்திரா, கலைவாணியைக் கட்டிப் பிடிக்கப் போனாள். பிறகு, தன்னை எப்படியோ கட்டுப்படுத்திக் கொண்டு, நடுங்கும் விரல்களால் கலைவாணியின் கண்களை முந்தானையால் துடைக்கப் போனாள். கலைவாணி, அந்தக் கையை ஒருதட்டு தட்டினாள். ‘எப்படி இருக்கேன்னு என்னை வேடிக்கையாடி... பார்க்க வந்தே... போடி... வெளியிலே போடி’ என்று அவளை வாசலைப் பார்த்து தள்ளினாள். அந்த வேகத்தில், தள்ளியவளும், தள்ளப்பட்டவளும் கீழே விழுந்தார்கள். ஒருவரோடொருவர் பின்னிக் கிடந்தார்கள். இதில் கலைவாணியை குற்றவாளியாய்க் கருதி, அவளிடம் இருந்து சந்திராவை மீட்க வேண்டும் என்று நினைத்து, சங்கரன், கீழே குனிந்தான். கலைவாணியின் தலைமுடியை கைக்கு அடக்கமாக்கினான். அதை முறுக்கி முறுக்கி, சுற்றிச் சுற்றி, அவளை அப்புறப்படுத்தப் போனான். கலைவாணிக்கு, பிராணனையே பிடுங்குவதுபோல் இருந்தது. மண்டை ஒடு கழன்று, அவன் கைக்குப் போகப் போவதுபோல் இருந்தது. மனோகரும் கீழே குதித்து, சங்கரை கோபமாகத் தள்ளினான். மீனாட்சி தீமூட்டிக் குழலால், சங்கரனின் முட்டிகளில் இரண்டு தட்டுதட்டினாள். இந்த அமளியில், சங்கரனின் பெருவிரல் கலைவாணியின் வாய்க்குள் போனது... கலைவாணி, கடித்தாளா அல்லது அவள்கடி படும்படி வைத்தானா என்பது தெரியவில்லை... சங்கரன், பெருவிரலை வெளியே எடுத்தபோது அதில் ரத்தம் சொட்டியது... அவன், அந்த விரலை உதறிய போது, ரத்தத்துளிகள், கலைவாணியின் நெற்றியிலும் சந்திராவின் வாயிலும் தெறித்தன.

‘நீங்கல்லாம் ஒரு மனுஷனா..?’ என்று சங்கரனைப் பார்த்து கத்தியபடியே, சந்திரா எழுந்தாள். விறைப்பாக நின்ற கலைவாணியின் முன்னால் ஆஜரானபடியே அரற்றினாள்...

"நீ என் தங்கையா இருந்தால், இப்படிச்செய்திருக்கமாட்டேம்மா. நான் சு. சமுத்திரம் 131

கொலைகாரிதாம்மா... இதோ நிராயுதபாணியாய் நிற்கேம்மா... நீ எனக்கு, என்னதண்டனை தந்தாலும் வாங்கிக்கிறேம்மா... இந்த குற்ற உணர்வோடு, என்னால நிம்மதியாய் வாழ முடியாதும்மா... ஒன் கையாலயே என்னைக் கொன்னுடும்மா...’

கலைவாணி, இப்போது, சந்திராவை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. ஏனென்று கேட்கவில்லை. தடாரென்று தரையில் விழுந்தாள், மூச்சற்றுப் பேச்சற்றுக் கிடந்தாள். அவள் வாய் கோணியது. கண்கள், சாய்ந்து பார்த்தன; உடல், தாறுமாறாய்க் கிடந்தது... 'எம்மோ... எம்மா...’ என்ற மெல்லிய ஒலம் மட்டுமே..அப்புறம் வாயடக்கம்; கண்ணடக்கம்; உடலடக்கம்...

மீனாட்சி, சத்தம் போட்டே அழுதாள். மனோகர், எதாவது செய்யுங்கள் என்பதுபோல், சந்திராவின் முன்னால் போய் நின்று, அவளைக் கையெடுத்துக் கெஞ்சினான். உடனே, அவளும் டாக்டரானாள்... கலைவாணியின் மூக்கில் கை வைத்தாள். அவள், உடையைத் தளர்த்தினாள்... நாடி பிடித்துப் பார்த்தாள். குறிப்பறிந்து மீனாட்சி கொண்டு வந்த டம்ளரை வாங்கி, தண்ணிரை அவள் முகத்தில் மென்மையாய் தெளித்தாள். அப்போது, சங்கரன் சந்திராவை எச்சரித்தான்...

‘வந்துரு சந்திரா... வந்துரு. ஏதாவது செய்திடப் போறாள்...’

சந்திரா, கட்டிக்கப் போகிறவனைப் பார்க்காமலும், பதில் பேசாமலும் கலைவாணியின் கழுத்தை நீவிவிட்டாள். கண்களில் திரையிட்ட முடிக்கற்றைகளை ஒதுக்கிவிட்டாள். வெளியே வேடிக்கை பார்ப்பது போல் திரண்ட கூட்டத்தை எரிச்சலோடு பார்வை இட்டாள். இதற்குள், சங்கரன் ரத்தப் பெருவிரலை உதறிக் கொண்டே பேசினான்.

"ஆனாலும், ஒரு பெண்ணுக்கு... இவ்வளவு ஆங்காரம் கூடாது. புருஷனுக்கு வந்ததைவிட... இவளுக்கு வந்தது பெரிசா போயிட்டாம்...”

வெளியே நின்ற கூட்டத்திற்காக, பல்லைக்கடித்து கோபத்தையும் கடித்த சந்திரா, பொறுமை இழந்து, சங்கரைச் சாடினாள்.

"மூளை இல்லாமல் பேசாதீங்க சங்கர். கலைவாணி இடத்தில வேற யாராவது இருந்திருந்தால் கொலைகூட செய்திருப்பாங்க. அவளுக்கு இப்போ சுயமே அற்றுப் போச்சு.. ஹிஸ்டிரியா மாதிரி வந்துட்டு. ஒன் பேரு என்னம்மா...? மீனாட்சியா... நான் எழுதிக் கொடுக்கிறதை மருந்துக் கடையில காட்டு... பிளாஸ்டிக் பேப்பருக்குள்ள இருக்கிற ஊசியையும் ஒரு சின்னபாட்டிலையும் தருவாங்க. சீக்கிரமா வாங்கிட்டு வா. உங்களத்தான்... அந்தப் பெண்கிட்டே இருபது ரூபாய் கொடுங்க.." பாலைப்புறா

132

“என் பெருவிரலுக்கும் அப்படியே...?” "உங்களுக்கு உயிர்போகாது. கொஞ்சம் பொறுங்க”

சந்திரா, ஒரு மூலையில் குப்புறக் கிடந்த கைப்பையைத் தூக்கி, ஒரு காகிதக் கொத்தை எடுத்து நாலு வரி எழுதிவிட்டு, எழுதியதையும், கசங்கிப் போன இருபது ரூபாய் நோட்டையும் மீனாட்சியிடம் கொடுக்க, அவள் ஒரே ஒட்டமாய் வெளியே ஒடினாள். வெளியே திரண்ட கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு ஓடினாள்.

கலைவாணி, தரையோடு தரையாய்க் கிடந்தாள். சிறிது நேரத்தில், பித்துப் பிடித்து, எல்லோரையும், மலங்க மலங்க பார்த்தபடியே கிடந்தாள். மேற் கூரையை வெறுமையாய் பார்த்தாள். பக்கத்தில் நின்ற சந்திராவைப் பாராதது போல் பார்த்தாள். பிறகு, அவளை பார்க்க விரும்பாததுபோல் குப்புறப் படுத்தாள். பின்னர், மோவாயைத் தூக்கித் தூக்கித் தரையில் இடித்தாள். ‘யாராவது விஷம் தாங்களேன்’ என்று பேசிய வாய், பல்லோடு சேர்ந்து, தரையில் இடிபட்டது. அந்தத் தரையைச் சிவப்பாக்கியது. கால்கள் வெட்டிக் கொண்டன. கரங்கள், தலையில் முட்டிக் கொண்டன.

நல்ல வேளையாக, மீனாட்சி, ஊசி மருந்தோடு வந்துவிட்டாள். டாக்டர் சந்திராவுக்கு புரிந்துவிட்டது. தன்னந்தனியாய் அவளுக்கு ஊசி போட முடியாது. ஆகையால், வாசலுக்கு வெளியே தலையை நீட்டி, கும்பலாய் நின்ற கூட்டத்தைப் பார்த்து ‘கலைக்கு ஊசி போடணும்... கொஞ்சம் ஹிஸ்டிரியா மாதிரி தெரியுது... யாராவது ரெண்டு பேரு வாங்க... கையையும் காலையும் பிடிச்சுக்கணும்’ என்றாள்.

சந்திரா, ஏதோ கையில் சோடா பாட்டிலை வைத்து எறியப் போவது போல் கூட்டம் சிதறியது. இதையும் மீறி, உள்ளே போகப் போன சியாமளாவை, மோனிகா பிடித்துக் கொண்டாள். நாராயணசாமி, தனது மனைவி பாலாவின் காதில் எதையோ கிசுகிசுத்தார். எவரும் வருவது மாதிரி தெரியவில்லை. உள்ளே நின்ற மீனாட்சிதான் வெளியேவந்து, ‘நான் பிடிச்சிக்கறேன்’ என்றாள். சந்திராவால், அவள் முதுகைத் தட்டிக் கொடுக்கத்தான் முடிந்தது. இதோ... இங்கே கூடியிருக்கிறவர்களில் இரண்டு மூன்று பேர்இல்லாமல், கலைவாணிக்கு பலவந்தமாக ஊசிபோட முடியாது. அந்த இரண்டு மூன்று பேரை, சந்திரா, அந்த படித்த கும்பலில் தேடிக் கொண்டிருந்தாள். பலனில்லை. திடீரென்று கூட்டம் சிதறி ஓடியது. பெண்கள், பிள்ளைகளை இழுத்துக் கொண்டு ஓடினார்கள். கணவன்மார், மனைவிகளையும், மனைவிகள் கணவன்மாரையும், பேத்திகளை, பாட்டிகளும், பாட்டிகளைப் பேத்திகளும் இழுத்தபடியே ஓடி ஓடி... சிதறிச் சிதறி, சிறிது 133

சு. சமுத்திரம்

தொலைவில் நின்று உற்றுப் பார்த்தார்கள். அவர்களின் பார்வை பதிந்த திசையை திரும்பிப் பார்த்த சந்திரா, அழுதுவிட்டாள். கலைவாணி, ஒரு கையை நீட்டியபடி, வெளியே நின்றாள். சந்திராவின் முகத்தைப் பார்த்ததும் கேவினாள்,

“என்னால...தாங்கமுடியல... போடு போடு... எழுந்திருக்கமுடியாமல் போடு..."

டாக்டர் சந்திரா, கலைவாணியை உள்ளே கூட்டிப் போனாள். ஒரு நாற்காலியில் உட்காரவைத்தாள். பாட்டில் மருந்தை, ஊசி வழியாய் உறிஞ்சி, கலைவாணியின் தோள் பகுதியில் குத்தினாள். அவளோ... முகத்தில் ஒரு சின்னச் சுழிப்புகூட இல்லாமல், கையை யாரோ மயில் இறகால் வருடிக் கொடுப்பது போல், தனக்குத்தானே சிரித்தபடிக் கிடந்தாள். தனக்குத்தானே பேசியபடி... இருந்தாள்.

ஐந்தே ஐந்து நிமிடத்தில், கலைவாணிக்கு கிறக்கம் ஏற்பட்டது. அதுவே மயக்கமானது. வீடு வெளியாகி, வெளியே வீடானது போன்ற மயக்கம். மனம் சுருங்கிச் சுருங்கி, உள்ளுக்குள்ளேயே ஒடுங்கிப் போனது. அவளைப் பொறுத்த அளவில், தானோடுதானாய் அத்தனையும் செத்துப் போயின.

சந்திரா, கலைவாணியைக் கட்டிலுக்கு நகர்த்தினாள். அவளும் அடம் பிடிக்காமல், அப்படியே சாய்ந்தாள். மனோகர், அங்குமிங்குமாய் ஓடினான்; நடந்தான் நின்றான். சந்திரா, அவனைக் கடுமையாகவும் கொடுமையாகவும் பார்த்தாள். சிறிது நேரத்தில், அனுதாபமாகவும் நோக்கினாள். அந்த அனுதாபம் கோபமாகவும், இந்தக் கோபம் அனுதாபமாகவும் மாறிக் கொண்டும், அவளை மாற்றிக் கொண்டும் இருந்தன. இறுதியில், தனக்குத் தானே சொல்வதுபோல், மனோகரைப் பார்க்காமல், மனோகருக்காகவே, சந்திரா பேசினாள்.

"நான் எவ்வளவோ சொல்லியும்...”

சங்கரன், ரத்தம் உறைந்த பெருவிரலை ஆட்டியபடியே குறுக்கிட்டு பேசினான்,

‘சந்திரா, நீ வெறும் டாக்டர்... ஒரு டாக்டர் என்ன சொல்லணுமோ, அதை மட்டுமே சொல்லு...’

சந்திரா, சங்கரனை ஒரு பார்வை பார்த்தாள். அது ஒப்புதலா, நிராகரிப்பா என்பது அவளுக்கே தெரியாது. ஆனாலும் தெளிவாகவே பேசினாள். மனோகருக்கு உபதேசமாய்ச் சொன்னாள். 134 பாலைப்புறா

“கலைவாணி... இதே மாதிரிதான் பிஹேவ் பண்ணுவாள்ன்னு பயப்பட வேண்டாம். எடுத்த எடுப்பிலேயே, யாராய் இருந்தாலும், இப்படித்தான் நடப்பாங்க. கலை விவரமானவள்; எப்படியோ அனுசரித்துப் போக பழகிடுவாள். இந்தாங்க... இந்த சீட்டுலே ஒங்களுக்கும், கலைவாணிக்கும் மாத்திரை எழுதியிருக்கேன். வேளா வேளைக்கு சாப்பிடுங்க. சத்துணவா சாப்பிடுங்க, மாத்திரையை கலைவாணிக்கிட்டே, நீங்க கொடுக்க வேண்டாம். இந்தப் பொண்ணையே கொடுக்கச் சொல்லுங்க. நீ யாரும்மா...?”

'வேலைக்காரி... மீனாட்சி’

'நான்... ஒன்னை மாதிரி வேலைக்காரியாகவும், நீ என்னை மாதிரி டாக்டராகவும் ஆயிருக்கணும்...’

சங்கரன், பல்லைக் கடிப்பதைப் பார்க்காமல், சந்திரா, மூச்சு விட்டபடியே செத்துக் கிடந்த கலைவாணிக்கு, ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்துவதுபோல், தலைதாழ்த்தி நின்றுவிட்டு, வாசலுக்கு வெளியே வந்தாள். அங்கே இன்னமும் கலையாமல் நின்ற கூட்டம், அவளைச் சூழ்ந்து கொண்டது. அந்தக் கூட்டத்தின் குரலாக, திருமதி பாலா நாராயணசாமி பகர்ந்தாள். அவள் பேசப்பேச, அப்போதுதான் வந்த பழைய பகையாளி திருமதி மஞ்சுளா கண்ணன், அவளுக்கு ஒப்புக் கொடுத்து தலை ஆட்டினாள்.

‘நீங்கதான் எங்களுக்கும் ஒரு சின்ன உதவி செய்யணும்; இங்கே எல்லாருமே குடும்பத்தோடு இருக்கிறவங்க... நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்; கலைவாணின்னா எங்களுக்கு உயிர்; அதுக்காக எங்க உயிரை நாங்க கொடுக்க முடியாது. நீங்க அவங்களுக்கு சொந்தக்காரங்க மாதிரி தெரியுது... அவங்க ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டுப் போயிட்டால், கோடி புண்ணியம்; இப்பவே வேண்டாம்; பாவம் குழந்தைங்க... இங்கேயே இருக்கட்டும்; சாயங்காலமாய் ஒரு டெம்போவோட வந்து கூட்டிக்கிட்டுப் போனால் போதும்... ஓனருக்கு நாங்க வாடகை கொடுத்துடுவோம். பாவம் நல்ல குழந்தைங்க’

"இவங்களை கூட்டிக்கிட்டு போறேன். அதுக்கு நீங்க, நான் சொல்றதைக் கேட்கணும்...!”

"நீங்க என்ன சொன்னாலும், கட்டுப்படுறோம். நீங்க டாக்டரா... நர்சா?”

'டாக்டர்தான்... அதுவும் எய்ட்ஸ்லே ட்ரெயினிங் எடுத்த டாக்டர்... இவங்களால் ஒங்களுக்கு எந்த ஆபத்தும் வராது'. சு. சமுத்திரம் 135

‘வருமோ வராதோ... அவங்க இங்கே இருக்கப்படாது...’

‘சரி... நாளைக்கு ஒரு ஆம்புலன்ஸ் கொண்டு வாரேன். நீங்க எல்லோரும் அந்த வண்டில ஏறி... ஆஸ்பத்திரிக்கு வரணும்...ஒங்க ரத்தத்தை டெஸ்ட் செய்றோம். ஒங்களுல ஒருத்தருக்குக் கூட எய்ட்ஸ் கிருமி இல்லன்னா, மனோகரையும் கலைவாணியையும் நான் ஒரேயடியாய்க் கூட்டிக்கிட்டுப் போறேன். சரியா...’

கூட்டம், சரியில்லை என்பதுபோல், சந்திராவைப் பார்த்தது. எதிரியாய் மிரட்டிப் பார்த்தது. இதுவரை, அவளோடு கண்ணியமாகப் பழகும் சங்கரன், அவள் பிடரியில் கைவைத்து கிட்டத்தட்ட தள்ளிக் கொண்டே போனான். அடிக்கடி திரும்பிப்பார்க்கப் போனவளை, வலுக்கட்டாயமாக திசைதிருப்பி விட்டான். இதற்குள்ள பேயறைந்த கூட்டத்தில், ஒரு பிசாசு சத்தம்...

‘அவள் கிடக்காள்... மனோகர்கிட்ட சொல்ற விதமா சொல்லுவோம். கேட்காவிட்டால், கட்டில், பேன், பீரோ, தட்டுமுட்டுச்சாமான்கள நாமே தூக்கி எறியலாம்’

'ஆமாம்... இப்பவே நம் மாதர் சங்கத்தை கூட்டி... மேற்கொண்டு என்ன செய்யலாமுன்னு ஆலோசிப்போம்...’.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_13&oldid=1639233" இலிருந்து மீள்விக்கப்பட்டது