பாலைப்புறா/அத்தியாயம் 14
அந்தக் கம்பெனியில் கார்ப்பரேட் அலுவலகம்; அரசு அலுவலகங்களுக்கு சலாம் போடும் கம்பெனியாக இருந்தாலும், அவற்றை விட தோற்றத்திலும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் பல மடங்கு மேலான கட்டிடம். அண்ணா சாலையில் உள்ள இந்தக் கட்டிடத்தை அப்படியே தூக்கி, அமெரிக்காவில் வைத்தாலும், அங்குள்ளவர்கள் முகம் சுழிக்க மாட்டார்கள். அப்பேர்ப்பட்ட கட்டிடம்… நடையை சுகமாக்கும் தரை விரிப்பு… வெள்ளைக் காளான் நிறத்தில் பஞ்சு மெத்தை இருக்கைகள்; இந்த இருக்கைகளில் இருப்பவர்களின் தலைகளை மட்டும் காட்டும், நான்கடி உயரத்தில் பல்வேறு இடங்களை எல்லை பிரித்துக் காட்டும் அலுமினிய உருளைகளுக்குள் பொருத்தப்பட்ட நோவா பலகைகள்… ஆங்காங்கே ஒரு சில பெரிய இடத்து அறைகள்… அத்தனையும் கதவுகளால் மூடப்பட்டு, அந்தக் கதவுகளில் தங்க முலாம் எழுத்துக்கள். மனிதர்கள் இயங்கினாலும், கம்ப்யூட்டர்கள் இயக்கப்பட்டாலும், சூன்ய மயமான தோரணை. இதற்கு ஈடு கட்டுவது போல் வெளி வளாகத்தில், வட்டமாய் சுற்றிய மேசைக்குப் பின்னால், வரவேற்புக் கன்னிகளின் மென்மையான சத்தங்கள்… கீழே பரந்து விரிந்த பகுதிகளில், ஒரு மூலையில், மனோகரை விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்குக் கொண்டு போய் விட்ட அந்த கண்டசா காரின் உள்ளும், புறமும் முழுவதும் சோப் போடப்பட்டு, பினாயில் தெளிக்கப்பட்டு, நீர்க் குழாயில் ஏற்பட்ட சின்ன நீர் வீழ்ச்சி அந்தக் காருக்கு உள்ளயும், வெளியேயும் கொட்டியது. எய்ட்ஸ் கிருமிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் அந்தக் காரின் சந்து பொந்துகளை, டிரைவர் ஒரு கூரிய இரும்புக் கம்பியால் குத்திக் கொண்டு இருந்தார். அப்போது, அவர் தன் முகத்தை, காது வழியாய்க் கைக்குட்டையைத் திணித்து மூடியிருந்தார்.
சு. சமுத்திரம் 137
உதவிப் பொதுமேலாளர் சூரியநாராயணன், முப்பதாயிரம் ரூபாய் சுழல் நாற்காலியில் உட்கார்ந்தபடியே, ஒரு லட்சம் ரூபாய் மேஜையில் உள்ள இண்டர்காமை அழுத்தி, இரண்டே இரண்டு வார்த்தைகள் பேசியிருபபார். ஐந்து நிமிடத்தில், சங்கர் வந்துவிட்டான். வெள்ளை டையை ஒரு இழுப்பு இழுத்து, கழுத்தை இறுக்கியபடியே உள்ளே வந்தான். எதிரே உள்ள தேக்கு நாற்காலியில் உட்காரப் போனவனை 'லெட் அஸ் சிட் இன் ஸோபா செட்’ என்றார் சூரி, பிளாஸ்டர் போட்ட வலது பெருவிரலைதூக்கி வைத்தபடியே நின்ற சங்கரனுக்கு பாதிப்பயம். மீதி சந்தோஷம். இந்த சூரிய நாராயணன் எவரையாவது ஒரு ஊழியரை சோபா செட்டில் உட்காரச்சொன்னால், ஒன்று அவரை கணக்கு தீர்ப்பதாக இருக்கும் அல்லது கண்ணுக்குள் ஒற்றுவது போலவும் இருக்கும்.
சங்கரன், உள்ளூர உதறலோடும், பயபக்தியோடும், ஒரு சின்ன சோபா துண்டில் உட்கார்ந்தான்; நீளவாக்கிலான சோபாவில், கைகளை விரித்துப் போட்டு உட்கார்ந்த சூரிய நாராயணன், சிரித்தபடியே அவனைப் பாராட்டினார்.
"கன்கிராட்ஸ் மை டியர் சங்கர்!”
'தேங்க்யூ சார்’.
செய்தியைச் சொல்லும் முன்னால் நன்றி சொன்ன சங்கரனை, சூரி முகம் சுழித்துப் பார்த்தார். அந்தரங்கமான அந்த முடிவு இவனுக்கு எப்படித் தெரியும் என்பது மாதிரி...
"நான் எதுக்காக ஒங்களை கூப்பிட்டேன்னு தெரியுமா மிஸ்டர் சங்கர்”.
‘இல்ல சார். இல்லல்ல சார்’.
‘ஒ... கே... மை டியர் சங்கர். மனோகர், இடத்தில ஒங்களை நியூயார்க் அனுப்புவதுன்னு... நிர்வாகம் தீர்மானித்திருக்கு... மனோகரால், நம் கம்பெனிக்கு ஏற்பட்ட தலைக்குனிவை, எப்படி நிமிர்த்தலாமுன்னு நாங்க மண்டையை குழப்பினபோது... அந்த உலகக் கம்பெனியே டோன்ட் ஒர்ரின்னு டெலக்ஸ் மெசேஜ் கொடுத்தது... டெலிபோன்லயும், சொல்லிட்டு... எய்ட்ஸ் பரவுனாலும் பரவாட்டாலும், அதனுடைய புதிய வானிலை கம்ப்யூட்டர் மாடல்கள் நம் கம்பெனி மூலம் கம்பெனி கம்பெனியாய் பரவணும்... என்கிற ஆசை... அதோட இந்த மாதிரி எய்ட்ஸ் கேஸ்கள் அமெரிக்காவில் சகஜமாம்...அதே சமயம்... மனோகருக்கு பதிலாய் அனுப்புகிறவரை ஹெச்.ஐ.வி. இல்லை என்கிற வெளிப்படையான மெடிக்கல் சர்டிபிகேட்டோடு, அனுப்பி வைக்கச் சொன்னாங்க... அதனால 138 பாலைப்புறா
நாளைக்கே மெடிக்கல் டெஸ்டுக்கு போங்க... விசா வாங்குறதில பிராப்ளம் இருக்காது... ஒகே. யூ கேன் கோ... பி.ஆர்.ஒ. காத்திருக்கிறார். அவர் மட்டும்... உள்ளூர் செய்தியாளர்களை ‘மகிழ்ச்சியாய்' வைத்திருந்தால், நம் கம்பெனியும், மனோகரும் இப்படி நாறி இருக்காது. அதனால பப்ளிக் ரிலேஷன் ஆபீசரை வீட்டுக்கு அனுப்பப் போறோம். நீங்க சீனியர் என்கிறதால... இதைச் சொல்றேன்... ஒகே. சங்கர்... நியூயார்க் புறப்படுறதுக்கு முன்னால என்னைப் பார்த்துட்டுப் போங்க”
சங்கரனுக்கு, உடம்பெல்லாம் ஆடியது. நேற்று முதல், அவன்படும்பாடு அவனுக்குத்தான் தெரியும். டாக்டர் சந்திரா, ஹெச்.ஐ.வி. ஊடுருவலின் ஆரம்ப காலஅறிகுறிகள் பற்றித் தெரிவித்தபோது, ஆடிப்போனவன், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல், கலைவாணி வேறு அவன் பெருவிரலைக் கடித்துவிட்டாள். ரத்தம் சொட்டச் சொட்டக் கடித்துவிட்டாள். டாக்டர் சந்திரா, என்னதான்.அவனுக்கு ஆறுதல் சொன்னாலும், அவன் சமாதானப்படவில்லை. ஒரு ஹெச்.ஐ.வி. நோயாளி ரத்தம் வரும் அளவுக்குக் கடித்தாலும், அந்தக் கடிவாயில், அந்தக் கிருமிகள் எழுச்சிப் பயணங்களை மேற்கொள்ள முடியாது என்று சந்திரா, அடித்துச் சொன்னாள். எச்சிலிலோ, பற்களிலோ அந்தக் 'கிருமிகள்‘ சொல்லும்படியாய் இருக்காது என்றாள். சங்கரனுக்கு சந்தேகம்... அது என்ன 'சொல்லும்படியாய்'. ஒரு வேளை, கலைவாணியின் பற்களில் ரத்தம் இருந்திருக்கலாமே... எத்தனை பேர் பற்களில் தொட்டாலே ரத்தம் கொட்டுது... கலைவாணியின் வாய் ரத்தம்... இந்தக் கை ரத்தத்துடன் கலந்து இருக்கலாமே... இந்த லட்சணத்தில் எப்படி ஹெச்.ஐ.வி. டெஸ்டுக்கு போவது... ஒன்று கிடக்க ஒன்று சொல்லிவிட்டால், உள்ளதும் போச்சே நொள்ளைக்கண்ணா கதைதானே... அந்த மனோகரைப் போல்தானே ஆக வேண்டும்... இந்த சந்திரா கூட ஏறெடுத்துப் பார்க்க மாட்டாளே. இவள்பார்க்க நினைத்தாலும், அந்த டாக்டர் அசோகன் பயல், இவளை அப்படிப் பார்க்க விட மாட்டானே... அடேய்... மனோகரா... அப்போதும் என்னை போகவிடல. இப்போதும் என்னை போகவிடல... என்னடா இதெல்லாம்?
சங்கரன், டையை இழுத்துவிட்டபடியே, நாக்கையும் இழுத்துவிட்டான்.
"சார். சார்... எனக்கு”.
"என்ன வேணும் சொல்லுங்க... நியூயார்க்லே அக்காமடேஷனப் பற்றி கவலைப்படவேண்டாம். அந்தக் கம்பெனியோட கெஸ்ட் அவுஸ்லயே தங்கிக்கலாம்.”
‘வந்து... வந்து...' சு. சமுத்திரம் 139
‘என்னைப் பார்க்காமல்... கையை ஏன் பார்க்கிங்க மிஸ்டர்... அது என்ன பிளாஸ்டர்...’
‘ஒண்ணுமில்ல... சார்... எய்ட்ஸ் நோ நோ... ஒரு சின்ன பிராக்சர் இல்லல்ல... பாத்ரூம்ல... வழுக்கி விழுந்துட்டேன். அதனாலதான் இந்த அசைன்மென்ட் வேண்டாமுன்னு’.
"வழுக்கி விழுகிறதுக்கும், நியூயார்க் போகாமல் இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?”
‘சம்பந்தம் இல்ல... ஆனால் அக்காவுக்கு கல்யாணம்’.
"இந்த வயசுலேயா? அக்காவுக்கா, அக்கா பொண்ணுக்கா.”
"இரண்டு பேருக்குமே... மனோகருக்கும்... எனக்கும். சாரி...சாரி... சாரி, சந்திராவுக்கும்... எனக்கும்...”
"என்ன சங்கர், ஒரே உளறலாய் இருக்குது... நியூயார்க்கிலயும், இப்படி உளறுனா எப்படி?”
‘எனக்கு... எனக்கு இப்போதைக்கு வேண்... வேண்டாம்... சார்’.
“லுக் மிஸ்டர் சங்கர் நீங்க சீனியராச்சேன்னுதான் ஒங்களை அனுப்பத் தீர்மானித்தோம்... ஒங்களைவிட, ரொம்ப... ரொம்ப... பிரில்லியண்டான ஜூனியர்ஸ் இருக்காங்க... நீங்க போகலாம்”.
"ஏ.ஜி.எம். என்னை தப்பாய்.”
‘உண்மையைச்சொல்லப் போனால், நீங்கபோக விரும்பாததில் எனக்கு சந்தோஷம். நீங்க போகலாம்... ஏன் போகாமல் நிற்கிறீங்க...? போங்க மிஸ்டர். மனோகருக்கு எய்ட்ஸ் கிருமி இருக்குதுன்னு இங்கே உள்ள நம் கம்பெனி ஆளு ஒருத்தன்தான்... நியூயார்க் ஏர்போர்ட்டுக்கு ‘கால்' போட்டு பேசியிருக்கான். அவன் யாராய் இருக்குமுன்னு தெரிஞ்சிக்கிறதுக்காக தலையை, இப்போ பிச்சுட்டு இருக்கேன். நீங்களும் சேர்ந்து பிய்க்காதீங்க... யூ கேன் கோ’.
‘கால் போட்டது சத்தியமாய் நான் இல்ல சார்’.
‘ஐஸி... இப்படி ஒரு ஆங்கிள் இருக்குதோ. ஓகே ஓகே. ஏன் பித்து பிடித்து நிக்கறீங்க... போறீங்களா? போக வைக்கணுமா? மிஸ்டர்... உங்களைத்தான்’.
சங்கரன், காலைத் தேய்த்து தேய்த்து, சூரிய நாராயணனைப் பார்த்து பார்த்து, மாயமாய் மறைந்து போனான். உடனே, மின்சார மணி பித்தானை 140 பாலைப்புறா
அழுத்தி விட்டு, சூரி, ‘மனோகர்' என்று ஒற்றைச்சொல்லை சொல்லிவிட்டு, இண்டர்காமை வைத்தார். உள்ளே வந்த பி.ஆர்.ஒ. உட்காரக் கூடாது என்பதற்காகவே எழுந்து நின்றார்.
அந்தக் கம்பெனியின் பொது மக்கள் தொடர்பில்லாத அதிகாரி வெளியேறுவதற்கும், மனோகர் உள்ளே நுழைவதற்கும் மூன்று நிமிட இடைவெளி நேரமே இருந்தது. சூரியநாராயணன், மனோகரையே உற்றுப் பார்த்தார். தாடி, மீசை இல்லை; அவன் கண்கள் கூட மெலிந்து இருப்பது போல் அவருக்குப்பட்டது. ஆனாலும், அந்த முகத்தில் ஜீவகளை இன்னும் போகவில்லை என்பதையும், அவர் புரிந்து கொண்டார். லேசர் ஒளிக் கற்றைகள், பொதுவாக, தன்னிடம் வரும் மின்சக்தியில் கால்வாசியைத்தான் ஒளியாக மாற்றக்கூடியவை... அதே மின்சக்தியின் பாதியை ஒளிக் கூறுகளாக மாற்றும் உத்தியை கண்டுபிடித்துச் சொன்னவன் இந்த மனோகர்; இந்த உத்தி, கம்பெனியின் ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையில் உள்ளது. இவனது உத்திக்கு உருவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இது, இவனுக்கே தெரியாது. தெரிந்தால், ராயல்டி கேட்டுவிடுவான் என்ற சந்தேகம். கம்பெனி இயக்குனர்களில் ஒருவரது மகன் பெயரிலோ அல்லது மருமகள் பெயரிலோ இந்தக் கண்டுபிடிப்பு வெளியாகலாம்...
மனோகர், நீட்டாகவே வந்திருந்தான்; ஆனாலும் அவன் மனதில் எதிரே உள்ள உதவிப் பொதுமேலாளருக்குப் பதிலாக, கலைவாணியே வியாபித்திருந்தாள். டாக்டர் சந்திரா எழுதிக் கொடுத்த மாத்திரையை... காலையிலேயே, அவள் அரை மயக்க நிலையில் இருந்த போதே, மீனாட்சி கொடுத்துவிட்டாள். இன்று மாலையில் போய்த்தான், மனம் விட்டுப் பேச வேண்டும். அவள் என்ன சொன்னாலும், அதற்குக் கட்டுப்பட வேண்டும்.
"உட்காருங்க மிஸ்டர். மனோகர்!”
“பரவாயில்லை சார்".
"ஐஸே யூ சிட்டவுன்... கண்டகண்ட பயல்கஎல்லாம் உக்காரும் போது, நீங்க உட்காரப்படாதா...?”
மனோகர், சங்கரன் உட்கார்ந்த ஒற்றைச் சோபா துண்டிலேயே உட்கார்ந்தான். சூரியநாராயணன்தான், சோபாவில் கை பரப்பியோ அல்லது கால் மேல் கால் போட்டோ உட்காராமல், அதன் மூலையில் உட்கார்ந்தார். மனோகர் ஆற்றொண்ணா துயரத்தோடு பேசினான்.
"நடந்தது எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு சார்... என்ன.. ஒங்க கிட்ட ஒப்படைக்கேன் சார்... என்னால... என்னால..." சு. சமுத்திரம் 141
"அழாதீங்க... மிஸ்டர் மனோகர். சுய இரக்கம் கூடாது; நீங்க எனக்கு உடன்பிறவா தம்பி மாதிரி”.
மனோகருக்கும், சிறிது தெம்பு வந்தது; சூரிய நாராயணனுக்குத்தான் அவனைப் பார்க்க, பார்க்க, அந்த தெம்பு போய்க் கொண்டிருந்தது. ஆனாலும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, அவர் பேசினார். எய்ட்ஸ் துறையில் தனக்குள்ள ஞானத்தை நன்றாகவே விளக்கினார்.
“ஒரு ஹெச்.ஐ.வி. நோயாளி, முன்னெச்சரிக்கையோடு இருந்தால், பத்து வருடத்திற்கும் அதிகமாகவே, தனக்கும், பிறருக்கும் பயன்படலாம் என்பது எனக்குத் தெரியும் மனோகர். இந்தக் கிருமிக்காரரை கட்டிப்பிடிப்பதாலோ, ஒரே தட்டில் சாப்பிடுவதாலோ, ஒன்றாகப் படுப்பதாலோ, இந்த நோய் தொற்றாது என்பதும் தெரியும் மனோகர். இந்த நோயாளியோட இருமலும், தும்மலும், எச்சிலும் இந்த நோயைப் பரப்பாது என்பதும் எனக்குத் தெரியும் தம்பி. எய்ட்ஸ் நோயாளியோடு.. கொஞ்சம், கொஞ்சமாய் எச்சரிக்கையோடு பழகினால், அந்த நோய் அடுத்தவருக்கு வராது. இன்றைய டென்ஷன் பிடித்த வாழ்க்கையில்... எல்லாவற்றிலும், எப்போதும் ரிஸ்க் எடுக்கிறோம். உதாரணமாய், நம்மை எமலோகத்துக்கு அனுப்பக் கூடிய லாரிக்கு இரண்டடி பக்கத்திலேயே நடக்கோம். ஒரு சைக்கிள்காரன்கூட, தனக்குத்தானே ஒரு கணக்குப் போட்டு, எதிரே ஓடிவருகிற பஸ்ஸுக்கு குறுக்கே இரண்டடி இடைவெளியில், உயிருக்குரிஸ்க் எடுத்து ஒட்டுறான்; ஆக வாழ்க்கையே... இரண்டடி மரண இடைவெளியில்தான் ஒடுது. மரணத்துக்குப் பக்கமாகவே நடக்கோம். மரணத்தைப் பற்றிக் கவலைப்படாமலே பறக்கோம். பிறப்போடு பிறந்தது மரணம்... அதனால ஒரு எய்ட்ஸ் நோயாளியோடு பழகுவதோ, பகிர்வதோ, எல்லா... ரிஸ்கையும் மாதிரி சாதாரண ரிஸ்க்குத்தான். இதுக்கு ரொம்ப அலட்டிக்க வேண்டியதில்லை.”
மனோகருக்கு, மகிழ்ச்சி ஏற்படவில்லைதான். ஆனால் துக்கம் குறைந்தது. நல்ல வேளையாக, அவன் நினைத்ததுபோல் அவர்பேசவில்லை. இன்னும், தன்மீது கம்பெனிக்கு அன்பு இருக்கிறது, அனுதாபம் இருக்கிறது. இந்த இரண்டிற்கும் மேலாய் நம்பிக்கை இருக்கிறது. இப்போது இந்த மனோகரனே, அவரிடம் குழந்தையானான்.
‘ஒங்களுக்கு... எப்படி நன்றி சொல்லறதுன்னே புரியல சார் வீட்டுக்கு அனுப்பிடுவீங்களோன்னு பயந்தேன் சார். இன்றைக்கு பாருங்க சார் என் செக்ஷன்ல போய் உட்கார்ந்தேன். ஒருத்தர் கூட அனுதாபமா கேட்கல. என்னைப் பார்த்ததும், எல்லோரும் சொல்லிவைத்தது மாதிரிபுறப்பட்டாங்க சார். இன்னும் திரும்பி வரல்ல சார். நீங்க இப்படி பேசுன பிறகுதான், என் வயித்தில பால் வார்த்தது மாதிரி இருக்குது. ஒங்க அரவணைப்புல, 142 பாலைப்புறா
கம்பெனிக்கு இன்னும் திறமையாய் உழைப்பேன் சார்... எதுக்கும் தனி ரூம்தாங்க சார்’.
“வெயிட்... மை எங்க்மேன் வெயிட்... ஒங்க கிட்டே எப்படிச் சொல்றதுன்னே புரியல. நான் கம்பெனி அல்ல... கம்பெனியோட கருத்தும்... என் கருத்தல்ல... ஒங்களைப் பார்த்ததும், வெளியேறுன சகாக்கள் வேற... எங்கயும் போகல... என்கிட்டதான் வந்தாங்க. உங்களை இனிமேலும் இருக்க வைக்கக் கூடாதுன்னாங்க. நான், எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். எதுல ரிஸ்க் எடுத்தாலும்,உயிருல ரிஸ்க் எடுக்கமுடியுமான்னு திருப்பி கேட்டாங்க. நோய் தொத்துற மலேரியா நோயாளியோடு பழகுறோம். அம்மை போட்ட நோயாளியோட பழகுறோம். ஆனால்... ரத்தம் தவிர வேற எந்த வழியிலும் பரவாத எய்ட்ஸ்காரனைப் பார்த்தால் பயந்து ஒடுறோம். பாருங்களேன், அநியாயத்தை... நீங்க செக்ஷனுக்குள்ள இருக்கிறவரைக்கும் அவங்க அங்கே போகமாட்டாங்களாம்... அதனால..."
"நான்... அக்கெளண்டன்டை போய் பார்க்கணும்... எய்ட்ஸ் என் கணக்கை முடிக்கும் முன்பே... நீங்க என் கணக்கை முடிச்சிட்டிங்க... அவ்வளவுதானே சார்?”
சூரியநாராயணன், தலை கவிழ்ந்தார். தோளைக் குலுக்கினார்; புறப்பட்ட மனோகரை பார்க்க முடியாமல் கண்களை மூடினார். அவன் வாசல் வழியாய் மறையப் போனபோது, ‘அடிக்கடி வாங்கோ மனோகர்’ என்று வாய்க்குள் புரளப் போன நாக்கிற்கு, வாய்க்குள்ளேயே சிறையிட்டு, அதை உதடுகளால் மூடிக் கொண்டார்.