உள்ளடக்கத்துக்குச் செல்

பாலைப்புறா/அத்தியாயம் 3

விக்கிமூலம் இலிருந்து

ந்த ‘டானா’ வளைவு பள்ளிக்கூடம், அன்று மட்டும் இலவச மருத்துவ முகாமாகி விட்டது. ஒரு நாள் கூத்துக்கு, மீசையை எடுத்தது போல், துணைக் கட்டிடத்தில், வகுப்புக்களை எல்லை பிரித்துக் காட்டும், பலகைத் தட்டிகள் அகற்றப்பட்டு, அந்த கட்டிட உள் வளாகம், பொதுக் கூடமானது. வரிசை வரிசையாய் பெஞ்சுகள் போடப்பட்டு, அதன் முன் பக்கம் வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்ட நீளவாக்கில் இரண்டு மேஜைகள். அந்த துணியை எவரும் எடுத்து, மேஜைகளின் அழுக்கை தெரியப்படுத்தக் கூடாது என்பது போல், இலை மறைவு காய் மறைவாய் பொருத்தப்பட்ட கிளிப்புகள். மேஜை மத்தியில் ஒரு மைக். அருகே ஒரு போடியம். அதன் முன்னால், இன்னொரு மைக்.

பள்ளி வளாகத்தில், ஆகாய காகித தோரணங்கள்; இடையிடையே, துணிப் பேனர்கள்… ‘வெள்ளையன் பட்டியாம் வீரபூமிக்கு… மகளிர் மருத்துவ மனை கொண்டு வந்த சட்ட மன்ற உறுப்பினர் அவர்களே! வருக! வருக!’ ‘மாவட்ட சுகாதார அதிகாரி அவர்களே வருக! வருக!’ ‘ஏற்றமுள்ள மக்களுக்கு இரக்கமுள்ள அண்ணனே வருக! வருக!'

சட்ட மன்ற உறுப்பினர் பற்றிய பேனரை, கலைவாணி, தாள முடியாத வெப்பமாகப் பார்த்தாள். இனி மேல், அதை எடுக்க முடியாது. அதைப் பார்த்துக் கொண்டே நின்றால், கோபம்தான் மிஞ்சும். கலைவாணி, கண்களைச் சுழல விட்டாள். வெள்ளையன் பட்டி மக்கள், உறவின் அடிப்படையில் கும்பல், கும்பலாய் நின்றார்கள். சிறுவர், சிறுமியர், நடமாடும் மருத்துவ முகாம் வேனையும், அதற்குள் இருந்த விதவிதமான கருவிகளையும், லயித்துப் பார்த்தார்கள். இவர்களில் ஒரு சிலர், 40 பாலைப்புறா

கலைவாணியின் பக்கம் வந்து ‘வெள்ளையன்பட்டி கீப் இட் அப்’ என்று மேடம் போலவே, கண்களை அகல விரித்து நடித்துக் காட்டினார்கள். இவர்களைத் துரத்திப் போன வாடாப்பூவையும், தேனம்மாவையும், கலை பிடித்துக் கொண்டாள்.

சிறிது தொலைவில், மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் சுகுமார், ஐந்தாறு டாக்டர்களோடும், இதர நான்கைந்து பேருடனும் வெள்ளையும் சொள்ளையுமாய் நின்றார். அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார். இன்னும் இரண்டு மணி நேரத்தில், மாவட்டத் தலைநகர் போயாக வேண்டும். வளர்ச்சி மன்றக் கூட்டம்; அங்கே போகா விட்டால், கலெக்டர் தாளிப்பார். இங்கே நிற்காவிட்டால், எம்.எல்.ஏ. தாளிப்பார். எல்லாம் ரெடி. இந்த எம்.எல்.ஏ. தான் ரெடியாகல.

இதற்குள் ஆளுயர பூப்பிணத்தைத் தூக்கிக் கொண்டு வந்த கட்சிக்காரர்களை பார்த்து சல்யூட் அடித்தபடியே சுகுமார் ஓடினார். அவர் ஒட, அவர் பின்னால், அத்தனை டாக்டர்களும் ஒட, ஒரே அமர்க்களம். டாக்டர் சந்திரா மட்டும் நின்ற இடத்தில் நின்றாள்.

கலைவாணி, தோழிகளோடு பேசிக் கொண்டிருந்தாலும், அவள் கண்கள், சிறிது தொலைவில் வேலையில்லாப் பட்டதாரிகளின் முற்றுகையில் நின்ற மனோகர்மீதே மொய்த்தன. வந்தவுடனேயே வணக்கம் போட்டாள். அவனோ முகத்தை மட்டும் ஆட்டினான். அதுவும் லேசாய்; பழைய சிரிப்போ குழைவோ இல்லை. இவ்வளவுக்கும் அவன் புதியவன் அல்ல. பள்ளிக்கூடத்தில், மூன்று வகுப்புகளுக்கு மேல் படித்தவன். கல்லூரி விடுமுறையில் இருந்து ஊருக்கு வரும் போதெல்லாம், இருவரும் மனம் விட்டுப் பேசவில்லையானாலும், வாய்விட்டுப் பேசி இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர், சந்திக்க முயற்சி செய்யவில்லையானாலும், தற்செயலாய் சந்தித்த போதெல்லாம், ஐந்தாறுநிமிடம் நின்று பேசுவதுண்டு. மனோகரை, கலைவாணிக்குப் பிடிக்கும். அவனோடு பேசிய பேச்சு, அறிவுப் பூர்வமான பேச்சு. நல்லவர்களைக் கணக்கிட அவனையே அளவுகோலாய் வைத்துக் கொள்ளலாம் என்பது போன்ற கற்பிதம்; உடம்பை ஆட்டாமல், முகத்தைச் சுட்ட செங்கல்லாய் ஆக்காமல், மண்ணாய்க் குழைந்து காட்டும் பரிவும், பாசமும், அவளைக் காதலியாய் ஆக்கவில்லையானாலும், அவன் மீது கவனம் செலுத்துகிறவளாய், ஆக்கிவிட்டது. ஆறடிக்கு சிறிதே குறைந்த உயரம், அந்த உயரம், அவனை ஒட்டகச் சிவிங்கியாக்காமல், மத யானை போன்ற மதர்ப்பை கொடுத்தது. அவன் சதைத் திரட்சி, இவளை காமுகியாய் ஆக்கவில்லையானாலும், ஒரு ரசிகையாய் ஆக்கியதுண்டு. மனோகருக்கு சிறப்பு, நடத்தையா அல்லது அழகா என்று ஒரு பட்டிமன்றம் போட்டால் சு. சமுத்திரம் 41

சாலமன் பாப்பையா பிச்சு உதறுவார். இப்படிப்பட்ட இவர், ஏன், இன்று ஏருக்கு மாறாய் நிற்கிறார்? அன்றைக்கும் சரி இல்லை... இன்றைக்கும் சரி இல்லை. ஒரு துரும்பைத் தூக்கிப் போட்டு 'நீதான் மாப்பிள்ளை’ என்று சொல்லிவிட்டால் போதும். அது துள்ளுமாமே... அப்படி ஆகிட்டாரோ...

கலைவாணி, ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டாள். அவனையே நேருக்கு நேராய்க் கேட்டுவிடுவது... கல்யாணம் என்பது நூறாண்டு பயிர். இந்தப் பயிர் முளைக்கும் முன்பே வித்தை பார்க்க வேண்டும். அவள், தோழிகளிடம் இருந்து விடுபட்டு, அவன் நின்ற பக்கமாய் போனாள். ஒரு சுவரில் ஒட்டப்பட்ட, இலவச மருத்துவ முகாமை சின்னதாய்ப் போட்டு, இதைத் துவக்கி வைக்கப் போகும் எம்.எல்.ஏ. படத்தை பெரிதாகப் போட்ட போஸ்டரைப் படிப்பது போல் பாசாங்கு காட்டினாள். மனோகர், அந்த பட்டதாரிகளிடம் இருந்து விடுபடுவது வரைக்கும் நிற்கப் போவது போல் நின்றாள். ஆனால் இந்த மனோகரோ, அவளைப் பார்க்காமலே, சுற்றி வளைத்து பட்டதாரிகளுக்கு, இப்போது உபதேசித்துக் கொண்டு நின்றான்.

"எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சிலே பதிவு செய்து, அப்படி பதிவு செய்தவர்களோட கார்டு அவனோட பட்டதாரி பிள்ளைக்கும் பொருந்துமுன்னு சட்டம் வந்தால் கூட, நமக்கு இன்னும் பிறக்காத பிள்ளைகளுக்கு கூட கார்டு வராது என்பதை ஒத்துக்கிறேன். ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட ஒருவனுக்கு வேலை கொடுக்கத்தான், ஒங்கள மாதிரி அப்பாவி இளைஞர்களோட பணத்தையும், காலத்தையும் பகல் கொள்ளை போடுறாங்க என்கிறதையும் ஒத்துக்கிறேன். ஆனால் இதுவே நாம் முயற்சி எடுக்காமல் இருக்கிறதுக்கு ஒரு சாக்காயிடப் படாது. பக்கத்து வாடாப்பட்டியில் பிறந்து, ஒரு தகர டப்பா காலேஜில் படித்த முத்துக்குமார், இப்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில அசிஸ்டென்ட் புரபஸரா இருக்கார் என் கூடப் படித்த ஏழைப் பையன் ராமையா, பெர்லினில் சூப்பர் என்ஜினியராய் இருக்கான். தப்பா நினைக்காதீங்க. குறைந்த பட்சம் பத்திரிகை படிக்கும் பழக்கம் ஒங்களுக்கு உண்டா? சினிமா மலர்களை விட்டுட்டு, இந்து, இந்துஸ்தான் டைம்ஸ், எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளில் சப்ளிமெண்டை படிக்கிறது உண்டா... ஏன் ஊமையா நிற்கறீங்க...”

சுற்றி நிற்பவர்கள் சப்புக் கொட்டியபோது, பட்டைதாரியும், பட்டதாரியுமான சுப்பிரமணியன் சூடாய்க் கேட்டான்.

"அப்போ எவ்வளவு நாளைக்குத்தான் இழுத்தடிக்கப் போறீங்க?”

மனோகர், அவனை ஒன்றும் புரியாமல் பார்த்தான். பக்கத்தில் நின்ற பயல்களும், அவனைத்தட்டிக் கேட்கவில்லை. இது என்ன அதிகாரப்பிச்சை? 42 பாலைப்புறா

இவன்களிடம் பேசுவது காலவிரயம். சுயமரியாதைக்கு இழுக்கு.

மனோகர், அவர்களை விட்டு வேகமாய் நடந்தான். விறுவிறுப்பாய் நடந்தான். அந்த அவசரத்தில், கலைவாணி நிற்பதைக் கூட அவன் கவனிக்கவில்லை.

‘ஒன்மினிட்’

மனோகர் நின்றான். கலைவாணி, அவன், தன்னை உதாசீனம் செய்வதாக நினைத்து ரப்பாவே கேட்டான்.

"ஒங்க கிட்டே தனியாப் பேசணும். லெட்டஸ் பி ஃப்ராங்க்...”

‘'நான் இங்கே வந்ததே ஒங்க கிட்டே பேசத்தான். இன்னும் குடி முழுகிடல".

இருவரும் நடந்து, பள்ளிக்கூடத்திற்குப் பின்புறமாய் வந்தார்கள். அங்கே சுவருக்கும், ஒரு புளியமரத்திற்கும், இடையே நின்று கொண்டார்கள். யார் முதலில் பேசுவது என்ற தயக்கம் அல்லது கர்வம்... கலைவாணியே வெட்கம் விட்டுக் கேட்டுவிட்டாள்.

"எதுக்காக... என்னை அலட்சியப்படுத்தறீங்க? இன்னிக்கே நம்ம கல்யாணம் நடக்கணுமா, வேண்டாமான்னு தீர்மானம் எடுத்துடலாம். நான் மிரட்டுறதாய் நினைக்காதீங்க. என்னாலதாங்க முடியல".

"நானும் அதே முடிவுதான். மாப்பிள்ளை பிடிக்கல்லன்னு அழுகிறவளைகட்டிக்கிற அளவுக்கு நான் ரோஷம் கெட்டவன் இல்லே".

"யார் அழுதது?”

"நீங்க ஒரு நாள் முழுக்க அழுதீங்களாம். என் தங்கை- ஒங்க பிரண்ட் மீராவே சொன்னாள்!”

"கொஞ்சம் பேக்கிரவுண்டோடு சொல்ல முடியுமா?”

"சொல்றேன். மீரா... முகம் போன போக்கைப் பார்த்துட்டு டிவியைப் பார்த்தேன். மேல் நாடுகளில் மேடை போட்டு ஒரு ஆணையும் பெண்ணையும் பகிரங்கமாய் அந்தரங்க உறவுல ஈடுபடுத்தி, டிக்கட் வாங்குனவங்களுக்கு காட்டுறாங்களே லைஃப் செக்ஸ்... அந்த மாதிரியான ஒலியும், ஒளியும். உடனே நான் டி.வியை ஆப் செய்தேன். ஆன் செய்ய வந்தவளை கீழே தள்ளினேன். உடனே 'ஒன் புத்திக்குத்தான் மாப்பிள்ளை பிடிக்கல்லன்னு கலைவாணி ஒரு நாள் முழுக்க அழுதா'ன்னு சொன்னாள்." சு. சமுத்திரம் 43

நான்பிடிக்கல்லன்னா, நீங்க எனக்கே லட்டர் போட்டிருக்கலாம்”

"அடிப்பாவி... குடியைக் கெடுக்கப் பார்த்தாளே”

"அப்போ... நீ அழலியா?”

"அழுதது நிசம். ஆனால் கல்யாணம் வேண்டாமுன்னுதான் அழுதனே தவிர, மாப்பிள்ளை பிடிக்கல்லன்னு அழல்ல. ஏனோ இந்த ஊரைவிட்டும், எங்க வீட்டை விட்டும், இந்த அமைப்புகளை விட்டும் போக மனம் வரல. அப்புறம் அப்பாம்மா புத்தி சொன்னாங்க. நானும் யோசித்துப் பார்த்தேன். கல்யாணம் செய்யாமல் இருக்கப் போறதில்லை. எப்பவோ வரப் போற தேவனைவிட, எனக்கு தெரிந்த ராட்சதனே மேலுன்னு நினைத்தேன். அப்புறம் பாருங்க ஒங்க நெணைப்பு வந்து, இந்த ஊரு சின்னதாப் போயிட்டு, நீங்க பெரிசா ஆகிட்டீங்க...”

"மாப்பிள்ளை மனோகர்ன்னு சொன்னவுடனேயே உங்களுக்கு ஆசை வந்திருக்க வேண்டாமா...?”

"அந்த மாதிரி பிடிப்பாய் நீங்க பேசலியே! பேச்சுல்லாம் கம்ப்யூட்டர், இல்லாவிட்டால் விண்வெளி ஆராய்ச்சி".

"சரி... இப்போ மேல்நாட்டு லைஃப் செக்ஸ் பத்தி பேசட்டுமா?”

கலைவாணி, இதுவரை அவனைப் பாராத பார்வையாய்ப் பார்த்தாள். இயல்பாய்ப் பார்த்த அந்தக் கண்களை, இப்போது பார்க்கும் போதே ஒரு போதை. அவன் உதடுகளை நோக்கும் போதே, தனது உதடுகளில் ஈரக்கசிவு. அவன் நீட்டிய கையைப் பிடிக்கப் போனாள். அப்படிப் போன கையைப் பின் வாங்கினாள். அப்புறம் மெள்ள மெள்ள, பையப் பைய விரல்கள் விரல்களோடு, பின்னிப்பிணைந்து, ஒரு சின்னப் பாலமாய் ஆனது. வாய்கள், தன்பாட்டுக்கு பேசிக் கொண்டன. ஆண்டாண்டு காலமாய் ஊர் கருதியோ, கெளரவம் கருதியோ, கர்வத்தாலோ உள்ளடைக்கப்பட்ட உணர்வுகள்,... பீறிட்டுப் பின்னிக் கொண்டன.

"இப்போதான், என்மனசே. மனசா இருக்குது".

"எனக்கும்தான்".

"இந்த ஊரை விட்டு நீ பிரியனும் என்கிறது தற்காலிகந்தான். இன்னும் மூன்று மாதத்தில எங்க கம்பனி பிராஞ்ச் திருநெல்வேலியில் ஒப்பன் ஆகப் போகுது. அநேகமாய் என்னைத்தான் பிராஞ்ச் மானேஜராய் போடுவாங்க. வேனுமானால் இந்த மூன்று மாதமும் நீ இங்கேயே இருக்கலாம். அதுவரைக்கும் பல்லைக்கடிச்சிட்டு பொறுத்துக்கிறேன்". 44 பாலைப்புறா

"ஆனால்... நான் பொறுக்கமாட்டேன். நீங்கதான் என்னோட நேரு இளைஞர் மையம். நீங்கதான் என்னோட அறிவொளி இயக்கம். நீங்கதான் என்னோட பிரசவ ஆஸ்பத்திரி".

"ஏய்..."

கலைவாணி, புளியமரத்தில் சாய்ந்து நின்றவன் மேல், அப்படியே சாய்ந்தாள். இதற்குள் அந்தப் பக்கம் சத்தம். வேலை இல்லா பட்டதாரிகள்.

"அந்த சுப்பிரமணியன் இருக்கான் பாரு, என்கிட்ட அவன் பேசுற விதமே சரியில்ல".

கலைவாணி, தான் கேள்விப்பட்டதைச் சொல்லப் போனாள். அந்த சுப்பிரமணியத்தின் அப்பாவிடம், இந்த மனோகரின் அப்பாவான தவசிமுத்து மாமா, மகன் மூலம் வேலை வாங்கித் தருவதாய் வாக்களித்து, ஐயாயிரம் ரூபாய் முன் பணமாய் வாங்கியிருப்பதாக ஊரில் அடிபடும் செய்தியை கூறப்போனாள். வேண்டாம். இந்த மூடை கெடுக்கப்படாது. மாமனாரைப் பற்றி கோள்மூட்டுவதாக வரப்படாது. சமயம் வரும் பேசிக்கலாம்:

கலைவாணியும், மனோகரும் கைகோர்க்காத குறையாக நடந்தார்கள். அவளுக்கு, அந்தப் பழையவன், புதியவன் போல் தோன்றினான். கனிவான கண்டிப்போடு பேசும் அவன், பெரிய மனிதத் தனமும், குழந்தைத்தனம் ஊடகமாய் குழைந்தும், இழைந்தும் இப்படி இதமாகப் பேசுவது இதுவே முதல் தடவை; முதல் அனுபவம்; ஏறிட்டுப் பார்த்தால் கண்களை எடுக்க முடியாத, அதே சமயம் இன்னதென்று விளக்க முடியாத ஏதோ ஒரு வசீகரம். திடீரென்று குலவைச் சத்தம்; திரும்பிப் பார்த்தால், கனகம்மா, பாம்படக் காதுகள் ஆட ஆட, வாய்க்குள் நாக்கை சுழற்றுகிறாள். பிறகு ‘இப்போது மாதிரியே எப்பவும் இருக்கக் கடவது' என்கிறாள். கூட நிற்கும் பெண்களில், ஆனந்தி தவிர்த்து, அத்தனை பெண்களும் கைதட்டுகிறார்கள்.

கலைவாணியும், மனோகரும், நாணிப் போய் நிற்கிறார்கள். நிமிர்ந்து பார்த்தால், மாவட்ட சுகாதார அதிகாரிக் கிழவர் டாக்டர் சுகுமார், கையாட்டி கூப்பிடுகிறார். போனால், கலைவாணியைப் பார்த்து, ‘கன்கிராஜுலேஷன் கலைவாணி. அந்த அடிக்கல் நாட்டு விழாவில் வெளுத்து வாங்கிட்டிங்க’ என்கிறார். அவளைக் கனிவோடு பார்க்கிறார். கோணச்சத்திர ஆரமப சுகாதார நிலைய டாக்டர் சந்திரா, கலைவாணியின் கரம் பிடித்துக் குலுக்குகிறாள். அந்த நிலையத்தின் இன்சார்ஜ் டாக்டர் முஸ்தபா மட்டும் ஆகாயத்தைப் பார்க்கிறார்.

கலைவாணி, மனோகரை வெட்கத்தோடு அறிமுகம் செய்கிறாள். சு. சமுத்திரம் 45

“இவரு... இவரு என் உட்பி கணவர். மெட்ராஸ்ல கம்ப்யூட்டர் என்ஜினியர்".

"குட். கல்யாணச்சாப்பாடு எப்போ...?"

கலைவாணி பதில் சொல்ல நாக்கை நீட்டியபோது, ஒரு குறுந்தாடி இளைஞன் வந்தான். ஒல்லியான உடம்பில் அழுத்தமான பார்வை. மாவட்ட சுகாதாரம், அவனை செல்லமாய்க் கண்டித்தது.

"ஏம்பா...! ஒப்பா ஒன்னை டாக்டருக்கு படிக்க வச்சது. உழைக்கிற காசைகரியாக்கவா... ஹெச்.ஐ.வி. டெஸ்டுக்குன்னு எதுக்காக அந்த எய்ட்ஸ் டெஸ்ட் இன்ஸ்ட்ரூமென்டை வாங்குனே? மூன்று லட்சம் ரூபாயை இப்படியாபாழ் பண்றது?”

டாக்டர் அசோகன், அவருக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை. உயிர் கொல்லி எய்ட்ஸ் கிருமிகள் பிடித்த அப்பாவிகளையும், பாவிகளையும், கண்ணாடி அறையில் போட்டு, அவர்களுக்கு ரொட்டி, சப்பாத்தியை நாய்களுக்கு வீசுறது மாதிரி வீசுறாங்களே அரசாங்க டாக்டர்கள்... அந்த சாதி இவரு; எய்ட்ஸ் நோயாளிக்கிட்ட முகமூடி போட்டு பேசுற சுயபய சாதி, பேசிப் பிரயோசனமில்லாத வர்க்கம்...

டாக்டர் அசோகன், கண்டிப்பாய்க் கேட்டான்.

"இந்த எம்.எஸ்.ஏ.வுக்காக எவ்வளவு நேரம் யார் காத்து நிற்கிறது? இந்திய ஸ்டான்டர்ட்படி ஒரு மணி நேரம் காத்திருக்கலாம். அதுக்கும் மேலேயும் மணியாயிட்டே".

"இந்த மருத்துவ முகாம் துவக்க விழாவில் எய்ட்ஸ் பற்றி மக்கள் கிட்டே நீயே எடுத்துச் சொல்லேன்..."

"காத்திருக்கிறதுக்கு போனஸா?”

"என்ன டாக்டர். இப்போதான். ஒங்களை கேட்கிறது மாதிரி பேசுறீங்க. ஒங்களை நான் கூட்டி வந்ததே, எய்ட்ஸ்ல அதாரிட்டியான நீங்க, இந்த முகாமுல பேசணுமுன்னுதானே".

இப்படிச் சொன்ன டாக்டர் சந்திராவை, மாவட்டம் முறைத்தது. ‘என்கிட்ட கேளாமல் நீ எப்படிடி கூப்புடலாம்... லவ்வா...?'

டாக்டர், அசோகன் கோபமாகப் பேசினான்.

"இதுக்கு மேலேயும் காத்திருக்கிறதில அர்த்தமில்ல டாக்டர். ஊர்க்காரங்க புறப்படுறாங்க பாருங்க. மேடைப் பேச்சு எப்போ எங்கே வேணுமுன்னாலும் நடக்கட்டும். ஆனால் மெடிக்கல் செக்கப்பை 46 பாலைப்புறா

துவக்கிடலாம். சரிதானே டாக்டர் சந்திரா”

"இதுதான் என்னோட அபிப்ராயமும் டாக்டர்".

மாவட்ட சுகாதார அதிகாரி, அங்குமிங்குமாய் சுற்றிய டாக்டர்களையும், லேப் நிபுணர்களையும், காக்கி ஆசாமிகளையும் கைத்தட்டிக் கூப்பிட்டார். பிறகு கலைவாணியையும், மனோகரையும் பார்த்து, “இதோ ஆரம்பிக்கப் போறோம். ஒங்க ஆட்களை வரிசையாய் இந்த முதல் ரூம் பக்கமாய் நிற்க சொல்லுங்க!" என்று துரத்தினார். அவர்கள் போனதும், எல்லோருக்கும் ரகசியமாய்ப் பேசுவது போல், அதே சமயம் சத்தம் போட்டே பேசினார்;

"நம் தமிழக அரசு, மத்திய அரசுக்கு ஹெச்.ஐ.வி. இன்ஃபக்ஷன் பற்றி ஒரு ரிப்போர்ட் அனுப்பணுமாம். இப்போ அங்குமிங்குமாய் இருக்கிற இந்த நோய், எதிர்காலத்தில் எல்லோரையும் ஆட்டி வைக்கப் போகிற நோயாம். எப்படியோ போகட்டும். இதனால், இந்த முகாமிலேயே எய்ட்ஸ் கிருமி இருக்குதான்னு கண்டு பிடிக்கணும். இப்படி சுகாதாரத்துறை செயலாளர் சொல்லிட்டார். ஓசப்படாமல், கண்டுபிடிக்கணும். நாம் ரேண்டம் சாம்பிள் கொடுத்தால், சென்னையில் இருக்கிற கோட்டைக்காரன் அதை நூறால பெருக்குவான்".

"இங்கே எப்படி ஹெச்.ஐ.வி. டெஸ்ட் செய்ய முடியும்".

"நான் அப்படி செய்யச் சொன்னேனா? இப்படி ஒங்களை மாதிரி டாக்டருங்க, முட்டாள்தனமாய் பேசுறதாலதான், ஐ.ஏ.எஸ்.காரன் நம்ம மேல குதிரை ஏறுறான். பிளட்சுகர் டெஸ்ட்டுக்கு எடுக்கிற ரத்தத்தை வீணாக்காமல் வை. அதில் ஒருதுளியை ரொட்டேட்டர்லயோ, அது கொண்டு வராட்டால் ரசாயன முறையிலேயோ, டபிள்யூ பிஸு அதுதான் வெள்ளை அணுக்களாவும், சிவப்பு அணுக்களாவும் பிரி; வெள்ளை அணுக்கள், கனசென்டி மீட்டருக்கு எவ்வளவு இருக்குதுன்னு கணக்குப்பார்; கவுன்ட் எட்டாயிரமாய் இருந்தால்... எந்த டியூப்லே எடுத்தியோ அந்த டியூப் ரத்தத்தைக் கொட்டு. கவுன்ட் ஆறாயிரத்துக்கு குறைந்தாலோ, ஒன்பதாயிரத்துக்கு உயர்ந்தாலோ முகாம் முடிஞ்சதும் சம்பந்தப்பட்ட டியூப் ரத்தத்தை மாவட்ட மருத்துவ மனைக்கு கொண்டு வா. அங்கே மைக்ரோ பயாலஜிஸ்ட் பார்த்துக்குவார். ஒ.கே. இதையே மீண்டும் ஒலிபரப்பணுமா... சரி... சரி. உள்ளே ஒண்ணுக்கு இருக்க இடம் இருக்குதா".

"இல்ல..."

"அப்போ யூரின் டெஸ்ட்டை விடு. ஓ.கே., மை டாக்டர்ஸ்... கோ கோ நோயாளி இருக்கானோ, இல்லியோ... அந்த நோயாளிகள் எண்ணிக்கைய கூட்டுங்க. அப்போது தான், உலக சுகாதார நிறுவனக்காரன்கிட்ட காசு சு..சமுத்திரம் 47

கறக்கலாம்’.

இதற்குள், வெள்ளை யூனிபார டாக்டர்களும், மற்ற ஊழியர்களும், அந்த நீளவாகு கட்டிடத்தில், அறை அறையாய் உட்கார்ந்தார்கள். கலைவாணியும், இதர இயக்க, மன்றப் பெண்களும், ஊராரை ஒவ்வொருவராய் ஒழுங்குபடுத்தினார்கள். ஒடிப்போன சிறுவர் சிறுமியரை இழுத்து வந்தார்கள். ஆனாலும் எல்லோருக்கும் பயம். எதாவது ஒன்று கிடக்க ஒன்று சொல்லிடுவான் என்கிற பயம். இதனால் கலைவாணி முன் வந்தாள். ‘நானும் மனோகரும் மொதல்ல போறோம்' என்றாள்.

மனோகரும், கலைவாணியும் உள்ளே போனார்கள். கூடவே கனகம்மா, வாடாப்பூ, மற்றபடி கப்சிப்; அந்த நால்வரின் பெயரையும், வருகைப் பதிவேட்டில் ஒரு நோஞ்சான் பெண் எழுத, டாக்டர் சந்திரா, அவர்களை ஸ்டெதாஸ்கோப்பால் தடவிவிட்டு, அவர்கள் பெயர் எழுதிய காகிதங்களையும் ஒன்று இரண்டு என்று நம்பரிட்ட சதுரக் காகிங்களையும் நீட்டினாள். இவளை விட்டு இன்னும் பலரைத் தாண்டி, அவர்கள் உள்ளே ஒரு அறைக்குள் போய் ஊசி வழியாய் ரத்தம் கொடுத்துவிட்டு, வெளியே வந்தார்கள்.

கலைவாணி... வரிசையாய் நின்றவர்களிடம் சொன்னாள்.

"இனிமேல் இவரு ஒண்ணாம் நம்பர்... நான் ரெண்டாம் நம்பர்..."

"ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் காதலா. மூணும் நாலும் சாட்சியா வெள்ளையன்பட்டி... கீப் இட் அப்..."

கிட்டே வந்து கிண்டல் செய்த ஒரு ‘எட்டாப்பு' மாமா மகனை, கலைவாணி சிரித்துக் கொண்டு துரத்தினாள்.

இதற்குள், மருத்துவ முகாம் துவக்க விழாவும் துவங்கிவிட்டது. எம்.எல்.ஏ. அண்ணன் வராமலே, டாக்டர் அசோகன், டாக்டர்களின் ஊசி குத்தலுக்குப் பயந்து, அங்கே உட்கார்ந்தவர்களிடம் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டு இருந்தான். அவன் வாயில் ஹெச்.ஐ.வி. கிருமிகள், எய்ட்ஸ் நோய், ஒருத்தன்- ஒருத்தி, காண்டோம் போன்ற வார்த்தைகள் துள்ளித் துள்ளி விழுந்தன. ஆரம்பத்தில் அவனைப் பார்த்தும், அப்புறம் அவன் பேச்சைப் பார்த்தும், சிரித்த வெள்ளையன்பட்டி பின்னர் பேயறைந்து போனது. அடேயப்பா.. ஒனக்கும் வரும், எனக்கும் வருமா...?

இதற்குள், துவக்கி வைக்க வந்த எம்.எல்.ஏ. அவர்கள், கூட்டம், தான் வருவதை கைதட்டாய் அங்கீகரிக்காததைக் கண்டு கோபமாய் வெளியேற, கூட வந்த, மா.சு. அதிகாரி டாக்டர் சுகுமார், அவர் பின்னால் தொங்கித் 48 பாலைப்புறா

தொங்கி ஒட, எம்.எல்.ஏ. அவரை ‘டா’ போட்டுத் திட்ட, கடைசியாய், போன மச்சான், விழா மேடைக்கு திரும்பி வந்தார். 'இது, கையல்ல. ஒங்க காலு' என்று டாக்டர், சுகுமார் அழப் போனதும், எம்.எல்.ஏ. சிரித்துவிட்டார். அவரைத் தட்டிக் கொடுத்தார். ‘ஒவ்வொரு அதிகாரியும் இப்படித்தான் இருக்கணும்’.

வெளியே நடந்த, இந்த அமர்க்களத்தைப் பற்றி சட்டை செய் யாமல், அந்த தற்காலிக சோதனைக் கூடத்தில் கிருமி சோதனை நிபுணியான பேத்தாலஜிஸ்ட் என்று அழைக்கப்படும் ஒரு நடுத்தர வயது அம்மா, ரத்தம் உள்ள நம்பரிட்ட பாட்டில்களில் முதலாவதை எடுத்தாள். ஒரு ஸ்லைடில், ஒரு துளிரத்தம் போட்டாள். இன்னொரு செவ்வக ஸ்லைடால், ரத்த ஸ்லைட் முழுக்க, அந்த ஒரு துளியையும் பரப்பினாள். பிறகு ஒரு நீண்ட பாட்டிலில் உள்ள விச்மென்ட் ஸ்டிரெயின் என்ற வயலட் நிற திரவத்தை ஊற்றினாள். உடனே இன்னொரு நம்பரிட்ட பாட்டில், பத்து நிமிடம் கழித்து, மீண்டும் ஒண்ணாம் நம்பர், இரண்டாம் நம்பர் ஸ்லைடுகளை, உதவியாள் நீரில் கழுவிக் கொடுத்தார். இந்த அம்மா, அந்த ஒண்ணாம் நம்பர் ஸ்லைடை, கேள்விக்குறியாய் வளைந்த மைக்ரோஸ் கோப்பில் வைத்தாள். கூடவே பொருத்தப்பட்ட உருளை மாதிரியான கருவியின் பொத்தானை அமுக்கிய படியே, தனிப்படுத்தப்பட்ட வெள்ளை அணுக்களை உற்றுப் பார்த்தாள். பிறகு உதவியாளரிடம் சொல்லப் போனதை, தனக்குள்ளேயே முனங்கிச் சொன்னாள்.

"என்னது... எடுத்த எடுப்பிலேயே இன்பெக்ஷன், ஒண்ணாம் நம்பருக்கு வெள்ளை அணுக்கள் ஆறாயிரமா குறைந்திருக்கு. டைபாய்டா, மலேரியாவா.. கேன்சரா? ஒரு வேளை எய்ட்ஸ் நோயைக் கொடுக்கும் ஹெச்.ஐ.வி.யா...?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_3&oldid=1641689" இலிருந்து மீள்விக்கப்பட்டது